பூகோளமயமாக்கம்

அறிமுகம்

பூகோளமயமாக்கம் (Globalizion) என்னும் பதமானது அரசியல், சமூக, பொருளாதார, கலாசார, பண்பாட்டம்சங்களில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றன. பூகோளமயமாக்கம் என்ற எண்ணக்கருவானது எப்போது தோற்றம் பெற்றது என்பது தொடர்பாக வேறுபட்ட கருத்துகள் வேறுபட்ட பிரிவினர்களிடம் காணப்படுகின்றன.

பூகோளமயமாக்கம் என்ற எண்ணக்கரு கல்வித் துறைக்கான புதிய வரவு என்ற மனப்பதிவு தவறானதாகும். புராதன, மத்திய காலங்களில் வர்த்தகத்திற்காகவும், சமயம், கலாசாரம், ஆகியவற்றை பரப்புவதற்காகவும், உலகம் முழுவதும் பரந்து சென்றார்கள். உதாரணமாக இந்தியப் பொருட்கள் பிரித்தானிய சந்தையிலும், சீனப் பொருட்கள் இந்தியாவிலும்; விற்கப்பட்டன. பிரித்தானிய மற்றும் அராபிய கலாசாரம் இந்தியாவிலும் பரப்பப்பட்டன. பின்னர் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் இது பூகோளமயமாதல் செயற்பாடாக மாற்றமடைந்தது.

பூகோளமயமாக்கத்தின் தோற்றம்

பூகோளமயமாக்கத்தின் தோற்றம் தொடர்பாக வேறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் பூகோளமயமாக்கத்தின் தோற்றத்தினை

  1. பத்தொன்பதாம் நூற்றாண்டுடன் சிலர் தொடர்புபடுத்துகின்றார்கள்.
  2. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இது தோற்றம் பெற்றதாகக் சிலர் குறிப்பிடுகிறார்கள்.
  3. ஐந்நாம் நூற்றாண்டுக்கு முன்னர் முதலாளித்துவத்தின் தோற்றத்துடன் ஆரம்பமாகி இன்று வரை தொடர்வதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
  4. பூகோளமயமாக்கத்தின் வரலாற்று எல்லையை தொழில்மயவாக்கத்திற்குப் பிந்திய நூற்றாண்டோடு சிலர் நிறுத்திக் கொள்கிறார்கள்.
  5. கைத்தொழிற்புரட்சியினால் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் சமகால பூகோளமயமாக்கலுக்குமிடையே நெருக்கமான தொடர்பு உள்ளதாக சிலர் குறிப்பிட்டுள்ளார்கள்
  6. மனித இனம் போன்றே பூகோளமயமாக்கலும் மிகப்பழமையானது எனச் சிலர் குறிப்பிடுகின்றார்கள்.
  7. சிலர் பூகோளமயமாக்கல் என்ற எண்ணக்கருவானது 1980 களிலிருந்து தோன்றி வளர்ந்து வந்துள்ளதாகவும் ஸ்பெயின், போர்த்துகல், பிரிட்டன், ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளிலேயே இச்சிந்தனை முதன்முதலாகத் தோற்றம் பெற்றதாகவும் குறிப்பிடப்பிடுகின்றனர்.

மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் பூகோளமயமாக்கத்திற்கான சில பங்களிப்பினை செய்திருந்தாலும்,மக்களிடையிலான தொடர்புகள், உற்பத்திப் பொருட்களின் பரிமாற்றங்கள் என்பனவும் இதற்கு காரணங்களாகும்.

பூகோளமயமாதல் என்ற பதத்தை பொருளியலாளர்கள் 1981ஆம் ஆண்டிலிருந்தே பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள் என தியோடோர் லெவிட் (Theodore levit) என்பவர் எழுதிய சந்தைப் பூகோளமயமாக்கல் (Globalizion of Market) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பூகோளமயமாதல் எப்போது தோற்றம் பெற்றது என்பது தொடர்பாக பல் வேறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னரே புதிய வேகத்தோடு இது உலகைச் சுற்ற ஆரம்பித்தது எனக் கூறலாம். 1970 மற்றும் 1980 களில் முதலாளித்துவ நாடுகளில் கைத்தொழில் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததுடன், முதலீடுகளுக்கான இலாபகரமான வாய்ப்புகளும் வீழ்ச்சியடைந்தது. இதனால் சர்வதேச அளவில் முதலீடு செய்து இலாபம் பெறுவதில் முதலாளித்துவ நாடுகள் பிரச்சினைகளை எதிர்நோக்கின. சோவியத் யூனியனின் உள்நாட்டு பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும், அதனால் ஏற்பட்ட கம்யூனிச அரசின் வீழ்ச்சியும் உலகப் பொருளாதார மேலாதிக்கத்தை முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

கம்யூனிச நாடுகளின் சோசலிச பொருளாதார கோட்பாட்டின் ஆதிக்கம் குறைந்தது. பூகோள சந்தை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் உலக நாடுகள் அனைத்தும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும், செயற்பட்டு மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளத் தொடங்கின. எந்தவொரு நாடும் தமது பொருளாதாரத்தினை பூகோள நாடுகளின் உதவியின்றி தனித்து சுயமாக நிர்ணயித்து விட முடியாத நிலை தோன்றியது. இதற்கு விஞ்ஞானத்தொழில்நுட்ப வளர்ச்சி, கணனிமயமான செய்தித் தொழில்நுட்ப வலைப்பின்னல் என்பன மேலும் ஊக்கமளித்தன.

வரைவிலக்கணங்கள்

பூகோளமயமாக்கல் என்றால் என்ன என்பது தொடர்பாக பல அறிஞர்கள் பல்வேறுபட்ட வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளார்கள் அந்தவகையில் அன்ரனி கிடன்ஸ் என்பவர் குறிப்பிடும் போது

“தொலைவில் இருக்கும் இடங்களை ஒன்றிணைக்கின்ற பல மைல்களுக்கப்பால் நிகழும் சம்பவங்களை உள்ளுர் நிகழ்வுகளாக உருவமைக்கின்ற உலக அளவிலான சமூக உறவுகளின் தீவிரப்படுத்தலே பூகோளமயமாக்கம்”எனக் குறிப்பிடுகிறார்.

இதேபோன்று ப்டெரிக் ஜேம்சன் என்பவர் குறிப்பிடும் போது

“நவீனகாலத்தின் ஆரம்ப காலங்களில் இருந்ததை விட அதிக நடைமுறை சாத்தியமானதாகவும் உடனடியாக நிகழ்வதாகவும், பெருமளவில் தெரியக் கூடியதுமான உலகத் தொலைத் தொடர்பின் பெருக்கத்தையும், பூகோள சந்தை எல்லையின் பெருக்கத்தையும் பூகோளமயமாக்கம் எனலாம் எனக் குறிப்பிடுகின்றார்.

டேவிட் ஹெல்டு என்பவர் குறிப்பிடும் போது

“பல்வேறு கண்டங்களுக்கிடையிலான அல்லது பிரதேசங்களுக்கிடையிலான செயற்பாடுகள், தொடர்புகள், ஆதிக்கச் செயற்பாடுகள் போன்றவற்றிற்கு இடையில் வலைப்பின்னல்கள் ஏற்படுகின்றன. இவ்வலைப்பின்னல்களின் பரவல், தீவிரம், வேகம், தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கணித்து, சமூக உறவுகள் மற்றும் நடவடிக்கைகளை இடரீதியாக ஒழுங்கமைக்கும் செயன்முறை அல்லது செயன் முறைகளின் தொகுப்பு பூகோளமயமாக்கம்” எனக் குறிப்பிடுகிறார்.

ரோலண்ட் ராபர்ட்சன் என்பவர் குறிப்பிடும் போது

“உலகினை அழுத்திச் சுருக்குதல்,உலகம் பற்றிய பிரக்ஞையின் தீவிரப்படுத்தல் ஆகிய இரண்டையும் முழுமையாகக் குறிப்பிடும் ஒரு கருத்தாக்கமே பூகோளமயமாதல்” எனக் குறிப்பிடுகிறார்.

ஜேம்ஸ் மிட்டல்மேன் என்பவர் குறிப்பிடும் போது “சமூக உறவுகளின் காலம், இடம் ஆகிய கூறுகளை பூகோளமயமாக்கம் அழுத்தி செறிவூட்டுகிறது” எனக் குறிப்பிடுகிறார்.

தாராண்மை வாதியான ஜே.எஸ் மில் என்பவர் பூகோளமயமாதல் பற்றிக் குறிப்பிடும் போது “போட்டிச் சந்தையில் உற்பத்தியைப் பெருக்குதல், புதிய பொருட்களை உற்பத்தி செய்தல், பொருட்களின் தரத்தை உயர்த்துதல் என்பவைகளே பூகோளமயமாதல்” எனக் குறிப்பிடுகிறார்.

ஓலன்டெயின் என்பவர் “முதலாளித்துவமே பூகோளமயத்தின் அடிப்படைக் காரணம்”. எனக்குறிப்பிடுகிறார்.

ரோலண்ட் ரொபேர்ட்சன் என்பவர் “உலகத்தை ஓரு முழுமையாகக் கொண்டு அந்த முழுமைத்தன்மையின் புலனுனர்வுத் தன்மை மற்றும் தீவிரமான உள்ளடக்கத்தன்மை ஆகியவற்றினூடாக உலகம் தொடர்பான ஒப்பீட்டுப் பார்வையே” பூகோளமயமாக்கம் எனக் குறிப்பிடுகிறார்.

பூகோளமயமாக்கம் தொடர்பாக ஒவ்வொரு அறிஞர்களும் ஒரு குறிப்பிட்ட விடயத்தினை முதன்மைப்படுத்துவதை அவதானிக்கலாம். சிலர் பொருளாதாரச் செயன்முறைகளே பூகோளமயமாக்கத்தின் மையப் பொருள் எனக் கூறுகின்றனர். வேறுசிலர் அரசியல், பொருளாதார, கருத்தியல் கூறுகளை முதன்மைப்படுத்துகின்றனர். இன்னும் சிலர் சுற்றுச் சூழல் இயல்புகளே பூகோளமயமாக்கத்தின் சாரம்சம் எனக் கூறுகின்றனர்.

மூலதனம் எங்கு அதிகமாக குவிந்து கிடக்கின்றதோ அங்கிருந்து அதைப் பெற்று, மனித வளம் எங்கு அபரிதமாகவும் குறைந்ததாகவும் இருக்கின்றதோ அங்கு உற்பத்தி செய்து எங்கு பொருட்களுக்குச் சந்தை அதிகமாக இருக்கின்றதோ அங்கு விற்பனை செய்வது பூகோளமயமாக்கல் எனக் குறிப்பிடலாம்.

தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல், பண்பாடு ஆகிய துறைகளின் முன்னேற்றங்களால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கிடையேயான தொடர்பையும் அதனால் ஏற்படும் ஒருவரில் ஒருவர் தங்கிவாழும் நிலையையும் பூகோளமயமாதல் எனலாம். இது வரலாற்றில் ஒரு தொடர் நிகழ்வாகும்

இதேபோன்று பூகோளமயமாதல் பொருளியல், சமூக மற்றும் சூழலியல் அடிப்படையில் விரும்பத்தகாத ஒரு விடயமாக உள்ளதுடன் வளர்ந்து வருகின்ற நாடுகளின் மனிதவுரிமைகளை நசுக்குவதாகவும் உள்ளது. மேலும் சேமிப்பிற்காக கொள்ளை இலாபம் ஈட்டுவதாகவும் உள்ளது. எனவே சர்வதேச வர்த்தக மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவி, போன்றவற்றின் மூலம் மக்கள், நாடுகள், அரசாங்கங்கள் என்பவற்றிற்கிடையிலான தொடர்புகள் மற்றும் ஒருங்கிணைப்பே பூகோளமயமாதல் எனலாம்.

பல்வேறுபட்ட இடங்களில் இருக்கின்ற மக்கள் மற்றும் நிறுவனங்களிடையே தொடர்புகளையும், தங்கியிருத்தலையும், ஒருங்கிணைத்தலையும் அதிகரிக்கின்ற பொருளியல், சமூகம், தொழில்நுட்பம். பண்பாடு, மற்றும் அரசியல் தொடர்பில் ஏற்படுகின்ற மாற்றங்களே பூகோளமயமாக்கல் என்ற சொல் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் முதலாளித்துவ உற்பத்தி முறையினை தமது ஏகபோக மூலதனத்தின் மூலம் விரிவுபடுத்தி அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலே பூகோளமயமாக்கலாகும் எனவும் குறிப்பிடப்படுகிறது. மேலும் பூகோளமயமாக்கல் என்பது அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு விளைவு எனவும் இது உலக அளவில் உற்பத்திகளின் வளர்ச்சி காரணமாக உற்பத்தி உறவுகளில் ஏற்பட்ட ஒரு மாற்றம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

பணக்கார நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளில் சென்று முதலிடுவது ஒரு புறமிருக்க ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்கள் பணக்கார நாடுகளுக்குச் சென்று குடியேறுவது மறுபுறம் நடந்து கொண்டிருக்கிறது. இருபத்தொராம் நூற்றாண்டில் பொருளாதார பலம் பொருந்திய பணக்கார நாடுகளால் பூகோளமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டு அதன்மூலம் இன்றுவரை சமூகத்தைப் பீடித்துள்ள வறுமை என்ற நோயை தீர்க்கும் மருந்தாகவும் பூகோளமயமாதல் உள்ளது எனக் கூறலாம்.

மேலும் நவீன காலணி;த்துவம், அரசியல். பொருளாதார ரீதியான அமெரிக்கத் தலைமையிலான மேற்குலகின் மேலாதிக்கத்தை உலகில் வலுவடையச் செய்து உலகை அடிமைப்படுத்துவதை இலக்காகக் கொண்டதே பூகோளமயமாதல் ஆகும் எனவும் கூறலாம்.

பூகோளமயமாக்கம் பொருளாதார, அரசியல், கலாசார, சுற்றுச்சூழல்ää சர்வதேசத் தொடர்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் குறிக்கிறது. இது நாடுகளின் எல்லைக் கோடுகளை பொருத்தமற்றவையாக மாற்றும் பண்பு கொண்டவைகளாகும்.

பூகோளமயமாக்கம் என்பது தொலைத் தொடர்பு, போக்குவரத்து, தகவல்தொழில் நுட்பம் ஆகியதுறைகளின் முன்னேற்றங்களால் உந்தப்பட்டு, சமூகங்களுக்கிடையில் அதிகரிக்கும் தொடர்பினையும் அதனால் ஏற்பட்டு வரும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழும் நிலையையும் குறிக்கின்றது எனலாம்.

பூகோளமயமாக்கலின் பண்புகள்

பூகோளமயமாதலின் பண்புகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

  1. பூகோளமயமாதல் மரபுவழிப்பட்ட அரசியல், பொருளாதார, கலாசார, புவியியல் எல்லைகளை மீறுகிறது. மேலும் ஏற்கனவே இருந்து வருகின்ற சமூக வலைப்பின்னல்களின் செயற்பாடுகளை மேலும் வளர்ப்பதனையும் உருவாக்குவதனையும்; நோக்கமாகக் கொண்டுள்ளது.
  2. சமூக உறவுகள், மற்றும் செயற்பாடுகள் ஆகியவற்றின் பரம்பல், விரிவாக்கம் இதன் மூலமான நிதிச்சந்தைகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. மின்னணுவியல் வர்த்தகம் இருபத்தினான்கு மணிநேரமும் நிகழ்கிறது. உலகத்தின் எல்லாப் பிரதேசங்களில் இருந்தும் பொருட்களை வாங்கக் கூடியளவுக்கு வர்த்தகமானது எல்லாக்கண்டங்களிலும் பரவி செயற்படுகிறது.
  3. பூகோளமயமாதல் சமூகப்பரிமாற்றங்கள் மற்றும் சமூகச் செயற்பாடுகளின் தீவிரப்படுத்தலையும்ää வேகப்படுத்தலையும் உள்ளடக்கியுள்ளது. மிகத்தொலைவிலுள்ள தகவல்களை இணையம் சில நொடிகளில் அஞ்சல் செய்து விடுகிறது தொலைதூர நிகழ்ச்சிகளின் உண்மைத் தகவல்களை படங்களாக செயற்கைக் கோள் மூலம் உடனடியாக பெற்றுக் கொள்ள முடிகிறது.
  4. பூகோளமயமாதல் நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான எல்லைகள், தூரங்கள் என்பவற்றைக் குறைத்துள்ளதுடன் தொடர்புகளை மேலும் அதிகரித்துள்ளது.

பூகோளமயமாக்கம் பொருளாதாரம்,தொழில்நுட்பம், கலாசாரம், அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் மக்கள், நாடுகள் என்ற ரீதியில் ஒன்றில் ஒன்று தங்கிக் வாழ்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளது. இது பூகோள நாடுகளையும், மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு பொறிமுறையாகும்.

உலகமானது ஒரு சிறிய இடமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதன் கருத்து உலகமானது பருமனில் சுருங்குகின்றது என்பதல்ல. மாறாக உலக மக்கள் பல்வேறு விடயங்களைக் குறித்து ஒருவருக்கொருவர் நெருக்கமடைகிறார்கள் என்பதாகும். இது பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு, சூழல், சுகாதாரம், சமூகம், கலாசாரம் என்பவற்றின் பிணைப்பினுடாக உலக மக்கள் நெருக்கமாவதுடன், ஒருவரில் ஒருவர் தங்கி வாழும் நிலையும் அதிகரித்துள்ளது.

பூகோளமயமாக்கலின் வகைகள்

பூகோளமயமாக்கலை பல்வேறுபட்ட அறிஞர்களும் பல்வேறுபட்ட வகைகளில் வகைப்படுத்தியுள்ளனர். அவற்றினை பொதுவாக பின்வருமாறு வகைப்படுத்தலாம். அவையாவன

1. பொருளாதார பூகோளமயமாக்கம் :

பொருளாதார பூகோளமயமாக்கம் என்பது அனைத்து நாடுகளினதும் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் ஒரு பொருளாதார நடவடிக்கையாகும். அதேநேரம் வர்த்தகக் கட்டுப்பாடுகளை நீக்குதல், மூலதனம் மற்றும் ஊழியக்கட்டுப்பாடுகளை நீக்குதல் போன்ற விடயங்களை தாராளமயப்படுத்ததுகின்றது. இதன் மூலம் உலக நாடுகளை ஒரே வகையான சந்தை பொருளாதார முறைமையின் கீழ் கொண்டு வந்து அதன் மூலம் தொழில்நுட்பம் சார்ந்த அறிவினை உலகநாடுகள் அனைத்திற்கும் கிடைக்கச் செய்கின்றது. இது எல்லா நாடுகளையும் ஒன்றிணைக்கும் பொருளாதார செயற்பாடாகும்.

2. தொழில்நுட்ப பூகோளமயமாக்கம்

தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தியை அதிகரித்து அதன்மூலம் சர்வதேச ரீதியாக நடைபெறும் தகவல்களை உடனடியாக மக்களுக்கு வழங்கி அதன் மூலம் மக்களை பூகோள கிராமமாக செயற்பட வைத்தல்.

3. சமூக பூகோளமயமாக்கம்

இணையத்தின் வருகையின் பின்னர் சமூகரீதியாக மக்களின் நடை, உடை பாவனைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினையே சமூக பூகோளமயமாக்கம் குறிப்பிடுகிறது.

பூகோளமயமாக்கத்தின் விளைவுகள்

துறைசார் அறிவியல்களின் செல்வாக்குக்கு உட்பட்ட பூகோளமயமாக்கத்தின் விளைவுகள் பன்முகப்படுத்தப்பட்டன அவையாவன

1 கைத்தொழில்:

நுகர்வோர் மற்றும் கூட்டுறவுடன் செயற்படுவோர் வெளிநாட்டு உற்பத்திகளை ஒரு தரத்திற்கு கொண்டுவருவதற்கு உதவுகின்றது.

2 நிதி

உலகளாவிய ரீதியில் நிதிச்சந்தைகளையும் அதனுடன் தொடர்புடைய வழிவகைகளையும் உருவாக்குகின்றது.

3 பொருளாதாரம்:

சந்தை பொருளாதாரம் தீர்மானிக்கும் வர்த்தகப் பொருட்கள் மற்றும் மூலதனப்பரிமாற்றங்களுக்கு அடிப்படையாக அமைகின்றது.

4 அரசியல்:

அரசியல் ரீதியில் நாடுகளின் நகர்வுகள் குறித்து அவதானிப்பது முக்கியம் பெறுகிறது. அரசியல் ரீதியாக அமெரிக்கா ஆதிக்கத்தை அனுபவித்துக் கொண்டு தனது பொருளாதாரத்தை எவ்வாறு விருத்தி செய்கிறது என அறிய உதவுகின்றது.

5 தகவல் தொடர்பாடல்:

தொலைவிலுள்ள இடங்களுக்கு தகவல்களை விரிவுபடுத்துகின்றது.

6 சுற்றுச்சூழல:;

பூகோளச்சுற்றாடல் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. காலநிலைமாற்றம், நீர் காற்று மாசடைதல் போன்ற விடயங்களில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.

7 பண்பாடு:

உலகமக்கள் அனைவரையும் ஒரே பண்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்கின்றது.

8 சமூகம்:

உலக மக்கள் ஒரே வழியில் சுதந்திரமாகச் சுற்றி வருவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

9 விஞ்ஞானத்துறை:

எல்லைகடந்த தகவல் பாய்ச்சலையும் இணையம், தொடர்பாடல், செய்மதிகள் போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளுகிறது.

பூகோளமயமாக்கமும் அரச முறைமையும்

அரசுகளின் எல்லை தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியினால் வழக்கொழிந்துள்ளது. தொலைக்காட்சி வலைப்பின்னல் “இரும்புத் திரைகளையும், மூங்கில் திரைகளையும்” அழித்தொழித்தது. அரசுகளின் சுயாட்சியுரிமை, கட்டாயப்படுத்தும் ஆற்றல் என்பவைகளால் ஏற்பட்ட வன்முறை, மோதல் நோக்கிய மனப்பாங்கு மாற்றமடைந்து; சமாதான உலக ஒழுங்கை அரசியல் பூகோளமயமாக்கம் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

பூகோளமயமாக்கம் தூரமற்றதும், எல்லையற்றதுமான சமூக உறவுகளை உருவாக்கியுள்ளது. ஆகவே மனித வாழ்க்கையில் தாம் வாழும் அரசினை தமக்குரிய இடமாகக் கருதி வந்த பண்பு மாறி உலகத்தினை தமக்குரிய தனியிடமாகக் கருதி வாழ வேண்டிய சூழல் உருவாக்கியுள்ளது. மக்கள் ஒருவருடன் ஒருவர் உறவு கொள்ளும் வகையில் பூகோளத்தினை ஒரு தனி அலகாக்கி, ஒழுங்கமைத்து அதற்குள் எண்ணற்ற சிக்கலான விடயங்களைக் கொண்ட சமூக உறவினைப் பேண முயலுகின்றது. இதனால் அரசின் தனித்துவம் சிதைக்கப்படுகின்றது.

அரசதனியுடமையின் சிதைவு

ஹெகல், ஒஸ்ரின், ஹொப்ஸ் ஆகியோர்களின் வியாக்கியானங்களின் படி நவீன அரசுகள் இறைமையுடன் தொடர்புடையனவாகும். இறைமை என்ற எண்ணக்கருவே ஒவ்வொரு தேசிய அரசுகளினதும் தனித்துவத்தினை பாதுகாத்து வருகின்றது. பூகோளமயமாக்கம் இத்தனித்துவத்தினைக் கட்டுப்படுத்துகின்றது.

அரசுகளின் சுயாட்சியுரிமை குறிப்பிடத்தக்களவிற்கு கட்டுப்படுத்தப்படுகின்றது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலகவர்த்தக நிறுவனங்கள் போன்ற அமைப்புக்கள் தேசிய அரசுகளை நெறிப்படுத்துகின்றன.

ஆனால் தேசிய அரசுகள் தொடர்ந்தும் இறைமை என்ற எண்ணக்கருவைக் கொண்டுள்ளன. ஆனால் இவ் இறைமை பரந்தளவில் அழிவுற்று வருகின்றது. அதாவது அரசுகள் தமது கட்டுப்பாட்டினை இழந்து வருகின்றன.

பூகோளமயவாக்கத்தினால் தேசிய அரசுகளின் வெளி இறைமை முழுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் “நலன் பேணும் அரசு” (Welfare State) என்பதும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. பூகோளமயமாக்கம் புதியவடிவிலான அரச முறைமையினைத் தோற்றுவித்தது. அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து அரசு செயற்பட வேண்டியுள்ளது.

இறைமையின் அழிவு என்பது சட்டரீதியாக அல்லது கொள்கை வழிநடத்தல்கள் மீதான கட்டுப்பாடனவை அல்ல. இந்த ரீதியில் நோக்கும் போது தேசிய அரசுகளின் தனியுடமைத் தன்மையானது சிதைக்கப்படுகின்றது என்றே கூறலாம்.

எனவே பூகோளமயமானது ஒப்பந்த ரீதியான பயனற்ற அரச முறைமையினை உருவாக்குகின்றது. இதன் பெறுபேறாக தேசிய அரசுகளின் பிரதேசங்கள் எது என்பது மீள் சிந்திக்கப்பட்டதுடன், வசதி படைத்த நாடுகளின் மூலதனமும், உற்பத்திகளும் உலகம் முழுவதும் செறிவாக்கப்பட்டன. இதற்கான வாய்ப்பினை பல்தேசியக் கம்பனிகள் உருவாக்கியுள்ளன. அதாவது, நிறுவனங்கள் எங்கு உற்பத்தியை மேற்கொள்கின்றன? மக்கள் எங்கு பண்டங்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்கின்றனர்? என்பவற்றைப் பொறுத்தவரை தேசிய எல்லைகள் உடைத்தெறியப்படுகின்றன.

பல்தேசியக் கம்பனிகளின் உற்பத்தி நடவடிக்கைகளினால் பல்வேறு நாடுகளின் உற்பத்தி வசதிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இவை பூகோளரீதியான தொழிற்சாலைகளை(Global Factories) உருவாக்குகின்றன. பல்தேசியக் கம்பனிகளின் தலைவர்கள் வறிய பின்தங்கிய நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் மீது செல்வாக்குச் செலுத்துவதோடு இந்நாடுகளின் திட்டமிடலாளர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டன. இதனை ஐ. நா அறிக்கை பின்வருமாறு தெரிவித்துள்ளது.

“பலதரப்பு பொருளாதார உடன்படிக்கைகளினால் தேசிய எல்லைகள் தகர்த்தெறியப்பட்டு தேசியக் கொள்கைக்கான விருப்பத் தெரிவாக பூகோள போட்டிச் சந்தையினை உலக நாடுகள் தெரிவு செய்கின்றன.”

சிவில் சமூகங்களின் தலையீடு

புதிய சமூக இயக்கங்களினால் வளரும் ப10கோளமயவாக்கத்தின் போக்கு நிலைநிறுத்தப்பட்டது. சிவில் சமூகம் “பூகோளமயமாதல்” உருவாவதற்கான கலைஞர்களாக உள்ளது. சிவில் சமூகங்கள் சிறப்பான வளங்களையும், வல்லுனர்களையும் உள்வாங்கி பூகோள பிரச்சினைகளுக்கான அறிவினை வெளிப்படுத்தி அரச முறைமைக்கு அப்பால் நின்று தமது செயற்பாடுகளை மேற்கொள்ளுகின்றன.

தேசிய அரசுகள் தமது நலன்புரிச் செயற்பாடுகளில் இருந்து பின்வாங்குவதற்கேற்ற பலாத்காரத்தினை சிவில் சமூகங்கள் வழங்குகின்றன. மிகவும் அவசியமான நலன்புரிச் செயற்பாடுகளாகிய சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்றவற்றிலிருந்து அரசுகள் பின்வாங்குவதால், இவைகளைப் பராமரிப்பதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் தயாராகின்றன.

சமூக இயக்கத் தலைவர்கள் இவ் வெற்றிடத்தினை நிரப்புவதற்கு முன் வருகின்றார்கள். “பூகோள நகரம்” என்ற தத்துவத்தினடிப்படையிலான நன்னெறி விதிகளை மேன்நிலைப்படுத்துபவர்களாக சிவில் சமூகத்தினர் உள்ளனர். அத்துடன் இந் நன்னெறிகளை எல்லா அரசுகளும் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இவர்கள் எதிர்பார்க்;கின்றார்கள். இதனால் இன்று அரசுகள் நலன்புரி அரசுகள் என்ற நிலையிலிருந்;து விலகி குறைந்தபட்ச அரசுகளாகிவிட்டன (Minimal State).

மனித உரிமை, பயங்கரவாதம்

இன்று பலமான உலக அரசுகள் பலவீனமான அரசுகளின் உள்நாட்டு விடயங்களில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்ற பெயரில் பரிந்து பேசி தலையிடத் தொடங்கியுள்ளன. மேலும் பலவீனமான அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு பயங்கரவாத பிரச்சினைகளை காரணங்காட்டியதுடன், பயங்கரவாதப் பிரச்சினைகளால் மக்களின் வாழ்க்கை, பொருளாதாரம் என்பன உலகளாவிய ரீதியில் பாதிக்கப்படுவதாக பலமான அரசுகள் நியாயம் கற்பிக்கின்றன. அத்துடன் பெரும்பாலான நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதம், சுற்றுச்சூழல் மாசடைதல், அணுசக்தி பரம்பல், தொற்று நோய் பரம்பல், உள்நாட்டு மட்டத்தில் திடீரென எழுச்சியடையும் இனமுரண்பாடுகள் என்பவைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவை மீதான பொறுப்பினை பலமான அரசுகள் ஏற்றுக் கொண்டு பூகோளமயவாக்கத்திற்கான வழியினை எற்படுத்திக் கொடுக்கின்றன.

தொழில் நுட்ப வளர்ச்சி

அசுகளின் தேசிய எல்லைகளின் பண்புகள் வளர்ச்சியடைந்த தகவல் தொழில்நுட்ப அறிவினால் தகர்க்கப்பட்டன. புதிய உலக யதார்த்தம் உணரப்பட்டது. அதாவது கைத்தொழில் சமூகத்திலிருந்து விடுபட்டு உலகம் தொழில்நுட்ப சமூகத்திற்குள் நுழைந்து கொண்டது. தொழில் நுட்பத்தின் வளர்ச்சி ஆழமான சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்திற்குள் உலகினைக் கொண்டு வந்தது. உதாரணமாகப் பொருளாதார செயற்பாட்டின் மையம், பொருளாதார போட்டியின் இயல்பு, உற்பத்திப் பண்புகளின் இயல்பு என்பவைகளில் மாற்றங்கள் எற்பட்டன. குறிப்பாக கணனியின் வருகையும், பூகோள தொடர்பாடல் முறைமையும் தொடர்பாடலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. தொடர்பாடல் புரட்சியும், தொழில் நுட்ப வளர்ச்சியும் கடந்த இரண்டு தசாப்தத்தில் பூகோளமயமாக்கத்தினை துரிதப்படுத்தியுள்ளது.

தொடர்பு சாதனங்கள் அல்லது தொழில் நுட்பங்கள் என்பவற்றில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் காலம், இடம், என்பவற்றில் காணப்பட்ட இடைவெளிகள் அல்லது தூரங்கள் முக்கியமிழந்துவிட்டன. உலகில் ஒரு பகுதியில் இடம்பெறும் ஒரு நிகழ்வு முழு உலகத்தையுமே ஏதோ ஒரு வகையில் பாதிக்கின்றது. அரசியல் பரப்பிற்குள் தொழில் நுட்பம் தனக்கான பொருத்தப்பாட்டினை எடுத்துள்ளது.

இவ்வகையில் ஒன்று உலக மக்களுக்கிடையில் இறுக்கமான தொடர்பினை ஏற்படுத்துவதனூடாக உள்நாட்டு அரசியலுக்கும், சர்வதேச உறவுகளுக்குமிடையிலான தனித்தன்மை தகர்க்கப்படுகின்றது. விக்கிலீக்ஸ் (Wikileaks) இணையத்தளத்தினை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பூகோள பலத்தின் தன்மையினைப் பொறுத்து உள்நாட்டு அரசியல் விடயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. அத்துடன் உள்நாட்டு விடயங்கள், நிகழ்வுகள் சர்வதேசமயப்படுத்தப்படுகின்றன. உள்நாட்டு மட்டத்தில் நிகழ்கின்ற சிறிய விடயங்கள் கூட ஆழமாகவும், அகலமாகவும் சர்வதேச மயப்படுத்தப்பட்டு விடுகின்றன.

இறைமையின் ஒருமுகத் தன்மை சிதைவடைதல்.

பூகோளமயவாக்கம் என்ற விடயம் தேசிய அரசுகளின் இறைமைக் கோட்பாட்டுக்கு முனைப்புக் கொடுத்தமையினால் உருவாக்கப்பட்டதாகும். இன்றைய யுகத்தில் எந்தவொரு அரசும் ப10ரண இறைமையுடன் செயற்பட முடியாதுள்ளது. ஏதோவொரு வகையில் ஒரு தேசம் பிறிதொரு தேசத்துடன் இணைந்து செயற்படுவதோடு தங்கியிருக்கவும் வேண்டியுள்ளது. அதனால் இறைமையின் ஒருமுகத் தன்மையானது சிதைவடைந்து விடுகின்றது. இதற்கு ஏற்கனவே கூறிய அரசின் தனியுடமைத் தன்மையின் அழிவு, பல்தேசியக் கம்பனிகளின் செல்வாக்கு, சிவில் சமூகங்களின் செயற்பாடுகள், தொழில் நுட்ப வளர்ச்சி, எல்லை கடந்த அரசுகளின் உருவாக்கம் என்பன காரணமாக அமைந்து விடுகின்றன.

இதில் முக்கியமாக எல்லை கடந்த அரசு என்ற விடயம் பிரதான பங்காற்றுகின்றது அதாவது எல்லை கடந்த அரசு என்பது இறைமை பிரிக்கப்பட்ட அரசு என அழைக்கப்படுகின்றது. இவ் அரசு தனக்கான பிரதேச எல்லையினைக் கொண்டிருக்காததுடன், மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தினையும் கொண்டிருப்பதில்லை. மேலும் தனியான காவல் துறை, நீதிமன்றம், இராணுவம் என்பவைகளையும் கொண்டிருப்பதில்லை. இறைமையின் எல்லாப் பண்புளையும் இழப்பதற்கு இவ் அரசு விருப்பத்துடன் காணப்படும்.

பூகோளமயமாதல் எல்லை கடந்த அரசுகளை எல்லை கடந்த பிரஜாவுரிமையுடன் உருவாக்கியிருந்தது. உலகத்தின் ஒரு பகுதியிலிருந்து பிரிதொரு பகுதிக்குச் சென்று அங்கு அந்நாட்டுப் பிரஜைகளாக குடியேறினர். இதன் மூலம் பல் – கலாசார பிரஜாவுரிமை எழச்சியடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளில் உள்ள பிரஜைகள் ஐரோப்பிய நாடுகளுள் நிரந்தரமாக குடியேற முடிந்தது. கோல்ஸ்மித் (Goldsmith)கனவு காணும் “மனிதர்களின் உலகப் பிரஜாவுரிமை” ரக்கோரின் (Tagore) இலக்காகிய “உலகளாவிய மனிதன்” (Universal man) என்பவைகளை நிதர்சனமாக்குபவைகளாக இவைகள் அமைகின்றன. வெஸ்பாலியா ஒப்பந்தம் (1648) நவீன தேசிய அரசுகளின் வடிவத்தினை உருவாக்கியிருந்தது.

உரோம ஒப்பந்தம் (1957) எல்லை கடந்த அரசுகளுக்கான வடிவத்தினை உருவாக்கியிருந்தது. மேற்கு ஐரோப்பிய அரசுகளாகிய இத்தாலி, பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பேர்க் ஆகிய ஆறு அரசுகள் இணைந்து ஐரோப்பிய பொருளாதார சமுதாயத்தினை உருவாக்கின. இது பின்னர் ஐரோப்பிய சமுதாயமாக மாற்றமடைந்து, 1992 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியமாக மாற்றமடைந்தது.

ஐரோப்பிய ய10னியனின் எதிர்காலக் கனவு “பொதுவான ஐரோப்பிய இல்லம்” (Common European Home) என்பதை அடைவதாகும். ஐரோப்பிய யூனியனில் அங்கம் பெறும் நாடுகள் அனைத்தும் பொதுவான நாணயத்தை பயன்படுத்துவதுடன் (Euro) பொதுவான வெளிவிவகாரக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றார்கள். ஐரோப்பிய யூனியனின் நிர்வாகத்திற்கு ஐரோப்பிய ஆணைக்குழு பொறுப்பானதாகும். இதன் தீர்மானத்திற்கு எல்லா அங்கத்துவ நாடுகளும் கட்டுப்படுகின்றன. அங்கத்துவ நாடுகளுக்கிடையில் தோன்றும் சட்டத்திற்குட்பட்ட தகராறுகளை ஐரோப்பிய நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்குகின்றது. இதன் தீர்ப்பினை அங்கத்துவ நாடுகள் ஏற்றுக் கொள்கின்றன. அங்கத்துவ நாடுகளின் பிரசைகள் சுதந்திரமாக பரஸ்பரம் ஒவ்வொரு நாடுகளுக்குள்ளும் பிரயாணம் செய்கின்றார்கள். இணைந்த கல்வி நிறுவனங்கள் வியாபாரம், தொழில் வாய்ப்புக்களை எவ்வித ஒளிவு மறைவுமின்றி அங்கத்துவ நாடுகள் மேற்கொள்கின்றன.

மறுபக்கத்தில் எல்லை கடந்த அரசில் வாழும் மக்கள் ஒன்று சேர்க்கப்பட்ட இறைமை (Pooled Sovereignty) மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்கின்றார்கள். அவைகளைப் பின்வருமாறு பட்டியல் படுத்தலாம்.

  1. ஐரோப்பிய ய10னியனில் அங்கத்துவம் பெறும் அரசுகளில் உள்ள மக்கள் எல்லை கடந்து சென்று வாழவும் பயனுள்ள தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளவும், சுதந்திரமாக பிரயாணம் செய்யவும் உரிமை பெறுகின்றார்கள்.
  2. அங்கத்துவ நாடுகளில் வாழும் மக்கள் தொழில் வாய்ப்பினைப் பெறும் சந்தர்ப்பத்தில் தேசியத்தினைக் காரணமாகக் கொண்டு பாரபட்சப்படுத்தப்படுதலை ஐரோப்பிய யூனியனின் சட்டம் தடை செய்கின்றது. சமூகப் பாதுகாப்பு, தொழிற் சங்க உரிமைகள், கல்வி, தொழிற் பயிற்சி, சிறப்பான வாழ்க்கை, தொழில் சூழலைப் பெறுதல் போன்றவற்றில் பாரபட்சப்படுத்தப்படுதலுக்கு உட்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
  3. அங்கத்துவ நாடுகளிடையே பொதுவான கல்வி முறையினூடாக பரஸ்பர மொழி கலாசாரம் பற்றி தெரிந்து கொள்வதற்கும், கற்றுக் கொள்வதற்கும் வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.
  4. அங்கத்துவ நாடுகளின் பிரசைகள் முழுமையான பிரஜாவுரிமையினைப் பெற்றுக் கொள்வதற்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள ஐரோப்பிய யூனியன் சிபாரிசு செய்கின்றது.
  5. அரசுகள் தமது பிரதேசத்திற்குள் முழுமையான அதிகாரத்;;தினை இழந்திருக்கும். அங்கத்துவ அரசுகளின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்.

விமர்சனம்

பூகோளமயமாக்கம்; பற்றிய எதிர்க்கருத்துகளும் காணப்படுகின்றது. அந்தவகையில் பூகோளமயமாக்கத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் மேற்குறிப்பிட்ட கருத்துகளை நிராகரித்து பூகோளமயமாதல் என்னும் செயன்முறையே இல்லை எனக் குறிப்பிடுகிறார்கள். அதேபோன்று பூகோளமயமாக்கலை ஆதரிக்கும் ஒரு பிரிவினரும் எதிர்க்கும் ஒரு பிரிவினரும் சர்வதேச ரீதியாக செயற்பட்டு வருகின்றனர். இதில் பூகோளமயமாக்கலை ஆதரிக்கும் பகுதியினரை நோக்கும் போது உலகம் பூராகவும் அரச ஆதரவில் இயங்குவோரும், அரசஅதிகாரத்தில் இருப்போரும் என்ற மிகச் சொற்ப அளவினரே காணப்படுகின்றனர். பூகோளமயமாக்கலை எதிர்ப்போர் அணியில் உலகம் பூராகவும் பெரும்பாலும் அரசஅதிகாரத்தில் இல்லாதோரும், அரசஆதரவு அற்றவர்களும், தொழிலாளர்கள், மற்றும் இடதுசாரிகளும், மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள் எனப் பல பிரிவினர்கள் காணப்படுகிறார்கள். இதில் குறிப்பிடக்கூடியவைகளாக லாபென்னின் பிரெஞ்சு தேசிய முன்னணி, ஜேர்மன் மக்கள் யூனியன் போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன.

பூகோளமயமாக்கலுக்கு எதிரான எழுச்சிப் போராட்டங்களையும் மக்கள் உலகளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றார்கள். அந்தவகையில் 2001ஆம் ஆண்டு ஆடி மாதம் இத்தாலியின் ஜெனிவா நகரில் நடைபெற்ற G8 உச்சி மகாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மூன்று இலட்சம் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

இவ்வாறான பூகோளமயமாக்கல் எனும் எண்ணக்கருவானது தோல்வியடைந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. கீழைத்தேசத்தின் சீனநாகரிகமும் இஸ்லாமிய சமயமும் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டு தமது பாதுகாப்புடன் பூகோளமயவாக்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கி விட்டன. மேலும் மேற்குலகின் ஏற்பட்ட நிதிநெருக்கடி கீழைத்தேசத்தை கையாள முடியாமல் போய்விட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

பூகோளமயமாக்கல் என்றால் என்ன என்பது தொடர்பாக பல வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் அவற்றினை தொகுத்து நோக்கும் போது தொலைத் தொடர்பு, போக்குவரத்து, தகவல்தொழில் நுட்பம் ஆகியதுறைகளின் முன்னேற்றங்களால் உந்தப்பட்டு சமூகங்களுக்கிடையேயான அதிகரிக்கும் தொடர்பினையும் அதனால் ஏற்பட்டு வரும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழும் நிலையும் பூகோளமயமாக்கல் எனக் குறிப்பிடலாம்.

பூகோளமயமாக்கம் என்றால் என்ன என்பது தொடர்பாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன இருப்பினும் அவை ஏதோ ஒரு துறை சார்ந்ததாகவே காணப்பட்டது. குறிப்பாக பொருளாதாரம் சார்ந்த கருத்துகளே முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது. இதன்படி பூகோளமயமாக்கத்தின் நோக்கம் பொருளாதாரத்தை மையப்படுத்திய ஒன்றாகவே காணப்படுகிறது எனக்குறிப்பிடலாம்.

பூகோளமயமாக்கத்தின் பண்புகளாக உலகநாடுகளுக்கிடையிலும், மக்களுக்கிடையிலுமான தொடர்பினை ஏற்படுத்துதல், சந்தைகளின் விரிவாக்கம் போன்றவற்றனூடாக மேலேத்தேய நாடுகள் மூன்றாம் மண்டல நாடுகளிலும் தலையிடுவதனைக் காணமுடிகிறது. பூகோளமயமாக்கம்; ஏற்படுத்தியுள்ள பாதகமான விளைவுகள் காரணமாக அதற்கு எதிராக மக்களின் ஆர்ப்பாட்டங்களையும் காணமுடிகிறது. மேலும் மேற்குலகில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகள் காரணமாக பூகோளமயமாக்கச் செயற்பாடானது தோல்வியடைந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

13,645 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>