தன்னைத்தானே விமர்சனம் செய்வதன் மூலம் எல்லோருடைய கவனத்தையும் திசைதிருப்பியுள்ளது ஐ.நா

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.12.01, 2012.12.02 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image001வரலாற்று ரீதியில் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்படும் மக்களைப் பாதுகாப்பதில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தோல்வியடைந்து வந்துள்ளது. 1994ஆம் ஆண்டு ருவென்டா இனப்படுகொலை, 1995ஆம் ஆண்டு யுகோஸ்லேவியாவில் சேர்பேனிக்கா மற்றும் பொஸ்னியாவில் இஸ்லாமிய இளைஞர், யுவதிகள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டமை போன்றவற்றைத் தடுக்கமுடியாமல் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் திணறியுள்ளது. இந் நாடுகளில் படுகொலைகள் நிகழ்ந்த போது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அமைதிகாக்கும் படைகள் நிலை கொண்டிருந்தன. இந்நாடுகளின் முதலாளித்துவ, ஏகாதிபத்திய ஆட்சியை ஏற்றுக்கொண்டு அவைகளைப் பாதுகாப்பதையே தமது பணியாக அமைதிகாக்கும் படை செயற்பட்டிருந்தது. பதிலாக நசிவடைந்து ஒடுக்குமுறைக்குள்ளாகிக் கொண்டிருந்த மக்களை இப்படைகள் பாதுகாத்திருக்கவில்லை. இதற்கு வரலாற்றிலிருந்து இதனைவிட பல சம்பங்களை ஆதாரமாகக் காட்டமுடியும்.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், வறுமையினைத் தணித்தல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல், உலகில் சமாதானத்தினைப் பேணுதல் போன்ற பல விடயங்களை செய்து வருவதாகக் கூறுகின்றது. ஆனால் யுத்தத்தினைத் தடுத்தல், மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துதல் போன்ற விடயங்களில் தோல்வினை சந்தித்துள்ளது. இயற்கை அனர்த்தங்களை தடுக்க முடியாமையால் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறப்பதுடன் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இவைகளைத் தடுக்க முடியாத நிலையிலேயே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இன்று உள்ளது.

படுகொலைகள்

2011ஆம் ஆண்டு சித்திரை மாதம் ஐக்கியநாடுகள் சபை நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கை 40,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிக்கலாம் என முதல் தடவையாகக் கூறியது. இதன் பின்னர் மிகுந்த தயக்கத்துடன் குறிப்பிடத்தக்களவு மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. நிபுணர் குழுவிலிருந்த ஒருவராகிய யஸ்மின் சூக்கா (Yasmin Sooka) 2012ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ஆம் திகதி லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் “40,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிக்கலாம் என்பது குறைந்த மதிப்பீடாகும். உண்மையில் இது 75,000 மேற்பட்டதாகும்”. எனத் தெரிவித்துள்ளார்.

மன்னார் கத்தோலிக்க ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராயப்பு ஜோசேப் (Rayappu Joseph) அடிகளார் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு வழங்கிய சாட்சியத்தில் வன்னிப்பிரதேசத்தில் 2008ஆம் ஆண்டு ஐப்பசியில் 429,059 பொதுமக்கள் வாழ்ந்ததாக வன்னிப் பிரதேச அரசாங்க அதிபர்கள் வழங்கிய பதிவுகள் கூறுகின்றன. 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின் படி 282,380 பொதுமக்களே யுத்தப் பிரதேசத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்துள்ளார்கள். இருதரப்பு அறிக்கைகளையும் ஒப்பு நோக்குகின்றபோது 146,679 பொதுமக்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. எனவே இது தொடர்பான விசாரணை நடாத்தப்படல் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இவரின் கருத்தினை பல ஆய்வாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இப்போது நம்புகின்றதுடன் ஏறக்குறைய 150,000 பொது மக்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும் எனக் கூறுகின்றார்.

2009ஆம் ஆண்டு தை மாதம் 31ஆம் திகதி பல நாடுகளில் ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் மக்கள் பான்-கீ மூன் “தமிழ் மக்களைப் பாதுகாருங்கள்” என்ற சுலோகத்தினைக் காவிக்கொண்டும் உரத்த குரலில் சத்தமிட்டு ஊர்வலம் நடத்தினர். லண்டனில் வசிக்கும் ஏறக்குறைய 90 சதவீதமான தமிழ் பேசும் மக்கள் தெருக்களில் இறங்கி ஊர்வலம் நடத்தியமை வரலாற்றில் நிகழ்ந்த முதல் சம்பவமாகும். ஆனால் தெருக்களில் இறங்கிய மக்கள் கொண்டு சென்ற சுலோக அட்டைகள், அழுத்திக் கேட்ட கோரிக்கைகள் அனைத்தையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் புறந்தள்ளிச் செயற்பட்டது.

பாசாங்கு

ஆனால் 2009ஆம் ஆண்டு தை மாதம் 30ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அலுவலகம் விடுத்த செய்திக் குறிப்பில் “வடபகுதி யுத்தப் பிரதேசத்தில் சிக்கியிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக” இலங்கை ஜனாதிபதி அறிவித்துக் கொண்டமையினை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் வரவேற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தது.

2009ஆண்டு வைகாசி மாதம் 27ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய தீர்மானம் ஒன்றில் “பொதுமக்களுடைய விருப்பத்திற்கு மாறாக தமிழீழ விடுதலைப்புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10,000 தமிழ் பொதுமக்களை இலங்கை அரசாங்கம் மீட்டெடுத்துக் கொண்டமை பாராட்டத் தக்கது” எனத் தெரிவித்திருந்தது. இதன் மூலம் இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த பொதுமக்களுக்கு இழப்பில்லாத யுத்தம் (zero civilian causality war) மூலம் உலகில் முதற்தடவையாக யுத்தத்தில் பணையம் வைக்கப்பட்டிருந்த பாரியளவிலான பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஏற்றுக் கொண்டிருந்தது. இத்தருணத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் அல்லது குறிப்பிட்டளவு மக்கள் இறந்துள்ளார்கள் என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை எதனையும் குறிப்பிடவில்லை. பேராசிரியர் நோம் சொம்ஸ்கி (Noam Chomsky) ஐக்கிய நாடுகள் சபையின் பாசாங்கு என்பது “தடம்காணமுடியாத ஆழமாக இருந்தது. இது மூச்சுத்திணற வைத்தது”. எனக் கூறுகின்றார்.

பொறுப்புக் கூறுதல்

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் விழிப்பு (Human Rights Watch) சர்வதேச Crisis Group போன்றவைகள் யுத்தக் குற்றங்கள் தொடர்பான முதனிலைப் பொறுப்புக்கூறலை இலங்கையிடம் வலியுறுத்தியிருந்தன. இவ் அமைப்புக்களின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவினையும் அது தயாரித்து வழங்கிய அறிக்கையினையும் நிராகரித்த இலங்கை அரசாங்கம், 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகக் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவும் (Commission of Inquiry on Lessons and Reconciliation) என்ற பெயரில் ஆணைக்குழு ஒன்றினை நிறுவி இலங்கையில் நல்லிணக்கத்தினையும், தேசக்கட்டுமானத்தினையும் உருவாக்க இலங்கை மக்களிடம் விசாரணை நடாத்தி அறிக்கை சமர்பிக்கும் படி கேட்டிருந்தது. இவ் ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையினை 2011ஆம் ஆண்டு மார்கழி மாதம் அரசாங்கத்திடம் கையளித்தது.

2012ஆம் ஆண்டு பங்குனி மாதம் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நிறைவேற்றிய பிறி தொரு தீர்மானத்தில் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவும் வழங்கிய சிபார்சுகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் இத்தீர்மானங்கள் யாவும் தோல்வியில் முடிவடைந்து விட்டதுடன் நிபுணர்குழு அறிக்கையும் சிறுபிள்ளைத்தனமான தொன்றாகவே இலங்கை அரசாங்கத்தால் பார்க்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஐக்கிய நாடுகள் சபையூடாக இலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் கவலையடைந்துள்ளார்கள்.

மேற்குலக நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கும் தாம் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்ற மனப்பதிவை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தந்திரமாக விமர்சகர்களால் இது பார்க்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபன நிபுணர்குழு அறிக்கையில் கூறப்பட்ட சிபார்சுகளை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும், இலங்கையும் கைவிட்டு விட்டன. தற்போது உள்ளக அறிக்கை என்ற ஒன்றை வெளியிட்டு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தன்னைத்தானே விமர்சனம் செய்வதன் மூலம் எல்லோருடைய கவனத்தையும் திசைதிருப்பியுள்ளது.

சுயவிமர்சனம்

இலங்கை அரசாங்கப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சுற்றி வளைத்து யுத்ததில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஐக்கிய நாடுகள் ஸ்தாபன ஊழியர்களை உடனடியாக வன்னியிலிருந்து வெளியேறும் படி இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டது. அரசாங்கத்தின் உத்தரவின் படி ஐக்கிய நாடுகள் ஸ்தாபன ஊழியர்கள் தொடர்ந்து வன்னியில் தங்கியிருந்தால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியாது. உலக வரலாற்றில் மிகவும் மோசமான பேரழிவினை சந்தித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களைக் கைவிட்டு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் எட்டு சர்வதேச ஊழியர்களம், பல உள்ளூர் ஊழியர்களும் வன்னியை விட்டு வெளியேறியிருந்தனர்.

இதனைப் பாதுகாப்புச் சபையின் வழமையான கூட்டத்தினைக் கூட்டும்படியோ, அல்லது மனித உரிமைகள் பேரவையினை கூட்டும்படியோ அல்லது இலங்கையின் மோதல் காலத்தின் இறுதிக் காலப்பகுதியில் பொதுச்சபையினைகூட்டும்படியோ ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அங்கத்துவ நாடுகள் கோரவில்லை என உள்ளக அறிக்கை விமர்சனம் செய்துள்ளது.

தவறுகளிலிருந்த பாடம் கற்போம், எமது பொறுப்பை பலப்படுத்துவோம், எதிர்காலத்திற்காக பயனுள்ள வகையிலும், அர்த்தத்துடனும் செயற்படுவோம், எமக்கிருந்த தடைகளை வெல்லுவதற்கு எல்லா வகையான மனித நேயத்துடனும் செயற்படுவது எமது கடமையாகும். பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதை உத்தரவாதப்படுத்துவது முக்கியமானது என்பதை சிரியாவின் இன்றைய நிகழ்வுகள் ஞாபகப்படுத்துகின்றது. எதிர்கால தனது செயற்பாட்டிற்காக ஆலோசனை கூறுவதற்கும் நிபுணர்கள் குழுவின் சிபார்சுகளை கருத்தில் கொள்வதற்கும் சிரேஸ்ட மட்டத்திலான குழுவொன்றை தான் உருவாக்கப் போவதாக பான்-கீ-மூன் கூறியுள்ளார்.

ஆனால் முப்பது வருடகாலம் இலங்கையில் இடம்பெற்ற மோதலில் அப்பாவி மனிதஉயிர்களின் இழப்புத்தொடர்பாக இலங்கை தெளிவானதொரு பாடத்தைக் கற்றுள்ளது. இவ் அனுபவங்களை அடிப்படையாக வைத்து நெறியான சட்டவரைபை உருவாக்கி, இந்த மோதலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவது சர்வதேசச் சமூகத்தின் பொறுப்பாகும். அண்மையில் இஸ்ரவேல் – காசா மோதலின் பத்து பேர்கள் இறந்ததற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தனது பாதுகாப்பு சபையின் அவசரகால கூட்டத்தினைக் கூட்டி இத்தகராறு தொடர்பாக ஆராய்ந்தது. ஆனால் 2009ஆம் ஆண்டு இலங்கையின் இறுதி யுத்தத்தில் கொலையுண்ட 40,000 பொதுமக்களுக்காக விசேட கூட்டத்தொடர்களையும் கூட்டவும் இல்லை ஆராயவும் இல்லை. இலங்கையில் யுத்தப் பிரதேசத்தில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களுக்கான மிகவும் அடிப்படையாகத் தேவைப்படும் வசதிகளைச் செய்யும் பொறுப்பினைக் கூட செய்வதிலிருந்து தவறிவிட்டது.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

10,369 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>