சர்வதேச அரசியலில் “தேசிய நலன்” என்ற பதம் மிகவும் முக்கியமானதாகும். ஆயினும் சர்வதேச அரசியலில் இப்பதத்தின் நடத்தையினை வியாக்கியானப்படுத்துவது மிகவும் சிக்கலானது என்பதை பொதுவாக எல்லா அரசியல் விஞ்ஞானிகளுமே ஏற்றுக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் சர்வதேச அரசியலில் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டே தேசிய அரசுகளின் நடவடிக்கைகள் அமைகின்றன என்பதனையும் இவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்.
தேசிய நலன் தொடர்பான கருத்துக்கள் காலத்துக்குக் காலம் தோற்றம் பெற்ற அரசியல் விஞ்ஞானிகளது கருத்துக்களால் அபிவிருத்தியடைந்து சென்றுள்ளது. இதனால் தேசிய நலன் தொடர்பான சிந்தனை வளர்ச்சி காலமாற்றங்களை உள்வாங்கிச் சென்றுள்ளமையினை அவதானிக்க முடியும். ஹன்ஸ் மோர்கேந்தோ (Hans Morgenthau) தேசிய நலன் பற்றி கூறும் போது “சர்வதேச அரசியல் தேசிய நலன் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. அரசியல் நடத்தைகளால் தேசிய நலனானது ஒரு நிலையான நியமமான தன்மைகளைப் பெற்றுள்ள அதேநேரத்தில், நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கங்களையும், அதற்கேற்றதான அதன் அரசியல் நடத்தைகளையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது எனக் கூறுகின்றனர். மோர்கேந்தோ வின் கருத்தினை ஆதரிப்பது போன்றே ரோசினோ (Rosenau) என்பவர் தேசிய நலன் தொடர்பாக கருத்து தெரிவிக்கின்றார். இவரது கருத்துப்படி “தேசிய நலன் என்பது ஓர் அரசின் வெளிநாட்டுக் கொள்கையை விபரிக்க பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக உள்ளது என்கின்றார். இவர்கள் இருவரையும் விட றேமொன்ட் அரோன், பல்மேஸ்ரேன் (Ramond Aron, Palmeston) போன்றவர்களும் தேசிய நலன் தொடர்பாக தமது கருத்துக்களை கூறியுள்ளனர். றேமொன்ட் அரோன் என்பவர் “தேசிய நலன் என்பதனை பகுத்தறிவு ரீதியாக ஆராயும் போது அது ஒரு அர்த்தமில்லாதது அல்லது புனையப்பட்ட ஓர் கொள்கை என்று கூறுகின்றார். பல்மேஸ்ரேன் என்பவர் “முடிவானதும், நிச்சயமுமான நட்புறவுகள் எங்களிடம் இல்லை,முடிவான எதிரிகளும் எங்களிடம் இல்லை எங்களது நலனே எங்களுக்கு முடிவானதும், நிச்சமானதுமாகும். எனவே அந்த நலன்களை பின்பற்றுவதுதான் எங்களது கடமை” என்கின்றார். இதே கருத்தை ஆதரித்து பிரான்ஸ்சை ஆட்சி செய்த அரசியல்வாதி டி கோல் (De Gaulle) பின்வருமாறு கூறியிருந்தார் “தேசங்களுக்கு உணர்வுகள் என்பது கிடையாது. தேசிய நலனே முக்கியமானது அதுவே நாட்டிற்கும், அந்நாட்டு மக்களுக்கும் வேண்டப்படுவதாகும்” எனக் கூறுகின்றார்.
தேசிய நலன் தொடர்பான அல்லது அதன் அடிப்படையிலமைந்த அம்சங்கள் பற்றி ஆய்வு செய்கின்ற போது வேற்றுமைகளும், முரண்பாடுகளும் உருவாவதை அவதானிக்க முடியும். இதனால் அரசியல் அறிஞர்களிடையே பின்வரும் கருத்துக்கள் எழுச்சியடைந்திருந்தன.
-
தேசிய நலன் பற்றிய பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வரைவிலக்கணம் ஒன்றை எவ்வாறு வரைவது.
-
ஒரு குறிப்பிட்ட நாட்டில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்நாட்டு மக்கள் தொடர்பான பிரச்சினையில் விசேட தேசிய நலனாக எது அமைய முடியும்.
-
தேசிய அரசின் நடவடிக்கைகள் தேசிய நலனைப் பொறுத்தவரையில் எதற்கு முக்கியத்துவம் வழங்குகின்றன? எப்போது? எப்படி? இத்தகைய முக்கியத்துவம் வழங்கப்பட்டு விடயங்கள் அமுல்படுத்தப்படுகின்றன?.
-
யாரால்? எவ்வாறு? எதிரிகள் வரையறுக்கப்படுகின்றார்கள்.
-
யாரால்? எவ்வாறு? நண்பர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள்.
-
தேசிய இலக்குகள் அல்லது பெறுமதிகள் தொடர்பாக தேசிய மட்டத்தில் ஏற்பட்டுள்ள கருத்து வேற்றுமைகளை தீர்த்துவைப்பதில் ஒரு அரசாங்கத்தின் பங்கு என்ன?
ஆரம்பகாலத்தில் இதனை அரசனது அல்லது அரச வம்சத்தின் நலன் என்றும், பின்பு பேரரசின் நலன், தேசத்தின் பொது நலன் என்று அபிவிருத்தியடைந்து சென்றது. 19ம் நூற்றாண்டில் பிரித்தானியா அத்திலாந்திக் சமுத்திரத்தில் தன்னுடைய தன்னாதிக்கம் பரவலாக இருக்க வேண்டும் என்பதை தனது தேசிய நலனாக கருதி செயற்பட்டது. 20ம் நூற்றாண்டில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஐரோப்பிய அரசு ஏதாவது தனது ஆதிக்கத்தை ஏற்படுத்த முனைந்தால் அது ஐக்கிய அமெரிக்காவின் நலனை பாதிக்கும் என இன்றுவரை கூறிவருகின்றது. எனவே தேசிய நலன் வெளியுறவுக் கொள்கையின் மையக் கருவாகும். இதுவே அரசியல் நடத்தைகளையும், நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும் கருவியாகும். இவ்வகையில் காலமாற்றத்திற்கு ஏற்ப அபிவிருத்தியடைந்து சர்வதேச அரசியலின் மிக முக்கிய கோட்பாடாக தேசிய நலன் வளர்ச்சியடைந்துள்ளது. சமகால தேசிய அரசுகளின் ஆட்சியாளர்கள் தொடர்பாக ஜோசெப் பிராங்கில் (Joseph Frankel) கூறும்போது “தமது நாட்டின் தேசிய நலனில் அக்கறை கொண்டவர்களாகவும் தங்களது தேசிய வாழ்க்கையில் தேசிய நலனை ஓர் அரசியல் கொள்கையாக ஏற்றுள்ளவர்களாகவும் உள்ளனர்.
வரையறுப்பதில் தோன்றும் பிரச்சினை
தேசிய நலன் தொடர்பாக ஆய்வினை மேற்கொள்பவர்கள் மிகவும் சிக்கலான விடயம் ஒன்றை விவாதித்து வருகின்றார்கள். தேசிய அரசுகளின் ஆட்சியாளர்கள் தேசிய நலன் என்ற எண்ணக்கருவினை தீர்மானிக்கும் வல்லமை சித்தாந்தத்திற்கு உள்ளதா? அல்லது அதிகாரத்தில் இருக்கும் குழுக்கள் தாம் மேற்கொண்ட தீர்மானங்களை நியாயப்படுத்துவதற்கு போதுமான சிந்தனைகளை ஏற்று வளைந்து கொடுக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்களா? இன்னோர் வகையில் கூறின் சித்தாந்தங்கள் கொள்கைகளை தீர்மானிக்கின்றனவா? அல்லது கொள்கைகள் தொடர்பான தெரிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவற்றிற்கு மெருகூட்டுவதற்கு சித்தாந்தங்கள் பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தப்படுகின்றனவா? தெளிவாக கூறின் மாக்சிச லெனினிச சித்தாந்தமானது சோவியத் யூனியன்,சீனா போன்ற அரசுகளின் கொள்கைகளை விளங்கிக் கொள்வதற்கு உதவுகின்றனவா? மாறாக தாராண்மைவாத ஜனநாயக பண்புகளை விளங்கிக் கொள்வதற்கு ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் கொள்கைகள் எமக்கு உதவுகின்றனவா?
முதலில் சித்தாந்தம் என்ற எண்ணக்கரு பற்றி தெளிவான ஒரு நிலையினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சோவியத் ரஸ்சியா, சீனா போன்ற கம்யுனிச நாடுகள் தமது நாட்டிற்கான கொள்கைகளை உருவாக்கும் போது வதில் சித்தாந்தங்களை பயன்படுத்தினவா? என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மாக்சிச – லெனினிச சித்தாந்தம் “ஒரு சமுதாயத்தின் பொருளாதார அசைவுதான் அச் சமுதாயத்தின் அரசியல், சமூக, கலாசார, சமய அசைவுகளை தீர்மானிக்கின்றது. பூஷ்வா வர்க்கத்தின் நலன் பேணும் கருவியே அரசு இது தொழிலாளர் வர்க்கத்தை சுரண்டுவதில் ஒரு நிலையான இடத்தை பேணிக் கொள்கின்றது. சோசலிச புரட்சி ஏற்பட்ட பின்னர் பாட்டாளி வர்க்க சர்வதிகார முறையில் கம்யூனிச கட்சியினால் அரசு செயல்படுத்தப்படும். தேசிய எல்லைகளுக்கு அப்பால் வர்க்க முறையற்ற ஒரு உலக சமுதாயத்தை உருவாக்குவதற்கு தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட வேண்டும் முதலாளித்துவ சக்திகளுக்கும், சோசலிச சக்திகளுக்கும் இடையிலான யுத்தம் தவிர்க்க முடியாததாகும். முதலாளித்துவ சமுதாயங்களுக்கு இடையில் ஏற்படும் உள் முரண்பாடுகள் தவிர்க்க முடியாதபடி தொழிலாளர் புரட்சியை ஏற்படுத்தி உலகமெங்கும் கம்யுனிசம் பரவ வழி செய்யும்” எனக் கூறுகின்றது
மாக்சிச – லெனினிச சித்தாந்தத்தினை பின்பற்றிய நாடுகளுடன் தொடர்புபடுத்தி இக்கருத்தினை பார்க்கின்ற போது சோவியத் ரஸ்சியா, சீனா போன்ற கம்யூனிச நாடுகளின் வெளிவிவகார கொள்கை வகுப்பாளர்கள் சித்தாந்தங்களை விட தேசிய நலன் தொடர்பான காரணிக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் எடுத்துக்காட்டாக 1948 ஆம் ஆண்டு சோவியத் ரஸ்சியாவுக்கும் யூகோஸ்லேவாக்கியாவிற்கும் இடையிலும், 1956 ஆம் ஆண்டு சோவியத் ரஸ்சியாவுக்கும் ஹங்கேரிக்கும் இடையிலும், 1960 ஆம் ஆண்டிலிருந்து சோவியத் ரஸ்சியாவுக்கும் சீனாவிற்கு இடையிலும் 1968 ஆம் ஆண்டு சோவியத் ரஸ்சியாவுக்கும் செக்கொஸ்லோவாக்கியாவிற்கு இடையிலும், 1979 ஆம் ஆண்டிலிருந்து சீனாவிற்கும் வியட்னாமிற்கு இடையிலும் ஏற்பட்ட தகராறுகளும், முரண்பாடுகளும் அவர்கள் பொதுவான கொள்கையை கடைப்பிடிப்பவர்களாக இருந்தும் சித்தாந்த அடிப்படையில் சுமுகமான உறவை பேணியிருக்கவில்லை அத்துடன் மாக்சிச – லெனினிச சித்தாந்தம் கூறுவது போன்று முரண்பாடுகள் அற்ற உறவுகளை வளர்ப்பதற்கும் உதவில்லை. குறைந்த பட்சம் மாக்சிச சித்தாந்தத்தை பின்பற்றிய நாடுகள் கூட அதனை பின்பற்றவில்லை. இங்கு சோவியத் ரஸ்சியாவின் நடத்தை பெருமளவு சித்தாந்த அரசியலை விட அதிகார நடத்தை என்பதை முதன்மைப்படுத்துவதாக இருந்தது.
சார் மன்னன் முதல் புரட்சி ஏற்படும் வரை சோவியத் ரஸ்சியா ஒரு வல்லரசாக திகழ வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வந்தது. புரட்சி ஏற்பட்டதன் பின்னர் அதன் அயல் நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்பியது. மத்திய தரைக் கடலில் உள்ள துறைமுகங்கள் தனது கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என எண்ணியது. கடல்,ஆகாய பிராந்தியங்களில் தனது பலத்தைக் காட்டுவதற்காக சோவியத் ரஸ்சியா உலகத்தைச் சுற்றி தளங்களை அமைக்க விரும்பியது. தன்னுடைய இராணுவ தொழில் நுட்ப ஆலோசனைகளையும், இராணுவ தளங்களையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நாடுகளுடன் நட்புறவுகளை பேணவும் விரும்பியது. சீனா தனது பிரதேச கௌரவம், அதன் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்கு மாக்சிச சித்தாந்தம் சக்தி வாய்ந்த வகிபங்கைக் கொடுத்திருக்கவில்லை என நம்புகின்றது. ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு கூட சித்தாந்தத்திற்கு அப்பால் தேசிய நலனுக்காக கொள்கை வகுப்பாளர்களால் உருவாக்கப்பட்டதேயாகும்.