வன்முறைகள், பிரச்சினைகள், கட்டுப்பாடுகள், என்பன அடக்கப்படுபவர்களினதும். சுரண்டப்படுபவர்களினதும் சட்டபூர்வ ஆயுதங்களாகும். அவை மோதலுக்கூடாக அரசியல்,சமூக மாற்றம் நிகழ்வதற்கான முகவர்களாகச் செயற்படுகின்றன. ஆயினும் மோதலுக்குத் தீர்வு காண்பதற்கு வன்முறையற்றதும், அமைதியானதுமான பிறிதொரு அணுகுமுறையுள்ளது. மோதலிற்கும் அகிம்சைக்குமிடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. மோதல்கள் உச்சக்கட்டத்தினையடைகின்ற போது அகிம்சை மூலம் மோதல்கள் தீர்க்கப்படுகின்றன. எனவே மோதலிற்கும் அகிம்சைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. சத்தியக்கிரகம் எனும் காந்தியக் கருத்தே இவ் அணுகுமுறையாகும். ‘சத்தியாக்கிரகம்’ என்பதை ‘மறைமுகமான கட்டுப்பாடு’ என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றது. ஆனால் இந்தியாவின் பார்வையில் இவ் அர்த்தம் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சத்தியாக்கிரகம் என்னும் சொல்லின் சரியான அர்த்தம் ‘உண்மையுடன் வாழுதல்’ ‘உண்மையைக் கைக்கொள்ளல்’ என்பனவாகும். அகிம்சை என்பது சத்தியாக்கிரக எனும் காந்திய எண்ணக்கருவின் அடித்தளமாகும். அகிம்சை என்பது ;வன்முறையற்ற தன்மையை’ மட்டுமன்றி ‘வன்முறையற்ற அன்பையும்’ குறிக்கின்றது. அது மோதலை நிராகரிக்கவில்லை. ஆனால் வன்முறையை நிராகரித்து மோதலை மீள வரையறுக்கின்றது. அகிம்சை என்பது உணர்வுநிலைப்பட்ட துன்பமாகும்.
மகாத்மா காந்தியின் ‘சத்தியாக்கிரகம்’ என்பது மிகவும் வலுவான வெளிப்பாடாகும். சத்தியாக்கிரகம் என்ற பதம் அமைதியான எதிர்ப்புப் போராட்டம் என்ற பொருளைக் கொடுக்கின்றது. மேலும், உண்மையுடன் வாழ்தல், அல்லது உண்மை நிலையுடன் ஒன்றியிருத்தல் என்ற பதங்களும் ஏறக்குறைய ‘சத்தியாக்கிரகம்’ என்ற சொல்லுக்குரிய பொருளை விளக்குகின்றன. மேலும் ‘அகிம்ச என்ற சொல் வன்முறையின்மை, வன்முறையின்மை மீதான விருப்பம் என்று பொருள்படுகின்றது. அகிம்சை மோதலை மறுக்கவில்லை. ஆனால் மோதலிற்குப் புதிய வரைவிலக்கணத்தினை வழங்குகி;ன்றது. அகிம்சை உணர்வுபூர்வமான துன்பத்தைக் குறிக்கும். அகிம்சை ஒருவருடைய முழு ஆன்மா, தனித்துவம்,சமயம் என்பவற்றைப் பாதுகாத்து, பேரரசு ஒன்றின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. மகாத்மா காந்தி ‘அகிம்சை’ தொடர்பாகக் கூறும்போது என்னுடைய அகிம்சை மீதான பேரவா உண்மையில் மிகவும் ஒரு தீவிர சக்தியாகும். இங்கு கோழைத்தனம், இயலாமை என்பவற்றிற்கு இடமில்லை. மூர்க்கத்தனமுள்ள ஒருவன் மூர்க்கத்தனமற்றவனாக மாறுகின்றான் என்ற நம்பிக்கையே காணப்படும் ஆனால் இங்கே யாரும் கோழைகளல்ல”.
மோதல்த் தீர்விற்கான வெற்றிகரமான அனுபவங்களைக் அகிம்சை கொண்டிருக்காவிட்டாலும், அகிம்சைப் போராட்டம், பாரிய சமூக, அரசியல் மாற்றங்களுக்கான கருவியாக எழுச்சியடைந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் அகிம்சைப் போராட்டத்திற்கான பிரசித்தி பெற்ற உதாரணங்களைக் கூறமுடியும். மகாத்மா காந்தியினால் வழிநடாத்தப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத்தினையும்,மார்ட்டின் லூதர் கிங் வழிநடத்திய ‘கறுப்பின மக்களின் சிவில் உரிமைகள் இயக்கத்தினையும்’, அத்தோடு 1956 ஆம் ஆண்டு ஹங்கேரியில் ‘கம்யூனிச ஆட்சிக்கெதிரான நடத்தைகளையும்’ 1970, 1980 களில், போலந்தில் ‘ஒருமைப்பாட்டு இயக்கச் செயற்பாடுகளையும்’, கிழக்கு ஜேர்மனியின் ‘திங்கட்கிழமை ஆர்ப்பாட்டங்களையும்’, 1990 ஆம் ஆண்டு சீனாவில் நிகழ்ந்த மாணவர் நடவடிக்கைகளையும்’ வன்முறையற்ற அரசியல் நடத்தைகளாகக் கூறலாம்.
எனவே மோதல்கள் ஏற்படுகின்ற போது அதனை அகிம்சை ரீதியான அமைதியான போராட்டங்கள் மூலம் முன்னெடுத்துச் செல்கின்றபோது, அங்கு மோதலிற்கும் அகிம்சைக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படுகின்றது. அரசுகள் இணைக்கப்படுதல் அதிகாரத்தினைப் பெற்றுக் கொள்ளல் போன்ற உடனடி வெற்றிகளை மோதல்கள் உறுதி செய்தாலும், வன்முறையானது அதே இயல்பில் மேலதிக வன்முறைகளுக்கு வழியேற்படுத்தித் தற்காலிக வெற்றிகளை உருவாக்கலாம். அதாவது வன்முறை அல்லது வன்முறை அச்சுறுத்தலால் அமுலுக்கு வருகின்ற சமாதானம் உண்மையில் சமாதானமாகக் கொள்ளப்படுவதில்லை. பதிலாக தொடர்ச்சியான சக்தியூட்டல், பயம் என்பவற்றால் ஏற்படுகின்ற தற்காலிக சமநிலையாகும். மகாத்மா காந்தியைப் பொறுத்தவரையில் சத்தியாக்கிரகம் ‘நலிவுற்றோரின் ஆயுதம்’ அது நேரடியாகவும்,துரிதமாகவும் பயனளிக்கக் கூடியதாகும்.
எந்த மோதலையும் வன்முறை மூலம் தீர்ப்பது சாத்தியமற்றது என்பது அகிம்சையின் சாரம்சமாகும். மோதலினை அகிம்சை மூலம் தீர்ப்பதற்கு முயற்சிக்கின்ற போது அவை சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ் அடிப்படையிலேயே மகாத்மா காந்தி இந்தியாவிற்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தார். அகிம்சை மூலம் இலகுவாக மோதல்கள் தீர்க்கப்பட வாய்ப்புக்கள் இருப்பதால் மோதலிற்கும் அகிம்சைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது எனலாம்.