தந்தை வழி, தாய்வழிக் கோட்பாடு

இக்கோட்பாட்டினை முதன்மைப்படுத்தியவர் 1822 ஆம் ஆண்டிற்கும் 1888ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்த சேர் ஹென்றி மெயின் (Sir Henry Maine) ஆவார். இவர் 1861 ஆம் ஆண்டு எழுதிய புராதனச் சட்டம் (Ancient Law) என்னும் நூலிலும், 1875 ஆம் ஆண்டு எழுதிய “நிறுவனங்களின் ஆரம்பகால வரலாறு (Early History of Institution) ஆகிய இரண்டு நூல்களிலும் இக்கோட்பாடு பற்றிய விடயங்களை எடுத்துக் கூறுகின்றார். இக் கோட்பாட்டினை உருவாக்குவதற்கு மெயின் மூன்று விடயங்களை ஆதாரமாகப் பயன்படுத்தியிருந்தார். அவைகளாவன, பண்டைய நாகரீகங்கள் பற்றிய குறிப்புக்கள், கிரேக்க இனங்களின் வரலாறு, உரோமானிய, இந்துச் சட்டங்கள் என்பவைகளாகும். புராதன சமுதாயத்தின் முதல் அலகு குடும்பமேயாகும். இக்குடும்பத்தின் பரம்பரை ஆண் மூலமே அடையாளப்படுத்தப்பட்டது. குடும்பத்தின் தலைமையும் அதிகாரமும் ஆணிடமேயிருந்தது. அதாவது குடும்பத்தின் மூத்த ஆண் குடும்பத்திற்கு தலைமை தாங்குகின்றான். ஏனைய ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், அடிமைகள் அனைவரும் இவனுக்குக் கட்டுப்பட்டிருந்தனர். குடும்பத் தலைவனாகிய ஆணிடம் இருந்த அதிகாரம் குடும்பம் முழுவதையும் கட்டுப்படுத்திய போது இறைமை குடும்பத் தலைவனாகிய ஆணிடமே சென்றடைந்தது.

தனிக் குடும்பம் நாளடைவில் பல குடும்பங்களாகியது. இக் குடும்பங்கள் அனைத்தினதும் தலைமைத்துவமும், அதிகாரமும் முதல் குடும்பத்தின் ஆண் தலைவனிடமேயிருந்தது. இங்கு ஆண் எத்தனை பெண்களையும் திருமணம் செய்யலாம். ஆனால் பெண் ஒரு ஆண் மகனை மட்டுமே திருமணம் செய்ய முடியும். பெண் ஒரு ஆணிற்கு மட்டுமே அடி பணிய முடியும். இச்சமூக முறை இருந்தமைக்கான ஆதாரங்களை மெயின் கிரேக்க, உரோம, இந்திய வரலாற்றிலிருந்து தருகின்றார்.

குடும்பங்கள் பிரிவடைந்;து பல குடும்பங்களாகி இரத்த உறவினடிப்படையில் ஒரு குலமாக மாறியது. குலங்கள் குடிகளாக மாறியது. குடும்பத்தின் மூலக் குழு உயர் ஆணாதிக்கத்தின் தொடர்பின் வழியே உருவாக்கப்பட்டது. இவ் ஆண் ஏனைய குடும்பங்களை ஆக்கிரமித்தான். பின்னர் குலங்களையும், குடிகளையும் ஆக்கிரமித்து இறுதியில் அரசு உருவாக்கப்பட்டது.

இங்கு இரத்த உறவு எல்லோரையும் ஒன்றாகப் பிணைத்திருந்தது. ஒரே குலத்தினைச் சேர்ந்தவர்களுள் மூத்த ஆண் மற்றைய எல்லா குடும்பங்களினதும் தலைவனாக இருந்தான். பெண்களுக்கு இங்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. திருமண முறை, இரத்த உறவு, ஆண் வழித்தலைமைத்துவத்தினை வளர்த்திருந்தது.

மெயினின் கருத்துக்கள் ஆண் வழி சமுதாயத்தின் அதிகாரத்தினை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இதுவே பிற்பட்ட காலங்களில் தோன்றிய அரசுகளின் தோற்றத்திற்கும் அடிப்படையாக இருந்தது. இக் கோட்பாட்டில் மூன்று பிரதான விடயங்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தன. ஒன்று ஆண்வழி இரத்த உறவு, இரண்டாவது நிரந்தரத் திருமணம், மூன்றாவது ஆண்வழி அதிகாரம் என்பவைகளாகும். இவைகள் மூன்றும் இணைந்து அரசு பற்றிய தந்தை வழிக் கோட்பாட்டினை உருவாக்கியிருந்தன.

ஆண்வழி குடும்ப அங்கத்தவர்கள் ஆண் வம்சத்தினூடாகத் தமது பரம்பரையினை இனம் காணக் கூடியதாக இருந்தது. ஆணின் இரத்த மரபிலிருந்து இவர்கள் கண்டறியப்பட்டதால் ஆண்கள் எல்லோரும் இரத்த மரபு வழி அடையாளப்படுத்தப்பட்டார்கள்.

தந்தைவழிக் கோட்பாட்டினை ஜெங்கீஸ் (Jenks) நிராகரிக்கின்றார். ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்யலாம் என்ற நியதி இருக்கும் வரையிலேயே இது சரியானதாகும். ஒரு பெண் பல ஆண்களைத் திருதமணம் செய்யும் நியதி இருக்கும் போது இது சாத்தியமற்றதாகி விடுகின்றது. ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்தமைக்கான ஆதாரங்கள் வரலாற்றில் நிறையவே உள்ளன. இங்கு “இரத்த பாசம்” என்பதை அடிப்படையாகக் கொண்டு எழுந்த “உறவு” அரசு தோன்றுவதற்கு காரணமாகியது என ஜெங்ஸ் கூறுகின்றார். இதன் மூலம் அரசின் தோற்றத்தி;ற்கு “தாய்வழி” உறவினை ஜெங்ஸ் முதன்மைப்படுத்துகின்றார்.

தாய்வழிக் கோட்பாடு

இக் கோட்பாட்டினை மாக்லென்னன் (McLennan) மொர்கன் (Morgan) ஜெங்ஸ் (Jenks) ஆகியோர்கள் தோற்றுவித்தனர். மாக்லென்னன் 1865 ஆம் ஆண்டு வெளியிட்ட புராதன சமுதாயம் (Primitive Society) என்னும் நூலிலும், மொர்கன் 1877 ஆம் ஆண்டு வெளியிட்ட புராதன சமுதாயத்தின் கற்கைகள் (Studies in Ancient Society) என்னும் நூலிலும், ஜெங்ஸ் 1900 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசியல் வரலாறு (A History of Politics) என்னும் நூலிலும் தாய்வழிக் கோட்பாடு தொடர்பாகக் கூறுகின்றனர்.

இக்கோட்பாடு தந்தைவழிக் கோட்பாட்டிலிருந்து வேறுபடுகின்றது. இக் கோட்பாடு புராதன கால குடும்பங்கள் பொதுவான ஆண் ஒருவனால் தலைமை தாங்கப்படவில்லை. பதிலாக இரத்த பாசத்தினடிப்படையில் பெண் ஒருவரினாலேயே குடும்பங்கள் தலைமை தாங்கப்பட்டது எனக் கூறுகின்றது. ஜெங்ஸ் அவுஸ்திரேலியாவின் புராதன சமுதாயம் ஒன்றை இதற்கான ஆதாரமாகக் காட்டுகின்றார். அவஸ்திரேலியாவின் பழங்குடி மக்களின் உண்மையான சமூக அலகு குலம் அல்ல அது “கூட்டுக் குழு” (Totem Group) என்றே அழைக்கப்பட்டது. இக் கூட்டுக் குழுவின் அங்கத்தவர்கள் இயற்கையானதொரு சின்னத்தினால் வேறுபடுத்திக் காட்டப்பட்டார்கள். அதாவது ஒவ்வொரு கூட்டுக் குழுவிற்கும், மரம், விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு சின்னங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஒரே சின்னத்தினைச் சேர்ந்த கூட்டுக் குழுவின் உறுப்பினர்கள், அதே கூட்டுக் குழுவிற்குள் திருமணத்தினைச் செய்து கொள்வதில்லை உதாரணமாக சிங்கத்தினை சின்னமாகக் கொண்ட கூட்டுக் குழுவிலுள்ள ஆண், அதே சின்னத்தினைக் கொண்ட கூட்டுக் குழுவிலுள்ள பெண்ணினைத் திருமணம் செய்வதில்லை. இது புராதன சமூகத்தின் அடிப்படைச் சமூகச் சட்டமாக இருந்தது. நெருங்கிய உறவினர்களைத் திருமணம் செய்வதைத் தடுப்பதற்கே இச் சமூகச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. எனவே தனக்கென ஒதுக்கப்பட்ட சின்னத்தையுடைய கூட்டுக் குழுவிலுள்ள பெண்ணினையே ஒரு ஆண் திருமணம் செய்யலாம். இதன் போது, குறிப்பிட்ட பெண்ணை மாத்திரம் திருமணம் செய்ததாக கருதப்படமாட்டாது. பதிலாக, இக் கூட்டுக் குழுவிலுள்ள பெண்கள் அனைவரையும் திருமணம் முடித்ததாகவே கருத்துக் கொள்ளப்படும்.

இச்சமூக முறைமையின் கீழ் “இரத்த பாச” உறவினைப் பெண்களே வளர்த்திருந்தார்கள். ஆண்களினால் இரத்த பாச உறவு வளர்க்கப்படுவதில்லை. இது தொடர்பாக ஜெங்ஸ் கூறும் போது “சமுதாயம் பெண்ணினை முதன்மையாகக் கொண்டு பரிணாமமடைந்தது என்பதே உண்மையானதாகும். ஆண்வழி சமூகப் பரிணாம வளர்ச்சி என்று மெயின் கூறும் கருத்துக்கள் ஏற்கக் கூடியவைகளல்ல” எனக் கூறுகின்றார்.விலங்குகளைப் போல அலைந்து திரிந்த மனிதன் “பால் உணர்வுத் தேவை” காரணமாக முதலில் பெண்களை நிரந்தரமாக வைத்திருக்கத் தொடங்கினான். பரிணாம வளர்ச்சியில் விலங்குகளை நிரந்தரமாகத் தன்னுடன் வளர்க்கத் தொடங்கிய போது, அவற்றினை பராமரிக்க இப் பெண்களின் உதவியும் ஆணுக்குத் தேவைப்பட்டது. பெண்களின் துணையும், உழைப்பும் அவசியமானது என்ற நிலை தோற்றம் பெற்றதுடன், பெண்ணின் ஆதிக்க நிலையும் தோற்றம் பெற்றது. ஏனெனில் அவளே ‘இரத்தபாச உறவுகளையும்’ சொத்துக்களையும் பாதுகாப்பவளாகினாள். எனவே, “நிரந்தர திருமண முறை எழுச்சியடைந்து குடும்பம் தோற்றம் பெறுவதற்குப் பதிலாக, மரபுக் குழுக்கள் தோற்றம் பெற்றன. இதுவே முதனிலைக் குழுவாகியது. இது பின்னர் பிரிவடைந்து குலங்களாகியதுடன், இவைகள் பின்னர் அரசு என்ற உயர் நிறுவனமாகியது. என ஜெங்ஸ் கூறுகின்றார்.

தந்தைவழிக் கோட்பாடு போன்றே தாய்வழிக் கோட்பாடும் விமர்சனத்திற்குள்ளாகியது. உலகம் முழுவதும் இவ்வாறான தாய்வழிச் சமுதாயம் இருந்தது என்பதற்கோ, அதன் மூலம் உலக சமுதாயம் ஒழுங்கமைக்கப்பட்டது என்பதற்கோ வேறு எவ்வித ஆதாரங்களையும் இக்; கோட்பாட்டாளர்கள் முதன்மைப்படுத்தவில்லை. ஆனால் ஆண், பெண் இரு பாலர்களும் குடும்பம், சமூகம், அரசு என்பதன் வளர்ச்சிக்குச் சமமாகப் பங்களிப்புச் செய்துள்ளனர் எனக் கூறுவதே பொருத்தமானதாகும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

11,377 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>