(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.09.21, 2013.09.22 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
சர்வதேசச் சங்கத்தின் (League of Nations) தோல்விக்குப் பின்னர்,குறிப்பாக 1939 ஆம் ஆண்டிற்கும் 1945 ஆம் ஆண்டிற்கும் இடையில் நடைபெற்ற கொடூரமான இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐம்பது நாடுகள் கலந்து கொண்ட பிரபல்யமான சான்பிரான்ஸ்சிஸ்கோ (San Francisco) மகாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சாசனம் வரையப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் கொடூரமான அழிவுகள் உலக சமாதானம் அடையப்பட வேண்டுமாயின் உலக நாடுகளுக்கிடையில் கூட்டுறவினை வளர்ப்பது அவசிமானது என்பதை உணர்த்தியது.ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் உலக சமாதான இலக்கிற்குப் பொருத்தமான அரசியல் சட்ட வடிவத்தினை வழங்கியுள்ளதாக எல்லோராலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. ஆனால் நகைப்புக்குள்ளாகும் வகையில் பத்துக்கு ஒன்று என்ற விகிதாசாரத்தில் (10:1) உலகநாடுகளில் ஆயுத மோதல்களும், மனிதப் படுகொலைகளும், பாரியளவிலான இடப்பெயர்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பனிப்போர் முடிவடைந்த பின்னர் இதன் விகிதாசாரம் மேலும் அதிகரித்திருந்தது எனவும் கூறலாம். உலகில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களையும் அதனால் ஏற்படும் மனிதப் படுகொலைகளையும் குறைப்பதில் அல்லது இவைகளைத் தடுத்து சமாதானத்தினை உருவாக்குவதில் ஐக்கிய நாடுகள் சபை வேகத்துடனும்,விவேகத்துடனும்,உறுதியுடனும் செயற்படுவதில் பலவீனப்பட்டு தோல்வியடைந்து வருகின்றது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அறுபத்தெட்டாவது பொதுக் கூட்டத்தொடர் 2013 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இது எதிர்வரும் ஐப்பசி மாதம் 04 ஆம் திகதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக சமாதானத்தை அடைவதற்குத் தற்போதிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு முறைமை பொருத்தமானதல்ல என்ற கருத்து சர்வதேசநாடுகள் மத்தியில் வலுவடைந்து வருகின்றன. எனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் இருபத்தியோராம் நூற்றாண்டிற்குப் பொருத்தமான கட்டமைப்பு மாற்றங்களுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்.
ஆயுத மோதல்கள்
சுவீடனிலுள்ள உப்சலா பல்கலைக்கழகத்தின் மோதல் தகவல் திட்ட ஆவணங்கள் தரும் தகவல்களின்படி 2010 ஆண்டில் முப்பத்தியொரு ஆயுத மோதல்கள் உலகின் பல பாகங்களிலும் நிகழ்ந்து கொண்டிருந்ததாகவும், இது 2011 ஆம் ஆண்டில் முப்பத்தியேழு ஆயுத மோதல்களாக அதிகரித்திருந்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் 1946 ஆம் ஆண்டிற்கும் 2011 ஆம் ஆண்டிற்கும் இடையில் இருநூற்று நாற்பத்தியெட்டு ஆயுத மோதல்கள் உலகின் பல பாகங்களிலும் நடைபெற்றதாக உப்சலா பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2011 ஆம் ஆண்டு நிகழ்ந்து கொண்டிருந்த முப்பத்தியேழு ஆயுத மோதல்களில் ஆபிரிக்கா கண்டத்தில் பதினைந்து மோதல்களும், ஆசியாக் கண்டத்தில் பதின்மூன்று மோதல்களும், மத்தியகிழக்கில் ஆறு மோதல்களும், அமெரிக்கா கண்டத்தில் இரண்டு மோதல்களும், ஐரோப்பா கண்டத்தில் ஒரு மோதலும் பிராந்திய ரீதியாக நடைபெற்றிருந்தன. இதில் இருபத்தியேழு உள்நாட்டு மோதல்களும், வெளிநாடுகளின் தலையீட்டுடன் நடைபெறும் ஒன்பது உள்நாட்டு மோதல்களும், அரசுகளுக்கிடையில் ஒரு மோதலும்; நடைபெற்றுள்ளன.
இவ் முத்தியேழு மோதல்களில் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், லிபியா, சூடான், யேமன் ஆகிய ஆறு நாடுகளின் உள்நாட்டு மோதல்கள் யுத்தத்திற்குரிய தீவிரத்தன்மையற்றுக் காணப்பட்டன. அதாவது வருடத்தில் ஆயிரம் யுத்தமுனை மரணங்களே இந்நாடுகளின் உள்நாட்டு மோதலினால் நிகழ்ந்துள்ளன. இம் மோதல்களால் பல இலட்சம் மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் மக்கள் அகதிகளாக உலகின் பல பாகங்களுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். உலக மக்கள் அமைதிமை இழந்து தெருக்களுக்கு வந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்ற கேள்வி மட்டுமே எஞ்சியுள்ளது.
சிரியாவின் உள்நாட்டு மோதல்
இன்று சிரியாவின் நாளாந்தப் மனிதப் படுகொலைகள் தொடர்பு சாதனங்களின் அதிக கவனத்திற்குள்ளாகி வருகின்றன. 2011 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையில் 2,600 சிரிய மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தெரிவித்தார். ஆயினும்,சிரியாவில் சமாதானத்தினை உருவாக்குவது தொடர்பாக உறுதியான தீர்மானங்களை நிறைவேற்றி மனிதப் படுகொலைகளைத் தடுக்க முடியாது ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்து வருகிறது. இத் தோல்விக்குப் பாதுகாப்புச் சபையின் நிரந்தர ஐந்து அங்கத்துவ நாடுகளும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றார்கள்.
இன்று “சிரியாவில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் தொகை ஒரு இலட்சத்தினைத் தாண்டிவிட்டதாகவும், இரண்டு இலட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளதாகவும், நான்கு இலட்சம் மக்கள் உள்ளக இடப் பெயர்வுக்குள்ளாகியுள்ளதாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவையில் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கற்பனைப் பண்ணிப்பார்க்க முடியாதளவிற்கு சிரிய மக்களின் துன்பம் அதிகரித்துள்ளதுடன், தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களின் பயன்பாடு மிகவும் கவனத்திற்குரிய குற்றமாக நீண்ட காலம் இனம்காணப்பட்டுள்ளது. சர்வதேச சமுதாயம் இதனைத் தடுத்து நிறுத்த இணைந்து நடவடிக்கை எடுக்கத் தாமதித்து வருகிறது. வல்லரசுகள் தங்களுக்குள் மோதுவதற்கும்,தமது புவிசார் அரசியல் நலன்சார்ந்து சிந்திப்பதற்கும் இது பொருத்தமான தருணமல்ல. ஐக்கிய நாடுகள் சபையுடன் அரசுகள் இணைந்து யுத்தத்தில் ஈடுபட்டு வரும் இருதரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து மக்கள் இரத்தம் சிந்துவதைத் தடுக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.
அண்மையில் நிகழ்ந்த பாதுகாப்புச் சபை அமர்வில் சிரியா தன்னிடம் இருக்கும் இரசாயன ஆயுதங்களை பகிரங்கப்படுத்த வேண்டும். அதேநேரம் 2014 ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் தன்னிடம் இருக்கும் இரசாயன ஆயுதங்களை சிரியா கையளிக்க வேண்டும் என பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளாகிய பிரான்ஸ்,பிரித்தானியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கோரியிருந்தன. ஆனால் சிரியாவினை இவ்வாறு அச்சுறுத்துவது சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடாகிய ரஸ்சியா தெரிவித்துள்ளது. இதனை ஐந்தாவது பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடாகிய சீனாவும் ஆதரிதத்து. இதனால் சிரியாவின் உள்நாட்டு மோதலும்,அதனால் ஏற்பட்ட மனிதப் படுகொலைகளும் மீண்டும் வல்லரசுகளின் நலன்களுக்கான துரும்புச் சீட்டாக மாறிவிடுமோ என்ற அச்சம் தோன்றியது.
இந்நிலையில் புதியதொரு தீர்மானத்தினை பாதுகாப்புச் சபை முன்வைத்தது. இத் தீர்மானத்திற்கு இணங்க சிரியாவின் இரசாயன ஆயுதங்களைச் சர்வதேசக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் ஐக்கிய அமெரிக்காவும், ரஸ்சியாவும் 2013 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 14 ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ளன. இவ் ஒப்பந்தம் “இவ்வருடம் கார்த்திகை மாதத்தில் தன்னிடமுள்ள இரசாயன ஆயுதங்களின் கையிருப்புக்களை சிரியா பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், இவ் ஆயுதங்கள் அனைத்தும் 2014 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அழிக்கப்படல் வேண்டும் என்றும், இவைகளை நிறைவேற்ற சிரியா தவறுமாயின் அதன் பலாபலன்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்” என்றும் கூறுகின்றது. ஐக்கிய அமெரிக்காவிற்கும் ரஸ்சியாவிற்கும் இடையிலான இவ் ஒப்பந்தம் சிரியா மீது ஐக்கிய அமெரிக்கா நடாத்தத் திட்டு வந்த தாக்குதலை சிறிது காலத்திற்குப் பிற்போட்டுள்ளது எனலாம்.
மறுபக்கத்தில் இவ் ஒப்பந்தம் பாதுகாப்புச் சபையினால் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுமாயின் கொடிய சிரியாவின் இரண்டரைவருட உள்நாட்டு யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றியாக இதனைக் கருத முடியும். இதில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடையுமாயின் அதன் கட்டமைப்பு குறித்து எழும் கேள்விகளுக்கும் பாதுகாப்பச் சபையின் மூர்க்கத்தனமான அல்லது பிடிவாதமான செயற்பாடுகளுக்கும் சாட்சியாக மாறிவிடலாம்.
மறுசீரமைப்பு முயற்சி
பாதுகாப்பு சபை ஐக்கிய அமெரிக்கா,பிரான்ஸ்,பிரித்தானியா,ரஸ்சியா,சீனா ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளையும் இரண்டு வருடத்திற்கு ஒருதடவை பொதுச்சபையிலிருந்து தெரிவு செய்யப்படும் பத்து தற்காலிக உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கியுள்ளது. ஐக்கியநாடுகள் சபையின் அங்கத்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு அங்கத்தவர்களின் சம்மதமும் , பாதுகாப்புச்சபை நிரந்தர உறுப்பு நாடுகள் ஐந்தினது சம்மதமும் பாதுகாப்புச்சபை மறுசீரமைப்பிற்குத் தேவையாகும். இந்நிலையில் பனிப் போரின் பின்னர் பல தடவைகள் பாதுகாப்புச் சபையினை மறுசீரமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியடைந்துள்ளது.
பனிப்போரின் பின்னர் பாதுகாப்புச் சபையினை மறுசீரமைப்பிற்கான முதலாவது பிரேரணை 1997 ஆம் ஆண்டு பொதுச்சபையில் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்தது.பின்னர் 2004 ஆம் ஆண்டு பாதுகாப்பு சபையின் தற்காலிக அங்கத்தவர்கள் தொகையினை பத்திலிருந்து இருபத்திநான்காக அதிகரிப்பதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டது. ஆயினும் அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2005 ஆம் ஆண்டு ஜீ நான்கு நாடுகள் என அழைக்கப்படும் இந்தியா, யப்பான், ஜேர்மனி, பிறேசில் ஆகிய நாடுகள் புதியதொரு பிரேரணையினை சமர்ப்பித்தன. இதன்படி ஜீ நான்கு நாடுகளுக்கு நான்கு ஆசனங்களும், ஆபிரிக்க நாடுகளுக்கு இரண்டு ஆசனங்களுமாக ஆறு புதிய ஆசனங்கள் பாதுகாப்பு சபைக்கு வழங்கப்பட்டு நிரந்தர அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை ஐந்திலிருந்து பதினொன்றாக அதிகரிக்கப்படல் வேண்டும். அதேநேரம் ரத்து அதிகாரங்களற்ற தற்காலிக அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கப்படல் வேண்டும் எனத் தெரிவித்திருந்தன. இப்பிரேரணைக்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்திருந்தது. ஆயினும் இப்பிரேரணை பின்வரும் பலமான இரண்டு குழுக்களால் திருத்தப்பட்டு தடுக்கப்பட்டது.
-
இத்தாலி, ஆர்ஜன்ரீனா, பாக்கிஸ்தான்,மெக்ஸிக்கோ ஆகிய நான்கு நாடுகள் தலைமையிலான ஐக்கிய கருத்தொருமைப்பாட்டுக்குழு (United for Consensus) பாதுகாப்புச் சபையின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை பத்து தற்காலிக அங்கத்தவர்களினால் மாத்திரமே அதிகரிக்கப்பட வேண்டும் என விரும்பின.
-
அனைத்து ஆபிரிக்க நாடுகளும் ஒன்றிணைந்து (Ezulwini Consensus) ரத்து அதிகாரமுடைய இரண்டு நிரந்தர அங்கத்துவமும், மேலதிகமாக ஆபிரிக்கநாடுகளுக்கு இரண்டு தற்காலிக அங்கத்துவமும் பாதுகாப்பு சபைக்கு வழங்கப்பட வேண்டும் என்றதொரு புதிய ஆலோசனையினை முன்வைத்தன.
2009 ஆம் ஆண்டு மாசி மாதம் இடைக்கால மறுசீரமைப்பிற்கான புதிய பிரேரணை ஒன்றை பிரித்தானியா,பிரான்ஸ் ஆகிய இரு நாடுகள் இணைந்து சமர்பித்திருந்தன. ஆயினும் இதுவரை பாதுகாப்புச்சபை மறுசீரமைக்கப்படவில்லை. இது தொடர்பாக பொதுச் செயலாளர் பான் -கீ-மூன் கருத்துத் தெரிவிக்கையில் “பாதுகாப்புச்சபை மறுசீரமைக்கப்பட வேண்டும் இதில் எவ்வித சந்தேகமுமில்லை. உலகளாவிய ரீதியில் அதிகரித்துவரும் மோதல்களையும், பதட்டத்தினையும் தணிப்பதில் பாதுகாப்பு சபையின் நிரந்தர ஐந்து நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு காணமுடிவதில்லை. பூகோள விடயங்கள் தொடர்பான முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றும் போது பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகள் ரத்து அதிகாரத்தினை பயன்படுத்துகின்றன. பாதுகாப்பு சபை நிரந்தர அங்கத்தவர்கள் கருத்தொருமைப்பாட்டுடனும்,ஐக்கியத்துடனும் செயற்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் தாக்கத்திலிருந்து உலகத்தினை மீண்டும் உயிர்த்தெழ வைப்பதற்காக நிரந்தர அங்கத்தவர்களைக் கொண்ட பாதுகாப்புச்சபை ரத்து அதிகாரத்துடன் ஸ்தாபிக்கப்பட்டது.இவ் ரத்து அதிகாரத்தினைப் பயன்படுத்தி 1946 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரையில் நிரந்தர அங்கத்துவ நாடுகளாகிய ரஸ்சியா (1990 ஆம் ஆண்டு வரையில் சோவியத் யூனியன்) 123 தடவையும், ஐக்கிய அமெரிக்கா 82 தடவையும், பிரித்தானியா 32 தடவையும், பிரான்ஸ் 18 தடவையும், சீனா 06 தடவையும் ரத்து அதிகாரத்தினைப் பயன்படுத்தியிருந்தன.
உண்மையில் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச அரசுகளுக்கிடையில் நிகழ்ந்த மோதலின் விளைவினால் தோற்றம் பெற்றதாகும். உலக சமாதானத்தைப் பேணுவதே இதன் முதலாவதும், முதன்மையானதுமான இலக்காகும் என ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் முகவுரை கூறுகின்றது. இவ்வகையில், சாசனம் கூறும் அரசியல்-சட்ட எல்லைக்குள் மாத்திரம் நின்றே ஐக்கிய நாடுகள் சபை செயற்படுகின்றது. இதனால் ஐக்கிய நாடுகள் சபை மோதல்களை அவதானித்து அறிக்கை தயாரித்து வெறுமனே கருத்துக் கூறுகின்ற பார்வையாளர் நிலையிலேயேயுள்ளது. இந்நிலையில் பார்வையாளர் வகிபாகத்தில் இருந்து விடுபட்டு தலையிடும் வகிபாகத்தினை ஐக்கிய நாடுகள் சபை எடுத்துக்கொள்ள வேண்டும்.ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் சமகால மோதல்களைத் தீர்ப்பதற்கு வலுவற்றதாக மாறிவிட்டது. இருபத்தியோராம் நூற்றாண்டில் சமாதானத்தினைப் பேணுவதற்கு உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு கட்டுப்படுகின்ற வகையில் அதன் சாசனம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுவடைந்து வருகின்றது.
பூகோள ஜனநாயகம்
பூகோளப் பொருளாதாரத்தில் முக்கிய வகிபங்கினை வகிக்து வருகின்றதும், கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்றதும், மிகவும் பிரபல்யமடைந்து வருகின்றதுமான இந்தியாவிற்கு இதுவரையில் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம் வழங்கப்படவில்லை.
இருபதாம் நூற்றாண்டில் குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியும், யப்பானும் தோல்வியடைந்தார்கள் என்பதற்காக அவர்களுக்கு பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம் வழங்கப்படவில்லை. யப்பான் உலகப் பொருளாதாரத்தில் இன்று இரண்டாவது இடத்திலுள்ளதுடன் ஐக்கிய நரடுகள் சபைக்கு தேவையான நிதியினை வழங்கக் கூடிய வலுவுடனும் இருக்கிறது. ஆனால் இதுவரை யப்பானுக்கு பாதுகாப்புச்சபையில் நிரந்தர அங்கத்துவம் வழங்கப்படவில்லை. ஆனால் பொருளாதர பலமிழந்து வருகின்ற பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்சியா ஆகிய நாடுகள் தொடர்ந்தும் பாதுகாப்புச் சபையில் தமது நிரந்தர அங்கத்துவத்தினைத் தொடர்ந்து தக்கவைத்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் ஆபிரிக்க நாடுகள் அங்கத்துவம் பெற்றுள்ளன. ஆனால் நிரந்தரப் பாதுகாப்பு சபை அங்கத்துவ நாடாக எந்தவொரு நாடும் இதுவரை அங்கத்துவம் பெறவில்லை. பாதுகாப்புச் சபையில் ஆபிரிக்காவின் எந்தவொரு நிரந்தர நாடும் அங்கத்துவம் பெறாத நிலையில் ஆபிரிக்காவின் 60 சதவீமான அமைதிச் செயற்பாட்டுப்பணிகள் பாதுகாப்புச் சபையினால் தீர்மானிக்கப்படுகின்றன. அதேபோன்று தென்அமெரிக்கா கண்டத்தில் இருந்து பாதுகாப்புச் சபைக்கு நிரந்தர அங்கத்துவ நாடுகள் தெரிவு செய்யப்படுவதில்லை.
ஆபிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, அறாபிய நாடுகளின் ஆதரவு இல்லாமல் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பிற்குள்ளிருந்து கொண்டு பாரிய மோதல்கள், யுத்தங்கள்,தகராறுகள் தீர்க்கப்பட முயற்சிக்கப்படுகிறது. இது முரண்பாடான, நீதியற்ற, சமநிலையற்றதொரு நிலையாகும். இப்போது உலகம் இருபத்தியோராம் நூற்றாண்டில் உள்ளது என்பதை மறந்துவிடமுடியாது. இருபதாம் நூற்றாண்டு போலன்றி இருபத்தியொராம் நூற்றாண்டில் பூகோள நல்லாட்சியை உருவாக்க சர்வதேச சமுதாயம் போரடவேண்டும்.
பிரான்ஸ்,பிரித்தானியா இணைந்து சமர்பித்த பிரேரணையினைப் பயன்படுத்தி பாதுகாப்புச் சபையில் ஜனநாயகத்தினை விரிபுபடுத்தப்பட வேண்டும். எனவே இருபத்தியொராம் நூற்றாண்டின் பூகோள அரசியல் யதார்த்தத்தினை புரிந்து கொண்டு இந்தியா, யப்பான்,பிறேசில்,ஜேர்மனி மற்றும் இரண்டு ஆபிரிக்க நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடாக இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற பிரான்ஸ்சின் வாதம் நியாயமானதாகும். இந்நிலையில் நடைபெற்ற வரும் பொதுச்சபை கூட்டத்தொடர் எதிர்காலத்திற்கான புதிய ஜனநாயகப் பாதையினைத் திறக்க வேண்டும். முதன்நிலைப் பொறுப்பாகிய பூகோள சமாதானம் என்பது பொதுச்சபை அங்ஙகத்தவர்கள் அனைவரதும் தோள்களிலேயே உள்ளது. இதற்கான செயற்பாடுகள் ஜனநாயகரீதியாக அனைத்து அங்கத்துவ நாடுகளிற்கும் பகிரப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும்.