1970ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் கூட்டு முன்னணி அரசாங்கம் ஒன்று வெற்றி பெற்றதுடன்,அரசியலிலும், நிர்வாக அமைப்பிலும் புதிய அரசியல் திட்டத்தினூடாக சில மாற்றங்களை ஏற்படுத்தியது.புதிய அரசியல் யாப்பு நாடுமுழுவதற்குமான நிர்வாக அமைப்பினை அமைச்சர்கள் சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. நிர்வாகசேவையாளர்களின் நியமனம்,மாற்றம், ஒழுக்கக்கட்டுப்பாடுகள் அனைத்தின் பொறுப்பும் அமைச்சர்களிடம் கையளிக்கப்பட்டதுடன்,நிர்வாகசேவை தொடர்பாக தேசிய அரசப் பேரவைக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டியும் இருந்தது.
1948ஆம் ஆண்டு சுதந்திர அரசாங்கத்தின் அரசியல் திட்டமானது சுதந்திரமான பொதுச்சேவை ஆணைக்குழுவைத் தோற்றுவித்திருந்ததாயினும், 1956ஆம் ஆண்டின் பின்னர், பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு அமைச்சரவையின் கட்டுப்பாட்டுக்குள்ளாகியது. இது 1956 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பமாகிய நிர்வாக சேவையினை அரசியல்மயப்படுத்தும் போக்கிற்குக் கிடைத்த அரசியல் அங்கீகாரமாகக் கருதப்பட்டது. இதுவரையில் திட்டமிடலும், பொருளாதாரவிவகாரங்களும் என்ற அமைச்சானது திட்டமிடலும், வேலைவாய்ப்பும் என மாற்றப்பட்டது. இவ் அமைச்சின் கீழ் வேலைவாய்ப்பு,பிராந்திய அபிவிருத்தி, தேசிய திட்டமிடல், முன்னேற்றத்தைநிர்வகித்தல், பொதுவழங்கல் என்ற பிரிவுகளும் உருவாக்கப்பட்டன. இக்காலகட்டத்தில், செலவீனங்களை குறைவாக மதிப்பீடு செய்தமை,மூலதன வரவு செலவுகளை குறைவாக மதிப்பீடு செய்தமை,பற்றாக்குறைகள், அமுலாக்கங்களில் ஏற்பட்ட காலதாமதங்கள் போன்றவற்றால்,1974 ஆம் ஆண்டு புதிய திட்ட அமுலாக்கல் அமைச்சு உருவாக்கப்பட்டது.
இதனைவிட, திட்டஅமுலாக்கத்தினை பலப்படுத்த மேலும் மூன்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒன்று திட்டமிடல்குழு என்பது அமைச்சரவை தேசியத்திட்டமிடல்குழு என மாற்றப்பட்டது. இரண்டாவது,தேசிய திட்டமிடல் குழுவிற்கான ஒன்பது பிரிவுக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. மூன்றாவதாக பிரதம மந்திரி அலுவலகத்தில் இணைப்பாளர் செயலகம் ஒன்று உருவாக்கப்பட்டது. இச்செய்முறையானது நிர்வாக சேவைகளின் நலனுக்கும் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாட்டுக்கும் இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. அமைச்சர்களுக்கு உதவியாகச் செயற்படுவதற்கென்று அரசசேவைகள் ஆலோசனைச்சபை ஒன்றைத் தோற்றுவிக்க அரசியல் திட்டம் ஏற்பாடு செய்திருந்தது.
இதனைவிட அரசசேவை ஒழுக்காற்றுச்சபை ஒன்றையும் அரசியல் திட்டம் தோற்றுவித்திருந்தது. இச்சபையானது பொதுச்சேவைகள் ஆணைக்குழுவுக்குப் பிரதியீடாக உருவாக்கப்பட்ட ஆலோசனைச்சபையாகும். இச்செய்முறை மூலம் சுதந்திரமான பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு இல்லாதொழிக்கப்பட்டு, அமைச்சரவையின் நேரடியான கட்டுப்பாட்டுக்;குட்பட்ட பொதுச்சேவையை அரசியல் திட்டம் தோற்றுவித்ததுடன், அரசியல்மயப்படுத்தப்பட்ட பொதுச்சேவையை ஆட்சியாளர்கள் உருவாக்கியும் கொண்டார்கள் எனலாம்.
1978 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தற்போதைய அரசியல்திட்டம், உயர் அரசசேவையாளர்களின் நியமனங்களுக்கான அதிகாரத்தினை ஐனாதிபதிக்கு வழங்கியது.ஆயினும்,முன்னைய அரசியல் திட்டத்தினைப் போன்று நிர்வாகசேவையாளர்களின் நியமனம், மாற்றம், நீக்கம், ஒழுக்கக்கட்டுப்பாடுகள் அனைத்தின் பொறுப்பும் அமைச்சர்கள்சபையிடம் கையளிக்கப்பட்டது.இலங்கையின் நிர்வாகசேவையின் முழுமையான பரிணாமத்தினை கே.எம்.டி சில்வா பின்வருமாறு விபரிக்கின்றார்.
“ஒரு காலத்தில் இலங்கையின் நிர்வாகசேவை பலமானதும்,செயல்திறன்மிக்கதாகவும் இருந்ததாக புகழப்பட்டது. நிர்வாகசேவையாளர்கள் போட்டிப் பரீட்சையினூடாச் சேர்த்துக்கொள்ளப்படல் என்ற உயர் தொழில்சார் மரபினால் பாதுகாக்கப்பட்டுச் சிறப்பாகக் கௌரவிக்கப்பட்டனர். 1970 ஆம் ஆண்டு வரை நிர்வாகசேவையாளர்கள் திறன்வாய்ந்த ஆட்களால் நிரப்பப்பட்டு பாராட்டத்தக்க வாழ்க்கைத்தொழிலாக முத்திரை பொறிக்கப்பட்டது. துரதிஸ்டவசமாக, சுதந்திரகாலத்திலிருந்து நிர்வாகசேவையானது படிப்படியாக வலுவிழந்துவந்தது. இதன் பலம் ஒருவருக்கு ஒருவர் சமமாக இருக்க முனையும் உள்போட்டியினால் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டது.இதன் தரம் நுழைவுத்தரத்தில் காணப்பட்ட தாழ்வுநிலையினால் படிப்படியாக அழிக்கப்பட்டது. பொதுத்துறையானது ஒருவர் தொழில்தேடி ஒன்றும் கிடைக்காதநிலையில் இறுதியில் வந்து சேரும் துறையாக மாறியது.திறமை வலிந்து தடுத்து நிறுத்தப்பட்டது.மிகப்பெரும்; ஒழுக்கக்கெடு விளைவாகப் பெறப்பட்டது.ஆட்சேர்ப்பில் அரசியல்வாதிகள் தலையிட்டதனால் அரசதொழில் பெறுதல் என்பது அரசியல்வாதிகளின் ஆதரவிலாலாகியது.அரசியல்மயப்படுத்தலாலும், தேவைக்கு மிஞ்சிய உத்தியோக்தர்களைக் கொண்ட நிர்வாகசேவையினால் தனது வகிபாகத்தினை நீண்டகாலத்திற்கு நிறைவேற்றமுடியாது.”
ஆகவே, 1978ஆம் ஆண்டு அரசியல் திட்டமானது அடிப்படையில் 1972ஆம் ஆண்டு அரசியல் திட்டத்திற்கு எதிராக எவ்விதமான பாரிய மாற்றங்களையும் பொதுச் சேவையில் ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆயினும், 1972ஆம் ஆண்டு அரசியல் திட்டம் உருவாக்கிய இரண்டு ஆலோசனைச் சபைகளுக்கும் பதிலாக மீண்டும் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவைத் தோற்றுவித்து.
இவற்றை விட 1978ஆம் ஆண்டு பதவியேற்ற புதிய அரசாங்கம் “அபிவிருத்தியில் மக்கள் பங்கு பற்றல்” என்ற எண்ணக்கருவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முனைப்புடன் செயற்பட்டது. இது மாவட்ட நிர்வாக முறைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய தேவையை ஏற்படுத்தியது. இச் செய்முறை, திட்ட அமுலாக்கத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் எனவும் கூறப்பட்டது. மாவட்ட அபிவிருத்தி சபைகள் ஒவ்வொரு மாவட்டத்தினதும் உயர் நிர்வாக அலுவலகங்களாக மாற்றப்பட்டன. அரசாங்க அதிபர் ஒவ்வொரு மாவட்டத்தினதும் திட்ட அமுலாக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும் பொறுப்பானவராக்கப்பட்டார். இவர் மாவட்ட அமைச்சரின் செயலாளராக இருந்து பணிபுரிந்தமை இதற்கு வாய்ப்பாக அமைந்தது.
இவ் ஏற்பாடுகள் அரசாங்க அதிபர் ஒவ்வொரு அமைச்சர்களுடனும் தொடர்புடைய விடயங்களைத் தேசிய திட்டமிடலுக்கு ஏற்ப மாவட்ட மட்டத்தில் வழிநடத்திச் செல்ல வாய்ப்பாக இருந்தது. மாவட்ட மட்டத்துக்கு அடுத்த நிலையில் பிரதேச அபிவிருத்திச் சபைகள் தோற்றுவிக்கப்பட்டன. இவை ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் அபிவிருத்தித் திட்டமிடல் அமுலாக்கங்களில் ஈடுபடும் எனவும் கூறப்பட்டது. உதவி அரசாங்க அதிபர் இச்சபைகளின் செயலாளராக இருந்து பணிபுரிவார். இச்சபைகளின் செயற்பாடுகளாகப் பிரதேச அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குவது, அபிவிருத்திச் செயற்பாடுகளை இணைப்பது, திட்ட அமுலாக்கங்களை மீளாய்வு செய்வது போன்ற விடயங்கள் கூறப்பட்டன.
1980களின் தசாப்த காலப்பகுதிகளில் நிர்வாகசேவையின் பயன் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்கள் முதன்மைப்படுத்தப்பட்டன.ஒன்று மாகாணசபைகள் தோற்றிவிக்கப்பட்டன. இரண்டாவதாக நிர்வாகச் சீர்திருத்தக்குழுவும், முகாமைத்துவ மீள்கட்டமைப்பக்குழுவும் உருவாக்கப்பட்டன. சட்டவாக்க அதிகாரம் ஒன்பது உப பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டது.
1986ஆம் ஆண்டு ஆடியில் நிர்வாகசேவை தனது கடமைகளை மேற்கொள்ளம்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், விடயங்களையும் புலனாய்வு செய்வதற்கு நிர்வாகச் சீர்திருத்தக்குழு அமைக்கப்பட்டது. முகாமைத்துவ மீள்கட்டமைப்பக்குழு நிதி திட்டமிடல் அமைச்சில் உருவாக்கப்பட்டது.இதன் அங்கத்தவர்களாக அரசசார்பற்ற நிறுவனங்களின் நிபுணர்கள்,வருகைதருநிபுணர்கள் போன்றோர் இருந்தனர். இவர்கள் நான்கு வருடங்கள் புலனாய்வின் பின்னர் மிகைஉத்தியோகத்தர்கள், திறமையீனம், குறைந்த உற்பத்தித்திறன் போன்ற குறைபாடுகளை நிவர்த்திசெய்ய பின்வரும் சிபார்சுகளை முன்வைத்தனர்.
-
பயிற்சிக்கான தேசிய கொள்கையினை உருவாக்குதல்
-
முகாமைத்துவ அபிவிருத்தியும் பயிற்சி அலகுகளும் என்ற புதிய உபதேசிய நிறுவனத்தை உருவாக்குதல்
-
அரசியல் ஆதரவு முறைக்குப் பதிலாக பரீட்சை மூலமாக திறமைவாய்ந்தவர்களை நிர்வாகத்தில் சேர்ப்பதற்கான புதிய ஆட்சேர்ப்புக்கொள்கையினை விருத்திசெய்தல்.
-
பயிற்சி,ஆலோசனை ஊடாக பொது நிர்வாகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு பாரியபங்காற்றும் இலங்கை நிர்வாக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் (SLIDA) பொறிமுறையமைப்பு மீளமைக்கப்படவேண்டும்
வழமைபோலவே இவற்றில் சில விடயங்கள் மட்டமே அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. உதாரணமாக நிர்வாக சேவையாளர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளில் புதிய நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, இலங்கை நிர்வாக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் திறன் உயர்த்தப்பட்டது.ஏனையவிடயங்கள் அரசியலுடன் தொடர்புபட்டிருந்தது. இந்நாட்டின் அரசியல்வாதிகள் நிர்வாகசேவை சுதந்திரமாகச் செயற்படுவதை விரும்பியிருக்கவில்லை. அது தொடர்ந்தும் தமது கட்டப்பாட்டிலிருப்பதையே விரும்பினர்.இதனால் 1980களின் தசாப்தம் வரை குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் நிர்வாகசேவையில் ஏற்படவில்லை எனலாம். ஆனால் 1990களின் ஆரம்ப தசாப்தங்களில் நிர்வாகசேவை மிகவும் அவசியமான மாற்றங்களை வேண்டிநின்றது. 1998ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட கல்வி,உயர்கல்வி பிரதி அமைச்சர் நிர்வாகசேவையிலுள்ள பிரச்சினைகளை பின்வருமாறு விபரிக்கின்றார்
சுதந்திரகாலத்திலிருந்து இலங்கை உயர்மையவாக்க நிர்வாக அமைப்பிலாலான பாரம்பரியத்தினைக் கொண்டதாகும்.இது பிரித்தானிய காலனித்துவத்தின் மூலம் கிடைத்த சொத்தாகும். இப் பொதுநிர்வாகமுறையில் தீவிர மாற்றத்தினை ஏற்படுத்துவதே சுதந்திர அரசின் விருப்பமாக இருந்ததாயினும்,ஒரேமாதிரியானதும், தொன்மையானதுமான நிர்வாகமுறைமையும், நடைமுறைகளும், விதிகளும் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டன. நவீன முறைகளும்,கருத்துப்படிவமும் நிர்வாகமுறைக்குள் உள்வாங்கப்படவில்லை. இதனால், நிர்வாகத்தில் அக்கறையின்மை,திறமையின்மை என்பன ஏற்பட்டதுடன், மொத்தத்தில் வழக்கமான வேலைகள் யாவும் தோல்வியடைந்தன.
விசேடமாக,1994 ஆம் ஆண்டு அதிகாரத்தினைப் பெற்றுக்கொண்ட புதிய அரசாங்கம் செயற்பாட்டிலிருக்கும் நிர்வாகசேவையின் யதார்த்தத்தை புரிந்துவைத்திருந்தது. இக்காலத்தில் ஐனாதிபதியாகக் கடமையாற்றிய சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா பின்வருமாறு விபரிக்கின்றார்.
இலங்கை நிர்வாகசேவையின் தரம்1 உத்தியோகத்தர் சிங்கள மொழியிலோ அல்லது ஆங்கில மொழியிலோ வேறொரு தனிநபர் விளங்கிக்கொள்ளும் வகையில் பத்து வசனங்கள் எழுதமுடியாதுள்ளார்.இன்று இருளார்ந்த மட்டத்திற்கு நிலமை வீழ்ச்சியடைந்துள்ளது.
எனவே நவீன அபிவிருத்திச் செயற்பாட்டிற்குத் தேவையான வகையில் பொதுத்துறையின் தரம், பயன், திறன், உற்பத்தியை உயர்த்துதல் போன்றவற்றிற்கான புதிய பொதுமுகாமைத்தவநுட்பங்களை அறிமுகப்படுத்துதல் பற்றி சிந்திக்கப்பட்டதாயினும் 2000ஆம் ஆண்டு வரை எவ்வித முனNனெற்றங்களையும் காணமுடியவில்லை.
2000ஆம் ஆண்டு ஆவணிமாதம் பொதுச்சேவையிலுள்ள பிரச்சினைகளை ஆராயவும், அதனை மேம்படுத்தக்கூடிய ஆலோசனைகளை சிபார்சு செய்யவும் ஐனாதிபதி “பொதுச்சேவைகள் முகாமைத்துவ அபிவிருத்தி அதிகாரம்” என்ற பெயரில் குழு ஒன்றை நியமித்தார். இக்குழு மேற்கொண்ட ஆய்வின்படி, பொறுப்பற்றதன்மை, தாங்கள் மேற்கொள்ளவேண்டிய கடமை தொடர்பான அறிவில் பற்றாக்குறை, செயல்திறனற்ற மேற்பார்வை, போதுமானளவு செயல்தூண்டுதலின்மை, எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் தலையீடு போன்றன பிரதான பிரச்சினைகளாக அடையாளப்படுத்தப்பட்டன. இவ் அதிகாரசபை சட்டரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கியது.பாராளுமன்ற சட்டப்படி இச்சபை உருவாக்கப்படாததினால் பயன்தரக்கூடிய மாற்றங்கள் எதனையும் ஏற்படத்த முடியவில்லை.இதனால்,பொதுநிர்வாக அமைச்சின் நிர்வாக சீர்திருத்த பிரிவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது.
நிர்வாக சேவை என்பது அரசநிர்வாகத்துடன் நெருக்கமாக இணைந்துள்ள இரும்புக்கதவாகும். நிர்வாகசேவையானது உயர்வாழ்க்கைத் தொழில் பாரம்பரியத்தைக் கொண்டதுடன்,சமூகத்தில் மிகவும் கௌரவமான இடத்தினைப் பெற்றுக்கொண்டதுமாகும்.காலனித்துவ அரசாங்கத்தின் கருவியாக மட்டும் செயற்பட்டு வந்த நிர்வாகசேவையானது இன்று தேசிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துகின்றதும், முன்னெடுத்துச் செல்கின்றதுமான முகவரகங்களாக மாறியுள்ளன.ஆரம்பகாலத்தில் மிகவும் திறமைவாய்ந்த ஆளுமைமிக்க சேவையாக இது காணப்பட்டது. துரதிஸ்டவசமாக, சுதந்திரகாலத்திலிருந்து நிர்வாகசேவையின் அத்திவாரமானது பலமிழந்து வந்துள்ளது. சேவையிலுள்ளவர்களுக்கிடையிலான போட்டி, வேறுபாடுகள்காட்டப்படுதல் போன்றவற்றினால் இப்பலமிழப்பு நிகழ்ந்துள்ளது. தரம்குறைந்த ஆட்களை நிர்வாக சேவையில் இணைத்துக்கொண்டமையினால், நிர்வாகசேவையின் தரம் படிப்படியாக தேய்வடைந்தது. நிர்வாகசேவையிலுள்ள பலர் பொறுப்புக்களை ஏற்கக்கூடியளவிற்கு போதிய பயிற்சியற்றவர்களாக உள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன. இதன்விளைவாக இலங்கையின் நிர்வாகசேவை இன்று தனது சிறப்பான வகிபாகத்தினை ஆற்றுவதற்குத் தகமையற்றதாகவுள்ளது. உண்மையாதெனில், நிர்வாகசேவையானது இதுவரைபெற்ற வளர்ச்சியும், மாற்றமும் நாட்டில் நிலவிய சமூகப் பொருளாதார அரசியல் சூழ்நிலைகளின் தாக்கத்தின் வழி ஏற்பட்டிருந்தன என்பதேயாகும்.