பொறுப்புக் கூறுதலில் முன்னேற்றம் இல்லாத நிலையில் நிகழவிருக்கும் பொதுநலவாய மகாநாடு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.31, 2013.09.01 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002

பொதுநலவாயநாடுகள் அரச தலைவர்களின் உச்சி மகாநாடு நடைபெறவுள்ள திகதி நெருங்கிவரும் நிலையில் உலக மக்களின் கவனம் இலங்கை தொடர்பாக அறிவதில் திசைதிரும்பியுள்ளது. பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மகாநாடு மிகவும் கவன ஈர்ப்பிற்குள்ளாகக் கூடிய சர்வதேச நிகழ்வாகும். இதனால் இம்மகாநாட்டினை நாடாத்த இருக்கும் இலங்கையில் என்ன நடந்த கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதில் உலக மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் பொதுநலவாயநாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் உச்சி மகாநாட்டினை திட்டமிடப்பட்டபடி 2013 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம்; நடாத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை மேற்கொண்டு வருகின்றது.

பொதுநலவாயத் தலைமைத்துவம்

2013 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் பொதுநலநாய நாடுகளின் அரச தலைவர்கள் மகாநாட்டினை இலங்கையில் நடாத்துவது என ஏகமனதான தீர்மானம் 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2011 ஆம் ஆண்டு ஏகமனதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கிணங்க 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையில் பொதுநலவாயத்தின் தலைமைத்துவம் இலங்கையிடம் கையளிக்கப்படவுள்ளது.

நடைமுறைச் சாத்தியமான வகையில் இலங்கைக்கு உதவி செய்வதே பொதுநலவாய அமைப்பின் முக்கிய நோக்கமாகும். அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சுதந்திரமான செயற்பாட்டை மேம்படுத்துவதற்கான நுட்பரீதியான ஆதரவினை வழங்குவதும் இம்மகாநாட்டினை இலங்கையில் நடாத்துவதன் நோக்கமாகும். அங்கத்துவ நாடுகளுடன் கூட்டுறவினைப் பேணுதல், பங்காளர் உறவினைப் பேணுதல் என்பவற்றின் ஊடாகப் பொதுநலவாயம் ஏனைய ஸ்தாபனங்களை விட வேறுபட்ட வகையில் செயற்படுகின்றது. இவ்வகையில் பொதுநலவாயம் யதார்த்தமான பல உதவிகளை அங்கத்துவ நாடுகளுக்கு வழங்கி வருகிறது.

அங்கத்துவ நாடுகளின் எதிர்ப்பு

பொதுநலவாய நாடுகள் சாசன மனித உரிமைகள் விதிகளை 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்காலத்தில் இலங்கை மீறியுள்ளதால் இம்மகாநாட்டினை இலங்கையில் நடாத்தக் கூடாது என பொதுநலவாய அங்கத்துவ நாடுகள் சில எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

பொதுநலவாயத்தின் கொள்கைகளை இலங்கை மீறியுள்ளதாக கனடா,பிரித்தானியா,தென்ஆபிரிக்கா போன்ற அங்கத்துவ நாடுகள் வெளிப்படையாக கண்டித்து வருகின்றன. கனடாவின் பிரதமமந்திரி ஸ்ரிபன் ஹர்பர் (Stephen Harper) மனித உரிமைகள் விவகாரம்,பொறுப்புக் கூறுதல், அரசியல் நல்லிணக்கம்,மீள் குடியேற்றம்,நீதித்துறைச் சுதந்திரம் போன்ற விடயங்களில் முன்னேற்றம் ஏற்படாதவரையில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாயநாடுகள் மகாநாட்டில் கனடா கலந்து கொள்ளமாட்டாது” என அச்சுறுத்தி வருகின்றார்.

பொதுநலவாயத்தின் கொள்கைகளாகிய மனித உரிமைகள், ஜனநாய சீர்திருத்தத்தினை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இலங்கை அரசாங்கம் குறைந்தளவு முக்கியத்தவமே வழங்குவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்கள், களங்கங்கள் களையப்படாத நிலையில், பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடாத்தப்படுவதன் மூலம் இலங்கைக்கு வழங்கக் கூடிய அங்கீகாரம், மதிப்பு என்பவற்றை வழங்குவது தொடர்பாக அங்கத்துவ நாடுகளுக்கு மனக்குழப்பம் ஏற்படக் கூடிய சூழல் உருவாகி வருகின்றது.

செயற்குழுத் தீர்மானம்

இலங்கையில் நடைபெற இருக்கும் மகாநாட்டினை வேறு ஒரு அங்கத்துவ நாட்டில் நடாத்த வேண்டும் என அங்கத்துவ நாடுகள் சில கொடுத்து வரும் அழுத்தம் பொதுநலவாய அமைச்சர்கள் செயற்குழு மகாநாட்டில் கலந்துரையாடப்பட்டது. அமைச்சர்கள் செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய வங்காளதேச வெளிவிவகார அமைச்சர் டிபு மொனி (Dipu Moni) இது தொடர்பாகக் கூறும் போது “இலங்கை விவகாரங்கள் எங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் இல்லை. ஆயினும், ஏனைய நாடுகளின் விவகாரங்களை விவாதித்தது போன்று இலங்கை விவகாரத்தினையும் விவாதித்தோம். ஆனால் எமது விவாதங்கள் அனைத்தும் இரகசியமானவையாகும். கூட்டம் நடைபெறும் இடம் அரச தலைவர்களால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதாகும். எனவே இத்தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம்

மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இக்கடிதத்தில் மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் செயலாற்றல் மிக்கதும் கணிப்பிடக்கூடியதும் அர்த்தமுள்ளதுமான முன்னேற்றத்தினை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளாதவரை 2013 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மகாநாட்டினை இலங்கையிலிருந்து வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் எனக் கோரியுள்ளது.

மேலும், 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனிதப் படுகொலைகளுக்கு பொறுப்புக் கூறுகின்ற அர்த்தமுள்ள செயற்பாடுகள் எதனையும் இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை. ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு அறிக்கை யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் 40,000 வரையிலான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என மதிப்பிடு செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகும் வகையில் நீதித்துறைக்கும் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கும் எதிரான செயற்பாடுகள், சிவில் சமூகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள்,அடிப்படைச் சுதந்திரம் நசுக்கப்படுதல் போன்ற மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளது.

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் ஏனைய உள்ளுர்,சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள் என்பன பொதுநலவாய அமைச்சர்கள் செயலணி 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்களின் மகாநாடு இலங்கையில் நடைபெறுவதற்கு பின்வரும் முன்நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளன.

  1. சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தில் கைச்சாத்திட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று என்ற வகையில் மனித உரிமைகளை உள்ளுர் மட்டத்தில் அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். அத்துடன் இயற்றப்படுகின்ற எல்லாச் சட்டங்களும் சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் தரத்தில் இயற்றப்பட வேண்டும்.
  2. இலங்கை மக்கள் அனைவரும், கௌரவத்துடனும் சமத்துவத்துடனும் வாழ்வதற்குரிய உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். இலங்கை அரசியல் யாப்பில் எழுதப்பட்டுள்ளதற்கு இணங்க இலங்கை மக்கள் அனைவரும் எல்லா வகையான அடிப்படை உரிமைகளையும் அனுபவித்து வாழ்வதற்குரிய சூழல் உருவாக்கப்படல் வேண்டும்.
  3. அரசாங்கத்தின் மூன்று துறைகளினதும், சுதந்திரம்,வலுவேறாக்கம் என்பன அரசியல் யாப்பில் கூறியுள்ள வகையில் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
  4. தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற முக்கியமான அரசாங்க நிறுவனங்களின் சுதந்திரம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படுதல் வேண்டும்.
  5. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், சிவில் சமூகத்தினர், மனித உரிமை காவலர்கள், போன்றவர்களைப் பாதுகாப்பதற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
  6. சர்வதேச மனிதாபிமான மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மீறப்பட்டமைக்கான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகச் சுதந்திரமானதும், நம்பகத் தன்மையானதுமான விசாரணைகளை நடாத்துவதற்கு இலங்கை ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.

2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்து இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட காலத்திலேயே 2013 ஆம் ஆண்டு இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மகாநாட்டினை இலங்கையில் நடாத்துவது என்ற முடிவும் எடுக்கப்பட்டது.இலங்கையில் 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மகாநாட்டினை இலங்கையில் நடாத்துவது என 2011 ஆம் ஆண்டு உறுதிப்படுத்தபட்ட காலத்தில் இலங்கையில் ஜனநாயத்திற்கு விரோதமான செயல்களாகிய சிவில் சமுதாயத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள், அடிப்படைச் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்கள், நீதித்துறை சீர்கேடு, மனித உரிமைகள் சீர்கெடுதல், யுத்தக் குற்றச் செயல்களுக்கு பொறுப்பெடுக்காமை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

நவநீதம்பிள்ளையின் வருகை

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு நம்பகமான யுத்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை மீது சுமத்தியிருந்தது. யுத்த விதிமுறைகள் எண்ணற்றவகையில் மீறப்பட்டுள்ளதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆயினும் இவைகளுக்காக பயனுள்ள வகையிலான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை அரசாங்கம் விருப்பமற்று இருந்தது. 2012 ஆம் ஆண்டு பங்குனி மாதம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. ஆயினும் 2012 ஆம் ஆண்டு ஆடி மாதம் வரையில் இதற்கான தேசிய செயற்பாட்டு திட்டத்தினை இலங்கை உருவாக்கவில்லை. அதன்பின்னர் சில சிபார்சுகளை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு உள்ளுர்மட்ட அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் 2013 ஆண்டு ஆவணிமாதம் 25 ஆம் திகதி இலங்கை வந்துள்ளார். இது நவநீதம்பிள்ளை இலங்கைக்கு மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ முதல் விஜயமாகும்.இலங்கைக்கு வருகை தந்தபின்னர் செய்தியாளர்களைக் சந்தித்த நவநீதம்பிள்ளை “ இலங்கை உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொதுவான மனித உரிமைகள் சாசனத்திற்கு ஏற்பவே நான் செயற்பட்டு வருகிறேன். நான் இங்கு விமர்சிப்பதற்கு வரவில்லை.ஆனால் மனித உரிமைகள் பற்றிய அக்கறையினை எழுப்புவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.இதற்கிணங்க இலங்கையில் தங்கியிருக்கப் போகும் ஒருவார காலத்தில் அரசியல் வாதிகள், செயற்பாட்டாளர்கள் போன்ற பல்வேறுபட்ட தரப்பினருடனும் கலந்துரையாடல்களை இவர் நடாத்தவுள்ளார். இவருடைய இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் சமர்பிக்கப்படுவதுடன், பொதுச்செயலாளருக்கும், அங்கத்துவ நாடுகளுக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்படவுள்ளது.

சிங்களமக்களின் மறுப்பு

இலங்கை இனத்துவ அடிப்படையில் இருதுருவங்களாகியுள்ளதொரு நாடாகும். 2009 ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள் படுகொலை செயய்ப்பட்டது தொடர்பாக சர்வதேச நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக சிங்களமக்கள் மறுக்கின்றார்கள். பெரும்பாலன சிங்களமக்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் காரணமில்லாத அல்லது நேர்மையில்லாத சர்வதேசத் தலையீடாகும் என நம்புகின்றார்கள். ஆனால் 2009 ஆம் ஆண்டு வன்னியில் முடிவடைந்த உள்நாட்டு யுத்தம் இலங்கையின் இரத்தம் தோய்ந்த வரலாற்றில் மிகவும் மோசமான அத்தியாயம் என்பதை யாரும் நிராகரிக்க முடியாது. இலங்கையின் வரலாற்றில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) இருதடவைகள் புரட்சிக்கு முயற்சித்த போது நடை பெற்ற பல்லாயிரக்கணக்கான மனித அழிவுகளைவிட பல மடங்கு மனித அழிவுகள் வன்னியில் நடைபெற்றுள்ளதாக சுதந்திர கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

13,700 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>