ஒப்பீட்டு அரசியலில் அரசு

அரசு என்ற பதம் அரசியல் விஞ்ஞானத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு உள்ளடக்கங்களில் பயன்படுத்தப்படுகின்றது. சர்வதேச அரசியல் செயற்பரப்பில் அரசு என்பது “சட்ட ரீதியான பிரதேசம், நிலையான மக்கள் தொகை, அரசாங்கம் என்பவற்றை உள்ளடக்கியது” எனக் கூறுகின்றோம். அரசு சட்ட ரீதியாக அதிகாரத்தினைப் பின்பற்றும் தனியுடமையினைப் பெற்றதாகும். சர்வதேச முறைமையில் ஏனைய அரசுகளினால் இதன் இறைமை அங்கீகாpக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்ட புலமையாளர்கள் அரசு தொடர்பாக பின்வரும் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.

  1. வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் நிரந்தரமாக வாழும் மக்கள் காணப்படுவார்கள்.
  2. இம்மக்கள் பொது சட்ட வழக்கங்கள், வழக்காறுகள் என்பவற்றால் ஒன்றாகக் கட்டுண்டு ஒரே அரசியல் அலகாக காணப்படுவார்கள்.
  3. ஒழுங்கமைக்கப்பட்ட இறைமையுடைய அரசாங்கத்தின் ஊடாக அதனது எல்லைக்குட்பட்டிருக்கும் பொருட்கள், மக்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடியதாக இருக்கும்.
  4. யுத்தத்தினையும் சமாதானத்தினையும் உருவாக்கக் கூடியதாக இருக்கும்.
  5. பூகோள சமுதாயத்துடன் உறவுகளை மேற்கொள்கின்ற வல்லமை கொண்டதாக இருக்கும்.

அரசியல் கோட்பாட்டின் படி அரசு என்பதற்கு மக்கள், நிலப்பரப்பு, அரசாங்கம், இறைமை ஆகிய நான்கு முக்கிய மூலக்கூறுகள் அவசியமானதாகும்.

அரசியல் விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாக ஆனால் சுதந்திரமானதும் தனியானதுமான கற்கை நெறியாகவும் ஒப்பிட்டு அரசியல் வளர;ச்சியடைந்துள்ளது. ஒப்பீட்டு அரசியல் கற்கை நெறி ஆய்வாளர்கள் “அரசு” என்ற பதத்திற்கு புதிய கருத்தினைக் கொடுக்கிறார்கள்.

இவர்கள் கொடுக்கும் புதிய விளக்கம் அரசு தொடர்பாக கொடுக்கப்படும் பொதுவான கருத்துக்களுடன் தொடர்புடையதாகவும் வேறுபட்டமாகவும் உள்ளது. இவர்களின் விளக்கங்கள் அதிகாரத்தின் சரியான இடம், மையவாக்க அதிகாரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே சிந்திக்கப்பட்டது.

ஒப்பீட்டு அரசியல் தொடர்பாக எழுதும் சமகால எழுத்தாளர்கள் அரசு என்பது “வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் பெரும்பான்மைப் பலத்தைத் தேடுவதுடன் அரசிற்குள்ளும் அரசிற்கு வெளியிலுமிருந்தும் எழும் சவால்களை தடை செய்யும் நிறுவனம்” எனக் கூறுகின்றார்கள்.

உள்நாட்டு மட்டத்தில் எழும் ஒழுங்கீனம், குற்றச் செயல்கள், வெளியிலிருந்து வரும் தாக்குதல்களிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடமையினை அரசு செய்கின்றது. அரசுகள் சில வேளைகளில் (விசேடமாக ஜனநாயக முறைமையற்ற அரசுகள்) மக்களிடம் பாதுகாப்பிற்காக பணத்தினை (வரி) வேண்டி நிற்கின்றன.

அரசு, அரசாங்கம் ஆகிய இரண்டு பதங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதும் ஒன்றிற்காக ஒன்று மாற்றிப் பயன்படுத்தக் கூடிய பதங்களுமாகும். ஆனால் ஒப்பீட்டு அரசியல் செயற்பரப்பில் இது வேறுபட்டு உள்ளது.

உண்மையில் அரசு, அரசாங்கம் இரண்டும் அரசியல் கற்கையில் வேறு வேறாக பிரித்தறியக் கூடியவைகளாகும். அரசு என்பது பொதுத் தேவைகளை திருப்தியாக வழங்குவதுடன், பொது இலக்கினை அடைவதற்கான அரசியல் ரீதியான ஒழுங்கமைப்பாகும்.

அரசாங்கம் என்பது அரசின் கூட்டு முகவர், நீதிபதி, அரசின் விருப்பத்தினை உருவாக்குபவர் ஆகும். ஆனால் இது அரசினை விட உயர்ந்ததல்ல. அரசினை இயக்குகின்ற ஆளுனார் சபை அல்லது கூட்டுத்தாபனமாகும் அரசாங்கமாகும்.

இதேபோன்று அரசு, ஆட்சிமுறை (Regime) ஆகிய இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதாகும். ஆட்சிமுறை என்பது “நிறுவப்பட்டதொன்று” என்று கூறலாம். இது நிலையானதொன்றாக இருக்குமாயின் சில புரட்சிகரமான நிகழ்வுகளின் மூலம் ஆட்சிமுறை மாற்றியமைக்கப்படலாம். ஆட்சிமுறை என்ற பதம் தனிநபர்களின் விதிகள், ஒழுங்குகளைத் திரட்டுதல், அதிகாரத்தினால் தீர்மானிக்கப்படுகின்ற கூட்டு நடத்தை எனக் கூறலாம். இதனடிப்படையில் சர்வாதிகார ஆட்சிமுறையிலிருந்து ஜனநாயக ஆட்சிமுறை வேறுபட்டதாகும்.

1789ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரான்சியப் புரட்சி வரம்பற்ற முடியாட்சியை மக்கள் புரட்சி மூலம் மாற்றியமைத்து குடியரசு முறைமையினை உருவாக்கிய முக்கிய மாற்றத்தினை எடுத்துக் காட்டுகின்றது.

1990 களில் தென்னாபிரிக்காவில் ஜனநாயக ஆட்சிமுறை மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. வெள்ளை இன மக்களின் ஆதிக்கம் தோற்கடிக்கப்பட்டு எல்லா தென்னாபிரிக்க மக்களுக்கும் ஜனநாயக உரிமை வழங்கப்பட்டது.

எனவே அரசு, அரசாங்கம், ஆட்சிமுறை ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட விடயங்களாகும். ஆட்சியாளன் அல்லது தலைமைத்துவத்தின் இயல்புகளைப் பொறுத்து அரசாங்கம் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. அரசியலின் இயந்திரம் அரசு என்றால் ஆட்சிமுறை அரசியல் திட்டங்களாகும். அரசாங்கம் இதனை செயற்படுத்தும் இயக்குனராகும். எனவே ஒரு நாடு அரசு, அரசாங்கம், ஆட்சிமுறை ஆகிய மூன்றினாலும் ஒன்றிணைக்கப்பட்டதொன்றாகும்.

அண்மைக்கால ஐக்கிய அமெரிக்க எழுத்தாளர்களாகிய டேவிட் ஈஸ்ரன், டி.ஈ.அப்ரர், ஜி.எ.அல்மண்ட் போன்றர் அரசு, அரசாங்கம் என்ற பதத்திற்குப் பதிலாக “அரசியல் முறைமை” என்ற பதத்தினைப் பயன்படுத்துவதே பொருத்தமானது எனக் கூறுகின்றனர். இதன் மூலம் இவர்கள் ஒப்பீட்டு அரசியல் செயற்பரப்பில் அரசு என்ற பதத்திற்கு புதிய பரிமாணத்தினை கொடுக்கின்றனர்.

முறைமைப் பகுப்பாய்வானது அமைப்புத் – தொழிற்பாடு, உள்ளீடு, வெளியீடு அணுகுமுறைகளினால் நெறிப்படுத்தப்படுகின்றது. உண்மையில் அமெரிக்கர்கள் இவ்வாறானதொரு அணுகுமுறையினை உருவாக்கியமைக்கு பிறிதொரு காரணம் உள்ளது. வளர்ச்சியடைந்து வந்த மாக்சிச அணுகுமுறையினை வலுவிழக்கச் செய்வதற்கும், அரசு என்பது “வர்க்க அமைப்பிலான நிறுவனம்” என்று மாக்சிசம் கூறும் கருத்தினை தோல்வியுறச் செய்வதற்கும் அரசியல் முறைமைப் பகுப்பாய்வு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

மாக்சிசம் கூறும் சமூக அபிவிருத்தியின் தாக்கம் மேற்கு நாடுகளின் ஜனநாயகத்தினை தகர்த்துவிடும் என்ற பயத்தினால் 20ம் நூற்றாண்டில் மேற்கு நாடுகளினால் பாரிய அரசியல் இயங்கு நிலையினை புதிய அரசியல் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அமுக்கக்குழுக்கள், தொடர்பு சாதனங்கள் பெற்றுக் கொண்டன.

இணைக்கப்பட்டநவீன இணைக்கப்பட்ட அரசு (கூட்டுறவு அரசு)

இணைக்கப்பட்ட அரசு என்ற எண்ணக்கரு இத்தாலிய பாசிச சர்வாதிகாரி முசோலினியின் மூளையிலிருந்து பிறந்ததாகும். 1920களில் தேசிய பாசிச அமைப்பின் மேற்பார்வையிலும் கட்டுப்பாட்டின் கீழும் நாடு பூராகவும் “இணைக்கப்பட்ட அரசு” என்ற சிந்தனை நிறுவப்பட்டது. நாட்டில் உள்ள நிறுவனங்கள், அமைப்புக்கள் தமது பிரதிநிதிகளைத் தாமே தெரிவு செய்யும் உரிமை தடை செய்யப்பட்டது. தொழிற்சங்கங்கள், விவசாயிகள் அமைப்புக்கள், சமூகக் குழுக்கள் போன்றவற்றிற்கான நிதிகள் பாசிச அரசினால் வழங்கப்பட்டதுடன் இவைகள் பாசிச அரசிற்கு விசுவாசமானதாக, பயனுள்ளதாக உருவாக்கப்பட்டன.

இவ்வகையான கூட்டுறவு ஜனநாயகமற்றதாகும். இங்கு சமுதாய அமைப்புக்களுக்கிடையே போட்டி இருப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. பன்மைத்துவ சமுதாயத்திலுள்ள ஜனநாயகத் தன்மை இங்கு மதிக்கப்படுவதில்லை. அதிகார படிநிலை வடிவிலேயே இங்கு சமுதாயம் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சமுதாய அமைப்பிற்குமான அதிகாரம் அரசினாலேயே வழங்கப்பட்டிருக்கும். சமுதாய அமைப்புக்களின் பிரதிநிதித்துவத்தில் அரசினுடைய தனியுடமை காணப்படும்.

இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னர் இவ்வகையாக இணைக்கப்பட்ட அரசு முறைமை இல்லாதொழிக்கப்பட்டது. ஆயினும் அநேக மேற்கைரோப்பிய ஜனநாயக நாடுகளில் “இணைப்பு” ( கூட்டுறவு) என்பது புதிய வடிவில் எழுச்சியடைந்தது. இது புதிய “இணைக்கப்பட்ட அரசு” (கூட்டுறவு அரசு) என்ற பெயரில் எழுச்சியடைந்தது. ஜனநாயகத்தில் இணைக்கப்பட்ட (கூட்டுறவு அரசு) அரசு என்பதை நிராகரிக்க முடியாது.

கைத்தொழில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் தமது தொழில் வழங்குனர் தொழிற்சங்கங்களுக்கிடையில் தொழில் உறவுகளைப் பேணிக் கொள்ள உதவியாக உள்ளது. இந்நாடுகளில் அரசு சாரா முகவர்கள் அரசியல் செயன்முறையில் பங்கெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழில் வழங்குனர், தொழிலாளர்கள் ஆகியோர்களின் பிரதிநிதிகள் ஒருவருடன் ஒருவர் அரசின் உத்தியோகத்தர் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தங்களுடைய விடயங்களை முகாமைத்துவம் செய்கின்றார்கள் அல்லது தீர்த்துக் கொள்கின்றார்கள்.

பல்வேறுபட்ட நலன் பேணும் குழுக்கள் தங்களுக்கிடையில் மாத்திரமன்றி அரச உத்தியோகத்தர்களுடனும் பேரம் பேசுதலில் ஈடுபடுகின்றனர். இப்பேரம் பேசுதல்கள் அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் செயன்முறையில் செல்வாக்கும் செலுத்துகின்றது.

கொள்கை உருவாக்கம், பொதுவான அரச சட்டத்துவம் என்பவற்றை பாதுகாக்கின்ற நிறுவனமாகவே பாராளுமன்றம் உள்ளது. உத்தியோகப்பற்றற்ற அமைப்புக்கள் சில வகையான அரச உதவிகளைப் பெற்று தேசிய திட்டங்களை உருவாக்குவதிலும் பொதுத் துறையினை நிர்வகிப்பதிலும் பங்கெடுக்கின்றன.

புதிய கூட்டுறவு அரசு, அரசின் இயல்பினை மாற்றியுள்ளதாக கூறுவோமாயின் சமூகத்திற்கும் அரசியல் விடயங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைவடைந்துள்ளது எனக் கூறலாம்.

பழமைவாத பன்மைவாதிகள் இறைமைத் தத்துவத்தினை கடுமையாக விமர்சனம் செய்கின்றார்கள். இவர்கள் சமூகக் குழுக்களின் செயற்பரப்பில் அரசினை மேலானதொன்றாக கருதுவதில்லை. தீர்மானம் எடுக்கும் செயன்முறையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பின் வருகையானது சில நலன் பேணும் குழுக்களின் பலத்தினையும், முக்கியத்துவத்தினையும் அதிகரிக்க காரணமாகியுள்ளது.

சமுதாயம் கூட்டுறவானதாகவே இருக்கின்றது. அரசிற்கும், குழுக்களுக்கும் இடையிலான வெளிப்படையான உறவுப் பரிமாற்றச் செயல்முறைக்கு அப்பால் சில குழுக்கள் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றவைகளாக விருத்தியடைந்துள்ளது. குறிப்பாக, பொருளாதார கொள்கைத் தீர்மானங்கள் பொருளாதாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும், அரசுக்கும் இடையிலான பேரம் பேசுதல் மூலம் உருவாக்கப்படுகின்றது.

புதிய கூட்டுறவு அரசு இயல்பாகவே புதிய பன்மைவாதத்துடன் ஒன்றுபடுகின்றதாகின்றது. பன்மைவாதியாகிய லஸ்கி “ சமுதாயம் சமஸ்டியாக இருக்குமாயின் அதிகாரமும் சமஸ்டியாக இருக்க வேண்டும்” எனக் கூறுகின்றார்.

மூன்றாம் உலக நாடுகள்

கைத்தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசு என்ற பதத்திற்கு வழங்கப்படுகின்ற விளக்கமானது உலகிலுள்ள பொருளாதார பின்னடைவுடைய அரசுகளுக்கு கொடுக்கும் விளக்கத்திலிருந்து வேறுபட்டதாகும்.

மூன்றாம் மண்டல நாடுகள் தமக்கான அரசியல் முறைமையினை அல்லது அரசினை கொண்டிருந்தாலும் ஜனநாயகத்தின் தன்மையினைப் பொறுத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இந்தியா ஜனநாயக பாரம்பரியமிக்க நாடாக கருதப்படுகின்றது. அதேநேரம் மெக்சிக்கோ பாதி-ஜனநாயக நாடாக கருதப்படுகின்றது. சீனா ஒரு கட்சி முறையுள்ள நாடாக கருதப்படுகின்றது. சவுதிஅரேபியா, ஈரான், இஸ்ரவேல், நேபாளம், பாகிஸ்தான், வங்களாதேசம் போன்ற நாடுகளில் “சமயம்” அரசினைத் தீர்மானிக்கின்றது. இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் சமயச் சர்பின்மை உள்ள நாடுகளாகும்.

மூன்றாம் மண்டல நாடுகளின் அரசியல் முறைமையில் காணப்படும் முக்கியமானதும், சுவாரஸ்சியமானதுமான விடயங்கள் ஒப்பீட்டு அரசியலில் முதன்மையானவைகளாக உள்ளன.

இவ்வகையில் கைத்தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் மூன்றாம் மண்டல நாடுகளுக்கும் இடையில் அரசியல் ரீதியான வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  1. பொருளாதார வளம், சமத்துவமின்மை போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல், அரசாங்கம், என்பன வடிவமைக்கப்படுகின்றதுடன் சர்வதேச முறைமையில் இந்நாடுகளின் பலவீனங்களும் அடையாளப்படுத்தப்படுகின்றன. விவசாயிகளினதும், தொழிலாளர்களினதும், கிளர்ச்சிகளினால் பொருளாதார மோதல்கள் ஏற்படுகின்றன. ஆட்சியாளர்கள் ஊழல், தவறான நிர்வாகம் போன்றவற்றில் ஈடுபடுகின்றார்கள்.
  2. இந்நாடுகளின் அரசியலில் சட்டத்துக்கு உடன்பாடான தன்மை மிகவும் பலவீனமானதாக உள்ளது. மக்கள் தேர்தல் வாக்களிப்பு நடத்தையின் போது தங்களுடைய சாதிக்கு கட்டுப்படுகின்றார்கள். அரசாங்கம் என்பது தமது வாழ்க்கைக்கு தேவையானது என இவர்கள் எண்ணுவதில்லை. அல்லது வாக்களிப்பின் மூலம் முக்கியமான விடயங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் எனவும் எண்ணுவதில்லை. மக்கள் தமது பிரஜாவுரிமையின் உயர் தன்மையினை புறக்கணித்து அரசியல் அடையாளத்தினை இழந்து விடுகின்றனர்.
  3. அரசாங்கத்தின் அதிகாரம் இந்நாடுகளில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. இவ் அரசுகளில் உள்ள பெரிய நகரங்கள், தலைநகரம், என்பவைகளுக்கு அப்பால் அரசு அதிகாரத்தினைச் செலுத்துவதில் திறன் குறைந்ததாக உள்ளன. கிராமங்களிலும், பின் தங்கிய பிரதேசங்களிலும் ஒருவர் மீது ஒருவர் தங்கியிருக்கின்ற உறவுநிலை காணப்படுகின்றது. அதாவது செல்வந்தர்கள் ஏழைகளைச் சுரண்டுகின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் பலவீனமான மக்கள் செல்வந்தர்களுக்கு உதவி செய்வது அவர்களைக் கௌரவிப்பதற்கான சட்ட ரீதியான அல்லது நெறிமுறை சார்ந்த விடயமாகக் கருதப்படுகின்றது. இங்கு சட்டம், கட்சிகள், தேர்தல்கள் என்பன குறைந்த முக்கியத்துவத்தினையே பெறுகின்றன.
  4. அனேக நாடுகளில் உள்ள அரசுகள் விசேட அடையாளங்கள் எதுவும் இன்றியே இயங்குகின்றன. மக்கள் தாம் சார்ந்த சமூகம், அரசாங்கம், அரசியல் கட்சி, தமது உயர் தலைவரின் ஆளுமை என்பவற்றுடன் இணைந்தே அரசினை அடையாளப்படுத்துகின்றார்கள்.
  5. மூன்றாம் மண்டல நாடுகளில் காவல் துறை, பரா இராணுவம், இராணுவப் படைகள் போன்றவற்றில் தங்கியிருக்கின்ற அரசுகளாகவே காணப்படுகின்றன. இதனால் இந்நாடுகளின் அபிவிருத்தியானது புராதன சமுதாயங்கள் போன்றே உள்ளது. வறுமையினைத் தணிப்பதற்கான அபிவிருத்திச் சிந்தனைகள் இல்லாமல் படைபலத்தினை பயன்படுத்துவது சட்டச் சிக்கல்களை இந்நாடுகளில் தோற்றுவித்து விடுகின்றது. மேலும் சமுதாயம், பல்வேறு கூறுகளாக சிதைவடைந்து வேறுபாடுகள் கூர்மையடைந்து புரட்சிகர நடத்தைகள் தோன்றுகின்றன. புரட்சிகர இயக்கங்கள் நடைமுறையிலுள்ள சமூகக் கட்டமைப்பினை சிதைத்து விடுவதுடன் இதற்கான மாற்று வழிகளையும் ஏற்படுத்தாமல் விட்டுவிடுகின்றன.

மூன்றாம் மண்டல நாடுகளை மாக்சிச கண்ணோட்டத்தில் நோக்கினால் அரசு வர்க்க அமைப்பினை உருவாக்கியுள்ளதை அவதானிக்கலாம். அரசு தனது செயற்பாட்டிற்கு சிக்கலான சூழ்நிலையினை தோற்றுவித்துள்ளது. இனப் போராட்டக்காரர்கள், சமயப் போராட்டக்கரரர்கள், சமுதாயப் படைகள், மிகவும் பலமான நிலையிலிருப்பதை அவதானிக்கலாம். திட்டத்தினை உருவாக்குபவர்கள் திறனற்றவார்களாகவும், ஏனையோர்களுடன் போட்டி போட முடியாதவர்களாகவும் காணப்படுகின்றார்கள். நிர்வாகத் துறையானது அரச அதிகாரத்தினை நிலை நிறுத்துபவர்களாக இல்லாமல் அரசியல் அதிகாரத்தினை அனுபவிப்பவர்களாக உள்ளனர்.

 குறைவிருத்தி நாடுகள்

குறைவிருத்தி நாடுகள் (Least Countries) என்பது ஐக்கிய நாடுகள் தாபனத்தின் கருத்தின்படி சமூக, பொருளாதார அபிவிருத்தியிலும், மனித அபிவிருத்தி சுட்டியிலும் மிகவும் குறைவான அளவீடுகளைக் கொண்டிருக்கும் நாடுகளாகும். குறைவிருத்தி நாடாக ஒரு நாடு வகைப்படுத்தப்படுவதற்குப் பின்வரும் மூன்று விடயங்கள் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன.

  1. 750 $ குறைவான தலா வருமானத்தினைக் கொண்டிருக்கும் குறைந்த வருமானமுடைய நாடுகளாகும். இந்நாடுகளின் தலாவருமானம்  900 $அடையும் போது இப்பட்டியலிலிருந்து நீக்கப்படும்.
  2. போசாக்கு, சுகாதாரம், கல்வி, வயது வந்தோர் கல்வி போன்ற மனித வளக்     குறிகாட்டிகள் பலவீனமாக இருத்தல்.
  3. பொருளாதாரப் பலவீனம், இது விவசாய உற்பத்தி, பொருட்களின் சேவைகளின் ஏற்றுமதி போன்றவற்றில் பலவீனமாக இருத்தல். மரபுசாராப் பொருளாதாரச் செயற்பாடுகளின் முக்கியத்துவம், வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி, சிறு பொருளாதாரப் பொருட்களின் குறைபாடுகள், இயற்கை அனர்த்தங்களினால் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயருதல் போன்றவைகள் காணப்படும்.

ஆட்சியாளனின் அரசியல் சாராம்சத்தினைப் பொறுத்து அரசுகள் ஒன்றிலிருந்து ஒன்று பல விடயங்களில் வேறுபட்டனவாகும். அதாவது அரசுகளுக்குள் பல ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் காணப்படுகின்றன. சமயம், கலாசாரம், மொழி, மக்கள் வாழ்வதற்குரிய பிரதேசம்,பொதுமக்கள் என்பவைகள் அரசுகளுக்குரிய சட்டபூர்வமான தன்மையினை வழங்குகின்றன.

அனேகமாக உலகத்திலுள்ள எல்லா பழைய அரசுகளும் பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்டு வேறுபடுத்தப்பட்டன. பிரதேசங்கள் அரசுகளுக்கான தெளிவான கலாசாரத்தினையும், சட்டபூர்வத்தன்மையினையும் வழங்குகின்றன.

ஆயினும் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஆசிய, ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள அனேக அரசுகள் தெளிவான பிரதேசங்கள் அல்லது இயற்கையான புவியியல் எல்லைகளைக் கொண்டிருக்கவில்லை.பதிலாக மொழி,கலாசாரம்,சமயம் மக்களின் பிறப்பு என்பன முதன்மையான அடையாளங்களாக்கப்பட்டன. இதனால் பிரதேச எல்லைகள் செயற்கையானது என மக்கள் நம்பினர்.

பிரதேச,கலாசாரா அடிப்படையில் தேசிய அரசுகளுக்கிடையில் வேறுபாடுகள் காணப்பட்டாலும், இவற்றினைக்கடந்து எல்லாஅரசுகளும் சட்டப்படி ஒன்றிற்கொன்று சமமானவைகளாகவே கருதப்படுகின்றன.

 தோல்வியடைந்த அரசுகள்

தோல்வியடைந்த அரசுகள் என்பது இறைமையுடைய அரசாங்கங்கள் சில அடிப்படையான விடயங்களையும், பொறுப்புக்களையும் பேணுவதில் தோல்வியடைகின்ற போது இவ்வாறான அரசுகளை அரசியல் விமர்சகர்களும், பத்திரிகையாளர்களும் தோல்வியடைந்த அரசுகள் என அழைக்கின்றார்கள். இவ்வாறான அரசுகள் பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.

  1. பிரதேசத்தின் பௌதீகக் கட்டுப்பாட்டினை அல்லது பிரதேசத்தின் சட்டபூர்வத் தன்மையினை இழந்திருக்கும்.
  2. சட்டபூர்வமான கூட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியாமல் இருக்கும்.
  3. நியாயமான பொதுச் சேவையினை வழங்க முடியாதிருக்கும்.
  4. சர்வதேசச் சமூகத்திலுள்ள ஏனைய அரசுகளுடன் முழுமையான உறவுகளைப் பேண முடியாதவைகளாக இருக்கும்.

பொதுவாக தோல்வியடைந்த அரசுகளின் பண்புகளாக மத்திய அரசாங்கம் பலவீனமானதாக இருப்பதுடன், தனது பிரதேசத்தில் கட்டுப்பாட்டினை சிறப்பாகப் பேண முடியாதவைகளாகவும் காணப்படும். மேலும், பொதுச் சேவையினைச் சிறப்பாக வழங்க முடியாததுடன், ஊழல், குற்றச் செயல்கள், அகதிகள், பொருளாதார வீழ்ச்சி என்பவைகளை இந்நாடுகள் கொண்டிருக்கும்.

சமகால ஏழுவகை அரசுகள்

சமகால அரசமுறைமையில் காணப்படும் அரசுகள் சமூக, பொருளாதார, அரசியல் அடிப்படையில் ஏழு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

1. தாராண்மை ஜனநாயக அரசுகள்:-

தாராண்மை ஜனநாயகம் சட்டரீதியானதும், வரையறுக்கக்கூடியதும், எதிர்ப்புக் கூறக்கூடியதுமான அரசியல் முறைமைகளையும், நிறுவனங்களையும் கொண்டிருக்கும். வழமையாக இவ் அரசுகள் உலகிலுள்ள ஏனைய அரசுகளை விட சொத்துடைய அரசுகளாகக் காணப்படும். சிவில் உரிமைகள் மக்களுடைய பொருளாதாரங்கள் போன்றவற்றிற்கு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது உயர் அந்தஸ்த்தும், அங்கீகாரமும் வழங்கப்பட்டிருக்கும். அனேக தாராண்மை ஜனநாயக அரசுகள் முதலாம் மண்டல நாடுகளாகவும் காணப்படுகின்றன. உதாரணமாக அவூஸ்திரேலியா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, யப்பான் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்.

2. கம்யூனிஸ,கம்யூனிசத்திற்கு பிந்திய அரசுகள்:-

இவ்வகைப்பாட்டிற்குள் வரும் அரசுகள் “நிலைமாறும் அரசுகள்” என அழைக்கப்படுகின்றன. ஆனால் இவ் அரசுகள் எப்போதும் மாக்சிச-லெனினிச பொருளாதார, அரசாங்க முறையூடன் தொடர்புடைய அரசுகளாகும். இவ் அரசுகளில் பல கெடுபிடி யுத்தத்தின் பின்னர் கம்யூனிசத்திலிருந்து விடுபட்டுள்ளன. அனேகமான கம்யூனிச அரசுகள் ஏனைய அரச முறைமைக்குள், அதாவது தாராண்மை ஜனநாயகம், புதிய கைத்தொழில் வளர்ச்சியடைந்த அரசுகள், இஸ்லாமிய அரசுகள் போன்றவற்றுடன் இணைந்து கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ரஸ்சியா, போலந்து, வட கொரியா, கியூபா, வியட்நாம் போன்ற முன்னைய இரண்டாம் மண்டல நாடுகள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

3. புதிதாக கைத்தொழில் மயமாகும் அரசுகள்:-

பதினெட்டாம்,பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்பட்ட அனுபவங்களைப் போன்ற சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களைப் பெற்று கைத்தொழில் மயமாகி வரும் அரசுகளே இவைகளாகும். இந்நாடுகளின் அரசியல் முறை உறுதியடைந்து வருவதுடன், படிப்படியான கைத்தொழில் பொருளாதாரத்தினை நோக்கி வளர்ந்து வரும் அரசுகளாகும். உதாரணமாக மெக்சிக்கோ, இந்தியா, பிரேசில், துருக்கி, ஆரஜன்ரீனா போன்ற நாடுகளை உதாரணமாக கூறலாம்.

4. குறைவிருத்தியுள்ள அரசுகள்:-

அமெரிக்க கண்டத்தின் மத்திய, தென்பகுதிகளிலும், ஆபிரிக்காவின் சகாரப் பிரதேசத்திலுள்ள அரசுகள் குறைவிருத்தி அரசுகள் என அழைக்கப்படுகின்றன. இவ் அரசுகளில் சில சமூக, பொருளாதார, அரசியல் உறுதிப்பாட்டினை கொண்டிருப்பினும், நீண்ட காலமாக தீர்க்க முடியாத பல பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன. சில அரசுகள் உறுதியான அரசியல் முறைமையினைக் கொண்டிருப்பதுடன், பொருளாதார வறுமையினையும் கொண்டிருக்கின்றன. சில அரசுகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்தாலும், மனித உரிமை மீறல்கள், ஊழல் போன்ற விடயங்களால் உறுதியற்ற அரசாங்கத்தினைக் கொண்டுள்ளன. இதற்கு உதாரணமாக ஈகுவாடோர், தன்சானியா, நைஜீரியா, நிக்கரகுவா போன்ற அரசுகளைக் கூறலாம்.

5. இஸ்லாமிய அரசுகள்:-

இவ் அரசுகளில் இஸ்லாமிய சமயத்தின் ஆதிக்கத்தினை அவதானிக்கலாம். அரசியல் நிறுவனங்கள், சமூகப் பொருளாதார விழுமியங்கள் எல்லாவற்றிலும் இஸ்லாமிய சமய நம்பிக்கைகள் இவ் அரசுகளில் காணப்படும். இதற்கு உதாரணமாக ஈராக், சவூதி அரேபியா, பாகிஸ்தான், குவைத்போன்ற அரசுகளைக் கூறலாம்.

6. ஓரங்கட்டப்பட்ட அரசுகள்:-

எல்லா அரசுகளும் இவ்வகைப்பாட்டிற்குள் வரக்கூடியவைகளாகும். சர்வதேச அரச முறையினுள் அரசுகள் இந்நிலையினை அடைகின்ற போது “தோல்வியடைந்த அரசுகள்” என இவைகள் அழைக்கப்படுகின்றன. ஒரு அரசு தோல்வியடைந்த அரசாக மாறுவதற்கு யுத்தம், இயற்கை அனர்த்தம், அரசியல் அல்லது பொருளாதார ரீதியான தனிமைப்படுத்தலால் அரசியல், பொருளாதார சமூக மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. இதற்கு உதாரணமாக அங்கோலா, லைபீரீயா, ஆப்கானிஸ்தான், எதியோப்பியா, சோமாலியா, மியன்மார் போன்ற அரசுகளைக் கூறலாம்.

7. சிறிய அரசுகள்:-

உலகில் உள்ள ஏனைய அரசுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வரசுகளின் “புவியியல் அளவு” மிகவும் சிறியதாக உள்ளது. இவ் அரசுகளின் மக்கள் தொகை 50,000 இருந்து 250,000 வரையிலேயே காணப்படுகின்றது. இயற்கை வளங்கள், பாதுகாப்பு, வர்த்தகம் போன்றவற்றிற்கு அயல்நாடுகளில் தங்கியிருக்கின்ற நாடுகளாகும். உதாரணமாக லக்சம் பேர்க், வகமாஸ், வாவடோஸ், மொனாகோ, வத்திகான் போன்ற அரசுகளைக் கூறலாம்.

நான்காம் மண்டல நாடுகள்

ஆர்.ஐp. றிட்கெர் (R.G.Ridker) 1976 ஆம் ஆண்டு நான்காம் உலகத்தின் மாறும் வளப்பிரச்சினை (Changing Resource Problems of the Fourth World) என்னும் பெயரில் வெளியிட்ட கட்டுரையில் நான்காம் உலகம் என்னும் பதத்தினைப் பயன்படுத்தியிருந்தார். ஆயினும் இப்பதம் பொருளியலாளர்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

ஆயினும், 1972 ஆம் ஆண்டு பென் விற்ரெக்கர் (Ben Whittaker) சிறுபான்மை இனக்குழுக்களை அழைக்க இப்பதத்தினைப் பயன்படுத்தியிருந்தார். ஆயினும் இன,சமூக,வரலாற்றுக் குழுக்களிற்கிடையிலான வேறுபாட்டினை இனம்காண இவர் தவறிவிட்டார் எனக் கூறப்படுகின்றது.

பேர்னாட் கியூ நீட்ச்மன் (Bernard .Q.Niertschmann) என்பவர்

“சர்வதேச அரசியலில் புதியதொரு சக்தியாக நான்காவது மண்டலம் என்றதொரு புதிய வகைப்பாடு படிப்படியாக எழுச்சியடைந்து வருகின்றது. பொதுவான பாதுகாப்பு, சர்வதேசச்சட்டம்,அரசஇறைமை,பணிக்குழு மீதான நம்பிக்கை போன்றவற்றை அனேக சுதேசிய மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை.பதிலாகத் தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்து தங்களது பங்குபற்றுதலையும், இறைமையையும் பிரயோகிக்கின்றார்கள்.”எனக் கூறுகின்றார்.மேலும் இவர் “மூன்றாம் உலகம் நான்காம் உலகத்தின் மீது புவியியல் யுத்தத்தினைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இப்பூகோள முரண்பாட்டிற்கு முதலாம்,இரண்டாம் உலக அரசுகள் உதவுகின்றன.”எனக் கூறுகின்றார்.

றிச்சாட்ஸ் கிறிக்ஸ் (Richard Griggs)

“சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படத் தகுதியில்லாத தேசங்களே நான்காம் உலகமாகும். உலக சனத்தொகையில் 5000 தொடக்கம் 6000 வரையில் பிரதிநிதித்துவம் வகிக்கும் மக்களும் தாங்கள் வாழும் அரசிற்குள் தனியான அரசியல் கலாசாரத்தினைப் பேணிக்கொள்வதுடன், தாம் வாழும் பிரதேசம் தமக்குச் சொந்தமானது என உரிமை கோருவதுடன், இறைமைக்காகப் போராடுவது அல்லது கணிசமானளவு சுயாட்சியைத் தமது பிரதேசத்தில் பெற்றுக்கொள்வதற்கும் போராடுகின்றார்கள்” எனக் கூறுகின்றார்.

அனேக சந்தர்பங்களில் சுதேசிய மக்கள் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தினை நடாத்தி தமது அரசியல் அபிலாசைகளையும், ஐக்கியத்தினையும் பிரகடனப்படுத்துவதுடன், தங்களுடைய பொருளாதார,கலாசார,சமூக அபிவிருத்தியையும் தக்கவைத்துக்கொள்கின்றார்கள்.

சமாதானத்தை நேசித்தவார்கள் எதிர்காலத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தேசங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படாமலிருப்பதற்காக ஒவ்வொரு தேசத்திற்கும் தனியான தேசிய அரசுகளை உருவாக்க முயற்சித்தார்கள். ஆனால் இவ்வாறு செய்வது இலகுவானதல்ல.

தேசிய அரசொன்றிற்குள் பல தேசங்கள் வாழ்கின்றன.மொழி, தேசியம், சமயம் என்ற சிக்கலான முறையில் இவர்கள் கலந்து காணப்படுகிறார்கள்.அவர்களைத் தெளிவான தேசங்களாப் பிரி்த்தெடுப்பது சிக்கலானதாகும். உதாரணமாக கிறீஸ்சில் பல்கெரியர்களும்,பல்கெரியாவில் கிரேக்கர்களும், யூகோஸ்லாவியாவில் ருமேனியர்களும், ருமேனியாவில் யூகோஸ்லேவியர்களும், செக்கோஸ்லேவியாவில் ஜேர்மனியர்களும் வாழ்கின்றார்கள்.

ஒவ்வொரு தேசிய அரசிற்குள்ளும் வாழும் தேசிய சிறுபான்மை இனத்தவர்கள் மத்தியில் எப்போதும் பெரும்பான்மை இனத்தவர் மீது அச்சவுணர்வு இருந்து வந்தது.வெளிநாட்டுச் சக்திகளின் உதவியுடன் ஒவ்வொரு தேசமும் சுய நிர்ணய உரிமையைக் கோரின. இச் சிக்கல்கள் எதிர்காலத்தில் உலக சமாதானத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், சர்வதேசச் சட்டம் மூலமாக ஒவ்வொரு தேசத்தினதும் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அடிப்படை உரிமைகள் பேணப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.

இச்சட்டத்தினடிப்படையில் போலந்து, ரூமேனியா,யூகோஸ்லேவியா, செக்கோஸ்லேவியா, கிறீஸ் போன்ற தேசிய அரசுகள் மொழி, இன, சமய சிறுபான்மைக் குழுக்களுக்கு சம உரிமைகளை வழங்கின.நீண்ட காலத்தில் இச் செயற்பாடுகள் உண்மையான சமாதானத்தினை வழங்கவில்லை. சிறுபான்மையோர் தொடர்பாக கொடுக்கப்பட்ட உறுதி மொழிகள் தமது இறைமையினை எதிர்காலத்தில் பாதிக்கலாம் என ஒவ்வொரு அரசும் அச்சம் கொண்டன. இதனால் முரண்பாடுகள் தவிர்க்க முடியாத நிகழ்வாகின. அதனைத் தடுக்க சர்வதேசச் சங்கம் முயற்சித்ததாயினும், தவறு இழைப்பவர்களைத் தண்டிக்கக் கூடிய அதிகாரத்தினை இது பெற்றிருக்கவில்லை.

இன முரண்பாடுகள் உச்சக்கட்டத்தையடைவது தவிர்க்க முடியாததாகியது. கங்கேரி ,ரூமேனியாவில் யூதர்களும்,போலந்தில் உக்ரேனியர்களும் பாதுகாப்பற்ற நிலையிலிருந்ததுடன்,மிகவும் பாதிக்கவும்பட்டனர். தேசிய விரோத உணர்வும், இனக்கிளர்ச்சியும் எழுச்சியடைந்தன.”சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற கோட்பாடு” சிதைக்கப்பட்டது.

ஜேர்மனியில் இன உணர்வலைகள் எழுச்சியடைந்தது. நாசிசம் வளர்ச்சி பெறலாயிற்று. யூதர்கள் துன்புறுத்தப்படலாயினர். இது ஜேர்மனியின் தேசியவாத இயல்பாக வெளிக்காட்டப்பட்டது. சிவில் சேவை தனியார் துறை,இராணுவம் ஆகிய துறைகளிலிருந்து யூதர்கள் அன்னியப்படுத்தப்பட வேண்டும் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சமூகப் பொருளாதாரத்தடை என்பது யூதர்களுடைய வாழ்வில் பெரும் கஸ்டத்தினை ஏற்படுத்தியது. இதனால் ஜேர்மனியை விட்டு யூதர்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற வேண்டியேற்பட்டது. இதுவே யூதத் தேசியவாதம் வளர்வதற்கும்,பாலஸ்தீனத்தில் ,இஸ்ரவேல் என்ற பதிய அரசு யூதர்களுக்காக உருவாக்கப்படவும் காரணமாக அமைந்தது.

 1990 பின்னரான மாற்றம்

சோவியத் யூனியனில் ஏற்படுத்தப்பட்ட மறுசீரமைப்பும்,வளைகுடாப்போரும் புதிய தேசிய அரசுகளின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்தது. வோர்சோ ஒப்பந்த அணி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கைரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள் மீண்டும் மக்கள் இறைமையினை கோரின. மக்கள் தமக்கு பொருத்தமான ஆட்சிமுறையினை உருவாக்கிக் கொண்டார்கள்.

யூகோஸ்லேவியாவில் சிலோவேனிய மக்களும்,குரோசிய மக்களும் தனியரசு கோரிப் போராட்டம் நடாத்தினர். போஸ்னியாவில் சேபியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமிடையில் யுத்தம் நிகழ்ந்தது. சோவியத்யூனியனில் இணைந்திருந்த 15 குடியரசுகளில் 10 குடியரசுகள் தனியரசாகிச் சென்றதுடன் அதனை உலக நாடுகள் அங்கீகரித்தும் கொண்டன.

ஏகாதிபத்திய நலன்களுக்கான போர்களும், சுயநிர்ணய உரிமைகளுக்காக சிறுபான்மையினர் நடாத்தும் கிளர்ச்சிகளும் தேசிய அரச முறைமைகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

சர்வதேச ஒழுங்கில் மாற்றம் ஏற்பட்டால்தான் தேசிய அரசுகளுக்கு பாதுகாப்பை வழங்க முடியும். தேசியவாதிகள் தங்கள் கொள்கைகளைக் கைவிடுவதிலும் பார்க்கத் தங்களுக்கும், தங்கள் ஆதரவாளர்களுக்கும் ஏற்படும் கஸ்டங்களையும், அழிவுகளையும் ஏற்கத்தயாராக இருக்கின்றார்கள்.

உலகம் எங்கும் இன அடிப்படையில் பிரிவினைக்கான கோரிக்கைகள் வளர்ச்சியடைந்து வருவதுடன்,பலமான அழுத்தத்தினையும் கொடுத்து வருகின்றது. நன்கு ஸ்திரமான நிலையிலுள்ள அரசாங்கங்களை அரசியல் ரீதியாக சிதைத்து விடுமளவிற்கு இன முரண்பாடுகள் வளர்ச்சியடைந்து வருகின்றன.இங்கிலாந்தில் ஜரிஸ் மக்களின் போராட்டமும், இந்தியாவில் காஸ்மீர் மக்களின் போராட்டமும், இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டமும் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.

அரசியல் நல்லிணக்கத்தினையும், அதிகாரப் பரவலாக்கத்தினையும் ஏற்படுத்தி தேசிய அரச முறைமையினைப் பாதுகாக்க ஜரோப்பிய சமூகம் முயற்சிக்கின்றது. ப்பிலேமிங்ஸ், வெலூன்ஸ் இன மக்களிற்குக் கலாசார சுயாட்சியை வழங்குவதற்கு பெல்ஜியம் தனது யாப்பினைத் திருத்தியுள்ளது.கனடா பிரெஞ்சு,ஆங்கிலம் பேசும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது அரசியலமைப்பைத் திருத்தியுள்ளது. இத்தாலி ஜேர்மன் மொழி பேசும் மக்களிற்காகத் தன்னாதிக்கமுள்ள மாகாண அரசொன்றை நிறுவியுள்ளது.எனவே உலகளாவிய ரீதியில் அரசின்றி வாழும் தேசிய சிறுபான்மையின மக்களையே நான்காம் மண்டலம் என அழைக்கின்றார்கள்.

இறைமையின் பலவீனம்

பன்மைவாதக் கோட்பாட்டாளர்களின் கருத்துப்படி அரசும் ஏனைய சமூக அமைப்புக்களும் சமூக நலன்களிற்கான நிறுவனங்களாகும். மனிதனின் சமூக இயல்பானது சமயம், கலாசாரம், பொருளாதாரம், போன்ற வேறுபட்ட அமைப்புக்களுக்கு ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றது. இவ்வமைப்புக்கள் மனிதனின் சமூக வாழ்க்கையின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்கின்றன என்பதை பன்மைவாதிகள் எடுத்துக் காட்டுகின்றனர்.

சமூக நிறுவனங்களில் குடும்பம், குலம், போன்றவைகள் அரசு என்ற நிறுவனத்தினை விட பழமையானதுடன் அவற்றின் அந்தஸ்திற்கு ஏற்ப அரசிற்கு சமமான அதிகாரம் கொண்டவைகளுமாகும். ஆகவே அரசினை மட்டும் இறைமையுடைய நிறுவனமாக அங்கீகாரிப்பது நீதியற்றதாகும் என்பது பன்மையாளர்களின் வாதமாகும். பன்மைவாதிகளில் ஒருவராகிய லஸ்கி என்பவரின் கருத்துப்படி

“ஒரு அரசின் இறைமையானது பன்மைத்தன்மை கொண்டதும் அரசியல் திட்ட ரீதியானதும் பொறுப்புடையதுமாகும். மட்டுப்படுத்தப்படக் கூடிய இவ் இறைமையானது மேலாண்மை பெறுவதை விட கட்டுப்படுத்தப்படக் கூடியது. நிரந்தரமானது என்பதை விட தேர்தல் தொகுதிகளின் விருப்பத்தினால் அது மாறுபட்டுச் செல்லும். அதன் அதிகாரங்கள் வியாபிக்கக் கூடியவை. உள்வரியாகவும், வெளிவாரீயாகவும் அதன் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவும் மீள் பார்வைக்கு உரியவையாகவும் காணப்படும்.” எனக் கூறுகின்றார்;.

பென்தம் (Benthum) என்பவர் இறைமை என்பது, “சட்டத்தின் மூலம் எல்லையற்றதாகவிருந்த போதிலும் நீதி முறைப்படி எல்லையற்றதல்ல. ஒரு இறைமையாளன் தனது அதிகாரத்தைச் சட்டங்களை உருவாக்கிக் கொள்வதன் மூலம் நிலை நாட்டிக் கொள்ள முடிந்த போதிலும் இவ் இறைமையின் நோக்கம் பெரும்பாலான மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும்”எனக் கூறுகின்றார்.

சட்ட அறிஞரான டைசி இறைமையை சட்டமயமான இறைமை, அரசியல்மயமான இறைமை என இரண்டாக பிரிக்கின்றார். இதில் சட்டமயமான இறைமையையே அரசின் இறைமை என்றும் அரசியல்மயமான இறைமை தோ;தல் தொகுதிகளிலிருந்து பிறக்கின்றது என்றும் கூறுகின்றார்;.

கமில்ற்றன், மடிசன், ஆகியோர் இரட்டை இறைமை பற்றி எடுத்துக் கூறுகின்றனர். சமஸ்டி முறைமையில் இறைமை பிரிபடுகின்றது. அதாவது மத்திய அரசிற்கும், மாநில அரசுகளுக்குமிடையே இறைமை பிரிபடுகின்றது என இவர்கள் கூறுகின்றனர்.

சுருக்கமாகக் கூறுவோமாயின் பன்மைவாத சிந்தனையாளார்கள் அரசும், ஏனைய அமைப்புக்களும் சமூகத்தில் சில அந்தஸ்துக்களை பெற்றிருக்கின்றன. இதில் அரசு அதிக முக்கியத்துவத்தினையும் அதிக கௌரவத்தினையும் பெற்றிருப்பதை மறுக்கிறர்கள். இவர்களுக்குள் இருக்கின்ற தீவிரவாதிகள் அரசினை பூரணமாக அழிப்பதற்கும் அதனுடைய அதிகாரப் பங்கீட்டினையும் தொழிற்பாட்டினையும் அழிப்பதற்கும் ஆழமாக சிந்திக்கின்றனர். சில பன்மைவாதிகள் அராஜகத்திலிருந்து சிறியளவிலேயே வேறுபடுகின்றனர்.

பன்மைவாதம் அரசின் இறைமை பற்றிய ஒருமைவாதக் கோட்பாட்டினை (Monistic)எதிர்க்கின்றது. பன்மைவாதிகளின் வாதத்தின் படி அரசின் இறைமையானது சமூகத்தின் ஏனைய தொண்டர் அமைப்புக்களின் மீது விஸ்தரிக்கப்பட முடியாதது.

தொண்டர் அமைப்புக்கள் அரசிற்கு சமமாக தமக்கேயுரிய அதிகார எல்லைக்குள் இருந்து செயற்படக் கூடியவையாகும். அரசு முழு நிறைவானதும், கட்டுப்பாடற்றதுமான அதிகாரத்தினை கொண்டிருக்க முடியாது.

அதன் அதிகாரங்கள் சமூக வழக்காறுகள், சம்பிரதாயங்கள், சர்வதேசச் சட்டங்கள், ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், என்பவற்றினால் மட்டுப்படுத்தப்படுகின்றன. ஜனநாயக பாரம்பரியத்திற்குள் மக்கள் அபிப்பிராயம் என்பது இறைமை மீதான கட்டுப்பாடாகவே உள்ளது.

மக்களுடைய உரிமைகள் கூட அரசின் அதிகாரத்தினை மட்டுப்படுத்துகின்றது. இவ்வகையில் இறைமை பிரிக்கப்பட முடியாதது என்ற கருத்து இங்கு நிராகரிக்கப்படுகின்றது. இறைமை ஒரு அரசிற்குள் செயற்படும் பல்வேறு சங்கங்களிற்கிடையிலும் அரசிற்கிடையிலும் பிரிக்கப்படுகின்றது.

அரசும் ஏனைய சங்கங்களும் மக்களிடமிருந்து விசுவாசத்தினை பெற்றுக் கொள்கின்றன. இது தொடர்பாக லஸ்கி பின்வருமாறு கூறுகின்றார்;.“மக்கள் சில நேரங்களில் அரசை விட சங்கங்களிற்கு அதிக விசுவாசத்தினை வெளிக்காட்டுகின்றனர். மக்கள் அரசிற்கெதிரான தமது மனத் துயரங்களை கொண்டிருக்க முடியாது என்ற கருத்தினை பன்மைவாதிகள் நிராகாரிக்கின்றார்கள். ஒரு நாட்டில் சுதந்திர இயக்கங்களை ஸ்தாபிக்கவும், அரசின் இறைமைக்கு எதிரான மனத் துயரங்களை, அதிருப்தியினை , கருத்துக்களை வெளியிடுவதற்கும் மக்களிற்கு உரிமையுள்ளது.”

இறைமை பிரிக்க முடியாததா? என்ற கேள்விக்கு சமஸ்டி நாடுகளினை உதாரணமாகக் காட்ட முடியும். அமெரிக்காவில் இறைமை யாரிடம் தங்கியுள்ளது என அடையாளம் காண்பது சிரமமாகும். போர்க் காலங்களில் அமெரிக்க ஜனாதிபதி அதிக அதிகாரமுடையவராகக் காணப்படினும் அவர் பூரண அதிகாரம் பெற்றவர் எனக் கூறவும் முடியாது. ஏனெனில் காங்கிரஸ் சட்டங்களை இயற்றும் அதிகாரம் கொண்டுள்ளது. ஆனால் சட்டங்களை திருத்த வேண்டுமாயின் மாநில சட்ட மன்றங்களின் சம்மதத்தைப் பெற வேண்டும்.

எனவே சமஸ்டி அமைப்புள்ள நாடுகளில் இறைமை மத்திய அரசிடமும், சம அரசுகளிடையேயும் பிரிக்கப்படுகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. இவ்வாறே பிரித்தானியாவில் மன்னர், பிரபுக்கள் சபை, மக்கள் சபை என்பன சட்டமன்றத்தின் உறுப்புக்களாகும். இவை எல்லா இடத்திலும் இறைமை காணப்படுகின்றது.

ஆகவே இங்கு இறைமை பிரிபடுகின்றது. இதனால் ஒப்பற்ற ஒருவனிடம் இறைமை நிர்ணயிக்கப்படவேண்டும் என்பது வரலாற்றில் காணமுடியாத கருத்து என்று கென்றி மெயின் கூறுகின்றார்.

வெளிநாட்டு விடயங்களில் சர்வதேச சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட்டனவாகவே இறைமை செயற்படுகின்றது. ஆகவே இறைமை வரம்பில்லாதது என்பது ஒப்புக் கொள்ள முடியாத கோட்பாடு என்று பிளன்சிலி கூறுகின்றார். லஸ்கியும் இறைமை பற்றிய பன்மைவாதிகளும் சமூகத்திலுள்ள பல கூட்டமைப்புக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனார்.

மடிசன் (Madison) இறைமை மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கத்திற்குமிடையே பங்கீடு செய்யப்படுகின்றது எனக் கூறுகின்றார். ஆட்சியாளனின் ஆணையே சட்டம் எனப்படுகின்றது.

ஆனால் சமூகத்தில் நிலவும் பழக்கங்கள், இயற்கைச் சட்டங்கள், ஆகியவற்றை அனுசரித்தே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஆகவே இங்கு இறைமைக்கு வரம்பிடப்படுகின்றது எனலாம். பன்மைவாதிகள் இறைமை பன்முகம் கொண்டது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆகவே இறைமை முழுமையானது, இறைமை சர்வ வியாபகமுடையது, இறைமை நிரந்தரமானது, இறைமை பிரிக்க முடியாதது என்பது கேள்விக்குள்ளாகின்றது.

கலாநிதி லிண்ட்சே “தனி அதிகாரமுள்ள அரசு என்ற கோட்பாடு கருத்தில்லாது போயிற்று”எனக் கூறுகின்றார். பார்க்கார் “ தனி அதிகாரமுள்ள அரசு என்ற அரசியல் வாய்ப்பாடு போன்றதொரு பயனற்றதும், வரண்டு போனதுமானதொரு கோட்பாட்டைக் காணமுடியாது” எனக் கூறுகின்றார். “இறைமை என்ற கருத்தை முற்றாகக் கைவிட்டால் அது அரசியல் விதிமுறைகளுக்கு நிரந்தரமான நன்மை பயக்கும்” என்று லஸ்கி கூறுகின்றார்;.

சமூகத்திலுள்ள மக்கள் தமது நலவுரிமைகளையும், நலன்களையும், அபிவிருத்தி செய்ய பல்வேறு விதமான சமூக, பொருளாதாரச் சங்கங்கள் உள்ளன எனப் பன்மைவாதிகள் கூறுகின்றனர். இப் பலவகையான சங்கங்கள் அரசிலிருந்து தோன்றியவைகளல்ல. தனிப்பட்ட முறையில் தோன்றியவைகளாகும். இவைகள் அரசுக்குப் புறம்பான தனியான அதிகாரமும், சக்தியும் பெற்றவைகளாகும். சுயேச்சையாகத் தோன்றிய இந்தத் தொகுதிகள் , சங்கங்கள், என்பவை அரசைப் போலவே முக்கியம் வாய்ந்தவைகளாகும். அரசு இச்சங்கங்கள் மீது தனி அதிகாரம் செலுத்தும் தகைமையற்றதுடன் அவற்றைத் திறம்பட நிருவகிக்கவோ, அவற்றின் கடமைகளை விவேகமாகப் பாரிபாலிக்கவோ சக்தியற்றதெனவும் பன்மைவாதிகள் கூறுகின்றனர்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

10,114 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>