நிதி நிர்வாகம்

நடைமுறையில் நிதி நிர்வாகம் என்பது பொது நிர்வாகத்தின் ஒரு பகுதியாகிய வரி வசூல் செய்தல், அதைப் பாதுகாத்தல், பங்கீடு செய்தல் போன்ற கடமைகளை நிதி நிர்வாகத் துறையின் உதவியுடன் நிர்வாகத் துறை செய்வதோடு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற கடன்கள், பொதுக் கடன்கள், பொது நிதி விவகாரங்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றது.

நிதி நிர்வாகம் என்பதும், நிர்வாக முறைமை என்பதும் ஒருங்கிணைந்த ஓர் அமைப்பாகும். பாராளுமன்ற ஜனநாயக நாடுகளில் நிதி நிர்வாக அமைப்பானது சட்ட மன்றங்களின் நோக்கங்களை ஏற்று அதன் படி செயற்படுவதுதான் முறையானதாகும். சட்டமன்றங்களின் அனுமதியைப் பெற்றுக் கொண்ட நிதிச் சட்டங்கள், பண ஒதுக்கீட்டுச் சட்டங்களுக்கு இசைந்துதான் நிதி நிர்வாகம் நடைபெற வேண்டும்;. நிதி சம்பந்தமான வரவு-செலவு திட்டங்களைத் தயாரிக்கவும், நிதி சம்பந்தமான சட்டங்களை இயற்றவும் சட்டத்துறையே உதவுகின்றது.

நிதி நிர்வாக முறையில் திறமையானதும், பலன் தரக் கூடியதும், ஆனால் சிக்கல் இல்லாத கட்டுப்பாடுகள் பல நிலைகளில் இருக்க வேண்டும். இவ்வாறான கட்டுப்பாட்டை நிதியமைச்சுத் தான் செய்ய வேண்டும். சட்டங்களை இயற்றுவது சட்டசபையாக இருந்தாலும், நிதி சம்பந்தமான சட்டங்களைத் தயார் செய்வதும் வரவு, செலவு கணக்குகளைத் தயாரிப்பதும் நிதியமைச்சும் அதன் அதிகாரிகளுமாகும். எனவே நிதி சம்பந்தமான இந்த அதிகாரிகள் பின்வரும் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.

 1. நிதி வசூலிப்பு தொடர்பான எல்லா அதிகாரங்களும் சட்டத்தின் அடிப்படையில் இடம்பெறுதல் வேண்டும்.
 2. நிர்வாகத்துறை எல்லா சந்தர்ப்பங்களிலும் பாராளுமன்றம் விதித்த கட்டளைப்படியே நடக்க வேண்டும்.
 3. தணிக்கை துறையின் முக்கிய அதிகாரியான கணக்காளர் நாயகமே எல்லா அரசாங்க கணக்குகளுக்கும் பொறுப்பானவராகும்.

காஸ்ரன் யாஸ் (Gaston Jaze) என்பவர் நிதி நிர்வாகம் பற்றி கூறும் போது பின்வரும் நடைமுறைகளைக் கருத்தில் எடுத்திருந்தார்.

 1. பொது வருவாய்களை வசூல் செய்து அவற்றைப் பேணி பாதுகாத்தல்
 2. திட்டமிடப்பட்ட ஒரு வரியமைப்பின் மூலம் வரி வருமானங்களுக்கும், செலவீனங்களுக்கும் இடையே ஒரு சுமூகமான உறவினை எற்படுத்துதல்
 3. பொது மக்களிடம் இருந்து கடன் பெறுதலும், அதனை திருப்பிக் கொடுத்தலும்
 4. அரசாங்க அமைப்புக்களின் மீதான நிதி முகாமையும், நிதிக் கட்டுப்பாடுகளும்

வரவு செலவுத் திட்டம்

வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு நாட்டின் வருட வருமானத்தையும், செலவுகளையும் கணக்கிட்டுக் காட்டக்கூடிய ஒரு அறிக்கையாகும். இதில் கடந்த வருட வருமான மதிப்பீடுகள் குறிப்பிடப்பட்டு எதிர்வரும் வருடத்திற்கான வருமானத்தின் மதிப்பீடும், செலவுகளின் மதிப்பீடும் கூறப்பட்டிருக்கும்.

வரவு செலவுத் திட்டம் என்பதனை ஒக்ஸ்போர்ட் அகராதி ‘எதிர்வருகின்ற வருடத்தின் உத்தேச வருமானங்கள் செலவுகளடங்கிய ஒரு நிதித் திட்ட அறிக்கையென்றும், ஒவ்வொரு வருடமும் பொதுமக்கள் சபையின் ஒப்புதலுக்கு நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்படுவது’ என்று கூறுகின்றது. பி.இ.ரெயிலர் (P.E. Tylor)என்பவர் ‘எதிர்வரும் வருடத்தில் எதிர்பார்க்கக் கூடிய அரசின் வருமானத்தையும், தீர்மானிக்கப்பட்ட அரசின் செலவுகளையும் உள்ளடக்கி, என்னென்ன செயல்களை செய்து முடிக்க வேண்டும், அதற்குரிய நிதியை எவ்வழியில் செலவிட வேண்டும் என்பதையெல்லாம் வகைப்படுத்திக் கூறுவதாகும்’ எனக் கூறுகின்றார்.

இவ்வறிக்கை மூலம் சம்பந்தப்பட்ட அரசியல் பணிகளுக்கும், அதற்குரிய செலவுகளுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டு நிதி நிர்வாகத்தில் ஒரு ஒழுங்கையும், முறைமையையும், ஏற்படுத்தி அரசின் செயல்களுக்கு ஒரு தொடர்ச்சியை வழங்குகின்றது. வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் வருமானத்திற்கேற்ப செலவுகளை ஒழுங்குபடுத்துவதாகும். வரவு செலவுத் திட்டத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது பின்வரும் நன்மைகள் பெறப்படுகின்றன.

 1. வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசின் வெவ்வேறு பணிகளை ஒன்று சேர சிந்தித்து அறிய முடிகின்றது. மேலும் அரசின் வரி வருவாய்கள், இதர வருவாய்கள் என்பன மக்களிடம் இருந்து எவ்வாறு பெறப்படுகின்றன? எவ்வாறு செலவு செய்யப்படுகின்றன? போன்ற விடயங்களையும் அறியமுடிகின்றது.
 2. வரவு செலவுத் திட்டத்தின் மூலமே அரசாங்கம் எவ்வளவு வருமானத்தினைப் பெறுகின்றது, அவ்வருமானம் எந் நோக்கத்திற்காகச் செலவிடப்படுகின்றது என்பதை மக்கள் அறிய முடிகின்றது.

வரவு செலவுப் பட்டியல் என்பது ஒவ்வொரு நிதியாண்டிலும் சட்டசபையின் முன் சமர்ப்பிக்கப்படும் நிதித் திட்ட அமைப்பாகும். சுருக்கமாக கூறின் நாட்டின் நடைமுறை நிதி நிலைமையைத் தெளிவாகவும், முழுமையாகவும் பிரதிபலிக்கும் அறிக்கை எனலாம். பாராளுமன்றத்தின் அனுமதியில்லாமல் அரசு வரிகள் விதிக்கவோ, நிதி திரட்டவோ முடியாது. வரவு செலவுத் திட்டம் அரசின் எல்லாத் துறைகளையும், அத்துறைகளின் வருமானங்களையும், செலவுகளையும் தன்னுள் அடக்கி வரி விதிப்பிற்குட்பட்ட விடயங்களையும், வருமானங்களையும் வரவு செலவுத் திட்டத்திற்குள் கொண்டு வருகின்றது.

அரசாங்கத்தின் வருமானங்கள் பொதுச் சேமிப்பு நிதிக்கு (திறைசேரிக்கு) அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்தே எல்லாச் செலவுகளுக்குமான நிதி வழங்கப்படுகின்றன. மொத்த வருமானங்கள் ஒரே இடத்தில் சேமிக்கப்பட்டு எல்லாச் செலவுகளுக்குமான நிதியை அச்சேமிப்பிலிருந்து பெற்றுக் கொள்கின்ற போது வரவு செலவுத் திட்ட ஒன்றிப்பு ஏற்படுகின்றது.

வருமானங்களைப் பெறுவதும் செலவு செய்வதும் சட்ட மன்றத்தின் விருப்பத்திற்கு மாறாகவும்; கால ஒழுங்கில்லாமலும் இருக்க முடியாது என்பதால், வருடத்திற்கொரு தடைவை வரவு செலவுத் திட்டம் தயார் செய்யப்படுகின்றது. செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட பணம் குறிப்பிட்ட நிதியாண்டில் செலவிடப்படவில்லையாயின் அந்நிதி மீண்டும் பொது நிதியில் சேர்க்கப்பட்டு விடுகின்றது.

தணிக்கை

தணிக்கைத்துறை 1866 ஆம் ஆண்டு முதன் முதலில் இங்கிலாந்தில் ஏற்படுத்தப்பட்டதாகும். பிற்பட்ட காலத்தில் ஏனைய பல ஜனநாயக நாடுகளுக்கும் இது பரவியது. நிர்வாகச் செலவுகளைத் தணிக்கை செய்வதும், பணச் செலவுகளின் தரத்தையும், அவசியத்தையும் ஆராய்ந்து செயற்படுவதற்குச் சுயமான செயற்பாடு கொண்ட நிறுவனமாகச் செயற்படுவதே தணிக்கைத் துறையாகும். இவ் அமைப்பின் முக்கிய செயற்பாடு அரசாங்க செலவுகள் நிதி நிர்வாகப் பண்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றனவா? செலவுகள் செய்யும் முறை பற்றிய விதிகள், ஒழுங்குகள், கட்டுப்பாடுகள் செலவுகள் செய்யும் போது கடைப்பிடிக்கப்படுகின்றனவா? அதற்குரிய அலுவலர்கள் அச் செலவுகள் செய்ய அதிகாரம் பெற்றுள்ளார்களா? பாராளுமன்றம் அனுமதித்த செலவுகளை மட்டுமே நிர்வாகம் தம் நோக்கங்களை நிறைவேற்ற பயன்படுத்துகின்றனவா? என்பதை எல்லாம் அறிந்து அவற்றின் மூலம் சட்டமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதாகும்.

அரசாங்கத்தின் செலவுகளை ஆராய்ந்து ஆண்டு தோறும் சட்டமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு Comptroller and Auditor-General சார்ந்ததாகும். இவரால் சட்டமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை முக்கியமானதோர் அறிக்கையாகக் கருதப்பட்டு சட்டமன்றம் அதன் மீது விவாதம் நடாத்தி, நிர்வாகத்துறையின் சகல திணைக்கழங்களையும் விமர்சனம் செய்யும் வாய்ப்பை இவ் அறிக்கை மூலம் பெற்றுக் கொள்கின்றது. கணக்குத் தணிக்கைத் துறையின் கடமை இரண்டு வகையில் இனம் காணப்படுகின்றது.

 1. நிர்வாகச் சட்டவிதிகள், ஒழுங்கு முறைகளை அரசாங்கம் சரியாக கடைப்பிடிக்கின்றதா? என்பதை கவனித்து ஒழுங்குபடுத்துவது.
 2. அரசாங்கத்தின் நிதிச் செயற்பாடுகள்; சட்டமன்றத்தின் தேவைகளையும், நோக்கங்களையும் நிறை வேற்றுகின்றனவா? என்பதை சட்டமன்றத்தின் சார்பாக ஆய்வு செய்கின்றது.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

10,370 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>