பிராந்திய ஒருமைப்பாடு

பிராந்திய ஒருமைப்பாடு’ என்ற பதத்திற்கு மேற்கு ஐரோப்பாவிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களையும், அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு சர்வதேச அரசியலில் விளக்கமளிக்கப்படுகின்றது. ஒருமைப்பாடு’ என்ற பதம் வெவ்வேறு தேசிய அரசுகளின் எல்லைகளுக்கு அப்பால் சென்று, அரசியல் ஐக்கியத்திற்கான தேவையினை வலியுறுத்தி நிற்கின்றது. ஆயினும், 1960 களில் தான் ‘பிராந்திய ஒருமைப்பாடு என்பது ஒரு கற்கை நெறியாகச் சர்வதேச அரசியலுக்குள் வளரத் தொடங்கியது.

ஒருமைப்பாடு என்ற பதத்தினை சட்ட ரீதியாகவும், நிறுவன ரீதியாகவும் நிலைநிறுத்த முடியும் என்ற சிந்தனை சமஸ்டி முறை பற்றி ஏற்கனவே நிலைத்திருந்த சிந்தனையூடாகவே உருவாகியிருந்தது. சமஸ்டி முறையினை ஆதரிப்பவர்கள் ‘ஒருமைப்பாடு’ என்பது சர்வதேச சமூகத்தின் முன் நோக்கிய பாச்சல் என்பதை விட ‘தூர இலக்கு’ எனக் கூறுகின்றார்கள். சுவிற்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் சமஸ்டி முறையில் இணைந்து கொண்ட சுதந்திரமான பிரதேசங்கள் இணைவுக்குப் பின்னர் தாம் ஏற்கனவே வைத்திருந்த இறைமையினை தொடர்ந்தும் எவ்வாறு பாதுகாத்துக் கொண்டனவோ அவ்வாறே உலக நாடுகளுக்கிடையிலான சமஸ்டி முறைமையின் ஒருமைப்பாடு ஏற்படுத்தப்படலாம். அதேநேரம், உலக அளவு, பிராந்திய அளவு, ஆகிய இரண்டையும் கருத்திலெடுத்தே உலக சமஸ்டி முறை பற்றி யோசிக்க முடியும் எனக் கூறுகின்றார்கள். ஆனால் நடைமுறையில் உலகத்தினை சமஸ்டி முறைக்குள் கொண்டு வருவது சாத்தியமற்றதும், கற்பனையானதுமாகவே இருந்தது.

ஒருமைப்பாடு தொடர்பாக ‘தொடர்பாடல் அணுகுமுறை’ ஒன்றினை கால்டூச் (Karl w. Deutsch) முன்வைக்கின்றார். உள் குடியேற்றம், கல்விமான்கள் பரிமாற்றம், உல்லாசப் பிரயாணிகள், வர்த்தகம் போன்ற சர்வதேச விவகாரங்கள் மூலம் ஒருமைப்பாட்டிற்கான வழிவகைகளை உருவாக்க முடியும். சமூக, அரசியல் ஒருமைப்பாட்டிற்கு அல்லது பாதுகாப்பான சமுதாய உருவாக்கத்தினை அபிவிருத்தி செய்வதற்கு மேற்கூறிய சர்வதேச விவகாரங்கள் தலைமை தாங்க முடியும். எனவே பாதுகாப்பான சமுதாய உருவாக்கத்திற்கான ஒருமைப்பாட்டினை டூச் இரண்டாக பிரிக்கின்றார். முதலாவது ஒன்றிணைக்கப்பட்ட தன்மை கொண்டது. மற்றையது பன்மைத் தன்மை கொண்டதாகும்.

ஓன்றிணைக்கப்பட்ட சமுதாய பாதுகாப்பிற்கு சிறந்த உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவினைக் கூறிக் கொள்ளலாம். இங்கு சமஸ்டி அரசாங்க முறையின் கீழ் பல அரசுகள் ஒன்று சேர்ந்து இயங்குகின்றன.

பன்மைத் தன்மை வாய்ந்த சமுதாயப் பாதுகாப்பில் மையப்டுத்தப்பட்ட அரசியல் அதிகாரம் இருக்காது. ஆனால் தேசிய அரசியல் பிரதேசங்கள் தமக்கிடையில் உள் குடியேற்றம், கல்விமான்களின் பரிமாற்றம், உல்லாசப் பிரயாணிகள், வர்த்தகம் போன்ற தொடர்பாடல்களைத் தமக்குள் கொண்டிருக்கும். ஆனால், தமது எல்லைப் பிரதேசங்களை பலப்படுத்த வேண்டும் என்றோ தமக்குள் ஒருவருடன் ஒருவர் சண்டையில் ஈடுபட வேண்டுமென்றோ எதிர்பார்ப்பதில்லை பன்மைத் தன்மை வாய்ந்த சமுதாயப் பாதுகாப்பானது, இயற்கையாக உள்ள பாரிய நிலப்பரப்பை கொண்டதாகவும் இருக்கும். உதாரணமாக அமெரிக்கக் கண்டம், ஐரோப்பாக் கண்டம் போன்றவற்றைக் கூறலாம். ஆனால் அரசியல் ஐக்கியத்திற்கான பாதை ஆயதப்பலத்தினூடாக பெறப்பட்டிருப்பதை வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள முடிகின்றது. தேசிய, பிரதேச அல்லது சர்வதேச மட்டத்தில் அரசியல் நடிகர்களுடையு தோற்றம் சிக்கலானதும், அசாதாரணமானதாகவுமுள்ளது. இந்நிலையில் தொடர்பாடல் அணுகுமுறையும், சமஸ்டி முறைமையும் ஒருமைப்பாடு பற்றி சிந்திக்க வைத்துள்ளது எனலாம்.

ஒருமைப்பாட்டு அணுகுமுறையினை அடிப்படையாகக் கொண்டு, பிராந்தியங்களை வரைவிலக்கணப்படுத்தும் போது பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பொதுவாக அவுஸ்ரேலியா, அமெரிக்கா ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா போன்ற கண்டங்கள் தொகுதியான நிலப்பரப்பினைக் கொண்டு பிராந்தியங்களாக வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றன. துரதிஸ்டவசமாக பிராந்தியம் ஒன்றை வரைவிலக்கணப்படுத்தும் போது அப்பிராந்திய மக்களுக்கு இருக்க வேண்டிய “பிராந்திய உணர்வு” இங்கு இல்லாமல் இருப்பது பெரும் சிக்கலாக உள்ளது. உதாரணமாக ஐரோப்பாக் கண்டத்தின் கிழக்குப் பகுதி அரசுகள் “சோசலிச அரசுகள்” என அழைக்கப்பட்டன. ஆபிரிக்க கண்டத்தின் வட பகுதி (அரபு மொழி பேசும் இஸ்லாமிய சமய மக்கள் வாழும் பகுதி) மத்திய கிழக்குப் பிராந்தியம் என அழைக்கப்பட்டது.

பிராந்தியங்கள் பின்வரும் வகையில் ஒழுங்கமைக்கப்டுகின்றன.

1. புவியியல் தன்மை:-

கண்டங்கள், உப கண்டங்கள், தீவக் கூட்டங்கள் போன்றவற்றின் புவியியல் வதிவிடங்களை அடிப்படையாகக் கொண்டு அரசுகளின் தொகுதி தீர்மானிக்கப்படுகின்றன. உதாரணமக ஐரோப்பா, ஆசியா, போன்றவற்றை கூறலாம்.

2. இராணுவ, அரசியல் தன்மை:-

இராணுவக் கூட்டுக்கள், சித்தாந்தம், அரசியல் தன்மை போன்றவற்றின் அங்கத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசுகளின் தொகுதி தீர்மானிக்கப்படுகின்றது. உதாரணமாக கம்யூனிச முகாம் நாடுகள். முதலாளித்துவ முகாம் நாடுகள், மூன்றாம் மண்டல நாடுகள் நேட்டோ, வோர்சோ போன்றவற்றைக் கூறலாம்.

3. பொருளாதாரம்:-

தெரிவு செய்யப்பட்ட பொருளாதார உற்பத்தியில் முன்னணி வகிக்கும் தேசிய அரசுகளை உள்ளடக்கிய பிராந்தியம்

4. சர்வதேச விவாகாரங்கள்:-

உள்குடியேற்றம், உல்லாசப் பிரயாணம், வர்த்தகம், தொடர்பாடல் போன்ற மக்களின் பொருட்கள், சேவைகளின் பரிமாற்றத்தின் அளவினை அடிப்படையாகக் கொண்ட தேசிய அரசுகள் உள்ள தொகுதி. உதாரணமாக கிழக்கு ஐரோப்பா சோவியத் யூனியனின் சந்தையாக இருந்தது.

இவற்றை விட மொழி, சமயம், கலாசாரம், சனத்தொகை, காலநிலை போன்ற விடயங்களும் பிராந்தியங்களை உருவாக்குவதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

பிராந்திய ஒழுங்கமைப்பு பற்றிய சிந்தனை இரண்டாம் உலப் போருக்குப் பின்னரே அபிவிருத்தியடைந்திருந்தது. பிராந்திய ஒழுங்கமைப்புக்கள் பின்வரும் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.

  1. பிராந்திய பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் – நேட்டோ, வோர்சோ
  2. பொருளாதார பிராந்திய ஒழுங்கமைப்புக்கள் – ஐரோப்பிய சமூகம், பரஸ்பர பொருளாதார உதவிக்கான சங்கங்கள், இலத்தீன் அமெரிக்க சுதந்திர வர்த்தக நிலையம்.
  3. புல்நோக்குச் செயற்பாடு கொண்ட பிராந்திய ஒழுங்கமைப்புக்கள் –
  4. கலாசார, இராணுவ, பொருளாதார, அரசியல் விடயங்கள் முதன்மையாகக் கொண்டு இவைகள் உருவாக்கப்படுகின்றன. – ஐக்கிய அமெரிக்க ஒழுங்கமைப்பு, அரபு லீக்,

பொதுநலவாய நாடுகள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான கெடுபிடி யுத்த சூழ்நிலையும், உலக கூட்டுப்பாதுகாப்பிற்கான கனவின் சிதைவும் பிராந்திய பாதுகாப்பு ஒழுங்கமைப்பு அபிவருத்தியடைந்து வந்தமைக்கு முதன்மையான காரணிகளாகும். ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யும் மனோபாவத்தின் வளர்ச்சியினால் 1940 களிலும், 1950 களிலும் அனேக பிராந்திய பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு உதாரணமாக நிறுவனமயப்படுத்தப்பட்டு 1949 ஆண்டு உருவாக்கப்பட்;ட நேட்டோ ஒழுங்கமைப்பையும், 1982 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நேட்டோ ஒழுங்கமைப்பையும், 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அன்சுஸ் (ANZUS) (அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா) ஒழுங்கமைப்பையும், 1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிட்டோ (SEATO) ஒழுங்கமைப்பையும் கொள்ள முடியும். இவ் அமைப்புக்கள் அனைத்தும் நகரும் உலக அதிகாரம் என வர்ணிக்கப்படக் கூடியளவிற்கு தென்கிழக்காசியா, ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்காää போன்ற பிரதேசங்களில் ஐக்கிய அமெரிக்காவினால் தனது பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டவைகளாகும். இவற்றை விட 1955 ஆம் ஆண்டு பிரித்தானியா தலைமையில் உருவாக்கப்பட்டு பாக்தாத் (Baghdad Pact) என அழைக்கப்பட்டதுடன், 1959 ஆம் ஆண்டிற்கு பின்னர் சென்டோ (CENTO) என அழைக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஐக்கிய அமெரிக்கா மறைமுகமானதாகவே இணைந்து கொண்டது. அதேபோல சோவியத் ய10னியன் பிரதிநிதித்துவம் வகிக்கும் கண்டத்திற்கு அவசியமான பிராந்திய பாதுகாப்பினை வோர்சோ (WARSAW) என்ற பெயரில் 1955 இல் நிறுவிக் கொண்டது.

உலகம் முழுவதையும் இராணுவக் கூட்டுக்குள்ளாக்கியது போன்று உருவாக்கப்பட்ட கூட்டுக்களை பிராந்திய பாதுகாப்பிற்கான ஓழுங்கமைப்புக்கள் என வேறுபட்ட பரிமாணங்களில் வகைப்படுத்தி கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும். உதாரணமாக இப்போது தொழிற்படாது இருக்கும் சீட்டோ அமைப்பில் பங்கேற்றிருந்த தேசிய அரசுகளின் தலை நகரங்களுக்கிடையே ஆகக் கூடுதலாக 11,500 மைல்கள் இடைவெளி காணப்பட்டிருந்தன. அதேபோல நேட்டோ அமைப்பில் பங்கேற்றிருந்த தேசிய அரசுகளில் தலைநகரங்களுக்கிடையே ஆகக்கூடுதலாக 5,500 மைல் இடைவெளி காணப்பட்டிருந்தன. OAS அமைப்பில் பங்கேற்றிருந்த அரசுகளுக்கு இடையே ஆகக்கூடுதலாக 5,300 மைல்கள் இடைவெளி காணப்பட்டிருந்தன. வோர்சோ அமைப்பில் பங்கேற்றிருந்த தேசிய அரசுகளின் தலைநகரங்களுக்கு இடையே ஆகக் கூடுதலாக 3,900 மைல்கள் இடைவெளி காணப்பட்டிருந்தன. ஈரானிய புரட்சியை தொடர்ந்து 1979 மார்ச்சில் செயலிழந்த சென்ரோ அமைப்பில் பங்கேற்றிருந்த தேசிய அரசுகளின் தலைநகரங்களுக்கு இடையே ஆகக்கூடுதலாக 3,700 மைல்கள் இடைவெளி காணப்பட்டிருந்தன. (பூமியின் மொத்த சுற்றளவு ஏறக்குறைய 25,000) மைல்கள் இதில் சீட்டோ என்ற பிராந்திய ஒழுங்கமைப்பு ஏறக்குறைய ½ பங்கினை தனக்குள் எடுத்திருந்தது. எவ்வாறாயினும் உலக யுத்தத்தின் பின்னர் சோவியத் யூனியனின் இராணுவ பாதுகாப்பினை அல்லது ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ பாதுகாப்பினை ஏற்றுக் கொண்ட தேடிச் செல்கின்ற சிறிய தேசிய அரசுகளினதும்,தந்திரோபாய நிலையில் பக்கம் சாராத தேசிய அரசுகளினதும் விருப்பத்துடன் இரு துருவ அதிகாரங்களையும், சித்தாந்தங்களையும் பிரதிபலிக்கின்ற நிறுவனமயப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டுக்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

இப்பாதுகாப்பு பிராந்திய ஒழுங்கமைப்புக்கள் வல்லரசுகளுக்கு இடையிலான பதட்டத்தினை அல்லது கெடுபிடியை ஒவ்வொரு நிமிடமும் உறுதியாக்கக் கூடிய நிறுவனங்களாகவே காணப்பட்டிருந்தன. ஆனாலும் இப்பிராந்திய ஒழுங்கமைப்புக்கள் தமது முதன்மையான நோக்கங்களாகிய பரஸ்பர தந்திதோபாய அந்தஸ்தினை பேணிக்கொள்வது, வல்லரசகளுக்கிடையிலான நேரடி யுத்தத்தினை தவிர்ப்பது என்பவற்றில் பெற்றிருந்தமையினை மறுக்கமுடியாது எடுத்துக் காட்டுக்களாக உலக யுத்ததிற்கு பின்னர் கிழக்கு – மேற்கு ஐரோப்பாவை பின்னணியாக கொண்ட கொரியா வியட்னாம் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளும். மூன்றாம் மண்டல நாடுகளில் ஏற்பட்ட அரபு – இஸ்ரேல் இந்தோ – பாகிஸ்தான், இந்தோ – சீன முரண்பாடுகளும் தந்திரோபாய செயற்பாடுகளாலும், அணுகுண்டின் அச்சுறுத்தலாலும் பெரும் யுத்தங்களாக மாறாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல காலனித்துவத்திற்கு எதிரான யுத்தம் அல்லது தேசிய விடுதலைப் போராட்டம், உள்நாட்டு யுத்தம், இராணுவப் புரட்சி போன்ற முரண்பாடுகளும் தந்திரோபாய செயற்பாடுகளாலும், சிறப்பாக கையாளப்பட்டிருந்தன. ஆயினும், பிராந்திய பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் மூன்றாம் அங்கத்துவ நாடுகளுக்கு இடையில் எற்படும் முரண்பாடுகளால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தன. குறிப்பாக ழுயுளு இல் அங்கத்துவம் வகிக்கும் எல்சல்வடோர் கொண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளும், நேட்டோவில் அங்கம் வகிக்கும் கிரேக்கம் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளும் வோர்சோவில் அங்கம் வகிக்கும் செக்கொஸ்லேவேக்கியா சோவியத் ய10_னியன் ஆகிய நாடுகளுக்க இடையிலான முரண்பாடுகளும் பிராந்திய பாதுகாப்பு ஒழுங்கமைப்பிற்கு பாரிய பிரச்சினைகளை எற்படுத்தியிருந்தன.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

10,368 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>