கி.மு 384 ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஸ்ராகிரா (Stagira) என்னும் இடத்தில் அரிஸ்ரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு வைத்தியராகும். இவர் அளவையியல் அல்லது விஞ்ஞான முறைமைகள், உளவியல், பௌதீக விஞ்ஞானம், நெறிமுறை விஞ்ஞானம், கவிதை, உயிரியல், அரசியல் என பலதுறைகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.
பிளேட்டோ வடிவமைத்த அரசியலமைப்பு முறைகளை விமர்சனம் செய்யும் அரிஸ்ரோட்டில் அரசு ஒன்று எவ்வாறு ஆளப்படக்கூடாது என்பதற்கு ஸ்பார்டா, கிரிட் ஆகிய நகர அரசுகளை உதாரணமாகக் காட்டுகின்றார். ஸ்பார்டாவில் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. பெண்கள் ஆண்களை அடிமைகளாக வைத்திருந்தனர். ஸ்பார்ட்டாவில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்தது. பெண்களை பொது வாழ்வில் நிராகரிக்கும் அரிஸ்ரோட்டில் ஸ்பார்ட்டாவின் ஆட்சிமுறையினை ஏற்றுக் கொள்ள மறுத்திருந்தார்.
ஸ்பார்டாவில் இலஞ்சம், ஊழல் என்பன வலுவடைந்திருந்தது.. நீதிபதிகளின் வாழ்வாதராம் மிகவும் கீழ் நிலையிலிருந்தது. இதனால் இவர்கள் இலஞ்சம் பெறுபவர்களாக இருந்தனர். நாட்டின் அரசியலமைப்பு கூறும் விதிகள் ஒன்றாக இருக்க நடைமுறை வேறு ஒன்றாக இருந்தது. இவற்றினை நிராகரிக்கின்ற அரிஸ்ரோட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதுடன் ஸ்பார்ட்டாவின் ஆட்சிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் வாதிட்டுள்ளார்.
அரிஸ்ரோட்டில் அரசு பற்றிய கருத்துக்களை தனது அரசியல் எனும் நூலின் மூலம் கூறியுள்ளார். இந்நூலின் மூலம் இலட்சியரசு ஒன்றை உருவாக்க அல்லது அரசியல் தத்துவம் ஒன்றை உருவாக்க அரிஸ்ரோட்டில் முயற்சிக்கவில்லை. பதிலாக தனது காலத்தில் கிரேக்கத்திலிருந்த நகர அரசுகளின் பல்வேறு அரசியல் யாப்புக்களையும் ஆராய்ந்து அவற்றிலுள்ள குறைபாடுகளை எடுத்துக் காட்டி, அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதை விளக்கியுள்ளார். இவ்வகையில் அரிஸ்ரோட்டில் எழுதிய அரசியல் என்ற நூல் அரசியலின் முக்கியத்துவம், அரசு ஒன்றின் பகுதிகள் போன்ற விடயங்களை ஆராய்கின்றது.
2. அரசியல் யாப்பு
மனிதன் தான் வாழும் ‘அரசியல் யாப்பின்’ ஒரு பகுதியாகும். அரசியல் யாப்பிலிருந்து மனிதன்; பிரிந்து விட்டால், தனது குறிக்கோளினை அடைய முடியாது. குடும்பம், சமுதாயம் என்பன அரசியல் யாப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் பொழுதே தனது தேவைகளை அவற்றினூடாக மனிதன் பூர்த்தி செய்ய முடியும். இது தொடர்பாக கூறும் அரிஸ்ரோட்டில்
“ஒழுங்குபடுத்தலால் விலங்கினங்களுக்குள் சிறந்து விளங்கும் மனித இனம், சட்டம் என்ற ஒன்று இல்லாவிட்டால் விலங்குகளுக்குள் படுமோசமான விலங்காகி விடுகின்றான். சட்டம் என்ற ஒன்று இருக்க வேண்டுமானால் அதற்கு நாடு, அரசியல் என்பவைகள் தேவை” எனக் கூறுகின்றார்.
அரசியல் யாப்புக்களை வகைப்படுத்தியவர்களில் முன்னோடியாக அரிஸ்ரோட்டில் கருதப்படுகின்றார். அவர் அரசியல் நிறுவனங்களுக்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்களைக் கொடுக்க முயற்சித்துள்ளார். இவரின்; யாப்பு வகைப்பாடுகளில் இரண்டு பிரதான அடிப்படை பண்புகள் காணப்படுகின்றன.
-
ஆளும் அதிகாரத்தினை வைத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை
-
அரசினுடைய இலக்கு (End of the State)
அரிஸ்ரோட்டிலின் வாதத்தின்படி அதிகாரத்தினை வைத்திருக்கும் நபர்களைப் பொறுத்து அரசாங்க முறையில் ஒருவராட்சி, சிலராட்சி, பலராட்சி பண்புகள் வெளிப்படுகின்றன. இவ் ஆட்சியாளர்கள் வெளிப்படுத்தும் அதிகாரத்தின் பண்பானது சிறப்பானதாக (Good) அல்லது தீயதாக (Bad) அமையலாம். பொதுநோக்கத்திற்காக அல்லது பொதுநலனிற்காக ஆளும் அதிகாரம் பயன்படுத்தப்பட்டால் அது சிறப்பான ஆட்சியாகக் கருதப்படும். மாறாக சுயநலனிற்காக ஆளும் அதிகாரம் பயன்படுத்தப்பட்டால் அது தீமையான ஆட்சியாக கருதப்படும். இவ்வகையில் அரிஸ்ரோட்டில் அரசியல்யாப்புக்களை ஆறு வகையாக வகுத்துள்ளார். ஆறுவகை யாப்புக்களும் ஆட்சியாளர்களின் பண்புகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்பட்டன.
வகைப்பாடுகள்
|
நல்ல அல்லது உண்மையான ஆட்சிமுறை (Normal)
|
தீய அல்லது தவறான முறை (Prevented ) |
ஒருவராட்சி (One) |
முடியாட்சி (Monarchy) |
வல்லாட்சி (Tyranny) |
சிலராட்சி (Few) |
உயர்குடியாட்சி (Aristocracy) |
சிறுகுழுவாட்சி (Oligerachy) |
பலராட்சி (Many) |
மிதமான குடியாட்சி (Polity) |
மக்களாட்சி (Democracy) |
ஆரம்பகாலத்தில் தனிமனிதனொருவனின் ஆட்சியே சாத்தியமானதாக இருந்தது. இவ் ஆட்சி நீதி, நேர்மை கொண்ட மன்னராட்சியாக இருந்தது. காலப்போக்கில் மன்னனின் நேர்மையும், நீதியும் வலுவிழந்து சென்றபோது அது சர்வாதிகார ஆட்சியாக மாற்றமடைந்தது. சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்து இவ் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுடன், சிலரை ஆட்சியாளராகக் கொண்ட புதியதொரு ஆட்சி அமைக்கப்பட்டது.
சிலராட்சியில் உயர்குடியாட்சிப் பண்புகள் காணப்பட்டது. ஆரம்பத்தில் சிறப்பான ஆட்சிமுறையாக இது காணப்பட்டதுடன், காலப்போக்கில் உயர்குடியாட்சியிலிருந்து செல்வாக்குடைய பிரபுக்கள் உருவாகினர். இவர்களுடைய அதிகாரம் மேலோங்க ஊழலும், அமைதியின்மையும் கொண்ட சிறுகுழுவாட்சியாக இது மாற்றமடைந்தது. பிரபுக்களின் அதிகாரத்தின் கீழ் அடிமைப்பட்ட மக்கள் சிலராட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து இச்சிறுகுழுவாட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னர் புதிய ஆட்சி முறையாகிய பலராட்சி உருவாக்கப்பட்டது.
இப்பலராட்சியில் பலர் பங்கெடுப்பதால் இதுவொரு மிதமான குடியாட்சியாகக் காணப்பட்டது. இவ்வாட்சியில் பங்கெடுக்கும் பலர் பெரும் எண்ணிக்கையினராக மாற்றமடைந்து மக்களாட்சியாக வளர்ந்தது. மக்கள் அனைவரும் ஆளும் அதிகாரம் கொண்டவர்களாக மாறுவதை அரிஸ்ரோட்டில் விரும்பவில்லை. அறிவுடையவர்களே ஆட்சி புரிய வேண்டும் எனும் பிளேட்டோவின் சிந்தனையினால் கவரப்பட்டிருந்த அரிஸ்ரோட்டில் மக்களனைவரையும் ஆளும் தகுதியுடையவர்களாக கருதவில்லை. மக்களாட்சியில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து அராஜகத்திற்கு வழிவிடும் என அரிஸ்ரோட்டில் கூறுகின்றார்.
i. ஆளும் வர்க்கம்
அரசு மூன்று வகையான வர்க்கங்களைக் கொண்டு காணப்படும். ஆவைகளாவன பணக்கார வர்க்கம், ஏழைகள் வர்க்கம் ,நடுத்தர வர்க்கம் என்பவைகளாகும்.
பணக்கார வர்க்கத்தினர் ஆணவம், இறுமாப்பு, வன்முறை, பலம், அழகு கொண்டவர்களாக காணப்படுவார்கள். ஏழைகள் பலவீனமானவர்களாகவும், அழகு இல்லாதவர்களாகவும், தாழ்வுணர்வு, பொறாமை, வஞ்சகம் போன்ற குணாம்சங்கள் கொண்டவர்களாகவும் காணப்படுவார்கள். வறுமை இவர்களை அடிமைகளாகவும் கட்டளை இட முடியாதவர்களாகவும் ஆக்கிவிடுகின்றது. பணக்கார வர்க்கம் சட்டத்திற்கு கீழ்படியாது. ஏழைகள் சட்டத்திற்கு வளைந்து கொடுத்து செயற்படுவார்கள். இந்நிலையில் பணக்காரர்கள் அரசை ஆட்சி செய்தால் அது கொடுங்கோண்மை ஆட்சியாக (Despotic) மாற்றமடையும். அதேநேரம் ஏழைகள் ஆட்சி செய்தால் அது வெறுக்கத்தக்க அல்லது பயனற்ற (Despicable) ஆட்சியாக மாற்றமடையும். இவ்விரண்டு வர்க்கத்தில் எது ஆட்சி செய்தாலும் அரசு மோதல்களாலும் ,பொறாமையினாலும் சிதைவடைந்து விடும். இவர்களால் நண்பர்களையும், ஐக்கியத்தையும் உருவாக்க முடியாது.
எனவே ஒரு அரசு சிறப்பாக ஆட்சி செய்யப்பட வேண்டுமாயின் அது மத்திய தர வர்க்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இவ்வர்க்கம் அதிக பணம் படைத்த வர்க்கமும் அல்ல. அதேநேரம் சொத்தில்லாத ஏழைகளுமல்ல. இதனால் இவர்கள் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் சாதகமாக ஆட்சி செய்வார்கள். மத்தியதர வர்க்கமே மற்றைய இரண்டு வர்க்கத்தினரையும் சரியாகப் புரிந்து செயற்படக் கூடிய வர்க்கமாகும். மத்தியதர வர்க்கத்தினரின் ஆட்சி ஏனைய இரு வர்க்கத்தினராலும் சதி செய்யப்பட்டு கவிழ்க்கப்படமாட்டாது. ஏனெனில் பணக்கார வர்க்கமும், ஏழை வர்க்கமும் ஒரு போதும் ஒன்று சேர்வதில்லை. ஆகவே சிறப்பான ஆட்சி உருவாக வேண்டுமானால் மத்தியதர வர்க்கத்தினரிடமே ஆட்சி ஒப்படைக்கப்பட வேண்டும். இதனை அரிஸ்ரோட்டில் மிதமான குடியாட்சி (Polity) அல்லது அரசியல் யாப்பு அரசாங்கம் (Constitutional Government) என அழைக்கின்றார்.
அரிஸ்ரோட்டில் வரைவிலக்கணப்படுத்தும் மிதமான குடியாட்சி என்பது பொதுவான நலன்களுக்காக பெரும் எண்ணிக்கையிலான நிர்வாகிகள் செயற்படுவதாகும். இங்கு மத்தியதரவர்க்கத்தினர் எண்ணிக்கையில் அதிகமாக காணப்படுவார்கள். அத்துடன் ஏழைகள், பணக்காரர்களை விட பலமானவர்களாகவும் இருப்பார்கள்.
ii. புரட்சிகள்
சிலர் ஆட்சிக்கும், குடியாட்சிக்குமிடையில் ஏற்படும் மோதலின் விளைவுதான் புரட்சியாகும். மக்கள் அனைவரும் எல்லா வகையிலும் சமமானவர்கள் என்ற நிலையில் குடியாட்சி பிறக்கிறது. ஏனெனில் மனிதர்கள் பிறக்கும் போது சமமான சுதந்திரத்துடனேயே பிறக்கின்றார்கள். இதனால் இவர்கள் முழுமையான சமத்துவத்தினை கோரி நிற்கின்றார்கள்.
அதேநேரம் சிறுகுழுவாட்சி இக்கருத்தினை நிராகரிப்பதுடன் எல்லோரும் சமத்துவத்தினை கோர முடியாது. உதாரணமாக பிறக்கும் போது சமமற்ற சொத்துடமையின் வாரிசாகவே பிறக்கின்றார்கள். பின் எவ்வாறு சமத்துவத்தை கோர முடியும் என்பது இவர்களின் வாதமாகும். எனவே சில விடயங்களில் சாதாரண மக்களைவிட தாங்கள் மேன்மக்களாக சிறுகுழுவாட்சியினர் கருதுகின்றனர். இந்நிலையில் இவ்விரண்டு கொள்கைகளும் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதால் புரட்சி ஏற்படுகின்றது. சிறுகுழுவாட்சியிலுள்ள தீமையான அம்சங்களே விரைவில் புரட்சியை ஏற்படுத்தக் கூடியதாகும். இவற்றை விட புரட்சி நிகழ்வதற்கு வேறு சில காரணங்களையும் அரிஸ்ரோட்டில் முன்வைக்கின்றார்.
அந்தஸ்து, அதிகாரம் பற்றிய சிந்தனை பெருமளவில் எல்லோரிடமும் காணப்படும் பண்பாகும். தனி மனிதர்களை விட குழுக்களிடம் இப்பண்பு அதிகமாக காணப்படுகின்றது. அந்தஸ்திலும், அதிகாரத்திலும் தம்மை விட மற்றவர்கள் கூடியவர்களாக இருப்பதை சகிக்க முடியாத குழுவினர் இதனை எதிர்த்து புரட்சி செய்யலாம். அதாவது தம்மை விட குறிப்பிட்ட குழுவினர் அந்தஸ்திலும், அதிகாரத்திலும் கூடியவர்களாக இருக்கின்றனர் என மாற்றுக்குழு கருதுவதுடன் இது அநீதியானது என்ற உள்ளுணர்வு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். இந்நிலையிலும் புரட்சி தோன்றலாம்.
அரசிற்குள்ளே ஒரு குறிப்பிட்ட பகுதி பொருளாதார நிலையிலோ, அல்லது சமூக அந்தஸ்திலோ அல்லது வர்த்தகத் துறையிலோ மற்றப் பகுதியை விட மிகச் சிறந்து விளங்கலாம். இதனால் சிறப்பாக வளர்ச்சியடைந்த பகுதி தம்மை ஆக்ரமித்து விடுமோ என்ற அச்சம் ஏனைய பகுதி மக்களுக்கு ஏற்படலாம். இவ்வச்சம் சிறப்பாக வளர்ச்சியடைந்த பகுதி மக்களுக்கு எதிராக புரட்சி செய்யக் காரணமாகலாம் என அரிஸ்ரோட்டில் கூறுகின்றார். இவற்றைத் தவிர, பரம்பரையாக இருந்து வரும் பகைகள்,பல்வேறு பகுதிகள் அல்லது சமூகத்தினர் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக நடாத்தும் பேராட்டங்கள்,அரசியல்வாதிகள் வழக்கத்திலிருந்து வரும் கொள்கைகளையும், சம்பிரதாயங்களையும் சட்டத்தின் மூலம் மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றினாலும் புரட்சி ஏற்படலாம்.
3. அரசின் தோற்றம்
அரசு ஒன்றின் தோற்றம் தொடர்பாக பல கருத்துக்களை அரிஸ்ரோட்டில் முன்வைக்கின்றார். முதலில் குடும்பம் என்ற சமுதாய அமைப்புத்தான் தோன்றியிருக்க வேண்டும். குடும்பம் கிராமமாகி, கிராமம் நகரமாகி, நகரம் அரசாகியது. இப்படிமுறை வளர்ச்சியின் இறுதியில் தோற்றம் பெற்றதே அரசாகும். அரசு எல்லா நிநுவனங்களிலும் மிகவும் இயற்கையான அமைப்பாகும். அரசு தொடர்பாக அரிஸ்ரோட்டில் கூறும்போது
“அரசு இயற்கையின் படைப்பு. மனிதன் இயற்கையாகவே அரசியல் மனப்பாங்குள்ள ஜீவன். அரசு என்ற முழுப் பொருளின் அங்கமே மனிதன். அதிலிருந்து அவன் தனியே பிரிந்து விட்டால் அவனுக்குத் தன்னிறைவு கிடையாது. இவ்வாறு இல்லாமல் சமுதாயத்தில் வாழமுடியாதவன் அல்லது தனி வாழ்வில் தன்னிறைவு பெற்றிருப்பவன் மனிதனல்ல. அவன் அரசியலின் ஒரு பகுதியுமல்ல. அவன் கடவுளோ, மிருகமோ தான்”. எனக் கூறுகின்றார்.
அரசியல் சமுதாயத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்கு அதன் அங்கங்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அரசியல் சமுதாயத்தின் அங்கங்கள் குடும்பங்களாகும். குடும்பத்தின் அங்கங்கள் கணவன்,மனைவி, பெற்றோர், பிள்ளைகள், அடிமைகள் என்பவைகளாகும்.
i. குடும்பம்
குடும்ப உறவு தொடர்பாக அரிஸ்ரோட்டில் பல கருத்துக்களைக் கூறியுள்ளார். ஆணைவிட பெண் தாழ்ந்தவள். எஜமானனுக்கு இருக்கும் அடிமையைப் போன்று ஆணுக்குப் பெண் அடிமையாக இருக்க வேண்டும். உயிரினங்களைத் தர வரிசைப்படுத்தும் போது ஆணுக்கு அடுத்த நிலையிலேயே பெண்ணை நிலைநிறுத்து முடியும். உலக இயக்கங்களுக்கான அடிப்படையினை கொடுப்பவன் ஆணேயாகும். ஆண் ஒருவனை ஏற்றுக் கொள்ளும் பண்புடையவள் தான்; பெண். இது தொடர்பாக கூறும் அரிஸ்ரோட்டில்
“ பிளேட்டோ குடியரசு என்னும் நூலில் கூறுவதைப் போன்று பெண்ணையும் ஆணைப் போல் வளர்த்தால் அது அனர்த்தத்தையே விளைவிக்கும். ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற்றுமைகள் பரந்து இருக்க வேண்டும். அது தான் அழகு. ஆணுக்கும் பெண்ணுக்கும் துணிவு ஒன்று தான் என சாக்ரட்டிஸ் கூறுவது தவறு. ஆணின் தைரியம் அவன் இடும் கட்டளையிலேயே தங்கியுள்ளது. பெண்ணின் தைரியமோ அதற்குக் கீழ்படிவதிலேயே தங்கியுள்ளது. மௌனமாக இருத்தலே பெண்ணிற்குப் பெருமையாகும்” எனக் கூறுகின்றார்.
ஆண்கள் 37 வயது வரை திருமணம் செய்யக் கூடாது. 37 வயதின் பின்னர் 20 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும். இவ் வயது வேறுபாடு இருந்தால் தான் பெண்ணை அடக்கியாளமுடியும். அத்துடன் இவ்வயது வேறுபாடு உடல் நலத்திற்கும், சந்ததி விருத்திக்கும் அவசியமானதாகும். அன்பை விட உடல்நலமே பெரிதாகும்.
ஆனால் இவ்விடயங்கள் தொடர்பாக தீர்மானிக்கும் உரிமை இளைஞர்களுக்கு கிடையாது. இளைஞர்களின் திருமண வயது எது?, எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்வது? போன்ற விடயங்களை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். சனத்தொகை அதிகரிப்பினை கட்டுப்படுத்த வேணடிய தேவை ஏற்படின் பிறந்த பின் கொல்லப்படுவதை விட கருவிலேயே சிதைத்து விட வேண்டும்.
பிளேட்டோ ஆளும் வர்க்கத்தினருக்கான பொதுவுடமைக் குடும்பத்தை உருவாக்கியுள்ளார். பிளேட்டோவின் கருத்துப்படி ஆளும் வர்க்கத்தினருக்கு தனிப்பட்ட வீடோ, சொத்தோ, மனைவியோ, குழந்தைகளோ இருக்கக் கூடாது. ஆளும் வர்க்கத்தினர் அனைவரும் ஒரே உணவை உண்டு ஒரே இடத்தில் உறங்க வேண்டும். அவர்களுக்குத் தனிப்பட்ட குடும்பம் என்ற ஒன்று இருக்கக் கூடாது.
பொதுநல சமுதாயத்தின் மீது அவர்களின் அன்பும், அக்கறையும் குறையாது இருக்க வேண்டுமாயின் ஆளும்வர்க்கத்தினர் தனிப்பட்ட பெண்கள் மீதோ, குழந்தைகள் மீதோ அன்பு வைக்கக் கூடாது. ஆளும் வர்க்கத்தினர் அனைவருக்கும் மனைவிகள் பொதுவுடமையாகும். ஆனால் இதற்காக விரும்பியபடி இனவிருத்தி செய்யக்கூடாது. அரசாங்க மருத்துவர்களின் பராமரிப்பின் கீழ் அவர்கள் கொடுக்கும் திகதிகளில் மாத்திரமே இனவிருத்தியில் ஈடுபட வேண்டும். குழந்தை பிறந்ததும் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு பொதுநிலையம் ஒன்றில் வளர்க்கப்படும். ஆளும் வர்க்கத்தினரை திருமணம் செய்யும் பெண்கள் ஆளும்வர்க்கத்தினர் அனைவருக்கும் மனைவிகளாகிக் குழந்தைகளைப் பெற்றுப் பொதுவாக வளர்க்க வேண்டும். ஆளும்வர்க்கத்தினரின் ஒவ்வொரு மூத்த ஆண்மகனும் தகப்பன் அல்லது சகோதரன் ஆகும். அதேபோல் ஒவ்வொரு மூத்த பெண்ணும் தாய் அல்லது சகோதரியாகும்.
பிளேட்டோவின் இக்கருத்தினை அரிஸ்ரோட்டில் முழுமையாக நிராகரிக்கின்றார். எல்லோரும் தந்தை அல்லது சகோதரன் என்ற பொதுமைக் கருத்தானது இயற்கைக்கு முரணானதாகும். இதன்மூலம் உண்மையான தாய்,தந்தை, சகோதரன்,சகோதரி அன்பு உருவாக முடியாது. இது தொடர்பாக கூறும் போது
“ஒரு பொருள் நம்முடையது என்ற உண்மையும் அது நம்மிடத்தில் உண்மையான அன்பைத் தோற்றிவிக்கிறது என்ற உணர்வும் தான் மக்களிடத்தில் அன்பையும் அக்கறையையும், தோற்றிவிக்கின்றன. எனது என்ற உணர்ச்சி இல்லாத போது அன்பே இல்லாது போய்விடும். எல்லாம் நமது என்ற போலியான உணர்வே ஏற்படும்”என்கின்றார்.
ii. அடிமை
சமுதாயத்தில் எஜமான் – அடிமை உறவு பிரதானமான அலகாக இருக்க வேண்டும். சமுதாயத்தில் சிலர் அடிமைகளாக இருக்க வேண்டியது இயற்கையின் நியதியாகும். சிலர் பிறக்கும் போதே அறிவுத்திறனற்றவர்களாகவும், சுயமாக வாழத் தெரியாதவர்களாகவும் பிறந்து விடுகின்றார்கள். இவர்களுக்கு அறிவூட்டி, விழிப்படைய வைப்பது வீண்நேரவிரயமாகும். பதிலாக ஏனையவர்கள் இவர்களை அடக்கி ஆட்சி செய்து என்ன தொழிலை, எப்போது செய்ய வேண்டும் என்று ஆணையிட வேண்டும்.
அறிவுத்திறனுடன் பிறந்தவர்கள் ஆளப் பிறந்தவர்கள். இவர்கள் அறிவற்றவர்களை தமது உடமைகளாகக் கருதி அவர்களிடமிருந்து வேலை வாங்கி அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அதுவே நீதியுமாகும். வீட்டு மிருகங்களை மனிதன் தனது உடமைகளாகக் கருதி காப்பாற்றுவது போன்று அடிமைகளை எஜமான் உடமையாகக் கருதி பாதுகாக்க வேண்டும். அடிமை உயிருள்ள இயந்திரமாக செயற்பட வேண்டும்.
இயற்கையாகவே ஆளப்படுவதற்காகப் பிறந்தவர்கள் பணிய மறுத்தால் அவர்கள் மீது போர் தொடுப்பதே நியாயமானதாகும். இப்போரில் இவர்கள் தோற்றுவிட்டால் அவர்களை அடிமைகளாக்கிக் கொள்வது நீதிக்குப் புறம்பானதல்ல. எனவே இயற்கையின் நியதி என்ன என்பதை யுத்தமே தீர்மானிக்க வேண்டும்.
“ஒருமைப்பாடு எந்தளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அந்தளவிற்கு அது நாட்டிற்கு நல்லது” என்ற பிளேட்டோவின் கருத்தினை அரிஸ்ரோட்டில் நிராகரிக்கின்றார். “ஒருமைப்பாடு ஓரளவிற்கு மேல் மிஞ்சினால் தீமையே ஏற்படும்.ஏனெனில் அது இயற்கையின் நியதிக்கு முரணானதாகும்” என அரிஸ்ரோட்டில் கூறுகின்றார். வேற்றுமை இயற்கையின் நியதி. இதனை மாற்றியமைப்பது இயற்கையுடன் முரண்படுவதற்குச் சமமானதாகும். எனவே ஒருமைப்பாடு பற்றி விவாதிப்பது சமூகத்திற்கு நன்மையளிக்கும் என்பதை விட தீமையையே விளைவிக்கும்.
பிளேட்டோ கூறும் “இலட்சியரசு” என்பதை அரிஸ்ரோட்டில் விமர்சனம் செய்கின்றார். தனிமனிதர்களின் சுதந்திரம், திறமை, தரவேறுபாட்டின் அவசியம் என்பவற்றில் அரிஸ்ரோட்டில் நம்பிக்கை கொண்டவராகும். இந்நிலையில் சட்டங்களையும், காலங்காலமாக நடைமுறையில் இருந்து வரும் விதிகளையும் திடீரென மாற்றியமைப்பதால் தீமையே ஏற்படும்.
iii. பொருளாதாரம்
அரசு ஒன்றில் பொருளாதாரத்தின் வகிபங்கு தொடர்பாக அரிஸ்ரோட்டில் கூறுகின்றார். தனியார் சொத்துடைமையினை அரிஸ்ரோட்டில் ஆதரித்துள்ளார். ஒருவன் எந்தத் தொழிலை திறம்பட செய்ய முடியுமோ அதனைச் செய்வதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். தனது தொழிலை திறமையாக நடத்துவதற்கு அவனுக்கு மூலதனம் தேவை. எனவே சொத்து வைத்திருப்பது இயற்கையின் நியதியாகும். சொத்துக்களைச் சேர்த்தல் என்பது நிலங்களைச் சரிவரக் கவனித்து வருவதன் மூலம் கிடைக்கும் வருவாய்களாகும். இது தொடர்பாக அரிஸ்ரோட்டில் கூறும் போது
“விலங்கினங்களுக்கு உணவு தேடும் உணர்ச்சி இருப்பது எவ்வளவு இயற்கையானதோ அதேயளவிற்கு மனிதர்களின் சொத்து சேர்ப்பதற்கான உணர்ச்சியும் இயற்கையானதாகும். ஒரு அரசிலுள்ள வீடுகளில் பயன்படுத்துவதற்குரிய கருவியே சொத்தாகும்” என்கின்றார்.
வர்த்தகம் செய்து சொத்துக்களை சேகரிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது இயற்கைக்கு முரணானதாகும். எனவே இது வெறுக்கப்பட வேண்டும்.
இதனைவிட வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிப்பது மேலும் இயற்கைக்கு முரணானதாகும். ஏனெனில் பணம், பொருளை கொள்வனவு செய்யவும், விற்பனை செய்யவும் பயன்படும் கருவியேயன்றி அது தன்னைத் தானே வளர்ப்பதற்கு பயன்படும் கருவியல்ல. சொத்துச் சேகரிக்கும் வழிமுறைகள் யாவற்றிலும் இயற்கைக்கு முரணானது இதுவாகும்.
சொத்துக்கள் யாவும் எல்லோருக்கும் சொந்தமாக இருக்கும் நிலை இருக்குமானால் அதன் மீது யாரும் கவனம் செலுத்தமாட்டார்கள். இலாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்க்கை இருந்தால்தான் உழைப்பில் அக்கறை ஏற்படும். இது தொடர்பாக அரிஸ்ரோட்டில் கூறும் போது
“இலட்சியரசு பற்றிய கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் மக்கள் எளிதில் செவிசாய்க்கின்றார்கள். அனைவரும் அனைவருக்கும் நண்பர்களாகி விடுவார்கள் என்பதை நம்புகின்றார்கள். அதிலும் ஒருவன் தற்போதைய சமுதாயத் தீமைகளை எடுத்துக் கூறும் போது இந்நம்பிக்கை பலப்படுகின்றது. அத்தகைய தீமைகளுக்கு காரணம் தனிப்பட்டோர் சொத்து உரிமையே என்று கூறப்படுகின்றது. ஆயினும் உண்மை அதுவல்ல. மனிதனின் தீய இயல்புகளே சமுதாயத்தில் காணும் தீமைகளுக்கு அடிப்படை” என்று கூறுகின்றார்.
iv. பிரஜாவுரிமை
அரசின் நிர்வாகப் பொறுப்பில் பங்கு ஏற்கக் கூடிய அதிகாரம் கொண்டவர்கள் அந்த அரசின் பிரஜைகளாகும். பெண்களுக்கும், அடிமைகளுக்கும் அரசில் பிரஜாவுரிமையும், வாக்களிக்கும் உரிமையும் கிடையாது. எனவே இவர்கள் பொதுவாழ்விலும், அரசியலிலும் இவர்களுக்கு இடம் கிடையாது. இவர்கள் இருசாராரும் தமக்கென ஒரு கருத்தினை உருவாக்க முடியாதவர்களாகும். எனவே இவர்களுக்கு அரசில் பங்கு கொடுக்கத் தேவையில்லை.
இவர்களை விட சொத்தில்லாத ஏழைகளுக்கும் பிரஜாவுரிமை வழங்கக் கூடாது. இவர்கள் நாளாந்தம் தமது உணவிற்காக ஏங்குபவர்கள். இவர்களால் ஓய்வாக இருந்து சிந்தித்துச் செயற்பட முடியாது. இவர்கள் அரசில் பங்கேற்பதால் இவர்களுக்கும், அரசிற்கும் எவ்வித இலாபமும் இல்லை.
மேலும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பிரஜாவுரிமை வழங்கக் கூடாது. ஏனெனில் இவர்கள் செய்யும் தொழில் நல்வாழ்விற்கு ஏற்றதல்ல. எனவே பெண்கள், அடிமைகள், சொத்தில்லாதோர், வர்த்தகர்கள், தொழிலாளிகள், தவிர்ந்த ஏனையோர் நாட்டின் பிரஜைகளாகத் தகுதியுள்ளவர்களாகும். இவர்கள் சட்டங்கள் இயற்றவும் நீதி வழங்கவும், நிர்வாகம் செய்யவும், உரிமை உடையவர்களாகும்.
v மாதிரி அரசு
மாதிரி அரசு (Model State) ஒன்று எவ்வாறு உருவாக வேண்டும் என்பது தொடர்பாக அரிஸ்ரோட்டில் கருத்துக் கூறியுள்ளார். நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் பொருளாதாரவளம் அரசுகளில் இருக்க வேண்டும். சமுதாயத்தில் சகல விடயங்களினையும் நிர்வகிக்க கூடிய வகையில் அளவான சனத்தொகை இருக்க வேண்டும். அரசு ஒன்றின் எல்லையை நிர்ணயம் செய்த பின்னர் அதில் வாழக் கூடிய மக்கள் தொகையினை அரிஸ்ரோட்டில் தீர்மானிக்கின்றார். பொதுவாக ஒரு அரசின் சனத்தொகையானது அதன் வளத்தையும், அது அமைந்திருக்கும் இருப்பிடத்தையும் பொறுத்ததாகும். ஆயினும் ஓர் அரசில் 10,000 மக்களுக்கு மேல் வாழ்வது பொருத்தமானதல்ல.
மிகப் பெரிய அரசுகளாக இருந்தால் அவற்றை ஆட்சி செய்வது மிகவும் கடினமாகும். ஆனால் பொருளாதார தன்னிறைவு பெற்றிருப்பதற்கு ஏற்ப அவை பெரிதாக இருக்க வேண்டும். பெரிய அரசாக இருந்தால் மக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளமுடியாது. மக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மிகவும் சிறியதாகவும் இருக்கக் கூடாது. “ஒரு குன்றின் மீது ஏறிப் பார்த்தால் அரசு முழுவதும் தெரிய வேண்டும்”அதுதான் அரசிற்கான சிறந்த அளவு என அரிஸ்ரோட்டில் கூறுகின்றார்.
அதேநேரம் தற்பாதுகாப்புக்கு ஏற்ற அளவாகவும் இருக்க வேண்டும். எதிரிகள் படை எடுத்து வந்தால் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இது போர் முறைகளையும், மக்களின் போர் திறன்களையும் பொறுத்தாகும். போரிடுவது ஒரு அரசின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. அடிமை வாழ்வுக்கென்று பிறந்தவர்களை வெற்றி கொண்டு அவர்களை அடிமைப்படுத்தி வாழ்வது தான் உண்மையான போர்.
மக்கள் திருப்தியாக வாழும் வகையில் போக்குவரத்து, தற்பாதுகாப்பு கொண்ட எல்லைகள் என்பன இருக்க வேண்டும். கடல் சார்ந்த வியாபாரம் செய்வதற்கு ஏற்ற துறைமுகங்கள் அமைக்கப்பட வேண்டும். உடல், மனம் சிறப்பாக இருக்கக் கூடிய காலநிலை இருக்க வேண்டும். இவற்றைவிட பல்வேறு துறைகளிலும் பயிற்சி பெற்ற மக்கள் நாட்டில் இருக்க வேண்டும். ஆகவே “மக்கள் மிகச் சிறந்த வாழ்க்கை நடாத்த வாய்ப்பளிப்பதுதான் சிறந்த அரசியல்” என்பது அரிஸ்ரோட்டிலின் கருத்தாகும்.
vi அரசின் குறிக்கோள்
அரசாங்கத்தின் முக்கியமான கடமை கல்வித் திட்டத்தினை வகுத்து அதற்கு ஏற்ப மக்களுக்கு கல்வியறிவூட்டுவதாகும். மக்களுக்கு அவர்கள் வாழும் அரசியல் முறைமைக்கு ஏற்ப கல்வியளித்தால் தான் அரசியலமைப்பு நிலைத்து நிற்கமுடியும். பொதுக் கல்வி நிலையமொன்றை உருவாக்கி பிள்ளைகள் அனைவருக்கும் கல்வி அறிவூட்ட வேண்டும். பிள்ளைகளுக்கு நற்பண்பு போதிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்யும் போது நாளடைவில் நற்பண்புகள் வளர்ந்து நற்செயல்களை மேற்கொள்ளத் தொடங்குவர். இவர்கள் பின்னர் நற்பிரசைகளாகி ஆட்சியை அமைக்கும் தகுதி பெற்றுவிடுவார்கள். இது தொடர்பாக அரிஸ்ரோட்டில் கூறும் போது
“மனிதன் பிறக்கும் போது அறிவாற்றலுடன் பிறக்கின்றான். தீயவழிகளில் அதை அவன் பயன்படுத்தினால் முடிவு மிகுந்த விபரீதமாக இருக்கும். நற்பண்புகள் இல்லாவிடில் மனிதன் மிகுந்த மூர்க்கமானதொரு மிருகம் தான். அதாவது பேராசையும், காமமும் கொண்ட மிருகம். சமுதாயக் கட்டுப்பாடு தான் அவனுக்கு நற்பண்புகளை அளிக்கமுடியும் என்கின்றார்.
பொதுக்கல்வி நிலையத்தில் பிள்ளைகளுக்கு கல்வி போதிக்கும் போது அங்கும் தர நிர்ணயத்தினை அரிஸ்ரோட்டில் விதிக்கின்றார். யார் யார் அரசு ஒன்றின் பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்களோ அவர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் தான் கல்வி போதிக்கப்பட வேண்டும். அடிமைகள், தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு, அவர்களுக்கு பயன்தரக் கூடிய தொழிற் கல்வியை மாத்திரம் கற்பிக்கலாம். இக்கல்வியானது கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்படக்கூடாது. அரிஸ்ரோட்டிலின் கல்விக் கொள்கைகள் பிளேட்டோவின் கல்விக் கொள்கைகளுக்கு எதிரானதாகவே காணப்படுகின்றது.