சமாதானம், சுயகௌரவம், நீதியுடன் வாழும் சூழல் உருவாக வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.10.05, 2013.10.06 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002இலங்கையின் இனமோதலுக்கான மூலகாரணங்களைக் கண்டுபிடித்து அதற்குப் பெருத்தமான அரசியல் தீர்வினைக் உருவாக்குவதில் எல்லாத் தரப்பும் இன்றுவரை தோல்வியடைந்திருந்தாலும், குறைந்தபட்ச அதிகாரத்தினைக் கொண்டு இயங்கும் ஏனைய மாகாண சபைகளைப் போன்று வடமாகாணசபையும் இயங்குவதற்கான ஆணையினைத் தேர்தல் மூலம் மக்கள் வழங்கியுள்ளார்கள். உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தல் முப்பது வருடங்களாக தொடரும் இலங்கையின் இனமோதலுக்கான அரசியல் தீர்வினை முன்னோக்கித் தள்ளுவதற்கான முக்கியமானதொரு தேர்தலாக தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் கருதப்படுகின்றது. ஆயினும் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நல்லிணக்கத்தினை உருவாக்குவதில் பொறுப்புடன் செயற்பட வேண்டிய சர்வதேச சமுதாயம் அதிகாரப்பகிர்வு மூலமான நல்லிணக்கத்தினை இலங்கையில் உருவாக்குவதில் தொடர்ந்தும் தோல்விடைந்தே வருகின்றது.

அபிவிருத்தி அலை

இத்தேர்தலுக்காகச் சர்வதேச நாடுகளிடமிருந்து பாரியளவிலான கடன்களைப் பெற்று வட மாகாண மக்களிற்கான பொருளாதார அபிவிருத்திகளை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் பல அரசாங்கத் தலைவர்கள் வடமாகாணம் சென்று தொழிலற்ற இளைஞர்கள், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கவுள்ளதாக வாக்குறுதிகளை வழங்கினார்கள்.அரசாங்க தேர்தல் வேட்பாளர்கள் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்குத் தமக்குள்ள திறனை வெளிப்படுத்தும் விளம்பரங்களை பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தனர்.

வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கிளிநொச்சி வரையிலான தொடர் பேரூந்து (புகையிரத சேவை) சேவை ஆரம்பிக்கப்பட்டதுடன், உத்தியோகபூர்வமாக கிளிநொச்சி தொடர் பேரூந்து நிலையமும் திறந்து வைக்கப்பட்டது.ஆயினும், அரசியல் உரிமைகளுக்கு மேலாக எதனையும் தாம் எதிர்பார்க்கவில்லை என்பதை வடமாகாணசபைத் தேர்தல் மூலம் மக்கள் அரசாங்கத்திற்கும் , உலகத்திற்கும் அறிவித்துள்ளார்கள். இதன்மூலம் யுத்தவலயமாக இருந்த வடமாகாணம் தொடர்பாக கணிப்பிடப்பட்டிருந்த தவறான மதிப்பீடுகளுக்கு வடமாகாணசபைத் தேர்தல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இலங்கையின் இனமோதலின் வரலாறு முழுவதிலும் பதவிக்கு வரும் அரசாங்கங்களும்,தமிழ் அரசியல் வாதிகளும் தேசியவாத உணர்வுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த மாகாணசபைத் தேர்தல்களிலும் மக்களிடமிருந்து வாக்குகளைச் சேகரிப்பதற்கு மனவேற்றுமைகளைத் தூண்டும் இனவழித் தேசியவாதத்தினை அரசியல் வாதிகள் அனைவரும் பயன்படுத்தியுள்ளனர். நாட்டின் அமைதி,சமாதானம் என்வற்றிற்கான விலை இதனூடாகவே இதுவரைகாலமும் கொடுக்கப்பட்டது.

இணைந்து பணியாற்றுதல்

தேர்தல்காலம் முழுவதும் பயன்படுத்தப்பட்டுவந்த இருமுனை தேசியவாத உணர்வுகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. இந்நிலையில் இனமோதலுடன் தொடர்புடைய எல்லாத் தரப்பினரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கான தமது விருப்பத்தினையும், தேவையினையும் வலியுறுத்தி வருகின்றனர். கெஹலிய ரம்புக்வெல “தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தவேண்டும். சுயாட்சி வழங்கமுடியாது.தேவைப்பட்டால் அரசியலமைப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார். வாசுதேவநாணயக்காரா “இலங்கை அரசாங்கம் பலகோடி ரூபாக்களை செலவழித்து வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொண்டபோதும்,தமிழ்மக்களின் இன உணர்வுகளை தடுக்கமுடியவில்லை. தமிழ் தேசிக்கூட்டமைப்பினைத் தனது பங்காளர்களாக இணைத்துக் கொண்டு வடக்கின் அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும். வடமாகாணசபையுடன் ஒத்துழைக்கக்கூடிய ஆளுனர் ஒருவரை அரசாங்கம் நியமனம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ரில்வின் சில்வா “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டது’ எனத் தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ச மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளது.மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க “நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலமாக தீர்வுகாண்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் ஜாதிக ஹெல உறுமய தயாராகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரி.ஹஷன் அலி பிராந்திய ரீதியான அதிகாரம் தேவை என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர்.இதனை இலங்கை அரசாங்கம் புரிந்து கொண்டு சட்டரீதியான அதிகாரங்களை வடமாகாண சபைக்கு வழங்குவதுடன் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பதின்மூன்றாவது அரசியல் யாப்பு திருத்தம் மாகாணசபைகளுக்கு வழங்கிய அதிகாரங்கள் அனைத்தும் வடமாகாண சபைக்கு வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இன மோதலுடன் தொடர்புடைய எல்லாத் தரப்பினரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கான தமது விருப்பத்தினையும், தேவையினையும் சர்வதேச நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் “பலவருடகால மோதலின் பின்னர் தேசிய நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு இந்த தேர்தல் குறிப்பிடத்தக்கதொரு முன்னேற்றமாகும்.இலங்கை தனது தேசிய ஒருமைப்பாட்டுடன் கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இலக்கை அடைவதற்கு ஜப்பான் தனது ஆதரவை வழங்கும்” எனத் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் தெற்காசிய விவகாராங்களுக்கான பிரதிநிதி ஜுன் லம்பார்ட் “வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி தேசிய அரசாங்கத்திற்கும்,கூட்டமைப்பிற்கும் இடையில் நம்பிக்கை மற்றும் தேசிய நல்லணக்கச் செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளது.அரசியல் அமைப்புக் கட்டமைப்புக்குள் தேசிய மற்றும் மாகாண ஆட்சியாளர்கள் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் “நல்லிணக்கம் தொடர்பாக இலங்கை அரசாங்கமும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வெளியிட்டுள்ள அறிக்கை நம்பிக்கை தருகிறது.எனவே ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் சமமான உரிமைகளுடன் வாழவேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் அனைவரும் செயற்பட வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் பசாகி “2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வட மாகாண சபைக்கு முதல் முறையாக நடைபெற்றுள்ள இத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.மாகாணங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய தலைமைத்துவத்திற்கு ஆதரவாக செயற்பட இலங்கை அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.குறிப்பாக பரந்தளவிலான நல்லிணக்க நடவடிக்கைகளை விரிவாக்கிக் கொள்வதற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாண சபையுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.

முன்னுதாரணமற்ற நிலை

ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் மற்றும் யாப்பு ரீதியான அதிகாரங்களை மக்கள் அனைவரும் பெற்று ஒன்றாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவினை அரசாங்கம் உருவாக்கியுள்ளதுடன்,தமிழ்தேசியக் கூட்டமைப்பினை இதில் இணைந்து பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்து வருகிறது.

ஆயினும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த சிபார்சுகளை நடைமுறைப்படுத்தி வருவதாக இலங்கை அரசாங்கம் கூறினாலும்ää முக்கியமான சிபார்சுகளாகிய காணி,மனித உரிமைகள், நல்லாட்சி, நல்லிணக்கம், மற்றும் பொறுப்புக் கூறுதல் போன்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தாமதம் காட்டுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் இலக்கம் 9.185 நீண்டகாலம் தீர்க்கப்படாமல் தமதமாகி வரும் இலங்கையின் இனமோதலுக்கு அரசியல் தீர்வு காணுமாறு மோதலுடன் தொடர்புடையவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின சிபார்சு இலக்கம் 9.142 காணி விடயங்கள் தொடர்பாக கூறுகின்றது. உயர்பாதுகாப்பு வலயங்கள், இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் என்பவற்றால் காணிகளை இழந்த மக்களுக்கு பொருத்தமானவகையில் நஸ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தும், அரசாங்கம் இதற்குப் பொருத்தமான நடவடிக்கைகள் எதனையும் இதுவரை எடுக்கவில்லை.

மேலும் இலங்கை அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இவ்விடயங்கள் தொடர்பாகக் கலந்தாலோசித்து ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எதனையும் நிறைவேற்றவில்லை. ஆனால் அண்மைக்காலமாக அதிகாரப்பரவலாக்கம் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்குப் பதிலாக மாகாண சபைகளுக்கு பதின்மூன்றாவது அரசியல் யாப்பு திருத்தம் மூலம் வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை குறைப்பது தொடர்பாக அரசாங்கம் விவாதித்து வந்தது.

தமிழகம் செய்ய வேண்டியது

வடமாகாணசபையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் மூலம் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னரும் இன மோதலைத் தூண்டக் கூடிய கருத்துக்களைப் பலர் கூறி வருகின்றார்கள்.சிலர் இத்தேர்தல் மூலம் தமிழீழம் அமைந்துவிடும் எனவும், வேறுசிலர் இத் தேர்தல் தமிழீழத்திற்கான முன்னோக்கிய பாச்சல் எனவும் பல கருத்துக்களைக் கூறுகின்றனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில் வடமாகாண சபை முதலமைச்சர் “இலங்கை அரசாங்கத்துடன் தாம் இணைந்து பணியாற்றவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தமிழீழத்திற்கு ஆதரவாக தமிழகத்திலிருந்து முன்வைக்கப்படும் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களுக்கும், போராட்டங்களுக்கும், விழிப்புணர்வுக் கூட்டங்களுக்கும் வடமாகாண சபை முதலமைச்சர் பொருத்தமான பதிலை பின்வருமாறு வழங்கியுள்ளார். ”தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையினை வைத்துப் பந்தாடுகின்றன. இதனால் விழும் அடி எங்களுக்குத்தான். தமிழீழம் மட்டுமே தீர்வு என்று தமிழக அரசியல் கட்சிகள் பேசும் போது இங்குள்ள எங்களை இலங்கையின் பெரும்பான்மையினரும்,அரசும் அச்சத்துடன் பார்க்கின்றார்கள்.எங்கள் பிரச்சினைக்கான தீர்வு எங்களிடம் தான் உள்ளது”.

உண்மையில் இலங்கையில் தனியரசு உருவாக்கப்படுவது தனது பாதுகாப்பிற்கும், பிராந்திய நலன்களுக்கும் ஆபத்தானது எனக் கருதும் பிரதான நாடு இந்தியாதான் என்பதையும், இந்தியாவிற்குள்ள பிராந்திய அரசியல் காட்சிநிலைகளையும் தமிழக அரசியல் தலைவர்கள் பல சந்தர்பங்களில் வசதியாக மறந்துவிடுகிறார்கள். உண்மையில் தமிழக அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ்மக்களுக்;கு உதவி செய்ய விரும்பினால் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்விற்குப் பொருத்தமான அழுத்தங்களை இந்திய அரசாங்கத்தினூடாக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க முன்வரவேண்டும்.இதுவே காலத்தின் தேவையுமாகும்.

கிழக்கு மாகாண மக்களின் பொறுப்பு

2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத் தொகையில் தமிழ்மக்கள் 39.79 சதவீதமாகவும், முஸ்லீம் மக்கள் 36.72 சதவீதமாகவும், சிங்களமக்கள் 23.15 சதவீதமாகவும், ஏனையவர்கள் 0.34 சதவிதமாகவும் உள்ளனர். இந்நிலையிலும் வடமாகாணமக்கள் போன்று கிழக்கு மாகாணத் தமிழ் மக்களும் தமது அரசியல் அறிவுப் பகிர்வினை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மூலம் அரசாங்கத்திற்கும், உலகத்திற்கும் வெளிப்படுத்தியிருந்தார்கள். உண்மையில் பொருளாதார அபிவிருத்தியை விட அரசியல் உரிமைகள் தான் தமக்கும் முதன்மையானது என்பதை கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் முடிந்தவரை வெளிப்படுத்தியிருந்தனர். எனவே நடைபெற்ற இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்களில் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பொருளாதார அபிவிருத்தியை விட அரசியல் உரிமைகளுக்கே முன்னுரிமை வழங்கியுள்ளார்கள் எனக் கூறலாம்.

இறுதியாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 37 ஆசனங்களில் 11 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும்,12 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், 07 ஆசனங்களை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ்சும், ஐக்கிய தேசியக் கட்சி 04 ஆசனங்களையும், தேசிய சுதந்திர முன்னணி 01 ஆசனத்தையும் பெற்றுக் கொண்டது.

முஸ்லீம் அரசியல் தலைவர்கள் மூன்று வௌ;வேறு அரசியல் கட்சிகள் சார்பாக இத் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 07 முஸ்லீம் பிரதிநிதிகளும்,ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 01 முஸ்லீம் பிரதிநிதியும், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் 07 முஸ்லீம் பிரதிநிதியும் வெற்றி பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால் 15 பிரதிநிதிகளைக் கிழக்கு மாகாண சபையில் பெற்றிருக்க முடியும்.

கிழக்கு மாகாணத்தில் தனித்தவமானதொரு அரசியல் தளத்தினைப் பெற்றுள்ள முஸ்லிம் மக்கள் அரசியல் தலைவர்களின் சுயலாபம் கருதிய பெருளாதார அபிலாசைகளுக்கான செயற்பாடுகளால் தமது பலம்மிக்க அரசியல் தளத்தினை இழந்த வருகின்றார்கள். “மன்னர் காலத்திலிருந்தே ஆட்சியாளர்களுடன் இணைந்து சலுகைகள் பெறும் அடையாளச் சமூகமாக முஸ்லிம் மக்கள் வளர்ந்தவர்கள்” என சிலர் வெளிப்படையாக கூறியும் வருகிறார்கள். இவ்வாறானவர்கள், முஸ்லிம் மக்கள் பலமானதும், தனித்துவமானதுமான அரசியல் சக்தியாக வளர்ந்தால், தமது சுய பொருளாதார அபிலாசைகளுக்காக ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுக்கும் அரசியலுக்கு ஆபத்தாகிவிடும் என அஞ்சுகின்றார்கள்.

கிழக்கு மாகாண முஸ்லீம் மக்கள் தமது அடையாள கூர்மைப்படுத்தலுக்கு அப்பால், தாம் இலங்கையில் வாழும் பிறிதொரு சிறுபான்மைச் சமூகம் என்பதை மறந்த விடக் கூடாது. கிழக்குமாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களுடன் பல விடயங்களில் இரண்டறக்கலந்து நட்புறவுடன் வாழும் முஸ்லீம் மக்கள் தமிழ் மக்களுடன் இணைந்து தாம் பெற்றக் கொள்ளக் கூடிய அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பம் இப்போது உருவாகியுள்ளது.

தமிழ் மக்கள் இப்போது தனியரசு கேட்கவில்லை. இதற்காக இப்போது ஆயுதமும் ஏந்தவில்லை. ஆகக்குறைந்தது நடைமுறையிலிருக்கும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக வழங்கும்படி ஜனநாயக வழிமுறையில் தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் கேட்கின்றார்கள். தற்போது மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஜனநாயக வழிமுறைகளில் தமிழ் தலைவர்கள் செயற்படத் தொடங்கியுள்ளார்கள்.

எனவே கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களும்,முஸ்லீம் மக்களும் ஒன்றிணைந்து மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக வழங்கும்படி கோருவதற்காக கிழக்கு மாகாணசபையினை தமது அதிகாரத்தின் கீழ் கொண்ட வர வேண்டும். அதற்கான சட்டரீதியான இடம் தற்போதுள்ள கிழக்கு மாகாணசபைச் சூழலில் உள்ளது. எனவே சிறுபான்மையினத்தவர்கள் என்ற அடிப்படையில் மாகாணசபைக்குரிய அதிகாரங்களை தமிழ் மக்களும்ää முஸ்லீம் மக்களும் முழுமையாகப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இதற்காக கிழக்கு மாகாண தமிழ், முஸ்லீம் மக்கள்; வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட வேண்டும் என தற்போது யாரும் எதிர்பார்க்கவோ அல்லது வடக்கு,கிழக்கு மாகாணங்களின் இணைப்பினை முன்நிபந்தனையாக விதிக்கவோ கூடாது. அவ்வாறு எதிர்பார்ப்பது அல்லது முன்நிபந்தனை விதிப்பது சிறந்த அரசியல் சாணக்கியம் அல்ல. தற்போதுள்ள இலங்கையின் அரசியல் காட்சி நிலையிலும், சர்வதேச அரசியல் காட்சிநிலையிலும்; இரண்டு மாகாணங்களும் தனித்து இயங்குவதே பொருத்தமானதும், சாணக்கியமானதமாகும். சிறுபான்மை சமூகங்களுக்கு இரண்டு மாகாண சபைகள், இரண்டு முதலமைச்சர்கள் வருவது தவறானதல்ல. மிகவும் பாதுகாப்பானது, சாணக்கியமிக்கது. இணைப்பு என்பதை விட சிறந்த அதிகாரப் பகிர்வே இன்றைய தேவையாகும்.

இதற்காக தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புடனும் பேச்சுவார்தையில் ஈடுபட வேண்டும். கிழக்கு மாகாணசபையில் கூட்டு அரசாங்கம் உருவாக்கப்பட்டால் முதலமைச்சர் பதவியை இரண்டு வருடத்திற்கு முஸ்லீம் தலைவர்களுக்கு விட்டுத்தர தமிழ் தலைவர்கள் ஏற்கனவே தயாராக இருந்துள்ளார்கள். எனவே கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான தருணம் இதுவாகும்.

மாகாணசபை முறைமை பலப்படுத்தப்படல் வேண்டுமா? என்ற விவாதம் அவசியமற்றதாகும். பதின்மூன்றாவது அரசியல்யாப்புத் திருத்தத்தின் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் ஒருபகுதியாகிய காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் உட்பட மேலதிகமான அதிகாரங்களும்,வளங்களும் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டும். இதனை மாகாணசபைகள் பெற்றுக் கொள்வதற்கு மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியமானதாகும். “தேர்தல் நடைபெற்றால் ஜனநாயகம் நாட்டில் உள்ளது” என மிகவும் இலகுவாக யாராலும் கூறிவிடமுடியாது. உண்மையில் இலங்கையில் வாழுகின்ற எல்லா சமுதாயங்களும் சமாதானமாகவும், சுயகௌரவத்துடனும், நீதியுடனும் வாழ்வதற்குரிய சமூகஜனநாயகச் சூழலுக்குரிய உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். இதனை இனமோதலுடன் தொடர்புடைய எல்லாத் தரப்பும் நன்கு விளங்கிக் கொண்டு சமாதானம், சுயகௌரவத்துடனான வாழ்க்கைச் சூழலை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

11,377 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>