இறைமை போன்று அதிகாரமும் சர்வதேச அரசியலில் முக்கியமான பதமாகும். ஒரு அரசு தனது தேசிய, சர்வதேசக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு அதிகாரத்தினையே பயன்படுத்துகின்றது. சர்வதேச அரசியலில் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அரசுகள் ஆக்கிரமிப்பிற்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகின்றன. இதனால் ஒவ்வொரு அரசும் தன்னை எல்லா வகையிலும் பலப்படுத்திக் கொள்ளவே முயற்சிக்கின்றன. மறுபக்கத்தில், அரசுகள் பிற அரசுகளாலும், நிறுவனங்களாலும் தாம் கட்டுப்படுத்தப்படுவதையும் வெறுக்கின்றன. பொதுவாக அதிகாரத்தினை ஏனைய அரசுகளிடம் விட்டுக் கொடுக்க அரசுகள் விரும்புவதில்லை. அதிகாரத்தினைப் பயன்படுத்தி அரசுகள் பரஸ்பரம் எல்லா விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றன. அதிகாரமானது சமாதானத்தினை உருவாக்குவதற்கு அல்லது சமாதானத்தினைப் பேணுவதற்கு அல்லது யுத்தத்தினை உருவாக்குவதற்கு அரசுகளால் பயன்படுத்தப்படுகின்றது. எனவே, அதிகாரமானது ஆக்கிரமிப்பாளர்களின் கருவியாக இருப்பதால், அதிகாரத்தினைச் சமப்படுத்துவது தொடர்பான சிந்தனை உருவாகியது.
கி.பி. 1500 ஆண்டுகளுக்குப் பின்னரே அதிகாரச் சமநிலைக்கான கோட்பாடுகள், பிரயோகங்கள் தொடர்பான சிந்தனை எழுச்சியடைந்தது. நாடுகாண் பயணங்களின் ஆரம்பத்துடன் புதிய தேசிய அரசுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1648 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட வெஸ்பாலியா (Westphaliya) உடன்படிக்கையுடன் சர்வதேச நாடுகளுக்கிடையிலான உறவுகள் தோற்றம் பெற்றன. 1648 ஆம் ஆண்டிலிருந்து 1815 ஆம் ஆண்டு நெப்போலியன் சகாப்தம் வரையிலான காலப்பகுதி ஐரோப்பிய அதிகாரச் சமநிலையின் முதற்காலப்பகுதியாகும். அதிகாரச் சமநிலைக் கோட்பாடு 18ஆம், 19ஆம் நூற்றாண்டிலேயே முழுமையாகப் பிரயோகிக்கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் அரசுகளுக்கிடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இவ் ஒப்பந்தங்கள் சர்வதேச உறவுகளுக்கான சிறந்த அடிப்படைகளை வழங்கியதுடன், சர்வதேச அரச முறைமைக்குள் தேசிய அரச முறைமைகள் தொடர்ந்து கட்டுப்பட்டு இயங்குவதற்கான சந்தர்ப்பங்களையும் வழங்கியது.
இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதிகளில் சர்வதேச அரசியலில் தேசிய அரசுகளை உள்வாங்குவதற்கான விருப்பமும், அதற்கான அழுத்தங்களும் காணப்பட்டதுடன், சர்வதேச அரசியலின் பிரதான அலகாகவும் இது காணப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளை விட தற்போது சர்வதேச் சூழலில் அதிகாரச் சமநிலை சாமர்த்தியமாகவும், திருப்தியாகவும் பேணப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.
சமநிலை (Equilibrium) என்றால் என்ன என்பது தொடர்பாக ஏ.எவ்.பொலட் (A.F. Pollard) என்பவர் பின்வருமாறு கூறுகின்றார்.
“இதன் அடிப்படைக் கருத்து மிகவும் இலகுவானதாகும். சமனிலை என்பது இரண்டு ஒரேயளவுத் தட்டுக்களினால் கணிப்பிடக்கூடியதாகும். இரண்டு அளவுத் தட்டுக்களின் பாரமும் சமமாக இருக்கும் போது அதனைச் சமநிலை எனக் கூறுகின்றோம். சர்வதேச அரசியலில் அதிகாரம் எவ்வளவு முக்கியமானதோ அதே போல் அரசுகளுக்கிடையில் அதிகாரம் பங்கிடப்பட்டிருப்பதும்,அதனூடாகச் சமநிலைக்குள்ளாவதும் அவசியமானதாகும். எந்தவொரு தேசிய அரசும் ஏனைய தேசிய அரசுகளின் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்படும்படி வலிமை பெற்றுவிடாமல் தடை செய்வதையே அதிகாரச் சமநிலைத் தத்துவம் விளக்குகின்றது” எனக் கூறுகின்றார். ஜோர்ச் சவார்சன்பேர்கர் (George Schwarzenberger) என்பவர் அதிகாரச் சமநிலை என்பது
“சமப்படுத்தப்பட்ட நிலை அல்லது சர்வதேச உறவின் ஸ்திரப்பாட்டிற்கான சில சமப்பாடுகளாகும். அரசுகள் கூட்;டுக்கள் அல்லது ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச அரங்கில் தமக்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்கின்றன. இதனால் பல அரசுகள் தமது இறைமைக்கும்,சமாதான சகவாழ்விற்காக ஆயுதம் தரித்து நிற்குமளவிற்கு அதிகாரச் சமநிலையானது உலகளாவிய பிரயோகமாகி விடுகின்றது.” எனக் கூறுகின்றார்.
ஹான்ஸ் மோகென்தோ (Hans Morgenthau) அதிகாரச் சமநிலை என்பது “பொதுவான சமூகக் கோட்பாட்டின் குறிப்பிட்ட வெளிப்பாடுகளே அதிகாரச் சமநிலையாகும்” என்கிறார். ஜி.லுவிஸ் டிக்கின்சன் (G. Lowes Dickinson) என்பவர்
“சமனிலை என்ற பதத்தினை இரண்டாக வகைப்படுத்துகின்றார். ஒன்று இரண்டு பக்கமும் சமமான நிலையாகும். மற்றையது சமமற்ற நிலையாகும். அதாவது ஒரு பக்கம் கூடியும், மறுபக்கம் குறைந்துமுள்ள நிலையாகும்” என்கின்றார்.
ஏர்ன்ஸ் ஹாஸ் (Ernst Haas) என்பவர் “அதிகாரச் சமநிலையினை அரசியல் விஞ்ஞானிகளால் நிச்சயிக்க முடியாது” எனக் கூறுகின்றார். அதேநேரம் அதிகாரச் சமநிலையின் பண்புகளை எட்டு வகையாகப் பிரித்துக் காட்டுகின்றார்.
-
அரசுகளுக்கிடையில் அதிகாரம் சமமாகப் பகிரப்பட்டிருக்கும் நிலை.
-
அரசுகளுக்கிடையில் அதிகாரம் சமமாகப் பங்கிடப்படாமலிருக்கும் நிலை.
-
குறிப்பிட்டதொரு அரசின் உச்ச அதிகாரத்தினால் ஏற்படும் சமநிலை.
-
சமாதானத்திற்கும், உறுதிப்பாட்டிற்குமான அதிகார முறைமை.
-
உறுதியற்ற தன்மை, யுத்தம் என்பவற்றினால் உருவாக்கப்படும் அதிகார முறைமை.
-
அதிகார அரசியலின் வழிமுறையாக அதிகார சமநிலை உள்ளது.
-
சர்வதேசச் சட்டத்தின் வரலாற்று நிலையினைக் குறிக்கின்றது.
-
கொள்கை வகுப்பாளர்களுக்கான வழிகாட்டியாக உள்ளது.
மேற்குறிப்பிட்ட வரைவிலக்கணங்கள் யாவும் அதிகாரச் சமநிலைக்கான வௌ;வேறு விளக்கங்களைக் கொடுக்கின்றன. எனவே அதிகாரச் சமநிலை என்ற பதத்திற்குத் தெளிவான வரைவிலக்கணம் ஒன்றை உருவாக்குவது கடினமானது எனக் கூறுகின்றார்கள்.ஆயினும் அதிகாரச் சமநிலை என்றால் என்ன என்பதைப் பின்வருமாறு விளக்கலாம்.
ஒரு அரசு ஏனைய அரசுகளின் மீது எவ்வளவு அதிகமான கட்டுப்பாட்டினை விதிக்க முடியுமோ அவ்வளவு கட்டுப்பாட்டினையும் விதிக்கவே விரும்புகின்றது. ஆனால் ஏனைய அரசுகள் இதற்கு எதிராக எவ்வளவிற்கு சமமான அதிகாரங்களைப் பெற்றுச் சுதந்திரமாக இயங்க முடியுமோ அந்தளவிற்கு இயங்க முயற்சி;க்கின்றது. இதனை பின்வரும் உதாரணத்தின் மூலம் விளக்கலாம். A என்ற அரசு ஏகாதிபத்திய கொள்கையின் நிமித்தம், B என்ற அரசின் மீது தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும். B என்ற அரசு இக்கொள்கைக்கு எதிராகத் தனது ஏகாதிபத்திய கொள்கையினை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிக்கும். A என்ற அரசானது தனது ஏகாதிபத்தியக் கொள்கையின் நிமித்தம் பலத்தினைப் பிரயோகிக்க முயற்சிக்கும் போது B என்ற அரசானது அதற்கு எதிராக தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்நிலைப்பாடு சர்வதேச அரசியலில் தொடர்ந்திருக்கும் என்பதில்லை. B என்ற அரசானது தற்காப்பு நிலையிலிருந்து கொண்டு தனது பலத்தினை A யினை விட அதிகரித்து கொள்ளுமாயின் B என்ற அரசு ஏகாதிபத்திய நலனின் நிமித்தம் A யின் மீது தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்திக் கொள்ள முற்படும். இந்நிலையில் யு தனது தற்காப்பு நிலையினை எடுக்க வேண்டி ஏற்படும்.
அரசு B தனது ஏகாதிபத்தியக் கொள்கையின் நிமித்தம் C என்ற அரசினை கட்டுப்படுத்த முற்படுமாயின் A என்ற அரசு தனது ஏகாதிபத்தியக் கொள்கையினை C என்ற அரசு நோக்கித் திருப்பும். இந்நிகழ்வுகளை C ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் இந்நிகழ்வுகளினால் அரசு A யின் இலக்கினுள் C என்ற அரசு உட்படுமாயின் B என்கின்ற அரசானது A என்ற அரசினது கொள்கைக்கு எதிராக எதிர்ப்புக்களை வெளிப்படுத்தத் தொடங்கும். ஏனெனில் ஒன்றில் C என்ற அரசினை B தனது ஆதிக்கத்திற்குள் வைத்திருக்க விரும்பும். அல்லது B என்ற அரசு தனது நலனிற்காக B என்ற அரசினைச் சுதந்திரமாக அதற்குரிய அந்தஸ்த்துடன் இயங்க விடவேண்டும் என்பதை விரும்பும். அரசு A க்கும் அரசு B க்கும் இடையிலான அதிகாரத்திற்கான இப் போராட்டம் நேரடியான எதிர்ப்பாக இடம்பெறாமல் அரசு A க்கும், அரசு B க்கும் இடையிலான போராட்டமாகவே நடைபெறும். இதற்கு உதாரணமாக தென்கிழக்காசிய நாடுகளை யார் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்பதில் ஐக்கிய அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டி நிலையினைக் கூற முடியும்.
அதிகாரச் சமநிலையினைப் பேணுவதற்கான வழி முறைகள்.
அதிகாரச் சமநிலையானது இயற்கையாக ஏற்படுவதொன்றல்ல. இது சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் முயற்சியினால் ஏற்படுத்தப்படுவதாகும். அதிகாரச் சமநிலையினை ஏற்படுத்துவதற்கு காலங் காலமாக சில நுட்பங்கள் பின்பற்றப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இவற்றுள் பினவருவன முதன்மையானவைகளாகும்.
1. கூட்டுக்களும், எதிர்க் கூட்டுக்களும்
சர்வதேச முறைமையில் அதிகாரச் சமநிலையின் செயற்பாட்டிற்காகக் கூட்டுக்கள் அமைப்பதும், எதிர் கூட்டுக்கள் அமைப்பதும் அவசியமானதாகும். அரசு A யும் அரசு B யும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுமாயின் தங்களுடைய அதிகாரச் சமநிலையினைப் பேணுவதற்காகப் பல்வேறு விதமான கூட்டுக்களை உருவாக்க முயற்சி செய்யும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பலம் பொருந்தியிருந்த அரசு A யை முறியடிப்பதற்கு அரசு B கூட்டுக்களை உருவாக்கியிருந்தது. பலம் குறைந்திருந்த நிலையில் அரசு B யிற்குக் கூட்டுக்களை உருவாக்கும் சாத்தியம் அதிகமாக இருந்தது. அரசு யு தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி அரசு B யுடன் கூட்டுச் சேர முன்வரும் அரசுகளைப் பயமுறுத்தியிருக்க முடியும். இவ்வாறு நடைபெற்றிருக்குமாயின் அரசு A யானது அரசு B யினை வெற்றி கொண்டிருக்க முடியும். அல்லது அரசு A யானது அரசு B யினையும் அதன் கூட்டினையும் வெற்றி கொண்டிருந்தால் அரசு A இனது அதிகாரம் மேலும் அதிகரித்திருக்கும். இது அரசு A உலகம் முழுவதிலும் தனது அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்கான வாய்ப்பினை இலகுபடுத்தியிருக்கும். எனவே அரசு A யைக் கட்டுப்படுத்த அரசு B எடுத்த நடவடிக்கை தோல்வியில் முடிவடையும். இந்நிலையில் அரசு A யை எதிர்;க்க முனையும் அரசு B யுடன் ஏனைய நாடுகள் நட்பை வளர்த்து அதிகாரத்தில் முன்னிலையில் இருக்கும் அரசு A யை முறியடிக்க முன்வரும். இது நீண்ட காலத்தில் பலம் அதிகரிக்கப்பட்டு அரசு A ஐ வெற்றி கொள்ளக் கூடிய நிலை ஏற்படும். இவ்வாறு ஏற்பட்டால் அரசு B யானது அதிகாரத்தில் முன்னிலையில் இருக்கும்.
அதிகாரச் சமநிலைத் தத்துவத்தின் விதி யாதனில், எப்போதும் பலம் குறைந்த பக்கத்துடன் தான் கூட்டு வைக்க வேண்டும். கூட்டுக்கள் தற்காலிகமானவைகளாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு நாட்டின் தலைமையில் பாதுகாப்பிற்கு என உருவாக்கப்படும் ஒரு கூட்டின் வெற்றியில் இருந்து உருவாகும் ஆபத்துக்களைத் தவிர்க்க வேண்டும். ஒரு நாட்டின் தலைமையில் உருவாகும் ஒரு கூட்டின் வெற்றியானது எவ்வளவு அதிகமானதாக இருக்கின்றதோ, அந்தளவிற்கு அக்கூட்டில் உள்ள நாடுகள் வெற்றி பெற்ற கூட்டில் இருந்து விலகி வெற்றி பெற்ற கூட்டின் தலைமை நாட்டிற்கு எதிராகப் புதியதொரு எதிர்ப்பு முன்னணியை உருவாக்க வேண்டும். அதாவது அரசு B யினது அதிகரித்த சக்திக்கு எதிராக புதிய முன்னணியை உருவாக்குவதற்கான தேவைகள் அதிகமாக இருக்கும். அரசு B யை எதிர்க்கும் புதிய முன்னணியில் அங்கம் வகிப்பவர்கள் அரசு B யுடன் நண்பர்களாக இருந்தவர்களாக இருப்பார்கள். அரசு B யை எதிர்க்கும் புதிய முன்னணியில் அரசு A யும் ஒரு பங்காளராக மாறுவார். இதன் மூலம் கற்றுக் கொள்ளக் கூடிய இரண்டு விடயங்கள் உள்ளன.
i அதிகாரச் சமநிலைத் தத்துவத்தின் படி ஒரு யுத்தத்தின் பின்னர் வெற்றி பெற்ற கூட்டு உடைந்து விடும்.
ii. அதிகாரச் சமநிலையினைப் பேணுவதற்காக இன்றைய நண்பர்கள் நாளைய எதிரிகளாகவும், இன்றைய எதிரிகள் நாளைய நண்பர்களாகவும் மாறுவார்கள்.
இரண்டாம் உலக யுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் யுத்தத்தின் பின்னர் மேற்கு நாடுகளுடன் இணைந்து சோவியத் இரஸ்சியாவிற்கு எதிராகச் செயற்பட்டிருந்தன. சமகால உதாரணங்களாக ஐக்கிய அமெரிக்காவிற்கு இன்று சர்வதேச அரங்கில் உள்ள நிலையை எடுத்துக் காட்டலாம். ஐக்கிய அமெரிக்காவின் அளவு கடந்த பலம் காரணமாக பழைய கூட்டுக்களை ஒன்றாக வைத்திருப்பதிலும், புதிய கூட்டுக்களை உருவாக்குவதிலும், பல இடர்பாடுகள் ஐக்கிய அமெரிக்காவிற்கு உள்ளது. ஆனால் ஐக்கிய அமெரிக்காவும் அதன் கூட்டுக்களும் சோவியத் இரஸ்சியா தலைமையிலான கூட்டின் சவால்களை மூலவள சக்தியினை தொடர்ந்து உச்சநிலையில் பேணியதன் மூலம் உடைத்துக் கொண்டதுடன், சோவியத் இரஸ்சியா தலைமையிலான கூட்டினையும் உடைத்துக் கொண்டது. ஐக்கிய அமெரிக்கா அரசு B யினது செயற்பாடுகளை நடத்தியது. இவ்வாறு ஐக்கிய அமெரிக்கா நடந்து கொண்டமை அதனுடைய வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் சோவியத் இரஸ்சியாவினை அதன் நிலையில் இருந்து பின்தள்ள வைத்தது. இந்நிலைமையினால் சரியாகவோ தவறாகவோ உலகில் இன்று அரசு A யினது நிலையினை ஐக்கிய அமெரிக்கா எடுத்துள்ளது.
2. கொள்கைகளும் இலக்குகளும்
தேசிய அரசுகள், ஒன்றினுடைய அதிகாரத்தினை மற்றொன்று அறிந்து கொண்டிருப்பது போன்று, ஒரு அரசினுடைய வெளியுறவுக் கொள்கைகளை ஏனைய அரசுகள் அறிவதில் அக்கறையாக இருக்கின்றன. வெளியுறவுக் கொள்கை நடத்தை என்பது அதிகாரச் சமநிலை பேணுதலில் திரும்பத் திரும்ப கருத்தில் எடுக்கப்படும் ஒரு நிகழ்வாகி வருகின்றது. 1971 ஆம் ஆண்டு யுத்தத்தினை ஏற்படுத்தியிருந்த இந்திய- பாகிஸ்தானிய நெருக்கடியை இதற்கு உதாரணமாக கூறலாம். ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கான சர்வதேசப் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா ஜனநாயக நாடான இந்தியாவிற்கு எதிரானகொள்கையினையும், பாகிஸ்தானுக்குச் சார்பான கொள்கையினையும் வகுத்துக் கொண்டது. வங்காளதேசத்தினுள் (கிழக்கு பாகிஸ்தான்) தனது துருப்புக்களை அனுப்பியதன் மூலம் இந்தியா ஆக்கிரமிப்பாளராக ஐக்கிய அமெரிக்காவினால் கருதப்பட்டது. பாகிஸ்தானியர்கள் வங்காளிகளுக்கு இழைத்த கொடுமைகளையும், அதனால் இந்தியாவில் நுழைந்த வங்காளதேச அகதிகளையும் பற்றி ஐக்கிய அமெரிக்கா அக்கறைப்படாமல் பாகிஸ்தான் சார்பாகத் தமது கொள்கையினை வகுத்துக் கொண்டமை இராஜதந்திரம் மிக்க ஒரு நடவடிக்கையாகும். ஐக்கிய அமெரிக்கா இவ்வாறு கொள்கை வகுத்துக் கொண்டமைக்குச் சீனாவே பிரதான காரணமாகும். இந்திய- பாகிஸ்தான் போரில் சீனா பாகிஸ்தானை ஆதரிக்கும் வகையில் தனது கொள்கையினை வகுத்துக் கொண்டிருந்தது. ஆசியாவின் பிராந்திய வல்லரசாக போட்டி போட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவும் – சீனாவும் ஒன்றிற்கு ஒன்று எதிரிகளாகும். எனவே சீனாவினைப் பொறுத்தவரையில் தன் பிரதான எதிரியாகிய இந்தியாவைப் பலவீனமாக்கவும், தன் வழிக்கு கொண்டு வரவும் பாகிஸ்தானை ஆதரிப்பதுதான் சிறந்ததாக அமையும் என சீனா கருதியதால், பாக்கிஸ்தான் சார்பான கொள்கையினை வகுத்தது. இந்தியா சோவியத் ரஸ்சியாவின் நட்பு நாடாக இருந்தமையினால், ஆசியாவில் ஐக்கிய அமெரிக்கா தன் அதிகாரத்தினை நிலை நாட்டுவதற்கு பலம் பொருந்திய நாடுகள் தேவையாக இருந்தது. இதனால் சீனாவினைத் தன் பக்கத்திற்கு இழுத்துக் கொள்ள ஐக்கிய அமெரிக்கா முயற்சி செய்து கொண்டிருந்தது. சீனாவுடன் நட்புறவினை ஏற்படுத்துவதன் மூலம் சோவியத் இரஸ்சியா மீது அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்பதுடன் ஆசியாவிலும் செல்வாக்குச் செலுத்தலாம் என எண்ணியிருந்தது. இத்தருணத்திலேயே இந்திய-பாகிஸ்தானிய யுத்தமும் ஏற்பட்டது. இதனை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள ஐக்கிய அமெரிக்கா, சீனா-பாகிஸ்தான் நட்புடன் தன்னையும் இணைத்துக் கொண்டு, யுத்தத்தில் சீனா யாரை ஆதரித்ததோ அந்நாட்டையே ஐக்கிய அமெரிக்காவும் ஆதரித்துக் கொண்டது. ஆனால் சீனாவின் பலத்திலும்,ஆசியாவின் பாதுகாப்பிலும் எச்சரிக்கையாக இருந்த சோவியத் இரஸ்சியா தனது நட்பு நாடாகிய இந்தியாவினை ஆதரித்தது. தேசிய அரசுகள் எடுத்துக் கொண்ட கொள்கை, இலக்குகள் இங்கு இரு நாடுகளினதும் உண்மையான அதிகாரத்திற்கும் அப்பால் சர்வதேச அதிகாரத்தினைத் தீர்மானிக்க வேண்டிய தேவையினை இவ் யுத்தத்திற்குக் கொடுத்திருந்தது. யுத்தத்தில் இந்தியா வெற்றி கொண்டமை ஐக்கிய அமெரிக்காவினதும், சீனாவினதும் அதிகாரச் சமனிலையில் தோல்வியினை ஏற்படுத்தியிருந்த அதேநேரத்தில், சோவியத்ரஸ்சியாவி;ற்குச் சாதகமான அதிகார சமநிலையினைக் கொடுத்திருந்தது.
3. பிரித்தாளும் முறைமை
அதிகாரச் சமநிலையினைத் தமக்கு ஏற்றவகையில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக தேசிய அரசுகள் பிரித்தாளும் முறைமையினைப் பின்பற்றுகின்றன. ஒரு தேசிய அரசு தன்னுடன் அதிகாரத்திற்காகப் போட்டியிடும் தேசிய அரசினைப் பலவீனப்படுத்த பிரித்தாளும் கொள்கையினைக் கையாளுகின்றன. இரண்டாம் உலகப் போரில் A யினது நிலையினை எடுத்த ஜேர்மனியை பலவீனப்படுத்த B யினது நிலையினை எடுத்துக் கொண்ட சோவியத் இரஸ்சியா ஜேர்மனியை இரண்டாக பிரித்துக் கொண்டது. இதன் பின்னர் B யினது நிலையினை எடுத்துக் கொண்ட சோவியத் இரஸ்சியாவினைப் பலவீனப்படுத்த தற்போது அதனை பல அரசுகளாகப் பிரித்து விட்டதுடன், சோவியத் இரஸ்சியாவுடன் இணைந்து செயற்பட்டு வந்த கிழக்கு ஐரோப்பாவும் பிரிவடைந்து விட்டது.
4. தலையிடுதலும் தலையிடாமையும்
ஒரு தேசிய அரசு தனது அதிகாரத்தினைப் பேணுவதற்காகச் சர்வதேச விவகாரங்களில் தலையிடுகின்றன. அல்லது தலையிடாமல் இருக்கின்றன. வலிமையுள்ள நாடு தனது நலனை மையப்படுத்தியே இதனை மேற்கொள்ளும். 1956 ஆம் ஆண்டு சுயஸ் கால்வாய் பிரச்சினையில் பிரித்தானியா, பிரான்ஸ், இஸ்ரவேல் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து எகிப்தின் மீது படையெடுத்த போது சோவியத் இரஸ்சியா எகிப்தின் சார்பில் தலையிடப் போவதாக எச்சரிக்கை செய்தபோது படையெடுப்பு நிறுத்தப்பட்டது. சோவியத் இரஸ்சியா தலையிடாமல் விட்டிருக்குமாயின் மேற்காசியாவில் அதிகாரச் சமநிலை சோவியத் இரஸ்சியாவிற்கு பாதகமாக மாறியிருக்கும். எகிப்து மேற்கு ஐரோப்பாவிற்கு விரோதமான கொள்கையினை வகுத்திருந்தமை சோவியத் இரஸ்சியாவினைப் பொறுத்தவரை சாதகமானதேயாகும். ஈராக்கிடம் இருந்து குவைத்தினை மீட்க ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான அணி தலையிட்டமை மூலம் மேற்காசியாவின் அதிகாரம் ஐக்கிய அமெரிக்காவிற்கே சாதகமாகச் சமப்படுத்தப்பட்டது. அதேநேரம் தலையிடாக் கொள்கையினைப் பின்பற்றி நடுநிலைமை வகித்து, ஐரோப்பாவில் சுவிற்சர்லாந்து, சுவீடன் போன்ற நாடுகள் தமது அதிகாரத்தினைச் சமப்படுத்திக் கொள்கின்றன.