நல்லிணக்கச் செயற்பாடுகளில் பொது மக்களின் நம்பிக்கை கட்டியெழுப்பட வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.04.12, 2014.04.13 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image001

சரணடைதவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தடுத்துவைக்கப்பட்டவர்கள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு கடந்தகாலங்களில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஆனால் இவ் ஆணைக்குழுக்களின் விதந்துரைப்புக்களை நடைமுறைப்படுத்தவதில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. கடந்தகாலங்களில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முக்கியமான விதந்துரைப்புக்களை செயற்படுத்தாமல் விட்டமை பொதுமக்கள் மத்தியில் அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்கள் தொடர்பான சந்தேகங்கள் அதிகரிப்பதற்குக் காரணமாகியுள்ளது. இந்நிலையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக பல கலந்துரையாடல்கள் பொதுமக்கள் மத்தியில் நடைபெற்று வருகின்றன.

ஆட்கள் காணாமல் போதல்

சரணடைதவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தடுத்துவைக்கப்பட்டவர்கள் எல்லோர்களினதும் பாதுகாப்பு மற்றும் ஆபத்தின்மையினை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சரணடைந்தவர்கள்,கைதுசெய்யப்பட்டு பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பாக பலர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளித்துள்ளனர்.எனவே காணாமல் போனவர்கள் தொடர்பாக விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இவைகளைச் செய்யத் தவறின் நீண்ட கால நல்லிணக்கச் செயன்முறைக்கு இவைகள் கடுமையான தடையினை ஏற்படுத்தும்.

வலிந்து செய்யப்படும் குற்றங்கள் மற்றும் விருப்பத்திற்கு மாறான காணாமல் போதல்கள் தொடர்பான விடயங்களை விசாரணை செய்வதற்கு ஏற்றவகையில் உள்நாட்டுச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு விதந்துரைத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம்,பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான எந்தவொரு ஒழுங்குவிதிகளின் கீழும் நபர்களை தடுத்துவைத்தல் அல்லது விசாரணைக்காகக் கைது செய்தல் தொடர்பாக கண்காணிப்பதற்கும், பரீட்சிப்பதற்கும் சுதந்திரமான ஆலோசனைச் சபை ஒன்று நிறுவப்பட வேண்டும் என ஆணைக்குழு விதந்துரைத்துள்ளது.

குறிப்பிட்ட ஆட்கள் இராணுவ பாதுகாப்பில் சரணடைந்தமையினை தாம் நேரடியாகப் பார்த்ததாகப் பலர் சாட்சியளித்துள்ளனர். எனவே, இக்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவசியமான புலன்விசாரணைகள் செய்யப்பட வேண்டும்.இராணுவத்தினர் சட்டத்திற்கு மாறாக செயற்பட்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டால், தவறு செய்தவர்களைத் தண்டிப்பது அரசாங்கத்தின் மிகத் தெளிவான கடமையாகும்.

உத்தியோகபூர்வப் பாதுகாப்பில் சரணடைந்த பின்னர் காணாமல் போனதொரு சம்பவம் நிரூபிக்கப்படுமாயின் அது குற்றவியல் சட்டத்திற்கு அமைவாகச் செய்யப்பட்ட குற்றமாகக் கருதப்படல் வேண்டும். எனவே இச்சம்பவங்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகள் மேற்கொண்டு தேவையான இடத்து வழக்குத் தொடர வேண்டும் என்பதனையும் ஆணைக்குழு வலியுறுத்த விரும்புகின்றது.

காணாமல் போன ஆட்களின் உறவினர்கள் தமது அன்பிற்குரியவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதனை அறிந்து கொள்வதற்கு உரிமையுடையவர்கள். அந்த ஆட்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மையை அறிந்து கொள்வதுடன் இந்த விடயத்தினை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. இது அவர்களை நட்ட ஈடு உள்ளடங்கலாகப் பொருத்தமான சட்டப் பரிகாரத்தினை தேடுவதற்கு உதவிபுரியும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இறப்பு அத்தாட்சிப்பத்திரம்

பொருத்தமான சர்வதேச நியமங்களினைக் கருத்தில் கொண்டு இறப்பு அத்தாட்சிப்பத்திரங்களை வழங்கல் மற்றும் பண ரீதியான நஸ்டஈடுகள் என்பன தேவையின் அடிப்படையில் மேற்கொள்ளுதல் வேண்டும். இறப்பு பதிவுச் சட்டத்திற்கான அண்மைய திருத்தத்தினை ஆணைக்குழு கவனத்தில் கொண்டுள்ளது.

இறப்பு பதிவுச் சட்டத்திற்குக் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி இலங்கையில் ஏதாவது பயங்கரவாத அல்லது அதனுடன் தொடர்பான நடவடிக்கை அல்லது பொதுமக்கள் கிளர்ச்சி என்பவற்றின் காரணமாக அவன் / அவள் காணாமல் போய், காணாமல் போன அவன்/ அவள் பற்றிய தகவல்கள் ஒரு வருடத்திற்கு அதிகமாக கிடைக்காதபோது அவ்வாறு காணாமல் போன ஒருவர் தொடர்பாக இறப்பு அத்தாட்சிப்பத்திரத்திற்காக அவர்களின் உறவினர்கள் விண்ணப்பிப்பதற்கு வசதியளிக்கின்றது.

இச் சட்டத்தினை செயற்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளும் நிர்வாக மட்டத்தில் மேற்கொள்ளப்படல் வேண்டும். இந்தச் சட்டம் தொடர்பான ஏற்பாடுகள் பற்றிய போதுமானளவு பரப்புரை முக்கியமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

சிறுவர்களைப் பலாத்காரமாகச் சேர்த்தல்

உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஆணைக்குழு மேற்கொண்ட களவிஜயங்களின் போது சிறுவர்கள் கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டமை தொடர்பாக பலர் சாட்சியளித்தனர். பெற்றோர்களின் கருத்துப்படி இச் சிறுவர்கள் எங்கிருக்கின்றனர் என்பது இதுவரை தெரியாதுள்ளது.

சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஆட்சேர்புச் செய்தமை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பாரதூரமான சட்ட விரோத செயலாகும். கிழக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரமன்றி ஏனைய ஆயுதக்குழுக்களும் வயது குறைந்த சிறுவர்களை ஆட்சேர்ப்புச் செய்துள்ளனர். முன்னாள் சிறுவர் படையணியினரின் புனர்வாழ்வு அரசாங்கத்தின் மிக முன்னுரிமை வாய்ந்த விடயமாகக் கருதப்பட வேண்டும். அரசாங்கத்தின் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டம் நூற்றுக்கணக்கான முன்னாள் சிறுவர் போராளிகளின் புனர்வாழ்விற்கும், குடும்பங்களுடன் மீளவும் இணைந்து கொள்ளவும் வழியமைத்துக் கொடுத்துள்ளது.

சிறுவர்களின் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டம் முடிவடைந்ததும் அவர்கள் அவர்களது குடும்பங்களுடன் வசிப்பதற்கு அனுமதிக்கப்படுவதற்கும், வாழ்வதற்கும் அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும். பாடசாலைக் கல்வியைத் தவறவிட்ட சிறுவர் போராளிகள் மீது ஓரளவு நெகிழ்வுத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும். முன்னாள் சிறுவர் போராளிகளின் முறைசார்ந்த, முறைசாரா கல்வித் தேவைகளை நிறைவு செய்வதற்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இவற்றினை புனர்வாழ்வு செயற்பாடுகளின் போது புனர்வாழ்வு அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

சிறுவர்கள் போராளிகளாகச் சேர்க்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில், அத்தகைய குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு குற்றமிழைத்தோர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். சட்டரீதியற்ற ஆயுதக் குழுக்கள், அல்லது ஏதேனும் அரசியல் கட்சிகளினால் சிறுவர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான முறைப்பாடுகள் விசாரிக்கப்படல் வேண்டும்.

ஆயுத மோதல்களுக்கு உட்பட்ட சிறுவர்களைக் கையாள்வதில் அறிவும் அனுபவமும் நிரம்பிய யூனிசெவ் ஐக்கிய நாடுகள் முகவர்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் போன்றவற்றிடமிருந்து அரசாங்கம் உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏற்கனவே யூனிசெவ்வின் உதவியுடன் குடும்பங்களை கண்டுபிடித்து மீள ஒன்றிணைக்கும் பிரிவு உருவாக்கப்பட்டமை பொருத்தமானதொரு நடவடிக்கையாகும். அரசாங்கம் இம்முயற்சிகளை ஊக்குவித்து ஆதரவளிக்க வேண்டியதுடன் அனைத்து முகவர்களும் குறிப்பாக, பாதுகாப்பு முகவர்கள் இச்செயற்பாட்டிற்கு ஒத்துழைத்தல் வேண்டும்.

இதனால் சிறுவர்கள் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். பரந்தளவில் சிறுவரைக் கண்டுபிடிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றினை விருத்தி செய்து நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் வழிநடத்தப்படும் பல்ஒழுங்கு சார்ந்த செயலணிக் குழுவொன்றினை உருவாக்குவது தொடர்பாக அரசாங்கம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் என ஆணைக்குழு கோரியுள்ளது.

தடுத்துவைத்தல்

எவ்வித உத்தியோகபூர்வ பதிவுகளுமின்றி ஆட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பாக பல குற்றச்சாட்டுக்கள் ஆணைக்குழுவிடம் கூறப்பட்டுள்ளது. ஆட்களை தடுப்புக்காவலிற்குக் கொண்டு செல்லும் போது கைது தொடர்பான உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டினை வழங்குதல், தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பான தகவல்களை வழங்குதல் தொடர்பாக பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை சட்டத்தினை செயற்படுத்தும் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.

சட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட முறைசார்ந்த தடுத்து வைக்கும் இடங்களில் மாத்திரமே ஆட்கள் தடுத்து வைக்கப்படல் வேண்டும். உறவினர்கள் தகவலறியக் கூடிய வகையில் தடுத்து வைத்திருக்கும் இடங்கள் தொடர்பான போதிய பரப்புரை மேற்கொள்ளப்படல் வேண்டும் என ஆணைக்குழு விதந்துரைத்துள்ளது.

இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருத்தமான சர்வதேச மனித உரிமைச் சாதனங்கள் மற்றும் தேசிய சட்டங்களில் அவை தொடர்பாக குறிக்கப்பட்டுள்ள தேவைகள் என்பவற்றின் கடமைகளைப் பேணும் விதத்தில் பின்வரும் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்:

  1. சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விதத்தில் கைது செய்யப்பட்ட நபரொருவர் நீதிபதியின் முன்னால் உடனடியாக ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
  2. தடுத்து வைத்திருக்கும் இடத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமிடத்து உடனடியாக கைது செய்யப்பட்டவாரின் உறவினர்களுக்கும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் தெரியப்படுத்தல் வேண்டும்.
  3. நீதிபதிகள் தடுத்து வைத்திருக்கும் இடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் விஜயம் செய்தல் வேண்டும்.
  4. தடுத்து வைத்திருப்பதிலிருந்து விடுதலை வழங்குவது என்பது நீதிமன்றினூடாகவே மேற்கொள்ளப்படல் வேண்டும்.

கைது, தடுத்து வைத்தல் அல்லது இடமாற்றம் தொடர்பான பதிவினை அல்லது கடத்தல்கள் பற்றிய முறைப்பாடுகளை பதிவு செய்யத் தவறுமிடத்து அல்லது அவை தொடர்பான விசாரணையை மேற்கொள்ள காவல்துறை தவறுதல் அல்லது மறுப்புத் தெரிவித்தல் என்பது குற்ற நடவடிக்கையாகக் கருதப்பட வேண்டும். இக் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஆட்கள் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள சம்பவங்களை ஆணைக்குழுவினால் அவதானிக்கக் கூடியதாயிருந்தது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான எந்த வகையான ஒழுங்குவிதிகளின் கீழும் நபர்களை தடுத்துவைத்தல் அல்லது விசாரணைக்காகக் கைது செய்தல் தொடர்பாக கண்காணிப்பதற்கும்,பரீட்சிப்பதற்கும் சுதந்திரமான ஆலோசனைச் சபை ஒன்றினை நிறுவ வேண்டும் என ஆணைக்குழு விதந்துரைத்துள்ளது.

ஆணைக்குழுவானது விசேடமாக உயர் பாதுகாப்பு ஏற்பாடு நிறைந்த ஓமந்தை மற்றும் பூசா போன்ற பல தடுப்பு நிலையங்களுக்கு விஜயம் செய்தது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இத்தடுப்பு நிலையங்களுக்கு செல்லக் கூடியதாயிருப்பதுடன், தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை தனியாக சந்திக்கவும் கூடியதாயுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடனான இந்த ஒத்துழைப்புக் கொள்கையினை ஆணைக்குழு வரவேற்பதுடன் அரசாங்கமானது இந்த ஒத்துழைப்புக் கொள்கையினை விரிவாக்குவதுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஏனைய அது போன்ற மனிதநேய அமைப்புக்களுடன் ஆக்கபூர்வமாக ஒன்றிணைந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் நலன்களை உறுதிப்படுத்தல் வேண்டும் என விதந்துரைத்துள்ளது.

அடிப்படைச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடு

கருத்துத் தெரிவிக்கும் மற்றும் தகவல்களை அறியும் சுதந்திரம் என்பது சர்வதேசரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை மனித உரிமையாகும். ஊடக சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது பொதுமக்களிடையே நம்பிக்கையின்மையும், பயத்தையும் உருவாக்கும். எனவே ஜனநாயகத்தின் உள்ளடக்கங்களையும், அடிப்படை உரிமைகளையும் பேணும் வகையில் ஊடக சுதந்திரத்தினை பேணுவது இன்றியமையாததாகும்.

உண்மையில் நல்லிணக்கச் செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொள்வதில் இவைகள் மிக முக்கிய வகிபங்கினை கொண்டுள்ளன.எனவே ஊடக ஆளணியினர் மற்றும் நிறுவனங்கள் மீதான தொந்தரவுகளையும் தாக்குதல்களையும் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதுடன், இவ்வாறான தாக்குதல்களை புலனாய்வு செய்வதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும், வழக்குகளை முடிப்பதற்கும் முன்னுரிமை வழங்குதல் வேண்டும்.

கடந்த கால சம்பவங்கள் சரியான முறையில் புலனாய்வு செய்யப்படுதல் வேண்டும். அதன் மூலம் குற்றவாளிகளை தாமதமின்றி நீதியின் முன் கொண்டு வரமுடியும்.வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஊடக ஆளணியினர் சுதந்திரமாக நடமாடுவது நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு உதவும் என்பதால் அரசாங்கம் ஊடகசுதந்திரத்தை உறுதிப்படுத்துவதுடன், தகவல்களை அறியும் உரிமையினை உறுதிப்படுத்துவதற்குச் சட்டம் இயற்றவும் வேண்டும்.

நல்லிணக்கத்தின் நம்பகத்தன்மைக்காக மக்கள் தமது சமய கடமைகளில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கும் இதற்காக நடமாடுவதற்கும் உள்ள உரிமைகளை மதித்து, ஊக்குவித்து, பாதுகாக்கின்ற பொறுப்பு அரசாங்கத்திற்குள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தமது சமயக் கொண்டாட்டங்களை நடத்தும் பொழுது அத்தகைய நடவடிக்கைகளுக்கு எவ்வித தடைகளுமேற்படுத்தாமல் அவற்றை நடத்துவதற்கு வசதியளிப்பதன் மூலம் அவர்களிடைய காணப்படும் நிச்சமயற்ற தன்மை தொடர்பான அவர்களின் உணர்வுகளை முடிவிற்குக் கொண்டு வரவேண்டும். இது உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள சமய வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கான வசதிகளையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படுமிடத்து காவல்துறையின் உதவி வழங்கப்பட வேண்டும். மக்கள், சமூகத் தலைவர்கள், சமயத் தலைவர்கள் ஆகியோர் அமைதியான நிகழ்வுகளையும் கூட்டங்களையும் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி ஒழுங்கு செய்வதற்கு சுதந்திரமுடையவர்களாக இருத்தல் வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து வரும் விருந்தினர்கள் அண்மையில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விஜயம் செய்வதற்கு தேவையற்ற கட்டுப்பாடுகள் எதுவுமின்றி அனுமதிக்கப்படல் வேண்டும்.

இலங்கையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் தற்பொழுது இடம்பெற்று வரும் நல்லிணக்கச் செயற்பாடுகள் உண்மையானவை, அனைத்தையுமுள்ளடக்கியவை என்று நம்பவும், நம்பிக்கை வைக்கவும் அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும். இதற்கு சமாந்திரமாக அரச நிறுவனங்களாகிய பாதுகாப்புப் படைகள்,காவல் துறை என்பவற்றினால் பொதுமக்களுக்கான சுதந்திரங்கள் தன்னிச்சையாக கட்டுப்படுத்தப்படாமல் அல்லது மீறப்படாமல் இருப்பதனையும் அரசாங்கம் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

14,006 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>