சமாதானக் கற்கை

மோதல் என்ற எண்ணக்கரு சமாதானம் பற்றிய ஆய்வாளர்கள், சமூக விஞ்ஞானிகள் ஆகியோர்களது தொடர்ந்தேச்சியான ஆய்வுகளுக்கு மத்தியிலும் விளக்கமுடியாத எண்ணக்கருவாகவே வளர்ந்து வந்துள்ளது. 1950களின் தசாப்தங்களிலும், 1960களின் தசாப்தங்களிலும் சமாதானம் பற்றிய ஆய்வுகளுக்கு மோதல்க் கோட்பாடே மையமாக இருந்தது. 1980களின் தசாப்தத்தில் மோதல்க் கோட்பாட்டினைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும், மோதல், சமாதானம் பற்றிய ஆய்வுகள் மாக்கியவல்லியின் சித்தாந்தத்துடன் ஆரம்பமாகியதுடன் முதலாம், இரண்டாம் மகாயுத்தங்களும், அதன் பின்னரான வியட்நாம் யுத்தமும் மோதல், சமாதானம், பற்றிய ஆய்வுகளுக்குப் பெரும் பங்காற்றியிருந்தன எனலாம்.

மாக்கியவல்லி போர், வன்முறை, அதிகாரம் ஆகிய எண்ணக்கருக்கள் தொடர்பான ஐரோப்பிய சிந்தனைகளைத் தெளிவுபடுத்துகின்றார். போர், சமாதானம் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட பலர் மாக்கியவல்லியின் கருத்துக்களுடன் வாதப்பிரதிவாதங்களை மேற்கொண்டு வந்துள்ளனர். மாக்கியவல்லியின் ‘இளவரசன்” என்ற நூல் வன்முறை பற்றித் தெளிவாகக் கூறுகின்றது. ஆனாலும், வன்முறையானது அதிகாரப் போராட்டத்தில் வெற்றியடைவதற்கான கருவியாக மட்டுமே விபரிக்கப்படுகின்றது. ஒரு தலைவன் எவ்வாறு அதிகாரத்தினைப் பெற்று, அதைப் பராமரிக்கலாம் என்பதற்குப் பல உதாரணங்களை “இளவரசன்” என்ற நூலில் மாக்கியவல்லி விபரிக்கின்றார். இந்நூல் இத்தாலியை ஒற்றுமைப்படுத்தக்கூடிய பலமான இளவரசனை முதன்மைப்படுத்தியது. மாக்கியவல்லி உலகத்தினைப் பின்வரும் எடுகோள்களினால் விபரிக்கின்றார்.

  1. வன்முறை எங்கும் உள்ளது.
  2. ஆதிகாலத்தில் ஆட்சி செய்வதற்கான கருவியாக வன்முறையே பயன்பட்டது.
  3. அரசியல் அதிகாரத்திற்கான இறுதி மூலம் வன்முறையாகும்.
  4. மோதல்கள் அதிகாரத்தினாலும், வன்முறையாலும் தீர்மானிக்கப்படுகின்றன.
  5. அரசும், அரசாங்கமுமே அடிப்படையில் முக்கியமான நடிகர்கள்.
  6. ஒரு அரசு ஏனைய அரசுகளைப் பொறுத்துச் சுதந்திரமானது.

மோதல் பற்றிய ஆய்வில் முதலாம் உலகப் போரின் முக்கியத்துவம்:-

ஐரோப்பியச் சிந்தனையிலும், அரசியல் நடைமுறைகளிலும் மாக்கியவல்லி விபரிக்கும் மோதல் பற்றிய எண்ணக்கருக்களும், எடுகோள்களும் முதலாம் உலகப்போர் வரை ஆக்கிரமிப்புச் செலுத்தியிருந்தன. உதாரணமாக “வன்முறை தவிர்க்க முடியாதது” என்ற கருத்தைக் கூறிக்கொள்ளலாம். போர் பற்றிய மரபுரீதியான சிந்தனையின் தேவையினை இது வெளிப்படுத்தியது.

முதலாம் உலகப் போர் உலக நாடுகள் மீது ஏற்படுத்திய தாக்கம், பல சமாதான முயற்சிகளை உலகம் சந்திக்கக் காரணமாகியது. யுத்தமுறைமைகள், யுத்தத்திற்கான காரணங்கள் பற்றிய ஆய்வுகள் முறைப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்தது. சர்வதேச சங்கம், சர்வதேசச் சட்டம் என்பன சமாதானத்திற்கான பாதைகளாகக் கருதப்பட்டன. எதையும் முழுமையாகப் புலன் விசாரணை செய்யும் முறையும், அவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இப்பண்புகள் இன்றுவரை தொடர்கின்றன. முதலாம் உலகப் போரின் பின்னர் யுத்தம், சமாதானம் பற்றிய ஆய்வுகளைப் பலர் மேற்கொண்டிருந்தனர். இவர்களில் பின்வருவோர் குறிப்பிடத்தக்கவர்களாகும்.

சொரக்கின் கூறும் மோதல் பற்றிய கருத்துக்கள்:-

சொரக்கின் இரஸ்சியாவைச் சேர்ந்த சமூகவியலாளராகும். இவர் வாழ்ந்த காலம் சார் மன்னனின் கொடுங்கோண்மை அட்சி நிலவிய காலமாகும். இரஸ்சியப் புரட்சிக்குப் பின்னர் 1922ஆம் ஆண்டில் சொரக்கின் நாடு கடத்தப்பட்டார். இதனால், தனக்குரிய வாழ்விடமாக ஐக்கிய அமெரிக்காவினைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதுடன் அங்கு சமூகவியல் துறையில் பேராசிரியர் பதவியையும் பெற்றுக்கொண்டார். ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த காலத்தில் ஏறக்குறைய முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருந்தார். இவர் எழுதிய நூல்களுள் 1925 ஆம் ஆண்டில் வெளிவந்த புரட்சியின் சமூகவியல் (The Sociology of Revolution) என்ற நூலிலும், 1928ஆம் ஆண்டு வெளிவந்த சமகால சமூகவியல் கோட்பாடுகள் (The Contemporary Sociological Theories) என்ற நூலிலும் சமூகவியலுடன் யுத்தத்தினைத் தொடர்புபடுத்தி எழுதியிருந்தார். இவர் யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களைப் பின்வருமாறு விளக்குகின்றார்.“சமூகம் ஒரு காலகட்டத்திலிருந்து அடுத்த காலகட்டத்திற்கு மாறும் போது உள்நாட்டில் குழப்பநிலை ஏற்படுகின்றது. இதனால் குழப்பமுடைய வேறுபட்ட பல சமனிலைகள் ஏற்படுகின்றன. இதுவே யுத்தம் உச்சநிலையினை அடைவதற்குக் காரணமாகும்” எனக்கூறுகின்றார்.

எல்லா சமுதாயங்களும் மாற்றத்திற்குள்ளாகின்றன. அரசுகள் சட்ட சபைகளுக்கூடாகப் புதிய சட்டங்களை உருவாக்குகின்றன. இவற்றினை விடச் சட்ட சபைகளூடாகப் புதிய ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. மேலும், நீதித்துறைச் சட்டங்களுக்கு புதிய வியாக்கியானங்களை அல்லது அரசியல் யாப்புத் திருத்தங்களை மேற்கொள்கின்றன. இவ் ஒழுங்குபடுத்தல்கள் போதுமானதாக இல்லாவிட்டாலும், அங்கீகரிக்கப்பட்ட சட்டங்களுக்கும், அங்கீகரிக்கப்படாத சட்டங்களுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துச் செல்கின்றன. இது ஒன்றுக்கொன்று ஒத்துவராத, கடும் மோதல் கொண்ட இரண்டு பகுதிகள் அல்லது குழுக்கள் உருவாவதற்குக் காரணமாகலாம். ஒரு பகுதிக் குழுக்கள் அங்கீகரிக்கப்பட்ட அல்லது உத்தியோகபூர்வச் சட்டங்களை ஆதரிக்க, மறு பகுதிக் குழுக்கள் வழக்கொழிந்து போன, நீதிக்குப் புறம்பான, சுரண்டுகின்ற சட்டங்களாக இவைகளை உணருகின்றன. இறுதியில், சமூகச் சமநிலையினைப் பேணுவதற்காக மேற்கொள்ளப்பட்டுவந்த ஒழுங்கமைப்பு உறவுமுறை சிதைவடைந்து விடுகின்றது. மிகவும் தெளிவான சமூக விழுமியங்களும், பாரம்பரியங்களும் குழப்பமடைகின்றன. இதனால் சமூக ஒழுங்குகளும், சமாதானமும் இல்லாது போய்விடுகின்றது. இதன் பெறுபேறே மோதலாகும். இதன் அடிப்படையிலேயே 1930களின் தசாப்தங்களில் யுத்தத்தின் வரலாற்றுப்போக்கு உள்நாட்டுக் குழப்பங்களைத் தீர்மானித்தது என சொரொக்கின் கூறுகின்றார்.

இவர், மோதலின் முக்கியத்துவம், வியாபகம், காலம், தீவிரம் என்பவைகளின் அளவுகளை எடுத்துக்கூறுகின்றார். மோதலில் பின்வரும் அளவுகள் இருப்பதாக சொரொக்கின் கூறுகின்றார்.

  1. மேல் நோக்கிச் செல்லுதல் அல்லது கீழ் நோக்கிச் செல்லுதல் கால அடிப்படையில் நடைபெறுவதில்லை. அல்லது யுத்தம் அல்லது உள்நாட்டுக் குழப்பங்கள் தொடர்ந்திருப்பதில்லை. இது காலங்கள் ஏற்ற இறக்கங்களாக உள்ளதை எடுத்துக் காட்டுகின்றது.
  2. யுத்தம், உள்நாட்டுக் குழப்பங்கள் எல்லா சமுதாயங்களிலும் நிகழ்கின்றது. கண்களால் கண்டு உணரக்கூடிய கலரசாரங்கள். உருவகப்படுத்திப் பார்க்கக்கூடிய உயர் கலாசார முறைமைகள் துன்பங்களை அல்லது சமாதானத்தினை ஏற்படுத்துகின்றன.
  3. கலாசார நிலைகள் உணரக்கூடிய நிலையிலிருந்து உருவகப்படுத்தக்கூடிய நிலைக்கு மாற்றமடைகின்ற காலத்தில் யுத்தம், புரட்சி நிலைகள் ஏற்படுகின்றன.
  4. சமூக உறவுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்ற காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள் ஏற்படுகின்றன.
  5. பொதுநன்மை கருதி பொதுமக்கள் ஒன்று சேருதலை யுத்தம், உள்நாட்டுக் குழப்பங்கள் விரும்புவதில்லை.

அனுபவத்தால் அறியப் பெறுகின்ற வரலாற்று அளவீடுகள் மூலம் மிகவும் நன்கு ஒருங்கிணைந்த சமுதாயக் குறிக்கோள் அல்லது கோட்பாடுகளே சமுதாயத்தினைத் தீர்மானிக்கின்றன என்ற முடிவுக்கு சொரொக்கின் வருகின்றார். சமூகக் கோட்பாடுகள், சமூக ஒற்றுமை என்பன பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று இணையக்கூடியதாக இருக்க வேண்டும். யுத்தம்,உள்நாட்டுக் குழப்பங்கள் ஒருமைப்பாட்டினை இல்லாது செய்கின்றன. ஒருமைப்பாட்டினைச் சிதைக்கக்கூடிய எந்தவொரு விடயமும் யுத்தம் அல்லது புரட்சிக்கே பங்களிப்புச் செய்கின்றது. சொரொக்கினின் கருத்துக்களைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.

  1. மோதல் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட வெவ்வேறு உறவுகளுக்கிடையில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்து நிற்கின்றது. மோதலும், வன்முறையும் என்பவைகள் நிரந்தரமான செயற்பாட்டுத் தன்மை கொண்டவைகளாகும். மேலும், இயற்கையாகவே சமூக வாழ்க்கையுடன் இவைகள் இணைக்கப்பட்டுள்ளதுடன், சமூக வாழ்க்கையிலிருந்து மோதல், வன்முறை பூரணமாக நீங்குவதற்கோ அல்லது தடுக்கப்படமுடியாத வளர்ச்சியை அடைவதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை.
  2. சமூகக் கோட்பாடுகள் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்படாத சட்டங்கள் தளம்பல் அடைந்து குழப்பமடைகின்ற போது மோதல் அல்லது குழப்பங்கள் ஏற்படுகின்றன.
  3. அவநம்பிக்கையினால் ஏற்படும் வன்முறையின் போது பழைய சமூக நிறுவனங்கள் குருதியினால் நனைகின்றன. பின்னர் மீண்டும் புதிய உயர் குழாமினர் புதிய நியாயப்படுத்தலுடன் சமூக நிறுவனங்களை உருவாக்குகின்றனர்.

முடிவாக சொரொக்கினின் மோதல் பற்றிய சிந்தனையானது சமூகக் கோட்பாடுகள் மாற்றமடைகின்ற போது ஏற்படுகின்றது. மேலும் அவநம்பிக்கைகள் தோன்றும்போது வன்முறை பற்றிய சிந்தனை தோன்றுகின்றது. ஆகவே கூர்மைப்படுத்தப்பட்ட கோட்பாடுகளும், சமூக விதிகளும் மோதல் தோன்றுவதற்குக் காரணமாகின்றன எனலாம்.

குயின்சி ரைட்

குயின்சிரைட் 1942 ஆம் ஆண்டு எழுதிய யுத்தக் கல்வி (A Study of War) என்ற நூலின் ஊடாக யுத்தம் பற்றிய விடயங்களை பரிசோதனைக்குட்படுத்தியிருந்தார். மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து யுத்தம் பற்றிய விடயங்களை ஆய்வு செய்திருந்தார். இவருடைய யுத்தம் பற்றிய ஆய்வு வெவ்வேறு வகையான யுத்தங்களை வரலாற்றினூடாக அடையாளப்படுத்துகின்றது. “வன்முறைகள் ஏககாலத்தில் எங்கும் பரவியிருக்கவில்லை. வேறுபட்ட காலம், இடம் என்பதைப் பொறுத்து யுத்தம் நிகழ்ந்துள்ளது” என இவர் கூறுகின்றார்.

1918 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேசச் சங்கமும், சர்வதேசச் சட்டமும் சமாதானத்திற்கான பாதையினை உருவாக்கத் தொடங்கின. குயின்சிரைட் சர்வதேசச் சங்கத்தின் செயலூக்கம் பற்றிக் கலந்துரையாடுகின்றார். ஆயினும்,போருக்கான இறுதிக் காரணம் அரசுகளின் இறைமை பற்றிய உயர் கோட்பாடேயாகும்.

இக்காலகட்டத்தில் சமாதான ஆய்வாளர்கள் யுத்தத்திற்கான காரணங்கள் தொடர்பாகக் கண்டறிவதிலேயே கவனம் செலுத்தினார்கள். இவர்களின் அணுகுமுறைகள் அனுபவத்தால் அறியப் பெறுகின்ற ஆய்வாகக் காணப்பட்டன. ஆனாலும், ஆய்வு முறைமைகள் மிகவும் செப்பனிடப்படாதவைகளாக இருந்தன. இந்நிலையில் சமாதான ஆய்வுகள் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னரே வளர்ச்சியடைந்து காணப்பட்டன.

மோதல் கற்கையில் இரண்டாம் உலகப்போரின் செல்வாக்கு

முதலாம் உலகப் போரினைவிட இரண்டாம் உலகப்போர் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது. அதிகாரத்தைக் கையில் எடுத்திருந்தவர்கள் தமது நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய அழிவுகளை எதிர்வுகூறும் திறனற்றவர்களாக இருந்தனர். யுத்தத்தினை ஆரம்பித்தவர்கள் எல்லோரும் தோற்கடிக்கப்பட்டனர். பழிவாங்கப்பட்டவர்கள் வெற்றிபெற்றனர். இது யுத்தத்திற்கான காரணங்களை விளங்கிக் கொள்வதற்கான தேவையினை இரண்டாம் உலக மகாயுத்தம் தொடர்ந்தும் முதன்மையாக்கியதுடன், இரண்டு பெரும் அபாயங்களை உலகிற்கு வழங்கியிருந்தது.

  1. அணு ஆயுதங்கள் முதற்தடவையாக பயன்படுத்தப்பட்டன. யப்பானிய துறைமுகப்பட்டினங்களாகிய கிறோசீமா, நாகசாக்கி ஆகிய இரு நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டு அழிக்கப்பட்டன. இவ் அணுகுண்டுத் தாக்குதல்கள் சமாதான ஆய்வு நடாத்தும் சமூகத்திற்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் மனிதத்துவமும், சிவில் நலன்களும் மோதலிற்குட்பட்டன. மனித அழிவை ஏற்படுத்தும் வகையில் விஞ்ஞானம் பயன்படுத்தப்பட்டது.
  2. யுத்தத்தில் வெற்றிபெற்றவர்களுக்கிடையில் தீவிர மோதல் ஏற்பட்டது. இது உலகத்தில் கெடுபிடியுத்த சூழலை தோற்றுவித்தது. அரசியல், பொருளாதார, சித்தாந்த அடிப்படையில் ஐரோப்பா கிழக்கு, மேற்கு என இரண்டு முகாம்களாக பிளவடைந்தது. இதனைவிட ஜனநாயகம் எதிர் சர்வாதிகாரம், சோசலிசம் எதிர் முதலாளித்துவம் எனவும் பிளவடைந்தது. கெடுபிடி யுத்தம் “எதிரிக்கு சமமாக ஆகுதல்” போன்ற கொள்கை பற்றிய ஆய்விலிருந்து விடுபட்டு, அணு ஆயுதம் பற்றிய ஆய்வுகள் முதன்மையடைந்ததுடன், போருக்கான வரலாற்றுக் காரணங்களையும் ஆய்வு செய்யும் சூழல் தோற்றம் பெற்றது.

மேற்கூறப்பட்ட விடயங்கள் ஆயுதப்பரிகரணம், ஆயுதக்கட்டுப்பாடு, மோதல்க்கோட்பாடு ஆகிய ஆய்வுகளுக்குப் பங்களிப்புச் செய்திருந்தன. சமாதானத்திற்கான ஆராட்சி மரபு 1966ஆம் ஆண்டு ஸ்தாபனமயமாக்கப்பட்டது. இதனால் தனியான ஆய்வு நிலையங்கள், சஞ்சிகைகள், கோட்பாடுகள் எனப் பல தோற்றம் பெற்றன. அவற்றுள் பின்வருவன முக்கியம் பெறுகின்றன.

ஸ்ரொக்கொம் சர்வதேச சமாதான ஆராட்சி நிலையம் (Stockholm International Peace Research Institute – SIPRI)

150 வருடங்களாக சுவீடன் சமாதானத்தினை இழந்திருந்தது. இதனால், 1964 ஆம் ஆண்டு சுவீடனின் பிரதம மந்திரி ரேச் ஏர்லண்டர் (Tage Erlander) மனதில் சமாதான ஆய்வு நிலையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை உருவாகியது. 1966ஆம் ஆண்டு சுவீடனின் றோயல் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த “அல்வா மேர்டெல்” (Alva Myrdal) என்பவர் சமர்ப்பித்த அறிக்கை சமாதானத்தி;ற்கான நிறுவனத்தின் அவசியம் பற்றிக் கூறியிருந்தது. பின்னர் ஸ்ரொக்கொம் சர்வதேசச் சமாதான ஆராட்சி நிறுவனம் – SIPRI நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் ஆய்வுகள் நிலையான சமாதானத்தினை அடைவதற்கான வழிவகைகளை விளங்கிக் கொள்வதற்கும், சர்வதேச மோதல்களைச் சமாதானமாகத் தீர்ப்பதற்கும் பங்களிப்புச் செய்கின்றன. அத்துடன், ஆயுதப்பரிகரணம், ஆயுதக்கட்டுப்பாடு போன்றவற்றில் அரசுகள் கடைப்பிடிக்க வேண்டிய வரையறைகள், எல்லைகள் தொடர்பாகவும் இந்நிலையத்தின் ஆய்வுகள் கவனம் செலுத்துகின்றன. இந்நிலையத்தின் இலக்கு மோதல் தொடர்பாகவும், சர்வதேசச் சமாதானம் தொடர்பாகவும் விஞ்ஞானரீதியான ஆராட்சிகளை மேற்கொண்டு சர்வதேச மோதல்களுக்கான சமாதானத் தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கும், விளங்கிக் கொள்வதற்கும் பங்களிப்புச் செய்து நிலையான சமாதானத்தினை அடைவதாகும். இதற்காக பிரையோக ஆய்வுமுறையியலை பின்பற்றுகின்றது. ஆராட்சிக்குரிய நற்பெயரையும், தகமையினையும், புலமையினையும் உருவாக்கியுள்ளதுடன் ஆயுதக்கட்டுப்பாடு, ஆயுதப்பரிகரணம், இராணுவ செலவீனங்கள், ஆயுத உற்பத்தி, பங்கீடு, ஆயுத அபிவிருத்தி போன்றவற்றின் தகவல்களைப் பெற்று நிலையான சமாதானத்தினை இவற்றினூடாகப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது.

மிச்சிகன் (Michigan) பல்கலைக்கழக ஆய்வு நிறுவனமும், சஞ்சிகையும், அவைகளாவன

  • மோதல்த் தீர்விற்கான நிலையம் (Centre for Conflict Resolution)
  • மோதல்த் தீர்விற்கான சஞ்சிகை (Journal of Conflict Resolution)

நோர்வேயிலுள்ள ஒஸ்லோ பல்கலைக்கழகம் நடாத்தும் ஆய்வு நிறுவனமும், சஞ்சிகையும். அவைகளாவன

  • சமாதான ஆய்வு நிலையம் (Peace Research Institute – PRIO)
  • சமாதான ஆய்வு சஞ்சிகை (The Journal of Peace research)

விளையாட்டுக் கோட்பாட்டின் (Game Theory) தோற்றம். இது மோதலிற்கான புதிய கோட்பாடாக தோற்றம் பெற்றது.

கோசர் (Coser) 1956ஆம் ஆண்டு எழுதிய மோதலின் சமூகச் செயற்பாடு (Social Function of Conflict) என்னும் நூல்

லூயிஸ் (Lewis) எழுதிய சமூக மோதல் செயற்பாடு (Function of Social Conflicts) என்னும் நூல்

மேலே குறிப்பிடப்பட்ட ஆய்வு நிறுவனங்களும், கோட்பாடுகளும், நூல்களும் மோதல்க் கோட்பாடு, மோதல்ப் பகுப்பாய்வு ஆகிய இரண்டிலும் அதிக கவனம் செலுத்தியிருந்தன. மேலும் இவைகள் வேறு பல கோட்பாடுகள் அபிவிருத்தியடைவதற்கும் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தன.

மோதல் ஆய்வுகளுக்கு வியட்னாமிய யுத்தம் வழங்கிய பங்களிப்பு:-

வியட்னாம் யுத்தம் வல்லரசு ஒன்றிற்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாட்டிற்குமிடையிலான மோதல்த் தொடர்புகளை விளக்குகின்ற ஒரு யுத்தமாகும். இது கம்ய10னிஸ எதிர்ப்பு அல்லது தூய ஜனநாயக சமூக ஒழுங்குத் தத்துவத்திற்கான யுத்தமாகக் காணப்பட்டது. இது சமாதான ஆய்வாளர்களின் அறிவுத் தேடலுக்கும், மனோபாவத்திற்குமான சவாலாகவும் அமைந்திருந்தது. இவ் யுத்தம் ஒரு பக்கம் வெற்றி மறுபக்கம் தோல்வி (Zero-Sum) நிலையினைத் தோற்றுவிப்பதாக இருந்தது. இரண்டு தரப்பும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தது. சமாதானத்திற்கு இரண்டு தரப்பும் செல்லவில்லை. இறுதி வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானிப்பதே நோக்கமாக இருந்தது. இவ் யுத்தம் சமாதானத்திற்குப் பின்வரும் வகையில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

  1. சமாதான ஆய்வுகள் ஆரம்பத்திலேயே பெரும் அழிவுக்குட்பட்டதுடன், சமாதான ஆய்வுகளின் பலவீனங்களும் முதன்மைப்படுத்தப்பட்டன. மறுபக்கத்தில் கெடுபிடி யுத்தத்தின் அபாயம் எவ்வாறானது என்பது நிரூபிக்கப்பட்டது. இது தீர்மானம் எடுப்பவர்கள், யுத்தத்தினையும், மோதலின் இயங்கியல் போக்கினையும் கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருப்பதை வெளிப்படுத்தியது.
  2. தீர்மானம் எடுப்பவர்கள் சகல தரப்பினர்களையும் திருப்திப்படுத்தக்கூடிய தீர்மானங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
  3. எல்லாத் தரப்பும் மோதலின் போது சம பலத்துடன் இருக்கின்றார்கள் என்ற ஊகம் முக்கியமானது என்பது உணரப்பட்டது.

சமாதான ஆய்வின் அபிவிருத்தியுடன் தொடர்புபடுத்திப் பார்க்;கின்ற போது வியட்னாம் யுத்தம் அணிகள் எவ்வாறு கூர்மையடைகின்றன? வேறுபட்ட நலன்களுக்கிடையிலான உறவு எத்தகையது? போன்ற புதிய வினாக்களுக்கு விடை தேடுகின்றதாகவுள்ளது.

சமமற்ற அணிகளுக்கிடையிலான மோதல் விடைகாண முடியாத வினாவாகி திணறடிக்கச் செய்கின்றது. ஏனைய மோதல்களிலிருந்து இவ்வாறான மோதல்களை வேறுபடுத்திக்காட்ட முயற்சிக்கப்பட்டது. சமமற்ற அணிகளுக்கிடையிலான வன்முறைகளும், மோதல்களும் மாக்கியவல்லியின் அரசு பற்றிய நோக்குடன் புதிய வழியில் தொடர்புபடுகின்றன.

சமாதான ஆய்வாளர்கள் எதிர் நோக்கிய பிரச்சினை அரசுகளின் இறைமை பற்றியதாகும். 1968 ஆம் ஆண்டு செக்கோஸ்லேவேக்கியா மீதான படையெடுப்பின் பின்னர் இது ஆழமாக முதன்மைப்படுத்தப்பட்டது. சமாதான ஆய்வுகள் இயங்கியல் பண்புடன் பின்வரும் அடிப்படைகளில் உருவாக்கப்பட்டன.

  1. மனிதர்களுக்கு எதிராக வன்முறைகளைப் பிரயோகித்தல் உட்பட மாக்கியவல்லியின் சிந்தனைகளை எதிர்கொள்வதில் புத்திஜீவிகள் திணறடித்தனர்
  2. மோதல்களுக்குத் தீர்வுகாண முடியாமல் போனமை, மரபொழுங்கு சார்ந்த இராணுவத்தின் தொழில்நுட்பத்தின் அபாயம், அணுஆயதங்களின் எழுச்சி, இரண்டு உலக மகா யுத்தங்கள் ஆகியவற்றால் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றின் நன்னெறிகள் திணறடிக்கப்பட்டன.

1970களின் தசாப்தங்களில் மாக்கியவல்லியின் சிந்தனைகளின் செல்வாக்கு,மோதல்க் கோட்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் தோல்வியடைந்தது. 1980களின் தசாப்தங்களில் மோதல்க் கோட்பாட்டை மறுசீரமைத்து புனர்நிர்மாணம் செய்ய முயற்சிக்கப்பட்டது. சமாதான ஆய்வில் மோதல்க் கோட்பாடு எல்லாவற்றையும் ஒற்றுமைப்படுத்தும் ஒன்றாகத் தொடர்ந்தும் இருந்து வருகின்றது. மோதலில் கவனம் செலுத்தும் அவதானிப்புக்கள், பகுப்பாய்வுகள், அடிப்படை எண்ணக்கருக்கள் பற்றிய தெளிவுகள் அவசியமாகவுள்ளதுடன், இது தொடர்பான முயற்சிகள் மேலும் தேவையாகவுள்ளன.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

14,925 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>