யுத்தம்

மனித வரலற்றில் யுத்தம் இல்லாத காலப்பகுதியை அடையாளப்படுத்த முடியாது. பல்மர்,பெர்கின்ஸ் (Palmer and Perkins) ஆகியோர் “யுத்தத்தின் பயங்கரத்தினை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தேவையற்றது. யுத்தம் எண்ணற்றோரின் வாழ்க்கையினை அழித்து ஒழித்திருப்பதுடன்,சாதாரண வாழ்க்கை சாத்தியமற்றது என்ற எண்ணத்தினையும்,மனிதன் இப்ப10மியில் வாழ்வது ஆபத்தானது என்ற எண்ணத்தினையும் உருவாக்குகின்றது. இது சர்வதேச சமூகத்தின் சாபக்கேடாகும். இது தேசிய அரச முறைமைக்கேயுரியதாகும்” எனக் கூறுகின்றனர். யுத்தம் அதிகாரத்தினை முழுமையாகத் தீர்மானிக்கும் நீதிபதியாகும். இதனால் இது சர்வதேச அரசியலில் ஆதிக்கமுடைய வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றது. சர்வதேச அரசியலுக்குள் உச்ச அதிகாரமானது எப்போதும் மறைந்திருந்தே வருகின்றது. மனித வரலாறு யுத்தத்தினால் நிறைந்ததாகும். யுத்தமும், சமாதானமற்ற வாழ்க்கையுமே நாகரீகமடைந்த மானிட சமுதாயத்தின் இயல்பாகவுள்ளது. சமாதானம் என்பது எப்போதும் சமூக வாழ்க்கைக்குப் புறநடையாகவே உள்ளது. முதலாம் உலக யுத்தம் எதிர்காலத்தில் யுத்தம் சாத்தியமல்ல என்ற நிலையினையும், உலக அரங்கில் ஜனநாயகத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையினையும் தோற்றுவித்திருந்தது. இரண்டாம் உலகப் போர் நாசிசம், மற்றும் சோசலிசம் போன்ற சித்தாந்தங்களிலிருந்து மனிதத்துவத்தினை பாதுகாப்பதற்கான யுத்தமாக இருந்தது. இவ் இரண்டு யுத்தங்களும் இருபதாம் நூற்றாண்டில் அணு ஆயுதத்தினால் ஏற்படக்கூடிய பயங்கரத்தினை உலகிற்கு உணர்த்தியுமிருந்தது. ஆயினும், யுத்தத்திற்கான சூழ்நிலை உலகளவில் குறைந்திருக்கவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மட்டுப்படுத்தப்பட்டளவில் பல எண்ணிக்கையிலான யுத்தங்கள் நடைபெற்றன.

ஒவ்வொரு அரசுகளும் தமது தேசிய நலனைப் பேணவே விரும்புகின்றன. இதனால் ஏனைய அரசுகளுடன் மோதல்களில் ஈடுபட விரும்புகின்றன. இம்மோதல்களில் வெற்றி பெறுவதற்குப் பலத்தினைப் பயன்படுத்தவும், இதன் மூலம் தமது நோக்கங்களை அடையவும் முயற்சி;க்கின்றன. தேசிய நலனைப் பூர்த்தி செய்வதற்குரிய அதிகாரங்களை ஒவ்வொரு அரசும் கொண்டிருப்பதுடன், யுத்தமும், யுத்தத் தளபாடங்களும் அதிகாரத்தினை தீர்மானிப்பதில் முதன்மையான இடத்தினைப் பெற்றுள்ளன. தேசிய நலனை அடைந்து கொள்வதற்காக அரசுகள் பயன்படுத்தும் வழிமுறைகள் அனைத்தும் தோல்வியடைகின்ற போது யுத்தம் மாற்றுவழியாகக் கருதப்படுகின்றது. சந்தேகமின்றி;த் தேசிய நலனை அரசுகள் அடைந்து கொள்வதற்கு அரசுகள் பயன்படுத்தும் இறுதி வழிமுறை யுத்தம் எனலாம். எனவே யுத்தம் அரசமுறையில் முடிவற்றதொன்றகவுள்ளதுடன், சர்வதேச வாழ்க்கையின் யதார்த்தமாகவுமுள்ளது. குயின்சி ரைட் (Quincy Wright) ‘யுத்தக் கல்வி’ (A Study of War) என்னும் நூலில் வரலாற்றினூடாக எவ்வகையான யுத்தங்கள் நடைபெற்றுள்ளன என்பதற்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டுகின்றார். 1960 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூலில் மானிட வரலாற்றில் 14,513 யுத்தங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது வருடத்திற்கு 2.6% யுத்தம் நடைபெற்றுள்ளது. ரசல் பேகர் (Russell Baker) மனித வரலாற்றில் 34571 யுத்தம் நடைபெற்றுள்ளதாக 1962 ஆம் ஆண்டில் குறிப்பிட்டுள்ளார். பல்மர் பெர்கின்ஸ் (Palmer and Perkins) 1945 ஆம் ஆண்டிற்கும் 1965 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் 40 யுத்தங்கள் நடைபெற்றுள்ளதை எடுத்துக் கூறுகின்றார்.

வரைவிலக்கணம்

கொப்மன் நிக்கர்சன் (Hoffman Nickerson) யுத்தம் என்பது “முரண்பாடான இரண்டு அரசியலைப் பின்பற்றுகின்ற மனிதக் குழுக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட பலத்தினைப் பிரயோகித்தலாகும். இவ் இரண்டு குழுக்களும் ஒருவர் மீது மற்றொருவர் தத்தமது கொள்கைகளைத் திணிக்க விரும்புவார்கள்” எனக் கூறுகின்றனர். குயின்சி ரைட் (Quincy Wright) யுத்தம் என்பது “சமநிலை கொண்ட இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பகைமையுணர்வு கொண்ட குழுக்கள் சட்ட விதிமுறைக்குட்பட்டு ஆயுதம் தரித்து மோதுவதே யுத்தமாகும்” எனக் கூறுகின்றார். மலினோஸ்கி (Malinowski) யுத்தம் என்பது “தேசிய அல்லது குலமரபுக் கொள்கைகளைப் பின்பற்றவைப்பதற்கு சுதந்திரமான இரண்டு அரசியல் குழுக்கள் ஆயுத மோதலில் ஈடுபடுவதே யுத்தமாகும்” எனக் கூறுகின்றார். கால் வொன் க்களாஸ்விற்ஸ் (Karl Von Clausewitz) “யுத்தம் என்பது அரசியல் தொடர்பின் ஒரு பகுதியாகும். ஆகவே யுத்தத்திற்கு சுதந்திரமான பொருள் கிடையாது. யுத்தத்தினை அரசியலுடன் கலக்கின்ற போதுதான் அது அர்த்தமுடையதாகின்றது” எனக் கூறுகின்றார். றேமன்ட் அரோன் (Raymond Aron) “யுத்தம் என்பது ஒரு அரசியல் செயல். இது அரசியல் சூழ்நிலைகளாலும் அரசியல் தூண்டுதலினாலும் எழுச்சியடைகின்றது” எனக் கூறுகின்றார். ஒபன்ஹிம் (Oppenheim) யுத்தம் என்பது “இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசுகளுக்கிடையில் ஆயுதப்படைக@டாக நிகழும் சச்சரவாகும். ஒவ்வொரு அரசும் தமது அதிகாரத்தினை ஒருவர் மீது ஒருவர் திணிப்பதற்கு முயற்சிக்கும்” எனக் கூறுகின்றார்.

யுத்தமானது பகைமையுணர்வுச் செயற்பாடாகும். ஆனால் ஒவ்வொரு பகைமையுணர்வுச் செயற்பாடும் யுத்தமாக மாறுவதில்லை. அரசுகள் தமக்கிடையில் ஏற்படும் சில தகராறுகளைச் சமாதானமாகத் தீர்க்கத் தவறும் போது அதற்கான தீர்வினை அடைவதற்குக் கட்டாயப்படுத்தப்படுகின்றன. தகராறுகளுக்கான தீர்வினை அடைவதற்கு ஏற்படுத்தப்படும் நிர்ப்பந்தங்கள் யுத்தங்களை ஏற்படுத்துகின்றன. சுருக்கமாகக் கூறுவதாயின் யுத்தம் ஒவ்வொரு வகையான பகைமையுணர்வினையும் உள்ளடக்கியுள்ளது. மறுபக்கத்தில் ஆயுத மோதல்களை மாத்திரம் “யுத்தம் என அழைப்பதில்லை. ‘கெடுபிடி யுத்தம், பரப்புரை யுத்தம், பொருளாதார யுத்தம்’ போன்றவைகளும் யுத்தங்களாகவே அழைக்கப்படுகின்றன. இவைகளும் பகைமையுணர்வின் அடிப்படையிலேயே தோன்றுகின்றன. இவ்வாறான யுத்தங்கள் சிலவேளை ஆயுத மோதல்களை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்படுத்தாது விடலாம்.

சர்வதேசச் சட்டம் பகைமை உணர்வு கொண்ட குழுக்கள் ஆயுதம் தரித்து மோதலில் ஈடுபடுவதை அனுமதிக்கின்றது. ஒருதலைபட்சமாக ஒரு அரசு பகைமை கொண்ட பிரிதொரு அரசு மீது படையெடுப்பதை யுத்தமாகக் கருத முடியாது. பதிலாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பகைமை உணர்வு கொண்ட அரசுகள் ஆயுத பலத்துடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிடுதலே யுத்தமாகும். இவ்வாறான யுத்தங்களே சட்டரீதியான அந்தஸ்த்தினைப் பெறுகின்றன. ஒரு அரசு மீது பிற அரசுகள் மேற்கொள்ளும் ஆயுத ரீதியான தலையீடுகள் சட்டரீதியானவைகளல்ல. எனவே இவைகள் யுத்தமாகக் கருதப்படுபவைகளல்ல. யுத்தங்கள் சட்டரீதியானவைகளாக இருக்க வேண்டுமாயின் யுத்தத்தில் ஈடுபடுகின்ற அரசு அல்லது அரசுகள் தமக்கிடையிலான மோதலைத் தீர்ப்பதற்கு யுத்தம் அவசியமானது எனக் கருதுவதுடன், யுத்தத்தினை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தவும் வேண்டும்.

யுத்தத்திற்கான காரணங்கள்

யுத்தத்திற்கான காரணங்கள் தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யுத்தம் பொதுவானதா? அல்லது குறிப்பிட்ட விடயங்களுக்காக நிகழ்கின்றதா? என்ற வினாக்கள் எழுப்பப்படுகின்றது. இவ்வினாக்களிற்கான முடிவுகளை கூறுவதில் ஆய்வாளர்களுக்கிடையே முரண்பாடான கருத்துக்கள் காணப்படுகின்றது. ஒவ்வொரு யுத்தமும் உடனடிக் காரணங்களைக் கொண்டே நிகழ்கின்றன. ஆனால் யுத்தம் ஒரு காரணத்தினை மட்டும் கொண்டு நிகழ்வதி;ல்லை. உண்;மையில் ஒவ்வொரு யுத்தமும் பல காரணங்களால் ஏற்பட்டாலும் யுத்தத்திற்கான தனிப்பட்ட உடனடிக் காரணங்கள் கண்டறியப்படுகின்றன. குயின்சி ரைட் என்பவரின் கருத்துப்படி, இவ் எல்லா விடயங்களும் யுத்தத்திற்கு அடிப்படைக் காரணங்களாவதுடன் பரஸ்பரத் தகராறுகளைத் தீர்ப்பதற்குப் பலப் பிரயோகமும் நிகழ்ந்து விடுகின்றது. முதலாம் உலகப் போர் நிகழ்வதற்கான உடனடிக் காரணம் ஆஸ்திரியாவிற்கும், கங்கேரிக்கும் இடையிலான தகராறுகளேயாகும். ஆனால் யுத்தத்திற்கான அடிப்படைக் காரணம் பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இருந்த அதிகாரச் சமநிலையினைச் சமப்படுத்துவதிலிருந்த விருப்பமும், ஜேர்மனியின் விஸ்தரிப்புவாதக் கொள்கையுமாகும். இதேபோன்று இரண்டாம் உலகப் பேரின்போது ஐக்கிய அமெரிக்கா யுத்தத்தில் பங்குபற்றுவதற்கு யப்பான் பேர்ல் (Pearl) துறைமுகத்தினைத் தாக்கியமை உடனடிக் காரணமாக இருந்தது. ஆனால் நீண்ட காலமாக யப்பானின் விஸ்தரிப்புவாதக் கொள்கையினால் ஐக்கிய அமெரிக்கா அச்சம் கொண்டிருந்தது. உண்மையில் யப்பானின் விஸ்தரிப்புவாதக் கொள்கையினைத் தடுத்து நிறுத்துவதே ஐக்கிய அமெரிக்கா யுத்தத்தில் பங்குபற்றியமைக்குக் காரணமாகும். எக்காரணத்தினால் யுத்தம் நிகழ்கின்றது என்பதைத் தெளிவாக கூறுவது கடினமானது என கல்வியலாளர்கள் கூறுகின்றார்கள். 1925 ஆம் ஆண்டு ‘யுத்தத்திற்கான காரணங்களும் குணப்படுத்தலும்’ (Cause and Cure of War) என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மகாநாட்டின் முடிவில்; அரசியல், பொருளாதார, சமூக, உளவியல் காரணங்கள் என்ற தலைப்புக்களின் கீழ் யுத்தத்திற்கான 250 காரணங்கள் வெளியிடப்பட்டன. குயின்சி ரைட் யுத்தம் “அரசியல், தொழில்நுட்ப, சித்தாந்த, சமூக – சமய, உள, பொருளாதாரக் காரணங்களால் ஏற்படுகின்றது எனக் கூறுகின்றார். ரெல் ஏ. ரர்ணர் (Tell A. Turner) எழுதிய “யுத்தத்திற்கான காரணங்களும், புதிய புரட்சியும்” (The Cause of War and the New Revolution) என்ற நூலில் பொருளாதாரம், இயக்கவியல், சமயம், உணர்ச்சிகள் என்ற நான்கு தலைப்புக்களின் கீழ் யுத்தத்திற்கான 41 வகையான காரணங்களைக் கூறுகின்றார். சார்ல்ஸ் கொட்ஜ்ஸ் (Charles Hodges) என்பவர் சமூகம், அரசியல், தந்திரோபாயம், பொருளாதாரம் ஆகிய நான்கு தலைப்புக்களின் கீழ் யுத்தத்திற்கான 21 வகையான காரணங்களைக் கூறுகின்றார். எனவே யுத்தத்திற்கான காரணங்களைத் தொகுத்து பின்வரும் தலைப்புக்களின் கீழ் அடையாளப்படுத்தலாம்.

உளவியல் காரணங்கள்:-

மனிதன் இயல்பிலேயே சண்டையிடும் உள்ளுணர்வு கொண்டவனாகும். இச்சண்டையிடும் உள்ளுணர்வு ஆதிக்கம் செலுத்தும் உணர்வாக வளர்ச்சியடைகின்றது. இவ் இயல்பான தன்மை சில உளவியல் தனித்தன்மையினை மனிதனுக்கு உருவாக்குகின்றதுடன், யுத்த நடத்தையில் விருப்பத்தினையும் உருவாக்குகின்றது. மனிதனிடம் சுயநலம், ஆக்கிரமிப்பு உணர்வு என்பன காணப்படுகின்றன. இம்மனித உணர்வுகள் மாற்றமடையாமல் யுத்தத்தினைத்; தடுக்க முடியாது. மறுபக்கத்தில் சில ஆய்வாளர்கள் மனிதர்கள் சண்டையிடும் உள்ளுணர்வு கொண்டவர்கள் என்பதை நிராகரிக்கின்றார்கள். யுத்த உணர்வு மனிதர்களுடன் உடன்பிறந்ததுமல்ல. அரசியல்வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும் பரப்புரையின் மூலம் யுத்த உணர்வுகள் தூண்டப்படுகின்றன. எனவே தலைவர்கள்தான் யுத்தத்திற்கு காரணமாகும். இவர்களே ஆயுத மோதல்களுக்கு மக்களைத் தயார்படுத்துகின்றார்கள். எதிர்பார்ப்புக்களே மக்களின் நடத்தைகளைத் தீர்மானிக்கின்றது. யுத்தத்திற்கான காரணங்களைத் தெரிவு செய்வதில் எவ்வித அரசுகளும் விருப்பம் கொள்வதில்லை. ஆனால் யுத்தத்திற்குச் செல்வதற்கான கட்டாயத்தினைச் சூழ்நிலைகளே வழங்குகின்றன.

பொருளாதாரக் காரணங்கள்:-

பெருமளவிற்கு யுத்தத்திற்கான காரணமாகப் பொருளாதாரமே காணப்படுகின்றது. முதலாளித்துவமும், அதனது உபரி உற்பத்திகளும் யுத்தத்தினைத் தவிர்க்க முடியாததாக்குகின்றது என மாக்சிசவாதிகள் நம்புகின்றார்கள். தொழில்மயவாக்கம் மோதல்களுக்கும், யுத்தங்களுக்கும் தலைமை தாங்குகின்றது. கைத்தொழில் துறையில் அரசுகள் வளர்ச்சியடைந்து அதிகாரத்தினை வலுப்படுத்தி ஏனைய அரசுகள் மீது அச்சுறுத்தலை விடுகின்றன. சீனா இந்தியாவினை பகைமையாக நோக்குவதற்குப் பொருளாதாரப் போட்டிகளே காரணமாகும். ஐக்கிய அமெரிக்கா தனது நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பேணுவதற்காகவே யுத்தத்திற்குச் செல்கின்றது எனப் பொதுவாக நம்பப்படுகின்றது. இதேபோல கடந்த காலத்தில் ஜேர்மனி, யப்பான், இத்தாலி ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியாகப் பலவீனமானதாக இருந்தன. இந்நாடுகளுக்கு அதிக நிலங்களும், மேலதிக வளங்களும் தேவைப்பட்டதால் யுத்தத்திற்குச் சென்றிருந்தன. மறுபக்கத்தில் பொருளாதாரத்திற்கான யுத்தம் என்பதனையும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. யுத்தத்தில் வெற்றியடைந்த நாடுகளுக்கும் பொருளாதார இழப்புக்கள் ஏற்படுகின்றன. “யுத்தத்தினால் பெறப்பட்ட பொருளாதார நன்மைகள் ஏதுமில்லை. யுத்தத்தினால் ஏற்பட்ட நன்மைகளை விட ஏற்பட்ட இழப்புக்களே அதிகமானதாகும்”. என சேர் நோர்மன் ஏன்ஐல் (Sir Norman Angell) குறிப்பிடுகின்றார். ஆயினும், பொருளாதார விடயங்கள் சர்வதேச நடத்தைகளில் செல்வாக்குச் செலுத்தி மோதல்களுக்கும், யுத்தத்திற்கும் காரணமாகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

கலாசார, சித்தாந்தக் காரணங்கள்:-

சில வரலாற்றாசிரியர்கள் முரண்பாடான கலாசாரங்கள், சித்தாந்தங்களால் யுத்தங்கள் ஏற்படுவதாகக் கூறுகின்றார்கள். இந்திய – பாகிஸ்தான் யுத்தமானது இந்துக்களுக்கும்,முஸ்லிம்களுக்கும் இடையிலான யுத்தமாகவும், அரபு – இஸ்ரவேல் யுத்தமானது முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான யுத்தமாகவும்; வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகின்றது. முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் ஜனநாயக சித்தாந்தத்திற்கும்,சர்வதிகாரச் சித்தாந்தத்திற்கும் இடையிலான யுத்தமாகும். அதேபோல் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரும் சித்தாந்த யுத்தமாகவே கருதப்படுகின்றது.

அரசியல் காரணங்கள்:-

தேசிய அரசுகள் தேசிய நலனில் உள்ள அதீத கவனத்தால் உந்தப்பட்டு சில நேரங்களில் ஒன்றுடன் ஒன்று மோதலில் ஈடுபடுகின்றன. தேசிய அரசுகள் அதிகாரத்தினைப் பயன்படுத்தித் தமது தேசிய நலன்களை அடைய முயற்சிக்கின்றன. இதற்கு யுத்தம் பல சந்தர்ப்பங்களில் முழுமையானதும், முடிவானதுமான கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. உண்மையில் சில தேசிய அரசுகள் மாத்திரமே யுத்தத்தினை ஆரம்பிக்கின்றன. பெரும்பாலான அரசுகள் யுத்தம் என்பது தமது பாதுகாப்பிற்கு ஆபத்தானது என உணர்கின்றன.

சர்வதேச முறைமை:-

சர்வதேச முறைமை பெருமளவிற்கு மோதலை அல்லது யுத்தத்தினை விரும்புவதில்லை. உண்மையில் சர்வதேச முறைமையானது யுத்தத்தினைத் தடுப்பதில் தோல்வி கண்டதன் மூலமே யுத்தத்திற்குப் பங்களிப்புச் செய்துள்ளது எனக் கூறலாம். சர்வதேச சமுதாயம் அரசாங்கம் இல்லாததும், திறன்வாய்ந்த அரசாங்க நிறுவனங்கள் இல்லாததுமான சமுதாயமாகும். தனிநபர்கள் அரசாங்கம் இல்லாத சமுதாயத்தில் வாழ்வது சாத்தியமற்றதாகும். அரசாங்கம் இன்மையானது யுத்தம் நிகழ்வதற்குக் காரணமாகின்றது.

முடிவாகக் கூறின் யுத்தம் நிகழ்வதற்குப் பல காரணங்கள் துணை நிற்கின்றன. குறிப்பிட்ட யுத்தத்திற்குப் பொறுப்பாக இருந்த காரணங்கள் எவையென கண்டறிவது கடினமானதாகும். ஒவ்வொரு யுத்தமும் ஒன்றிலிருந்து வேறுபட்டதாகும். ஒவ்வொரு யுத்தத்திற்கும் வௌ;வேறு காரணிகள் துணையாக இருந்துள்ளமையினை வரலாற்றாசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

யுத்தத்தின் வகைகள்:-

சர்வதேச அரசியலில் பல்வேறுபட்ட யுத்தங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. வரலாற்றுரீதியாக நடைபெற்ற யுத்தங்கள் பல்வகைப்பட்டதாகவும் உள்ளன. இவ்வகையில் யுத்தத்தின் வகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

முழு யுத்தம்:-

நவீன யுத்தமானது முழு யுத்தம் என்றே அழைக்கப்படுகின்றது. இன்று யுத்தமானது ஆயுதப்படைகளுடன் மட்டும் நின்று விடுவதில்லை. பதிலாக ஒரு அரசிலுள்ள மக்கள் அனைவரும் யுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றார்கள். மொர்கன்தோ நவீன யுத்தமானது “முழு மக்களுடைய யுத்தம், முழு மக்களாலான யுத்தம், முழு மக்களுக்கும் எதிரான யுத்தம்” எனக் கூறுகின்றார்;. நவீன யுத்தத்தில் முழு மக்களும் உணர்ச்சிவசப்பட்டு ஈடுபாடு காட்டுகின்றனர். நவீன யுத்தம் எதிரணி இராணுவத்தினை அழிப்பதாக மட்டும் இருப்பதில்லை. புதிலாகப் பொதுமக்களை அழிப்பதை இலக்காகக் கொண்டும் யுத்தம் நடாத்தப்படுகின்றது. எனவே தான் இது முழு யுத்தம் என அழைக்கப்படுகின்றது.

அணு யுத்தம்:-

அணு யுத்தம் இரண்டு வகையானதாகும். ஒன்று மட்டுப்படுத்தப்படாத அணு யுத்தம், அடுத்தது மட்டுப்படுத்தப்பட்ட அணு யுத்தம். மட்டுப்படுத்தப்படாத அணு யுத்தமானது எதிரியை ப10ரணமாக அழிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். மட்டுப்படுத்தப்பட்ட அணு யுத்தமானது இராணுவத் தளங்கள், மக்கள் குடியிருப்புக்கள், இராணுவ தளங்கள் இல்லாத ஏனைய பிரதேசங்கள் போன்ற அனைத்தையும் தாக்கி அழிப்பதை இலக்காகக் கொண்டதாகும். மட்டுப்படுத்தப்பட்ட அணு யுத்தமானது எதிரியின் தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் மீது மட்டும் தாக்குதல்களை நடாத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். அதாவது எதிரியின் அணு ஆயுதங்களையும், களஞ்சியங்களையும் அழிப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டதாகும். மக்களையோ, இராணுவத் தளங்கள் இல்லாத பகுதிகளையோ தாக்குவது இவ் யுத்தத்தின் நோக்கமாக இருக்காது. ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட அணு யுத்தத்தின் போது இராணுவத் தளங்கள், இராணுவத் தளங்களற்ற இடங்கள் என்பவைகளை இனம் கண்டு தாக்குவது கடினமானதாகும். மட்டுப்படுத்தப்பட்ட அணு யுத்தம் மட்டுப்படுத்த முடியாதளவிற்குரிய யுத்தமாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட யுத்தம்:-

மட்டுப்படுத்தப்பட்ட யுத்தமானது எதிரி திகைப்படையக்கூடிய இழப்புக்களை மட்டும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். இவ் யுத்தம் மட்டுப்படுத்தப்பட்ட இலக்குகள், நோக்கங்களைக் கொண்டதாகும். சம்பிரதாயமான ஆயுதங்கள் மட்டுமே இவ் யுத்தத்தின் போது பயன்படுத்தப்படும். ஆயினும் குறிப்பிட்ட யுத்தத்தினை மட்டுப்படுத்தப்பட்ட யுத்தமா? இல்லையா? என்ற எல்லையை வரையறுப்பது கடினமானதாகும்.

கொரில்லா யுத்தம்:-

மரபு ரீதியாக ஒழுங்கமைக்கப்படாத இராணுவத்தினைக் கொண்டு நடாத்தப்படுகின்ற யுத்தமாகும். போதியளவு ஆட்பலம், இராணுவப் பலம் எதுவுமின்றித் தாக்குதல்களை நடாத்துவதுடன், நேருக்கு நேர் யுத்தத்தினை செய்வதையும், இரகசிய இடங்களில் பதுங்கி இருப்பதையும் பண்பாகக் கொண்டிருக்கும். கொரில்லாக்கள் தாக்குதல் நடாத்தி விட்டுத் தப்பி ஓடுகின்ற தந்திரோபாயத்தினைக் கொண்டிருப்பார்கள்.

சிவில் யுத்தம் :-

சிவில் யுத்தம் என்பது ஒரு அரசிற்குள் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட குழுக்கள் அரசிற்கு எதிராக நடாத்தும் யுத்தமாகும். சட்டரீதியான அரசாங்கம் ஒன்றினை எதிர்த்து ஏனைய குழுக்கள் யுத்தத்தில் ஈடுபட்டு அதிகாரத்தினைக் கைப்பற்ற முயற்சி செய்யும். நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் சட்டரீதியான அரசாங்கத்தினை எதிர்த்து புரட்சியை ஏற்படுத்துவார்கள். இதனையே சிவில் யுத்தம் என அழைக்கின்றனர்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

14,341 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>