அரசாங்கத்தின் பொதுக் கொள்கைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் ஊழியர்களினால் மேற்கொள்ளப்படும் இயக்க, இணக்க கட்டுப்பாட்டுச் செயல்களையும், தொடர்பு முறையாக அமையும் நடவடிக்கைகளையும் கொண்டியங்குவதே பொது நிர்வாகமாகும். பொது நிர்வாகத்தில் மக்கள் தம் குறிக்கோள்களையும், விருப்பங்களையும் பெற்று அவற்றின் பயனை நுகரும் வகையில் தம் கடமைகளுக்கும், செயல்களுக்கும் வடிவத்தினையும் தெளிவான செல்நெறிகளையும், வழி முறைகளையும் உருவாக்கிக் கூட்டுமுயற்சியுடனும், கட்டுக்கோப்புடனும்; செயல்படுவதே ஒழுங்கமைப்பாகும்.
அரசாங்க நிர்வாக அமைப்பில் சகலதும் அதிகாரம் மூலமே செயல்படுகின்றது. நிர்வாக ஒழுங்கமைப்பு அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்டும், மேலாண்மைக்குக் கட்டுப்பட்டும் இயங்குகின்றது. இவ்வகையில் பணிகளையும், பொறுப்புக்களையும் ஒதுக்கீடு செய்வதன் மூலம் சில உடன்பாடான நோக்கங்களை அடையப் பணியாட்களை ஒழுங்;கு செய்வதே ஒழுங்கமைப்பாகும் எனக் கூறிக் கொள்ளலாம்.
ஒழுங்கமைப்பு என்பதனை நிறுவனம் என்றும் தாபனம் என்றும் அழைக்கின்றனர். இது முக்கியமாக ஒழுங்கு, கட்டுப்பாடு என்பவற்றை வலியறுத்துகின்றது. அரசாங்கத்தின் தலைமை நிர்வாகியும், அவரது நிர்வாகக் கீழ்நிலை அலுவலர்களும் தமக்கு வழங்கப்பட்ட பணிகளைச் செயற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கட்டுமானமே ஒழுங்கமைப்பாகும். இவ் அமைப்புக்கள் காலத்திற்குகேற்ற வகையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிர்மாணிக்கப்பட்டும், நிர்வகிக்கப்பட்டும் வரவேண்டும்.
பணிகளையும், பொறுப்புக்களையும் ஒதுக்கீடு செய்வதன் மூலம் சில உடன்பாடான நோக்கத்தை நிறைவேற்ற பணியாட்களை ஒழுங்கு செய்வது ஒழுங்கமைப்பாகும். மனிதர்களையும் மூலப் பொருட்களையும் மிகப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கு ஒழுங்கமைப்பு உதவுகின்றது. பொதுநிர்வாகத்தில் இது முக்கியமானதாகக் கருதப்படுவதுடன் நிலைத்;து நிற்க வேண்டியதொன்றாகும். எனவே அது சட்ட ரீதியாக ஏற்படுத்தப்பட வேண்டியதுடன் அதற்கு வேண்டிய நிதி வசதிகளும், மக்களின் ஆதரவும் இருக்க வேண்டும்.
ஆரம்ப காலத்தில் பொது நிர்வாகத்தினைப் பற்றி எழுதியவர்களும், கற்றவர்களும் ஒழுங்கமைப்பு பற்றிய தெளிவினைப் பெறுவதற்கு இயந்திரவியல் முறைமையினை கையாண்டிருந்தார்கள். காலப்போக்கில் ஒழுங்கமைப்புத் தொடர்பாக பாரிய ஆராட்சிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பல கோட்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ் எல்லா கோட்பாடுகளும் இரண்டு பாரிய வகைப்பாடுகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அவையாவன, இயந்திரவியல் அல்லது அமைப்புத் தொழிற்பாட்டுக் கோட்பாடு, மனிதத் தன்மை அல்லது சமூக உளவியல் கோட்பாடு என்பவைகளாகும்.
ஒழுங்கமைப்புப் பற்றி பல்வேறு அறிஞர்களும் பல்வேறுபட்ட வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளார்கள். அவர்களுள் ஜே.டி.மூனி என்பவர் ‘ஒழுங்கமைப்பு என்பது கட்டடத்தின் நிர்மாணத்தை மட்டும் குறிப்பதன்று, ஒழுங்கமைப்பிலுள்ள எல்லோரையும், அவர்களின் ஒருங்கிணைப்பான பணிகளையும் குறிப்பதாகும். செயல் சக்தியைக் கொடுக்கக்கூடிய பணிகளைக் குறிப்பது அமைப்பு’ என்கின்றார். ஜோன். எம். கோஸ் என்பவர் ‘கடமைகளையும், பொறுப்புக்களையும் ஒதுக்கீடு செய்வதன் மூலம் சில உடன்பாடான நோக்கத்தை இலகுவாக நிறைவு செய்ய ஊழியர்களை ஒழுங்கு செய்தல் ஒழுங்கமைப்பாகும்’ என்கின்றார். எல்.டி.வைற் என்பவரது வாதத்தின் படி ‘பங்கிடப்பட்ட செயற்பாடு, பொறுப்புக்கள் என்பவற்றினூடாக சில உடன்பாடான நோக்கங்களை நிறைவேற்றுவற்காக தனிப்பட்டவர்களை சீர்ப்படுத்துவதே ஒழுங்கமைப்பாகும்’.
ஒழுங்கமைப்புப் பற்றி பல்வேறு அறிஞர்களும் கூறிய கருத்துக்களைப் பகுப்பாய்வு செய்யும் போது எமக்கு மூன்று முக்கிய கருப்பொருள்கள் முதன்மையடைவது தெளிவாகின்றது.
-
நிர்வாகக் கட்டுமானத்தை அமைப்பதில் மேற்கொள்ளப்படும் செயல்முறை.
-
மேற்கொள்ளப்படும் திட்டங்கள், செயற்பாடுகள், ஊழியர்களை பல மட்டங்களிலும் அமைத்துக் கொள்ளல்
-
இவற்றின் மூலம் பெறப்படும் நிர்வாகக் கட்டுக்கோப்பு
நிறுவன ஒழுங்கமைப்புப் பற்றிய கோட்பாடுகள் யாவும் மனித உறவினையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. மக்களின் கடமைகளும், அவர்களிடையே செம்மைப்படுத்தப்பட்ட பரஸ்பர உறவுகளும் நிலை கொண்டுள்ள நிறுவனமே ஒழுங்கமைப்;பாகும். எனவே மக்களும் அவர்தம் சேவைகளும், அச்சேவைகளை நிறைவு செய்யும் பல்வேறு தேவைப் பொருட்களும் இல்லாது ஒழுங்கமைப்பு என்பது இயங்க முடியாது.
இன்றைய அரசாங்கங்களின் நிர்வாகப் பணிகள் பல்கிப் பெருகியுள்ளன. நிர்வாக ஒழுங்கமைப்பின்; பல நிலைகளிலும், பல மட்டங்களிலும் அதிகாரிகளும், ஊழியர்களும் உள்ளனர். இவை அனைத்தையும் ஒருமுகப்படுத்தி ஒழுங்கான ஒழுங்கமைப்புக்களின் கீழ் கொண்டு வர வேண்டும் அப்போது தான் அதிகாரமும், பொறுப்பும் சிறந்த முறையில் செயற்பட முடியும். ஆகவே நிர்வாக இயந்;திரத்தில் ஒழுங்கமைப்பு என்பது எல்லாவற்றிற்கும் அடிப்படையாகவுள்ளது எனலாம்.
ஒழுங்கமைப்பின் இயல்புகள்
அமைப்பினை உருவாக்குவதன் மூலம் நாம் மேற்கொள்ளும் கடமைகளைப் பலவாறு பிரித்து அவைகளுக்கு தனிப்பட்ட பண்பு நிலைகளைக் கொடுத்து பின்னர் அவற்றைச் சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தி ஒழுங்கமைப்பின்;; குறிக்கோள்களை அடைந்து கொள்ள ஒழுங்கமைப்பின் இரு முக்கிய இயல்புகள் துணை செய்கின்றன. அவைகளாவன படிநிலை ஒழுங்கமைப்பும், கட்டுப்பாட்டுவிசாலமுமாகும்.
1. படிநிலை ஒழுங்கமைப்பு
நிர்வாக ஒழுங்கமைப்பு பற்றிய கோட்பாடுகள் யாவும் மனித உறவினை அடிப்படையாகக் கொண்டவைகளேயாகும். ஒன்றோடு ஒன்று தொடர்புள்ள பல உட்பிரிவுகளையும், பகுதிகளையும் கொண்டு காணப்படும் நிர்வாக ஒழுங்கமைப்பில் பல பொறுப்புக்களைப் பெற்ற அதிகாரிகளும், ஊழியர்களும்; மக்களின் கடமைகளையும், மக்களுக்கிடையில் ஒழுங்குபடுத்தப்பட்ட பரஸ்பர உறவு நிலைகளையும் பேணிக் கொள்கின்றனர். இவ்வாறு இவர்கள் செயற்படும்போது கடமைகள் பிரித்து வகுக்கப்படுவதோடு, அதிகாரமும் பல வகையாகப் பிரித்து வழங்கப்படுகின்றது. இதன் காரணமாகவே ஒழுங்கமைப்;பின் வழியாகச் செயற்படும் ஊழியர்களிடையே மேல் நிலை, இடை நிலை, கீழ் நிலை என்னும் அதிகார உறவுகள் தோன்றுகின்றன.
நிர்வாக படிநிலை ஒழுங்கமைப்பு அடுத்தடுத்துள்ள அனேக படிகளால் தரத்தினை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டதாகும். இங்கு படிநிலைஒழுங்கமைப்பு வேறுபட்ட தொழிற்பாட்டு தொகுதிகளுக்குள் தொழிற்பகுப்பின் அடிப்படையில் பாரிய நோக்கத்துடனும், செயல்முறையுடனும் ஆரம்பமாகின்றது. இது அரசாங்கம் ஒன்றின் சேவைக்காக முழுமையான முகவர்களாகவும் (Agencies) திணைக்களங்களாகவும் பிரிக்கப்படுவதுடன், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மந்திரிசபை உறுப்பினர்களின் தலைமையின் கீழ் விடப்படுகின்றது.
நிர்வாக ஒழுங்கமைப்பின் கடமைகள் பிரித்து வகுக்கப்படுவதோடு, அதிகாரங்களும் பல்வேறாக பிரித்தளிக்கப்படுகின்றன. ஒழுங்கமைப்பின் உச்சியிலிருந்து பிறக்கும் அதிகாரம் சீராக பல பகுதிகளுக்கும் சென்று முடிவில் அதன் அடிமட்டத்திற்கு வருகின்றது. இவ்வாறு வரும்போது பொறுப்புள்ள பல நிலைகளையும், படிகளையும் அது கடந்து வருகின்றது போல் அடிமட்டத்தில் எழும் பிரச்சினைகள் பலவும், பலரால் தத்தம் பொறுப்பு நிலைகளுக்கு ஏற்ப பல அளவுகளிலும், வழிமுறைகளிலும் பகுத்தாராயப்பட்டு அவற்றிற்கான இறுதி தீர்வுகளுக்காக உச்சி நோக்கி செல்கின்றது. இங்கு படிநிலையமைப்பு என்பது கூர்ங் கோபுரத்தைப் போன்ற அல்லது பிரமிட்(Pyramid) போன்ற முக்கோண வடிவத்தினையுடைய படிநிலையமைப்பைப் பெற்றுவிடுவதனை அவதானிக்க முடிகின்றது.
அதிகாரம், கட்டளை, கட்டுப்பாடு ஆகிய மூன்றும் நிறுவனத்தின் தலைமை இடத்திலிருந்து அடிமட்டம் வரை பல நிலைகளைக் கடந்து அளவு வழி முறைகளுக்கு ஏற்ப கீழ் நோக்கி வருகின்றது. எனவே படிநிலை ஒழுங்கமைப்பு என்பது இடையூறின்றி தொடர்கின்ற அல்லது இடைவிடா வரிசை முறையான படிகளையும், நிலைகளையும் கொண்டு தரப்படுத்தப்பட்டுள்ள ஒழுங்கமைப்பு முறையாகும். மேல் நோக்கிச் சென்றாலும், கீழ் நோக்கிச் சென்றாலும் கட்டளைகளும் பொறுப்புக்களும்; ஒழுங்கமைப்பின் இடைப்பட்ட படிகளைத் தவிர்த்துத் தாவிச் செல்லுதல் கூடாது. இதனால் படிநிலைமரபு என்பது ஒழுங்கமைப்பின் முதுகெழும்பாக உள்ளது எனலாம்.
படிநிலை ஒழுங்கமைப்புமுறை பின்வரும் நான்கு அடிப்படையான கூறுகளைப் பெற்றிருக்க வேண்டும்.
-
ஒவ்வொரு அலுவலரும் தமக்குக் கட்டளை வழங்கும் உடனடியான மேலதிகாரியாக ஒருவரைத்தான் பெற்றிருக்க வேண்டும்.
-
ஒருவர் தன் பதவிக்கு கீழ் நிலையில் உள்ள ஓர் அதிகாரியிடம் இருந்து உத்தரவுகளையும், கட்டளைகளையும், ஆணைகளையும் பெறும் நிலை இருக்கக்கூடாது.
-
மேல் நிலை, கீழ் நிலை அலுவலர்கள் தமது கண்ணோட்டத்திற்கும், கருத்திற்கும் உட்பட்ட வகையில்தான் தமது செயல்கள் மேற்கொள்ள வேண்டும். இடை நிலையில் உள்ள எவரையும் உதறித் தள்ளுதல் கூடாது.
-
ஒழுங்கமைப்பிலுள்ள ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிற்கு ஏற்ப அதிகாரத்தினைப் பெற வேண்டும்.
நிர்வாகப் படிநிலை ஒழுங்கமைப்பின் முக்கிய இயல்புகளை பின்வருமாறு பட்டியல்படுத்தலாம்.
-
முழு நிர்வாகச் செயற்பாடும் அடுத்தடுததுப் பகுதிகளாகவும், உப பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
-
இந்தப் பகுதிகள் பிரமிட் வடிவத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
-
ஒழுங்கமைப்பின் அதிகாரம், கட்டளை, கட்டுப்பாடு என்பன உச்சியிலிருந்து படிப்படியாக அடிமட்டம் வரை இறங்குகின்றன.
வரைபடத்தின்படி இங்கு A ஒரு தனிப்பகுதியாகும். இப்பகுதியானது முழுமையான அதிகாரங்களை தனக்குள் கொண்டுள்ளது. ஆனால் நிர்வாக ஒழுங்கமைப்பு தனது இலக்கினை அடையும் நோக்கில் அகன்ற B,C என்ற இரண்டு பகுதிகள் உருவாக்கப்படுகின்றன. இலக்குகளைப் பொறுத்து இவ்விரு பகுதிகளும் மேலும் சிறிய பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன. மேலும் வரைபடத்தில் B பகுதி இரண்டு பகுதிகளையும், C பகுதி ஒரு பகுதியினையும் D, E பகுதிகள் இரண்டு பகுதிகளையும் கொண்டிக்கின்றன. இப் பண்பு படிமுறை ஒழுங்கின் அடிமட்டமாகிய G,H,I,J வரை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. இங்கு பிரமிட் போன்று அடி அகன்று காணப்படும் படிநிலை அமைப்பின் ஒவ்வொரு பிரத்தியேக இடமும் குறிப்பிட்ட விடயங்களுக்கு ஒதுக்கப்பட்டவைகளாகும். அதிகாரத்தினை வைத்திருக்கும் மேல்மட்ட உத்தியோகத்தர்கள் கீழ் மட்ட உத்தியோகத்தர்களுக்கு கட்டளைகளை வழங்க அவர்கள் அதனை ஏற்று மேல் நிலையில் உள்ளவர்களின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்கின்றார்கள். இம்முறைமையின் கீழ் அரசாங்கத்தின் தலைவர் ஒவ்வொரு தனிப்பட்ட ஊழியரையும் ஒருவருக்குப் பின் ஒருவாராக ஐக்கியப்படுத்துகின்றார். எனவே படிநிலை ஒழுங்கமைப்பானது ஒழுங்கான படிமங்களையும், படிமுறையான கடமைகளையும் குறித்து நிற்கின்றது. நிறுவன ஒழுங்கமைப்பு மேலிருந்து ஆரம்பிக்கப்பட்டு அடிமட்டம் வiர் கட்டப்படுவதை எடுத்துக் காட்டுகின்றது. மாறாக ஒரு நிறுவனம் அடிமட்டத்திலிருந்து ஆரம்பித்து மேல் நோக்கியும் கட்டப்படலாம் அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப இக்கட்டுமான முறை அனுசரிக்கப்படும்.
நிர்வாகப் படிநிலைஒழுங்கமைப்பின் பயனாக ஆட்சிச் செயற்பாடுகள் பிரிக்கப்பட்டு தகுதியும். திறமையும் கொண்டவர்களால் பொது நிர்வாகம்; செயற்படுகின்றது. நிர்வாக அலுவலர்கள் பல மட்டங்களிலிருந்து புரியும் கடமைகள், அவற்றிற்கிடையே தோற்றுவிக்கப்படும் ஒழுங்கமைப்புக்கள், செயற்பாடுகள் இவற்றின் மூலம் பொதுக்கொள்கையினை நிறைவேற்றுதல் ஆகியவற்றிற்கிடையே சுமூகமான உறவுகளைக் கொண்டிருக்கும் ஒழுங்கமைப்;பானது, ஒழுங்கமைப்;பாளர்களுக்குப் பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றது. இவ்வகையில் ஒழுங்கமைப்;பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப்; பின்வரும் தந்திரோபாயங்கள் கையாளப்படுகின்றன.
-
ஒழுங்கமைப்பிற்குரிய அடித்தளங்களையும், ஆதாரங்களையும் இனம்காணல்.
-
அதிகார ஒப்படைப்பு.
-
அதிகாரக்குவிப்பும், அதிகாரப்பரவலாக்கமும்.
-
ஒருங்கமைந்த கட்டளை
-
பணிஇணைப்பு
அமைப்பிற்குரிய அடித்தளங்களையும், ஆதாரங்களையும் இனம் காணுதல்:-
பொது நிர்வாகவியலில் ஒழுங்கமைப்பை உருவாக்குவதன் மூலம் அதன்; இலட்சியம் அடையப்படுகின்றது. ஒழுங்கமைப்பு தன்னுள்ளிட்ட பல பகுதிகள், பிரிவுகள், கிளைகள் வாயிலாக செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. இவ்வகையில் ஒழுங்கமைப்புக்களை உருவாக்குவதில் பின்வரும் அடித்தளங்களும், ஆதாரங்களும் பின்பற்றப்படுகின்றன.
குறிப்பிட்ட நோக்கம் அல்லது ஆட்சிச் செயற்பாடு:-
குறிப்பிட்ட பொதுக் கொள்கையின் கீழ் இயங்கும் அரசாங்கம் தனது இலக்கினை அடைந்து கொள்வதற்கும், அதன் மூலம் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் தனது செயற்பாட்டினை பல்வேறு பகுதிகளாகப் பிரித்து ஒழுங்குபடுத்துவதுடன், பிரிக்கப்படும் ஒவ்வொரு பகுதிகளையும் ஒழுங்குபடுத்திக் கொள்கின்றது.
குறிப்பிட்ட மக்களுக்குச் சேவை செய்தல்:-
ஒரு நாட்டின் பொது நிர்வாகச்; செயற்பாடு எல்லா மக்களுக்கும் பயன்பட வேண்டுமாயின், மக்களின் பண்பு நிலைமை, வாழும் சூழல் என்பவற்றைக் கருத்திலெடுக்க வேண்டும். மூன்றாம் மண்டல நாடுகளைப் பொறுத்தவரை நகரமயவாக்கமின்மையால் இந்நாடுகள் தமது பொது நிர்வாக ஒழுங்கமைப்பில் கிராமிய மக்களுக்கான தேவையினைப் பூர்த்தி செய்வதை முதன்மைப்படுத்துகின்றன.
புவியியல் வதிவிடம்:-
நிர்வாகத்தை செயற்படுத்தும் வகையில் நாட்டின் புவியியல் மையம், நிலப்பரப்பு மற்றும் பல்வேறு இடங்களின் சிறப்புத் தேவைகளுக்கு ஏற்ப ஒழுங்கமைப்;புக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சுக்கள் புவியியல் மையத்தினை முதன்மைப்படுத்தியே உருவாக்கப்படுகின்றன.
அதிகாரஒப்படைப்பு
பொது நிர்வாக ஒழுங்கமைப்புக்களிலுள்ள தலைவர்கள் யாவரும் தம் கீழ் நிலை அதிகாரிகளுக்குத் தேவையானளவு அதிகாரங்களைக் கொடுத்து, கீழ் நிலை அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்வதற்கு உதவுவதே அதிகாரஒப்படைப்பாகும். அதிகாரத்தை பிரித்து பகிர்ந்தளிக்கும் உயர்நிலை அதிகாரி, தம் அதிகாரத்தைப் பெற்று பணிபுரியும் கீழ்நிலை அதிகாரிகளை மேற்பார்வையும், கட்டுப்பாடும் செய்வதற்குரிய உரிமையினைப் பெறுகின்றார்.;
கீழ் நிலை உத்தியோகத்தர்களுக்கு சட்டத்தால் அல்லது அரசியலமைப்பால் நேரடியாக எவ்வித அதிகாரமும் வழங்கப்படுவதில்லை. இரண்டாம் நிலைகளிலும், கீழ் நிலைகளிலும் செயல்படும் அலுவலர்கள் நிறுவனத் தலைவரிடம் இருந்து அதிகார ஒப்படைப்பை பெறுகின்றனர். இவ்வகையில் அதிகார ஒப்படைப்பின் ஊற்றினை பின்வரும் மூன்று வகையில் இனங்காட்டலாம்.
-
ஆட்சியியலுடன் (அரசியலமைப்பு) இணைந்த முறை:- அதாவது ஆட்சியியல் முறையில் தலைமை நிர்வாகிக்கு சட்டத்தால் வழங்கப்படும் அதிகார ஒப்படைப்பு (உதாரணம் – ஜனாதிபதி முறை)
-
ஆட்சியியலுடன் இணைப்பற்ற முறை:- அதாவது ஆட்சியியல் முறையில் பல சுயேச்சையான பதவிகளுக்கும், ஆணைக்குழுவிற்கும் அதிகாரம் வழங்கும் முறையாகும் (உதாரணம் ஜனாதிபதி ஆணைக்குழு போன்றவை)
-
ஆட்சியியலுடன் இணைப்பு முறை :- அதாவது அரசாங்கத்தின் ஒரு மட்டத்திற்குள் அல்லது ஒரு செயல் பிரிவிற்குள் ஆட்சியியல் அதிகாரத்தை ஒப்படைப்பதாகும். (பாராளுமன்ற முறை)
இம்மூன்று வகை அதிகார ஒப்படைப்பு மூலமும் ஓர் ஒழுங்கமைப்பின் கீழ் நிலை அலுவலர்களுக்கு அதிகாரங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. அதிகார ஒப்படைப்பினை செய்வதில் கீழ்க் காணும் வரம்புகளுக்குட்பட்டே அதிகாரிகள் செயலாற்ற வேண்டும்.
-
உயர் அதிகாரிகள் யாவரும் தம் முழு அதிகாரங்களையும் பிறரிடம் ஒப்படைப்பு செய்யாது, தேவையானளவிற்கும், காலத்திற்கும் ஏற்பவே ஒப்படைப்பு செய்ய வேண்டும்.
-
புதுக் கொள்கைகளையும், திட்டங்களையும் அனுமதிக்கும் அதிகாரத்தை அவர்கள் இழக்க கூடாது.
-
உயர் மட்டஅதிகாரிகளை நியமனம் செய்யும் அதிகாரம் கண்டிப்பாக வேறு எவருக்கும் மாற்றம்; செய்யப்படக்கூடாது.
-
உயர் அதிகாரி தனக்கு நேரடியான ஊழியர்களை மேற்;பார்வை செய்யும் அதிகாரத்தை வேறு எவர்க்கும் மாற்றக் கூடாது.
அதிகாரஒப்படைப்பில் இவைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறின் ஒழுங்கமைப்பின் தலைவர் அல்லது தலைமைக்குழு ஒழுங்கமைப்பின் செயல்களைக் கட்டுப்படுத்திக் குறிக்கோளை அடைய முடியாது போய்விடும்.
அதிகாரக்குவிப்பும், அதிகாரப்பரவலாக்கமும்.
ஒழுங்கமைப்பிலிருக்கும் உயர்நிலை கீழ் நிலை அதிகாரிகளிடையே தோன்றும் நிர்வாக உறவுகளின் காரணமாகவும், நிர்வாகத்தில் பல்வேறு கடமைகளையாற்றும் துறைகள், திணைக்களங்களுக்கு இடையேயுமான உறவு நிலைகள் வாயிலாகவும் அதிகாரக்குவிப்பும் அதிகாரப்பரவலும் என்ற அம்சம் தோற்றம்பெறுகின்றது.
ஒழுங்கமைப்பின் கீழ் நிலையிலுள்ள பிரிவுகளும், அவற்றின் தலைவர்களும், தமது விருப்பப்படி முடிவுகளை எடுக்காது, தாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் மேல்மட்டத்தில் வகுக்கப்படும் கொள்கைகள், மற்றும் பிறப்பிக்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்பவே மேற்கொள்வர்.
ஒழுங்கமைப்பு பேரளவானதாய் அமைந்து தமது அதிகாரத்தை பல மட்டங்களில் ஒப்படைத்து, செயல்களை முடிவெடுத்து ஆணைகளைச் சுயேட்சையாகப் பிறப்பிக்கும் வாய்ப்பினை அவற்றின் அதிகாரிகளுக்கு கொடுத்திருக்குமாயின் அவ் அமைப்பு அதிகார பரவலைப் பெற்றிருக்கும்.
ஒழுங்கமைப்பில் காணப்படும் முடிவெடுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் பொறிமுறையினைப் பொறுத்தே ஒழுங்கமைப்பின் அதிகாரக்குவிப்பும், அதிகாரப்பரவலும் எவ்வாறானது என்பதைத் தீர்மானிக்கமுடியும். பொதுவாக ஓர் அரசாங்கம் ஒரு முக அமைப்பை அல்லது ஒற்றையாட்சியைக் கொண்டிருக்குமாயின் அதன் ஆட்சியமைப்பு கூடுதலாக அதிகார குவிப்பை கொண்டிருக்கும் எனலாம். சமஸ்டி ஆட்சித் தன்மையினைப் பெற்றிருக்குமாயின் அதிகாரப்பரவல் முறையை கூடுதலாகக் கொண்டிருக்கின்றது எனலாம்.
ஒருங்கமைந்த கட்டளை
உயர் நிலையில் இருந்து தகுந்த ஆணைகளையும், கட்டளைகளையும் பிறப்பித்தே ஒழுங்கமைப்புத் தன் கடமைகளைச் செய்வி;க்கின்றது. ஒழுங்கமைப்பின் மூலம் பிறப்பிக்கப்படும் பல்வேறு கட்டளைகளையும்;, ஆணைகளையும்; பணிவுடன் ஏற்று செயல்படுவோர் பலராகும். எந்தவொரு ஊழியரும் தமக்கு உடனடி மேல்நிலையிலிருக்கும் அதிகாரியிடமிருந்தே கட்டளைகளைப் பெறவேண்டும். பலரிடமிருந்து ஒருவர் கட்டளைகளையும், ஆணைகளையும் பெறுவாராயின் அவற்றைச் செயற்படுத்துவதில் அவருக்குக் குழப்பம் ஏற்படும். ஊழியர்களை ஏவி கடமைகளைச் செய்ய வைப்பதில் ஒற்றுமை இருத்தல் அவசியமாகும். ஓர் அமைப்பின் அலகுகள் பலவாக இருப்பினும் அவற்றின் தலைமை நிர்வாகி ஒருவராகவே இருக்க வேண்டும். எனவே ஒரு நிறுவனத்தின் தலைமை ஒருவரிடமிருந்தாலும், பலரைக் கொண்ட ஒரு குழுவிடமிருந்தாலும் அவர்கள் பிறப்பிக்கும் ஆணைகளை ஊழியர்கள் ஏற்றுப் பணிபுரிவதில் குழப்பங்களைத் தவிர்க்க வேண்டும். ஒற்றுமைக்கட்டுப்பாட்டுத் தத்துவத்;தின் படி பலர் ஒருவருக்கு ஆணைகளை இடக்கூடாது. இவ்வாறு நிகழ்ந்தால் எல்லோரும் தம் பொறுப்புக்களை இலகுவாக உதாசீனம் செய்ய முடியும். எனவே. ஒவ்வொருவர் பொறுப்பும் குறித்ததோர், அதிகார வரம்பில் நிலை நிறுத்தப்பட வேண்டுமாயின் ஒற்றுமைக்கட்டுப்பாடு அவசியமானதாகும்.
பணிஇணைப்பு
ஒழுங்கமைப்பு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டும், அப்பிரிவுகளுக்;கேற்ப ஊழியர்கள் தெரிவு செய்யப்பட்டும், அவ் ஊழியர்களுக்கு ஏற்ற கடமைகள் பங்கீடு செய்யப்பட்டும் செயல்முறைப்படுத்தப்படுகின்றது. நிர்வாக ஒழுங்கமைப்பின் பிரிவுகளில் ஏற்படும் பிணக்குகள் ஒழுங்கமைப்பின் முழுமையினையுமே பாதிப்புறச் செய்யும். ஆகவே ஒழுங்கமைப்பிலுள்ள ஒவ்வொரு பிரிவுகளுக்குமிடையே கடமையும் ஒற்றுமையும் இருக்க வேண்டும.; இவ்வகையில் நிர்வாக ஒழுங்கமைப்பின் கடமைகளில் ஏற்படும் பிணக்குகளையகற்றி சிக்கலற்றவகையில் கடமைகளை மேற்கொள்வதற்;கு கடமைகளுக்கிடையில் கூட்டுப் பொறுப்பும், ஒற்றுமையும் இருக்க வேண்டும். இதனையே பணிஇணைப்பு என்கின்றனர்.
முழுமையான ஒருங்கிணைப்பையும், இயல்பையும் தோற்றுவிக்கும் சாதனங்களாகத் தலைமை நிர்வாகியின் தலைமையில் கூட்டப்படும் உயர் நிர்வாகிகளின் மகாநாடுகள், கீழ் நிலை நிர்வாகிகளின் கூட்டங்கள், திணைக்கழங்களுக்கிடையேயுள்ள குழுக்கள் போன்றவைகள் கூறுப்படுகின்றன. இதன்மூலம் ஒழுங்கமைப்பின் குறிக்கோள்கள் நிறைவேற்றப்படுகின்றன.
2. கட்டுப்பாட்டுவிசாலம்
சிறப்பான நிர்வாகத்தினை நடத்த வேண்டுமாயின் தேவையான அளவிற்கே ஊழியர்கள் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும். தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஊழியர்கள் இருப்பின் படிநிலைகளில் செயற்படுவோரைக் கண்காணித்துக் கடமைகளைச் செய்ய வைப்பதில் சிரமங்கள்; ஏற்படலாம். கட்டுப்பாட்டுவிசாலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அதிகாரியும் தாம் மேற்பார்வை செய்யக் கூடிய ஊழியர்களையே பெற்றுக்கொள்கின்றனர்.
பொதுவாக ஒழுங்கமைப்பின் ஒவ்வொரு படிகளிலும் கடமை புரியும் ஊழியர்களின் கட்டுப்பாட்டினை உறுதிப்படுத்த 5:1 என்ற விகிதாசாரம் பேணப்பட வேண்டும் எனக் கூறப்படுகின்றது. ஆனால் ஒழுங்கமைப்பின் அதி உயர் மட்டத்தில் இவ்விகிதாசாரம் தான் பேணப்பட வேண்டும் என்ற நியதி அவசியமற்றது கட்டுப்பாட்டு விசாலம் தோற்றுவிக்கும் மாற்றங்கள்; யாவும் ஒழுங்கமைப்பின் இயல்புகளுக்கு ஏற்பவும், ஒழுங்கமைப்பின் தலைமை நிர்வாகியின் ஆற்றலுக்கு ஏற்பவும் மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு அதிகாரியும் தமது கட்டுப்பாட்டுவிசாலத்தினை பணியாளர்களிடம் கொண்டு செல்வதற்கு எத்தனை அலுவலர்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதில் பொது நிர்வாகவியல் அறிஞர்களிடம் ஒத்தகருத்துக்கள் காணப்படவில்லை. உதாரணமாக சேர் கமில்டன் (Sir Hamilton) என்பவர் ‘ஒவ்வொரு அதிகாரியும் மூன்று அல்லது நான்கு கீழ் நிலை அலுவலர்களையே பெற்றிருக்க வேண்டும்’ எனவும், எல் உர்விக் (L.Urwick) என்பவர் ‘ மேல்மட்ட நிலையிலிருக்கும் மேற்பார்வை அதிகாரிகள் ஐந்து அல்லது ஆறு கீழ் நிலை அதிகாரிகளையும், வேலை எளிமையாயிருக்கும் கீழ் மட்ட நிலைகளில், ஒவ்வொரு அதிகாரியும் எட்டில் இருந்து பன்னிரெண்டிற்கு மேற்படாத கீழ் நிலையாளர்களை கொண்டிருத்தல் சிறப்பானதாகும்’ எனவும், சேர் கிராகம் வொலாஸ் (Sir Graham Wallas) என்பவர் பத்து முதல் பன்னிரெண்டிற்கு மேற்படாத எண்ணிக்கையே கட்டுப்பாட்டுவிசாலத்திற்கு உகந்தது’ என்று கூறுகின்றார்
அதிகாரிகளின் கட்டுப்பாடு, மேற்பார்வை, கவனம் ஆகியவற்றின் வீச்சிற்கு இலக்காகும் அலுவலர்களது எண்ணிக்கை எதுவாயினும் கட்டுப்பாட்டுவிசாலம் இன்றி நிர்வாகம் என்ற கருவி எந்நிலையிலும் செயற்பட முடியாது. இவ்வகையில் எவ் ஆட்சியமைப்பிலும் கட்டுப்பாட்டுவிசாலம் முக்கியம் பெற்று, ஓழுங்கமைப்பு நிறுவனமும், நிர்வாக அலுவலர்களும் தம் செயற்பாடுகளைச் சீராக்கிச் செய்து முடிப்பதற்கு கட்டுப்பாட்டுவிசாலம் முக்கியமானதாகின்றது.