ஆயுதக்கட்டுப்பாடும் ஆயுதக்களைவும்

ஆயதக்களைவு என்பது சர்வதேச அரசியலில் மிகவும் பிரபல்யமான ஒரு பதமாகும் பொதுவாக அரசுகள் ஆயுதங்களைக் குறைக்க விரும்பாததுடன் அவ்வாறான ஒரு எதிர்பார்ப்பினைக் கூட கொண்டிருப்பதுமில்லை. வழமையாக எல்லா அரசுகளும் ஆயுத பலத்தை வைத்திருக்கவே விருப்புகின்றன. ஆயுத பலம் இருந்தால்தான் தமது எல்லைப் பிரதேசங்களை எதிரியின் தாக்குதல்களிலிருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்தும் பாதுகாக்க முடியும் என அரசுகள் நம்புகின்றன. ஆனால் சர்வதேசப் பாதுகாப்பு, அமைதி, சமாதானம் என்பவற்றைப் பேணிக் கொள்ள வேண்டுமாயின், ஆயுத பாவனையில் இருந்து உலகை மீட்டெடுக்க வேண்டும். இந்நிலையிலேயே ஆயுதக்கட்டுப்பாடு, ஆயுதக் களைவு என்ற எண்ணக்கருக்கள் பற்றி சிந்திக்கப்படுகின்றது.

ஆயதக்களைவு என்பது ஆயுதங்களைப் பாவனையில் இருந்து நீக்குதல் என்பதாகும். ஆயுதப் படைகள் உருவாவதை தடுப்பதையும், ஆயுதங்களைச் சர்வதேச மட்டத்தில் இல்லாதொழிப்பதையும் இலக்காக கொண்டதாகும்.

ஆயுதக்கட்டுப்பாடு என்பது ஆயுதக்களைவுடன் தொடர்புபடுகின்ற பிரிதொரு எண்ணக்கருவாகும். ஆயுதக் கட்டுப்பாட்டினை இரு பிரிவாக பிரித்து நோக்க முடியும். ஒன்று ஆயுதக் குறைப்பு, மற்றையது ஆயுத மட்டுப்படுத்தலாகும். ஆயுதக் குறைப்பு சர்வதேச மட்டத்தில் அல்லது பிராந்திய மட்டத்தில் செயற்படுத்தப்படுவதாகும். இரண்டாம் உலக மகா யுத்தத்தினைத் தொடர்ந்து பின்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகள் தாம் சர்வதேச அரசியலில் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் தாமாகவே விரும்பி தங்கள் ஆயுதங்களைக் குறைத்துக் கொண்டன. பிராந்திய நலன் என்ற புரிந்துணர்வின் அடிப்படையில் மத்திய,தென் அமெரிக்க நாடுகள் தமது பிராந்தியத்தில் அணு ஆயுதப் பாவனையினைத் தடுக்க வேண்டும் என்ற உடன்பாட்டிற்கு 1967 ஆம் ஆண்டில் வந்திருந்தார்கள்.

ஆயுதமட்டுப்படுத்தல் என்பது வேறுபட்ட சர்வதேச உடன்பாடுகளில் உள்ளடக்கப்பட்டிருந்த யுத்த அபாய ஆயுதங்களை மட்டுப்படுத்துவதாகும். எடுத்துக்காட்டாக, அணு ஆயுதப் பரீட்சிப்பினை மட்டுப்படுத்தல், விற்பனைக்கு என ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயுதங்கள் தவிர்ந்த ஏனைய ஆயுதங்களை உற்பத்தியில் இருந்து மட்டுப்படுத்தல், இராணுவ தொழில் நுட்பங்கள் பரிமாறலை மட்டுப்படுத்தல் போன்றவை இங்கு உள்ளடக்கப்படுகின்றன. ஆயுத மட்டுப்படுத்தல் என்பது மரபுசார் சர்வதேச சட்டத்திற்குட்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அரசியலில் ஆயுதக்களைவினை ஏற்படுத்திக் கொள்வதற்காகப் பல்வேறு வகையான சர்வதேச உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு வந்துள்ளன. இரு உலக மகா யுத்தங்களுக்கு முன்னரேயே ஆயுதக்களைவு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தன. 1817 ஆம் ஆண்டு றஸ்பெக்கெற் (Rush-Begot) உடன்படிக்கையும், 1922ஆம் ஆண்டு வோசிங்டன் (Washington) கடற்படை உடன்படிக்கையும் இவ்வகையில் முன்னணியில் நிற்கின்றன.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் (1939 -1945) ஆயுதக் கட்டுப்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 1945 ஆம் ஆண்டு ஜப்பானில் அணுகுண்டு போடப்பட்டதைத் தொடர்ந்து பிறிதொரு யுத்தம் நடாத்தப்படுவதைத் தடுக்கும் முகமாகச் சர்வதேசச் சங்கம் (League of Nation) ஆயுதக்களைவு மகாநாட்டை கூட்டியிருந்தது. இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் புதிய தன்னியக்கத் துப்பாக்கிகளை உற்பத்தி செய்வதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆயுதக் களைவு தொடர்பான கலந்துரையாடல்களில் பிரதிபலித்தது.

1946 ஆம் ஆண்டிற்கும் 1948 ஆம் ஆண்டிற்குமிடையில் அணு ஆயுதம் என்பதற்கு ஆயுதக்களைவுக் கலந்துரையாடல்களில் முதன்மை கொடுக்கப்பட்டது. அணு ஆயுதத்தில் இக்கால கட்டத்தில் ஐக்கிய அமெரிக்கா மாத்திரமே தனி வல்லமை பொருந்தியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. சோவியத் இரஸ்சியா மரபு ரீதியான படைபலத்தினால் மட்டுமே ஐக்கிய அமெரிக்காவினை எதிர்க்க வேண்டியிருந்தமையினால் அணு ஆயுதம் தொடர்பான ஆயுதக்களைவு மகாநாட்டை நடாத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. ஆனால் 1949 ஆம் ஆண்டு அணுகுண்டு வெடிப்பினை சோவியத் இரஸ்சியா வெற்றிகரமாக நடாத்தி முடித்தது. இதன் பின்னர் அணு ஆயுதக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை விருப்புடன் நோக்குவதில் சோவியத் இரஸ்சியா அக்கறை காட்டவில்லை. சோவியத் இரஸ்சியா அணு குண்டு தயாரிப்பில் முன்னணி வகிக்க தொடங்கியவுடன் இவ்வளவு காலமும் அணுகுண்டு தயாரிப்பில் முன்னணி வகித்து வந்த ஐக்கிய அமெரிக்காவும், அதன் இராணுவக் கூட்டாளியாகிய நேட்டோ அணியும் பின் நிலைக்குத் தள்ளப்பட்டன. சோவியத் இரஸ்சியாவும் அதன் கூட்டு நாடுகளாகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் மரபு சார் ஆயுத மேலாண்மையினைக் குறைக்கத் தொடங்கின. ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் இரஸ்சியாவும் அணு ஆயுதத்திலும், மரபு சார் ஆயுதத்திலும் சம பலமுள்ள நாடுகளாக எழுச்சியடைந்தன. ஆயுத பலத்தில் யார் உச்ச பலம் பெற்றுள்ளார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இரு பக்கமும் அணு ஆயுத உற்பத்தியினைக் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்தேர்ச்சியாகக் கோரிக்கை விடத்தொடங்கின.

முதல் தடவையாக இரு பக்கமும் 1954 இலும், 1957 இலும் புதிய புதிய ஆயுதக் களைவுப் பிரேரணைகளை சமர்ப்பிக்கத் தொடங்கின. இத்திட்டங்களில் அணு ஆயுதங்களும், மரபுசார்ஆயுதங்களும் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் மேற்குத் தேசங்களுக்குச் சமமாகச் சோவியத் இரஸ்சியா அணு ஆயுத உற்பத்தியில் முன்னணிக்கு வரக்கூடாது என்பதே பிரதானமானதாக இருந்தது. சோவியத் இ;ரஸ்சியாவினைப் பொறுத்தவரையில் மேற்குத் தேசங்களை விட அணு ஆயுதத்தில் தாம் முன்னணியில் இருப்பதே தனது சமுதாயத்திற்கு நலனானது என எண்ணியிருந்தது. இவ் எதிர்மாறான நிலை அணு ஆயுதக்களைவு தொடர்பாக ஒரு நிதானமான முடிவுக்கு வருவதை தடுத்திருந்ததுடன், இரு வல்லரசுகளும் ஆயுதக் கையாடலில் மிகவும் துரிதமாக வளரவும் தொடங்கின. விமானப் படைகளுக்கும், ஏவுகணைகளுக்கும் அணுசக்தியை பயன்படுத்தும் அளவிற்கு இரு வல்லரசுகளினதும் இராணுவ போட்டி என்பது உச்சநிலையினை அடையலாயிற்று.

ஆனால் 1959 இல் பிரித்தானியா, சோவியத் இரஸ்சியா ஆகிய இரு அரசுகளும் இணைந்து ஐக்கிய நாடுகள் தாபனத்தில் பொதுவானதும், பூரணமானதுமான (General and complete Disarmament) என்பதனை 3 கட்டங்களில் ஏற்படுத்துதல் என்று ஓர் பிரேரணையினை 1960 ஆம் ஆண்டிலிருந்து ஏற்றுக் கொண்டிருந்தது. 1961 ஆம் ஆண்டு 18 நாடுகளை உள்ளடக்கிய ஆயுதக்களைவு அமைப்பு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. இதில் 5 மேற்கு நாடுகளும், 5 கிழக்கு நாடுகளும் 8 அணிசேரா நாடுகளும் அங்கம் வகித்தன. இவ் அமைப்பு முதல் நிலையில் தேசிய மட்டத்தில் அணு ஏவுகணைகளை இல்லாதொழித்தல் என்பதில் உடன்பாடு கண்டிருந்தது.

1962 ஆம் ஆண்டு நிகழ்ந்த கியூபா ஏவுகணைத் தகராறு சர்வதேச அரசியலில் ஆயுத கட்டுப்பாட்டிற்கு அதிக முக்கியத்துவத்தினை வழங்கியது. ஐக்கிய அமெரிக்காவிற்கு மிகவும் அருகிலுள்ள நாடு கியூபாவாகும். இந்நாட்டில் சோவியத் யூனியன் அணுவாயுத ஏவுகணைகளை அமெரிக்கா நோக்கி நிறுத்தியது. சோவியத் யூனியனின் இச்செயற்பாட்டினால் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எவ்.கெனடி (துழாn கு. முநnநெனல) கடற்படையினை பயன்படுத்தி கியூபாவின் கடற்பிரதேசம் முழுவதையும் ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இரண்டு வாரங்களாக நடந்த இத்தகராறு இரு நாடுகளுக்குமிடையில் நிகழ்ந்த பேச்சுவார்த்தையின் பின்னர் முடிவுக்கு வந்தது. பேச்சுவார்த்தையின் போது கியூபாவில் பதவியிலிருக்கும் கம்யூனிச அரசாங்கத்தினை எதிர்காலத்தில் ஐக்கிய அமெரிக்கா இல்லாதொழிக்காது என்ற உறுதி மொழி சோவியத் யூனியனுக்கு வழங்கப்பட்டது. இதன் பின்னர் கியூபாவில் சோவியத் யூனியன் நிறுத்தியிருந்த அணுவாயுத ஏவுகணைகளை விலக்கிக் கொண்டது.

இத்தகராற்றுக்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி கெனடி சோவியத் யூனியன் ஜனாதிபதி குருசேவ்விற்கு  எழுதிய கடிதத்தில் ஆயுதக்களைவு தொடர்பான விடயங்களில் அவசரமாக நாங்கள் கவனம் எடுக்க வேண்டும் என்பதில் நான் உங்களுடன் உடன்படுகின்றேன். நாங்கள் ஒன்றாக இணைந்து இவ்விடயங்களில் முன்னேற்றத்தினை உருவாக்க வேண்டும்.” எனக் கேட்டிருந்தார்.இதன் தொடர்ச்சியாக 1963 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் விண்வெளி, ஆழ்கடல் போன்ற இடங்களில் அணுவாயுத வெடிப்பு பரிசோதனைகளை செய்வதில்லை என்ற ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதே நாடுகள் 1972 ஆம் ஆண்டு ஆயுதங்களின் பாவனையினைத் தடுக்கும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டன.

ஆயுதக்கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தை ஐக்கிய அமெரிக்காவிற்கும், சோவியத் இரஸ்சியாவிற்கும் இடையில் 1972 ஆம் ஆண்டு தந்திரோபாய ஆயுத மட்டுப்படுத்தல் பேச்சு என்ற பெயரில் மீண்டும் ஆரம்பமாகியது. தந்திரோபாய ஆயுத மட்டுப்படுத்தலில் (Strategic Arms Limitation – SALT- I) இரு விடயங்கள் முக்கியப்படுத்தப்பட்டிருந்தது. ஒன்று எறிபடைத்துறைக்கு எதிரான ஏவுகணைகளை (Anti-Ballistic Missile) உருவாக்குவதையும், அதைக் கையாளுவதையும் மட்டுப்படுப்படுத்துதல், மற்றையது வல்லரசுகளின் அணு ஆயுதங்கள் கொண்ட படைகளின் அளவினைக் கட்டுப்படுத்துதல். இம்முக்கியத்துவம் வாய்ந்த SALT-I ஒப்பந்தத்தில் நிக்ஷனும், பிரஸ்னெவ்வும் கைச்சாத்திட்டிருந்தனர். இது ஐந்தாண்டுத் திட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். ஜிம்மி காட்டர் ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற போது சோவியத் இரஸ்சியா தொடர்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்தால், தாமும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயார் என அறிவித்திருந்தார். இதற்கிடையில் 1979 ஆம் ஆண்டு வியன்னா உச்சி மகாநாட்டில் புதிய ஆயுதக்களைவுப் பேச்சு வார்த்தைக்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டன. இதன் பிரதிபலிப்பே SALT-I பற்றிய சிந்தனையாகும்.

1979 ஆம் ஆண்டு ஜிம்மி காட்டரும், பிரஸ்னேவும் SALT-II உடன்படிக்கையினை வரைந்தார்கள். இது ஐக்கிய அமெரிக்காவின் செனற்சபையில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில் சோவியத் இரஸ்சியா ஆப்கானிஸ்தானில் தலையிட்டிருந்தது. இது ஐக்கிய அமெரிக்காவிற்கு சோவியத் இரஸ்சியா மீது சந்தேகத்தை ஏற்படுத்தவே SALT-II திட்டத்தை செனற் நிராகரித்தது. SALT-II திட்டம் நிறைவேற்றப்படா விட்டாலும், அது கடும் விமர்சனத்திற்குள்ளான திட்டமாகும். SALT-II திட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுள் நேட்டோ, வோர்சோ நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகள் அணு வல்லமை பெறுவதை நிராகரிக்கின்றது. குறிப்பாக சீனா அணு வல்லமை பெறக்கூடாது என்பதே இதன் இலக்காக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நடுத்தரக்குறியிலக்கெல்லை கொண்ட அணு ஏவுகணைகள் (Intermediate Range Nuclear Missiles) தொடர்பான பேச்சுவார்த்தைகள் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில் ஆரம்பமாகியது. நடுத்தரத் தூரம் கொண்ட அணு ஏவுகணைகளுடன் தொடர்புடைய ஆயுதங்கள் 1970 களின் பின்னர் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தன. 1979 ஆம் ஆண்டு நேட்டோ அணி நாடுகளின் கூட்டத் தொடரின் போது “தம் அணி சார்ந்த நீண்டகுறியிலக்கெல்லையை அச்சுறுத்தும் அணுப்படைகளுக்குச் (Long Range Threat Nuclear Forces LRTNF) சமமான தரத்திலும்,எண்ணிக்கையிலும் சோவியத் இரஸ்சியாவிடம் SS-20s ரக ஆயுதங்கள் காணப்படுவதாகப் பிரஸ்தாபிக்கப்பட்டது. நேட்டோ நாடுகள் தமது LRTNF இன் தரத்தினை அதிகரிக்க வேண்டும் என தீர்மானித்துக் கொண்டன. இதனால் ஏற்பட்ட சர்வதேசப் பதட்டத்தினைப் போக்குவதற்காக 1981 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் LRTNF தொடர்பான பேச்சுவார்த்தையினை நடாத்துவதற்காக ஜெனிவாவில் ஐக்கிய அமெரிக்கா, சோவியத் இரஸ்சியா ஆகிய இரு வல்லரசுகளும் சந்தித்தன. ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது பிரேரணையில் பூச்சியத் திட்டத்தனைப் (Zero Option) பற்றி அறிவித்தது. இதில் நவீன நடுத்தரத் தூரம் கொண்ட ஆயுதங்களை இல்லாதொழிப்பதாக இருந்தது. சோவியத் இரஸ்சியாவின் SS-20s ஏவுகணைகளின் அளவினை ஐரோப்பாவில் நேட்டோ அணியிடம் உள்ள அணு ஆயுதப் படையின் அளவிற்கு சமமாகக் குறைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தது. ஆனால் இதனை ஐக்கிய அமெரிக்கா ஏற்க மறுத்து விட்டது. மீண்டும் 1983 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் சோவியத் இரஸ்சியா நடுத்தரத் தூரம் கொண்ட அணு ஏவுகணைகளைக் குறைக்க முன்வந்தது. ஆனால் இதனை ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்து நிராகரித்து விட்டதுடன் சோவியத் இரஸ்சியா தனது பூச்சியத் திட்டத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. 1985 ஆம் ஆண்டு தை மாதம் மீண்டும் ஐக்கிய அமெரிக்காவும்,சோவியத் இரஸ்சியாவும் நடுத்தரத் தூரம் கொண்ட அணு ஆயுதங்கள் தொடர்பாகப் பேசுவதற்காக நிபந்தனைகள் ஏதுவுமற்ற முறையில் ஜெனிவாவில் சந்தித்தன. இப்பேச்சுவார்த்தையில் மிகவும் சிக்கலான விடயங்களாகிய அணு ஆயுதங்கள், விண்வெளி ஆய்வு நடடிக்கைகள் போன்றன கருத்தில் எடுக்கப்பட்டிருந்தன.

புதிய உலக ஒழுங்கு

1989ஆம் ஆண்டிற்கும், 1991 ஆம் ஆண்டிற்கும் இடையிலான காலப்பகுதி பனிப்போர் முடிவுக்கு வந்த காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியில் முக்கியமான பல அரசியல் காட்சிகள் சர்வதேசளவில் அரங்கேறின. சோவியத் யூனியனில் கோர்பச்சேவ் அறிமுகப்படுத்திய மறுசீரமைப்பு கொள்கை (பெரஸ்ரோய்கா) சர்வதேசளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டதுடன், சோவியத் யூனியன் தலைமையிலான வோர்சோ இராணுவக் கூட்டும் கலைக்கப்பட்டது.

இக்காலப்பகுதியில் வல்லரசுகளுக்கிடையில் மிகவும் நெருக்கமான உறவு வளர்ந்திருந்தது. பல எண்ணிக்கையிலான ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. 1990 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 19 ஆம் திகதி ஐக்கிய அமெரிக்கா, சோவியத் யூனியன் உட்பட இருபது நாடுகள் ஐரோப்பாவின் மரபுமுறை படை (Conventional Force in Europe – CFE) என்னும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. ஜோர்ச் புஸ் “வரலாற்றில் அடையப்பட்ட ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம்” என இதனை பாராட்டியிருந்தார். இதனூடாக புதிய உலக அதிகார ஒழுங்கு தோற்றம் பெற்றது. 1990 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட CFE ஏற்ப அமெரிக்காவும் சோவியத்யூனியனும் தமது கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை விடுவிக்க உடன்பட்டன. அத்திலாந்திக் சமுத்திரத்திற்கும் யூறல் (Ural) மலைத் தொடர்களுக்கும் இடையில் 20,000 உட்பட்ட யுத்த டாங்கிகள் (Tanks) 30,000 உட்பட்ட துருப்புக்களை காவும் வாகனங்கள், 20,000 உட்பட்ட ஆட்லறி துப்பாக்கிகள், 6,800 உட்பட்ட யுத்த விமானங்கள் 2,000 உட்பட்ட உலங்கு வானூர்திகள் என்பவைகளை மாத்திரம் நிறுத்தி வைக்க இவ் உடன்படிக்கை இருதரப்பிற்கும் அனுமதி வழங்கியிருந்தது.

இவ் ஒப்பந்தம் சோவியத் யூனியன் 20,000 யுத்த டாங்கிகளையும், ஆட்லறிகளையும் ஏனைய ஆயுதங்களையும் அழிக்க வேண்டும் எனக் கூறியிருந்தது. சோவியத் யூனியன் இவ் ஒப்பந்தத்தின்படி 27% ஆயுதங்களை மேற்கு யூறல் பிரதேசத்தில் குறைத்துக் கொண்டது. இதற்கு சமாந்தரமாக நேட்டோ இராணுவக் கூட்டமைப்பு சார்பில் 3,000 இராணுவ தளபாடங்களை ஐக்கிய அமெரிக்க அழித்தது. 1991 ஆம் ஆண்டு தனது தரப்பிலிருந்து 320,000 படைகளையும் ஐக்கிய அமெரிக்கா குறைத்தது. இது ஐரோப்பாவில் நிறுத்தப்பட்டிருந்த நேட்டோ படைகளில் 50% மாகும்.

இக்காலப்பகுதியில் அணுவாயுதங்களை குறைப்பது தொடர்பான ஒப்பந்தங்களிலும் இருநாடுகளும் கைச்சாத்திட்டன. 1991 ஆம் ஆண்டு ஆடி மாதம் 31ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் புஸ், சோவியத் யூனியன் ஜனாதிபதி கோர்பச்சேவ் ஆகிய இருவரும் தந்திரோபாய ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் (Strategic Arms Reduction Treaty)-(START-I) கைச்சாத்திட்டனர். இது தொடர்பான பேச்சுவார்த்தை இருநாடுகளுக்குமிடையில் 1982 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வந்தது. இவ் ஒப்பந்தத்தின்படி அடுத்து வருகின்ற ஏழு வருடங்களுக்குள் சோவியத் யூனியன் ஏறக்குறைய 25% மான அணு உலைகளை மூட வேண்டும். இதற்கு சமாந்திரமாக அமெரிக்கா 15% மான அணு உலைகளை மாத்திரம் மூடிக் கொள்ளும்.

கெடுபிடியுத்தத்திற்கு பின்னர்

1992 ஆம் ஆண்டு ஆனிமாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் புஸ், ரஸ்சிய ஜனாதிபதி பொறிஸ் ஜெல்ரின் (Boris Yeltsin) ஆகிய இருவரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இச்சந்திப்பில் 1991 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட START-I ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்த ஆயுதக் குறைப்பிற்கும் அப்பால் அணுவாயுதங்களை குறைப்பது தொடர்பாக இரு தலைவர்களும் கலந்துரையாடிக் கொண்டனர். இதன்படி 2003 ஆம் ஆண்டில் 3,000ற்கும் 3,500 க்கும் இடையிலான யுத்த தளபாடங்களை இருதரப்பும் அழிப்பது என்பதே இப் பேச்சுவார்த்தையின் முழுமையான இலக்காக இருந்தது. இப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 1993 ஆம் ஆண்டு START-II ஒப்பந்தத்தில் இருநாடுகளின் தலைவர்களும் கைச்சாத்திட்டனர்.

1993ம் ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற பில்கிளின்ரன் ஏவுகணை பாதுகாப்பு முறைமைக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கத் தொடங்கினார். இது மீண்டும் புதிய ஆயுதப் போட்டி சர்வதேசளவில் தோற்றக் கூடிய அபாயத்தினை ஏற்படுத்தியது. அதிஉயர் பிரதேச பாதுகாப்புமுறை செயற்பாடு (Theater High – Altitude Area Defense System)- (THAAD) என்னும் பெயரில் புதிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்திற்காக பிரேரணையினை பில்கிளின்ரன் சமர்ப்பித்தார். இத்திட்டம் வடகொரியா போன்ற நாடுகளில் இருந்து குறுந்தூர ஏவுகணைகள் ஏவப்பட்டால் அதிலிருந்து தனது நட்பு நாடுகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை முறியடிப்பதாக இருந்தது. எனவே THAAD சர்வதேச பாதுகாப்பு தொடர்பான பதட்டத்தினை மீண்டும் உருவாக்கியதுடன், SALT- I கூறும் விதிகளையும் மீறுவதாக இருந்தது. கெடுபிடி யுத்தத்தின் பின்னர் தோற்றம் பெற்ற ஆயுதக் கட்டுப்பாடு ஏற்பாடுகள் அனைத்தையும் இது சீர்குலைப்பதாக இருந்தது. மேலும், அணுவாயுத சமனிலை சீர்குலைந்து மீண்டும் ஆயுதப் போட்டி ஏற்படுவதற்கான சூழ்நிலை தோன்றியது.

தற்போது ஆயுதக் கட்டுப்பாட்டிற்கான புதிய சவால்களும் தடைகளும் உருவாகியுள்ளதுடன், அதிகார ஒழுங்கிற்கான புதிய கட்டமைப்பும் தோற்றம் பெற்றுள்ளது. பிராந்திய அரசுகள் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. பிராந்திய வல்லாதிக்கப் போட்டி தவிர்க்க முடியாதபடி ஆயுதப் போட்டியை மீண்டும் முன்னோக்கித் தள்ளியுள்ளது. இதனால் அதிகாரச் சமனிலை சீர்குலைத்துள்ளது. மறுபக்கத்தில் சர்வதேச பயங்கரவாதம், பிரிவினைவாதம் போன்றவற்றின், தோற்றம் உலக நாடுகளின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்க இரட்டை கோபுரங்களை தலிபான் தற்கொலையாளிகளால் தாக்கியளிக்கப்பட்டது. இது பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கும் நாடுகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான தாக்குதலை துரிதப்படுத்தியது. அதேநேரம் பாக்கிஸ்தான், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகள் அணுவலு பெற்ற நாடுகளாக மாறியுள்ளன. ஈரான் அணுவலு தொடர்பான தனது அச்சுறுத்தலை தொடர்ந்தும் விடுத்து வருகின்றது. இதன் மூலம் ஆயுதக்கட்டுப்பாடு, ஆயுதகளைவு முயற்சிகள் பின்தள்ளப்பட்டு உலகில் சமாதானத்தினை உருவாக்குவதற்கான முயற்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளது.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

15,799 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>