ஜீன் ஜக்கியூஸ் ரூசோ 1712 ஆம் ஆண்டு ஆனிமாதம் 28ம் திகதி சுவிற்சர்லாந்தில் ஜெனிவா நகரத்தில் பிறந்தார். இவர் பிறந்து சிறிது காலத்தில் இவரது தாயார் காலமாகிவிட்டார். தந்தை கடிகாரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது பத்தாவது வயதில் தந்தையார் தன்மீது சுமத்தப்பட்ட சிறிய குற்றச் செயலுக்குப் பயந்து ஜெனிவாவினை விட்டு வெளியேறியிருந்தார். இக்காலத்தில் ரூசோ சிறிய தந்தையுடன் வளர்ந்து வந்தார். பதினாறாவது வயதில் ஜெனிவாவினை விட்டு ரூசோ வெளியேறினார். பின்னர் இடத்திற்கு இடம் மாறி வாழ்ந்து இறுதியில் 1742ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பரீஸ் நகரத்தில் குடியேறினார். 1749 ஆம் ஆண்டு டிஜோன் கல்விக்கழகம் நடத்திய கலைகளும் விஞ்ஞானமும் அபிவிருத்தியடைந்திருப்பதால் ஒழுக்கம் உயர்வடைந்திருக்கின்றதா? அல்லது வீழ்ச்சியடைந்திருக்கின்றதா? என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் அவருக்கு முதலாம் இடத்திற்கான பரிசு கிடைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து 1755 ஆம் ஆண்டு Discourse என்னும் நூலையும், பின்னர் எமிலி என்னும் (கல்வித்திட்டம்) என்னும் நூலையும் எழுதியிருந்தார். 1762 ஆம் ஆண்டு சமூக ஒப்பந்தம் (Social Contract) என்னும் நூலை எழுதியிருந்தார். ரூசோவின் எழுத்துக்கள் பிரான்சியப்புரட்சிக்கு தூண்டுதலாக இருந்ததோடு இந்நாட்டின் மறுமலர்ச்சிக்கும் காரணமாக இருந்தது. 1788 ஆம் ஆண்டு வறுமை, நோய் காரணமாக ரூசோ மரணமடைந்தார்.
பலம், அடிமைத்தனம்
“மனிதன் பிறக்கும் போது சுதந்திரம் உள்ளவனாகவே பிறக்கின்றான். ஆனால் எங்கு பார்த்தாலும் அவன் அடிமைத் தளைகளால் பிணைக்கப்பட்டவனாக காட்சியளிக்கின்றான்”என ரூசோ கூறுகின்றார். ஒவ்வொரு மனிதனும் தான் மற்றவனுக்கு எஜமானன் என எண்ணுகின்றான். ஆனால் அப்படி எண்ணுபவன் மற்றவர்களை விட பெரிய அடிமையாக இருக்கின்றான். இக்குழப்ப நிலை எவ்வாறு உருவாகியது? இதற்கு தனக்கு விடை தெரியாது? ஆனால் இதனை மாற்றியமைக்கத் தன்னால் முடியும் எனக் கூறுகின்றார். சமுதாய ஒழுங்கு என்பது புனிதமான உரிமையாகும். இது மற்றெல்லா உரிமைகளுக்கும் அடிப்படையானதுமாகும். இந்த உரிமை இயற்கையிலிருந்து தோன்றியதல்ல. இந்த உரிமை சம்பிரதாயத்திலிருந்து தோன்றியதாகும்.
பலமுடையவன் தனது பலத்தின் மூலம் எப்போதும் பிறர் மீது ஆதிக்கம் செலுத்தி வாழமுடியாது. இவ்வாறு ஆதிக்கம் செலுத்துவானாயின் ஆதிக்கம் செலுத்துவதை தனது உரிமையாகவும், அடங்கி நடப்பதை கடமையாகவும் மாற்ற வேண்டும். பலாத்காரம் என்பது ஸ்தூல சக்தியாகும். அதன் அதிகாரத்திற்கு அடங்கி நடப்பது மனப்பூர்வமானதல்ல. தேவையைப் பொறுத்ததேயாகும். எனவே அதனைக் கடமையென்று கூறமுடியாது. பலாத்காரத்தினால் ஏற்படக்கூடிய இப்போலித்தனமான உரிமையினால் தீமையும், அறியாமையும் தான் உருவாக முடியும். மக்கள் கட்டாயப்படுத்தப்படாமல் விடப்படுவார்களாயின் போலித்தனமாக கீழ்படிந்து நடக்கவேண்டிய தேவை இல்லாது போய்விடும். எனவே பலாத்காரத்திற்கும் உரிமைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
எந்த தனிமனிதனும் சகோதர தனிமனிதன் மீது அதிகாரம் செலுத்த வேண்டியதில்லை. பலாத்காரத்திற்கு உரிமையும் கிடையாது. சம்பிரதாயங்களே சட்ட ரீதியான அதிகாரங்கள் அனைத்திற்கும் அடிப்படையானதாகும். குரோஸியஸ் கூறும் “தனிப்பட்ட மனிதன் தனது சுதந்திரத்தை தன்னுடைய எஜமானிடம் பாரதீனப்படுத்தி விட்டு அடிமையாவது போன்று, முழு மக்கள் கூட்டமும் தங்கள் சுதந்திரத்தை பாரதீனப்படுத்தி விட்டு அரசனுக்கு அடிமையாகி விடவேண்டும்” என்ற கருத்தை ரூசோ நிராகரிக்கின்றார். ரூசோவின் பார்வையில் பாரதீனப்படுத்துதல் என்றால் விற்றுவிடுவதாகும். தனிமனிதன் எஜமானிடம் தனது சுதந்திரத்தை பாரதீனப்படுத்துதல் என்பது வயிற்றுப் பிழைப்பிற்கானதாகும். ஆனால் முழு மக்கள் கூட்டமும் தங்களை ஏன் விற்றுக் கொள்ள வேண்டும் என ரூசோ கேள்வி எழுப்புகின்றார்.
ஒரு மனிதன் எவ்வித நன்மையுமில்லாமல் தன்னைப் பிறிதொரு மனிதனிடத்தில் பாரதீனப்படுத்திக் கொள்கின்றான் என வாதிடுவது தவறானதாகும். இவ்வாறு செய்பவன்; தனது சுய அறிவை இழந்தவனாகும். இதேபோன்று முழு மக்கள் கூட்டமும் எவ்வித நன்மையும் இல்லாமல் தங்களை ஒரு அரசனிடம் பாரதீனப்படுத்திக் கொள்வதும் அர்த்தமில்லாததாகும். தனிமனிதன் தன்னைப் பிறிதொருவருக்கு அடிமைப்படுத்திக் கொண்டாலும் தன் பிள்ளைகளை அடிமைப்படுத்திப் பராதீனப்படுத்திக் கொள்ள அவனுக்கு உரிமை கிடையாது. ஒரு அரசாங்கம் தர்மம், நீதி அடிப்படையில் இயங்குவதற்கு அதன் ஆட்சியை ஒப்புக்கொள்ளவோ, நிராகரிக்கவோ அதன் ஒவ்வொரு தலைமுறைக்கும் உரிமை வழங்க வேண்டும்.
குரோஸியஸ் கூறும் “ஒரு மனிதனை மற்றொரு மனிதன் அடிமைப்படுத்திக் கொள்ள உரிமையுண்டு எனும் கொள்கை யுத்தத்திலிருந்து பிறந்தது” என்னும் கருத்தை ரூசோ மறுக்கின்றார். யுத்தம் என்பது தனியொரு மனிதனுடன் தொடர்புடைய விடயமல்ல. யுத்தத்தில் தோல்வியடைந்தவர்களை கொலை செய்வதற்கு வெற்றி பெற்றவர்களுக்கு என்றைக்கும் உரிமை கிடையாது. கொலை செய்வதற்கு உரிமை இல்லையாயின் அடிமையாக்குவதற்கும் உரிமையில்லை. யுத்தத்தில் தோல்வியடைந்தவர்களை கொலை செய்யாது அதற்குப் பதிலாக அவர்களின் சுதந்திரத்தை பறித்துக் கொள்வதும் நியாயமற்றதாகும். அடிமைப்படுத்தும் எந்த உரிமையும் நியாயமற்றது, முறையற்றது கேவலமானதாகும். அடிமைத்தனம், உரிமை ஆகிய இரண்டு சொற்களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவைகளாகும். முழுவதும் உன் செலவில்,முழுவதும் என் நன்மைக்காக என் விருப்பப்படி உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்கின்றேன். எனக்கு விரும்பிய காலம் வரை அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி வருவேன். நீயும் அதேபோன்று எனக்கு விரும்பிய காலம் வரை நடைமுறைப்படுத்தி வரவேண்டும் என ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனைப் பார்த்தோ அல்லது ஒரு அரசன் மக்களை (தேசத்தை) பார்த்து இவ்வாறு கூறுவானாயின் அது பெரும் முட்டாள்தனமாகும்.
குடும்பம்
சமுதாயங்களில் மிகவும் பழமையானதும், இயற்கையானதுமான நிறுவனம் குடும்பம் என்ற நிறுவனமேயாகும். குடும்பம் என்ற நிறுவனத்தில் தமக்குப் பாதுகாப்பும்,நலனும் தேவைப்படும் வரையில்தான் பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் (தந்தை,தாய்) அன்பு செலுத்தி வாழ்கின்றார்கள். இது இயற்கையான பந்தமாகும். இத்தேவைகள் முடிவடைந்த பின்னர் இவ் இயற்கையான பந்தம் அறுபட்டு விடுகின்றது. இதன்பின்னர் தம் பெற்றோருக்கு கீழ்படிந்து நடக்க வேண்டிய பிள்ளைகளுக்கும், தம் பிள்ளைகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டிய தேவை பெற்றோருக்கும் இல்லாமல் போய்விடுகின்றது. இருதரப்பும் சுதந்திரமாக வாழ ஆரம்பித்து விடுவதுடன், சம அந்தஸ்தும் அடைந்து விடுகின்றனர். இதற்குப் பின்னரும் இரு தரப்பினரதும் (பிள்ளைகள் – பெற்றோர்) உறவு நீடிக்குமானால் அது இயற்கைக்கு முரணானதாகும். அது வலிய ஏற்படுத்திக் கொண்ட உறவாகும்.
பிள்ளைகளும் பெற்றோரும் ஒருவர் மீது ஒருவர் தங்கி வாழ வேண்டிய தமது தேவை முடிவடைந்த பின்னர் தனிமைப்பட்டு சுதந்திரமாக வாழத் தொடங்கும் போது “பொது சுதந்திரம்” ஏற்பட்டு விடுகின்றது. பொது சுதந்திரமானது மனித சுபாவத்தின் இயற்கை நியதியாகும். தனது பாதுகாப்பிற்கும், நலனுக்கும் தேவையானவற்றை கவனிப்பதே மனிதனின் முதல் தேவையாகும். நல்லது, தீயது எவைகள் என்பதை பகுத்தறியும் சக்தி ஏற்பட்டுவிட்ட பின்னர் தனது நலனுக்குத் தேவையானவற்றை அவனே தீர்மானித்து விடுகின்றான். இந்த நிலையை அடையும் மனிதன் தனக்குத் தானே எஜமானனாகி விடுகின்றான்.
சமுதாயத்திற்கு பொதுச் சொத்துக்களும், அரசியல் அந்தஸ்த்தும் இருக்க வேண்டும். “ஒரு இனம் தன்னை தனியொரு எதேச்சதிகாரிக்கு பாரதீனப்படுத்திக் கொள்ளக் கூடும்” என்று குரோஸியஸ் கூறும் கருத்தினை ரூசோ விமர்சிக்கின்றார். ஒரு இனம் தன்னை பூரணமாக பாரதீனப்படுத்திக் கொண்ட பின்னர் தனது அந்தஸ்த்தினை இழந்து விடுகின்றது. எந்த சட்டத்தின் கீழ் எதேச்சதிகாரி தேர்ந்தெடுக்கப்படுகின்றாரோ அந்தச் சட்டத்தினை பரிசீலனை செய்வதற்கு முன்னர் எந்தச் சட்டத்தினால் குறிப்பிட்ட மக்கள் ஒரு இனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதோ அந்தச் சட்டம் பரிசீலனை செய்யப்பட வேண்டும். ஏனெனில் இதுதான் முதன்முதலில் தோன்றிய சட்டமாகும். இதுவே சமுதாயத்தின் உண்மையான அடிப்படைச் சட்டமாகும்.
சமுதாய ஒப்பந்தம்
இயற்கை நிலையில் தனித்து வாழ்ந்த மனிதன் தொடர்ந்து அவ்வாறு வாழ்ந்து வரவில்லை. மனிதனின் பாதுகாப்பிற்கும், அபிவிருத்திக்கும் தடையாகவிருந்த யாவற்றையும் கடந்து வந்து விட்டான். மனித சமுதாயம் தன்னிடமுள்ள சக்திகளை ஒன்று திரட்டி தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிதறிக்கிடக்கும் பல சக்திகளை ஒன்றுதிரட்டினால்த்தான் ஒரு புதிய கூட்டுச்சக்தி உண்டாகும். ஒவ்வொரு தனிமனிதனதும் சுக வாழ்விற்கு துணைக்கருவிகளாக இருப்பவை அவனுடைய சொந்தப் பலமும் சுதந்திரமுமேயாகும். அவற்றை அவன் பிறரிடத்தில் அடமானம் வைத்தால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்கின்றான். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த நலனை நாடுகின்றவனாக இருந்தால் புதிய சமுதாயமும் புதிய கூட்டுச்சக்தியும் உருவாக முடியாது.
தனிமனிதனுடைய சொத்துக்களையும், சுதந்திரத்தையும் பிறர் அபகரித்துக் கொள்ளாத வகையில் பாதுகாக்க பலர் ஒன்று கூடி பரஸ்பரப் பாதுகாப்பில் பங்கு பற்றி வாழும் சமுதாயம் ஒன்று உருவாக்கப்படவேண்டும். இவ்வாறு ஒரு சமுதாயமாக சேரும் பொழுது எந்தத் தனிமனிதனும் தனக்கே சொந்தமான சுதந்திரத்தை இழந்துவிடாமலும், தன் ஒருவனுக்கே தான் கீழ்ப்படிகின்றவனாகவும் இருந்து சமுதாயத்தினைப் பாதுகாத்து வரவேண்டும். இத்தகைய மக்களின் கூட்டமைப்பிற்குரிய அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வாக அமைவதுதான் சமுதாய ஒப்பந்தமாகும். இத்தகைய சமுதாய கூட்டமைப்பில் சமுதாயத்தின் பொதுநன்மைக்காக எல்லோரும் மனவிருப்பத்துடன் தமது உரிமைகளைப் பாரதீனப்படுத்துகின்றார்கள். இவ்வாறு எல்லா மனிதர்களும் ஒரேவிதமான பொதுவிதிக்கு ஏற்ப தமது உரிமைகளை சமுதாயத்தில் பாரதீனப்படுத்தி விடுகின்றனர். இதில் ஒரு சிலர் பிறருக்குப் பாதகமாக நடந்து கொண்டால் பரஸ்பரம் பாதகமாக நடந்து கொள்பவர் யார் என்று அவர்களுக்குத் தெரிந்துவிடும். தனிமனிதர்கள் மனம் விரும்பியே தங்கள் உரிமைகளை பொதுச்சமுதாயத்திற்கு பாரதீனப்படுத்திக் கொள்கின்றனர்.
தனிப்பட்ட மனிதன் தன்னுடைய நலனிற்காகவும், தனது உரிமைகளை மற்றவர்களைப் போன்று பாரதீனப்படுத்துகின்றான். எல்லோரும் பொதுச் சமுதாயத்தில் சரிசமமான உறுப்பினர்கள் ஆகிக்கொள்வதன் மூலம் தாம் இழக்கும் உரிமைகளுக்குப் பதிலாக அதிகமான சக்தியைப் பெறுகின்றனர். பொதுமக்களின் மேன்மையான அதிகாரத்திற்கு ஒவ்வொருவரும் தம்முடைய முழுச்சக்தியையும், தம்மையும் ஒப்படைத்து விடுகின்றனர். இதற்குப் பிரதிபலனாக ஒவ்வொரு உறுப்பினரும் பொதுஜன சக்தியின் பிரிக்கமுடியாத அங்கங்களாகிவிடுகின்றனர். இதுதான் சமுதாய ஒப்பந்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இத்தகைய சமுதாய ஒப்பந்தத்தின் கீழ் மனமும் உடலும் ஒற்றுமை கொண்ட உணர்ச்சியுள்ள மக்கள் சமூகம் உண்டாகின்றது. கூட்டமைப்பே சமுதாயத்தின் சக்தியாகவும், ஜீவனாகவும் அமைகின்றது. அது குடியரசு அல்லது சமுதாய ஸ்தாபனம் என அழைக்கப்படும். இக்கூட்டமைப்பு செயலாற்றும் போது அரசு என்றும், பிற அமைப்புக்களுடன் ஒப்பிடும்போது அதிகாரம் என்றும் அழைக்கப்படும். இக்கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களைக் கூட்டாக அழைக்கும்போது மக்கள் என்றும், தனிப்பட்ட முறையில் நகரமக்கள் என்றும், ஆட்சியின் சட்டதிட்டங்களுக்குட்படும் போது பிரஜைகள் என்றும் அழைக்கப்படுவார்கள்.
அரசு
சமூக ஒப்பந்தத்தில் அரசு தன்னுடைய உரிமைகளில் ஒரு பகுதியை பாரதீனப்படுத்தக் கூடாது. மற்றொரு அரசுக்கு கட்டுப்படவும் கூடாது. இவ்வாறு செய்தால் அரசு அழிந்து விடும். தனிநபர்களின் கூட்டுறவே சமூக ஒப்பந்தமாகும். இத்தனிப்பட்ட நபர்களிடமிருந்துதான் அரசு உருவாகின்றது. தனிப்பட்ட நபர்களின் நட்பும், அரசின் நன்மையும் ஒன்றாக இருக்க வேண்டுமேயோழிய ஒன்றுக்கொன்று பாதகமாக இருக்க கூடாது. சமூக ஒப்பந்தத்தின் விருப்பங்களுக்கு எவனொருவன் கீழ்படியாமலிருக்கின்றானோ அவனை கீழ்படிய வைக்க வேண்டும். அவன் இவ்வாறு செய்யாதிருப்பானாகில் அவன் சுதந்திரத்துடன் இருக்கமுடியாது.
சட்டம்
அரசியல் சமுதாயத்திற்கு இயங்கு சக்தியையும், உறுதியையும் கொடுப்பது சட்டமாகும். சட்டங்களின் உதவியில்லாமல் ஒரு சமூகம் ஒழுங்காக இயங்குவது கடினமாகும். எல்லா மக்களும் ஒன்று கூடி எல்லா மக்களுக்காகவும், ஒரு உத்தரவினை அமுலுக்குக் கொண்டுவந்தால் அந்த “உத்தரவு” எல்லா மக்களினதும் நன்மைக்கானதாகும். இதில் உத்தரவும், நோக்கமும் ஒன்றாகவேயுள்ளது. நோக்கமானது பொதுமக்களின் நன்மையைக் குறிப்பது போல உத்தரவும் அதேநோக்கத்தினை கொண்டிருக்கின்றது. இது போன்ற உத்தரவினைச் சட்டம் என்று கூறலாம். மக்களை ஒரு கூட்டமாகவும், அவர்களின் செயல்களை ஒரு தொகுப்பாகவும் வைத்து செயற்படுவது தான் சட்டமாகும். குறிப்பான தனிமனிதனுக்காகவோ, அவனின் செயலுக்காகவோ சட்டம் இயற்றப்படக்கூடாது. சில மக்களால் செய்யப்படுவது சட்டம் என்ற பெயரால் அழைக்கப்படக்கூடாது. பொதுமக்களின் அபிப்பிராயங்களின் கூட்டுத் தொகையே சட்டமாகும். ஆட்சியாளன் சட்டங்களுக்கு மேற்பட்டவனல்ல. ஆட்சியாளன் அரசின் பிரஜையாக இருப்பதால் அவனும் அரசின் சட்டங்களுக்க கட்டுப்பட்டவனாகும். ஆட்சியானது சட்டங்களுக்கு உட்பட்டிருக்குமானால் அது குடியரசாகும். மக்கள் சட்டங்களுக்கு கீழ்படிந்து வாழவேண்டும்.
சட்டங்களை உருவாக்குபவர்
நல்ல சட்டங்களை இயற்ற நல்ல அறிவாளி தேவைப்படுகின்றனர். மக்களின் நடத்தையினை, உணர்ச்சிகளை நன்றாகப் புரிந்து கொள்ளும் திறமை இவர்களுக்கு இருக்க வேண்டும். சட்டத்தினை ஆக்குபவர்கள் தமது சொந்த சுபாவங்களை சட்டத்தினை உருவாக்குவதற்கு உபயோகிக்கக் கூடாது. பொதுமக்களின் சுகவாழ்வே இவர்களின் எண்ணங்களாக பதிந்திருக்க வேண்டும். எதிர்கால மக்களின் நன்மைகளையும் இவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மக்களுக்கு நன்மை தரக் கூடிய நிறுவனங்களை உருவாக்க முயல்பவன், மனிதர்களின் சுபாவங்களையும்,ஆற்றல்களையும் கொண்டவனாக இருக்க வேண்டும். தனிமைப்பட்டு வாழும் மனிதனை சமூகத்திற்கு பயனுள்ளவனாக மாற்ற முயல வேண்டும். சட்டத்தை உருவாக்குபவர்கள் மக்கள் மீது தமது ஆதிக்கத்தை பிரயோகிக்க முயற்சிக்க கூடாது. தமது சொந்த விருப்பு வெறுப்புக்களை தாம் இயற்றும் சட்டங்களில் புகுத்திவிடக்கூடாது. மக்களை ஆளுகின்ற அதிகாரியே சட்டங்களை இயற்றுபவனாக இருக்கக் கூடாது.