(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.05.24, 2014.05.25 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
2012 ஆம் 2013 ஆம் ஆண்டுகளில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் இலங்கைக்கு எதிராக இரண்டு தடவைகள் யுத்தக் குற்றச்சாட்டுப் பிரேரணை சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிகாலப்பகுதியில் சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பன பாரியளவில் மீறப்பட்டுள்ளதாகவும், இதற்கு சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பொறுப்புக்கூறுவதுடன், யுத்தக்களத்தில் நடந்த மனிதப்படுகொலைகளுக்கு நம்பத்தகுந்ததும், நடுநிலையானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இத்தீர்மானங்கள் வலியுறுத்திக் கூறியுள்ளன.
தோல்விகள்
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் இருதரப்பினராலும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம், மனித உரிமைகள் சட்டம் ஆகியன மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான்-கீ மூனினால் நிறுவப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. ஆயினும் இலங்கை அரசாங்கம் இவ் அறிக்கையினை கருத்தில் கொள்ளாது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற பெயரில் ஆணைக்குழு ஒன்றினை நிறுவியதுடன், 2011 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 16 ஆம் திகதி இவ் ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, நாட்டுமக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்மூலம் தனக்கு ஏற்பட்டிருந்த சர்வதேச அழுத்தத்தினை தவிர்க்க இலங்கை அரசாங்கம் முயற்சித்தது.
இந்நிலையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டம், மனித உரிமைகள் சட்டம் என்பவைகள் மீறப்பட்டமை தொடர்பாக சுதந்திரமானதும், நம்பகத்தன்மையானதுமான விசாரணைகள் நடாத்தப்படுதல், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் நடைமுறைப்படுத்துதல் போன்றவற்றில் இலங்கை அரசாங்கம் தனது பொறுப்பினை வெளிப்படுத்துவது சர்வதேசக் கடமையாகும் என 2013 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
மேலும், யுத்தக் குற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்பான மனிதஉரிமை மீறல்கள் ,காணாமல் போனோர் விவகாரம், வெலிவேரியா சம்பவம், அரசியல் கைதிகள் விவகாரம்,ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் அச்சுறுத்தல்கள்,சுயாதீனமாகச் செயற்படக்கூடிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு போன்றவைகள் மீது பதினெட்டாவது அரசியல் யாப்புத் திருத்தம் விதிக்கும் கட்டுப்பாடுகள், முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருக்கு எதிரான குற்றவியல் விசாரணை,சமய வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான தாக்குதல்கள் போன்ற பல விடயங்கள் சர்வதேச விசாரணைக்குட்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
ஆனால் நல்லிணக்கத்திற்கும், பொறுப்புக்கூறுவதற்கும் பொருத்தமானதும் தேசியளவில் செயலாற்றத் தூண்டக் கூடியதுமான திட்டத்தினை உருவாக்குவதில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரதான சிபார்சுகளாகிய
-
சட்ட ஆட்சியை மீள நிறுவுவது,
-
இராணுவ,நிறைவேற்றுத்துறை அதிகாரங்களை பழையநிலைக்கு கொண்டுவருவது,
-
மனித உரிமைமீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகளை தொடக்குவது, வடமாகாணத்தில் சிவில் நிர்வாகத்தினை மீண்டும் அமுல்படுத்துவது,
-
இனமோதலுக்கு பொருத்தமான அரசியல் தீர்வினைக் காண்பது போன்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவதிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகியிருக்க விரும்புகின்றது.
2014 ஆம் ஆண்டு பங்குனி மாதத்திற்கிடையில் யுத்தக் குற்றங்களுக்கான தேசிய ரீதியிலான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நடாத்த வேண்டும் என மனித உரிமைகள் பேரவை எதிர்பார்த்தது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை எதிர்பார்த்தது போன்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
அதேநேரம் சுதந்திரமான நீதிமன்றச் செயற்பாடுகளுக்கான சூழலையும் உருவாக்கவில்லை. அரசியல் தலையீடற்ற நீதிமன்றச் செயற்பாடே வெளிப்படைத்தன்மையினையும், நம்பகத்தன்மையினையும் உறுதிப்படுத்தும். இவற்றினை இலங்கை அரசாங்கம் செயற்படுத்தியிருப்பின் 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சர்வதேச விசாரணை என்ற ஆபத்தினை இலங்கையினால் தடுத்திருக்க முடியும்.
இலங்கைக்கு எதிராக ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களிலும் பொருளாதார அபிவிருத்தி, வறுமைத் தணிப்பு, நல்லாட்சி என்பவைகளுக்கு ஊடாக எதிர்கால இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தினை உத்தரவாதப்படுத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இயலாமைகள்
உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான பொறிமுறையினை உருவாக்கி அரசாங்கம் செயற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசாங்கம் நீண்ட சர்வதேச அழுத்தத்தின் பின்னரே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை நியமித்தது.
ஆனால் இவ் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வெளிப்படையான விசாரணைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக
-
திருகோணமலையில் நடைபெற்ற ஐந்து மாணவர்கள் படுகொலை: இப் படுகொலையுடன் தொடர்புடைய பன்னிரெண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டாலும் இதுவரை விசாரணை பூர்த்தியாகவில்லை.
-
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பதினேழு ஐக்கியநாடுகள் தொண்டு ஊழியர்களின் படுகொலை
-
2009 ஆம் ஆண்டு மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களையும் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட உடல்கம ஆணைக்குழுவின் (Udalagama Commission) அறிக்கையினை வெளியிட அரசாங்கம் மறுத்துவருகின்றது.இவைகள் தொடர்பாக விசாரணைக்குட்படுத்த வேண்டும் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்த போதும், வெளிப்படையாக இவைகள் தொடர்பான விசாரணைகள் செய்யப்பட்டு அறிக்கைகள் சமர்பிக்கப்படவில்லை.
-
ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை விசாரணைகள் நடைபெறவில்லை
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பொதுமக்கள் கோரியிருந்த சுதந்திரமான காவல்துறை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு போன்றவற்றை நிறுவுவதிலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எல்லாவகையான சுதந்திரங்களையும் இழந்துள்ளதுடன், மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களைச் சிறப்பாக விசாரணை செய்யும் வல்லமையினையும் இழந்துள்ளது.
ஆயினும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை நிரூபிக்கத் தேவையான, கிடைக்கக் கூடிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பயன்படுத்தி சுயாதீனமான விசாரணை ஒன்றினை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மேற்கொள்ளவில்லை எனப் பொதுவானதொரு குற்றச்சாட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் 2012 ஆம் ஆண்டு இராணுவ நீதிமன்றம் ஒன்றை நிறுவியதுடன், அதன் விசாரணையின் மூலம் பொதுமக்கள் இறந்தமைக்கு இராணுவம் பொறுப்பாக முடியாது எனத் தெரிவித்திருந்தது. ஆனால் இவ் அறிக்கை இதுவரை வெளியிடப்படாததுடன், இவ் அறிக்கை தயாரிப்பதற்கு எவ்வகையான ஆய்வு முறையியல் பயன்படுத்தப்பட்டது என்பதும் இதுவரை வெளியிடப்படவில்லை.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் சிபார்சுகளில் ஒன்றாகிய யுத்த மரணம், சொத்துக்கள் இழப்பு தொடர்பாக இலங்கை அரசாங்கம் கணிப்பீடு ஒன்றினை மேற்கொண்டதுடன், நல்லிணக்க பொறிமுறைக்கு மிகவும் பொருத்தமானதொரு செயற்பாடாக இதனைக் கருதியது.
ஆனால் கூட்டுக் குடும்பங்கள், தனிக் குடும்பங்கள் தொடர்பாக மிகவும் குறுகிய வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு குடும்பத்தில் பலர் இறந்திருந்தால் அவர்கள் கணிப்பீடு செய்யப்படுவதற்கான சந்தர்பங்கள் மறுக்கப்பட்டுள்ளன. அதேநேரம் ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் இறந்தமை தொடர்பான கணிப்பீடுகள் பதிவு செய்யப்படவில்லை.
இதனால் யுத்தத்தில் இறந்தவர்களுக்கான நம்பகத் தன்மையான கணிப்பீடாக இதனைக் கருதமுடியாதுள்ளது. உண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தனது வலிமையினை கூட்டிக்கொள்ள அரசாங்கம் இக்கணிப்பிட்டினை பயன்படுத்தியது.
நம்பிக்கையினை கட்டியெழுப்புதல்
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்த காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக அண்மையில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட குழு சிறந்த முன்னுதாரணமாகும்.
ஆயினும் கடந்தகாலங்களில் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் செயற்பாட்டில் காணப்பட்ட வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்போனோர் விவகாரங்களை கையாளும் பிரிவு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இவ்வாறு நிகழ்ந்தால் சர்வதேச காணாமல் போனோர் சாசனப் பொறிமுறைகளை பின்பற்ற வேண்டிய தேவையும்,நிர்பந்தமும் இலங்கைக்கு உருவாகலாம். இதன்மூலம் சர்வதேசளவில் ஏற்றுக்கொள்ளக் கூடிய விசாரணைகளை இலங்கையில் நடாத்த வேண்டிய நிர்பந்தம் உருவாகும்.
இலங்கையில் சுற்றுப்பயணத்தினை பூர்த்தி செய்த பின்னர் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த நவநீதம்பிள்ளை “யுத்தக் குற்றம்” தொடர்பான சர்வதேசக் குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணைகளில் முன்னேற்றமும், வெளிப்படைத்தன்மையும், நம்பகத்தன்மையும் காணப்படவில்லை. சுயாதீனமானதும், வெளிப்படையானதுமான விசாரணைகள் நடைபெறாத பட்சத்தில் உண்மைகளைக் கண்டறிவதற்கு சர்வதேச விசாரணைகளை நடாத்துவதைத்தவிர வேறு பொறிமுறைகள் இல்லை. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜனநாயகச் சூழல் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்பட்டாலும், அதிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகிச் செல்கின்றது. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் முடிவடைந்து விட்டன. ஆனால் இறுதி யுத்த காலத்தில் உளரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் அத் துன்பத்திலிருந்து இன்னமும் மீளவில்லை. “யுத்தம் முடிவடைந்து விட்டாலும், துன்பம் விலகவில்லை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்கட்டுமானம்,அபிவிருத்தி என்பன யுத்தத்திற்குப் பின்னரான முக்கிய சாதனைகளாகும். ஆயினும் பௌதீக மீள்கட்டுமானம் மாத்திரம் நல்லிணக்கம்,கௌரவம்,இறுதி சமாதானம் என்பவற்றைக் கொண்டுவரப் போதுமானதல்ல.யுத்த காலத்தில் துன்பப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியையும், நிவாரணத்தையும் வழங்க வேண்டுமாயின் பௌதீக, சமூக,உள, உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்துதல் போன்ற எல்லா நன்மைகளையும் தருகின்ற அணுகுமுறைமையே தற்காலத் (Holistic Approach) தேவையாகும்.
சர்வதேச விசாரணை
சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் என்பன மீறப்பட்டதற்கான விசாரணைகள் நடாத்தப்பட்டு குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கை இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பும் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிகாலப்பகுதியில் மேற்கொண்ட சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இதற்கான சர்வதேச விசாரணை ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், தடுத்துவைத்திருப்பவர்கள், காணாமல் போனவர்கள், பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் போன்றவற்றை விசாரணை செய்யும் அதிகாரத்தினை இச்சர்வதேச விசாரணை ஆணைக்குழு கொண்டிருக்கும் எனவும் இத்தீர்மானம் கூறுகின்றது.
இதனடிப்படையில் யுத்தக் குற்றங்களுக்காக தேசியரீதியல் விசாரணைகள் இதுவரை நடாத்தப்படாததால் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையினை நடாத்தவதற்கான கட்டமைப்பு பணிகளை மனித உரிமைகள் பேரவை தற்போது செய்யத் தொடங்கியுள்ளது.
ஆயினும் சர்வதேச விசாரணைக் குழுவினால் இலங்கையின் அனைத்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியாது. ஆயினும் பொறுப்புக்கூறுதல் என்ற பொறிமுறையில் பயிற்சிபெறவும், ஜனநாயக நிறுவனங்களை சீர்படுத்திக் கொள்வதற்கும் இலங்கைக்கு வாய்ப்பானதாகும். இலங்கையில் வாழும் எல்லா சமூகங்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கும், புதிய நிலைத்திருக்கக்கூடிய பல்லின,கலாசார,சமய சமுதாயத்தினை எதிர்காலத்தில் கட்டமைக்கவும் வாய்ப்பானதாகும்.