ஐக்கிய அமெரிக்க சிவில் சேவை

ஐக்கிய அமெரிக்கா பிரித்தானிய காலனித்துவத்துக்குட்பட்டிருந்த ஒரு நாடாகும். ஐக்கிய அமெரிக்காவின் சிவில் சேவையானது ஆரம்பத்தில் பிரித்தானிய மாதிரியைப் போன்றதாகவே காணப்பட்டிருந்தது. இவர்கள் முடிக்குரிய அரச ஊழியர்களாக மதிக்கப்பட்டதுடன், அரசின் தனி உரிமைகளை அனுபவிப்பவர்களாகவும் இருந்தனர்.

அமெரிக்கப்புரட்சியின் பின்னர் அரசியல் முறைமையில் ஏற்பட்ட மாற்றம் போன்று, சிவில் சேவையிலும் மாற்றம் ஏற்பட்டது. சிவில் சேவையில் ஊழியர்களைச் சேர்த்துக் கொள்ளும் வழிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முற்பட்டனர். அத்துடன் சிவில் சேவையில் தரம் வாய்ந்த அம்சங்களைப் புகுத்த விழைந்தார்கள். இவ் அம்சங்களை அநேக மாநில அரசுகளும், உள்ளூராட்சி அமைப்புக்களும் பின்பற்றத் தலைப்பட்டன. அதாவது அரச உத்தியோகம் என்பது அதிகாரத்திற்கு வரும் அரசியல் கட்சிக்கான முழு அளவிலான ஆதரவின் வழி தோற்றம் பெறுகின்ற அமைப்பாக வளர்ச்சியடையத் தொடங்கியது. இதனை ஆதரவு முறை (Spoils System) என அழைக்கின்றனர்.

இவ்அத்தியாயம் ஐக்கிய அமெரிக்க சிவில் சேவையில் காணப்பட்ட ஆதரவு முறைமை, முற்போக்குச் சீர்திருத்த இயக்கங்கள்,பென்லெற்ரன் சீர்திருத்தம், சிவில் சேவைச் சீர்திருத்தச்சட்டங்கள் தொடர்பாகப் பரிசீலனை செய்வதுடன், சிவில் சேவை தொடர்பான சமகால சிந்தனைகளையும் பரிசீலனை செய்கின்றது.

ஆதரவு முறை

1821ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு மாநில அரசுகளும் ஆதரவு முறையைப் பின்பற்றி சிவில் சேவையை நிறுவத் தொடங்கின. ஆனால் சமஷ்டி மட்டத்தில் இச் செய்முறையில் சிறிய இடைவெளி காணப்பட்டிருந்தது. இதற்கான அடிப்படைக் காரணங்களாகப் பின்வருவன கூறப்படுகின்றன:

· ஐக்கிய அமெரிக்கப் புரட்சியானது ஜனநாயகச் செயற்பாட்டுக்கான வழிவகைகளை உறுதிப்படுத்திய ஒரு புரட்சியாகவே கொள்ளப்பட்டிருந்தது. புரட்சியின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா உருவாக்கிய சமஷ்டி அரசியல் திட்டமானது ஜனநாயகப்பண்புகளைப் பிரதிபலிக்கின்ற அமைப்பாகவே தோற்றம் பெற்றிருந்தது. இதனால் ஆதரவு முறை தொடர்பாக அரசியல் திட்டத்தில் எங்குமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதுடன் அதை ஆர்வமாக நோக்கவுமில்லை.

· 1800 களில் தோமஸ் ஜெபர்ஸன் (Thomas Jefferson) காலத்தில் இருந்து 1828 இல் அன்ட்ரு ஜக்ஸன் (Andrew Jackson) காலம் வரை சமஷ்டி அரசாங்கமானது கட்சிக்கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இக்காலத்தில் சிவில் சேவை தொடர்பான அடிப்படை மாற்றம் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.

· ஜனாதிபதி வாஷிங்டன் (Washington), சமஷ்டி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களில் உயர் திறமையைப் பேணக்கூடிய நிர்வாகத்தை உருவாக்கியிருந்தார். அதே நேரத்தில் சமஷ்டி அரசாங்க சேவையாளர்களுக்கான நியமனத்தில் தூய கட்சி அர்ப்பணிப்பை ஒரு நிபந்தனையாகப் பேண முற்பட்டிருந்தார். இது அரசியல் தந்திரோபாயமாகப் பயன்படுத்தப்பட்டதுடன், சமஷ்டி அரசாங்க சிவில் சேவையாளர்களின் நியமனத்தில் உயர் திறமையே முதன்மையாக எதிர்பார்க்கப்பட்டது.

அன்ட்ரு ஜக்ஸன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், சிவில் சேவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை மாற்றங்கள் தொடர்பாக எடுத்துக் கூறியிருந்தார். அரசாங்க உத்தியோகம் தேசிய வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக அமைய வேண்டும் என்பது இவரின் கருத்தின் மையமாகக் காணப்பட்டது. ஆயினும் அன்ட்ரு ஜக்ஸன் சமஷ்டி அரசாங்கத்தின் சிவில் சேவையில் ஆதரவு முறை அறிமுகப்படுத்துவதை ஆதரித்ததுடன், நடைமுறைப்படுத்தவும் முற்பட்டிருந்தார். தனது சிந்தனையில் ஏற்பட்ட இம்மாற்றத்தை நியாயப்படுத்தும் வகையில் பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார்.

  • ஒருவர் நீண்ட காலமாக சிவில் சேவையில் பணியாற்றுகின்ற போது அதன் மீது சலிப்பும், வெறுப்பும் ஏற்படுகின்றது. இதனால் பிற்காலத்தில் ஊழல், இலஞ்சம் போன்ற தவறான வழிமுறைகளை அவர் பின்பற்றத் தொடங்குவார்.
  • சிவில் சேவையில் ஒருவர் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும் போது “அரச சேவை” என்பதை மறந்து தனது சொந்தத் தொழிலாகவே இதனைக் கருதி விடுகின்றார். இது இலஞ்சம், ஊழல், அதிகாரவெறி போன்ற தீய செயற்பாடுகளுக்கு வழி வகுக்கின்றது.
  • உயர்பதவிகளை ஒருசிலர் மட்டுமல்லாது எல்லோரும் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிவில் சேவை தேசியத்தன்மையைப் பெற்றுக்கொள்ளும். எனவே எல்லோருக்கும் சிவில் சேவையில் ஒருதடவையாவது பங்கு பற்றுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். இதற்கு ஆதரவு முறை அவசியமானதாகும்.

அன்ட்ரு ஜக்ஸன் ஆரம்பித்து வைத்த இச்செய்முறையானது அடுத்து வந்த நான்கு தசாப்த காலத்துக்குள் ஐக்கிய அமெரிக்க சமஷ்டி அரசாங்கத்தில் மிகவும் ஆழமாகச் செல்வாக்குச் செலுத்தியது. இது அரசாங்க உத்தியோகம் என்பது தனித்து அரசியல் ஆதரவின் வழி பெறப்படுகின்ற ஒன்று என்ற சிந்தனை வளரக் காரணமாயிற்று. ஒருவர் தான் ஆதரிக்கின்ற கட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் அக்கட்சிக்குத் தான் செலுத்தும் விசுவாசத்தின் வழி அரசாங்க உத்தியோகங்களைப் பெற முடிந்தது. அரசியல் கட்சி விசுவாசம் என்பதே பாரிய தகுதியாகவும் கருதப்பட்டது.

ஐக்கிய அமெரிக்க சிவில் சேவையில் ஆதரவு முறை பின்பற்றப்பட்டு வந்தமை பல விமர்சனங்களை ஏற்படுத்தி வந்துள்ளது. இவ் விமர்சனங்கள் மூலம் நடைமுறையில் உள்ள ஆதரவு முறையில் பல குறைபாடுகள் உள்ளன என்பது கண்டறியப்பட்டிருந்தது.

  • சிவில் சேவைப் பதவிகள் ஆதரவு முறையின் அடிப்படையில் வழங்கப்பட்டதால் அரசியல் செல்வாக்கு என்பதே முதன்மையான ஒரு தகுதியாகக் கருதப்பட்டது. இதனால் திறமை, தகுதி என்பன இல்லாதவர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு சிவில் சேவையே அமெரிக்காவில் உள்ளது எனலாம். கட்சி மாற்றம் என்பது சிவில் சேவையாளர்களையும் மாற்றத்திற்கு உட்படுத்தியதனால், சிவில் சேவையளர்கள் மூப்பின் மூலமான அனுபவத்தைப் பெறுகின்ற வாய்ப்பு இல்லாதொழிக்கப்பட்டது. அனுபவம் குன்றிய அல்லது இல்லாத சிவில் சேவையாளர்களைக் கொண்ட சிவில் சேவையாக இது காணப்பட்டது.
  • சிவில் சேவையானது கட்சி சார்பான சிவில் சேவையாகத் தோற்றம் பெறலாயிற்று. பதவிக்கு வருகின்ற அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரிப்பவர்களையும், ஜனாதிபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களையும் கொண்ட ஒரு நிர்வாக சேவையாக உருப்பெறலாயிற்று. பொது நல நோக்குடன், நடுவுநிலைமை வகித்துச் செயற்பட வேண்டிய சிவில் சேவையானது, கட்சி நலனுக்காக உழைக்கக் கூடிய சிவில் சேவையாகத் தோற்றம் பெறலாயிற்று.
  • கட்சி அரசியல் மாற்றங்கள் சிவில் சேவையைத் தீர்மானிக்கும் சக்தி கொண்டதாகக் காணப்பட்டதால், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை சிவில் சேவையாளர்களும் பதவி மாற வேண்டி ஏற்பட்டது. இது அரசாங்கத்தின் பொதுச் செலவீனங்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்திருந்தது. அரசாங்கம் மாறுகின்ற போது சிவில் சேவையாளர்களும் மாறுகின்றதனால் புதிதாக வரும் சிவில் சேவையாளர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டி ஏற்பட்டது. இது செலவீனங்கள் அதிகரிப்பதற்குக் காரணமாகியது.
  • சிவில் சேவை அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு நிறுவனமாகியது. அரசியல் வாதிகளைச் சார்ந்து இருக்கின்ற ஒரு சிவில் சேவையாகவே இது காணப்பட்டது. இதனால் திறமை பொருந்திய பலர் சிவில் சேவைக்குள் நுழைவதற்கு வாய்பற்றவர்களாகக் காணப்பட்டிருந்தார்கள்.

முற்போக்குச் சீர்திருத்த இயக்கங்கள்

ஐக்கிய அமெரிக்க சிவில் சேவையில் பல குறைபாடுகள் காணப்பட்டதால், உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் அமெரிக்க சிவில் சேவை தொடர்பான பல முற்போக்குச் சீர்திருத்த இயக்கங்கள் தோற்றம் பெற்றன.

இச்சீர்திருத்த இயக்கங்கள், சிவில் சேவையானது மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளக் கூடியதும், திறமையை வெளிக்காட்டக் கூடியதுமான ஒரு நிறுவனமாக உருப்பெற வேண்டும் என வலியுறுத்தின.

1865ஆம் ஆண்டு முதலாவது தடவையாகச் சீர்திருத்த மசோதாக்கள் உருவாக்கப்பட்டன. காங்கிரஸ் உறுப்பினர்களாகிய தோமஸ் ஏ.ஜெங்கிஸ் (Thomas A.Jenckes) சமஷ்டி அரசின் சிவில் சேவையானது எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக ஓர் அறிமுகப் பிரேரணையை முன்வைத்தார். ஆயினும் இவரது சீர்திருத்தம் வெற்றியளிக்கவில்லை. ஆனால் இவரது முயற்சி எதிர்காலத்தில் புதிய பல சீர்திருத்தங்கள் ஏற்படுவதற்கான அத்திவாரத்தை ஏற்படுத்தியிருந்தது.

1871ஆம் ஆண்டு செனற் சபை உறுப்பினர் லீமன் ரும்புல் (Lyman Trumbull) என்பவர் பொதுச் சேவையின் சட்ட ஒழுங்குகள் தொடர்பான மசோதா ஒன்றை ஜனாதிபதிக்குச் சமர்ப்பித்தார். இம் மசோதா காங்கிரஸினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இம் மசோதாவுக்குப் பத்திரிகைகள் அளித்த வரவேற்பு, சிவில் சேவை தொடர்பான விழிப்புணர்வுகளை மேலும் தூண்டுவதாக அமைந்திருந்தது.

ஜனாதிபதி இம்மசோதாவை அடியொற்றிச் சட்ட ஒழுங்குகளை அமுலாக்குவதற்கான சிவில் சேவை ஆணைக்குழு ஒன்றைத் தோற்றுவித்தார். இவ்வாணைக்குழு ஒவ்வொரு சமஷ்டித் திணைக்களத்திலும் பரீட்சார்த்திகள் சபை ஒன்று நிறுவப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கியது.

ஆனால் சமஷ்டி அரசின் நலன்களுக்குக் காங்கிரஸ் அளித்து வந்த முக்கியத்துவமானது இவ்வாணைக் குழுவின் முக்கியத்துவத்தினைப் புறந்தள்ளியது. மீண்டும் ஆதரவு முறையினைப் பின்பற்ற வேண்டிய அவசியம் கட்சி அரசியல் நலன்வழி முதன்மைப்படுத்தப்பட்டது. இதனால் காங்கிரஸ் இவ்வாணைக் குழுவையும் ஆணைக் குழுவிற்கு நிதி வழங்குவதையும் மிக இலகுவாக நிராகரித்திருந்தது.

மீண்டும் ஐக்கிய அமெரிக்க சிவில் சேவையில் ஆதரவு முறை நுழைந்து கொண்டமை முற்போக்கு எண்ணங்களைக் கொண்டவர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்திருந்தது. பல இயக்கங்கள் சிவில் சேவை புனரமைக்கப்பட வேண்டிய அவசியம் தொடர்பாக எடுத்துக் கூறின. இதன் விளைவாக 1873இல் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

பென்லெற்ரன் சீர்திருத்தம் – 1883 ( The Pendleton Act – 1883)

பல ஆண்டுகள் நடைபெற்ற முயற்சியின் விளைவாகச் சிவில் சேவை ஆணைக்குழு ஐக்கிய அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்டது. இக்காலத்தில் வேறுபட்ட பல சிவில் சேவைச் சீர்திருத்தக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. 1877 ஆம் ஆண்டு முதலாவது சீர்திருத்தக் கழகம் நியூயோர்க்கில் தோற்றுவிக்கப்ட்டது. 1880ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் ஏனைய நகரங்களில் இது போன்ற கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

1881ஆம் ஆண்டு செனற்சபை உறுப்பினர் ஜோர்ஜ் எச் பென்லெற்ரன் (George H. Pendleton) சிவில் சேவைச் சீர்திருத்த மசோதா ஒன்றை வெளியிட்டிருந்தார். இம் மசோதா காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டபோது தோல்வியைத் தழுவியது. ஆனால் நியூயோர்க்கில் இயங்கிய சிவில் சேவைச் சீர்திருத்தக் கழகமானது இவரது சீர்திருத்த மசோதாவை ஆதரித்து இருந்தது.

1883ஆம் ஆண்டு பென்லெற்ரன் அறிக்கை காங்கிரஸில் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் இவ்வறிக்கையின் மூலம் ஐக்கிய அமெரிக்காவின் சிவில் சேவை மேன்மையடையும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

பென்லெற்ரன் சீர்திருத்தத்தில் காணப்பட்ட முக்கியமானதும், பிரதானமானதுமான அம்சம், சிவில் சேவையாளர்கள் திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் திறமையடிப்படையில் சேர்க்கப்பட்டமையாகும். இதனை விட அரசியல் காரணங்களுக்காகச் சட்ட விதிகளுக்கு முரணாகப் பதவி நீக்குதல், பதவி இறக்குதல், பதவி விலகும்படி நிர்ப்பந்தித்தல் போன்றவற்றிலிருந்து சிவில் சேவையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியது. மேலும் தகுதிகாண் காலம் என்ற ஒன்றைச் சிவில் சேவையாளர்களுக்கு வழங்கியிருந்தது. இது அரசியல் அழுத்தத்தின் மூலம் வரும் நியமனங்களில் இருந்து சிவில் சேவையைப் பாதுகாப்பதாக இருந்தது.

பென்லெற்ரன் சட்டத்தின் விதிகள், ஐக்கிய அமெரிக்கவில் காணப்பட்ட பல்வேறு தரப்பட்ட பதவிகள் மீதும் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி ஜனாதிபதி விரும்பும் போது இச்சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆயினும், திறமைக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இச்சட்டம் வலியுறுத்திக் கூறுகின்றது. இதனால் 1883 ஆம் ஆண்டிலிருந்து திறமையை அடிப்படையாகக் கொண்ட சிவில் சேவையை ஐக்கிய அமெரிக்காவில் கட்டியெழுப்ப முடிந்தது.

பென்லெற்ரன் சீர்திருத்தமானது ஐக்கிய அமெரிக்காவின் சிவில் சேவைப் பதவிகளை ஒழுங்குபடுத்தி, பதவிக்கு ஏற்ப நியமனங்களை வழங்கக் கூடிய ஏற்பாடுகளைச் செய்திருந்தது. சிவில் சேவையாளர்களைத் தரம் I,II,III என்று வகைப்படுத்தக் கூடிய வழிவகைகளைச் செய்திருந்தது. பதவிகள் வகைப்படுத்தப்பட்டதன் மூலம் சிவில் சேவையாளர்களை நிர்வகித்தல் இலகுபடுத்தப்பட்டது. தகுதி, திறமை கொண்ட சிவில் சேவையாளர்கள் தோற்றம் பெறுவதற்கு இது தளமாக அமைந்திருந்தது.

பென்லெற்ரன் சீர்திருத்தம் ஐக்கிய அமெரிக்காவில் “சிவில் சேவை ஆணைக்குழு” என்ற ஓர் அமைப்பைத் தோற்றுவித்திருந்தது. தேவையான சட்டங்கள், விதிகளை வடிவமைப்பதற்கு இவ் அமைப்புக்கு அதிகாரமளிக்கப்பட்டது. இவ் ஆணைக்குழு சிவில் சேவைக்கான ஆட்களைத் தெரிவு செய்யும் அதிகாரத்தைக் கொண்டிருந்தது. பெருமளவுக்குப் பிரித்தானியாவில் பின்பற்றப்படுவது போன்று போட்டிப் பரீட்சைமூலம் நியமனங்களைச் செய்வதற்கு முற்பட்டது.

ஆனாலும், ஆணைக்குழுவின் அதிகாரத்திற்குட்படுகின்ற விடயங்கள் அனைத்தையும் ஜனாதிபதியே தீர்மானிப்பார். எனவே, இது சமஷ்டி அரசாங்கத்தின் சிவில் சேவையாளர்களைக் கண்காணிக்கும் ஓர் அமைப்பாகும் எனக் கூறப்பட்டது. இதனால் இதனைச் சிவில் சேவையின் காவல் நாய் (Watch Dog) என வர்ணிக்கின்றனர்.

1983ஆம் ஆண்டு 13,900 பதவிகள் சிவில் சேவை மூலம் நிரப்பப்பட்டன. ஆனால் இவற்றில் 10 % த்துக்குச் சற்றுக் கூடுதலான தொகையினரே சமஷ்டி அரசாங்க சிவில் சேவையாளர்களாவர். ஆனால் சமஷ்டி அரசாங்க சிவில் சேவையாளர்கள் திறமையடிப்படையில் போட்டிப் பரீட்சை மூலம் படிப்படியாகத் தெரிவு செய்யப்பட்டனர். 1946ஆம் ஆண்டு அரசாங்க நியமனங்களில் ஏறக்குறைய 92 % மான நியமனங்கள் திறமை அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன. 2002ஆம் ஆண்டில் எல்லா வகையான சமஷ்டி சிவில் சேவைகளிலும் 75% மானவை திறமையின் அடிப்படையில் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டன. நியமனம் போட்டிப்பரீட்சையின் அடிப்படையில் இடம் பெற்றதால், அரசியல் கட்சி சார்பான முறையில் தொழிற்படும் ஒன்றாக இருந்து வந்த சிவில் சேவையானது, நடுவு நிலையான சிவில் சேவையாக மாற்றியமைக்கப்பட்டது.

சிவில் சேவைச் சீர்திருத்தச்சட்டங்கள்.

நடைமுறையிலுள்ள பென்லெற்ரன் சிவில் சேவைச் சட்டத்தை மேலும் செம்மைப்படுத்தக் காலத்துக்குக் காலம் காங்கிரஸ் புதிய விதிகளை இயற்றியது. லோயிட் – லா பொலெற் (Lloyd-La Follette) சட்டம் 1912ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இது சிவில் சேவையாளன் தொழிற் சங்கத்தில் அங்கத்துவம் பெறவும், அதன் மூலம் தனது தொழில்சார் நலன்களைப் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்தது. 1920ஆம் ஆண்டு சிவில் சேவை ஓய்வூதியச் சட்டம் இயற்றப்பட்டது (The Civil Service Retirement Act). இது பின்னர் பல தடவை திருத்தப்பட்டுள்ளது. இதன் படி ஊழியர் பதிவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், உயிருடன் இருக்கும் வரை குறிப்பிட்ட பணத்தை ஊதியமாகப் பெறமுடியும். 1923 ஆம் ஆண்டு வகைப்படுத்தல் சட்டம் (Classification Act) இயற்றப்பட்டது. இதன் படி பதவி நிலைகள், சமமான வேலை, சமமான ஊதியம் என்ற தத்துவத்தின் படி வகைப்படுத்தப்பட்டன. 1939 ஆம் ஆண்டு ஹெர்ச் சட்டம் (Hatch Act) இயற்றப்பட்டது.இது சிவில் சேவையாளர்கள் அரசியல் தேர்தல் பிரசாரத்தில் பங்குபற்றுவதைத் தடுத்திருந்தது.

1944ஆம் ஆண்டு படைவீரராக நீண்டகாலம் பணியாற்றியவர்களுக்கான முன்னுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. (Hatch Act) இதன் படி படைவீரராக நீண்டகாலம் பணியாற்றிய ஒருவர் சிவில் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் தோற்றினால் அவருக்கு 5 புள்ளிகள் மேலதிகமாக வழங்கப்படும். ஊனமுற்ற படைவீரர் ஒருவர் சிவில் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் தோற்றினால் அவருக்கு 10 புள்ளிகள் மேலதிகமாக வழங்கப்படும் அல்லது அவரது மனைவி சிவில் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் தோற்றினால் அவரது மனைவிக்கு 10 புள்ளிகள் மேலதிகமாக வழங்கப்படும். 1962ஆம் ஆண்டு சமஷ்டி சம்பள புனரமைப்பு சீர்திருத்தச் சட்டம் (Federal Salary Reform Act of 1962) இயற்றப்பட்டது. இதன்படி தனியார் துறைக்குச் சமமான சம்பளம் சிவில் சேவையாளர்களுக்கு வழங்கும் கொள்கை உருவாக்கப்பட்டது.

1978ஆம் ஆண்டு சிவில் சேவைச் சீர்திருத்தச்சட்டம்

1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிவில் சேவைச் சீர்திருத்தச்சட்டம் சிவில் சேவை முறைமையை நெகிழ்வானதாக்க முயற்சிக்கும் பாரிய சீர்திருத்தமாகும். இது சிவில் சேவை ஆணைக்குழுவை இல்லாதொழித்திருந்தது. இதற்குப் பதிலாகப் புதிய இரண்டு நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஒன்று ஆளணி முகாமைத்துவ அலுவலகம் (Office of Personal Management- OPM) மற்றையது திறமை முறைமையைப் பாதுகாக்கும் சபை (Merit Systems Protection Board – MSPB) என்றும் அழைக்கப்பட்டது. OPM அமைப்பானது முழு ஆளணி முகாமைத்துவத்துக்கும் பொறுப்பானதாக இருந்தது. MSPB அமைப்பானது பல முக்கிய பொறுப்புக்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக ழுPஆ இன் சட்ட, ஒழுங்கு பரிமாணங்களை மேற்பார்வையிடுவது போன்ற விடயங்களுக்குப் பொறுப்பாக இருந்தது.

இச் சட்டத்தின் படி, உயர் மட்ட உத்தியோகத்தர்கள் குழுக்களாக்கப்பட்டனர். முன்னர் சேவைக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டு வந்த ஊதியம் இப்போது, சிரேஷ்ட,மத்தியதர உத்தியோகத்தர்களின் திறமையின் அடிப்படையில் வழங்கப்பட்டது.

அதே நேரம் சிவில் சேவையாளர்கள் பல தொழில் சார் நன்மைகளைப் பெற்றுக் கொண்டார்கள். பங்களிப்புச் செய்யப்பட்ட இளைப்பாற்று முறைமை, செயலாற்றத் தூண்டும் பண வெகுமதிகள், சுகாதார காப்புறுதித் திட்டங்கள், ஊதியத்துடனான விடுமுறைகளும், சுகவீன விடுமுறைகளும், குறைந்த செலவுடனான கூட்டு வாழ்க்கை போன்ற நன்மைகளும் வழங்கப்பட்டன. அத்துடன் முறையான பதவி உயர்வுத் திட்டங்கள், தொழில் முன்னேற்றத்துக்கான பயிற்சித் திட்டங்கள் என்பனவும் வழங்கப்பட்டன.

இன்றைய ஐக்கிய அமெரிக்காவின் சிவில் சேவையானது திறமையை மையப்படுத்திய ஒன்றாகவே உள்ளது. சிவில் சேவைக்கு ஆட்களைத் திரட்டுவதற்காகச் சில திறமை முறைத் தத்துவங்கள் பின்பற்றப்படுகின்றமையால் சிவில் சேவையானது பக்கச்சார்பில்லாத ஒரு நிறுவனமாக உள்ளது. ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கு ஆர்வமுள்ள நிர்வாகப் பகுதிக்கு விண்ணப்பிக்க முடிகின்றதுடன், தனக்குப் பொருத்தமான நிர்வாகப் பதவிகளை பெற்றக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எல்லா வகையான சிவில் சேவைப்பதவிகளும் திறமையின் அடிப்படையில் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் நிரப்பப்படுகின்றன. இது ஒரு பொதுப்பரீட்சையாக அமையாது வேலைக்கு ஏற்ற அறிவைக் கண்டறியும் பரீட்சையாக மட்டும் அமைந்திருந்தது. போட்டியாளர்கள் 100 வரையிலான புள்ளிகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவார்கள்.70 புள்ளிகள் தேர்ச்சிப் புள்ளியாகக் கருதப்படும். நியமனங்கள் திறமை அடிப்படையில் அமைவதால் அரசியல், பால், நிறம், மதம்,இனம்,தேசம் போன்ற விடயங்கள் கருத்தில் எடுக்கப்படுவதில்லை.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

13,699 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>