கால்மாக்ஸ், பிரட்றிக் ஏங்கல்ஸ் ஆகிய இருவரும் கோட்பாடு, அரசியல் நடைமுறை ஆகிய இரண்டிற்குமிடையில் இணைப்பினை ஏற்படுத்திய முதன்நிலைக் கோட்பாட்டாளர்களாகும். இவர்கள் இருவரும் விஞ்ஞானபூர்வமானதும், புரட்சிகர மானதுமாகிய சோசலிசக்கோட்பாட்டை முன்வைத்தார்கள். கால்மாக்ஸ் 1848 ஆம் ஆண்டு வெளியிட்ட தனது “கம்யூனிச அறிக்கையிலும்”, “மூலதனம்” என்ற நூலிலும் சோசலிசக் கோட்பாட்டை முன்வைக்கின்றார். மூலதனம் சோசலிசத்தின் மூலாதார நூலாகக் கருதப்படுகின்றது.மூலதனம் என்ற நூலின் முதற்பகுதி 1867 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் அடுத்த இரண்டு பகுதிகளும் முறையே 1885ஆம்,1894ஆம் ஆண்டுகளில் பிரட்றிக் ஏங்கல்ஸ்சினால் வெளியிடப்பட்டது. கால்மாக்ஸ் தனது நூலில் பொருள்முதல்வாதம்,மூலதன செறிவாக்கல் விதி, வர்க்கப்போராட்டம் ஆகிய மூன்று முக்கிய விடயங்களைப் பகுப்பாய்வு செய்கின்றார்.
மிகைப்பெறுமானம் மாக்ஸ்சிசக் கோட்பாட்டின் மையப்பகுதியாகும்.டேவிட் றிக்காடோவின் தொழிலாளர் கோட்பாட்டினால் கால்மாக்ஸ் கவரப்பட்டிருந்தார். முழுச்சொத்துக்களினதும் உண்மைப் பெறுமானம் தொழிலாளர்ளினாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதே கால்மாக்ஸ்சின் வாதமாகும்.அதேநேரம், முதல்தரப் பொருளியலாளர்கள் கூறும் ஒரு உற்பத்திப் பொருளின் சந்தைப் பெறுமதி கேள்வி நிரம்பலினால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் கால்மாக்ஸ், நீண்டகாலத்தில், உற்பத்திக்குச் செலவிடும் நேரம், தொழிலாளர்களின் உழைப்பு என்பவற்றினாலேயே உற்பத்திப் பொருட்களின் பெறுமதி தீர்மானிக்கப்படுகிறது எனக் கூறுகின்றார். அதாவது பொருள்உற்பத்தியில் தொழிலாளர்களின் உழைப்புசக்தி பயன்படுத்தப்படும் போதுதான் உற்பத்திப் பொருளுக்கு பெறுமதி கிடைக்கின்றது.ஆகவே தொழிலாளர்கள் சமூகத்தின் முதுகெலும்பாகும்.இங்கு இரண்டு விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. ஒன்று உற்பத்திக் கருவிகளாகிய தொழிற்சாலைகள்,இயந்திரங்கள், மின்சாரம்,நீராவிவலு போன்றவற்றை இயக்குவதற்கு தொழிலாளர்கள் அவசியமாகும். தொழிலாளர்கள் இன்றி கருவிகள் தானாக இயங்கமாட்டாது.இரண்டாவது, உற்பத்திப்பொருட்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டாலே சந்தையில் விற்பனை செய்யமுடியும். இதற்கும் தொழிலாளர்களின் உழைப்புத்தேவையாகும்.
தொழிலாளர்களும் ஏனைய உற்பத்திப் பொருட்களைப்போல் வர்த்தகப்பொருட்களாகும். ஏனைய உற்பத்திப்பொருட்களின் பெறுமதி தீர்மானிக்கப்படுவதுபோல் அவர்களின் பெறுமதியும் தீர்மானிக்கப்படவேண்டும். உற்பத்திப்பொருட்களின் ‘பரிமாற்றப் பெறுமானம்’ உற்பத்திக்குத் தேவையான தொழிலாளர்களைத் தொடர்ந்து பராமரிப்பதன் மூலமே உறுதிப்படுத்தப்பட்டது.தொழிலாளர்கள் தன்னையும், தனது குடும்பத்தையும் பராமரிப்பதற்கு ஏற்படும் செலவினை ஈடுசெய்வதற்குத் தேவையான ஊதியத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், உண்மையில் முதலாளித்துவ சமூகத்தில் இது நடைபெறுவதில்லை.தொழிலாளர்கள் பெறும் ஊதியம் தமது ஜீவனோபாயத்தினை நடாத்துவதற்குத் தேவையானதையும் விட குறைவாகவேயிருந்தது. இதற்கான காரணம் மிகவும் தெளிவானாதாகும்.உண்மையில் உற்பத்திக்குப் பயன்படும் கருவிகளாகிய இயந்திரங்கள், கருவிகள், மூலப்பொருள் என்பன சிறிய ஒரு வர்க்கமாகிய முதலாளி வர்க்கத்திற்குச் சொந்தமானதாகும். இவர்களே முதலாளி வர்க்கமாகும்.தொழிலாளர்கள் உழைப்புத்திறன் ஒன்றிற்கு மாத்திரமே சொந்தக்காரர்களாகும். இவர்கள் தமது உழைப்பினை முதலாளிகளுக்கு விற்று ஊதியத்தைப் பெற்றனர்.ஆனால், சந்தையில் விற்பனை செய்யப்படும் உற்பத்திப்பொருட்களை வாங்கக்கூடியளவு விலை விகிதாசாரத்திற்கேற்ற ஊதியத்தை தொழிலாளர்கள் பெறுவதில்லை. தொழிலாளர்கள்; விரைவில் குறைவடைந்து விடும் திறன் கொண்டவர்கள் என்பது முதலாளிகளின் கருத்தாகும். அதேநேரம், தொழிலாளர்கள் தகுதியின்மையையும்,இயலாமைகளையும் கொண்டவர்கள். இதனை முதலாளிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றார்கள். குறைந்த ஊதியத்தை முதலாளிகள் வழங்க, அதனை தொழிலாளர்களும் ஏற்றுக்கொள்ளுகின்றார்கள்.இதன்மூலம் முதலாளிகள் தமது இலாபத்தை அதிகரிக்கின்றனர். ஆகவே, உற்பத்திப் பொருட்களுக்கான பரிமாற்றப் பெறுமானத்திற்கும், தொழிலாளர்களிற்கு வழங்கப்படும் ஊதியத்திற்கிடையிலும் வேறுபாடு உள்ளது. இதனையே கால்மாக்ஸ் ‘மிகைப்பெறுமானம்” என அழைக்கின்றார். இம்மிகைப்பெறுமானம் முதலாளிகளால் வேலைக்கமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதே கால்மாக்ஸ்சின் வாதமாகும். தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத ஊதியம் உண்மையில் முதலாளிகளினால் மேற்கொள்ளப்படும் சுரண்டலாகும்.தொழிலாளர் மீதான சுரண்டல் நீக்கப்படவேண்டும். சோசலிச சமூகம் ஒன்றிலேயே இது சாத்தியமாகும் என்பதே கால்மாக்ஸ்சின் முடிவாகும்.
இயக்கவியல், பொருள்முதல்வாதம் என்பனவற்றை மாக்ஸ்சிசக் கோட்பாட்டிற்கான அடிப்படைத்தத்துவங்களாகக் கொள்ளலாம். வரலாறு என்பது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தினூடாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்த சமூகம் பற்றிய வரலாறேயாகும்.இயக்கவியல் தத்துவம் ஹெகலினால் உருவாக்கப்பட்டதாகும். ஆயினும், கால்மாக்ஸ் இயக்கவியலுடன் பொருளாதாரம், வரலாறு ஆகிய இரண்டினையும் இணைத்து ஆய்வு செய்கின்றார்.கால்மாக்ஸ்சிற்கு முன்னர் யாரும் இயக்கவியலை பொருளாதாரம், வரலாறு ஆகியவற்றுடன் இணைத்துப் பயன்படுத்தவில்லை.உலக வரலாறு “வர்க்கப் போராட்டத்தின் வரலாறு” என்பதே கால் மாக்ஸ்சின் வாதமாகும்.சமூகப் பொருளாதார மாற்றங்கள் பொருளாதாரப்பலத்தினாலேயே நிகழ்கின்றது என்பது கால்மாக்ஸ்சின் முடிவாகும்.சமூகம்,பொருளாதாரம், வரலாறு இவைகளைப் படிப்பதற்கான முறையியலாக கால்மாக்ஸ் வரலாற்றுப்பொருள்முதல்வாதத்தைப் பயன்படுத்தும்போது, அதற்குள் இயக்கவியல் பயன்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும்.சமூக வரலாற்றின் அபிவிருத்தியை கோள் (Thesis) முரண்கோள் (Anti-Thesis) என்ற எண்ணக்கருக்களுக்கூடாக கால்மாக்ஸ் விளக்குகின்றார். வரலாற்றில் தோன்றிய ஒவ்வொரு சமூகத்தினையும் “கோள்” என்றும் அச்சமூகத்திற்குளிருந்து அச்சமூகத்தினை எதிர்க்கின்ற சமூகத்தினை “முரண்கோள்” என்றும் கூறுகின்றார். எனவே வரலாற்றில் ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் முரண்கோள் காணப்படுகின்றது. இம்முரண்கோள் அச்சமூகத்தினை அழித்து புதிய சமூகத்தினை தோற்றிவித்தது.சமூகவரலாற்றின் தொடர்ச்சி இதன்மூலமே ஏற்பட்டது என்பதே கால்மாக்ஸ்சின் கருத்தாகும்.கால்மாக்ஸ் கூறும் இயக்கவியல் முரண்பாட்டு எண்ணக்கருக்களை அடிப்டையாகக் கொண்டதல்ல. பதிலாக வர்க்கஇயக்கவியலை அடிப்படையாகக்கொண்டது.வர்க்கமுரண்பாட்டினால் புதிய உற்பத்திமுறைகள் பிறந்துள்ளன. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு உற்பத்திமுறைகளைக் கொண்டிருந்தன. வரலாற்றினூடான உற்பத்திமுறைகளுக்கான இம்மாற்றம் இயக்கவிலூடாகவே நிகழ்ந்தது.இயக்கவியல் புதிய உற்பத்திமுறைகளுக்கு வழிகாட்டியாகி, வரலாற்றில் புதிய சகாப்தத்தை உருவாக்கலாம்.
வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உற்பத்திக்கான மூலப்பொருள் வகிக்கும் இடத்தினைப் பொறுத்தே சமூகம் ஒன்றின் அடிப்படை தீர்மானிக்கப்படுகிறது என்பதே கால் மாக்ஸ் கூறும் வரலாற்றுப்பொருள்முதல் வாதத்தின் உட்பொருளாகும்.பொதுவாக கால்மாக்ஸ்சும், பிரட்றிக்ஏங்கல்ஸ்சும் மேற்கு ஐரோப்பாவினை அடிப்படையாகக் கொண்டும், உற்பத்திக்கான மூலப்பொருள் சமூகத்தில் வகிக்கும் இடத்தினைப் பொறுத்தும் சமூகத்தின் அபிவிருத்தியை ஐந்து படிநிலைகளாகப் பிரிக்கின்றார்கள்.
முதலாவது படிநிலையில் ஆதிகால கம்யூனிஸசமூகம் இருந்ததாகக் கூறுகின்றார். இங்கு உற்பத்திமுறைமை சமுதாயம்சார்ந்ததாக இருந்தது.இச்சமுதாயத்தின் உற்பத்தி கருவிகளாக வேட்டையாடுதலாகவும், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைத் திரட்டிக் குவிப்பதாகவும் இருந்தது.இங்கு சொத்துக்கள் எவையும் யாருக்கும் சொந்தமாக இருக்கவில்லை. வேட்டையாடுதல் மூலமும், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைத் திரட்டிக் குவிப்பதன் மூலமும் கிடைத்த மேலதிகப் பொருட்கள் சேமிப்புக்களாகின.இது சமூகத்தில் சமமின்மையினைத் தோற்றிவித்ததாக கால்மாக்ஸ் கூறுகின்றார். யாரிடம் மிகையான சேமிப்பு இருந்ததோ அவரிடம் அதிகாரமும் சென்றடைந்தது.அவர் சமூகத்தின் தலைவரானார்.
சமூகத்தில் தோன்றிய இவ் ஆரம்பப் படிநிலை நகரஅரசுகளின் தோற்றத்துடன் வீழ்ச்சியடையத் தொடங்கியது.இரண்டாவது படிநிலையில் ஆண்டான் அடிமைச்சமூகம் இருந்தது. இச்சமூகத்தின் தோற்றத்துடன் தனியார் சொத்துடமையும்,“வர்க்க சமூகமும்” தோன்றிவிட்டதாகக் கால்மாக்ஸ் கூறுகின்றார். இங்கு அடிமைகள் ஆண்டானின் சொத்துக்களாகினர். இவர்கள் எவ்வித ஊதியமுமின்றி ஆண்டானிற்காக வேலைசெய்தார்கள்.இச்சமூகஅமைப்பிலிருந்து இயக்கவியல் பற்றி கால்மாக்ஸ் விளக்குகின்றார். அடிமைகள் ஆண்டானின் சொத்துக்கள் மாத்திரமல்ல, ஆண்டானின் பாதுகாவலர்களுமாகும். அடிமைகள் இராணுவத்தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டார்கள். ஆண்டான் அடிமை சமூகம் உள்முரண்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது.
மூன்றாவது படிநிலையில் நிலப்பிரபுத்துவ சமூகம் இருந்ததாக கால்மாக்ஸ் கூறுகின்றார். நிலப்பிரபுத்துவ சமூகம் நேரடியாக முதலாளித்துவ சமூகத்தின் எழுர்ச்சிக்கு காரணமாகியது என்ற வகையில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. நிலப்பிரபுத்துவ சமூகம் படுக்கைகளாயமைந்த பல வர்க்கமுறையைக் கொண்டதாகும். இங்கு அரசன்,பிரபு,குடியானவன் போன்ற பலவர்க்கங்கள் இருந்தன.குடியானவன் என்பவன் அடிமையினை விட சற்று கூடிய சமூக அந்தஸ்த்துடையவனாகும்.அரசன் நிலங்களின் ஆட்சியாளன்.பிரபுக்கள் பெருந்தொகையான நிலங்களுக்குச் சொந்தக்காரனாகும். குடியானவன் தனது தொடர்ச்சியான வாழ்க்கைக்காக பிரபுவின் நிலங்களில் வேலைசெய்கின்றவனாகும். குடியானவனால் உற்பத்திசெய்யப்படுகின்ற உற்பத்தி பொருட்களில் தனது வாழ்வாதாரத்தை பராமரிப்பதற்குத் தேவையானவை பிரபுவினால் வழங்கப்பட்டது.நிலங்கள் யாவும் பிரபுவிற்குச் சொந்தமாக இருந்ததினால், எஞ்சிய மிகைஉற்பத்தி யாவும் பிரபுவுக்குச் சொந்தமாக இருந்தது.ஆண்டான் அடிமைச் சமூகத்தில் அடிமை ஆண்டானின் உடமையாக இருந்தான். பிரபுத்துவ சமூகத்தில் குடியானவன் பிரபுவின் உடமையல்ல.ஆனாலும் அடிமைத்தனத்தின் இயல்பு வேறுவடிவத்தில் தொடர்ந்தது.குடியானவனின் பிள்ளைகள் பிரபுவின் நிலங்களில் பெற்றோர்களுடன் இணைந்து வேலைசெய்யவேண்டியிருந்தது. மேலும் குடியானவன் யுத்தக்களத்தில் போர்வீரனாகவும் பயன்படுத்தப்பட்டான். நிலச்சொந்தக்காரர்களுக்கிடையில் இடம்பெற்ற யுத்தங்கள் நிலப்பிரபுத்துவ சமூகத்தைச் சிதைக்கத் தொடங்கியது. நிலப்பிரபுக்கள் ஏனைய நிலப்பிரபுக்களால் வெற்றிகொள்ளப்பட்டு, அவர்களிற்குச் சொந்தமான குடியானவர்களைக் கைப்பற்றிக் கொண்டனர். இது இறுதியில் அரசனின் அதிகாரத்திற்கு ஆபத்தாகியது.மறுபக்கத்தில், நாணயங்களின் அறிமுகம் குடியானவர்கள் சொந்தமாக நிலங்களை வாங்குவதற்கு உதவியது. மேலும், நாணயங்களின் அறிமுகம் புதிய “வர்த்தக சமூகம்” ஒன்றைத் தோற்றிவித்தது. மக்கள் அரசிற்கு வரி செலுத்த வேண்டும் என அரசன் கட்டளை பிறப்பித்தான். தமது நிலங்களைக் கடந்து செல்லும் வர்த்தகர்கள் மீது நிலப் பிரபுக்கள் வரி விதித்தனர். இது நிலப்பிரபுக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் இடையில் புதிய முரண்பாட்டைத்தோற்றிவித்தது. சமூகத்தில் ஏற்பட்ட விஞ்ஞானத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கும், புதிய உற்பத்தி முறைகள் அறிமுகமாவதற்கும் காரணமாகியது. புதிய உற்பத்தி முறைமை முதலாளித்துவ சமூகத்தின் எழுச்சிக்கு உதவியது.
நான்காவது படிநிலையில் முதலாளித்துவ சமூகம் இருந்தது.இங்கு புதிய வர்க்க அமைப்பு இருந்ததாக கால்மாக்ஸ் கூறுகின்றார். தொழிலாளர்கள், புதிய உற்பத்திக் கருவிகளுக்குச் சொந்தக்காரர்களாகிய முதலாளிகள் என்பவர்களே இப் புதிய வர்க்கத்தினர்களாகும்.உற்பத்திக் கருவிகளுக்கிடையிலான உறவுகளே “சமூக வர்க்க முறைகளைத்” தீர்மானிக்கின்றன என கால்மாக்ஸ் நம்புகின்றார். முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்திக் கருவிகளாகிய நிலம், தொழிற்சாலைகள், தொழில்நுட்பம், போக்குவரத்து போன்றவற்றின் சொந்தக்காரர்களும், விநியோகத்தர்களுமாக முதலாளிகளே காணப்படுவார்கள். இவர்கள் சமூகத்தில் காணப்படும் சிறிய வர்க்கமாகும். உழைக்கும் திறனை வேதனத்திற்கு விற்பனை செய்து வாழும் மக்கள் தொழிலாளர்களாகும்.இவர்கள் சமூகத்தில் பெரும்பான்மையினராகும். இப் பெரும்பான்மைச் சமூகம் தொழிலாளர் வர்க்கம் என அழைக்கப்படுகின்றனர்.தொழிலாளர் வர்க்கம் தமது உழைப்பினைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் பொருட்கள்,சேவைகள் என்பன முதலாளிகளால் இலாபத்திற்கு விற்கப்படுகின்றன.முதலாளித்துவ வர்க்கத்தினர் அரசாங்கத்தில் பிரதான பதவிகளைவகித்ததோடு, அரச இயந்திரத்தினை கட்டுப்படுத்தும் ஆற்றலையும் கொண்டிருந்தனர்.முதலாளிகள் தமது நலன்களை உயர்த்தவும், பாதுகாக்கவும் ஏற்ற கொள்கைகளை உருவாக்கி அவற்றைச் சட்டமாக்கிக்கொண்டார்கள்.உண்மையில் முழு அரசாங்க இயந்திரமும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டது.இவர்கள் தொழிலாளர்களுக்கு எதிரான கொடூரமான சுரண்டலுக்கு ஏற்ற பாதுகாப்பினை உருவாக்கிக் கொண்டனர்.
சமூக முரண்பாடு தொடர்பாகக் கூறும் அதிசக்திவாய்ந்த சமூகவியல் விளக்கங்களுள் ஒன்றாக கால்மாக்ஸ்சின் வர்க்கமுரண்பாட்டினைக் கூறலாம். உற்பத்தி உறவுகளே வர்க்கமுரண்பாடுகளைத் தீர்மானிக்கின்றன. சொத்துடமை அதன்கட்டுப்பாடு என்பவற்றுடன் இணைந்ததே வர்க்கமுறையாகும்.சமூக பொருள்உற்பத்தியமைப்பில் பொருள்வகிக்கும் இடம், உற்பத்தி சாதனங்களுடன் பொருளிற்குள்ள உறவு, சமூக அமைப்பில் உழைப்பும் அதற்குள்ள பொறுப்பும், சமூகச் செல்வத்தில் அவற்றின் ஆளுமைக்குட்படும் பங்கின் அளவு, இப்பங்கினை அவையடைந்து கொள்ளும் முறைமை என்பவற்றின்வழி ஒருவர் மற்றவரிடமிருந்து வேறபடக்கூடிய மக்கள் குழுவினரே வர்க்கமாகும்.எனவே வர்க்கம் என்பது சொத்துடமையின் அளவால் தீர்மானிக்கப்படுகின்ற சமுதாய ஒழுங்கமைப்பு எனலாம்.இன்னோர் வகையில்கூறின் சமூகவர்க்க அமைப்பானது சொத்துடமையினால் சமத்துவமின்மையினை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றது எனலாம். ஆரம்பகாலத்தில் வர்க்கம் என்பது உயர்மக்களாகக் கருதப்பட்ட சுரண்டுவோர் தோன்றியமை,யுத்தக் கைதிகள் அடிமைகளாக்கப்பட்டமை,வறியமக்கள் தாம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத போது அடிமைகளாக்கப்பட்டமை மூலம் தோற்றம் பெற்றதாக மாக்ஸ் கூறுகின்றார். ஆனால், மிக ஆரம்பகாலத்தில் மக்கள் சமத்துவமாக வாழ்ந்ததாக மாக்ஸ் கூறுகின்றார். இங்கு மரபுகள்,வழக்காறுகள்,முதியோருக்கு மதிப்பளித்தல் போன்ற பண்புகள் காணப்பட்டன. முதியோர்கள் சமுதாயக்கடமைகளை நிர்வகித்தனர். இதற்காக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.பிற்பட்ட காலத்தில் உற்பத்தி சக்திகள் பெருக்கமடைய தொழிற்பிரிவினை ஏற்பட்டு,சமுதாயநலன்களை நிர்வகிக்கும் தனியமைப்புக்கள் தோற்றம் பெற்றன. இத்தனியமைப்புக்கள் சமுதாயத்தின் ஒருசாராரிடம் தனிமைப்பட்டன. காலப்போக்கில் சமுதாயத்திலிருந்து இவ்வமைப்புக்கள் விலகிநின்றன.இறுதியில், சமுதாயத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற,சமுதாயச்சுரண்டலை மேற்கொள்ளுகின்ற சுதந்திர அமைப்புக்களாக இவைகள் மாற்றமடைந்தன. இது வர்க்கமுறைமை தோன்றுவதற்கும்,முரண்பாடு தோன்றுவதற்கும் காரணமாகியது.
முதலாளித்துவ சமூகத்தில் சொத்துடமை கொண்டிருக்கும் உறவுநிலை பல்வேறுபட்ட வர்க்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாகின்றன என கால்மாக்ஸ் விபரிக்கின்றார்.அவற்றுள் முதன்மையானவைகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
-
பூஸ்வாக்கள்:- இவர்கள் உற்பத்திக் கருவிகளின் உடமையாளர்களாகும். பாட்டாளி வர்க்கத்திடமிருந்து உழைப்புச் சக்தியை இவர்கள் சுரண்டுகின்றார்கள். பூஸ்வாக்களை மிகவும் செல்வந்த பூஸ்வாக்கள், சிறிய பூஸ்வாக்கள் என இரண்டாக வகைப்படுத்தலாம். சிறிய பூஸ்வாக்கள் சிறிய முதலீட்டாளர்களாக, நிலவுடமையாளர்களாக, வர்த்தகர்களாகக் காணப்பட்டார்கள்.
-
பாட்டாளிகள் வர்க்கம் :- இவர்கள் தமது உழைப்புச் சக்தியை விற்பனை செய்பவர்களாகும்.முதலாளித்தவ உற்பத்தி முறையில் எவ்வித உற்பத்தி கருவிகளையும் கொண்டிராதவர்களாகும். முதலாளித்துவ உற்பத்திமுறையானது பாட்டாளிகளைச் சுரண்டுவதற்கு ஏற்றவகையில் பூஸ்வாக்களினால் உருவாக்கப்பட்டதாகும்.
-
கீழ்வர்க்க பாட்டாளிகள்:- குற்றவாளிகள், நாடோடிகள், பிச்சைக்காரர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய வர்க்கமாகும். இவர்கள் பொருளாதார முறைகளுக்குள் உள்வாங்கப்படாதவர்களாகும். இவர்கள் தங்களைத்தாங்களே உயர்ந்த ஏலத்திற்கு விற்கக்கூடியவர்கள்.
-
நிலவுடமையாளர்கள்:- இவ்வர்க்கத்தினர் வரலாற்று ரீதியாக முதன்மையானவர்களாகும். தங்களிடமுள்ள நிலவுடமையின் அடிப்படையில் செல்வத்தையும், அதிகாரத்தையும் கொண்டிருந்தனர்.
-
விவசாயிகள்,பண்ணையாளர்கள்:- இவ் வர்க்கத்தினர் மாற்றத்தினை ஏற்படுத்தும் திறனற்றவர்களாகவும், ஒழுங்குபடுத்தப்படாதவர்களாகவும் காணப்பட்டதாக கூறும் கால்மாக்ஸ், இவர்கள் காலப்போக்கில் காணமல் போய்விடலாம். பலர் பாட்டாளிகளாகவும், சிலர் நிலவுடமையாளர்களாகவும் மாற்றமடையலாம் எனக் கூறுகின்றார்.
எல்லா சமூகத்தினதும் வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் வரலாறேயாகும். வரலாற்று ஆசிரியர்கள் தேசங்களுக்கு இடையிலான யுத்தமே வரலாறாகும் எனக்கூறுகின்றார். ஆனால் கால்மாக்ஸ் வர்க்கங்களுக்கிடையிலான புரட்சிகரமான போராட்டமே வரலாறு எனக் கூறுகின்றார்கள். இவ் வர்க்கப்போராட்டம் புரட்சிகரமான மீள்கட்டமைக்கப்பட்ட பாரிய புதிய சமுதாயம் ஒன்றை இறுதியில் தோற்றிவிக்கின்றது. எல்லா சமுதாய மாற்றங்களும் பொருளாதார வர்க்கப் போராட்டத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. மேலும் மனிதாபிமானத்தின் வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகவேயுள்ளது. ஒவ்வொரு உற்பத்தி முறைமையும் சுரண்டுபவர்,சுரண்டப்படுபவர் என்ற இரண்டு எதிர்வினைப் பொருளாதார வர்க்கங்களைத் தோற்றிவித்தது. அதாவது,அடக்குபவர், அடக்கப்படுபவர் என்ற இரண்டு வர்க்கங்களைத் தோற்றிவித்தது. சமுதாயம் இயங்கியல் பண்பு கொண்டது. மாற்றங்களும்,பரிணாமமும் இதன் பண்புகளாகும்.
வர்க்கம் சொத்தினால் தீர்மானிக்கப்படுகின்றதேயன்றி, வருமானம் அல்லது அந்தஸ்த்தினால் தீர்மானிக்கப்படுவதில்லை. வருமானம், அந்தஸ்த்து ஆகியவை நுகர்வு, விநியோகம் என்பவைகளால் தீர்மானிக்கப்படுவதுடன், உற்பத்தியிலும், வர்க்க அதிகார உறவிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. பூஸ்வாக்களின் சமூகநிலை அவர்களிடமுள்ள சொத்தினால் தீர்மானிக்கப்படுகிறது.வர்க்கம் தனிநபர்களிற்கிடையில் கோட்பாட்டு ரீதியான முறைசார்ந்த உறவுநிலைகளைத் தோற்றிவிக்கின்றது. வர்க்கப்போராட்டமானது, வர்க்க அங்கத்தவர்களினால், வர்க்க நலன்களுக்காக நடாத்தப்படுகின்றது. ஒவ்வொரு தனிநபர்களும் தனது வர்க்க நிலையினைப்பொறுத்து இணைந்து செயற்படுகின்றனர். பின்னர் படிப்படியாக ஒவ்வொரு வர்க்கத்தினுள்ளும் இருக்கும் தனிநபர்கள் பரஸ்பரம் ஒவ்வொருவரில் தங்கியிருக்கவும், பொதுவருமானத்தினை அல்லது கூலியினை தமக்கிடையில் பகிர்ந்து கொள்ளவும் தயாராகிவிடுகின்றனர். இப்பொது நலனிலிருந்து வர்க்கம் என்பது உருவாகி விடுவதுடன், தனது பொதுநலனுக்கு எதிரான வர்க்கத்துடன் போராடவும்,தனது நலனைப் பேணவும் தயாராகிவிடுகின்றது.
முதலாளித்தவ சமூகத்தில் முதலாளிகளே பொருளாதார பலமுள்ளவர்களாக இருப்பதால், இயல்பாகவே அரசியலதிகாரமும் அவர்களிடம் சென்றவிடுகின்றது. இதனால் இச்சமூகத்தில் அரசு என்பது முற்றாக முதலாளித்துவ நலன்பேணும் ஒரு கருவியாகவே விளங்கும். அது தனது நிலைபேற்றிற்கு ஆயுத பலத்திலேயே தங்கியுள்ளது. சிறுபான்மையினரான முதலாளிகள் பெரும்பான்மையினரான பாட்டாளிகளின் பலத்தை ஆயுதபலத்தின் மூலம் அடக்குகின்றார்கள். இதற்காக முதலாளித்துவ சமூகத்தில் காணப்படும் சட்டம், காவல்துறை, இராணுவம், நீதிமன்றம், சிறைச்சாலை அனைத்தும் பாட்டாளிகள் மீது முதலாளிகளின் அடக்குமுறைச்சாதனங்களாகப் பயன்படுகின்றன. முதலாளித்துவ சமூகத்தில் முதலாளி – பாட்டாளி வர்க்கமுரண்பாடுகள் நாளடைவில் பெருகும். இம் முரண்பாடு வர்க்க மோதல்களுக்கு வழிவிடும். முதலாளித்துவம் என்பது ஆயுதபலத்தை நம்பியிருக்கும் ஆட்சிமுறையாகும். எனவே எந்த மோதல்களையும் ஆயுதபலத்தின் மூலம் அடக்கவே முதலாளிகள் முற்படுவார்கள். எனவே இவ் ஆயுதபலத்தை பாட்டாளிகளும் ஆயுதபலத்தின் மூலமே முறியடிக்க வேண்டும். இதன் மூலம்பாட்டாளி மக்களின் விடுதலைக்குப் பலாத்காரப் புரட்சி அல்லது ஆயதப் புரட்சி அவசரமும் அவசியமானதுமாகும். எந்தவொரு பழைய சமூகத்திலிருந்தும் புதியதோர் சமூகம் பிறக்க பலாத்காரம் மருத்துவமாதாகத் தொழிற்படுகின்றது என மாக்ஸ் கூறுகின்றார். இன்நிலையினை மாக்ஸ் பின்வருமாறு விபரிக்கின்றார்.‘பலாத்காரப் புரட்சிக்காகப் பாட்டாளிகள் தம்மைத் திட்டமிட்டு ஒழுங்கமைக்க வேண்டும்.இவ்வாறு இடம்பெறும் பலாத்காரப் புரட்சி வரலாற்றில் இடம்பெறும் சகல புரட்சிகளிலும் சிறப்பானதாகும். வரலாற்றில் இடம்பெற்ற வேறு எந்தப் புரட்சியினாலும் வர்க்க முரண்பாடுகளோ, சுரண்டலோ, அரசு என்ற அமைப்போ ஒழிக்கப்படவில்லை. மாறாக அவை வேறோர் வழியில் மாற்றீடு செய்யப்பட்டன. ஆனால் பாட்டாளிகளின் புரட்சி என்பது வர்க்க முரண்பாடு, சுரண்டல்,அரசு என்ற மூன்றையும் ஒழித்து விடும் தன்மை கொண்டதாகும்” என மாக்ஸ் கூறுகின்றார்.
எனவே முதலாளித்துவ சமுதாயம் தனது பரிணாம வளர்ச்சியில் பூரணமாகவே இல்லாதொழிக்கப்பட்டு பிறிதொன்றினால் வெற்றிகொள்ளப்படும். முதலாளித்துவமும், முதலாளித்துவ முறைமையும் தனது அழிவிற்கான வித்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பாட்டாளிகள் ஐக்கியப்பட்டு முதலாளித்துவ வர்க்கத்தினை வீழ்த்துவார்கள்.இதன் மூலம் பாட்டாளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவர். பாட்டாளிவர்க்க சர்வாதிகார ஆட்சி முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார செயற்பாடுகள் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும். பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி சோசலிச புரட்சி மூலம் தோற்கடிக்கப்படும் போது இயற்கைச் சட்டங்களால் சமுதாயம் ஆட்சி செய்யப்படும்.
சோசலிச சமுதாயம் பாட்டாளி வர்க்க புரட்சியிலிருந்து எழுச்சியடைந்த வர்க்கங்களற்ற சமுதாயமாகும். சோசலிசம் சமுகப்பரிணாமத்திலுள்ள இயற்கைச்சட்டங்களால் தீர்மானிக்கப்படுகின்றபோது தனிமனிதர்களின் சுதந்திரமான விருப்பங்கள், நோக்கங்கள் இச்சட்டங்களால் தீர்மானிக்கப்படும். எல்லா நிலங்களும், மூலதனமும் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும். இதன் மூலம் சுரண்டல் தடுக்கப்படும். சொத்துடையவர்களின் கொடுங்கோண்மை இல்லாதொழிக்கப்படும். எல்லா மனிதர்களும் சுதந்திரமாக இருப்பார்கள்.கம்யூனிச அறிக்கையின் இறுதியில் கால்மாக்ஸ் “கம்யூனிசத்திற்காக எல்லாத்தொழிலாளர்களையும் எழுச்சி பெறுமாறு” அழைப்பு விடுக்கின்றார். “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் நீங்கள் இழப்பதற்கு கை விலங்குகளைத்தவிர எதுவுமில்லை.நீங்கள் வெல்லுவதற்கு உலகம் உள்ளது.”
சோசலிச அடிப்படைகளில் சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கு உலகைப் பற்றிய விஞ்ஞானப்பூர்வமான புரிந்துணர்வு தேவைப்படுகின்றது. இவ்வகையில் மாக்ஸ்சிசம் என்பது இயற்கை மற்றும் சமூதாயத்தின் வளர்ச்சியைப் பற்றிய பொதுவான விதிகள், சோசலிசப் புரட்சியின் வெற்றி, சோசலிசம் மற்றும் கொம்யூனிசத்தின் கட்டுமானப் பாதைகள் ஆகியவற்றைப் பற்றிய விஞ்ஞானக் கருத்துகளடங்கிய தத்துவமாகவுள்ளது.சமூக உறவுகளின் மத்தியில் பொருளாதார அல்லது உற்பத்தி உறவுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இதனைப்படிக்காமல்; முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கும், கொம்ய10னிசத்திற்கும் எப்படி மாறிச் செல்வது என்ற கேள்விக்குப் பதில் காண முடியாது.