வெளிநாட்டுக் கொள்கை

வெளிநாட்டுக் கொள்கை சர்வதேச அரசியற் செயற்பாட்டுக்கானதொரு பொறிமுறையாகும். எனவேதான் சர்வதேச அரசியலில் வெளிநாட்டுக் கொள்கை என்ற எண்ணக்கரு மிகவும் முக்கியமானதொரு இடத்தினைப் பெறுகின்றது. வெளிநாட்டுக் கொள்கை என்பது தேசியக் கொள்கையிலிருந்து வேறுபட்டதொன்றல்ல. உண்மையில் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியே வெளிநாட்டுக் கொள்கையாகும். வெளிநாட்டுக் கொள்கை தேசிய நலனை மையமாகக் கொண்டதாகும். இது ஏனைய அரசுகளிற்கிடையிலான உறவினை வலுப்படுத்துவதற்கு உதவுகின்றது. ஏறக்குறைய எல்லா அரசுகளும் வெளிச் சூழலினுடைய யதார்த்தத்திற்கும் தங்களுடைய பலத்திற்கும் உட்பட்டு தேசிய நலனை முன்னேற்றுகின்ற செயற்பாட்டிற்காக வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிக்கின்றன. அண்மைக் காலங்களில் வெளிநாட்டுக் கொள்கை என்ற பதம் மிகவும் அகலமானதும் ஒரு அரசாங்கம் ஏனைய சர்வதேச அரசாங்கங்களுடன் வைத்திருக்கும் எல்லாவிதமான உறவுகளையும் குறித்து நிற்கின்றது. மேலும் ஒரு அரசாங்கம் மேற்கொள்கின்ற அரசியல் சாரா உறவுகள் கூட வெளிநாட்டுக் கொள்கை என்ற வியாபத்துக்குள்ளேயே உள்ளடக்கப்படுகின்றது.

வெளிநாட்டுக் கொள்கை என்ற பதம் பல்வேறு வழிகளில் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. ஜோர்ச் மொடல்ஸ்கி (George Modelski) என்பவர் “வெளிநாட்டுக் கொள்கை என்பது ஒரு அரசு சர்வதேச சூழலிற்கேற்ப தனது சொந்தச் செயற்பாடுகளைச் சரிப்படுத்துவதற்காகவும், ஏனைய அரசுகளின் நடத்தை மாற்றங்களிற்காகவும் மேற்கொள்ளப்படும் முறையான செயற்பாட்டு அபிவிருத்தியாகும்” எனக் கூறுகின்றார்.

மொடல்ஸ்கி தனது வரைவிலக்கணத்தில் கொள்கை என்றொரு விடயத்தை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றார். கொள்கை என்பது அரசுகளின் நடத்தையில் ஏற்படுகின்ற மாற்றங்களை இலக்காக கொண்டு வெளிநாட்டுக் கொள்கையின் முதன்நிலை நோக்கத்தினை உருவாக்குவதாகும். உண்மையில் அரசு தற்போது பின்பற்றுகின்ற நடத்தையில் ஏற்படுகின்ற மாற்றங்கள், வெவ்வேறு நேரங்களில் வெளிப்படுத்தப்படும் தொடர்ச்சியான நடத்தைகள் என்பவற்றை வெளிநாட்டுக்கொள்கை உள்ளடக்கியிருக்கும். இது தேசிய நலனை கருத்திலெடுத்து உலக மாற்றங்களிற்கு ஏற்ப வகுக்கப்படுகின்றது. பீலிக்ஸ் குறொஸ் (Feliks Gross) நெகிழ்வான ஒரு விளக்கத்தினை வெளிநாட்டுக் கொள்கைக்கு கொடுக்கின்றார். அதாவது “ஒரு அரசு சில அரசுகளுடன் உறவுகளை பேணுவதில்லை என தீர்மானித்தால் அதுவும் கூட வெளிநாட்டுக் கொள்கைதான்” என்கிறார். இங்கு நேர் நிலையானதும், எதிர் நிலையானதுமான இரு கருத்துக்கள் காணப்படுகின்றன. எதிர்நிலையான தன்மை யாதெனில் ஒரு அரசு தனது நலன்களிற்காக தனது நாட்டு நடத்தையை மாற்றுவதில்லை என்ற இலக்கு காணப்படுமாயின் அது எதிர் நிலையானதாகும். ஒரு அரசு தனது தேசிய நலனிற்காக தனது நடத்தையினை மாற்றிக் கொள்ளுமாக இருந்தால் அது நேர்நிலையான கொள்கையாகும். படல் போர்ட்டு, லிங்கன் (Padael Ford and Lincoln) என்பவர்கள்

“வெளிநாட்டுக் கொள்கை என்பது ஒரு அரசு தனது நலன்களைப் பாதுகாப்பதற்கும் நலன்களை உறுதியான செயற்பாட்டு நோக்கங்களாக்குவதற்குமான இலக்குகளை சிந்தித்து செயற்படுத்துவதற்கான முதல் நிலை மூலக் கூறு” எனக் கூறுகின்றார்கள். வெளிநாட்டுக் கொள்கையில் தேசிய நலன் என்பதே முதல் நிலை மூலக்கூறாகும். இவ் நலன்களே இறைமையுடைய அரசுகளின் இலக்குகளாகும். இத் தேசிய நலன்கள் என்ற இலக்கினை அடைவதற்கு அரசுகள் வெளிநாட்டுக் கொள்கைய10டாக உறுதியான வடிவத்தை கொடுக்கின்றன. படல் போர்ட்டும் லிங்கனும் வெளிநாட்டுக் கொள்கையின் இரண்டு தொழிற்பாடுகள் பற்றித் தெளிவுபடுத்துகின்றார்கள். முதலாவது தொழிற்பாடு ஆழமான இலக்குகள் பற்றிய சிந்தனையாகும். இரண்டாவது தொழிற்பாடு தேசிய நலனை பாதுகாப்பதாகும். சீ.சீ றொடி (C.C.Rodee) என்பவர் வெளிநாட்டுக் கொள்கை என்பது கொள்கைத் தொகுப்பு எனக் கூறுகின்றார். இக்கொள்கைத் தொகுப்புக்குள் ஏனைய அரசுகளின் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களிற்கு ஏற்ப ஒரு அரசு தனது தேசிய நலனை பாதுகாப்பதற்கு ஏற்ற விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. அவரின் வார்த்தையில் கூறுவதாயின் “வெளிநாட்டுக் கொள்கை, கொள்கை தொகுப்புக்களின் உருவாக்கத்துடனும் அமுலாக்கத்துடனும் தொடர்புடையதாகும். இக் கொள்கைத் தொகுப்புக்கள் அரசுகள் தமது ஆழமான தேசிய நலனை பாதுகாப்பதற்காக ஏனைய அரசுகளுடன் நிகழ்த்தும் பேரம் பேசுதலின் போது ஒரு அரசின் நடத்தை முறையை உருவாக்குகின்றன”. எனக் கூறுகின்றார்.

இவ் வரைவிலக்கணம் அரசுகளினால் தீர்மானிக்கப்பட்ட கொள்கைத் தொகுப்புக்களே வெளிநாட்டுக் கொள்கை எனக் கூறுகின்றது. இக் கொள்கைகள் அரசுகளின் நடத்தையில் செல்வாக்குச் செலுத்தி அரசின் தேசிய நலன்களுடன் தொடர்புபடுகின்றன. தேசிய நலனை மையமாக வைத்தே தமக்கிடையிலான உறவுகளை அரசுகள் பேணிவருகின்றன.

தீர்மானிக்கும் காரணிகள்

ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கை என்பது ஏற்கனவே கூறியது போன்று தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இதுவே ஏனைய அரசுகளுடன் ஒரு அரசு வைத்திருக்கக் கூடிய உறவினைத் தீர்மானிக்கின்றது. எனவே ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கையையும், அதன் நெறியாள்கைகளையும் அரசுகளின் இறைமை, அரசுகள் ஒன்றிலொன்று தங்கியிருக்கின்றமை, ஒரு அரசிற்கு இருக்கக்கூடிய தேசிய, சர்வதேச சூழ்நிலைகள் என்பவைகள் பெருமளவிற்குத் தீர்மானிக்கின்றன. ஒரு அரசினுடைய இறைமையானது அரசிற்கு இருக்கக்கூடிய பிரதேச ஒருமைப்பாட்டினைப் பாதுகாக்கும் தத்துவத்திலேயே தங்கியுள்ளது. அரசுகள் ஒன்றிலொன்று தங்கியிருத்தல் என்பது எல்லா சூழ்நிலைகளிலேயும் அரசுகள் பெற்றுக் கொள்ளக்கூடிய அதிகளவு நன்மைகளைப் பேச்சுவார்த்தைகள் மூலமாக பெற்றுக் கொள்வதைக் குறிக்கின்றது. சர்வதேசிய சூழல் என்பது யதார்த்தத்தின் வெளிப்பாட்டினால் உருவாக்கப்படுவதாகும்.

1. பிரதே ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல்:-

ஒரு அரசின் முதல்நிலை கடமை தனது பிரசைகளையும், அவர்களுடைய சொத்துக்களையும் பாதுகாத்தலேயாகும். இதற்காக ஒரு அரசு தனது எல்லைப் பிரதேசங்களைப் பாதுகாக்க வேண்டும். தேவைப்பட்டால் ஏனைய அரசுகளின் பிரதேசங்களையும் ஆக்கிரமிக்கலாம். அரசுகளின் பிரதான நோக்கம் தங்களுடைய அரசின் எல்லைப் பிரதேசங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதேயாகும்.

2. பேரம் பேசுதல்:-

சர்வதேச அரசியலில் அரசுகள் ஒன்றிலொன்று தங்கியிருத்தல் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும். எல்லா அரசுகளும் அவை சிறியதோ, பெரியதோ ஒன்றிற்கு மேற்பட்ட காரணங்களிற்காக ஒருவரில் ஒருவர் தங்கியிருக்க வேண்டியுள்ளது. தங்கியிருத்தல் என்பது மோதலை அல்லது கூட்டுறவினை ஏற்படுத்தலாம். ஆகவே அரசுகளிற்கு இருக்கக்கூடிய இவ்வாறான அழுத்தங்கள் அரசுகளின் சர்வதேச நடத்தைக்கான சூழ்நிலையை உருவாக்குகின்றன. இதிலிருந்து எந்தவொரு அரசும் விலகிச் செல்ல முடியாது. வெளிநாட்டுக் கொள்கையானது தங்கியிருத்தலில் சமநிலையை உருவாக்கக்கூடிய வகையில் பேரம் பேசுதலினை ஏற்றுக் கொள்கின்றது.

3. தேசிய நலன்:-

வெளிநாட்டுக் கொள்கையூடாக இறைமையுடைய அரசுகள் தமது தேசிய நலன்களை பாதுகாப்பது அவர்களுடைய கடமையாகும். காலம், இடம், சூழல் என்பவற்றைப் பொறுத்து தேசிய அரசுகளுக்கிடையில் தேசிய நலனைப் பேணுவதில் சிறிய வேறுபாடுகள் காணப்படலாம். ஆனாலும் சுய பாதுகாப்பு, பாதுகாப்பு, பிரசைகளுடைய நலன்கள் போன்ற தேசிய நலன்கள் வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

4. உள்நாட்டுக் காரணங்கள்:-

ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் உள்நாட்டுக் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றுள் வரலாறும் தேசிய விழுமியங்களும், புவியியல், பொது அபிப்பிராயம், தேசியத் திறன் என்பன முக்கியம் பெறுகின்றன.

4.1 வரலாறும் தேசிய விழுமியங்களும்:-

வெளிநாட்டுக் கொள்கை ஒரு அரசினுடைய வரலாற்றினால் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. ஒரு அரசினுடைய கலாசாரம், நாகரீகம் என்பன வரலாற்றுக் காலத்திலிருந்து ஏனைய அரசுகளுடன் வைத்திருக்கும் உறவின் மீது செல்வாக்கு செலுத்துகின்றது. வரலாறானது ஒரு அரசின் வெற்றி, தோல்வி சமுதாயத்திற்கு எது செய்யப்பட்டது என்பதைப்பற்றி கூறும் ஆவணமாகும். இவ் வெற்றிகள், தோல்விகள் என்பன ஒரு அரசினுடைய வெளிநாட்டுக் கொள்கையை வழிப்படுத்துகின்றன. சமூக அங்கத்தவர்கள் குறிப்பிட்ட காலத்தில் எவ்வாறு கட்டுண்டு வளர்ந்தார்கள் என்பதை வரலாறு கூறுகின்றது. அவர்களுடைய நாகரீகம், மனநிலை பண்பு எவ்வாறு ஒன்றாக இருந்தது என்பதை வரலாறு கூறுகின்றது. இவ் உறவு மக்களுடைய விருப்பத்தினூடாக பிரதிபலிக்கப்பட்டதுடன் வெளிநாட்டுக் கொள்கைய10டாகப் பூர்த்தியும் செய்யப்பட்டது.

4.2 புவியியல்:-

புவியியல் தேசிய இலக்கினையும், விருப்பத்தினையும் நேரடியாகத் தீர்மானிக்கின்றதொரு விடயமாகும். இதனால் வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கத்தில் புவியியல் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றது. வெளிநாட்டுக் கொள்கையின் இலக்கில் புவியியல் செல்வாக்கின் வழி அரசுக்கு அரசு வேறுபடுகின்றது.

4.3. பொது அபிப்பிராயம்:-

ஜனநாயக நிறுவனங்களின் தோற்றம், வாழ்க்கைத்தர உயர்வு, உலகப் போர்கள் பெற்றுத் தந்த கசப்பான அனுபவங்கள், கல்வியின் துரித வளர்ச்சி போன்றன வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கத்தில் பொது அபிப்பிராயத்தின் முக்கியத்துவத்தினை அதிகரிக்கச் செய்திருந்தன. உலக அபிப்பிராயத்தை கருத்தில் எடுக்காது எந்தவொரு நாடும் தனது நலனை நிலை நிறுத்த முடியாது. உலக அபிப்பிராயத்தின் படி ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயங்களை ஒரு அரசு தனது நலன்களாக வெளியுறவுக் கொள்கையில் உள்ளடக்க முடியாது. எனவே ஒரு நாட்டினுடைய வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் பொது அபிப்பிராயம் முக்கியம் பெறுகின்றது. இது அபிவிருத்தியடைந்த நாட்டிற்கு மட்டுமன்றி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிற்கும் பொருந்தக் கூடியதாகும்.

4.4. தேசியத் திறன்:-

தேசியத் திறன் என்பது ஒரு நாடு கொண்டிருக்கின்ற இராணுவ தயார்நிலை, தொழில்நுட்ப முன்னேற்றம், அதி நவீன தொடர்பாடல் வசதிகள், பொருளாதார அபிவிருத்தி,தெளிவான அரசியல் நிறுவனங்கள் போன்றவற்றைக் குறித்து நிற்கின்றது. தேசியத் திறன் வெளிநாட்டுக் கொள்கையின் மையமாகும். தேசிய திறன் வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்துகின்றது. உண்மையில் வெளிநாட்டுக் கொள்கை தேசியத் திறனுடன் நேரடியாக தொடர்புபட்டதாகும். ஒரு அரசு தனது தேசியத் திறனை அதிகரிக்குமாக இருந்தால் அவ் அரசின் வெளிநாட்டுக் கொள்கையிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்படும். ஒரு அரசின் தேசியத் திறன் அதன் சர்வதேச உறவில் அதற்குரிய அந்தஸ்த்தினைத் தேடிக் கொடுக்கின்றது. தேசியத் திறன் குறைவடைந்தால் அதனுடைய அந்தஸ்து குறைவடைந்து ஏனைய அரசுகளுடன் பேரம் பேச வேண்டியிருக்கும். உதாரணமாக இரண்டாம் உலகப் போரின் பின்னர் பிரித்தானியாவின் அதிகார அந்தஸ்து ஐரோப்பாவிலும், உலகத்திலும் வீழ்ச்சியடைந்து பிரித்தானியாவினுடைய தேசியத் திறனுக்கு ஏற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையும் மாற்றமடைந்திருந்தது.

5. வெளிநாட்டுக் காரணங்கள்:-

வெளிநாட்டுக் கொள்கையை தீர்மானிக்கின்ற வெளிவாரியான விடயங்களில் நெகிழ்ச்சியானதும்,நெகிழ்சியற்றதுமான இரண்டு வகைகள் காணப்படுகின்றன. நெகிழ்ச்சியான விடயங்களுக்குள் சர்வதேச நிறுவனங்கள், உலக அபிப்பிராயங்கள் என்பன உள்ளடக்கப்படுகின்றன. சர்வதேச நிறுவனங்கள், சர்வதேசச் சட்டம், ஒப்பந்தங்கள் என்பன சர்வதேசச் சூழலை உருவாக்குவதுடன், இவை மிகவும் இயங்கியல் தன்மை கொண்டவையுமாகும். இச்சர்வதேசச் சூழல் உலக பொது அபிப்பிராயத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. அரசுகள் வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்குகின்ற பொழுது மாறும் தன்மை கொண்ட சர்வதேச அரசியலைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். நெகிழ்ச்சியற்ற விடயங்களைப் பொறுத்தவரையில் அரசுகள் வெளிநாட்டுக் கொள்கைக்கு உடன்பாடானவை, உடன்பாடற்றவை என்ற நிலைகள் காணப்படுகின்றன. அரசுகள் சில நிரந்தரமான கூட்டுக்களையும், சில நிரந்தரமான அயலவர்களையும், நிரந்தரமான எதிரிகளையும் வைத்திருக்கின்றன.

5.1. சர்வதேச நிறுவனங்கள்:-

வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கத்தில் சர்வதேச நிறுவனங்கள் முக்கிய வகிபாகத்தினை வகிக்கத் தொடங்கிவிட்டன. அரசுகள், ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் என்பவற்றைச் சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் செய்துள்ளன. இவைகளை அரசுகள் மீறி ஆபத்திற்குள்ளாகக்கூடாது.

5.2. உலக பொது அபிப்பிராயம்:-

உலக பொது அபிப்பிராயம் மின்னல் போல மாறும் தன்மை கொண்டதும், வெளியுறவுக் கொள்கையில் அடிக்கடி செல்வாக்குச் செலுத்துவதுமாகும். உள்நாட்டு மட்டத்திலான பொது அபிப்பிராயத்தின் ஆதரவு இருந்தால்தான் உலகப் பொது அபிப்பிராயம் வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் முக்கிய வகிபாகத்தினை வகிக்க முடியும். அபிப்பிராயம் என்பது பல்வேறு மக்களின் பல்வேறு கருத்துக்களைக் கொண்டதாக அமைந்திருக்கும். உலகத்தில் காணப்படுகின்ற சித்தாந்தப் பிரிவுகள் உலகத்தின் ஒரு பகுதியில் சரியானதாகவும் மறு பகுதியில் தவறானதாகவும் காணப்படுகின்றது. பிரச்சாரம், வெகுசன தொடர்பு சாதனங்களின் சுதந்திரமின்மை, பொருளாதாரப் பின்னடைவு என்பன உண்மையான பொது அபிப்பிராயத்தினைத் தடை செய்கின்றன.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

16,074 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>