உள்நாட்டு மோதல்களுக்கான காரணங்களை கல்வியியலாளர்கள் மதிப்பீடு செய்தமை தொடர்பாக மைக்கெல் பிறவுண் (Michael Brown) எடுத்துக் கூறுகின்றார். கல்வியலாளர்கள் உள்நாட்டு மோதல்களுக்கான நான்கு பிரதான பண்புகளை எடுத்துக் கூறுவதாக மைக்கல் பிறவுண் கூறுகின்றார். அவைகளாவன, கட்டமைப்பு விடயங்கள், அரசியல் விடயங்கள், பொருளாதார சமூக விடயங்கள், கலாசார உணர்வு ரீதியான விடயங்கள் என்பனவாகும்.
கட்டமைப்பு விடயங்கள்
கட்டமைப்பு விடயங்கள் மோதல் தீவிரமடைவதற்குக் காரணமாக இருக்கின்றது என மைக்கல் பிறவுண் கூறுகின்றார். மோதல் வன்முறையாக முனைப்படைவதற்கு மூன்று அமைப்புரீதியான விடயங்கள் முதன்மையானவைகள் எனக் கல்வியிலாளர்கள் கூறுகின்றனர். அவைகளாவன
1. பலவீனமான அரசுகள்,
பலவீனமான அரசுகளில் உறுதித்தன்மை குறைவாக இருத்தல், அறிவார்ந்த அரசியல் எல்லைகள், மற்றும் பிரதேசக் கட்டுப்பாட்டினை அர்த்தமுடன் பிரயோகிக்கக்கூடிய அரசியல் நிறுவனங்களின் ஆற்றல், ஆகியன குறைவாகக் காணப்படும்.
2. அரசுகளின் உட்பாதுகாப்பு,
அரச கட்டமைப்பு வலுவிழக்கின்ற போது வன்முறை, மோதல்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இனக்குழுக்கள், மத்திய அரசினால் நசுக்கப்படுகின்றன. அரசுகள் வலுவிழந்து காணப்படுகின்ற போது உள்நாட்டு மட்டத்தில் தனிப்பட்ட குழுக்கள் அவர்களுக்கான பாதுகாப்பினை அவர்களே ஏற்படுத்த முனைகின்றனர். இதனால் அரசுகள் பாதுகாப்பு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
3. இனப்புவியியல் தன்மை என்பவைகளாகும்.
பலமற்ற அரசுகளில் குழுக்கள் குறிப்பாக இனரீதியான குழுக்கள் தம்மைத் தாமே பாதுகாக்கின்றன. அதிகளவில் இனங்கள் பின்னிப்பிணைந்த சனத்தொகையினைக் கொண்ட நாடுகளில் இனங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது விலகிச் செல்கின்றதை காணமுடிகின்றது. இதனால் இனரீதியான குழுக்கள் ஒரு குறிப்பிட்ட அரசின் நிலப்பரப்பில் தனது அதிகாரத்தினை நிலைநிறுத்தப் போராடுகின்றன. இவைகள் பொதுமக்கள் மீதான நேரடித் தாக்குதல், தீவிர கொரில்லா யுத்தம், இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலைகள் என வளர்ந்து மோதலாகவும், வன்முறையாகவும் எழுகின்றன.
அரசியல் விடயங்கள்
அரசியல் விடயங்கள் உள்நாட்டு மோதல்களைத் தீர்மானிப்பது தொடர்பாக கல்வியலாளர்கள் நான்கு பிரதான விடயங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றனர். அவைகளாவன,
1. பாரபட்சமான அரசியல் நிறுவனங்கள், பிரிந்து செல்கின்ற தேசிய கொள்கைகள், குழுவாத அரசியல், உயர் குழாம் அரசியல் என்பவைகளாகும். மோதல்கள் அந்நாட்டிலுள்ள அரசியல் முறைமை, அம்முறையிலுள்ள நேர்மைத் தன்மைகள் என்பவற்றால் ஏற்படுகின்றன எனலாம். நெருக்கமான அதிகாரத்துவ முறைமை கோபத்தினை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக பாரபட்சமான செயற்பாட்டுடன் இணைந்து காணப்படுகின்றன.
2. இனவேறுபாடுகளை மையமாகக் கொண்டு பிரஜாவுரிமை, தேசியம் போன்றவற்றைப் புறக்கணித்து தேசியக் கொள்கைகளை வகுக்கின்ற போது அரசியல் மோதல்கள் ஏற்படுகின்றன.
3. குழுவாத அரசியலால் மோதல்களும் வன்முறைகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. கொள்கைகளில் ஆழமான பற்றுள்ள குழுக்கள், அடையாளங்களைக் கூர்மைப்படுத்துவதில் அக்கறையுள்ள குழுக்கள், எதிர்க்கும் தந்திரோபாயங்களைக் கொண்ட குழுக்கள் போன்றவற்றால் மோதல்களும் வன்முறைகளும் தோன்றுகின்றன.
4. உயர்குழாம் அரசியல் மோதலினைத் தோற்றுவிக்கின்றன. உயர்குழாமினர் தமது nhபருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்காகப் பல தந்திரோபாயங்களை மேற்கொள்கின்றனர். உயர் குழாமினர் இதற்காக அரசியலில் காட்டும் அக்கறை மோதல்கள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன.
சமூகப் பொருளாதார விடயங்கள்
மோதல்களுக்குச் சமூகப் பொருளாதார விடயங்களும் காரணமாகின்றன. இதற்கு அடிப்படையாக அமைவது பொருளாதாரப் பிரச்சினை, பாரபட்சமான பொருளாதார முறைமை, நவீனத்துவம், பொருளாதார அபிவிருத்தியின் எதிர்மறையான விளைவுகள் போன்றனவாகும். பொருளாதார வீழ்ச்சி, பொருளாதார சமநிலையற்ற தன்மைகள் நிகழ்கின்ற போது பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டு மோதல்கள் ஏற்படுகின்றன. பாரபட்சமான பொருளாதார நிலமையானது வர்க்கம், இனக் காரணங்களை மையமாக வைத்து ஏற்படுகின்றது. இதனால் கோபம், விரக்தி நிலை என்பன தோன்றுகின்றன. சமமற்ற பொருளாதார வாய்ப்புக்கள், சமமற்ற வளங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள், வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என்பன அநீதியான பொருளாதார முறைமையின் அறிகுறிகளாகும். இவைகள் சட்டபூர்வமற்றதாக இருப்பதால் மோதல்கள் ஏற்படுகின்றன. மேலும் பொருளாதார வளர்ச்சியானது வருமானவாய்ப்புகளில் சமமற்ற தன்மையினை ஏற்படுத்துமாயின் அங்கும் மோதல் ஏற்படும். இவற்றைவிட பொருளாதாரத் துறையில் ஏற்படுகின்ற நவீன மாற்றங்களும், முன்னேற்றங்களும், நவீனமயமாக்கல் கொள்கைகள், செயற்பாடுகள் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்துகின்றன. இதனால் அரசியல் ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதாவது எதிர்பார்ப்புக்கள் அதிகரித்து, இவ்வெதிர்பார்ப்புக்கள் கைகூடாத நிலையில் விரக்தி நிலை ஏற்படுகின்றது. இதனால் மோதல்கள் தோன்றுகின்றன.
கலாசார உணர்வுகள்
கலாசார உணர்வுகள் மோதலிற்கு ஏதுவாக அமைகின்றன. இது இரண்டு வழிகளில் ஏற்படுகின்றது.
1. சிறுபான்மையினருக்கு எதிரான காலாசார பாரபட்சநிலை,
காலாசார பாரபட்ச நிலைகள் என்னும்போது சிறுபான்மையினருக்கு எதிரான சமயச் சுதந்தரம் மீதான கட்டுப்பாடுகள், மொழியினைப் பாவிப்பதில், கற்பதிலுள்ள கட்டுப்பாடுகள், அநீதியாக கல்வி வாய்ப்பளித்தல் போன்றன இதற்குள்ளடக்கப்படும். இதனால் மோதல்கள் ஏற்படுகின்றன.
2. புலனுணர்வுவாயிலான விடயங்கள் என்பனவாகும்.
இரண்டாவது விடயமாகிய புலனுணர்வு என்பதும் மோதலினை ஏற்படுத்துகின்றது. எல்லோருக்கும் ஒருமித்த புலனுணர்வு இருப்பதில்லை. சமூகக் குழுக்கள் தங்களுக்கிடையில் வேறுபட்ட உணர்வுகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு குழுவின் வரலாற்று உணர்வு முக்கியப்படுத்தப்பட்டு, ஏனைய குழுக்களின் உணர்வு மறுக்கப்படும் போது மோதல்கள் ஏற்படுகின்றன.