தெற்காசியாவின் தலைவராக நிலைகொள்ளப் போகும் நரேந்திரமோடி?

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.05.31, 2014.06.01 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image001

பாரதிய ஐனதாக் கட்சி சார்பில் போட்டியிட்டு நரேந்திரமோடி இந்தியாவின் புதிய பிரதம மந்திரியாகப் பதவியேற்றுள்ளார். இவர் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்தவராகும். இவர் இந்து அடிப்படைவாதியாக கருதப்படுவதுடன், முன்னைநாள் பிரதம மந்திரி கலாநிதி மன்மோகன் சிங்கினை விட மிகவும் தீவிரமான பேரம்பேசும் ஆற்றல் மிக்கவராகவும் கருதப்படுகிறார். நரேந்திரமோடி தலைமை தாங்கும் அரசாங்கத்தின் லோக்சபா (மக்களவை) வில் அதிகப் பெரும்பான்மை ஆசனங்களை பாரதிய ஜனதாக் கட்சி கைப்பற்றியுள்ளது. எனவே இந்தியாவின் சமகால அரசியல் காட்சி நிலையில் அடுத்து வரப்போகும் ஐந்து வருடங்களுக்கு இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் பல புதிய பரிமாணங்களை வகுத்து நடைமுறைப்படுத்தக் கூடிய ஆற்றல்மிக்கதொரு தெற்காசியத் தலைவராக நரேந்திரமோடி உருவாவதற்கான சந்தர்பங்கள் உருவாகியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் பலவீனம்

மக்களவைக்குத் தேவையான அதிகப் பெரும்பான்மை அங்கத்தவர்களை காங்கிரஸ் கட்சி தனது இரண்டாவது பவிக்காலத்தில் பெற்றிருக்கவில்லை. இதனால் பெருமளவிற்கு தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளின் ஆதரவில் தனது பதவிக்காலத்தினை மிகவும் சிரமத்துடன் நிறைவு செய்ய வேண்டியிருந்தது. இதனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கொடுக்கும் பெரும் நெருக்குதல்களுக்கு கட்டுப்பட வேண்டிய அல்லது இணங்கிச் செல்ல வேண்டிய நிர்பந்தம் காங்கிரஸ் கட்சிக்கு பல தடவைகள் ஏற்பட்டது.

பத்து வருடகாலம் நீடித்த கலாநிதி மன்மோகன்சிங் ஆட்சியில் அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டுக்கட்சியின் இரண்டாவது பதவிக்காலத்தில் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பெரும் செல்வாக்குச் செலுத்தி வந்தனர்.

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் நெருக்குதல்களுக்கு தொடர்ந்து நெகிழ்ந்து கொடுத்தமை காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு இருந்த நம்பகத்தன்மை இழக்கப்படுவதற்கு வாய்ப்பாக இருந்தது எனக் கூறலாம். காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தில் இருந்த பலவீனங்களை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாரதீய ஜனதாக்கட்சி, நரேந்திரமோடியின் பலமாகிய அரசியல் சாணக்கியம், ஆளுமை,தனிமனிதக் கவர்ச்சி, பேச்சாற்றல் போன்றவற்றைப் பயன்படுத்தி 2014 ஆண்டு வைகாசி மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றியடைந்துள்ளது.

கலாநிதி மன்மோகன் சிங் அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் செய்முறையில் மிகவும் பலவீனமானதாக அல்லது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு அச்சமடைகின்ற நிலையிலேயே இருந்தது. கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மகாநாட்டில் பங்கெடுப்பது தொடர்பாக மன்மோகன் சிங் அரசாங்கம் நீண்ட காலமாக ஆழமாகச் சிந்தித்ததுடன் இறுதியில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு கட்டுப்பட்டு மகாநாட்டில் பங்கெடுப்பதில்லை என்ற முடிவினை எடுத்திருந்தது.

இதே போன்றதொரு பதட்டமான நிலையினை ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மூன்றாவது பிரேரணையினை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் அழுத்தத்திற்கு கட்டுப்பட்டு ஆதரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்ற தீர்மானத்தினை எடுக்க முடியாது திணறியது. இறுதியில் வாக்கெடுப்பு நடைபெற்ற போது அதில் கலந்துகொள்ளாது வெளியேறியிருந்தது.

காங்கிரஸ் கட்சி அரசாங்கம் எடுத்த இம்முடிவு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு பெரும் அதிருப்தியை கொடுத்தாலும், இதனைத்தவிர்ந்த தீர்மானம் எதனையும் காங்கிரஸ் கட்சியினால் எடுக்க முடியாதிருந்தது. ஆனால் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் இதேமாதிரியான அழுத்துங்களை நரேந்திர மோடியின் அரசாங்கத்திற்கும் கொடுக்க முடியாது என்பதை பதவியேற்பு நிகழ்வு காட்டியுள்ளது.

பாராளுமன்றக் கட்டமைவு

இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையிலுள்ள (Lok Sabha) 543 அங்கத்தவர்களுக்காக நடாத்தப்பட்ட பதினாறாவது பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி 282 ஆசனங்களைத் தனித்து கைப்பற்றியுள்ளது. அதன் கூட்டுக்கட்சிகளுடன் இணைந்து அது 336 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியினால் 44 ஆசனங்களை மாத்திரமே இப் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொள்ளமுடிந்தது. எனவே நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கம் எவ்வித சிரமமும் இல்லாது பாராளுமன்றத்தின் கீழ்சபையில் தனது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்திய அரசியல் யாப்பின்படி பாராளுமன்றம் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு ராஜ்ஜிய சபையின் (Rajya Sabha) அனுமதி தேவையாகும். இந்திய அரசியல் யாப்பு சரத்து 80 ராஜ்ஜியசபை அங்கத்தவர்களின் எண்ணிக்கையினை 250 ஆக வரையறை செய்துள்ளது. இதன்படி மாநில அரசுகள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களிலிருந்து 238 அங்கத்தவர்கள் தெரிவுசெய்படுவார்கள் எனவும், தேசிய முக்கியத்துவம் மிக்க மக்களிலிருந்து 12 அங்கத்தவர்கள் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் கூறுகின்றது. தற்போது ராஜ்ஜிய சபையில் 245 அங்கத்தவர்கள் மாத்திரமேயுள்ளனர். இதில் மாநில அரசுகள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களிலிருந்து 233 அங்கத்தவர்களும், ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்ட 12 அங்கத்தவர்களும் உள்ளனர்.

இந்திய அரசியல் யாப்பு சரத்து 108 ஏதாவது ஒரு மசோதா நிறைவேற்றப்படாமல் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து ராஜ்ஜிய சபையில் முடக்கப்பட்டால், பிரதம மந்திரியின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்றத்தின் இருசபைகளையும் ஒன்றாக இணைத்து குறிப்பிட்ட மசோதாவினை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

தற்போதைய இந்தியப் பாராளுமன்றத்தில் இரண்டு சபைகளையும் ஒன்றாக இணைத்தால் மக்களவையில் 545 அங்கத்தவர்களும், மேல்சபையாகிய ராஜ்ஜியசபையில் 245 அங்கத்தவர்களுமாக 790 அங்கத்தவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றார்கள். ஆகவே இணைந்த பாராளுமன்றத்தின் ஆகக் குறைந்த அங்கத்தவர் தொகை 396 ஆகும். மக்களவையில் 335 ஆசனங்களைப் பெற்றுள்ள பாரதிய ஜனதாக் கட்சிக்குத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு ராஜ்ஜியசபையில் மேலதிகமாக 61 ஆசனங்கள் மட்டுமே தேவையாகும். இதனைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமம் எதனையும் நரேந்திர மோடி எதிர் கொள்ளப் போவதில்லை.

தற்போது 245 அங்கத்தவர்களைக் கொண்ட ராஜ்ஜிய சபையில் காங்கிரஸ் கட்சி 68 அங்கத்தவர்களையும், பாரதிய ஜனதாக் கட்சி 46 அங்கத்தவர்களையும் கொண்டுள்ளன. சட்டங்களை மேல்சபையில் நிறைவேற்றுவதற்கு பாரதிய ஜனதாக் கட்சிக்கு ஆகக் குறைந்தது 123 ஆசனங்கள் தேவையாகும். பாரதிய ஜனதாக் கட்சி தனது கூட்டுக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டால் 65 ஆசனங்களை மிக இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்திய மையக் கொள்கை

நரேந்திர மோடியின் அரசாங்கம் பின்பற்றவுள்ள வெளியுறவுக் கொள்கை தொடர்பான பல ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றதாயினும் இதுதொடர்பில் வழிகாட்டும் கொள்கை எதனையும் அரசாங்கம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. கடந்த சில தசாப்தங்களாக இந்தியா பின்பற்றிவரும் வெளியுறவுக் கொள்கையினையே தொடர்ந்தும் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா தொடர்ந்தும் பின்பற்றும் என சிலர் கருதுகின்றார்கள். சர்வதேச,பிராந்திய விவகாரங்களைக் கையாள்வதில் இந்தியா கடுமையான போக்கினை பின்பற்றமாட்டாது என சிலர் கருதுகின்றனர்.

இந்திய மணிப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் மாதவ் டாஸ் நாளபட் (Madhav Das Nalapat) இலங்கை நோக்கிய இந்திய மையக் கொள்கையினை நாங்கள் உருவாக்க வேண்டுமே தவிர தமிழ்நாட்டினை மையமாகக் கொண்ட கொள்கையினை உருவாக்க வேண்டியதில்லை. எப்போதெல்லாம் இந்திய மையக் கொள்கையினை வைத்திருந்தோமோ அப்போதெல்லாம் அது சிறந்ததாக இருந்தது. எப்போதெல்லாம் தமிழ்நாட்டினை மையமாக கொண்ட கொள்கையினை வைத்திருந்தோமோ அப்போதெல்லாம் அது மிகவும் மோசமானதாக இருந்தது எனக் கூறுகின்றார். இது நரேந்திர மோடியின் ஆட்சிக்கு பொருத்தமானதும், தேவையானதுமான ஆலோசனையாகும்.

சில ஆய்வாளர்கள் பழைமைவாதம் பேசுகின்ற தேசியவாதத் தலைவர்கள் என்ற வகையில் இரு நாட்டுத் தலைவர்களிடமும் ஒருமித்த அரசியல் பண்புகள் காணப்படுவதால் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்ந்து பேணப்பட வாய்ப்புள்ளது. இதனால் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் இலங்கை சார்புக் கொள்கையினைப் பின்பற்றும் எனக் கருதுகின்றனர்.

ஆயினும் நரேந்திர மோடி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை எப்போதும் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாக இருக்கும் எனக் கருதிவிடமுடியாது. இருநாடுகளினதும் தேசிய நலன்கள் பல சந்தர்பங்களில் ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன. இருநாடுகளது தேசிய நலன்களில் வேறுபாடு ஏற்படுகின்ற போது இருநாடுகளும் தமக்கு சாதகமான முடிவுகளை எடுப்பது தவிர்க்க முடியாததாகவேயிருக்கும். ஆனாலும் அடுத்து வருகின்ற ஐந்து வருடங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை நரேந்திர மோடிக்கு இல்லை. எனவே இச் சூழலைப் பயன்படுத்தி இரு நாடுகளினதும் நலன்களில் ஏற்படும் சர்சைகளுக்குத் தீர்வு காணமுடியும்.

பாரதிய ஜனதாக்கட்சி தனது இந்துத்துவ தேசியவாத கோட்பாட்டு சிந்தனையினை சிலவேளை தெற்காசிய நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையில் பரீட்சித்துப்பார்க்க கூடும். ஐக்கிய நாடுகள் சபை முன்னைநாள் இராஜதந்திரி ஹார்டீப் சிங் பூரி (Hardeep Singh Puri) “மோடியின் நிர்வாகம் அயல்நாடுகளுடன் குறிப்பாக இலங்கை> வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் தனது உறவினைச் சீர்படுத்திக் கொள்ளும்” எனக் கூறுகின்றார். தமிழ் நாடு இலங்கைத்தமிழ் மக்கள் தொடர்பாக வெளிப்படுத்தும் உணர்ச்சிபூர்வமான செயற்பாடு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவினைத் தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்தினாலும், புதிய இந்திய அரசாங்கத்தில் தமிழ்நாட்டின் எந்தவொரு பிராந்திய கட்சிகளும் பங்கெடுக்காமை இலங்கைக்கு பெரும் ஆறுதலை வழங்கும்;.

பாரதிய ஜனதாக்கட்சி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இலங்கை அரசாங்கம் தனது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் உடனடியாகவே தெரிவித்துக் கொண்டாலும்,நரேந்திரமோடிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான தனிப்பட்ட அல்லது இராஜதந்திர மட்டத்திலான தொடர்பு மிகவும் குறைவானதாகவே இருந்தது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் காங்கிரஸ் கட்சி அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பாக நரேந்திர மோடி மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தேர்தல் கால பிரச்சாரங்களின் போது இலங்கை விவகாரங்களை காங்கிரஸ் கட்சி அரசாங்கம் கையாண்ட முறைமை தொடர்பாக குறிப்பாக கவனம் எடுத்து விமர்சனம் செய்திருந்தார். இதே போன்று இந்திய மீனவர்கள் விவகாரத்தினை மிகவும் சமநிலையிலிருந்து எவ்வாறு கையாள முடியும் என்பது தொடர்பாகவும் உரை நிகழ்த்தியிருந்தார். இந்நிலையில் யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையுடனான இராஜதந்திர உறவினை எவ்வாறு கையாளுவார் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தெற்காசியாவின் புதிய தலைவர்

நரேந்திரமோடியினை இந்தியாவின் அரசியல்வாதியாக நோக்குவதை விட தெற்காசியாவின் அரசியல்வாதியாக நோக்குவதே பொருத்தமானதாகும். அதற்குரிய அனுபவம் இவரிடம் இருப்பதாகவும், மிகவும் கடும்போக்குடைய அரசியல் தலைவராகவும் இவர் வர்ணிக்கப்படுகிறார். நரேந்திர மோடியின் கடும்போக்குடைய அரசியல் சிந்தனையின் பிரதிபலிப்பே தெற்காசிய நாடுகளின் தலைவர்களை தனது பிரதம மந்திரிப் பதவியேற்பு விழாவில் பங்குபற்றுமாறு அழைத்தமையாகும். மோடியின் கடும்போக்கு தந்திரோபாய சிந்தனையினை தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உட்பட தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அனைவரும் எதிர்த்திருந்தாலும், நரேந்திர மோடி தனது கொள்கையிலிருந்து விலகவில்லை.

தமிழ்நாட்டினுடைய எதிர்ப்பு அல்லது அதிருப்திக்குள்ளாவதை நரேந்திர மோடி விரும்பாவிட்டால் தனது பிரதம மந்திரிப் பதவி பதவியேற்பு விழா வைபவத்தில் கலந்த கொள்ளுமாறு தெற்காசிய நாடுகளிலுள்ள அரச தலைவர்களுக்கு குறிப்பாக இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருக்கமாட்டார். இவர் ஒருதடவை தீர்மானம் எடுத்துவிட்டால் அதில் உறுதியாக இருக்கக் கூடியதொரு அரசியல் தலைவர் என்பதை இதன்மூலம் நிரூபித்துள்ளார்.

நரேந்திர மோடி இந்தியாவின் தேசிய நலனிலேயே முழுமையான கவனம் எடுத்துள்ளார். இந்தியாவின் பிராந்தியநலன்,சர்வதேச நலன் ஆகிய இரண்டிலும் நரேந்திர மோடியின் கவனம் உள்ளது. இந்தியாவின் சர்வதேச நலனை பாதுகாக்க பிரந்தியநாடுகள் அiனைத்தும் இந்தியாவிற்கு உதவியாக இருக்க வேண்டும் அல்லது கட்டுப்பட்டு செயற்பட வேண்டும். இதனை பரீட்சித்துப் பார்த்த ஒரு நிகழ்வாகக்கூட பதவியேற்பு விழா வைபவத்தில் தெற்காசிய நாடுகளின் அரச தலைவர்களைப் பங்கெடுக்கும்படி விடுத்த அழைப்பினை நோக்கமுடியும். எனவே இந்தியாவின் மேலாதிக்கதிற்கு கட்டுப்படும் தெற்காசிய நாடுகளை இந்நிகழ்வில் பங்கேற்ற நாடுகளின் எண்ணிக்கையினைக் கொண்டு தீர்மானித்து விடமுடியும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

9,615 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>