அரசாங்கத்தின் மூன்று துறைகளில் ஒன்றாகிய நீதித்துறை ஏனைய இரண்டு துறைகளாகிய சட்டத்துறை, நிறுவேற்றுத்துறை ஆகியவற்றிற்கு சமமானதாகும். சட்டத்துறை இயற்றும் சட்டங்களுக்கு வியாக்கியானங்களை வழங்குவதுடன், சட்டங்களை மீறுகின்ற குற்றவாளிகளுக்கு தண்டகளையும் நீதித்துறையானது வழங்குகின்றது. மேலும் ஏனைய மனிதர்களினால் அல்லது அரச அதிகாரிகளினால், அரசாங்கத்தின் ஏனைய பகுதிகளினால் தனிமனிதர்களுடைய உரிமைகளும், சுதந்திரங்களும் மீறப்படுமாயின் அதிலிருந்து அவர்களைப்; பாதுகாக்கும் பொறுப்பும் நீதித்துறைக்கேயுள்ளது. சட்டத்துறை அல்லது நிறைவேற்றுத்துறையினால் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுமானால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பும் நீதித்துறைக்குள்ளது. சட்டத்துறை இயற்றும் சட்டங்களுக்கு மக்களை கீழ்ப்படிய வைப்பது அதன் பிரதான கடமையாகும்.
நாட்டில் பின்பற்றப்படும் சட்டங்களுக்கும், அரசியல் யாப்புச் சட்டங்களுக்கும் விளக்கம் அளிப்பதே நீதித்துறையின் முதற் கடமையாகும். ஒவ்வொரு வழக்கிலும் சட்டத்தின் நிலை என்ன என்பதை விளக்கிக் கூற வேண்டிய கடமை நீதித்துறையைச் சரர்ந்ததாகும். நடைமுறையிலுள்ள சட்டத்திற்கும் அரசியல் யாப்பு சட்டத்திற்கும் விளக்கம் கூறி வழக்குகளை நேர்மையானமுறையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் போது தேவையேற்படின் புதுச்சட்டங்களை நீதிபதிகள் இயற்றிக் கொள்ளலாம். சில நேரங்களில் நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் மௌனமாக இருக்க, நீதிபதிகள் தமது தீர்ப்பின் மூலமாக புதிய வியாக்கியானங்களைச் சட்டங்களுக்கு வழங்குகின்றனர். நீதித்துறையின் சிறப்பினை பிறைஸ் விபரிக்கும் போது “அரசாங்கத்தின் சிறப்பினை எடுத்துக் காட்டுவதற்கு நீதித்துறையின் செயற்திறனை விட சிறந்த எதுவுமில்லை” எனக் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைப்பு
பொதுவாக நீதித்துறை படிகள் வடிவில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதாவது நீதித்துறையிலுள்ள நீதிமன்றங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக ஒழுங்கமைக்கப்பட்டு கீழ்மன்ற தீர்ப்புகளுக்கெதிராக மேல் மன்றத்தில் முறையிடும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீதித்துறையின் உச்சத்தில் ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி அமைக்க அல்லது நிராகரிக்க உரிமை பெற்ற உயர்நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உயர் நீதி மன்றத்திற்கு தீர்ப்பு வழங்கும் இறுதி அதிகாரம் வழங்கப்பட்டதன் மூலம் எல்லா நீதிமன்றங்களும் கீழிருந்து மேல்வரை ஒரே மாதிரியான சட்ட விளக்கம் வழங்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஒன்றாகவிருந்து பெரும்பான்மை வாக்கின் மூலம் தீர்ப்பு வழங்குகின்றனர். பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தும், சிறுபான்மை நீதிபதிகளின் கருத்தும் தெரிவிக்கப்படுகின்றன. நீதிமன்றத் தீர்ப்புகள் மீது வழங்கப்படும் விளக்கங்களும், அபிப்பிராயங்களும் எதிர்காலத்தில் புதிய சட்டம் உருவாக்கப்பட முக்கிய மூலமாக பயன்படுத்தப்படுகிறது.
சமஸ்டிஆட்சி முறையினைப் பின்பற்றுகின்ற நாடுகளில் இரண்டு வகையான நீதி மன்றங்கள் உள்ளன. ஒன்று சமஸ்டி நீதிமன்றங்கள் எனவும் மற்றையது மாநில நீதிமன்றங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. சமஸ்டி நீதிமன்றங்கள் மத்திய அரசாங்கத்திற்கும், மாநிலங்களுக்குமிடையே ஏற்படும் பகிரப்பட்ட அதிகாரங்கள் தொடர்பாக எழும் சச்சரவுகளை தீர்த்து வைக்கின்றன. அதே நேரத்தில் மாநில நீதி மன்றங்கள் மாநிலங்களுக்குள்ளே ஏற்படும் வழக்குகளில் கவனம் கொள்கின்றன.
சர்வாதிகார நாடுகளில் நீதிபதிகள் சுதந்திரமாகச் செயற்பட முடியாது. சர்வாதிகாரிகளின் விருப்பத்திற்கு இணங்க நீதி மன்றத்தில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்நாடுகளில் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றங்களினால் முடியாத நிலை ஏற்படுகின்றது.
நீதித்துறையின் பண்புகள்
நீதித்துறைக்கு தற்காலத்தில் இருக்க வேண்டிய பொதுவான பண்புகளைப் பின்வருமாறு தொகுத்தக் கூறலாம்.
-
சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்ற தத்துவத்தினை தற்கால அரசுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டுள்ளன. அரசில் வாழும் ஒவ்வொரு பிரசையும் அந்தந்த நாட்டில் நிலவும் சட்டத்திற்கு முன்னால் சமமானவர்களாகும். நீதிபதிகள் நீதியை வழங்குவதற்கேற்ற உயர்ந்த நன்னெறி இயல்புகள் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நீதிபதிகள் உண்மைகளைக் கருத்திலெடுத்து அது நீதியானதா? அல்லது அநீதியானதா? என்று கூறுவதில்லை. பதிலாக நடைமுறையிலுள்ள சட்டங்களின் அடிப்படையில் வியாக்கியானங்களை மட்டுமே வழங்குகின்றனர்.
-
நீதியோ அல்லது அநீதியோ நீதிபதிகள் உண்மைகளுடன் இணைந்திருப்பதில்லை. பதிலாக சட்டங்களுக்கு வியாக்கியானங்கள் கொடுப்பவர்களாகவே இருக்கின்றார்கள்.
-
உலகத்திலுள்ள எல்லா ஜனநாயக நாடுகளிலும் நீதித்துறையானது அரசியல் அல்லது தனிநபர்களின் அழுத்தங்களிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகவும்ää நீதியாகவும் இயங்கக்கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கு கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படுவதுடன்ää சமூகத்தில் கௌரவமானவர்களாகவும் மதிக்கப்படுகின்றார்கள். நீதிபதிகளின் ஒழுக்கங்கள் நெறிமுறைகளைப் பேணுவதற்கு இவ்வாறான ஒழுங்கு விதிகள் அவசியமானதாகும். மேலும் நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகளை இலகுவில் பதவியிலிருந்து நீக்கி விட முடியாது. நீதிபதிகளுக்கான சட்டப் பாதுகாப்பு ஒவ்வொரு நாட்டிலும் வழங்கப்பட்டுள்ளது.
நீதித்துறையின் தொழிற்பாடு
நவீன ஜனநாயக நாடுகளில் நீதித்துறையானது பல்வேறு வகையான தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளது. அடிப்படையில் நீதிபதிகள் சட்டங்களுக்கு வியாக்கியானங்களைக் கொடுத்து புதிய சட்டங்களை உருவாக்குகின்றார்கள். பொதுவாக எல்லா ஜனநாயக நாடுகளிலும் உள்ள நீதித்துறைகளின் பணிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
-
நீதியை நிர்வகிப்பது என்பது நீதித்துறையின் பிரதான பணியாகும். நீதித்துறை தனிநபர்களின் சுதந்திரங்கள், உரிமைகளைப் பாதுகாக்கின்றது. நீதித்துறை குற்றமிழைத்தவர்களைத் தண்டித்து அப்பாவி மக்களைப் பாதுகாக்கின்றது. நெகிழா அரசியல் யாப்பைப் பெற்றுள்ள நாடுகளில் யாப்பின் பாதுகாவலனாக நீதித்துறை இயங்குகின்றது. நீதிப்புனராய்வு அதிகாரத்தின் மூலம் அரசியல் யாப்புக்கு எதிராக சட்டமன்றம் இயற்றும் சட்டங்களையும் நிறைவேற்றுத்துறை பிரகடனம் செய்யும் கட்டளைகளையும் நிராகரிக்க நீதித்துறை உரிமைப் பெற்றுள்ளது.
-
சட்டத்துறை சட்டம் இயற்றும் கடமையினைச் செய்தாலும்ää நீதிமன்றங்கள் பிரிதொரு வகையில் சட்டத்தினை இயற்றுகின்றன. நீதி மன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் மூலமாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இவைகள் வழக்குகளினூடாகப் பெறப்படும் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் சட்ட முன்மொழிவுகளாகும்.
-
அரசியல் யாப்பின் பாதுகாவலனாகவும் நீதித்துறை செயற்படுகின்றது. குறிப்பாக சமஸ்டி யாப்பில் அரசியல் யாப்பின் பாதுகாவலனாகவும் நீதித்துறை அழைக்கப்படுகின்றது. சமஸ்டி அரசுகளில் மத்தியரசிற்கும் மாநில அரசுக்குமிடையில் எதிர் எதிரான மோதல்கள் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பாக ஏற்படுகின்ற போது அதனைத் தீர்த்து வைப்பதனூடாக அரசியல் யாப்பினைப் பாதுகாக்கின்றது. அதேபோல மாநில அரசுகளுக்கிடையில் ஏற்படும் மோதல்களையும் நீதித்துறையே தீர்த்து வைக்கின்றது. நீதித்துறை வழங்கும் தீர்ப்பே இறுதியானதாகவும் இருக்கும். இன்னோர் வகையில் கூறினால் சமஸ்டி அரசின் உயர் நீதிமன்றம் அரசியல் யாப்பு சார்ந்த வழக்குகளை விசாரணை செய்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் சுதந்திரமானதும், நேர்மையானதுமான உயர் நீதிமன்றத்தின் தேவை உணரப்படுகின்றது.
-
உள்ளுறைந்த அதிகாரங்களுக்கு விளக்கம் கொடுக்கவும் நீதித்துறை பொறுப்பேற்றுள்ளது. உள்ளுறைந்த அதிகாரங்கள் அரசியல்யாப்பில் வெளிப்படையாகக் கூறப்படாத அதிகாரங்களைக் குறிக்கும். அமெரிக்க சமஸ்டியில் உள்ளிறைந்த அதிகாரங்களுக்கு விளக்கம் கூறுவதன் மூலமாக சமஸ்டி அரசாங்கத்தின் அதிகாரங்கள் அதிகரித்து விட்டதாக கூறப்படுகின்றது.
-
நீதித்துறை நீதிமன்றத் தீர்ப்புக்களுக்கூடாக ஆலோசனைகளையும் வழங்குகின்றது. வழக்குகளை விசாரித்து அவற்றைத் தீர்த்து வைப்பதுடன், தீர்ப்புக்களையும் வழங்குகின்றது. மேலும், அரசியல் திட்டத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்குகின்றது.
-
நீதித்துறையானது நாட்டில் இயற்றப்படுகின்ற சட்டங்களும்,நிர்வாகத்துறை மேற்கொள்ளும் நிர்வாகச் செயற்பாடுகளும் அரசியல் யாப்பிற்குட்பட்டதாக உள்ளதா என்பதைக் கண்கானிப்பதுடன் அரசியல் யாப்பிற்கு முரணான சட்டங்களும், நிர்வாகச் செயற்பாடுகளும் இருக்குமாயின் அவற்றை இல்லாதொழிக்கின்ற கடமை நீதித்துறைக்குரியதாகும்.
நீதித்துறை பண்புகள்
சுதந்திரமானதும், நேர்மையானதுமான நீதித்துறையின் செயற்பாட்டிற்கு சில அடிப்படை பண்புகள் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.
1. நியமன முறை:-
நீதிபதிகளின் நியமனங்கள் வழங்கும் முறை மிகப் பிரதானமாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றது. இவர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு நியமனங்கள் வழங்கப்படக்கூடாது. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவார்களாயின் நீதிபதிகள் அரசியல் அழுத்தங்களுக்குட்பட வேண்டியதாகிவிடும். சட்டத்துறைக்கு கட்டுப்பட்டவர்களாக நீபதிகள் இருப்பார்களாயின் நீதிபதிகளின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும். உண்மையில் நீதிபதிகள் பயம், அல்லது பக்கச்சார்புடன் செயற்படுதல் கூடாது. எனவே நீதிபதிகள் சுதந்திரமான அதிகார சபைகளுடாக தெரிவு செய்யப்பட வேண்டும். நீதிபதிகள் சட்டஅறிவு, பொதுஅறிவு, நற்குணம் ஆகியவற்றின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும். இதன்மூலம் பூரண சுதந்திரத்துடனும், நேர்மையுடனும், பலத்துடனும் நீதிபதிகள் கடமையாற்ற முடியும். அத்துடன் நீதிபதிக்குரிய உயர் தகைமை வரையறை செய்யப்பட்டு,தகைமையினடிப்படையில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
2. நீண்ட, பாதுகாப்பான காலப்பகுதியைக் கொண்டிருக்க வேண்டும்:-
நீதிபதிகளின் நியமனம் நீண்ட காலப்பகுதியைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் இக்காலப்பகுதி மிகவும் நீண்டதாக இருக்குமானால் நீதிபதிகள் அராஜகவாதிகளாகவும், பொறுப்பற்றவர்களாகவும் மாறுவதற்கு காரணமாகி விடும். மிகவும் குறுகிய காலத்திற்கு மாத்திரம் நியமிக்கப்படுவார்களாயின் மனதில் அமைதி இழந்தவர்களாகச் செயற்படுவார்கள். எனவே இருபது அல்லது முப்பது வருடங்கள் பதவிவகிக்கும் வகையில் இவர்களது நியமனங்கள் அமையுமாயின் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் செயற்பட முடியும் எனக் கூறப்படுகின்றது. மேலும் இவர்களின் பதவிக்காலம் பாகாப்பானதாகவும் இருக்க வேண்டும். இவர்களின் நியமனம் நிரந்தமானதாகவும், ஓய்வூதியக்காலம் வரையறுக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். நீதிபதிகள் தவறிழைத்தால் அவர்களைப் பதவி நீக்கும் முறை அல்லது தகைமை இல்லாத நீதிபதிகளை பதவி விலக்கும் முறை தெளிவாக வரையறுக்கப்படுதல் வேண்டும்.
3. கவர்ச்சியான சம்பளம்:-
நீதிபதிகளுக்கு மிகவும் கவர்ச்சியான ஊதியம், இதர சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், சலுகைகள் சிறப்பானதாக இல்லாது இருக்குமாயின், புத்தி சாதூரியமானவர்கள் நீதிபதிகள் பதவியை பொறுப்பெடுக்க முன்வரமாட்டார்கள். குறைந்த ஊதியம் வழங்கப்படுகின்ற போது நீதிபதிகள் தமது வாழ்க்கைத் தரத்தினைப் பேணுவதற்காக விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடத் தொடங்கலாம். எனவே கவர்ச்சிகரமான ஊதியம் வழங்கப்படும் போது நீதிபதிகள் தமது சமூக அந்தஸ்த்தினைக் கருத்திலெடுத்து மிகவும் உறுதியாகவும், திறமையாகவும் பணியாற்றக் கூடியதாக இருக்கும்.
4. நிறைவேற்றுத் துறையிலிருந்து விலகியிருத்தல்:-
நிறைவேற்றுத்துறை, பொது நிர்வாகக் கடமைகளிலிருந்து நீதிபதிகள் விலகியிருக்க வேண்டும். நிறைவேற்றுத்துறைக்கோ அல்லது பொது நிர்வாகத்திற்கோ நீதிபதிகள் கட்டுப்படுவார்களாயின்.அமைதியாக இவர்களால் தமது கடமைகளைச் செய்ய முடியாது. எனவே நீதிபதிகள் சுதந்திரமாகச் செயற்பட அவர்களுக்கு சேவைக்கால பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதாவது சட்ட மன்றமோ நிறைவேற்றுத்துறையோ அவர்களுடைய பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் அவர்களைப் பதவியிலிருந்து நீக்க முடியாதிருக்க வேண்டும்.
5. பொது மக்களுடனான தொடர்பு கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்:-
நீதிபதிகள் பொது மக்களுடனான தொடர்பினைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பொது மக்களிடமிருந்து கிடைக்கக்கூடிய அழுத்தங்களிலிருந்து இதன் மூலம் விலகியிருக்க முடியும். இதனால் நீதிபதிகளின் வதிவிடம் பொதுவாக பொது மக்கள் வாழும் பிரதேசங்களிலிருந்து அந்நியப்பட்டதாக இருப்பது சிறப்பானது எனக் கூறப்படுகின்றது. பொது மக்களுடன் நீதிபதிகள் நெருக்கமான தொடர்புகளைப் பேணுவார்களேயானால் பொது மக்கள் தங்களுடைய சுயநல நோக்கங்களுக்கு நீதிபதிகளைப் பயன்படுத்தத் தொடங்கி விடலாம். இதன் மூலம் நீதிபதிகள் பற்றி சமூகத்திலிருக்கும் உயர்ந்த மதிப்பு குறைவடைந்து விடுவதும், நீதிபதிகள் சட்டத்துக்கு கட்டுப்படாமல் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டு தவறிழைத்து விடலாம் எனக் கூறப்படுகின்றது.
அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்கின்ற நேர்மையற்ற நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்க பாரபட்சமற்ற ஒரு முறை நடைமுறையில் இருத்தல் அவசியம். நீதிபதிகளின் சுதந்திரத்தைப் பாதுகாக்க நீதிவிசாரணை மூலம் தவறான பாதையில் சென்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்வது சிறப்பாகும்.
6. ஓய்வு காலத்திற்குப் பிந்திய நியமனங்கள்:-
நீதிபதிகள் ஓய்வு பெற்ற பின்னர் வேறு எந்தவொரு உத்தியோகத்திற்கும் நியமனம் பெறக்கூடாது. சட்டத்தரணியாகக் கூட ஓய்வின் பின்னர் கடமையாற்றக் கூடாது. ஆனால் மிகவும் உயர் பதவிகளை இவர்கள் வகிக்கலாம். உதாரணமாக இராஜதந்திரி, ஆளுனர் போன்ற பதவிகளைக் கூறலாம்.
நீதித்துறையின் கடமைகள்
நீதித்துறையானது சமஸ்டி யாப்பின் பாதுகாவலனாகும். அதேநேரம் மக்களின் சுதந்திரத்தினைப் பாதுகாக்கும் காவல் நிறுவனமுமாகும். எனவே நீதித்துறையானது சட்டத்துறையினதும், நிர்வாகத்துறையினதும் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு சுதந்திரமான நிறுவனமாகச் செயற்பட்டால்தான் தனது கடமையினைச் சிறப்பாகச் செய்ய முடியும். எனவே நீதித்துறை சுதந்திரமாகத் தனது கடமைகளைச் செய்வதற்கு பின்வரும் நியாயங்கள் முன்வைக்கப்படுகின்றன.
-
மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது.
-
நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்படும் நீதியான வழக்கு விசாரணைகளைப் பாதுகாத்தல்.
-
நாட்டிலுள்ள சட்ங்களுக்கான வியாக்கியானங்களைச் செய்தல்.
-
அரசின் நியாயாதிக்க எல்லைக்குள் இருக்கும் பல்வேறு நிர்வாக அலகுகளின் அதிகாரத்தினைப் பாதுகாத்தல்.
-
அரசாங்க உத்தியோகத்தர்கள் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுமிடத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு இதற்கான நியாயத்தினைப் பாதுகாத்தல்.
மேற்கூறப்பட்ட விடயங்களுக்காக நீதித்துறை பாதுகாக்கப்பட்டாலும், நீதித்துறையின் சுதந்திரமானது பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டதாகும்.
-
சுதந்திரமான நீதித்துறையின் செயற்பாட்டிற்கு சட்ட, நிர்வாகத்துறைகளிலிருந்து நீதித்துறை வேறாக்கப்பட்டிருத்தல் அவசியமானதாகும். அரசாங்க நிறுவனங்களின் அதிகாரங்கள் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வகையில் சட்ட, நிர்வாகத்துறைகளின் செயற்பாடுகளிலிருந்து நீதித்துறையின் செயற்பாடு தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.
-
நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நீதிபதிகளின் நியமன முறையும் பொறுப்பானதாகும். நீதிபதிகளின் நியமனம் பின்வரும் வழிகளில் நிகழ முடியும்.
-
சட்டத்துறையினால் தெரிவு செய்யப்படல்
-
நிறைவேற்றுத்துறையினால் நியமிக்கப்படுதல்
-
சட்டத்துறையும்,நிறைவேற்றுத்துறையும் இணைந்து தெரிவு செய்தல்
-
மக்களினால் நேரடியாகத் தெரிவு செய்யப்படல்
-
சுயாதீன சபைகளினால் நியமிக்கப்படுதல்
சட்டத்துறையினால் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுதல் வலுவேறாக்கத்திற்கு எதிரானதாகும். மக்களினால் நேரடியாக நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் நடைமுறை முதல் தடவையாக பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் சுவிற்சர்லாந்திலும், ஐக்கிய அமெரிக்காவின் சில மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் சுவிற்சர்லாந்தில் நீதிபதிகள் நியமனமானது சமஸ்டி சபையின் இரு சபைகளும் ஒன்றாகக் கூடி நீதிபதிகளை நியமனம் செய்கின்றது.
நிறைவேற்றுத்துறையினால் நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் முறையானது மிகவும் பிரபல்யமானதாகும். இம்முறையே இன்று பொதுவாகப் பின்பற்றப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் சமஸ்டி அரசின் நீதிபதிகள் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டு செனற்சபையின் அனுமதி பெறப்படுகின்றது.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீண்ட காலத்திற்கு நீடிப்பதன் மூலம் நீதித்துறையின் சுதந்திரத்தனை பாதுகாக்க முடியும். பொதுவாக நீதிபதிகளின் சிறப்பான நடத்தை உறுதிப்படுத்தப்பட்டு கட்டாய ஓய்வுக் காலம் வரை நீதிபதிகளின் பதவிக்காலம் நீடிக்கப்படுகின்றது.