சர்வதேச அரசியல்

அரசியல் என்ற பதம் நலன்கள், மோதல்கள், அதிகாரம் ஆகிய மூன்று விடயங்களுடன் தொடர்புபட்டதாகும். அரசியலைச் சர்வதேச அரசியலுடன் தொடர்புபடுத்தும் போது சர்வதேச இறைமையுடைய அரசுகளின் நலன்கள் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. இறைமையுடைய அரசுகளின் நலன்கள் ‘தேசிய நலன்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. இறைமையுடைய அரசுகள் தங்களுடைய தேசிய நலன்களை அடைவதற்காக ஒன்றுடன் ஒன்று மோதலில் ஈடுபடுகின்றன. இதற்காக அதிகாரத்தினைப் பொதுவாக அரசுகள் பயன்படுத்துகின்றன. சர்வதேச அரசியல் என்பது இறைமையுடைய அரசுகளுக்கிடையிலான உறவுகள் உள்தொடர்புகள் என்பவற்றின் வழி ஏற்படுத்தப்படும் நலன்களிற்கான மோதல்களாகும். இன்னொரு வகையில் கூறின் சர்வதேச அரசியல் என்பது இறைமையுடைய அரசுகளுக்கிடையிலான பரஸ்பர உறவு நிலைகளைக் குறித்து நிற்கி;ன்றது. அதாவது முழு உலகமோ அல்லது அதன் ஒரு பகுதியோ அல்லது ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச சமுதாயங்களோ தமது நட்புறவுகளை அல்லது பகைமை உறவுகளைப் பரஸ்பரம் செயற்படுத்துவதைக் குறித்து நிற்கின்றது.

சர்வதேச அரசியல் என்பது சர்வதேச அரசுகளுக்கிடையிலான உறவுகளும், செயற்பாடுகளுமாகுமெனின் அரசு என்ற பதம் குறித்து நிற்கும் கருத்தினை அவதானிக்க வேண்டும். அரசு என்பது சமூக நிறுவனங்களுக்குள் உயர்வானது ஆகும். அரசு சமூக வாழ்க்கையினை ஒழுங்குபடுத்தி முகாமை செய்து கொள்ளவும் பாதுகாத்துக் கொள்ளவுமான மேலானதொரு நிறுவனமே அரசாகும். அரசு நிர்வாகத்துறை, சட்டத்துறை, நீதித்துறை, அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சிகள், சமூக நலன் பேணும் குழுக்கள், சிவில் சமூகங்கள், ஆயுதப்படைகள் போன்ற அனைத்தையும் அரசு தன்னுடன் இணைத்து வைத்துள்ளதுடன், இவற்றினைக் கட்டுப்படுத்தி முகாமை செய்வதற்காகச் சட்டங்களையும், நீதிகளையும் புத்திசாலித்தனமான சம்பிரதாயங்களையும் பயன்படுத்தி அரசாங்கம் என்ற கருவி மூலம் அதிகாரத்தினைப் பிரயோகிக்கின்றது.

சர்வதேச அரசியல் என்பது அரசாங்கங்களிற்கிடையிலான உறவு எனச் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கூறப்படுமாயின் அரசாங்கங்களின் மாற்றங்களிற்கான சூழ்நிலை பற்றி அவதானிக்க வேண்டும். ஏனெனில் எந்தவொரு அரசாங்கமும் அரசாட்சியில் தனியுடமை அதிகாரத்தினைப் பெற்றுவிடுவதில்லை. அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் செயன்முறையில் ஏனைய குழுக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. இதனால் அதிகாரத்தினை ஏனைய குழுக்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அரசாங்கத்தின் அதிகாரம் சமுதாயத்தின் எல்லாக் குழுக்களிலும் பிரதிபலிப்பதில்லை. பதிலாக எல்லாக் குழுக்களினதும் பொது அழுத்தம் என்பதே அரசாங்கத்தின் மீது பிரதிபலித்து நிற்கின்றது. எனவே சர்வதேச அரசியல் நடத்தையில் அரசாங்கமானது தனது அதிகாரத்தினூடாகப் பொது இலக்கினை அடைவதையே முதன்மைப்படுத்துகின்றது. பொருளாரத்தினையும் ஏனைய சர்வதேச விவகாரங்களினையும் அடிப்படையாகக் கொண்டு அரசு தனது வெளிநாட்டுக் கொள்கையினைத் தீர்மானிக்கின்ற போது அது சர்வதேச அரசியல் நடத்தையாகின்றது. இதனுடன் இணைந்து அதிகார அரசியலும் தோன்றி விடுகின்றது. அதிகார அரசியல் நடத்தையானது சர்வதேச மோதல்களிற்குக் காரணமாகின்றது. சர்வதேச மோதல்கள் ஏற்படுகின்ற போது சர்வதேச அரசுகள் யுத்தத்திற்கு போவதும் பின்னர் சமாதானத்தினை ஏற்படுத்திக் கொள்வதும் நிகழ்கின்றன. இவைகள் சர்வதேச அரசியலில் அதிகாரத்தின் அளவினைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகின்றன. அதாவது அதிகாரத்தின் சமநிலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே சர்வதேச அரசியல் அதிகார சமநிலையினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. இதுவே சர்வதேச மோதல்களிற்கும் காரணமாகின்றது. சர்வதேச மோதல்கள் பல அரசுகள் அழிவதற்கும் புதிய பல அரசுகள் தோன்றுவதற்கும் காரணமாகின்றது. சர்வதேச அரசியலில் அரசுகள் அதிகாரத்தினை மையப்படுத்துவதினால் பெருமளவிற்கு இராணுவ மோதல்கள் நிகழ்கின்றன. எனவே அதிகாரத்தில் சமநிலையினை ஏற்படுத்துவதே சர்வதேச அரசியல் எனலாம். ஒவ்வொரு அரசும் சர்வதேச அரசியல் நடத்தையில் ஈடுபடும் போது ஏனைய அரசுகளின் அதிகாரத்திற்கு சமனாக அல்ல மேலாக தனது அதிகாரத்தினைப் பேணிக் கொள்ள முயற்சிக்கின்றன. எனவே அதிகாரப் போட்டி என்பது சர்வதேச அரசியலில் தவிர்க்க முடியாததாகின்றது. சர்வதேச அரசியல் என்பதை அரசுகளுக்கிடையில் நிகழும் அதிகாரத்திற்கான போராட்டம் எனலாம். இறைமையுடைய அரசுகள் தமது உயர் நலன்களை அடைவதற்கு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன. அரசுகள் தங்களுடைய விருப்பங்கள், தேவைகள் என்பவற்றை நிறைவேற்றுவதற்காக அதிகாரத்தினைப் பிரயோகிக்கி;ன்றன. இறைமையுடைய அரசுகள் பயன்படுத்தும் இவ் அதிகாரமானது உளவியல். அரசியல், தந்திரோபாய இராணுவ ரீதியிலானதாகும்.

வரைவிலக்கணங்கள்

சர்வதேச அரசியல் என்பது அரசுகளின் சார்பில் இயங்குகி;ன்ற அரசாங்கங்களுக்கிடையிலான அதிகாரப் போராட்டமாகும் என்பதை அனேக அறிஞர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஹான்ஸ் ஜே. மோர்கென்தோ சர்வதேச அரசியல் என்பது “அரசுகளுக்கிடையில் அதிகாரத்தினைப் பயன்படுத்தி நடாத்தப்படுகின்ற போராட்டம்” என்று கூறுகின்றார். ஸ்பிரவுட், ஸ்பிரவுட் (Sprout and Sprout) சர்வதேச அரசியல் என்பது “சுதந்திரமான அரசியல் சமுதாயங்களிற்கிடையில் நிகழும் உறவுகளும் உளத் தொடர்புகளுமாகும். இதில் எதிர்பார்ப்புக்கள், கட்டுப்பாடுகள், மோதல்கள் என்பன தத்தமது நலன்களிற்காக ஏற்படுகின்றன” என்று கூறுகின்றார். பிலிக்ஸ் குறோஸ் (Feliks Gross) என்பவர் “சர்வதேச அரசியல் என்பது பிரதேசத்தில் பிரச்சினைகளிற்கான தீர்வினைக் காணுதல், எதிர்காலத்திட்டம், கொள்கைகள், பெறுமதிகள் சித்தாந்தம், போன்றவற்றின் செயற்பாட்டுக்கான தகுந்த பதமாகலாம்” எனக் கூறுகின்றார். வின்சன் பார்கர் (Vincent Barker) என்பவர் சர்வதேச அரசியலில் பின்வரும் விடயங்களை அடையாளப்படுத்துகின்றார்.

  1. சர்வதேச அரசியலின் அடிப்படை சக்தியும், இயல்பும்.
  2. சர்வதேச வாழ்க்கையில் அரசியல், பொருளாதார, சமூக ஒழுங்கமைப்புக்கள்
  3. தேசிய அதிகாரத்தினுடைய ஆதார சக்திகள்
  4. தேசிய நலனின் உயர்விற்காகக் கிடைக்கக்கூடிய கருவிகள்.
  5. தேசிய அதிகாரத்தினுடைய மட்டுப்படுத்தப்பட்ட தன்மையும், கட்டுப்பாடும்.
  6. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வல்லரசுகளின் வெளியுறவுக் கொள்கையும், சிறிய அரசுகளின் சந்தர்ப்பவாத வெளியுறவுக் கொள்கையும்.
  7. இவை தவிர்ந்த ஏனைய காரண காரியங்களுக்கான பின்னணியும், அண்மைக்கால சர்வதேசம் தொடர்பான வரலாறும்.

சர்வதேச அரசியலானது அரசாங்கங்களுக்கிடையிலான உத்தியோகபூர்வ அதிகார அரசியலை விபரிக்கின்றது என்பதை கல்வியலாளர்கள் ஏற்றுக் கொண்டாலும், கேர்பேர்ட், ஜே.ஸ்பைரோ (Herbert, J.Spiro) ஆகியோர்கள் “சர்வதேச அரசியல் இன்று தேசங்களுக்கிடையில் எவ்வித தொடர்பினையும் கொண்டிருக்காததுடன் அரசுகளுக்கிடையில் முக்கிய அடித்தளத்தினையும் கொண்டிருக்கவில்லை” எனக் கூறுகின்றார்கள். ஸ்ரான்லி கொவ்மன் (Stanly Hoffman) என்பவர்

“சர்வதேச அரசியலானது சர்வதேச உறவினுடைய ஒழுங்கு, செயற்பாடுகளுடனும், காரணகாரிய தொடர்புகளுடனான வெளிவிவகார கொள்கைகளையும், அதிகாரத்தினுடைய பகுதிகளையும் பாதிப்பிற்குட்படுத்தி அதிகாரத்தின் அடிப்படையில் உலகத்தினை பிளவடையச் செய்துள்ளன” என்கிறார்.

இவரின் இக்கருத்தினுள் அரசியல் சார்பான, அரசியல் சார்பற்ற உத்தியோகபூர்வமான, உத்தியோகப10ர்வமற்ற, முறைசார்ந்த, முறைசாரா, உறவுப் பரிமாற்றங்கள் பாரிய அளவில் காணப்படுகின்றன.

வியாபகம்

சீ.ஏ.டபிள்யூ மெனிங் (C.A.W.Mannig) என்பவரினால் தொகுக்கப்பட்ட சிறு நூலொன்றை 1954 ஆம் ஆண்டு யுனெஸ்கோ வெளியிட்டது. இந்நூல் சர்வதேச அரசியலை சுதந்திரமான ஒரு கற்கை நெறியாக அங்கீகரித்தது. ஆயினும் சர்வதேச அரசியல், சர்வதேச உறவு ஆகிய இரண்டு பதங்களும் ஒன்றுக்காக மற்றொன்று பயன்படுத்தப்பட்டு வந்திருந்தன. இவ்விரண்டு பதங்களுக்கிடையிலான வேறுபாட்டினை இனம் கண்டுகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. இருப்பினும் 1970களின் பின்னர் சர்வதேச அரசியல் ஒரு சுதந்திரமான கற்கை நெறியாக எழுச்சியடையத் தொடங்கியது. இதன் பின்னர் சர்வதேச அரசியல் பின்வரும் விடயங்களை முதன்மைப்படுத்துகின்றது என்பது சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

தேசிய அதிகாரம்

ஈ.எச்.க்கர் (E.H.Carr) என்பவர் இருபது வருட தகராறுகள் (The Twenty Years Crisis) என்ற நூலை 1939 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டிருந்தார். 1919 ஆம் ஆண்டு தொடக்கம் 1939 ஆம் ஆண்டு வரையில் ஆங்கில மொழி பேசுகின்ற அரசுகள் சர்வதேச மட்டத்தில் பேணிவந்திருந்த எல்லா அதிகாரங்களையும் கைவிடுதல் என்ற சிந்தனைகளைத் தடுப்பதே இவரின் நோக்கமாக இருந்தது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் அதிகாரம் என்ற எண்ணக்கரு கைவிடப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், சர்வதேச அரசியலின் மையக் கருத்தாக அதிகாரம் என்பதே காணப்பட்டது. தெளிவான சிந்தனையுடன் அதிகாரக் கோட்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது. பொதுவாகச் சர்வதேச அரசியலையும் உலக அரசுகளின் தலைமைத்துவக் கொள்கையினையும் பாரிய அளவில் தீர்மானிப்பதாக அதிகாரம் என்ற எண்ணக்கரு காணப்பட்டது. மறுபக்கத்தில் அதிகாரம் என்ற எண்ணக்கரு வேறுபட்ட ஒழுங்கிலான ஆராட்சிகளின் மூலம் குறிப்பிடத்தக்களவு விசாலமாக்கப்பட்டது. அதேநேரத்தில் அதனுடைய மட்டுப்படுத்தப்பட்ட தன்மையும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும் சர்வதேச உறவு என்பதற்கு அதிகாரம் என்ற எண்ணக் கருவினை பிரயோகித்தால் அதிகாரத்தைப் பற்றிய பழைய எண்ணக் கருவிலேயே இது தோற்றமளிப்பதனை அவதானிக்கலாம். அதாவது அதிகாரச் சமநிலை, தேசிய அதிகாரத்தின் பகுதிகள், அதிகாரச் சமன்பாடு என்பனவே சர்வதேச அரசியலிற்குள் அதிகாரம் என்ற எண்ணக் கருவின் நடைமுறைப் பிரயோகமாகவுள்ளது.

சர்வதேச நிறுவனங்களும், ஒழுங்கமைப்புக்களும்

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் நீடித்த நீதியான செயற்பாடும், அமெரிக்க அரசுகளின் ஒழுங்கமைப்பு (OAS), வடஅத்திலாந்திக் ஒப்பந்த ஸ்தாபனம் (NATO), போன்ற விசாலமான பிராந்திய ஒழுங்கமைப்புக்களும் அல்லது சர்வதேச ஒழுங்கமைப்புக்களும் நிறுவன ரீதியான முக்கியத்துவத்தினைத் தொடர்ந்து பேண உடன்பட்டுக் கொண்டன. அரச சார்புள்ள, அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்களினது கொள்கைகளை விட அவற்றின் செயல்முறை அதிக முக்கியத்துவத்தினைக் கொடுத்திருந்தது. ஆனால் நிறுவன ரீதியான பொதுவான அணுகுமுறை திட்டமிடப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டிருந்ததுடன், விசேடமாக இவைகள் தேசிய அரசுகளை உள்ளடக்கி, உலக சமுதாயத்தின் பிரதான செயற்பாட்டாளராகவும், திட்டமிடப்பட்ட செயல் முறைகளை முதன்மைப்படுத்துகின்றவைகளாகவும் காணப்பட்டிருந்தன.

சர்வதேச முறைமை

சர்வதேச உறவு பற்றிய ஆய்வில் சர்வதேச முறைமை என்ற பதம் முதன்மைப்படுத்தப்படுகின்றது. முறைமைக் கோட்பாடுகளுடன் தொடர்புபட்ட வகையிலேயே இதற்கான விளக்கம் தரப்படுகின்றது. சர்வதேச முறைமையினை நடைமுறை உலக அரசியல் செயன் முறையில் இருந்து அல்லது வரலாற்றுப் பின்னணியிலிருந்து அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக புராதன சீன, புராதன கிறீஸ் (Greece)> உரோம சாம்ராஜ்யம், இத்தாலி, மொகலாய இந்தியா அல்லது 19ஆம் நூற்றாண்டின் ஐரோப்பா என்பவைகளுடாகச் சர்வதேச முறையின் வரலாற்றினை அறிந்து கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டின் சர்வதேச முறைமையினை இருதுருவ (Bipolarity) அல்லது பலதுருவ (Multi-polarity) அல்லது புவியியல் ரீதியாக பெரிய அல்லது சிறிய நிலவிஸ்தீரணத்தினையுடைய பிராந்தியங்களின்; முறைமை எனக் கூறிக்கொள்ளலாம். அத்துடன் சில பிராந்தியங்கள் சர்வதேச உப முறையாக அல்லது அந்தஸ்த்துக் குறைந்த அரச முறையாகவும் கருதப்பட்டிருந்தன. இருபத்தியொராம் நூற்றாண்டின் சர்வதேச முறைமை ஒருதுருவ முறைமையாகக் கருதப்படுகின்றது.

யுத்தமும், சமாதானமும்

ஏறக்குறைய சர்வதேச உறவு பற்றிய எல்லா வெளியீடுகளும், சர்வதேச உறவு பற்றிய எல்லா கல்விகளும், மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ யுத்தம் அல்லது சமாதானம் என்பது பற்றிய சர்ச்சையுடன் தொடர்புடையதாகவேயுள்ளது.மனித வரலாற்றினூடாக நோக்கும் பொழுது யுத்தம் என்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு மனப்போக்காகும். இருபதாம்; நூற்றாண்டின் ஆரம்பகாலங்களில், முன்னைய காலங்களை விட அளவுக்கதிகமாகவும், அடிக்கடியும் யுத்தம் நடைபெற்றிருந்தது. அணுயுகத்தின் ஆரம்பத்தினால் குறைந்தது சிறிது காலத்திற்காவது துரதிஸ்டவசமான முடிவைக் கொடுக்கின்ற யுத்தம் தவிர்க்கப்பட்டிருந்தாலும், சில வருடங்கள் உலகத்தின் சில பகுதிகளில் யுத்தமானது சுதந்திரமாக நடைபெற்று வந்தது. எவ்வாறிருப்பினும் யுத்தம் என்பது உலக நாடுகள் எடுக்கும் பயங்கரமான நிலைப்பாடாகும். ஹேர்மன் ஹொன் (Herman Kahn) இன் வார்த்தையாகிய “சாத்தியமில்லாதவைகளைப் பற்றிய சிந்தனை” (Thinking about the unthinkable) என்பதனை நினைவு கூற வேண்டியுள்ளது. ஏறக்குறைய உலக மக்கள் அனைவரினதும் மன உணர்வுகள் மூன்றாவது உலக யுத்தத்தினை தவிர்ப்பதாகவும், தவிர்க்க முடியாவிட்டால் மட்டுப்படுத்துவதாகவும், ஆயுத முரண்பாடுகளைப் பரீட்சித்துப் பார்த்தலைக் குறைப்பதாகவுமேயுள்ளது.

பாரிய அளவில் வெளி வருகின்ற நூல்களும், வெளியீடுகளும், ஆயுதப்பரிகரணம்,ஆயுதக்கட்டுப்பாடு என்ற விடயங்களுடன் தொடர்புடையனவாகவே வெளிவருகின்றன. ஏறக்குறைய உலகில் 1400 சமாதான நிறுவனங்கள் யுத்தம், சமாதானம் என்ற பிரச்சினைகளுடன் தொடர்புடைய செயற்பாட்டிற்கு அல்லது ஆராட்சிக்குத் தம்மை அர்ப்பணித்துள்ளன. இவ்வகையில் முக்கியமாக நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட “Carnegie Endowment for International Peace” என்ற நிறுவனம் குறிப்பிடத்தக்கது. இதனுடன் சமாதான ஆராட்சிக்கான அனேக கழகங்களும், அனேக சமாதான ஆய்வு நிறுவனங்களும் இணைந்து செயற்பட்டிருந்தன. மேலும் “Current Thought on Peace and War” போன்ற அனேக சஞ்சிகைகளும்; வெளிவந்திருந்தன. இவைகள் யாவும் அண்மைக் காலத்தில் யுத்தம், சமாதானம் என்பது தொடர்பான கல்வியின் பெறுபேறாக வெளிவந்தவைகளாகும். இவ் எல்லா முயற்சிகளின் பெறுபேறுகளையும் தனியாக மதிப்பிட முடியாமல் போனாலும், அவைகளில் சில சர்வதேச விவகாரங்கள் பற்றிய தகவல்களை மாணவர்களுக்குக் கொடுத்திருந்தன என்பதை மறுக்க முடியாது.

சித்தாந்தங்கள்

ஒரு கட்சியமைப்பிலானதும், ஆக்கிரமிப்பு இயல்புடைதுமான இருபதாம் நூற்றாண்டின் சமூகப், பொருளாதார, அரசியல் முறைமைகளுக்கிடையிலான முரண்பாடுகளால் சித்தாந்தம் என்ற எண்ணக்கரு உறுதியாக நிலை நிறுத்தப்பட்டிருந்தது. சித்தாந்தக் கருத்துக்களால் சர்வதேச வாழ்க்கையின் ஆர்வம்மிகுந்த யதார்த்தம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. சித்தாந்த வெளியீடுகள் சர்வதேச உறவுகளை மையமாகக் கொண்டு எழுச்சியடையத் தொடங்கியது. சிக்கலானதும், இடர்பாடுகளுடையதுமான இம்முயற்சி நீண்ட பிரச்சினைகளையும், தேவைகளையும் தோற்றம் பெறச் செய்தது. அனேக விமர்சகர்கள் இன்றைய சர்வதேசப் பதட்டம், ஆபத்துக்கள் என்பவற்றிலிருந்து சி;த்தாந்தத்தினைச் சர்வதேச உறவில்; இனம் காணுவதிலுள்ள பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டினாலும், இது ஏனைய விடயங்களிலும் பார்க்கத் தெளிவானதாகையால் நடைமுறை உலக ஆபத்துக்களில் சித்தாந்தப் பகுதிகளை கவனிக்காது விடுவது உலக அரசுகளின் அடிப்படையான உள்ளெண்ணங்களையும், சாராம்சத்தையும் புரியாது தவற விட்டதாகவே அமையும்;.

தேசியவாதம், ஏகாதிபத்தியம், காலனித்துவம்

தேசியவாதம் இன்றைய உலகின் அதிகார சக்திகளில் ஒன்றாகும். விசேடமாக மேற்குத்தேசமல்லாத நாடுகளிலும், பிரதேசங்களிலும் இது முதன்மை பெறுகின்றது. தேசியவாத உணர்வானது பழைய காலனித்துவ நாடுகளின் ஏறக்குறைய தன்மான உணர்வுள்ள தலைவர்களும், மக்களும் தமது புதிய சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கு உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ சட்டத்தை மீறி நடப்பதற்கான வழிவகைகளைத் தேடிக் கொடுக்க உதவியிருந்தது. தேசிய உணர்வு உலக வரலாற்றில் ஏற்கனவே பிரான்ஸின் மேன்மைக்கும், புகழுக்கும், காரணமாக இருந்த சார்ள்ஸ் டீகோலினால் (Charles Degaulle); பிரயோகிக்கப்பட்ட மூலகங்களிலிருந்து பெறப்பட்டதாகும்.

இரண்டாம் உலக யுத்தத்தினைத் தொடர்ந்து மரபு ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஏகாதிபத்தியமும், காலனித்துவமும் உலகத்தின் அனேக பகுதிகளில் பல்வேறு கொள்கைகளிலும், மன உணர்வுகளிலும் நீடித்தே வருகின்றன. மக்கள் சித்தாந்தத்தினால் எப்போதும் பாதிக்கப்பட்டே வந்தார்கள். எவ்வாறாயினும், ஏகாதிபத்தியத்தின் புதிய வடிவம் காணப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. ஒன்று கம்யூனிச ஏகாதிபத்தியம், மற்றையது வல்லரசுகளின் பொருளாதார கலாசார ஆதிக்கமாக இருக்கின்ற நவ ஏகாதிபத்தியமாகும். இத்தகைய சக்திகள் பற்றிய புரிந்துணர்வு சர்வதேச உறவிலுள்ள அனேக அழுத்தங்களைப் புரிந்து கொள்ளும் மையமாக உள்ளது.

தேசிய நலன்

அண்மைய வருடங்களில், குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் உயர் வரலாற்றாசிரியர்கள், உலக விவகாரத்தைக் கற்கும் மாணவர்கள் தேசியக் கொள்கையின் தொடர்பிற்கான மைய விடயமாகத் தேசிய நலன் என்ற எண்ணக் கருவினைத் தோற்றுவித்தார்கள். ஒவ்வொரு நாட்டினுடைய தலைவர்களும், தேசிய நலனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். நலன்கள் பற்றிய வியாக்கியானங்கள் மிக உயர்வானதாக இருந்தாலும், தெரிந்தோ தெரியாமலோ கொள்கை வகுப்பாளர்களின் உண்மையான இலக்கிலிருந்து தேசிய நலன் என்ற எண்ணக்கரு திசை திரும்பி விட்டது எனலாம். வியட்நாம் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் கொள்கைகள் அங்கு விவாதிக்கப்பட்டு வேறுபட்ட கோணங்களிலிருந்து மையப்படுத்தப்பட்டது. இச் சூழ்நிலையிலிருந்தே வியட்நாம் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் கொள்கையில் இணைந்திருந்த அதன் தேசிய நலன் அமைப்புருப் பெற்றது. தேசங்களின் வெளியுறவுக் கொள்கைகளின் தொடர்பிற்கும், வரலாற்று மதிப்பீடுகளுக்கும் இவ்விடயங்கள் உபயோகிக்கப்படுகின்றன.

சர்வதேச அரசியல் நடத்தை

நடத்தைவாதம் பற்றிய சிந்தனை தேசிய இயல்புகளை மட்டுமன்றி, ஏனைய தேசியக் கொள்கைகள், பொறுப்புக்கள் பற்றிய தோற்றத்தினையும் தெளிவுபடுத்திக் காட்டியது. இவ்வாறான சிந்தனைகள், உதாரணமாக ரஸ்சியாவின்; நடத்தை ரஸ்சியாவிற்குரிய நடத்தையாகவே இருக்கவேண்டுமேயொழிய ஐக்கிய அமெரிக்காவினைப் போன்றோ அல்லது ஐப்பானைப் போன்றோ இருக்கக் கூடாதென்ற ரஸ்சியாவின் கொள்கையினைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது. இச்சிந்தனைகள் குறிப்பிட்ட அரசினுடைய தேசிய, சர்வதேசிய, பிரதேச நடத்தையினைத் தனியாகவும், கூட்டாகவும் ஆராட்சிக்குட்படுத்தவும், அதனை விஸ்தரிப்பதற்கும் உபயோகிக்கப்படுகின்றது. சீரான ஆராட்சிகளுக்கான புதிய ஆர்வமும், நடத்தைவாத விஞ்ஞானத்தின் பிரயோகமும். ஐக்கிய அமெரிக்க உளவியளாளர் தலைமையில் சர்வதேசப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க ஆயத்தமாகியது. இவர்கள் இச்சிந்தனையில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்ததுடன் “சர்வதேச விவகாரங்களில் சமூக மன உணர்வில் புதிய ஒழுங்கு தோன்றுவதாக தென்படுகின்றது” என கூறுகின்றனர்.

கூட்டுமுறைமையும், கூட்டு அரசியலும்

உலக யுத்தத்திற்குப் பிந்திய வருடங்களில் இரு தரப்பு, பல தரப்பு கூட்டுக்கள், ஏனைய பாதுகாப்பு ஒழுங்குகள் உருவாக்கப்பட்டன. கூட்டு அரசியல், அரசியல் தந்திரோபாயத்தினையும், இராஜதந்திரத்தினையும், ஏனைய உறவுகளையும் உள்ளடக்கி சர்வதேச உறவிற்கு முக்கியமானதொரு எதிர்காலத்தைக் கொடுத்திருந்தது. 1950 களிலும், 1960களுக்கு முன்னரும் கூட்டு முறைகள் செழிப்பாக வளர்ச்சியடைந்த பொழுது இவ்விடயங்கள் விசேடமான ஒரு உண்மை என ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருந்தாலும் நேட்டோவும்,வோர்சோவும் இன்று செயலிழந்த நிலையிலுள்ள சீற்ரோ (Seato), சென்ரோ (Cento) உள்ளடங்கலாக அனேக பாரிய பலதரப்புக் கூட்டுக்கள் தங்களின் உண்மையான நோக்கத்தினையும், முக்கியத்துவத்திiயும் இழந்துவிட்டன. நேட்டோவினதும், ஏனைய கூட்டு முறைகளினதும் அரசியல் நடைமுறையானது சர்வதேச உறவுச் சிந்தனையில் புதிய பரிமாணத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதக் கட்டுப்பாடும், ஆயுதப் பரிகரணமும்

ஆயுதக்கட்டுப்பாடும், ஆயுதப் பரிகரணமும் தேசிய பாதுகாப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். உண்மையில் அணு ஆயுத யுகத்தில் மனித வாழ்க்கையானது ஆயுதக் கட்டுப்பாடு, ஆயுதப்பரிகரணம் என்ற அம்சங்களுக்குள் புதைந்துபோயுள்ளது. இருந்தாலும் கல்விசார் ஆராட்சிகளுக்கும், சர்வதேசப் பேச்சுவார்த்தைகளுக்கும் இவைகள் துணை நின்றுள்ளன. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின்; ஆயுதப்பரிகரண ஆணைக்குழுவும், ஜெனிவாவிலுள்ள 18 நாடுகளைக் கொண்ட ஆயுதப்பரிகரண ஆணைக்குழுவும் இவ்விடயங்கள் தொடர்பாக முழு அளவில் வாதப்பிரதிவாதங்களை மேற்கொண்டன. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பாரியளவிலான ஆயுதக் கட்டுப்பாட்டினையும், ஆயுதப்பரிகரண நிலையத்தினையும் கொண்டிருந்தது. அணு சக்தியினைச் சமாதான நோக்கங்களுக்காக உபயோகித்தல் என்ற சர்ச்சை ஆயுதக் கட்டுப்பாடு,ஆயுதப் பரிகரணம், சர்வதேச அணுசக்தி நிலையங்கள் என்பவற்றுடன் இணைந்ததாகவே எழுகின்றது. அனேக அரசாங்கங்கள் இவற்றைக் கூட ஆழமாகக் கருத்திலெடுத்திருந்தன. இவ் எல்லா விடயங்களும் பாரியளவிலான கல்விசார் ஆராட்சிக்கும்,நடைமுறை புலனாய்வுகளுக்கும் ஏற்ற சிறந்த ஆவணங்களைக் கொடுத்திருந்தன.

அரசியல் தந்திரோபாயக் கல்விகள்

பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு போன்றவற்றிற்கான ஆயுதப் பரிகரண அளவீடுகளும், ஆயுதக் கட்டுப்பாடு, கூட்டு ராஜதந்திரம், இருதரப்பு, பலதரப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், உத்தியோகபூர்வ,உத்தியோகப்பற்றற்ற யுத்தம் என்பவற்றிற்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகள் சர்வதேச உறவின் மையங்களைச் சுற்றி இயல்பாகவே காணப்படுகின்றது. இத்துறையிலான அனேக சிந்தனைகள் ஆய்வுகளுக்கும். அரசியல் தந்திரோபாய அணுகுமுறைகளுக்கும் விசேட கவனத்தைக் கொடுக்கின்றன.

சர்வதேச அரசியல் அணுகுமுறைகள்

ஹெட்லி புல் (Hedley Bull) குறிப்பிடுவது போல சர்வதேச உறவுக் கோட்பாட்டின் இரண்டு அணுகுமுறைகள் எமது கவனத்திற்குட்படுகின்றது. ஒன்று சட்டம், வரலாறு, மெய்யியல், துறைகளிலிருந்து பெறப்பட்ட பாரம்பரிய அணுகுமுறை மற்றையது விஞ்ஞான அணுகுமுறையாகும். இது கணித அல்லது அளவையியல் ரீதியான ஆதாரங்களுடன் சர்வதேச உறவினை ஆய்வு செய்வதாக இருந்தது. கல்வியாளர்களுக்கு இவ்வித அணுகுமுறைகளின் முதன்மையினை விட இவ்விரு அணுகுமுறைகளும் கொடுக்கும் கருப்பொருளிலேயே அதிக கவனம் இருந்தது. இதனால் சர்வதேச உறவு பற்றிய கல்விக்கு இவ்விரு அணுகுமுறைகளும் திருப்தியளிப்பனவாக இருக்கவில்லை. இதன் விளைவாகப் புதிய அணுகுமுறைகள் பற்றிச் சிந்திக்கப்பட்டிருந்தது.

இவ்வகையில், கோட்பாடுகளுக்கு புதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதுடன், இம் முக்கியத்துவம் நடத்தைவாத விஞ்ஞானத்தின் பங்களிப்பாகவும் கொள்ளப்பட்டிருந்தது. இப்புதிய பங்களிப்புக்களின் அவசியம் பற்றி கார்ல். டபிள்யூ. டூச் (Karl W. Deutsch) குறிப்பிடும் போது “எதிர்காலத்திற்கு எனத் திட்டமிடப்படுகின்ற விடயங்கள் அத்தன்மைகளுடன் நீண்ட காலத்திற்கு நிலைத்திருப்பதில்லை” என்கின்றார். இவ்வகையில் இதன் பங்களிப்பு சர்வதேசத் தொடர்பாடல், பொது அபிப்பிராயமும் பிரச்சாரமும், வேறுபட்ட பின்னணிகளிலான கலாசாரத்தினைக் கொண்ட தனிமனிதர்களுக்கிடையிலான தொடர்பின் பெறுபேறுகள், மொழி, இனம், தேசியம், பேச்சுவார்த்தை நடாத்தும் சிறிய குழுக்கள் அல்லது நிர்வாகக் குழுக்களின் நடத்தை, நகரங்களினதும், தொழிற்சாலைகளினதும் வளர்ச்சியில் ஏற்பட்ட சமூக, பொருளாதார பெறுபேறுகள், உலக மக்களையும், அரசுகளையும் யதார்த்தமாகவும், ஒரேமாதிரியாகவும் உணரும் சக்தி, கொள்கை உருவாக்கம், தீர்மானம் எடுக்கும் செய்முறை, இன்னும் பல விடயங்களை உள்ளடக்கிப் பாரியளவில் உருவாக்கப்பட்டிருந்தது.

மரபு ரீதியான அணுகுமுறை, சட்டம், பொருளாதாரம், வரலாறு ஆகிய துறைகளிலிருந்து பெறப்பட்ட அனேக விடயங்களுடன் அரசியல் விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாக “சர்வதேச உறவு” என்பதனை நிலைநிறுத்தியது. நடத்தைவாத அணுகுமுறையே எல்லா விடயங்களுக்கும் பொதுவான ஒரு அணுகுமுறையாக இருந்தாலும், சமூக விஞ்ஞானங்களின் ஏனைய துறைகளின் பங்களிப்பு குறிப்பாக சமூகவியல், உளவியல், மானிடவியல் துறைகளின் பங்களிப்பு சிறப்பான இடத்தினைப் பெற்றுக் கொண்டது. இவ்வாறான அனேக முன்னேற்றங்கள் திடமானதும்,ஆய்வுக்குரியதுமான கோட்பாடுகளை அபிவிருத்தியடையச் செய்தன. இதற்கு எடுத்துக் காட்டுகளாக விiயாட்டுக் கோட்பாடு, முறைமைக் கோட்பாடு, தொடர்பாடல் கோட்பாடு ஆகிய மூன்று கோட்பாடுகளையும் உதாரணமாகக் கூறமுடியும். இவற்றை விட அதிகாரம், தீர்மானம் எடுக்கும் செயன்முறை, தந்திரோபாயம், அதிகாரச் சமநிலை மற்றும் இத்துறை சார்ந்த ஏனைய கோட்பாடுகளும் சிறப்பிடம் பெறுகின்றது.

முறைமைக் கோட்பாடு

முறைமை என்ற எண்ணக்கரு, சர்வதேச உறவுக் கோட்பாடுகள், அதன் நடைமுறை ஆய்வுகள் ஆகிய இரண்டிற்கும் பயன்படக்கூடிய அடிப்படை அம்சங்களைக் கொடுத்திருக்கின்றது. பொதுவாக முறைமைசார் கோட்பாடு நிகழ்கால அல்லது இறந்தகால சர்வதேச முறைமைகள், சர்வதேச உப முறைமைகள், சர்வதேச அந்தஸ்த்துக் குறைந்த அரச முறைமைகள் என்பவற்றை உள்ளடக்கியிருக்கின்றது. சர்வதேச முறைமைகள் என்பது சர்வதேச அரசியலின் அடிப்படைப் பகுதிகளுக்கு இடையிலான உறவு முறையாகும். மோர்ட்டன் கப்லன் (Morton Kaplan) என்பவர் சர்வதேச முறைமையினைப் பின்வரும் அலகுகளினூடாக இனம் காட்டுகின்றார்.

  1. அதிகாரச்சமனிலை முறைமை
  2. தளர்சியான இருதுருவமுறைமை
  3. இறுக்கமான இருதுருவமுறைமை
  4. பூகோளமுறைமை
  5. படிமுறையிலானமுறைமை
  6. வீற்ரோ முறைமை

ஏனைய சர்வதேச உப முறைமைகள், சர்வதேச அந்தஸ்த்துக் குறைந்த அரச முறைகள் என்பன புவியியல் பிராந்தியங்களை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்த அரசியல் பகுதிகளைக் குறிப்பதாகும். மைக்கல் ஹெஸ் (Michael Haas) என்பவர் சர்வதேச உப முறைமையினை 20 பகுதிகளாகப் பிரித்து இனம் காட்டியுள்ளார். இவற்றில் 1649ஆம் ஆண்டிலிருந்;து 1963ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட 10 ஐரோப்பிய பகுதிகளையும், 1689ஆம் ஆண்டிலிருந்;து 1964 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட 06 ஆசியப்பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தார். சர்வதேச அந்தஸ்த்துக் குறைந்த அரச முறைமைகளுக்குள் தென்னாசியாவினை உள்ளடக்கியிருந்தார். இதே வகையான ஆய்வு முறையினை மேற்கொண்டிருந்த லியோனாட் பயின்டர் (Leonard Binder) மத்திய கிழக்கினை அந்தஸ்த்துக் குறைந்த சர்வதேச அரச முறைமைக்குள் உள்ளடக்கியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுக் கோட்பாடு

சர்வதேச அரசியல் என்பது ஒரு விளையாட்டு என அடிக்கடி வர்ணிக்கப்படுகின்றது. சட்டங்கள் அடிக்கடி மாற்றப்படுவதையும், சில நேரம் வெளிப்படையாக ஒரு அரசு இன்னோர் அரசினை ஆக்கிரமிப்பதையும் பொதுவாக அவதானிக்கவும், அறியவும் முடிகின்றது. விளையாட்டுக் கோட்பாடு உலக அரசியலைக் கற்பதற்கான மாதிரியைக் கொடுப்பதற்கு எத்தனிக்கின்றது. பொதுவாக வரலாற்றில் பூச்சியக் கணக்கு என்றே இது அழைக்கப்பட்டிருந்தது. எந்த ஒரு விளையாட்டிலும், ஒரு பக்கம் தோல்வி கண்டால் மறுபக்கம் வெற்றியடைவதை அவதானிக்க முடியும். எவ்வாறாயினும் அனேகமான சர்வதேச உறவு முறைகள் பல கட்சிகளைக் கொண்ட பூச்சியமல்லாத கணக்கு விளையாட்டாகவே உள்ளது. ஜே. கே. ஷவாட்னி (J.K. Zawodney) என்பவர் குறிப்பிடுவது போல

“சிலவகையான சர்வதேச முரண்பாடுகள் இன்று வெளிச் சூழ்நிலைகளால் அல்லது வெளிச்சக்திகளால் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இரு கட்சிகளையும் தோல்வியடையச் செய்து விடுகின்றன என்பதனை நாம் கட்டாயம் அங்கீகரித்தேயாக வேண்டும். சர்வதேசப் பேச்சுவார்த்தைக்குப் பயன்படக்கூடிய இவ் அவதானங்கள் புறக்கணிக்கப்பட்டால், நடைமுறை சர்வதேச உறவின் முரண்பாடு தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும”;.

சமூக விஞ்ஞானங்களில் இருக்கின்ற அனேக துறைகளின் இயல்புகளுக்கு ஏற்ப இக்கோட்பாடு மாற்றப்பட்டு பிரயோகிக்கப்பட்டு வந்தன. இவ்வகையில் எல்லாத் துறைகளையும் போன்றே சர்வதேச அரசியலும் கோட்பாட்டடிப்படையிலேயே சிந்திக்கப்பட்டு வந்திருந்தது. ஆனால் மோர்டன் கப்லன் (Morton Kaplan) என்பவர்

“அனேக பிரச்சினைகளையுடைய சர்வதேச அரசியலில் இது மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே பிரயோகிக்கத் தகுதியுடையது. வழமையான அனேக விளையாட்டுக்கள் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன. ஆனால் சர்வதேச அரசியல் முடிவில்லாத விளையாட்டை ஒத்திருக்கின்றது. இங்கு விளையாட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஏற்ற வல்லரசுகள் இருக்கவில்லை” என்று கூறுகின்றார்.

தொடர்பாடல் கோட்பாடு

தொடர்பாடல் கோட்பாடு புரட்சிகரத் தொடர்பாடல் என்ற கருத்தில் அமைதியை கொடுப்பதற்கு எத்தனித்தது. உலகத்தின் எல்லாப்பகுதிகளிலும் இயற்கையான மனித உறவையும், சமூக உறவையும் பரந்த அடிப்படையில் கூடிய தரத்திற்கு மாற்றியது. இது வரலாற்று ரீதியான மனித முன்னேற்றத்தை மேலும் கூர்மைப்படுத்தியது. இது மனித நடத்தையினையும், உலக விவகாரங்களையும் ஊடறுத்துச் செல்லத் தொடங்கியது. நவீன தொடர்பாடல், தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த சமுதாய வாழ்க்கை முறையினையும், வளர்ச்சியடைகின்ற சமுதாயங்களின் பழைய வாடிக்கைகள், மரபுகளையும், மாற்றிவிட்டன. மக்களின் பிரச்சினைகளையும், முன்னேற்றத்திற்கான சந்தர்ப்பங்களையும் தொடர்பாடலின் அபிவிருத்தி மிகைப்படுத்தி,உலகத்தின் மின்னணுவியலின் (Electronics) ஆரம்பத்துடன் இணைத்துக் கொண்டது.

ஏனைய மனித முயற்சிகளைப் போல தொடர்பாடலின் முன்னேற்றமும், சர்வதேச அரசியலில் பரந்த பலன் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. தொழில்நுட்பம் திறமைகள், எண்ணங்கள், தகவல்கள் என்பவற்றைப் பரிமாறிக் கொள்வதற்கான நுட்பத்தினையும், மிகவும் நெருக்கமான தொடர்பினை மக்களிடையேயும், நாடுகளிடையேயும் தொடர்பாடல் கொடுத்திருந்தது. கல்வி உயர்வுகளுக்கும், பிரச்சாரத்திற்கும், தேசிய நோக்கங்களுக்கும், சர்வதேசக் கூட்டுறவுகளுக்கும்,பொருளாதார, சமூக, அரசியல் அபிவிருத்திகளுக்கும் பயன்படுத்தப்பட்ட தொடர்பாடல் துரதிஸ்டவசமாக அரசியல் கட்டுப்பாட்டிற்கும், அரசியல் ஒழுங்குபடுத்தலுக்கும் பயன்படுத்தப்பட்டது. அரசியல் கட்சிகளைப் போன்று சமூகமயவாக்கம், இயங்கும் தன்மை (Mobilization) அரசியல் ஆட்சேர்ப்பு போன்ற பல்வேறு துறைகளும் தொடர்பாடல் கோட்பாட்டினை ஆய்வுக்குட்படுத்தலாம்.

நடைமுறை முக்கியத்துவத்தை அதிகப்படுத்துவதாக இவ் அணுகுமுறைகள் காணப்பட்டாலும்,குறிப்பாக வரலாறு, அரசியல் விஞ்ஞானம், சட்டம், பொருளாதாரம், போன்ற கல்விசார் துறைகளினூடாக சர்வதேச உறவு பற்றிய துறையில் அரசியல் புவியியல், சர்வதேச ஒழுங்கமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்கள், ஒப்பீட்டு அரசியல் முறைமை, அல்லது அரசியல் நடத்தை போன்ற அனேக விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

13,700 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>