தமிழக அரசியல் அதிகாரப் போட்டிக்குள் துருப்புச்சீட்டாக இலங்கைத் தமிழர்கள்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.01, 2012.09.02 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image0021979ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய மத்திய அரசாங்கம் உருவாக்கும் கூட்டு அரசாங்கத்தின் பங்குதாரர்களில் ஒருதரப்பாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் அங்கம் வகித்து வருகின்றன. இது தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் சிந்திக்கும் விதம், கொள்கை உருவாக்கும் விதம் என்பவற்றின் மீது செல்வாக்குச் செலுத்துவதற்கான சந்தர்ப்பத்தினை மத்திய அரசாங்கத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்தது. மன்மோகன்சிங் அரசாங்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தினையும் அதன் தலைவரையும் இலங்கை தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் கொள்கை வட்டத்திற்குள் இழுத்து வைத்துக்கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்குமளவிற்கு அதனை வற்புறுத்தி இணங்க வைத்து வருகின்றது. இவ் இணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு புதிய உலகஅரசியல் ஒழுங்கு, பயங்கரவாதத்தினைச் சகிக்க முடியாமை, இந்தியாவின் ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு பிராந்திய வல்லரசுக் கனவு போன்றன பேணப்படுவதற்கு இலங்கை தொடர்பாக மத்திய அரசாங்கம் உருவாக்கியுள்ள கொள்கைக்கு கருணாநிதி ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் சமகால உலக ஒழுங்கிற்கு ஏற்ப இந்துசமுத்திரப்பிராந்தியத்தின் முக்கியத்துவமும், அதில் இந்தியாவின் முக்கியத்துவமும் கலைஞர் கருணாநிதிக்கும், செல்வி ஜெயலலிதாவிற்கும் நன்கு தெரிந்தவைகளேயாகும். இப்பின்னணியில் இலங்கைத் தமிழ் மக்களின் போராட்டத்தினை தமிழ்நாட்டிலுள்ள இருபெரும் அரசியல் கட்சிகளும் தமது அதிகாரப் போராட்டத்திற்கான துரும்புச் சீட்டாக எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளுகின்றன என்பது இங்கு விவாதிக்கப்படுகின்றது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழ்நாட்டு அதிகாரப் போராட்ட அரசியலில் இலங்கைத் தமிழர்களின் போராட்டம் இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல்காலங்களில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமது வலுவான கிளர்ச்சிகளை இலங்கைத் தமிழர்கள் விவகாரங்கள் தொடர்பில் வெளிப்படுத்தி வருகின்றன. யுத்தகாலப் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன இலங்கைத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை வெளிப்படுத்தியிருந்தன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்கத்தின் தலைவி செல்வி ஜெயலலிதா இலங்கை பற்றிப் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பாகத் தந்திரமாகப் பேசத் தொடங்கினார். தமிழ்நாட்டு அரசியலின் அதிகாரப் போராட்டத்தில் மிகவும் ஆழமாகவும், அனுதாபமாகவும் இலங்கைத் தமிழர் விடயம் பார்க்கப்பட்டதால் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கின. இந்தியாவின் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவி “தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் பொதுத் தேர்தல் காலத்தில் இலங்கைத் தமிழர் பற்றிப் பேசாமல் விடுவது தேர்தல் தோல்விக்குக் காரணமாகி விடலாம் என்றதொரு அச்சம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர் விடயம் தொடர்பாகத் தேர்தல் பிரசாரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்கம் பேசத் தொடங்கியது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் “இலங்கைத் தமிழர்கள் அதிகமாக வாழும் பிரதேசத்தில் நிர்வாக அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் சிங்களப் பெரும்பாண்மை மக்களுக்குச் சமமான அந்தஸ்த்தினைப் பெற்று வாழமுடியும். இதன்மூலம் உள்நாட்டு யுத்தத்திற்கும் முடிவு காணலாம்” எனத் தெரிவித்திருந்தது. இக்காலத்தில் செல்வி ஜெயலலிதா தமிழீழத்தினை நிராகரித்திருந்தார் என்பதே உண்மையாகும்.

2006ஆம் ஆண்டு இலங்கையில் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகி உச்சநிலையிலிருந்த போது ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் உயிரிழந்து கொண்டிருந்தனர். அத்தருணத்தில் இதுதொடர்பாக கருத்துவெளியிட்ட செல்வி ஜெயலலிதா “யுத்தம் என்றால் அப்பாவி மக்கள் சாவது சகஜம்” எனக்குறிப்பிட்டிருந்தார். ஆனால் யுத்தத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட உயிர்ச் சேதங்களை ஒளிநாடா, இறுவட்டுக்கள் மூலம் பார்வையிட்டதால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அனுதாப அலையினைத் தனது தேர்தல் பிரச்சாரத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்த விரும்பிய செல்வி ஜெயலலிதா இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தமிழீழம்தான் எனக் கூறத் தொடங்கினார். அவருடைய வார்த்தையில் கூறினால் “நான் ஒரு போதும் தமிழ் அரசுதான் ஒரே தீர்வு எனக் கூறவில்லை. நான் அரசியல் தீர்வு பற்றியே கூறிவந்தேன். ஆனால் இப்போது இலங்கையின் மோதலுக்கு நிரந்தரத் தீர்வு தமிழீழம் மட்டும்தான் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றேன்”. முன்னர் தமிழீழத்தினை நிராகரித்திருந்த செல்வி ஜெயலலிதா இப்போது தனது தேர்தல் வெற்றிக்காக தமிழீழம்தான் இறுதித்தீர்வு எனவாதிடுகின்றார்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்கட்சியாக இருந்தது. நிபுணர்குழு அறிக்கை வெளியிடப்பட்டபோது இது ஆளும் கட்சியாகியிருந்தது. இலங்கைத் தமிழ் மக்கள் விடயத்தில் தெளிவற்ற கொள்கையினைக் கொண்டிருக்கும் இக்கட்சியின் சார்பில் முதலமைச்சர் செல்வி ஜே. ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்காக இலங்கை ஜனாதிபதியை யுத்தக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இந்தியா இலங்கைக்கு எதிராகப் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். இலங்கையில் தமிழ் மக்கள் படும் துன்பங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இது செல்வி ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாட்டின் மற்றொரு பரிமாணமாகும்.

திராவிட முன்னேற்றக்கழகம்

இலங்கையில் நிகழும் யுத்தத்தினை நிறுத்துவதற்காக தனக்குத் தானே தீ மூட்டி முத்துக்குமார் மரணித்தபோது அதனை ஏழனம் செய்திருந்த கலைஞர் கருணாநிதி அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மாணவர் எழுச்சியை அடக்கியிருந்ததுடன், தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்த சீமானையும் கைது செய்திருந்தார். இதன்மூலம் தமிழ்நாட்டில் எழும் எழுச்சியை கட்டுப்படுத்தும் பலம் தனக்கு இருக்கிறது என்பதை மத்தியரசிற்கு காட்டியிருந்தார். இலங்கையில் யுத்தம் உச்சநிலையிலிருந்தபோது அதனைத் தடுப்பதற்கு முயற்சிக்காத கலைஞர் கருணாநிதி யுத்தம் முடிவடையும் தருணத்தில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தார். இப்போராட்டம் ஆரம்பமாகி மூன்றாம் நாள் இலங்கையில் விமானக் குண்டு வீச்சு நிறுத்தப்பட்டு பீரங்கித் தாக்குதலும், துப்பாக்கிப் பிரயோகமும் தொடர்வதாக அவருக்கு அறிவிக்கப்பட்டபோது “மழைவிட்டும் தூவானம் விடவில்லை” என்ற அடைமொழியுடன் கலைஞர் கருணாநிதி தனது உண்ணாவிரதப் போராட்டத்தினை முடித்துக்கொண்டார். அதற்குமேல் அவர் எதனையும் இலங்கைத் தமிழ் மக்களுக்காக செய்யவிரும்பாதவராக இருந்தார்.

இலங்கையில் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் சமத்துவமாக வாழ்வதற்குரிய சூழல் உருவாக்கப்படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த திராவிட முன்னேற்றக்கழகம் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக விடுத்த அறிக்கையில் “ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை உத்தியோகபூர்வமாக இரண்டுநாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டு விட்டது. யுத்தத்தின் இறுதியில் பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கைமீது யுத்தக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்கு தேவைப்பட்டால் கூட்டுக் கட்சிகளுடன் ஆலோசனை நடாத்தி தீர்மானங்களை எடுக்கலாம்” எனக் கூறியதுடன் தனது பணியை நிறுத்திக் கொண்டது.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழக சட்டசபையில் அப்பொழுது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி இலங்கைத் தமிழர் தொடர்பாகப் பின்வருமாறு கருத்துக் கூறியிருந்தார். “தமிழீழத்தையடைதல் என்ற கொள்கை யதார்த்தமான கொள்கையல்ல. நெகிழ்ச்சியான கொள்கையினைப் பின்பற்றுவதுடன், சிங்கள மக்கள் பற்றிக் குற்றம் காணுகின்ற, கோபப்படுத்தக்கூடிய, வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்கள் தெரிவிப்பதைத் தமிழர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தமிழர்களின் நலன்களுக்கு இது பாதகமாக அமைந்துவிடும். காலத்தேவை கருதி இலங்கைத் தமிழர்கள் சமஉரிமைகள், மொழி உரிமைகள், அதிகாரப்பகிர்வு என்பவற்றைப் பெறுவதற்குப் பிராந்திய மட்டத்தில் போராட வேண்டும்”. இத்தருணத்தில் கலைஞர் கருணாநிதிக்கு இலங்கைத் தமிழ்மக்களுக்குத் தமிழீழம் கிடைப்பது அவசியமற்றதொன்றாக இருந்தது.

தமிழ்நாட்டில் இழந்திருக்கும் தனது அரசியல் அதிகாரத்தினையும் செல்வாக்கினையும் மீளவும் கைப்பற்றிக் கொள்ள கலைஞர் கருணாநிதிக்கு மீண்டும் இலங்கைத் தமிழர்கள் தேவைப்படுகின்றார்கள். இதற்காக 1985ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர் கலைக்கப்பட்ட ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு அமைப்பிற்கு (Tamil Eelam Supporter’s Organization – TESO) மீண்டும் புத்துயிரளித்து 2012ஆம் ஆண்டு ஆவணிமாதம் 12ஆம் திகதி சென்னையில் மகாநாடு ஒன்றினை கலைஞர் கருணாநிதி நடாத்தியுள்ளார். மகாநாடு நடாத்தப்படுவதற்கு முன்னர் தமிழ் ஈழம் தொடர்பாக இவர் பின்வருமாறு மீண்டும் பேசத் தொடங்கியுள்ளார். “சிங்களவர்களை ஒருபோதும் நம்பமுடியாது. நம்பவைத்து கழுத்தறுப்பவர்கள் அவர்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பித்தான் நான் கூட சென்னையில் உண்ணாவிரதமிருந்ததை வாபஸ் பெற்றேன். ஆனால் அவர்கள் பொய்யான உறுதிமொழியை அளித்துவிட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தனர். இனியும் தமிழ்மக்களால் சிங்களவர்களுடன் இணைந்து வாழமுடியாது. தமிழர்களுக்கென தனிநாடு, தமிழ் ஈழநாடு அங்கே அமைந்தால் மட்டுமே தமிழ் இனம் அங்கு பிழைக்கும். எனவே இதை ஐ.நா பொது வாக்கெடுப்பு மூலம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்”. தமிழ்நாட்டு அரசியல் அதிகாரப் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான காங்கிரஸ்கட்சி இலங்கைத் தமிழர் துன்பத்தின் மீது தனது அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றது. அதேநேரம், இலங்கை தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் கொண்டிருக்கும் கொள்கைக்கு முழுமையான ஆதரவினைத் தெரிவிக்கும் கொள்கையினையே திராவிட முன்னேற்றக் கழகம் பின்பற்றி வருகின்றது. இறுதியில் இலங்கை விடயம் தொடர்பான மத்திய அரசாங்கத்தின் பாதையில் தான் தனது கால்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் பதித்துச் செல்கின்றது. தமிழ்நாட்டு அரசியல் அதிகாரப் போராட்டத்தில் முழுமையாக வெற்றிகொள்வதே கருணாநிதியின் இலக்காக இருக்கின்றதேயன்றி, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவது அவரின் இலக்காக இருக்கவில்லை. கருணாநிதியின் அதிகாரப் போராட்டத்திற்கு எல்லாவற்றையும் இழந்து போயுள்ள இலங்கைத் தமிழர்கள் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றார்கள் என்பதுதான் வேதனையான விடயமாகும்.

தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தமிழ் இராணுவக்குழுக்களுக்கு இராணுவப் பயிற்சியை இந்தியா 1980 களின் பின்னர் வழங்கியமை யாவரும் அறிந்ததாகும். ஆயினும் சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாட்டினை எடுக்கும் தமிழ்நாடு இதற்காக பயன்படுத்தப்பட்டதே அதிகமாகும். தமிழ் இராணுவக் குழுக்கள் தமிழ்நாட்டில் முகாமிட்டிருந்த இக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் தொடர்பிலிருந்தனர். இக்காலத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமது கட்சி சார்ந்த நலன்களுக்குப் பயன்படுத்தியிருந்தனர் என்ற உண்மையினை யாரும் மறுக்கமுடியாது. வெளிப்படையாகக் கூறினால் இலங்கைத் தமிழர்களின் துன்பங்களை தமிழ்நாட்டிலிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் தமது தேர்தலுக்குப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இதற்குள் திராவிட முன்னேற்றக்கழகமும் அடங்கும். இங்கு துன்பம் யாதெனில் தேர்தலின் பின்னர் திராவிட முன்னேற்றக்கழகம் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பான தனது கட்சிக் கொள்கையினை முழுமையாக மாற்றிக் கொள்வதேயாகும். எதிர்கால தேர்தலுக்காகவும், சந்தர்ப்பவாத தமிழ்நாட்டு அரசியலுக்காகவும் மீண்டும் இலங்கைத் தமிழர்கள் பணயம் வைக்கப்படுகின்றனர்.

இன்றைய தேவை

தமிழீழ அரசு தான் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு என்ற கருத்திலிருந்து தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மீளவேண்டும். இவர்கள் இதிலிருந்து மீளாவிட்டால் மீண்டும் இலங்கைத் தமிழ் மக்களை மீளாத்துயருக்குள்ளாக்கி விட்டு கைகட்டி வேடிக்கைபார்க்கும் குரூரமானவரகளாக வரலாறு மீண்டும் இவர்களைச் சித்தரிக்கும். உண்மையில் எந்தவொரு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் இந்தியாவின் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் முக்கியத்துவம், இந்தியாவின் பிராந்திய வல்லரசுநலன் என்பவைகளைக் கருத்திலெடுத்து “தமிழீழ ஆதரவு” நிலையினை எடுத்திருக்கவில்லை. தமிழ் ஈழம் தொடர்பான மத்திய அரசின் கொள்கை தொடர்பாக இக்கட்சிகளுக்கு நன்கு தெரியும். அவ்வாறிருந்தும் தமிழீழ ஆதரவு நிலையினை எடுத்து இவர்கள் பல சந்தர்பங்களில் அரசியல் கோமாளிகளாக்கப்பட்டுள்ளனர். இலங்கைத் தமிழர்களின் அரசியல் தமிழ்நாட்டு அரசியலிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ இலங்கைத் தமிழ்மக்களின் போராட்டத்தினை உரத்துக் கூறி அரசியல் இலாபம் சம்பாதிக்க வேண்டிய சூழலிலேயே இன்றும் உள்ளன என்ற யதார்த்தத்தை இலங்கைத் தமிழ்மக்கள் புரிந்துகொண்டு அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்படவேண்டும். ஏனெனில் வரலாற்றில் இலங்கைத் தமிழர் விடயங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் மீது எவ்வித கொள்கை மாற்றங்களையும் ஏற்படுத்த முடியாத நிலையிலேயே தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இருந்துள்ளார்கள்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இதயசுத்தியுடன், தாம் சார்ந்த அரசியல் நலன் கடந்து நல்லது செய்ய விரும்பின் இந்தியாவின் பிராந்திய வல்லரசுநலன், புவிசார் அரசியல் என்பவற்றை உள்வாங்கி அதற்கு ஏற்ற வகையில் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்க முயற்சிக்கலாம். அதற்கு அப்பால் சென்று யாரும் செயற்பட முடியாது என்ற யதார்த்தத்தையும், அறிவுசார்ந்த நிலையிலிருந்தே பூகோள அரசியலை பார்க்க வேண்டும் என்ற அறிவினையும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் எல்லா மக்களுக்கும் வழங்கலாம்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

9,615 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>