வரலாற்று அல்லது படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு

படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு இரு விடயங்களை முதன்மைப்படுத்துகின்றது. ஒன்று அரசு உருவாக்கப்படுவதில்லை. பதிலாக அரசு வளருகின்றது.அரசு வளர்கின்றது அல்லது படிப்படியாக வளர்கின்றது என்ற கருத்து, பல்லாயிரக்கணக்கான வருட வளர்ச்சியினை கொண்டது அரசு என்பதனை குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.இரண்டாவது பல காரணிகள் அரச கட்டுமானத்தினை (State Building) உருவாக்குவதில் பங்கேற்கின்றன. அரசு இறைவனால் படைக்கப்பட்டதா? அல்லது பலமுடையவனால் படைக்கப்பட்டதா? அல்லது சமூக ஒப்பந்தத்தினால் ஏற்படுத்தப்பட்டதா? அல்லது தாய் தந்தை வழியாகத் தோன்றியதா? அல்லது இது போன்ற பல வழிகளினால் உருவாக்கப்பட்டதா? போன்ற வினாக்களுக்கு விடை காண்பதைவிட, இங்கு அரசு ஒரு படிமுறைக்கூடாக வளருகின்றது என்ற வாதமே பலமடைந்து காணப்படுகிறது.

கெட்டல் (Gettel) என்பவர் இது தொடர்பாக கூறும் போது ‘ஏனைய சமூக நிறுவனங்களைப் போலவே அரசும் வேறுபட்ட நிபந்தனைகள் வழிமுறைகள் வளங்கள் என்பனவற்றில் இருந்து எழுந்ததாகும். இது பெருமளவிற்கு புலனுக்குட்படாத வகையில் எழுந்ததாகும் என்கின்றார்”. கார்னர் ‘அரசு கடவுளின் கைவேலையோ அல்லது பலமுடையவனின் பலத்தினாலோ அல்லது தீர்மானங்களை உருவாக்குவதனாலோ அல்லது குடும்பத்தை விஸ்தரிப்பதனாலோ உருவானதல்ல” எனக் கூறுகின்றார். அரசு மனிதர்களின் நல்வாழ்விற்காகவும், வாழ்க்கைத் தேவைக்காகவும் இயற்கையாக வளர்ச்சியடைந்து தொடர்ந்திருக்கின்ற ஒரு நிறுவனமாகும். இது நீண்டகாலமாக மெதுவாகவும், நிதானமாகவும பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது.

அரசு நடைமுறையிலுள்ள நிலைக்கு எப்போது, எப்படி வந்தது என்பதை வரையறுப்பது மிகவும் கடினமானதாகும்.ஏனைய சமூக நிறுவனங்களைப்போல வேறுபட்ட சூழ்நிலைகள், செல்வாக்குகளின் ஆதரவுடன் அரசும் வளர்ச்சியடைந்திருக்கலாம். அரசு சமுதாய வளர்ச்சி போக்கின் பெறுபேறு எனின் அரசு என்ற நிறுவனத்தின் படிமுறை வளர்ச்சிக்கு உதவி செய்த காரணிகள் எவை என்ற வினா எழுவது இயற்கையானதாகும். பௌதீக சுற்றுச் சூழல் ,புவியியல்நிலைகளின் செல்வாக்கு என்பவைகளுக்குப் புறம்பாக ஐந்து முக்கிய விடயங்கள் அரசு தோன்றி வளர்வதற்குப் பங்களிப்புச் செய்திருக்க முடியும் என்பதே இக் கோட்பாட்டினை ஆதரிப்பவர்களின் கருத்தாகும்.

இரத்த உறவு

ஆரம்பகால சமுதாயத்தில் இரத்த உறவு என்பது குடும்பக் கூட்டுறவு வாழ்க்கையினையும், ஐக்கியத்தினையும் ஏற்படுத்துகின்ற முதன்மையான அம்சமாக இருந்தது.ஆரம்ப காலத்தில் மனிதர்கள் இரத்த உறவின் அடிப்படையில் தாம் பொதுவான வம்சாவழியினர் என்ற உணர்வு ஏற்பட்டு ஒன்றுபட்ட சமூகமாகக் காணப்பட்டார்கள். ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கை ஒன்றிற்கான அடிப்படையாகிய ஆண், பெண், பிள்ளைகள் ஆகிய மூலக்கூறுகளின் வழி குடும்பம் என்ற முதல் சமூக அலகு தோன்றியது. குடும்பம் தனது தலைமையினை தானே தெரிவு செய்து கொண்டது. இத்தலைமை குடும்பத்தினை வழிநடாத்தும். இங்கு தாய் அல்லது தந்தை முழு அதிகாரத்தினையும் பெற்றவராக இருந்தார். இச்சமூக அலகில் ஆண் முதன்மையானவனாக இருந்த போது தந்தை வழி அதிகாரமும், பெண் முதன்மையானவளாக இருந்த போது தாய்வழி அதிகாரமும் வளர்ச்சியடைந்தது.அரசு எதிர்பார்க்கும் ஒழுக்கம்,கட்டளைகளுக்குக் கீழ்படிதல் என்பன குடும்பத்திலிருந்தே ஆரம்பமாகின்றது.

குடும்பங்கள் பெருக்கமடைகின்றபோது குடிகள்,குலங்கள் உருவாகின்றன.இது குடும்பத்தினை விட பெரிய அலகாகும். குடிகள் தமக்கான ஒரு தலைமையினை தெரிவு செய்ததுடன் இதுவே முழு அதிகாரத்தினையும் கொண்டிருந்தது. இச் சமூக வளர்ச்சிப் போக்கில் மக்களை ஒன்றுபடுத்திக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது இரத்த உறவு என்ற அம்சமேயாகும்.பொதுவாகப் பரம்பரை என்பது இரத்த உறவின் குறியீடாகக் கொள்ளப்பட்டது. இரத்த உறவுடன் பிணைக்கப்படாத மனிதன் அன்னியனாகவும், எதிரியாகவும் கணிக்கப்பட்டான். மக்ஜவர் ‘தலைமுறையினர் குழுவாக வளரும்போது இரத்த உறவு வலுவடைகின்றது.தந்தைக்கு மகனுடனிருந்த இரத்தப்பிணைப்பினாலான உறவு மாற்றமடைந்து சமூகத்துடன் பிணைக்கப்பட்ட உறவாக மாற்றமடைந்து, பரந்த சகோதரத்துவ உறவாக,உணர்வாக மாறியது.தந்தையிடமிருந்த அதிகாரம் சமூகத்தலைவனுடைய அதிகாரமாக மாறியது.இரத்தஉறவுச் சகாப்தம் புதிய வடிவில் மாற்றமடைந்து எழுர்ச்சியடைந்தது.இரத்த உறவு சமுதாயத்தினை உருவாக்கியது. சமுதாயம் நீண்டு சென்று அரசினை உருவாக்கியது.” எனக் கூறுகின்றார்.

சமயம்

அரசு வளர்வதற்கு இரத்த உறவுடன் இணைந்து சமயமும் பங்களிப்புச் செய்துள்ளது.ஆதிகாலத்தில் இரத்த உறவு, சமயம் என்பன குடுப்பங்களையும், குடிகளையும் ஒன்றிணைப்பதற்கு ஒரேதருணத்தில் பங்காற்றியுள்ளன. நாங்கள் எல்லோரும் ஒரே இரத்தம் என்ற உணர்வினை சமயம் ஏற்படுத்தியது.ஒரே சமயத்தவர்கள் என்ற உணர்வு மக்களை ஒன்றாக பிணைக்க உதவியது.காலப்போக்கில்,குடும்பங்கள் விஸ்தரிக்கப்பட ஒரே மரபுவழி வந்தவர்கள் என்ற இரத்தஉறவுப் பிணைப்பு பலவீனமடைந்தது. இந்நிலையில் பொதுவான வணக்கமுறை ஐக்கியத்தினை உருவாக்கப் பயன்பட்டதுடன்,அதிகாரத்திற்குக் கட்டுப்;பட்டு நடக்கவும் உதவியது.ஆரம்பகாலத்தில் மூதாதையர் வணக்க முறை சமூகத்தில் வழக்கில் இருந்திருந்தது.இது குடிமுறை சமூக வாழ்க்கையில் முதன்மையான மனிதனாக கருதப்பட்ட ஒருவன் கவர்ச்சிகரமான செயற்பாடுகள் மூலம் முதன்மைப்படுத்தப்பட காரணமாகியது. வித்தைகள், தந்திரங்கள் என்பவற்றினை இவன் வெளிப்படுத்திச் சமூக அதிகாரத்தினைப் பெற்றுக் கொண்டான்.சமயமும், அரசியலும் ஒன்றாக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக சமயம், சமயநிறுவனங்கள் என்பன அரசியல் அதிகாரத்தினைக் கைப்பற்றிக் கொண்டன.பின்னர் வரலாற்றில் தோன்றிய அராஜக ஆட்சிக்கான ஆதரவினைப் பெறவும்,கீழ்படிதலைச் செலுத்தவும் சமயம் உதவியது. ஆரம்பகாலத்திலன்றித் தற்காலத்திலும் அரசுகள் வளர்ச்சியடைவதற்கு சமயம் பங்களிப்புச் செய்கின்றது.சமயச்சார்பற்ற அரசாக இந்தியா தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும், சமயம் அரசியல் வாழ்க்கையில் முக்கியபங்காற்றுவதை அவதானிக்கலாம்.இதேபோல ஏனைய தென்னாசிய நாடுகளிலும்,தென்கிழக்காசிய நாடுகளிலும்,மத்தியஆசியநாடுகளிலும் சமயத்தின் செல்வாக்கு அதிகமாகவுள்ளது. பிரித்தானியாவில் இராணி இறையருள் கொண்டவராகவே இன்றும் நோக்கப்படுகின்றார்.

பலம்

பலம் என்ற காரணி, யுத்தம், முரண்பாடு என்ற வடிவில் அரசு வளர்வதற்குப் பங்காற்றுகின்றது.பலம் என்பது குடும்பத் தலைவரின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப முதன்மை பெறுவதுடன்,குடிகளின் உயர் அதிகாரத்தினை வைத்திருப்பவர் என்ற வகையில் முதன்மையாக்கப்படுகின்றது.பலம் என்ற எண்ணக்கரு ஒருவரின் அதிகாரத்தை எவ்வாறு தீர்மானிக்கும் என்பதற்கு வரலாற்றில் பல்வேறு உதாரணங்களை நாம் காட்ட முடியும்.வரலாறு என்பது குடிகளுக்கிடையிலான யுத்தத்தினால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்ற ஒரு கருத்து காணப்படுகின்றது.யுத்தத்தில் வெற்றி பெற்றவர் குடிகளின் எஜமானாக மாற்றப்படுவதுடன், அவரே குடிகளின் பிரபுவாகவும் காணப்படுகின்றார்.குடிகளின் அங்கத்தவர்கள் இப்பலசாலியின் கீழ் வாழ்வதற்கும், தொழில் புரிவதற்கும் ஏற்ற பாதுகாப்பு அல்லது ஏனைய குழுக்களில் இருந்து வரும் ஆக்கிரமிப்புக்களிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காக பலசாலியின் தலைமையினை ஏற்றுக்கொள்கின்றார்கள். பலசாலியின் பலம் அவரைத் தலைவராக்குவதுடன் அரசியல் இறைமை கீழ்படிவு என்பன ஏற்பட்டு அரசு ஒன்று இ;ங்கு உருவாகின்றது.இவற்றில் போராட்டமும், யுத்தமும் அரசு ஒன்று உருவாவதற்கான முதல் தர மூலகமாகும்.பலத்தினால் உருவாகும் குழுக்கள் பின்னர் பொது நலனுக்காக ஐக்கியப்பட்டு கொண்ட வரலாறு நிறையவே உள்ளது.எனவே பலம் என்பது அரசு வளர்வதற்கு பங்காற்றுகின்ற காரணியாக கருதப்படுகின்றது.

பொருளாதாரம்

மனிதன் தனது வாழ்விற்காக சில பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுகின்றான்.மிகவும் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் நாடோடியாக இடத்திற்கு இடம் அலைந்து வாழ்ந்து வந்தனர்.நாடோடியாக இடத்திற்கு இடம் அலைந்து உணவு தேடுவதே மனிதனின் பிரதான நோக்கமாக இருந்தது.ஆனால் காலப்போக்கில் மனிதன் தனது வாழ்க்கையினை நிரந்தரமாக ஒரிடத்தில் அமைக்கத் தொடங்கிய போது தொழிற்பிரிவினை உருவாகத் தொடங்கியது.சிலர் சமயத்தினை முதன்மையாக கொண்டு செயற்பட, சிலர் பாதுகாப்பினை முதன்மையாக கொண்டும், சிலர் விவசாயம், வர்த்தகம், கைத்தொழில் என பிரிவுபட்டும் சென்றனர்.தற்காலத்தில் பொருளாதார வாழ்க்கை என்பது முக்கியமான பண்பாகிவிட்டது.தனியார் சொத்துடமை என்பது நிறுவனமயப்பட்டுவிட்டது.மக்கள் தமக்கு உடமையாகவுள்ள மூலவளங்;களை பயன்படுத்தி உற்பத்திகளில் ஈடுபடக் கூடிய வல்லமையினை பெற்றுவிட்டார்கள். ரூசோவின் கருத்துப்படி ‘சொத்துடமை உருவாக்கம் என்பது சமூகத்தில் முரண்பாடுகளை தோற்றுவித்து சமாதானம் என்பது இல்லாமல் போயிருந்தது. இதனால் மக்கள் சமூக ஒப்பந்த அடிப்படையில் அரசை தோற்றுவித்தார்கள்”.பொருளாதார செயற்பாடுகள் ஆரம்பகாலம் தொடக்கம் அரசு ஒன்று அபிவிருத்தியடைவதற்கு பங்காற்றியுள்ளது.சொத்துடமையில் ஏற்பட்ட வேறுபாடு சமூக வர்க்கத்தினையும்,சாதிகளையும் உருவாக்கியது.ஒரு பலமான வர்க்கம் ஏனைய வர்க்கத்தினை பொருளாதார சுரண்டலுக்காக அடக்கியாள முற்பட்ட போது அரசு அபிவிருத்தியடையத் தொடங்கியது.தனியார் சொத்துக்களின் வளர்ச்சியானது சொத்துக்களைப் பாதுகாக்கவும், சொத்துக்களைப் பேணவும், சொத்துத் தகராறுகளை தீர்க்கவும், சட்டங்களை உருவாக்கவும் ஒரு நிறுவனம் தேவைப்பட்டது. இதுவே அரசாக அபிவிருத்தியடைந்தது.

அரசியல் உணர்வு

வாழ்க்கையினைப் பாதுகாப்பதற்கும், ஒழுங்குபடுத்துவதற்குமான அடிப்படைத் தேவையிலிருந்து எழுந்ததே அரசியல் உணர்வாகும்.மக்கள் வரையறுக்கப்பட்ட நிலப்பிரதேசத்தில் குடியேறத் தொடங்கியபோது ஏனையவர்களின் உதவிகளும்,பாதுகாப்பும், ஒழுங்கும் தேவைப்பட்டது. அதாவது, மக்கள் தம்முடைய பாதுகாப்பு, சொத்துக்கள் என்பவற்றை ஏனைய எதிர் சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கான தேவை அவசியமாகியது. இவையெல்லாம் அரசியல் அதிகாரம் எழுச்சியடைவதற்கு காரணமாக அமைகின்றதுடன், அரசியல் நிறுவனம் பற்றிய உணர்வு எழுவதற்கும் காரணமாக அமைகின்றது.மக்களுக்கு தாம் வாழுகின்ற தாய் நாட்டின் மீதான பற்றுதல் வளர்வதற்கும் காரணமாக அமைந்தது.இப்பற்றுதலே அரசு வளர்வதற்கும், உறுதி பெறுவதற்கும் காரணமாக அமைந்திருந்தது.

மேலே கூறப்பட்ட அனைத்துக் காரணிகளும் அரசின் நீண்ட பரிணாம வளர்ச்சிக்கு உதவியவைகளாக பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டாளர்கள் கூறுகின்றார்கள்.பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டாளர்கள் அரசு பற்றிய எல்லாக் கோட்பாடுகளையும் கருத்தில் எடுத்து அவற்றினூடாக அரசு அபிவிருத்தி அடைந்தது என்ற புதிய விளக்கத்தினை கொடுக்க முற்படுபவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

14,006 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>