(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.06.14, 2014.06.15 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
இருபதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய 174 மில்லியன் மக்கள் (ஆண்கள், பெண்கள்,சிறுவர்கள்) இனப்படுகொலை அல்லது மனிதப் படுகொலைகளால் மரணித்துள்ளார்கள். ஹிட்லர் காலத்தில் ஜேர்மனியில் 21 மில்லியன் மக்களும், சோவியத் ரஸ்சியாவில் லெனின் மற்றும் ஸ்ராலின் பதவிக்காலத்தில் 62 மில்லியன் மக்களும், மாவோ சேதுங் காலத்தில் 35 மில்லியன் மக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பல இலட்சம் மக்கள் சித்திர வதைக்கும், பாலியல் வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், தமது இருப்பிடங்களிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் சபை இனப்படுகொலையினைத் தடுப்பதற்கு முனைப்பான பல செயற்பாடுகளைச் செய்து வந்தாலும், இனப்படுகொலையும் மக்கள் படுகொலையும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருப்பதற்கு வரலாற்றில் பல சம்பவங்களை உதாரணமாக காட்ட முடியும்.
ஓட்டோமன்
அரசாங்கத்தின் கட்டளைக்கு ஏற்ப 1915 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஓட்டோமன் சாம்ராச்சியத்தில் வாழ்ந்த ஆர்மேனிய மக்கள் நாடுகடத்தப்படுவதற்காக சுற்றிவளைத்து ஒன்றுதிரட்டப்பட்டு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். ஓட்டோமன் சாம்ராச்சியத்தில் 1915 ஆம் ஆண்டிற்கும் – 1923 ஆம் ஆண்டிற்கும் இடையில் பலந்தமாக நாடுகடத்தப்படுதல், மக்கள் படுகொலை,தடுப்பு முகாம்களில் ஏற்பட்ட நோய்களால் ஏற்பட்ட மரணங்கள் போன்றவற்றால் ஓரு மில்லியன் ஆர்மேனிய, ஒஸ்ரிய (Assyrians) மற்றும் கிரேக்க இன மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஜேர்மனி
1933 ஆம் ஆண்டு ஜேர்மனியில் பதவிக்கு வந்த நாசிச கட்சி ஜேர்மனியர்கள் இனரீதியில் உயர்ந்தவர்கள் ,யூதர்கள் கீழ்நிலையானவர்கள் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். இதனால் தொல்லைப்படுத்தல் மற்றும் படுகொலை செய்தல் போன்றவற்றை திட்டமிட்ட வகையில் யூதர்களுக்கு எதிராக நாசிசவாதிகள் பாரியளவில் நடைமுறைப்படுத்தினர். அரசியல், சமய, தன்னினச்சேர்க்கை போன்ற காரணங்களினால் யூதர்கள் விரும்பத் தகாதவர்கள் என்ற கருத்தினை நாசிசவாதிகள் கொண்டிருந்தனர். தமது இக்கருத்துடன் ஒத்துழைப்பவர்களுடன் இணைந்து ஏறக்குறைய ஆறு இலட்சம் யூதர்களை நாசிசவாதிகள் படுகொலை செய்தனர் . அதாவது ஐரோப்பாவில் வாழ்ந்த ஏறக்குறைய ஒன்பது இலட்சம் யூதர்களில் மூன்றில் இரண்டு பங்கு யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் ஏறக்குறைய ஒருஇலட்சம் யூத இனச் சிறுவர்கள், இரண்டு இலட்சம் பெண்கள், மூன்று இலட்சம் ஆண்கள் உள்ளடங்கியிருந்தனர்.
கம்போடியா
1975 ஆம் ஆண்டு கம்போடியாவினை கைப்பற்றிக் கொண்ட போல்போட் (Pol Pot) கம்யூனிச விவசாய சமுதாயத்தினை உருவாக்க முயற்சித்தார். இம்முயற்சியின் விளைவால் கம்போடிய மக்கள் தொகையில் 25% பட்டினி, வேலைப்பழு, தண்டனை போன்றவற்றால் மரணமடைந்தனர். கம்போடியாவிலிருந்து முதலாளித்துவம், மேற்குத்தேசக் கலாசாரம், நகரவாழ்க்கை,சமயம் போன்ற எல்லா வகையான வெளிநாட்டுச் செல்வாக்கிலிருந்தும் கம்பொடியாவினை மீட்டெடுத்து விவசாயிகள் கம்யூனிச அரசை உருவாக்க போல்போட் முயற்சித்தார். சகல வெளிநாட்டு தூதரகங்களும் மூடப்பட்டன. வெளிநாட்டு பொருளாதார மற்றும் மருத்துவ உதவிகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.வெளிநாட்டு மொழிகள் பேசப்படுவது தடுக்கப்பட்டது.பத்திரிகைகள், தொலைக்காட்சி நிலையங்கள் மூடப்பட்டன. தபால், தொலைபேசி அழைப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டன. வர்த்தக செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. கல்வி,சமயம் என்பன நிறுத்தப்பட்டன. கம்போடியாவின் வெளியூலகத் தொடர்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பழைய சமுதாயத்தினை அழித்தல் என்ற பெயரில் கம்போடியா முழுவதும் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்வியியலாளர்கள், பணவசதி படைத்தோர்கள்,பௌத்த துறவிகள், காவல்துறையினர், வைத்தியர்கள், சட்டத்தரணிகள்,ஆசிரியர்கள், ஒய்வூ பெற்ற அரசாங்க உத்தியோகத்தர்கள், சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்டு சித்தரவதைக்கும் கொலைக்கும் உள்ளாக்கப்பட்டனர். முன்னைநாள் படைவீரர்கள், அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் கொலை செய்யப்பட்டார்கள். கம்போடியாவிலிருந்த சிறுபான்மைச் சமுகத்தினரான வியட்நாமியர்கள்,சீனர்கள்,இந்திய வம்சாவழி இஸ்லாமியர்கள் உட்பட இருபது சிறுபான்மை சமூகத்தினர் தாக்குதலுக்குள்ளாகினர்.
வியட்நாம் யுத்தத்தின் பின்னர் கம்போடியாவில் இராணுவ அரசாங்க ஆட்சி நீக்கப்பட்டு அடக்குமுறை அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. புதிய அரசாங்கம் வியட்நாமிற்கு சாவால் விடும் வகையில் எல்லை தகராறுகளை உருவாக்கியது. இதனால் அதிர்சியடைந்த வியட்நாமிய அரசாங்கம் கம்போடியாவினைக் கைப்பற்றி அங்கு பொம்மை அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது. பொம்மை அரசாங்கத்தினை சீன அதரவுடனான அமைப்பு எதிர்க்கத் தொடங்கியது. இதனால் உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகியது. 1991 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் “கம்போடியா அரசியல் தீர்விற்கான ஒப்பந்தம்” கைச்சாத்திடப்பட்டது.1993 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் கம்போடியாவில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு புதிய அரசாங்கம் பதியேற்றது..
பொஸ்னியா
1991 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் யூகோஸ்லேவேக்கியா இன அடிப்படையில் பிரிவடையத் தொடங்கியதுடன், இனத் தேசியவாத உணர்வுகள் கூர்மையடைந்தது. குரேசியர்கள் உள்நாட்டு யுத்தத்தினை எதிர்கொண்டனர். யூகோஸ்லேவேக்கியாவிலுள்ள சேபியர்களுடைய இராணுவம் குரேசியர்களுடைய பிரதேசத்திற்குள் ஊடுருவியதுடன் பாரியளவிலான மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டது. 1992 ஆம் ஆண்டு பொஸ்னியா மற்றும் ஹெர்சோகொவினா (Herzegovina) ஆகிய பிராந்தியங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தின. இதனைத் தொடர்ந்து இப்பிராந்தியம் சேர்பியர்கள், குரொசியர்கள்,பொஸ்னிய இஸ்லாமியர்கள் ஆகியோர்களுக்கிடையிலான யுத்தப்பிராந்தியமாக மாறியது. இவ்யுத்தத்தில் பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள்,பலாத்காரமாக மக்களை வெளியேற்றுதல் போன்றன நடைபெற்றன. தமது பிரதேசத்தில் இனச்சுத்திகரிப்பு செய்யும் முயற்சியில் பரஸ்பரம் இராணுவம் ஈடுபட்டது.இவ்யுத்தத்தில் ஏறக்குறைய தொன்ணூற்றாறாயிரம் (96,000) பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
புருண்டி-ருவன்டா மோதல்
1990 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ருவன்டாவின் எல்லைப் பிரதேசங்களில் உள்நாட்டு மோதல் ஆரம்பமாகியது. ஹயூரு (Hutu) தலைமையிலான ருவன்டா அரசாங்கப் படைகளுக்கும், உகண்டாவிலிருந்து செயற்பட்ட ரூசி (Tutsi) தலைமையிலான ருவன்டா தேசப்பற்று முன்னணிக்கும் (Rwandan Patriotic Front) இடையில் அவ்வப்போது நடைபெறத் தொடங்கியது. 1993 ஆம் ஆண்டு ருவன்டா அரசாங்கத்திற்கும் ருவன்டா தேசப்பற்று முன்னணிக்கும் இடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ருவன்டா தேசப்பற்று முன்னணி ருவன்டாவினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் பின்னர் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்தது. ருவன்டா தேசப்பற்று முன்னணி யுத்தநிறுத்தத்தினை பிரகடனப்படுத்தியதுடன்,ஐந்து வருடங்களுக்கான நாடுகடந்த அரசாங்கமும் உருவாக்கப்பட்டது.
சோமாலியா
1991 ஆம் மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் சோமாலியாவில் வாழும் மரபுக்குழுக்கள் நாட்டின் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இதனால் சோமாலியாவில் சட்டம் ஒழுங்கு என்பன சீர்குலைந்தது. சோமாலியாவில் மரணங்கள், உணவூப் பஞ்சம் என்பன ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்பட்டன. ஐடிட் (Aidid) ஆட்சியை இல்லாதொழிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி 1995 ஆம் ஆண்டு ஐடிட் படுகொலை செய்யப்பட்டதுடன் முடிவிற்கு வந்தது.
கெயிட்டி
1990 களுக்கு முன்னரான கெயிட்டியின் வரலாறு இராணுவ சர்வாதிகாரத்திற்குட்பட்டதாகவே இருந்தது.1990களின் ஆரம்பத்தில் ஜனாதிபதி அரிஸ்ரயிட் (Aristide) தலைமையில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் உருவாக்கப்பட்டது. 1990 களின் இறுதிக்காலப்பகுதியில் இராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதுடன், அரிஸ்ரயிட் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் நாட்டைவிட்டு துரத்தப்பட்டார்கள். நாட்டினுடைய சூழ்நிலை மிகவும் மோசமானதுடன்,அனேக மக்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினார்கள். ஐக்கிய அமெரிக்காவின் படைகளை அதிகமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுப் படைகள் கெயிட்டியை கைப்பற்றிக் கொண்டது. இதன் பின்னர் நாடு திரும்பிய அரிஸ்ரயிட் 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.
ருவென்டா
குயூரு இனத்தைச் சேர்ந்த ரூவென்டா ஜனாதிபதி பிரயாணம் செய்த விமானம் 1994 ஆம் ஆண்டு சித்திரை மாதம் கிகாலி விமானநிலையத்தில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டதுடன் அவரும் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலைக்கு ரியுற்சி கிளர்ச்சிக் குழுவின் தலைவர் போல் ககாமியே (Paul Kagame) காரணம் எனக் குற்றம்சாட்டப்பட்டது. இதனை மறுத்த ககாமி குயுரு தீவிரவாதிகள் இப்படுகொலையினைச் செய்து விட்டு ரியுற்சி சமூகம் மீது இக்குற்றத்தினைச் சுமத்துகின்றார்கள் எனக் குற்றம்சாட்டினார். ஜனாதிபதியின் படுகொலைக்கு யார் பொறுப்பாக இருந்தாலும், படுகொலைசெய்யப்பட்டு சில மணிநேரத்திற்குள் வன்முறைக்கான பிரச்சாரம் நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்னர் ஆரம்பமாகிய வன்முறை மூன்றுமாதங்களின் பின்னரேயே நிறுத்தப்பட்டது. 1994 ஆண்டு சித்திரை மாதம் ரூவென்டாவில் ஆரம்பமாகிய இனப்படுகொலையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட 800,000 ரியுற்சி மற்றும் மிதவாத குயுரு சிறுபான்மை இனமக்கள் தீவிரவாத குயுரு இனமக்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். ஐந்து இலட்சம் பெண்கள் (500,000) பாலியல் வல்லுறவிற்கும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்;டனர். இரண்டு இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.
சிரியா
சிரியாவில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் தொகை ஒரு இலட்சத்தினைத் தாண்டிவிட்டதாகவும் , இரண்டு இலட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளதாகவும், நான்கு இலட்சம் மக்கள் உள்ளக இடப் பெயர்வுக்குள்ளாகியுள்ளதாகவும் கூறப்பட்டது. கற்பனைப் பண்ணிப்பார்க்க முடியாதளவிற்கு சிரிய மக்களின் துன்பம் அதிகரித்துள்ளதுடன், தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களின் பயன்பாடு மிகவும் கவனத்திற்குரிய குற்றமாக நீண்ட காலம் இனம்காணப்பட்டுள்ளது. சர்வதேச சமுதாயம் இதனைத் தடுத்து நிறுத்த இணைந்து நடவடிக்கை எடுக்கத் தாமதித்து வருகிறது. யுத்தத்தில் ஈடுபட்டு வரும் இருதரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து மக்கள் இரத்தம் சிந்துவதைத் தடுக்க வேண்டியிருந்தது. சிரியாவின் இரசாயன ஆயுதங்களைச் சர்வதேசக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் ஐக்கிய அமெரிக்காவும், ரஸ்சியாவும் 2013 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 14 ஆம் திகதி கைச்சாத்திட்டன. இவ் ஒப்பந்தம் “இவ்வருடம் (2013)கார்த்திகை மாதத்தில் தன்னிடமுள்ள இரசாயன ஆயுதங்களின் கையிருப்புக்களை சிரியா பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், இவ் ஆயுதங்கள் அனைத்தும் 2014 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அழிக்கப்படல் வேண்டும் என்றும், இவைகளை நிறைவேற்ற சிரியா தவறுமாயின் அதன் பலாபலன்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்” என்றும் கூறியது.
இலங்கை
2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த இறுதி நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பின் படி 40,000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், மிகவும் பாதகமாகவுள்ள மனிதவுரிமை விடயங்களைச் சீர்படுத்துவதில் அக்கறையின்மை காட்டப்படுகிறது. குறிப்பாக மனித உரிமை பாதுகாவலர்களைப் பழிவாங்குதல், சிறுபான்மை சமயத்தவர்களுக்கு எதிரான வன்முறை, சட்ட ஆட்சி வலுவிழந்து போவது, பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றம் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவது தாமதமடைந்துள்ளது.பொதுமக்களுக்கு பொறுப்புக் கூறும் வகையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்தும்படியும், உள்நாட்டு யுத்தத்தின் இறுதிநாட்களில் சர்வதேச மனிதாபிமானச் சட்டம், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் என்பன மிகவும் மோசமாக மீறப்பட்டமை தொடர்பாக நம்பத்தகுந்த நீதி விசாரணைக்கான பொறிமுறையொன்றினை உருவாக்குமாறும் இலங்கையினை நீண்ட காலமாக சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது.
இன்றையதேவை
இனச்சுத்திகரிப்பு போன்ற மனிதப்படுகொலைகளிலிருந்து தனது நாட்டுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ளது. சட்டத் திறமையின்மையால் மனிதப்படுகொலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் அரசுகள் தோல்வியடையுமானால், பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பு சர்வதேச சமூகத்திற்குரியதாகும். இக்கொள்கையானது ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இதன்பின்னர் பாதுகாப்பிற்கு பொறுப்பு என்ற கொள்கையாக இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே கொடுங்கோண்மையான ஆட்சியிலிருந்து சிறுவர்கள், பெண்கள் உட்பட பல இலட்சம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மிக்க தலைவர்களை தெரிவுசெய்ய வேண்டிய கட்டாயதேவை உருவாகியுள்ளது. ஏனெனில் எல்லோரும் ஒன்றுபட்டு மக்கள் படுகொலைகளைத் தடுத்து இனப்படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்கள் படுகொலைகளைத் தடுத்தல் என்பது முதல்நிலை அரசியல் விருப்பமாக மாறவேண்டும். மக்கள் படுகொலைகள், இனப்படுகொலைகள் போன்றவற்றைத் தடுப்பதற்கான சரியான தெரிவினை உருவாக்கக்கூடிய தலைவர்களை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலும், செயற்பாடுகளும் அவசியமாக்கபடுதல் வேண்டும்.