சர்வதேசச் சட்டம்

சர்வதேச முறைமைகளில் உள்ளடங்கியுள்ள விடயங்களில் சர்வதேசச் சட்டமும் ஒன்றாகும். சர்வதேச முறைமையினுள் அரசுகள், சர்வதேச ஒழுங்கமைப்புக்கள், வெவ்வேறுபட்ட அரச ஸ்தாபனங்கள், சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் போன்ற பல பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. எனவே சர்வதேசச் சட்டத்தினைச் சர்வதேச முறைமைகளுக்கூடாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

பழங்குடி மக்கள் தமது குடியிருப்புப் பகுதிகள், நீர்த்தேக்கங்கள், வேட்டையாடும் பகுதிகள், யுத்தம், கலப்புத் திருமணம் போன்றவற்றிற்குப் புரிந்துணர்வினடிப்படையிலான நடைமுறைகளைத் தமக்கிடையில் ஏற்படுத்தியிருந்தனர். கிரேக்க அரசுகளில் சட்டத்திற்குக் கீழ்ப்படிதல் மக்களின் உயர்நடத்தையாக இருந்தது. இதன் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதுடன், இதற்கான விதிகளையும் உருவாக்கிக் கொண்டனர். உதாரணமாக நகர அரசுகளுக்கிடையிலான யுத்தங்கள், உறவுகள், இராஜதந்திரப் பாதுகாப்புப் போன்றவற்றிற்கான விதிகளை உருவாக்கிக் கொண்டனர். அத்துடன், நகர அரசுகளுக்கிடையிலான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான மத்தியஸ்த்த விதிகளையும், இராணுவ நடவடிக்கைகளுக்கான சட்டங்களையும் உருவாக்கியிருந்தனர். உரோமானியர்கள் அரசாங்கத்தினையும், நிர்வாகத்தினையும் சக்திமிக்கதாக மாற்றி கூட்டு அரசுகளை உருவாக்கிக் கொண்டதுடன், மக்களின் உறவு முறைகளுக்கான விதிகளையும் உருவாக்கியிருந்தனர். உதாரணமாக மக்கள் சட்டம் (Law of People) என்பதனைக் கூறிக் கொள்ளலாம். ஆட்சியாளர்கள் இயற்கை நீதிகளுக்கு மேலாக எல்லா மக்கள் மீதும் இச்சட்டத்தினைப் பிரயோகிக்க முடியும். இச்சட்டம் உரோமானிய சாம்ராச்சிய வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட மத்திய காலம் வரையில் சர்வதேசச் சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. மத்திய காலத்தில் யுத்தம் தொடர்பான புதிய விதிகள் உருவாக்கப்பட்டன. யுத்தம், சமாதானம், ஆகிய இரண்டிற்கும் சமுத்திரங்களைப் பயன்படுத்துதல், நடுநிலை வகித்தல், காலனித்துவ நாடுகளை உருவாக்குகின்ற போது அதன் எல்லைகளைத் தீர்மானித்தல் போன்றவற்றிற்குச் சில விதிகள் உருவாக்கப்பட்டன. அரசுகளுக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள், மகாநாடுகள் போன்றவற்றைக் அடிப்படையாக் கொண்டு உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. இவைகள் யாவும் சர்வதேச் சட்டங்களாக கருத்திலெடுக்கப்பட்டிருந்தன.

சர்வதேசச் சட்டத்திற்கான தொகுப்பு என்ற வகையில் 1492 ஆம் ஆண்டிற்கும் 1546 ஆம் ஆண்டிற்குமிடையில் வாழ்ந்த பிறான்சிஸ்கோ டெவிற்ரோறியா (Francisco Devitoria) 1548 ஆம் ஆண்டிற்கும் 1617 ஆம் ஆண்டிற்மிடையில் வாழ்ந்த பிறான்சிஸ்கோ சோறிஸ் (Francisco Suarez) ஆகிய ஸ்பானிய சமயக் கோட்பாட்டாளர்கள் யுத்தம், காலனித்துவ உருவாக்கம் போன்றவற்றிற்கான சட்டத் தொகுப்புக்களை வெளியிட்டிருந்தனர். இதேபோன்று 1552 ஆம் ஆண்டிற்கும், 1608 ஆம் ஆண்டிற்குமிடையில் வாழ்ந்த அல்பிறிகோ ஜென்ரிலி (Alberico Gentili) ஒப்பந்தச் சட்டங்களிலுள்ள பிரச்சினைகளை எடுத்துக் கூறியிருந்தார். ஆயினும் 1583ஆம் ஆண்டிற்கும் 1645 ஆம் ஆண்டிற்குமிடையில் வாழ்ந்த சர்வதேசச் சட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் டச்சு கல்விமானாகிய ஹாகோ குரோரியஸ் (Hugo Grotius) வழங்கிய பங்களிப்புச் சிறப்பானதாகும். 1609 ஆம் ஆண்டு “கடல் சுதந்திரம்” (Freedom of the Sea) என்ற தலைப்பில் இவர் தனது முதல் சட்ட நூலினை வெளியிட்டிருந்தார். 1625 ஆம் ஆண்டு “யுத்ததிற்கும் சமாதானத்திற்குமான சட்டம்” என்ற நூலை வெளியிட்டிருந்தார். யுத்த ஒப்பந்தங்களும், சமாதான ஒப்பந்தங்களும் ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகின்றது. குரோரியஸ் சர்வதேசச் சட்டத்தினை இயற்கைச் சட்டம், உடன்பாட்டுச் சட்டம், அல்லது நம்பிக்கைச் சட்டம் என இரண்டாகப் பிரிக்கின்றார். உடன்பாட்டுச் சட்டத்திற்கு உதாரணமாக மரபு ரீதியான சட்டங்கள்,வழக்காற்றுச் சட்டங்கள் போன்றவற்றைக் கூறிக் கொள்ள முடியும். இவரின் பின்னர், எமரிச் டி வற்ரெல் (Emmerich De Vattel) என்பவர் “தேசங்களின் சட்டம் (Law of Nation) என்னும் நூலினை வெளியிட்டிருந்தார். இந்நூலில் இவர் “இயற்கைச் சட்டங்கள்” இறைமையாளர்களையும், இன விவகாரங்களையும் தொடர்புபடுத்துவதற்கு பயன்பட்டதாகக் கூறுகின்றார். இவரின் கருத்துக்கள் மொண்டெஸ்கியூ, ரூசோ போன்றவர்கள் சர்வதேசச் சட்டத்திற்கு முற்போக்கான பங்களிப்பினைச் செய்வதற்கு உதவியிருந்தது.

நவீன சர்வதேசச் சட்டம்

சட்டம் அரசுகளை விட முதன்மையானதாகும். சர்வதேசச் சட்டமானது அரசுகளுக்கிடையிலான சட்டமாகும். சர்வதேசச் சட்டமானது அரசுகளின் இறைமையினையும், அதனைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளையும் எடுத்துக் கூறுகின்றது. எனவே சர்வதேசச் சட்டம் அரசுகளின் இறைமையின் நண்பன் எனக் கூற முடியும். அரசுகளுக்கிடையில் ஒழுங்கமைக்கப்பட்ட உறவு முறைகளைச் சர்வதேசச் சட்டம் ஏற்படுத்திக் கொடுப்பதுடன், சர்வதேச அரசியல் நடத்தைகளுக்கான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

இக்கருத்துக்களை ஆதாரப்படுத்தும் வகையில் எல்லெறி சி.ஸ்ரோவெல் (Ellery C.Stowell) என்பவர் 1931 ஆம் ஆண்டு சர்வதேசச் சட்டமானது “உலக முறைமைகளுக்கூடாக மனித உறவுகளுக்கான சில விதிகளை தோற்றம் பெற வைக்கின்றது” எனக் கூறியிருந்தார். பிலிப் சி.ஜேஸ்சுப் (Philip C.Jessup) என்பவர் 1948 ஆம் ஆண்டில் “பொதுவாக அரசுகளுக்கிடையிலான உறவுகளுக்கு பிரயோகிக்கத்தக்க சட்டங்களே சர்வதேசச் சட்டமாகும்” எனக் கூறியிருந்தார். ஆனால் காலப்போக்கில் சட்டங்கள் தொடர்பான மரபுரீதியான எண்ணக்கருக்களுக்கு எதிர்ப்புக்கள் தோன்றத் தொடங்கின என இவர் கூறுகின்றார். சர்வதேசச் சட்டங்களுக்கான அனேக புதிய உள்ளடக்கங்கள் தோற்றம் பெறத் தொடங்கின. இதனடிப்படையில் ஜேஸ்சுப் சர்வதேசச் சட்டத்தினைச் “தேசங்களுடைய புதிய சட்டம்” எனக் கூறியிருந்தார்.

எல்லா அரசுகளும் இனம் கண்டு கொள்ளக்கூடிய சட்டத் தகைமையினைப் பெற்றே காணப்படுகின்றன. அத்துடன் தம்மிடம் உள்ள சட்ட ஆளுமையினை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச உறவில் பங்கு கொள்வதற்கான உரிமையினையும் பெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சாசனத்தின் படி அரசுகளுக்கிடையிலான கூட்டுக்கள், நட்புறவுகள் என்பவற்றைச் சர்வதேசச் சட்டம் ஏற்றுக் கொள்கின்றது. அதாவது ஒவ்வொரு அரசும் இயல்பாக கிடைக்கும் முழு இறைமையினையும் அனுபவிக்க உரிமை பெற்றுள்ளது. இவ்வகையில் சர்வதேச உறவில் ஈடுபடும் அரசுகளின் சர்வதேசச் சட்டங்களுக்கான பிரதான மூலகங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  1. ஒப்பந்தங்கள்
  2. வழக்காறுகள்
  3. பொதுச்சட்டங்கள்

ஆயினும் சர்வதேச நீதிமன்ற சாசன விதி 38 இன் படி சர்வதேசச் சட்டத்திற்கான மூலகங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது.

  1. அரசுகளின் பொதுவான அல்லது குறிப்பான சர்வதேசச் சம்பிரதாயங்களை உள்ளடக்கிய சட்டங்கள்.
  2. சர்வதேச வழக்காறுகள், சர்வதேச நடைமுறைகள்.
  3. நாகரீகமடைந்த தேசங்களினால் பெற்றுக் கொள்ளப்படும் பொதுவான விதிகள்.
  4. நீதிமன்றத் தீர்ப்புக்கள், வெவ்வேறுபட்ட தேசங்களின் உயர்வானதும், தரமானதுமான சிந்தனைகள்
  5. பிரபல்யம் பெற்ற சட்ட அறிஞர்களின் குறிப்புக்கள் அல்லது கருத்துக்கள்

இங்கு வழக்காறுகள் அல்லது வழக்காற்றுச் சட்டங்கள் நிரூபிக்கப்பட முடியாத சட்டங்களாகவே காணப்படுகின்றன. சில சமுதாயங்களில் நடைமுறைச் சாத்தியமான சில விதிகள் சில சமுதாயங்களில் நடைமுறைச் சாத்தியமற்றவையாகவும் காணப்படுகின்றன.

சர்வதேசச் சட்டத்தின் அடிப்படைத் தத்துவம்

சர்வதேசச் சட்டம் பொதுவாக ஏற்றுக் கொள்ளக்கூடிய விதிகளைக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது. சர்வதேசப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவசியமான விடயங்களை இவ்விதிகள் கொண்டுள்ளன. இவ்விதிகள் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சாசனத்தினை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டிருந்தன. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனச் சாசனம் சர்வதேசச் சட்டத்தின் அடிப்படைத் தத்துவங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றன.

  1. சர்வதேச உறவில் ஈடுபடும் அரசுகள் பலாத்காரத்தை உபயோகித்தல் அல்லது அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கப்படல் வேண்டும்.
  2. அரசுகள் சமாதானத்தினைப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்படுத்த வேண்டும்.
  3. எந்த ஒரு அரசும் ஏனைய அரசுகளின் உள்விவகாரங்களிலும், அதிகாரத்திலும் தலையிடக் கூடாது.
  4. ஐக்கிய நாடுகள் சாசனத்தின் படி அரசுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படுவது அரசுகளின் கடமையாகும்.
  5. சம உரிமையும், மக்களின் சுய நிர்ணய உரிமையும் மதிக்கப்படல் வேண்டும்.
  6. அரசுகளின் சம இறைமைத் தத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

அரசுகள் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சாசனத்திற்குத் தமது கடமையுணர்வினையும்,விசுவாசத்தினையும்; செலுத்த வேண்டும்.

1975 ஆம் ஆண்டு ஹெல்சிங்கி (Helsinks) இல் கூடிய ஐரோப்பிய பாதுகாப்பு, மற்றும் கூட்டுறவிற்கான மகாநாட்டின் இறுதித் தீர்மானத்தில் மேற்குறிப்பிடப்பட்டவைகளுடன் மேலும் மூன்று அம்சங்கள் சேர்க்கப்பட்டு, சர்வதேசச் சட்டத்தின் அடிப்படைத் தத்துவங்கள் பத்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவைகளாவன:-

  1. ஒவ்வொரு அரசினதும் எல்லைகள் அத்துமீறப்படக் கூடாது.
  2. அரசுகளின் பிரதேச ஒருமைப்பாடு பேணப்படல் வேண்டும்.
  3. மனித உரிமைக்கான கௌரவமும், அடிப்படைச் சுதந்திரமும் மதிக்கப்படல் வேண்டும்.

அடிப்படைத் தத்துவத்தின் வகைப்பாடுகள்

சர்வதேசச் சட்டமானது வேறுபட்ட சமூக அமைப்புக்களைக் கொண்ட அரசுகளின் சமாதான சகவாழ்வினை வேண்டி நிற்கும் ஒன்றாகக் கொள்ளப்பட்டதுடன், அரசுகளுக்கிடையில் நட்புறவுகளை அபிவிருத்தி செய்வதற்கான சட்ட அடிப்படைகளையும் வழங்கியிருந்தன. இவ்வகையில் சர்வதேசச் சட்டத்தினை இரண்டாக வகைப்படுத்துகின்றனர்.

1. சர்வதேச சமாதானம், பாதுகாப்பு என்பவற்றுடன் நேரடியாகத் தொடர்புபடும் விடயங்கள்:-

1.1படைபலத்தால் அரசுகளை அச்சுறுத்துவதில்லை அல்லது படைபலத்தினைப் பயன்படுத்துவதில்லை.

ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சாசனம் படைபலத்தால் அரசுகளை அச்சுறுத்துவதில்லை அல்லது படைபலத்தினைப் பயன்படுத்துவதில்லை என்ற தத்துவத்தின் அபிவிருத்திக்கு முக்கிய பங்கினை வழங்குகின்றது. இச்சாசனம் ஆக்கிரமிப்பு யுத்தத்தினை தடுப்பதற்கு மட்டுமன்றி, சர்வதேச உறவில் படைபலத்தைப் பயன்படுத்துதல் அல்லது படைபலத்தினால் அரசுகளை அச்சுறுத்துதல் என்பவற்றையும் தடுப்பதாக உள்ளது. சாசனத்தின் பந்தி 04 சரத்து 02 ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் நோக்கத்துடன் முரண்படுகின்ற அல்லது ஏனைய அரசுகளின் அரசியல் சுதந்திரத்திற்கு எதிரான படைபலத்தை உபயோகித்தல் அல்லது அச்சுறுத்தப்படல் அல்லது பிரதேச ஒருமைப்பாட்டிற்கு எதிராக படைபலத்தை உபயோகித்தல் அல்லது அச்சுறுத்தல் என்பவற்றை எல்லா அங்கத்துவ நாடுகளும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றது. உண்மையில் படைபலத்தினை உபயோகிப்பதில்லை அல்லது பலாத்காரத்தினைப் பயன்படுத்துவதில்லை என்ற தத்துவத்தின் பிரதான அம்சம் ஆக்கிரமிப்பு யுத்தத்தினைத் தடுப்பதேயாகும்.

சர்வதேசச் சட்டத்தின் முக்கியமான விதி சுய பாதுகாப்பு என்பதாகும். படை பலத்தை உபயோகித்தல் அல்லது படைபலத்தால் அச்சுறுத்தல் என்பவற்றை தடுத்தல் என்பதும் சுய பாதுகாப்பு என்பதும் நெருக்கமாக இணைக்கப்பட்டமையினால் ஐக்கிய நாடுகள் தாபன சாசனத்தின் சரத்து 51 இல் இவ்விதி இணைக்கப்பட்டுள்ளது.

எனவே படைபலத்தினை உபயோகித்தல் அல்லது படைபலத்தினைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் என்பதனை தடுத்தல் என்ற தத்துவத்தின் செயற்பாட்டில் இருந்து சுயபாதுகாப்பு ஒழுங்குகள் விதிவிலக்குப் பெறுகின்றன. ஏனைய அரசுகளின் ஆயுதப்படைகளினால் ஒரு அரசு ஆக்கிரமிக்கப்பட்டால் எதிர் நடவடிக்கை எடுத்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு அரசு ஆயுத ஆக்கிரமிப்புச் சூழலில் தன்னை பாதுகாப்பதற்காக ஆயுத பலத்தினை உபயோகிக்க முடியும் எனக் கூறுகின்றது.

1.2 அரசுகளின் பிரதேச ஒருமைப்பாடு

அரசுகளுடைய பிரதேச ஒருமைப்பாட்டுத் தத்துவம் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரிவு 04 சரத்து 02 இல் கூறப்பட்டுள்ள சர்வதேசச் சட்டத்தத்துவத்தில் ஒன்றாகும். பிரதேச ஒருமைப்பாட்டுத் தத்துவம் மிகவும் முக்கியமானதொன்றாகும். ஹெல்சிங்கி மகாநாட்டின் இறுதித் தீர்மானத்தில் சர்வதேசச் சட்டத்தின் தனியான ஓர் தத்துவமாக இது ஏற்றுக் கொள்;ளப்பட்டது. பங்கு கொள்ளும் அரசுகள் ஒவ்வொரு பங்காளர்களினதும் பிரதேச ஒருமைப்பாட்டினை மதிக்க வேண்டும் என்பதே இத் தீர்மானமாகும்.

அரசுகளின் சமத்துவம், இறைமை என்பவை பலத்தினால் ஆக்கிரமிக்காமை அல்லது பலத்தினை உபயோகிக்காமை என்ற தத்துவத்தின் ஒரு பகுதியாகவே கொள்ளப்பட்டிருந்தது. உண்மையில் இவை இரண்டும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டவைகளே. இதனடிப்படையிலே அரசுகளுடைய அரசியல் சுதந்திரம், பிரதேச ஒருமைப்பாடு என்பவைகள் மீறப்படக் கூடாது என கூறப்படுகின்றது.

1.3 எல்லைகள் மீறப்படக் கூடாது:-

அரச எல்லைகள் மீறப்படக் கூடாது என்ற தத்துவம் பலத்தினை உபயோகிக்கக் கூடாது அல்லது பலத்தினால் அச்சுறுத்தக் கூடாது என்ற தத்துவத்துடனும், அரசுகளின் இறைமை, சமத்துவம் என்ற தத்துவங்களுடனும் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டதாகும். 1970 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்வதேசச் சட்டப் பிரகடனம் பலத்தினை உபயோகிக்கக் கூடாது என்ற தத்துவத்தின் ஒரு பகுதியாக எல்லைகள் மீறப்படக் கூடாது என்ற தத்துவத்தினை வெளிப்படுத்தியிருந்தது. ‘அரசுகள் ஏனைய அரசின் சர்வதேச எல்லைகளை அழித்தல் என்ற இலக்குடன் பலத்தினை உபயோகித்தல் அல்லது அச்சுறுத்தப்படல் என்பதில் இருந்து தடுக்கப்படல் வேண்டும்’ என பிரகடனம் கூறுகின்றது. ஹெல்சிங்கி இறுதித் தீர்மானத்தின் படி எல்லைகளை மீறாதிருத்தல் தத்துவம் இருக்கின்ற எல்லைகளை அழிக்கும் நோக்குடன் படைபலத்தினை உபயோகித்தல் அல்லது படை பலத்தினால் அச்சுறுத்தல் என்பது மட்டுமன்றி அரசுகளின் எல்லைகளை மாற்றுவதற்கு எடுக்கும் எல்லா முயற்சிகளையும் கைவிடுதல் என்பதாகவே பொருள் கொள்ளப்பட்டது.

1.4 சர்வதேச முரண்பாடுகளைச் சமாதானமாகத் தீர்த்தல்:-

சர்வதேச முரண்பாடுகளைச் சமாதானமாகத் தீர்த்தல் என்னும் தத்துவமும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின்படியே உருவாக்கப்பட்டது. சரத்து 02 பிரிவு 03 இன்படி எல்லா அங்கத்தவர்களும் தங்களுடைய சர்வதேசப் பிரச்சினைகளைச் சமாதானமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது சர்வதேசப் பாதுகாப்பு, சமாதானம், நீதி, என்பவைகள் ஆபத்துக்குள்ளாக்கப்படக் கூடாது.சர்வதேசச் சட்ட பிரகடனத்தின்படியும், 1975 ஆம் ஆண்டு ஐரோப்பிய பாதுகாப்பு மகாநாட்டின் இறுதித் தீர்மானத்தின் படியும் பின்வரும் விடயங்கள் கருத்தில் எடுக்கப்படுகின்றன.

  1. அரசுகள் ஏனைய அரசுகளுடனான சர்வதேசச் பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சாசனம் குறிப்பிட்டுக் கூறும் வழிமுறைகளுடாகச் சமாதானமாகத் தீர்ப்பதற்குக் கடமைப்பட்டுள்ளன.
  2. அரசுகள் தாங்களாகவே தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நேரடிப் பேச்சுவார்த்தை, சர்வதேசச் சமாதானம், சர்வதேச மத்தியஸ்தம், சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு, சர்வதேச ஒழுங்கமைப்பு நிறுவனங்களாகிய ஐக்கிய நாடுகள் தாபனம், பிராந்திய ஒழுங்கமைப்புக்கள் போன்றவற்றில் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்.

இ. சமாதானத்தினை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் மேற்குறிப்பிட்டவற்றுள் ஏதாவது ஒன்று தோல்விகண்டால், அரசுகள் சமாதானத்தினை உருவாக்குவதற்கு ஏனைய வழிகளைத் தேடுதல் வேண்டும். இவ்விடயத்தில் யுத்தம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

1.5 ஆயுதப்பரிகரணம்:-

ஆயுதப்பரிகரணம் என்ற பிரச்சினை இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதொரு பிரச்சினையாகும் ஐக்கிய நாடுகள் சாசனம் சர்வதேசச் சட்டத்தில் ஆயுதப் பரிகரணத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. சரத்து 11 இன்படி ஆயுதப்பரிகரணத் தத்துவம், யுத்தக்கருவிகள் தொடர்பான ஒழுங்கு, சர்வதேசப் பாதுகாப்பு, சமாதானம் என்பவற்றைக் கூட்டாக ஏற்படுத்துவதற்குத் தேவையான பொதுவான தத்துவங்களில் ஒன்றாகும். ஆயுதப் போட்டி சர்வதேச சூழலில் யுத்த அபாயத்தினை ஏற்படுத்துகின்றது. இது ஐக்கிய நாடுகள் தாபனத்தினதும், சர்வதேசச் சட்டத்தினதும் அடிப்படை எண்ணப்பாடுகளுடன் முரண்பட்டு விடுகின்றது. குறிப்பாக அரசுகளின் சமாதான சகவாழ்வு, பாதுகாப்பு, சமாதானம் என்பவற்றை உத்தரவாதப்படுத்த முடியாமல் போய்விடுகின்றது.

ஆயுதப் பரிகரணத் தத்துவம் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பொதுச் சபை தீர்மானத்தினாலும், சர்வதேச ஒப்பந்தங்களினாலும் வரையறுக்கப்பட்டது. குறிப்பாக 1966 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 5ஆந் திகதி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் ஆயுதப் போட்டி குறிப்பாக அணு ஆயுதப் போட்டி சமாதானத்திற்கு அச்சுறுத்தலாகவுள்ளது எனக் கூறுகின்றது.

2 சர்வதேச கூட்டுறவிற்கான பொதுத் தத்துவம்:-

2.1 அரசுகளின் சம இறைமைத் தத்துவம்:-

அரசுகளின் சமத்துவ இறைமை தத்துவங்கள், எல்லா அரசுகளினதும் இறைமையினை மதிப்பிடுவதற்காகவும் சர்வதேச உறவில் அவர்களின் சம உரிமைகளை மதிப்பிடுவதற்காகவும், சேர்த்துக் கொள்ளப்பட்டதாகும். அரசுகளின் சம இறைமைத் தத்துவம் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் சரத்து 02 பிரிவு 01 இன் படி உருவாக்கப்பட்டதாகும். இதன்படி எல்லா அங்கத்தவர்களினதும் இறைமை, சமத்துவம் என்ற தத்துவமே ஒழுங்கமைப்பின் அடிப்படையாக்கப்பட்டது.

இறைமை என்பது சுதந்திரமான சர்வதேச உறவில் ஒரு அரசின் அதிகாரமானது அதனுடைய பிரதேசம் முழுவதும் பரந்து செல்லுவதாகும். இவ்வகையில் சர்வதேச சட்டத்தின் சாராம்சமாக உள்ள அரசுகளின் சம இறைமை என்ற தத்துவம் மிகவும் ஆழமானதாகும். சம இறைமைத் தத்துவத்தினுள் பின்வருவன சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. இறைமை என்பது சுதந்திரமான சர்வதேச உறவில் ஒரு அரசின் அதிகாரமானது அதனுடைய பிரதேசம் முழுவதும் பரந்து செல்லுவதாகும். இவ்வகையில் சர்வதேசச் சட்டத்தின் சாராம்சமாக உள்ள அரசுகளின் சம இறைமை என்ற தத்துவம் மிகவும் ஆழமானதாகும். சம இறைமைத் தத்துவத்தினுள் பின்வருவன சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.

  • ஒவ்வொரு அரசும் ஏனைய அரசுகளின் இறைமையினை மதிப்பது அதன் கடமையாகும்.
  • ஒவ்வொரு அரசும் ஏனைய அரசுகளின் பிரதேச ஒருமைப்பாடு அரசியல் சுதந்திரம் என்பவற்றை மதிப்பது அதன் கடமையாகும்
  • ஒவ்வொரு அரசும் தமக்குத் தகுந்த சமூக, பொருளாதார, அரசியல் கலாசார முறைமைகளைத் தேர்ந்தெடுத்து அபிவிருத்தியடைய உரிமை பெற்றுள்ளன.
  • எல்லா அரசுகளும் நீதியின் முன் சமமானதாகும். வேறுபட்ட சமூக, பொருளாதார, அரசியல் முறைமைகளை பின்பற்றுகின்ற சர்வதேச சமுதாயத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் சமமான உரிமைகளையும், கடமைகளையும் பெற்றுள்ளார்கள்.
  • ஒவ்வொரு அரசும் தன்னுடைய அவசர காலத் தேவையினைப் பொறுத்து சர்வதேசச் சட்டத்தினை உருவாக்கிக் கொள்ளலாம்.
  • ஒவ்வொரு அரசும் சர்வதேசப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பங்கு கொள்வதற்கு உரிமை பெற்றுள்ளது.
  • ஒவ்வொரு அரசும் சர்வதேச மகாநாடுகளிலும், சர்வதேச ஒழுங்கமைப்புக்களிலும் ஒரு வாக்கினைப் பெற்றுள்ளன.
  • அரசுகள் உடன்படிக்கைகளுடாகச் சர்வதேச விதிகளை உருவாக்க முடியும்.

2.2 தலையிடாமை

ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சரத்து 02 பிரிவு 07 தலையிடாமை தத்துவத்தினை பற்றி எடுத்துக் கூறுகின்றது. அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். அத்துடன் அரசுகளின் சுதந்திரமும், இறைமையும் பாதுகாக்கப்படல் வேண்டும். தலையிடாமை என்பது முக்கியமாக ஏனைய அரசுகளின் உள் அதிகாரங்களுடன் தொடர்புபட்டதாகும் என ஐக்கிய நாடுகள் சாசனம் கூறுகின்றது.

அரசுகளின் உள் அதிகாரங்களுடன் தொடர்புபடும் முக்கிய அம்சமாகவே ‘உள்விவகாரங்களில் தலையிடாமை’ என்பது காணப்படுகின்றதேயொழிய இது குறிப்பிட்ட பிரதேசத்திற்குரிய எண்ணக்கருவல்ல. ஒரு பிரதேசத்திற்குள் நிகழும் எல்லா விவகாரங்களும்; உள் விவகாரங்களுமல்ல. உதாரணமாக சர்வதேசச் சட்டத்திற்கு இணங்க நிறுவப்படும் வெளிநாட்டு தூதுவராலயம் ஒன்று தாக்கப்பட்டால் இதனை ஒரு தூய நிலையில் ஒரு நாட்டின் உள் விவகாரம் எனக் கூறமுடியாது. பாதிக்கப்படும் தூதுவராலயத்திற்குரிய நாடு தன்னைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கலாம். மறுபுறத்தில் ஒரு அரசு தன் பிரதேச எல்லைக்கும் அப்பால் அனேக உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றது. உதாரணமாக இரண்டு அரசுகளுக்கிடையிலான உடன்படிக்கைகளை கூறிக் கொள்ளலாம். இது இவ்விரு அரசுகளுக்கிடையிலான உரிமைகளைப் பாதிப்பதில்லை. இவ்வாறான ஒரு நிலையில் மூன்றாவது அரசு ஒன்று இவ் விவகாரங்களில் தலையிட உரிமை கிடையாது.

2.3 தேசங்களின் சுய நிர்ணய உரிமையும், சமத்துவ உரிமையும்:-

பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இடம்பெற்ற புரட்சிகள் சுயநிர்ணய உரிமைகளை வலியுறுத்தியதால், தேசங்கள் தமது தேசியத்தின் அடிப்படையில் போராடித் தன்னாதிக்கமுள்ள தேசிய அரசுகளை ஐரோப்பாவில் உருவாக்கிக் கொண்டன.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமும், அழுத்தமும் மிகவும் அதிகரிக்கத் தொடங்கின. இப்போராட்டங்கள் பாரிய நிலப்பரப்பை கொண்ட ஆசிய,ஆபிரிக்க காலனித்துவ மக்களால் அந்நியராட்சிக்கு எதிராக நடாத்தப்பட்டிருந்தது. இவ்வகையில் சர்வதேசச் சட்டமானது பின்வரும் விடயங்களை சுயநிர்ணய உரிமை தொடர்பான உள்ளடக்கங்களாகக் கொண்டுள்ளன.

  • எல்லா மக்களும் வெளியார் தலையீடின்றித் தமது அரசியல் சுதந்திரத்தினையும், தங்களுடைய சமூகப் பொருளாதார, கலாசார அபிவிருத்தியினையும் தீர்மானித்துக் கொள்ள உரிமை பெற்றுள்ளார்கள்.
  • ஒவ்வொரு அரசும் இவ் உரிமைகளை மதிப்பது அதன் கடமையாகும்.
  • ஒவ்வொரு அரசும் தனித்தும், கூட்டாகவும் மக்களுடைய சுயநிர்ணய உரிமையையும், சம உரிமையினையும் வளர்த்தல் அதன் கடமையாகும்.
  • மக்கள் தங்களுடைய சுயநிர்ணய உரிமை, சுதந்திரம் என்பவற்றைப் பெற்றுக் கொள்ள ஒவ்வொரு அரசும் பலம் பொருந்திய செயற்பாடுகளைச் செய்வது அதன் கடமையாகும்.
  • காலனித்துவ மக்களின் சுதந்திரப் போராட்டம் அவசியமானதாகும்.
  • தேசம், சுதந்திர அரசினை உருவாக்கிக் கொள்வதற்கான மார்க்கங்களை தேடுவதற்கு உரிமை பெறுகின்றது. அல்லது தேசங்கள் ஒன்றிணைந்து சுதந்திர அரசுகளை உருவாக்கலாம். எனவே தேசங்கள் தமது சுயநிர்ணய உரிமையினைப் பெற்றுக் கொள்வது அவற்றின் கடமை மட்டுமல்ல அவற்றின் உரிமையுமாகும்.

2.4 அரசுகளுக்கிடையிலான கூட்டுறவு:-

சர்வதேசப் பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச தொழிற் பிரிவு என்பவற்றிற்கான ஆழமான வளர்ச்சியினை ஏற்படுத்த அரசுகளுக்கிடையிலான கூட்டுறவு அவசியமாகும். அரசுகளுக்கிடையிலான கூட்டுறவின் அம்சங்களாகிய அரசியல், பொருளாதார காரணிகள் சர்வதேச அரங்கில் சர்வதேசப் பாதுகாப்பு, சமாதானம் என்பவற்றை உத்தரவாதப்படுத்தவும் உதவுகின்றது.

ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஊடாகவும் இத்தத்துவத்தினைத் தெளிவுபடுத்த முடியும். ஐக்கிய நாடுகள் தாபனத்தின் இலக்குகளில் சர்வதேசச் சமாதானம், பாதுகாப்பு என்;பவற்றைப் பேணிக் கொள்ள அரசுகளுக்கிடையிலான கூட்டுறவு மிகவும் முக்கியமானதாகக் கூறப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரேரணைகளின் அபிவிருத்தியும், 1970 ஆம் ஆண்டு சர்வதேசச் சட்ட பிரகடனமும் அரசுகளுககிடையிலான கூட்டுறவினைப் பின்வருமாறு வரையறுக்கின்றது.

  • சர்வதேச உறவில், வெவ்வேறான செயற்பாடுகளில் ஒன்றுடன் ஒன்று கூட்டாக இணைந்து இயங்குவது அரசுகளின் கடமையாகும். குறிப்பாகச் சர்வதேச சமாதானம் பாதுகாப்பு, சர்வதேசப் பொருளாதார உறுதிப்பாடு, முன்னேற்றம் என்பவற்றைப் பராமரிப்பதில் கூட்டுறவாக இயங்க வேண்டும்.
  • அரசுகள் தங்கள் வேறுபட்ட சமூக, பொருளாதார அரசியல் முறைமைகளை கருத்தில் எடுக்காது ஒன்றுடன் ஒன்று கூட்டுறவாக இயங்க வேண்டும்.
  • அரசுகள் உலகத்தின், குறிப்பாக வளர்ச்சியடைந்து வருகின்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்காக ஒத்துழைக்க வேண்டும்.

2.5 மனித உரிமைகளை மதித்தல்:-

இரண்டாம் உலகப் போரின் பின்னர் மனித உரிமைப் பிரச்சினை என்பது சர்வதேச அரங்கில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டது. பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் வளர்ச்சியும், மனித உரிமைக்கான பலமான போராட்டமும் அடிப்படை மனித உரிமைகள், சுதந்திரம் என்பவற்றின் கௌரவத்தினை ஐக்கிய நாடுகள் சாசனத்தின் மூலம் பாதுகாக்க வழி விட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சாசனம் அடிப்படை மனித உரிமையான கௌரவம், மனித இனத்தின் பயன்பாடு, பால்நிலை சமத்துவம், சிறிய பெரிய நாடுகளுக்கிடையிலான சமத்துவம் அனைத்தையும் குறித்து நிற்கின்றது. ஐக்கிய நாடுகள் தாபனத்தின் இலக்குகளில் ஒன்று சர்வதேசக் கூட்டுறவினை வளர்த்தல் என்பதாகும். அதாவது சமயம். மொழி, பால், இனம் என்ற வேறுபாடு இன்றி எல்லோரினதும் அடிப்படைச் சுதந்திரங்களையும், மனித உரிமைகளையும் மதித்து அதனை வளர்க்க வேண்டும். மனித உரிமைகளுக்கான மதிப்பும், கௌரவமும் பல எண்ணிக்கையிலான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் கிளைகளுடாக அபிவிருத்தியடைந்து வந்துள்ளதாயினும் மனித உரிமைகளுக்கான மதிப்பு பொதுவாகச் சர்வதேசச் சட்டத்தில் பின்வருமாறு கொடுக்கப்படுகின்றது.

  • தங்களுடைய பிரதேசங்களில் உள்ள எல்லா மக்களினதும் அடிப்படை சுதந்திரங்களையும், உரிமைகளையும் மதிப்பது எல்லா அரசுகளினதும் கடமையாகும்.
  • பால், இனம், மொழி, சமயம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வேறுபாடு காட்டுவதை எந்த அரசும் அனுமதிக்காமல் இருப்பது அரசுகளின்; கடமையாகும்.
  • மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்கள் என்பவற்றிற்கான உலக மதிப்பினை பகிர்ந்து கொள்வதும் அரசுகளின் கடமையாகும்.

மனித உரிமைகளுக்கான மதிப்பு சர்வதேசச் சட்ட ஒழுங்கின்படி அரசுகளின் கூட்டுறவான மனித உரிமைப் பாதுகாப்பின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

15,800 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>