பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவப் பொறிக்குள் இலங்கை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.11.02, 2013.11.03 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002

இலங்கை பன்மைத்துவ சமுதாயத்தினையுடைய நாடாகும். இப்பன்மைத்துவ சமுதாயம் நீண்டகாலமாக ஒன்றுடன் ஒன்று பகைமையையும், மோதலையும் வளர்த்து வந்துள்ளது. சமூகத்தில் காணப்பட்ட இவ் வேறுபாடுகளும்,மோதல்களும் இலங்கையின் அரசியலில் நேரடியான மற்றும், ஆழமான செல்வாக்கினைச் செலுத்தியுள்ளது. 1980 களின் பின்னர், இன,மொழி,சமய அடிப்படையிலான விரோதம் தீவிரமாக வளர்ச்சியடைந்து, இறுதியில் முப்பது வருடகாலம் உள்நாட்டு யுத்தத்திற்கு இலங்கை முகம் கொடுத்ததுடன், இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் 40,000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த அண்மித்த காலங்களில் மனிதாபிமான விடயங்கள் மிகவும் கொடூரமான நிலையினையடைந்தன. தமிழ் மக்களின் குறிப்பாகத் தமிழ் பெண்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை மிகவும் ஆபத்தான நிலையினையடைந்தது. சிறுபான்மையினர் என்ற வகையில் யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் பெண்களின் வாழ்க்கை நிலை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாக மாறியுள்ளது.

யார் சிறுபான்மையினர்

1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள்சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுபான்மையோர் பிரகடனத்தின் சரத்து 1 தேசியளவில் இன, கலாசார, மொழி அடிப்படையிலான அடையாளத்தினையுடையவர்களை சிறுபான்மையோர் என அழைக்கின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு சிறுபான்மையோர் என்ற பதம் இன்று ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் முறைமையில் தேசிய அல்லது இன, சமய, மொழிக் குழுக்களை அழைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. சர்வதேச முறைமையிலுள்ள எல்லா அரசுகளுக்குள்ளும் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட சிறுபான்மைக் குழுக்கள் வாழ்கின்றன. இச்சிறுபான்மைக் குழுக்கள் பெரும்பான்மை மக்களிலிருந்து வேறுபடக்கூடிய, தமக்கே உரித்தான சமய,மொழி,இன பண்புகளுடன் வாழ்கிறார்கள்.இவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசுகளின் கடமையாகும்.

ஆயினும் எவ்வகையான சமூகக் குழுக்களைச் சிறுபான்மையோர் என அழைப்பது என்பது தொடர்பாகச் சர்வதேசளவில் ஏற்றுக் கொள்ளக்கூடிய வரைவிலக்கணம் எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அதேநேரம் சிறுபான்மையினர் தொடர்பாகச் சர்வதேசளவில் ஏற்றுக் கொள்ளக் கூடிய மேலும் சில அளவீடுகள் தேவை என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமகாலத்தில் உலகம் எங்கும் செறிந்து வாழுகின்ற சிறுபான்மை மக்களை சர்வதேசளவில் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வரைவிலக்கணப்படுத்த முற்படும் போது இன அல்லது மொழி அல்லது சமய அடையாளங்களை சுயவிருப்பத்துடன் தனது சமுகத்திற்குள் பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ள புறவயத்தன்மையும், (Objective) தான் சார்ந்த சிறுபான்மைச் சமுகத்தின் அங்கத்தவராக தன்னை தானாகவே அடையாளப்படுத்துகின்ற அகவயத் தன்மையும் (Subjective) உள்ளடக்கப்படுதல் வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் சிறுபான்மை மக்கள் வாழுகின்ற வேறுபட்ட சூழலை அடிப்படையாகக் கொண்டு சர்வதேசளவில ஏற்றுக் கொள்ளக்கூடிய பரந்ததொரு வரைவிலக்கணத்தை உருவாக்குவது கடினமாகவுள்ளது. சில அரசுகளில் பெரும்பான்மை மக்கள் ஆதிக்கமுடன் வாழுகின்ற பிரதேசத்திலிருந்து விடுபட்டு, சிறப்பாக வரையறுக்கக் கூடிய பிரதேசத்தில் சிறுபான்மைக் குழுக்கள் ஒன்றாக கூடி வாழ்கின்றார்கள். சில அரசுகளில் சிறுபான்மை மக்கள் சிதறுண்டு நாடு முழுவதும் பரந்து வாழ்கின்றார்கள். சில அரசுகளில் சிறுபான்மை மக்கள் பலமான கூட்டு அடையாள உணர்வுடனும், ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுணர்வுடனும் வாழ்கின்றார்கள். சில அரசுகளில் சிறுபான்மை மக்கள் தமது பொதுவான பாரம்பரியம் தொடர்பான தெளிவற்ற எண்ணங்கள் எதுவுமின்றி வாழ்கின்றார்கள்.

1977 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினரை பாரபட்சப்படுத்தலிலிருந்து தடுத்தல் மற்றும் பாதுகாத்தல் என்னும் உப குழுவின் அறிக்கை தயாரிப்பாளராக பணியாற்றிய பிரான்செஸ்கோ கப்போரொறி (Francesco Capotorti) உருவாக்கிய வரைவிலக்கணத்தில் “அரசு ஒன்றின் மொத்த சனத் தொகையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலும், ஆதிக்கம் குறைந்த நிலையிலும், அரசின் தேசிய பிரசைகளாகவுள்ள பெரும்பான்மை மக்களிலிருந்தும் வேறுபட்ட இன, சமய அல்லது மொழி பண்புகளையுடைய ஒரு குழுவினரே சிறுபான்மையினராகும். ஐக்கியம், தமது கலாசாரம், மரபுகள், சமயம், மொழி என்பவைகளைப் பாதுகாக்கின்ற உள்ளுணர்வு கொண்டவர்களுமாகும்” எனக் கூறுகின்றார்.

ஆயினும், பிறநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுக் குடியேறுபவர்கள், அகதிகளாக அடைக்கலம் கோருபவர்கள், சுதேசிகள், பழங்குடி மக்கள் போன்றவர்களும் சிறுபான்மையினர்கள் என அழைக்கப்படுகின்றனர். அதேநேரம், பாரபட்சப்படுத்தலுக்கு உள்ளாகின்ற பெண்கள் , சிறுவர்கள் அல்லது விளிம்பு நிலைக்குள் வாழ்கின்ற மக்கள் அனைவரும் சிறுபான்மையினர் என அழைக்கப்படுகின்றனர்.

இலங்கையில் சிறுபான்மையினர்

கடந்த முப்பது வருடங்களாக நீடித்த இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் முடிவடைந்த நிலையில் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற சிறுபான்மை இனத் தமிழ் பெண்களின் சமூக அந்தஸ்த்து நிலை முழுமையாக மாற்றமடைந்ததுள்ளது. அதாவது, இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற தமிழ் பெண்கள் மிகவும் பாதுகாப்பற்ற விளிம்பு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதை சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புக்களின் அறிக்கைகள் ஆதாரப்படுத்துகின்றன.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையில் தேசிய நல்லிணக்கம் உருவாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்த போதும், மோதலுடன் தொடர்புடைய பல வன்முறைகளைத் தமிழ் பெண்கள் தொடர்ந்து சந்தித்து வருவதாகவும், பால்நிலை சார்ந்த வன்முறைகள் மற்றும் அவர்;கள் வாழும் நிலங்கள் அபகரிக்கப்படுதல் போன்றன தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் குழு (Minority Rights Group International’s) 2013 ஆம் ஆண்டு, ஐப்பசி மாதம் வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு யுத்தத்தின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள் படுகொலை செய்யப்பட்டதுடன்ää படுகாயங்களுக்கும் உள்ளாகினர். மேலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் உடல், உள ரீதியான பாதிப்புக்களுக்குள்ளாகினர். உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்த ஏறக்குறைய 280,000 தமிழ் மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் ஒருவரிலிருந்து ஒருவர் பிரித்தெடுக்கப்பட்டனர். தடுப்பு முகாம்களிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்கோ அல்லது கருத்துக்களை வெளியிடுவதற்கோ அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இவர்களில் சிலர் தமது வீடுகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டாலும், பலருடைய வீடுகள் உள்நாட்டு யுத்தத்தினால் சேதமடைந்து குடியிருக்க முடியாத வீடுகளாக மாறியிருந்தன. பலர் அவர்களுக்கு சிறிதும் பழக்கமில்லாத இடங்களில் குடியமர்த்தப்பட்டார்கள்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது 100,000 மேற்பட்ட பெண்கள் யுத்தப் பிரதேசத்திற்குள் அகப்பட்டுக் கொண்டனர்.ஆயிரக்கணக்கான பெண்கள் தமது வாழ்க்கைத் துணைவர்களை இழந்தனர். அல்லது அவர்கள் காணாமல் போனார்கள் அல்லது கைது செய்யப்பட்டார்கள் அல்லது இதுவரை விசாரணை முடிவுறாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் தமது குடும்பத்திலுள்ள ஏனைய அங்கத்தவர்களையும் யுத்தத்தில் இழந்துள்ளனர். எனக் கூறப்படுகிறது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏறக்குறைய 89,000 பெண்கள் உள்நாட்டு யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டனர். பல பெண்கள் தமது கணவன்மார்கள் எங்கு வாழ்கின்றார்கள் என்ற தகவல் எதுவும் இதுவரை தெரியாது வாழ்கின்றார்கள் என சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் இறுதியுத்த காலத்தில் மரணமடைந்த பொதுமக்களுக்கான மரணசான்றிதழை வழங்க தொடர்ந்து மறுத்து வருகின்றது.இதனால் இறுதி யுத்த காலத்தில் கணவனை இழந்த பெண்கள் தமது கணவன் இறந்து விட்டதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் எதுவுமற்றவர்களாகவும், கணவனின் இழப்பினை வெளிப்படையாக சமூகத்தில் அறிவிக்க முடியாதவர்களாகவும் கைவிடப்பட்டுள்ளனர்.

இதனால் தாம் விரும்புகின்ற மறுவாழ்வுக்குள் நுழையமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள் தமிழ் பெண்கள் தள்ளப்பட்டுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான பெண் தலைமைத்துவ தமிழ் குடும்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் குழு யுத்தத்தின் பின்னர் வடமாகாணத்தில் 40,000 பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் உருவாகியுள்ளதுடன், பெண்கள் தமது குடும்பத்தை பராமரிப்பதற்காகத் தொழில் செய்யவேண்டிய சூழலும் உருவாகியுள்ளது.ஆயினும், இவர்கள் உழைக்கும் வருமானம் மிகவும் குறைவானதாகும் எனக் கூறுகின்றது.

மேலும்,இறுதி யுத்தத்திற்குப் பின்னர் பிரதான குடியிருப்பாளராகவும், பால்நிலை சார்ந்தும், இன,சமய,வர்க்க நிலை சார்ந்தும் தனிமைப்பட்டு சமுதாயத்தில் வாழும் சிறுபான்மையின தமிழ் பெண்கள் பல்வேறு அவதூறுக்குள்ளாகின்றனர். யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட புதிய ஜனநாயக சமுதாயச் சூழலில் உண்மையும் ,நீதியும் மறுக்கப்பட்டு பெண்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இதனால் நீதிக்குப் புறம்பான கொலைகள்,பாலியல் வன்முறைகள், பால்ரீதியான தொல்லைகள் போன்றவற்றிற்கு கணவனை இழந்த பெண்கள் தினமும் உள்ளாகின்றனர்.

எடுத்துக்காட்டாக, 2012 ஆம் ஆண்டு 56 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைகள் நடைபெற்றுள்ளதாகவும், இவ் ஆண்டிற்கு முன்னர் இவ்வாறான கொடூரமான 102 வன்முறை சம்பவங்கள் 2010 ஆம் ஆண்டிலும், 182 வன்முறை சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டிலும் நடை பெற்றுள்ளதாக சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் குழு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையினை மேற்கோள்காட்டிக் கூறியுள்ளது.

இலங்கை அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைதியும் அபிவிருத்தியும் உருவாகி வருவதாகத் தெரிவித்தாலும்,கிடைக்கப் பெறுகின்ற தகவல்களின் படி உருவாகிவரும் சமாதானத்தினால் தமிழ் பெண்கள் எவ்வித நன்மைகளையும் இதுவரை பெறாததுடன், அபிவிருத்தித் திட்டங்களிலிருந்தும் ஓரங்கட்டப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. உண்மையில், தமது குடும்பத்திற்குத் தேவையான நாளாந்த வாழ்வாதாரங்களை பெற்றுக் கொடுப்பதற்குப் போராடுகின்ற சூழலை எதிர் கொள்கின்ற நிலையே தொடருகின்றது.

பொதுநலவாயம்

இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் மிகவும் அதிகரித்துள்ளதாக தேசிய மற்றும் சர்வதேசிய நிறுவனங்கள் பல எண்ணிக்கையிலான அறிக்கைகளை சமர்பித்திருந்ததுடன், உண்மைகளைக் கண்டறிவதற்காக மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அண்மையில் இலங்கை வந்திருந்தார். அத்துடன், இரண்டு தடவைகள் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் இருந்தன.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பேரவை ஆகியன இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் மனிதாபிமானச் சட்டம், மனித உரிமைகள் சட்டம் என்பவற்றை மீறியதற்கான ஆதாரம் உள்ளதாகவும் இதற்கான சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் குழுவும் இலங்கை அரசாங்கம் இறுதி யுத்தகாலப்பகுதியில் நடை பெற்ற யுத்தக் குற்றங்களுக்கு நம்பத்தகுந்த விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும்,இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்ந்து மீறப்படுவதாகவும் கூறுகின்றது.

இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக மிகவும் கண்டனத்திற்குரிய அறிக்கைகள்,தீர்மானங்கள் பல சர்வதேசளவில் நிறைவேற்றப்பட்டாலும், 2013 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இலங்கையில் பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் மகாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளதுடன், அடுத்து வருகின்ற இரண்டு வருடங்களுக்கு அதன் தலைமைத்துவப் பொறுப்பை இலங்கைக்கு வழங்க பொதுநலவாயநாடுகள் தயாராகிவிட்டன.

உண்மையில் பொதுநலவாய நாடுகள் மனித உரிமைகளுக்கு வழங்கி வரும் ஆதரவிற்கு இது பெரும் சவாலானதாகும். மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்த இலங்கை,ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுபான்மையோர் பிரகடனத்தின் படி சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதில் தொடர்ந்தும் தோல்வியடைந்து வருகின்றது.

இத்தருணத்தில் சர்வதேச சமூகம் பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவம் என்ற பொறிக்குள் இலங்கையினை இழுத்து வந்து நிறுத்தி, குறைந்தபட்சம் பொதுநலவாய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான அடிப்படை விழுமியங்களையும்,விதிகளையும் அடுத்து வருகின்ற இரண்டு வருடங்களுக்கு இலங்கை பேணவும்,பாதுகாக்கவும் வேண்டிய நிர்பந்தத்தினை வழங்கியுள்ளது.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

14,006 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>