பொதுசன அபிப்பிராயம் என்பது பெரும்பாலான மக்களின் கருத்து, பொது நலன் தொடர்பான மக்களின் பொதுக் கருத்து, சரியான சிந்தனையுடைய மக்களின் கருத்து எனப் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுசன அபிப்பிராயம் தொடர்பாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க வரைவிலக்கணம் முன்வைக்கப்படவில்லை. ஆயினும் பொதுசன அபிப்பிராயம் என்ற பதம் பிரான்ஸிய புரட்சியைத் தொடர்ந்து மிகவும் பிரபல்யம் அடையத் தொடங்கியது. 16ம் லூயிஸ் (Louis) காலத்தில் நிதி மந்திரியாக இருந்த ஜக்கியூஸ் நெக்கர் (Jacques Necker) அரசாங்கத்தின் பணச் சந்தை தொடர்பாக பொதுசன அபிப்பிராயத்தை கேட்டிருந்தார். பிற்பட்ட காலத்தில் பொதுசன அபிப்பிராயம் என்றால் என்ன? என்பது தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெற்றன. இதனால் வேறுபட்ட காலங்களில், வேறுபட்ட இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட வரைவிலக்கணங்கள் பொதுசன அபிப்பிராயம் தொடர்பாக முன்வைக்கப்பட்டன.
பொதுசன அபிப்பிராயம் என்பது பொதுவான பொருள் குறிப்பதல்ல. அது பல்வேறுபட்ட பரிமாணங்களைக் கொண்டு, தான் எடுத்துக் கொண்ட விடயத்தினைப் பற்றிக் கூறும் இயல்பு கொண்டது என்ற கருத்து காணப்பட்டது. பொதுவாக பொதுசன அபிப்பிராயம் என்பது “பொது விடயம் ஒன்றில் தனிப்பட்ட ஒவ்வொருவரும் கொண்டுள்ள அபிப்பிராயத்தின் தொகுப்பு” எனக் கூறப்படுகின்றது. பொதுவாக “அபிப்பிராயம்” என்பது தனிப்பட்டவர்களின் நடத்தை, குழுக்களின் நடத்தை, அரசாங்கத்தின் கொள்கை என்பவற்றின் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடியதாகும். பொதுசன அபிப்பிராயம் சமூகவியல், அரசியல் விஞ்ஞானம், வரலாறு, சமூக உளவியல் போன்ற கற்கை நெறிகளில் அதிக செல்வாக்குச் செலுத்துவதாக கூறப்படுகின்றது.
ஜனநாயகத்தின் வளர்ச்சியும், அபிவிருத்தியும் பொதுசன அபிப்பிராயத்தினை அடிப்படையாகக் கொண்டே வளர்ச்சியடைந்தது. ஜனநாயக ஆட்சியில் தீர்மானம் எடுப்பவர்கள் யார்? என்பதே முதன்மையானதாகும். மக்களின் விருப்பம் என்ன? மக்களின் தேவை என்ன? என்பதை ஜனநாயக ஆட்சியாளர்கள் அறிய வேண்டியுள்ளது. இதனால், ஆட்சியாளர்கள் தாம் தீர்மானிக்கும் அல்லது தீர்மானிக்கப் போகும் பெரும்பாலான விடயங்களுக்கு மக்கள் அபி;ப்பிராயத்தினை அறிய முற்படுகின்றார்கள்.
பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்கும் ஊடகங்கள்
சமயம்:-
சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு சமூகக் குழுக்களும் சில அடிப்படைக் கருத்துக்களை நம்புகின்றார்கள் அல்லது விசுவாசிக்கின்றார்கள. இதில் சமயம் மக்களை நேரடியாக கவருகின்ற ஒரு கருவியாகும். சர்வதேச அளவில் சமயத்திற்கும், அதன் கருத்துக்களுக்கும் மக்கள் அதிக விசுவாசம் கொடுக்கின்றார்கள். இதனால் சமயத்தினை அடிப்படையாகக் கொண்டு மக்களை ஒழுங்குபடுத்துவதும், நிறுவனமயப்படுத்துவதும் இலகுவாகின்றது. இதில் கிறிஸ்தவ சமயம் அதிகம் வெற்றியீட்டியுள்ளது. இதனால் மேலைத் தேசங்களிலுள்ள அனேக தேவாலயங்கள் தமது சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய கருத்துக்களை வெளியிட்டு, அவற்றை தீர்க்கவும் முயற்சி;க்கின்றன. மேலைத் தேசங்களைப் பொறுத்தவரையில் அரசு, தேவாலயங்கள் என்பவற்றுக்கிடையில் நேரடியான தொடர்பு இருப்பதில்லை. ஆயினும் கிறிஸ்தவ சமயப் பிரிவுகள் தமது ஆதரவை அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு வேறுபட்ட நிலைகளில் வழங்கி வருகின்றன. இதனால் தேவாலயங்களில் அரசியல் அபிப்பிராயத்தினை ஏற்படுத்துவது இலகுவானதாகும்.
மேலைத் தேசம் தவிர்ந்த ஏனைய நாடுகளைப் பொறுத்தவரையில் குறிப்பாக இஸ்லாமிய சமயத்தினைப் பின்பற்றும் அராபிய நாடுகளிலும், இஸ்லாமிய சமயத்தினைப பின்பற்றும் மக்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் பள்ளிவாசல்கள் இஸ்லாமிய சமய அடிப்படைக் கருத்துக்களுக்கூடாக பொதுசன அபிப்பிராயத்தினை உருவாக்குகின்றன. அதாவது சமூக, பொருளாதார, அரசியல் விடயங்களுக்கான பொதுசன அபிப்பிராயம் பள்ளிவாசல்களுக்கூடாக உருவாக்கப்பட்டுத் தீர்மானம் எடுத்தலில் மக்கள் மீது செல்வாக்குச் செலுத்துகின்றன. ஏனைய நாடுகளில் பெரும்பான்மை இன மக்கள் பின்பற்றும் சமயமும், சமயக் கருத்துக்களும் பொதுசன அபிப்பிராயத்தினை உருவாக்குகின்றன.
வெகுசன தொடர்பு சாதனங்கள்:-
வெகுசன தொடர்பு சாதனங்கள் பொதுசன அபிப்பிராயத்தினை உருவாக்குவதில் பிரதான பங்கு வகிக்கின்றன. குறிப்பாகத் தரமான பத்திரிகைகள் ஜனநாயகத்தினை உருவாக்கவதில் மிகவும் காத்திரமான பங்கு வகிக்கின்றன. இதனால் வெகுஜனதொடர்பு சாதனங்களை ஜனநாயகத்தின் புத்தகம் என அழைக்கின்றார்கள். இதற்கு கல்வியறிவு கொண்ட மக்கள் தேவையாகும். அப்போதுதான் அரசியலையும், ஏனைய விடயங்களையும் சிறப்பாக விளங்கிக் கொள்ள முடியும். கல்வியறிவு என்பது குறுகியதொன்றாக இருக்கக்கூடாது. அது பரந்ததொன்றாக இருக்க வேண்டும். வெகுசன தொடர்பு சாதனங்கள் குறிப்பிட்ட கட்சியின் ஆதிக்கத்தின் கீழும் இருக்கக் கூடாது. இவைகள் மக்களையும், அரசாங்கத்தினையும் சிறப்பாக வழிநடாத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக கொண்டு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். சமயக் கருத்துக்கள் கருத்திலெடுக்கப்படக் கூடாது.
சுதந்திரமான வெகுசன தொடர்பு சாதனங்கள் அரசாங்கத்தினை பல்வேறு கோணங்களில் விமர்சனம் செய்கின்றன. இது புதிய பல பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்க காரணமாகின்றன. வெகுசன தொடர்பு சாதனங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் மக்களுக்கு வழங்குகின்றன. பிரச்சினைகள் மக்களைச் சென்றடைகின்ற போது மக்களுக்கு அதனைத் தீர்ப்பதற்கான அபிப்பிராயங்கள் உருவாகின்றன. உண்மையில் வெகுசன தொடர்பு சாதனங்கள் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்பினை ஏற்படுத்தும் ஒரு பாலமாகும். இதனால், அனேகமான நாடுகளில் கட்சிகள் தமக்கென்று தனியான வெகுசன தொடர்பு சாதனங்களை உருவாக்கி செயற்படுத்துகின்றமையினை அவதானிக்கலாம்.
வெகுசன தொடர்பு சாதனங்களில் பத்திரிகைகளை விட வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவைகள் பொதுசன அபிப்பிராயத்தினை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இவைகள மக்களுக்கிடையிலான உறவினை நெருக்கமடைய வைக்கின்றன. தலைவர்கள் கூறும் கருத்துக்களை மக்கள் இச்சாதனங்களுடாக பார்த்தும், செவிமடுத்தும் கொள்கின்றார்கள். உதாரணமாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் தொலைக்காட்சியில் நிகழ்த்தும் உரை யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற மக்கள் அபிப்பிராயத்தினை ஏற்படுத்தக் காரணமாகின்றது. எனவே பத்திரிகைகளை விட இலத்திரனியல் தொடர்பு சாதனங்கள் அதிகம் மக்களை கவருகின்றன. பத்திரிகைகள் வாசிக்கத் தெரியாதவர்கள் கூட வானொலி, தொலைக்காட்சி மூலம் பயன்பெற முடியும்.
வெகுசன தொடர்பு சாதனங்கள் பொதுசன அபிப்பிராயத்தினை உருவாக்கும் போது பின்வரும் நீதி, நெறிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
கட்சி அரசியலில் இருந்;து தொடர்பு சாதனங்கள் விலகி இருக்க வேண்டும்.
-
எவ்வித திருத்தங்களுமின்றி செய்திகளை உண்மையானதாக வெளியிடுதல் வேண்டும்.
-
அரசாங்கக் கொள்கைகள் தொடர்பாக பக்கச் சார்பற்ற கருத்துக்களை உருவாக்க வேண்டும்.
-
வெளித் தலையீடுகள் எதுவுமின்றி சுதந்திரமானதாக செயற்பட வேண்டும்.
நவீன வெகுசன தொடர்பு சாதனங்கள பொதுசன அபிப்பிராயத்தினை உருவாக்கும் போது சில கடமைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
-
இனவாத உணர்வுகளை வெளிப்படுத்தி பரப்பாமல் இருப்பது.
-
மக்களுக்கு கல்வி அறிவூட்டி மாயைகளை நீக்குதல்.
-
அரசிலுள்ள வேறுபட்ட கட்சிகளுக்கிடையில் இணக்கத்தன்மையினை உருவாக்குதல்
-
தேசக்கட்டுமானத்தினை உருவாக்குவது வெகுசன தொடர்பு சாதனங்களின் பிரதான கடமையாகும். குறைவிருத்தி நாடுகளின் தேசக்கட்டுமானத்தில் வெகுசன தொடர்பு சாதனங்கள் பாரிய பங்கு வகிக்கின்றன.
-
தெளிவான மக்கள் அபிப்பிராயத்தினை உருவாக்கும் அல்லது வெளிப்படுத்தும் கண்ணாடியாக வெகுசன தொடர்பு சாதனங்கள் விளங்க வேண்டும்.
அரசியல் நூல்கள்
அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், கல்விசார் உத்தியோகத்தர்கள், புத்திஜீவிகள் போன்றவர்களால் எழுதப்படும் நூல்கள் மக்களைச் சென்றடைகின்ற போது, இந்நூலாசிரியர்கள் கூறும் சிந்தனைகளை மக்கள் உள்வாங்குகின்றார்கள். அனேக மக்கள் திடமான சிந்தனையோ அல்லது சிந்திக்ககும் ஆற்றலோ கொண்டவர்களல்ல. இதனால் இந்நூல் ஆசிரியர்களின் கருத்துக்களால் கவரப்பட்டு விடுகின்றார்கள். இறுதியில் இந்நூல் ஆசிரியர்கள் கூறும் கருத்துக்கள் பொதுசன அபிப்பிராயமாக மாறிவிடுகின்றது.
பொதுசன அபிப்பிராயம் உருவாகும் வழிமுறை மிகவும் சிக்கலானதாகும். சமயம், நெறிமுறை, பழக்கவழக்கங்கள், மரபுகள், சம்பிரதாயங்கள் போன்றன பொதுசன அபிப்பிராயத்தினை உருவாக்கும் அடிப்படை காரணிகளாகும். இவற்றினை விட வேறு பல காரணிகளும் பொதுசன அபிப்பிராயத்தினை உருவாக்குகின்றன. அவைகளாவன, பொதுவான கலந்துரையாடல்கள், வீண் பேச்சுக்கள், அறிஞர்களால் எழுத்துருவில் வெளியிடப்படும் ஆலோசனைகள் என்பனவும் பொதுசன அபிப்பிராயத்தினை உருவாக்குகின்றன. அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், மக்கள் என்போர்கள் அரசியல் விடயங்களில் ஈடுபட்டு இவைகள் தொடர்பாக தமது தீர்மானங்களை எடுக்கின்றனர். இதன் பின்னர் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக சாதகமான அல்லது பாதகமான கருத்துக்களை கூறுகின்றனர்.
பொதுசன அபிப்பிராயம் ஜனநாயகத்தின் முதுகெழும்பாகும். ஜனநாயகம் என்பது மக்களுடைய கருத்துக்கள், தீர்மானங்கள், எடுப்பதற்கு எப்போதும் பயன்படுகின்றன. ஜனநாயகத்தில் பொதுசன அபிப்பிராயத்தை தடுக்கக்கூடிய எவ்வித சட்டங்களும் உருவாக்கப்படுவதில்லை. ஜனநாயக அரசாங்கத்தில் புதிய நிர்வாக விடங்கள் அறிமுகப்படுத்தப்படும் முன்னர் பொதுசன அபிப்பிராயம் எடுக்கப்படுவது அவசியமாகும். ஜனநாயகத்தில் அரசாங்கம் ஒன்றின் உறுதித் தன்மை என்பது பொதுசன அபிப்பிராயத்திலேயே தங்கியுள்ளது. இதனால் அரசாங்கம் பொதுசன அபிப்பிராயத்திற்கு ஏற்ப தமது கொள்கையை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. பிhத்தானியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில் தீர்மானம் எடுக்கும் செய்முறையில் பொதுசன அபிப்பிராயம் பாரிய வகிபாகத்தினை வகிக்கின்றது. தீர்மானங்கள் நல்லதோ அல்லது தீயதோ பொதுசன அபிப்பிராயத்தினை அடிப்படையாகக் கொண்டே இந்நாடுகளில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.