டொனமூர் சீர்திருத்தம் பொது நிர்வாக முறைமையில் ஏற்படுத்திய மாற்றம்

1931ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் சீர்திருத்தம் ஏனைய துறைகளில் ஏற்படுத்திய தீவிர மாற்றம் போன்று நிர்வாக அமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் நூறு வருடங்களாக மாற்றமின்றியிருந்த நிர்வாக ஒழுங்கமைப்பு மாற்றத்துக்குள்ளாகியது. அதாவது நிர்வாக சேவையின் செயற்பாடு, வடிவம், அமைப்பு என்பவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. நிர்வாகக் கட்டமைப்பின் உச்சியில் இவ்வளவு காலமும் இருந்த காலனித்துவ செயலாளருக்குப் பதிலாகப் பத்து அமைச்சர்கள் உருவாக்கப்பட்டனர்.

காலனித்துவச் செயலாளரின் அதிகாரங்கள் இல்லாதொழிக்கப்பட்டு இவ் அதிகாரங்கள் அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஒவ்வொரு அமைச்சும் சுதந்திரமாகச் செயற்பட்டதுடன், அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் விடப்பட்டது. அமைச்சர்களுக்குக் கீழ் நிர்வாக சேவைத் திணைக்களங்கள் உருவாக்கப்பட்டமை பெரும் நிர்வாக வலைப்பின்னலை உருவாக்கியது. பொது நிர்வாகத்தில் ஏற்பட்ட இம் மாற்றம் நிர்வாக உச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், சுதந்திரம் பெறும் வரை இது தொடர்ந்திருந்தது. நிர்வாக உச்சியில் காலனித்துவ செயலாளருக்குப் பதிலாக அமைச்சர்களை அறிமுகப்படுத்தியமையானது இலங்கையின் பொது நிர்வாக அமைப்பில் பின்வரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.

  1. அதிகாரங்கள் புதிய அமைச்சர்களிடம் வழங்கப்பட்டன. இதனால் பொது நிர்வாகத்தின் வடிவமும், அமைப்பும் மாற்றமடைந்ததுடன் அதிக எண்ணிக்கையிலான அரசாங்க பொது நிர்வாகத் திணைக்களங்கள் தோற்றமடைந்தன. பொது நிர்வாகத் திணைக்களங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை இயல்பாகவே அரசின் செயற்பாட்டை விஸ்;தரித்திருந்தது. மறுபக்கத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட ஒன்றுக்;கு மேற்பட்ட பொது நிர்வாகத் திணைக்களங்களையும், அமைச்சர்கள் மேற்பார்வையிடுவது கடினமானதாக இருந்தது.
  2. அமைச்சர்கள் உருவாக்கம் என்பது ஒவ்வொரு அமைச்சின் நிர்வாகசேவைத் திணைக் களத்துக்குள்ளும் அதிகார மையப்படுத்தலை ஏற்படுத்தியது. முக்கியமான தீர்மானங்கள் யாவும் பொது நிர்வாகத் திணைக்களத் தலைமை யகத்தினால் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டன.
  3. பொது நிர்வாக அமைப்பில், திணைக்களங்கள் உருவாக்கப்பட்டமையானது பகுதிகள், பிரிவுகள் உருவாவதற்குக் காரணமாயிருந்தது. அத்துடன் நிலைக்குத்து வடிவிலான பொது நிர்வாகக் கட்டமைப்பு அரைகுறைத் தன்னாட்சியுடன் (Semi-Autonomous) இயங்கும் நிலை உருவாகியது. படிநிலை அமைப்பின் உச்சியில் அமைச்சர்களும், அவர்களுக்குக் கீழ்ப் பல பகுதிகள், பிரிவுகள் உருவாக்கப்பட்டு, இறுதியில் பொது நிர்வாகம் கிராமங்கள் வரை பரந்து விரிந்து சென்றது.

சர்வஜன வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்டு எழுச்சியடைந்த அரசியல் நிறுவனங்கள் ஓரளவு சுய அரசாங்க இயல்பைப் பிரதிபலிக்கின்றவைகளாகக் காணப்பட்டன. இதற்கு ஏற்ப நிர்வாக சேவையின் இயல்புகளும், பங்களிப்புக்களும் பூரணமாக மாற்றிக் கொள்ளப்பட்டன. நிர்வாக சேவையாளர்கள் மக்களிடம் இருந்து தோற்றம் பெறும் அரசியல் அதிகாரத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக மாற்றமடைந்தனர்.

இவ்விடத்தில் நாம் தரரீதியான மாற்றத்தை (Qualitative Change) நிர்வாக சேவையில் அவதானிக்க முடிந்தது. அதாவது, நிர்வாக சேவையானது,காலனித்துவப் பண்பு கொண்ட நிலையில் இருந்து, மக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய நிர்வாக சேவை அமைப்பாகப் புனரமைக்கப்பட்டது. இம்மாற்றம் அரசாங்கச் செயற்பாட்டில் ஒரு திருப்திகரமான நிலையை ஏற்படுத்தியிருந்தது. தேர்தல் தொகுதி மூலம் தெரிவு செய்யப்பட்ட சட்ட சபையானது, சட்டம், ஒழுங்கு, வருமானவரி சேகரிப்பு என்பவற்றில் அதிக கவனம் செலுத்துவதில் இருந்து, விடுபட்டு, மக்களுடைய சமூக, பொருளாதார வளர்ச்சியில் இயல்பாகவே கவனம் செலுத்துகின்ற அமைப்பாக அபிவிருத்தியடைந்தது. நிர்வாக சேவையில் திட்ட அமுலாக்கல் செயற்பாடு மிகவும் தெளிவான ஒன்றாகக் காணப்பட்டது.

நிர்வாக சேவையானது, அரசாங்க சமூக, பொருளாதார நலன்புரித் திட்டங்களை அமுலாக்குகின்ற நிறுவனமாக மட்டும் நின்று கொள்ளாமல், அரசாங்கத்தின் சமூக, பொருளாதார, நலன்புரிக் கொள்கைகளுக்கு ஆலோசனை கூறுகின்ற நிறுவனமாகவும் மாற்றிக் கொள்ளப்பட்டது. இது காலனித்துவ அரசாங்கத்தின் வரி சேகரிப்பு, சட்டம், ஒழுங்கு என்பவைகளைப் பேணுகின்ற நிறுவனம் என்ற பண்பிலிருந்து அபிவிருத்திப் பண்பு கொண்ட அமைப்பாக நிர்வாக சேவை மாறுவதற்கு உதவியிருந்தது. இம்மாற்றமானது நிர்வாக சேவை விஸ்தரிப்பின் அவசியத்தை உணர்த்தியதுடன், இக்காலப்பகுதி நிர்வாக சேவை விஸ்தரிப்புக் காலப்பகுதி எனவும் அழைக்கப்பட்டது.

இவற்றை இலகுபடுத்தும் வகையில் டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ்,1933ஆம் ஆண்டு நிர்வாக சேவை தொடர்பாக ஒரு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இச்சீர்திருத்தம், திறைசேரியை மீள் ஒழுங்கமைப்பது தொடர்பான விடயங்களை உள்ளடக்கியிருந்தது. பிற்காலத்தில் நிர்வாக சேவையானது அபிவிருத்தி அடைவதற்கு இச்சீர்திருத்தம் பெரும் பங்காற்றியிருந்தது.

திறைசேரியில் நிதியும், விநியோகமும் என்று ஒரு பிரிவும், பொதுநிறுவனம் (Establishments), என்று ஒரு பிரிவும் உருவாக்கப்பட்டது. நிதியும்,விநியோகமும் என்ற பிரிவு, களஞ்சியங்களுடன் தொடர்புடைய விடயங்கள், ஒப்பந்தக்காரர்கள், கேள்விப்பத்திரம் (Tenders) போன்ற விடயங்களுக்குப் பொறுப்பாக்கப்பட்டது. நிறுவனக்கிளை ஊதியம், ஓய்வூதியம், விடுமுறை ஒழுங்குகள் போன்ற விடயங்களை நெறிப்படுத்தும் அலகாகத் தொழிற்பட்டது. நிர்வாக சேவையில் திறைசேரியின் கட்டுப்பாடு, அல்லது செல்வாக்கு என்பது தவிர்க்க முடியாத ஓர் இயல்பாகக் காணப்பட்டிருந்தது. திறைசேரியின் கட்டுப்பாடு இல்லாமல் சுதந்;திரமாக இயங்கும்; நிர்வாக சேவையாக இது இருக்கவில்லை.

டொனமூர் சீர்திருத்தம் நிர்வாக சேவையில் இலங்கையர் மயவாக்கம் ஏற்படுவதைத் துரிதப்படுத்தியிருந்தது. இலங்கையின் பொருளாதாரம் அபிவிருத்தியடைய வேண்டுமாயின், காலனித்துவ அரசாங்கத்தின் நிர்வாக சேவையானது இலங்கையர்களை முழுஅளவில் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலுப் பெறலாயிற்று. இலங்கையர்மயவாக்கம் என்ற சிந்தனையை உள்வாங்கி நிர்வாக சேவையை நோக்குகின்றபோது, இலங்கையர்கள் கொள்கை உருவாக்கம் மீது ஏற்கனவே பாரிய கட்டுப்பாட்டினைக் கொண்டிருந்தமை புலனாகும்.

உண்மையில் இலங்கையர்மயவாக்கக் கொள்கையானது இலங்கையர்கள் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்ற ஒரு செய்முறையாகக் காணப்பட்டது. தேசிய நிர்வாக சேவையின் எழுச்சிக்கு இது மிகவும் அவசியம் என்பது உணரப்பட்டது. இவ்வுணர்வானது ஏற்கனவே ஆங்கிலம் கற்ற சிறியளவிலான உயர்குழாமிலிருந்து எழுச்சியடைவதாகவும் இருந்தது. இதன் விளைவாக 1934ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் 68.1% மகா இருந்த இலங்கையர்களுடைய எண்ணிக்கை 1939 ஆம் ஆண்டு 78 % மாக உயர்ந்திருந்தது எனப் பேராசிரியர் விஸ்வவர்ணபால குறிப்பிடுகின்றார்.

டொனமூர் அரசியல் திட்டம் “பொதுச்சேவைகள் ஆணைக்குழு” ஒன்றை உருவாக்கியது. இவ்வமைப்பானது நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் நியமனம், பதவியுயர்வு, மாற்றம், நீக்கம், ஒழுக்கக்கட்டுப்பாடு என்பவற்றிற்குப் பொறுப்பாக இருந்தது. மேலும் ஆளுநருக்கு இவ்விடயங்கள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கும் நிரந்தர அமைப்பாகவும் இது செயற்படும் என அரசியல் திட்டம் கூறியது.

உண்மையில் டொனமூர் உருவாக்கிய நிர்வாகக்குழுமுறையுடன் தனது செயற்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்ற ஓர் அமைப்பாகவே பொதுச்சேவை ஆணைக்குழு காணப்பட்டிருந்தது. டொனமூர் சீர்திருத்தம் அரசாங்க அதிபரிடம் விடப்பட்டிருந்த மாகாண நிர்வாகத்தை மீளப் பெற்றிருந்தது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் திணைக்களங்களுக்குத் தலைவர்களாக்கப்பட்டு, அவற்றின் செயற்பாடுகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனால் ஒவ்வொரு அமைச்சர்களும் தமக்குரிய நிர்வாகத் திணைக்களத்தின் செயற்பாடுகளைத் தாமே நெறிப்படுத்தினர். இதற்காக அரசாங்க அதிபர் பயன்படுத்தப்பட்டிருந்தார். அரசாங்க அதிபர் உள்விவகார அமைச்சினால் (Home Affairs) நெறிப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டிருந்தார்.

1931ஆம் ஆண்டுக்கும் 1946ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டகாலத்துக்குள் அரசாங்க அதிபர் நிர்வாகத் திணைக்களங்களை இணைக்கின்ற இணைப்பாளராக மாற்றப்பட்டார். இவருடைய இணைப்புக்கடமையானது மாகாண மட்டத்திலிருந்து, மாவட்ட மட்டத்துக்கு மாற்றப்பட்டது. முன்னர் அரசாங்க அதிபரால் மேற்கொள்ளப்பட்ட கடமைகள் யாவும் தற்போது நிர்வாகத் திணைக்களத் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டது.இதனால் அரசாங்க அதிபரின் கடமைகளும் பொறுப்புக்களும் குறைக்கப்பட்டதுடன் இவர் தனித்து இணைப்பாளராக மட்டுமே செயற்பட்டார்.

அமைச்சரவை முறை அறிமுகப்படுத்தப்பட்டுத் திணைக்களங்கள் உருவாக்கப்பட்டமை அதிகளவு துணை நிர்வாகப்பிரிவுகள் உருவாக்கப்படுவதற்குக் காரணமாயிருந்தது. டொனமூர் சீர்திருத்தம் நிலைக்குத்து வடிவிலான நிர்வாக அமைப்பினைத் தோற்றுவித்ததினால் திணைக்களங்களும், துணை நிர்வாகப் பிரிவுகளும் தமது தலைமையகங்களைக் கச்சேரிகளில் நிறுவிச் செயற்படத் தொடங்கின. ஒவ்வொரு பாரிய திணைக்களங்களும் தமக்குத் தேவையான மேலதிகக் கிளைகளை அல்லது பகுதிகளை கச்சேரிகளில் நிறுவிச் செயற்பட்டன. இக்காலத்தில் ஒவ்வொரு திணைக்களங்களும் தமக்கான கிளைகளை ஒவ்வொரு பிராந்தியங்களிலும் கொண்டிருந்தன.

இவ்வகையில், 1939 ஆம் ஆண்டு அளவைத் திணைக்களம் ஏழு பிராந்திய அலுவலகங்களையும், பொதுச் வேலைத் திணைக்களம் ஒன்பது பிராந்திய அலுவலகங்களையும், காட்டுத்திணைக்களம் நான்கு பிராந்திய அலுவலகங்களையும், நீர்ப்பாசனத் திணைக்களம் ஆறு பிராந்திய அலுவலகங்களையும், கல்வித் திணைக்களம் நான்கு பிராந்திய அலுவலகங்களையும், சுகாதாரத்திணைக்களம் ஒன்பது பிராந்திய அலுவலகங்களையும் கொண்டிருந்தன. இவைகள் தேவைப்படும் போது மாவட்டமட்டத்தில் மேலும் பல உப பிரிவுகளை உருவாக்கிக் கொண்டன. உதாரணமாக பொது வேலைத் திணைக்களம் முப்பத்து நான்கு உப பிரிவுகளைக் கொண்டிருந்தது. உள்ளுராட்சித் திணைக்களம் 1946ஆம் ஆண்டு தனக்கான பிராந்திய திணைக்களங்களை உருவாக்கிக் கொண்டது. இதன் அதிகாரங்களை இவ்வளவு காலமும் அனுபவித்து வந்த அரசாங்க அதிபர், இவ்வாண்டில் அதனை உள்ளுராட்சி உதவி ஆணையாளரிடம் ஒப்படைத்தார்.

உண்மையில் மாகாண மட்ட நிர்வாகத்தில் ஏற்பட்ட இம்மாற்றமானது அபிவிருத்திச் செயற்பாட்டுக்கான ஒழுங்கமைப்பில் சிறப்பான ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்தது. இதுவரைகாலமும் ‘நிர்வாக இணைப்பு” என்பதில் காணப்பட்டு வந்த சிக்கல் என்பது இதன் மூலம் தீர்த்து வைக்கப்பட்டது. மேலும் நிர்வாக ஒழுங்கமைப்பு முறைமையானது புதியதொரு வடிவத்தைப் பெறக்கூடியதாகவும் இருந்தது. மையவாக்க நிர்வாக அமைப்புக்குள் பிரமிட் வடிவிலான அல்லது படிநிலை அமைப்பிலான நிர்வாகப் பரவலாக்க வடிவத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.

தேசிய நிர்வாக சேவையின் உறுதியான வளர்ச்சியையும், விஸ்தரிப்பினையும் சோல்பரி அரசியல் திட்டத்தின் பின்னரே அவதானிக்க முடிந்தது. அதாவது, 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதுடன் தேசிய நிர்வாக சேவையின் சகாப்தம் என்பதும் எழுச்சியடையலாயிற்று. சுதந்திர அரசாங்கத்தைப் பொறுத்த வரை அரசியல் அதிகாரத்தைப் பொறுப்பேற்பதுடன், பொருளாதார முகாமைத்துவப் பொறுப்பையும், சமூக நல உயர்வுக்கான பொறுப்பையும் ஏற்க வேண்டியிருந்தது.

மக்கள் ஆதரவுடன் தெரிவுசெய்யப்படும் ஓர் அரசாங்கத்துக்கான இப்பொறுப்புகள் யாவும் பொதுச் சேவையினாலேயே நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது. இது நிர்வாக் சேவையின் கடமையைத் தார்மீகத் தன்மை பொருந்திய ஒன்றாக ஆக்கியதுடன், இலங்கையின் பொதுநிர்வாக அபிவிருத்தியின் புதிய பாதைக்கான அரசியல் சூழ்நிலை ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. புதிய அரசாங்கம் சமூக,பொருளாதார விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. குறிப்பாகக் காலனித்துவப் பண்பில் வளர்ச்சியடைந்த பொருளாதார அமைப்பினைத் தேசிய பொருளாதாரப் பண்பில் வளர்த்தெடுக்க வேண்டியிருந்தது. இது எவ்வித சந்தேகமுமின்றி சமூக, பொருளாதார அபிவிருத்தியையும், நலன்புரித் திட்டங்களையும் செயற்படுத்தும் பாரிய பொறுப்பினைச் நிர்வாக சேவைக்கு வழங்கியது. தேசத்தினைக் கட்டியெழுப்புவதில் நிர்வாக சேவையின் பங்கு உயர்ந்ததாக மதிப்பிடப்பட்டது.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

11,377 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>