(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.02.15, 2014.02.15 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிநாட்களில் இலங்கை இராணுவத்தினால் மீறப்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மூன்றாவது தடவையும் யுத்தக் குற்றச்சாட்டுப் பிரேரணையினை 2014 ஆம் ஆண்டு பங்குனி மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் ஐக்கிய அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ளதாக மத்திய மற்றும் தெற்காசியாவிற்கான ஐக்கிய அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிஷா டேசாய் பிஸ்வால் (Nisha Desai Biswal) அறிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் தீர்மானம் கொண்டவரப்படுவதற்கான அடிப்படை நியாயங்கள் சிலவற்றை ஐக்கிய அமெரிக்கா அண்மைக்காலங்களில் கூறி வருகிறது.
அடிப்படை நியாயங்கள்
2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த இறுதி நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பின் படி 40,000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறுதல் வேண்டும். மேலும், மிகவும் பாதகமாகவுள்ள மனிதவுரிமை விடயங்களைச் சீர்படுத்துவதில் காட்டப்படும் அக்கறையின்மை குறிப்பாக மனித உரிமை பாதுகாவலர்களைப் பழிவாங்குதல், சிறுபான்மை சமயத்தவர்களுக்கு எதிரான வன்முறை, சட்ட ஆட்சி வலுவிழந்து போவது, பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவது போன்றவற்றை இலங்கை நிறுத்த வேண்டும். அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றம் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவது துரிதப்படுத்தப்படல் வேண்டும் என்பன இதில் முக்கியமானவைகளாகும்.
இலங்கையினை பொதுமக்களுக்கு பொறுப்புக் கூறும் வகையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்தும்படியும், உள்நாட்டு யுத்தத்தின் இறுதிநாட்களில் சர்வதேச மனிதாபிமானச் சட்டம், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் என்பன மிகவும் மோசமாக மீறப்பட்டமை தொடர்பாக நம்பத்தகுந்த நீதி விசாரணைக்கான பொறிமுறையொன்றினை உருவாக்குமாறும் நீண்ட காலமாக ஐக்கிய அமெரிக்கா வலியுறுத்தி வந்துள்ளது. எனவே இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு இலங்கையே பொறுப்பெடுக்க வேண்டும் என்பதே ஐக்கிய அமெரிக்காவின்; கருத்தாகும்.
2014 ஆம் ஆண்டு பங்குனி மாதத்திற்கு முன்னர் யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றங்களை இலங்கை அரசாங்கம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கத் தவறினால்ää ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் பேரவை தனது நேரடியான விசாரணையினை இலங்கையில் ஆரம்பிக்கும் என நவநீதம்பிள்ளையும் தெரிவித்துள்ளார்.
உள்நோக்கம்
உள்நாட்;டு யுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளை முழுமையாக அழிப்பதன் மூலம் இலங்கையில் நிலையான சமாதானத்தை உருவாக்க முடியும் என்பது ஐக்கிய அமெரிக்காவின் முடிவாக இருந்தது. அதாவது யுத்த முனையொன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் திறப்பார்களேயாயின் அதன் விளைவுகள் எதுவாக இருப்பினும் அதனைப் பற்றிக் கருத்தில் கொள்ளாது, இலங்கை இராணுவத்தினைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளைப் ப10ரணமாக அழித்துவிட வேண்டும் என்பதே ஐக்கிய அமெரிக்காவின் முடிவாக இருந்தது. இதற்கு ஏற்ற வகையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தச் செயற்பாடுகளை வடிவமைப்பதில் ஐக்கிய அமெரிக்கா காத்திரமான வகிபங்கினையும் ஆற்றியது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகளை முழுமையாக அழிப்பதற்கு ஆதரவு வழங்கிய நாடு என்ற வகையில்ää இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிநாட்களில் இலங்கை இராணுவத்தினால் மீறப்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் தொடர்பாக விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமும்ää ஆர்வம் உண்மையில் ஐக்கிய அமெரிக்காவிற்கு கிடையாது.
அவ்வாறாயின் இலங்கையினை சர்வதேசளவில் தனிமைப்படுத்தும் இராஜதந்திர முயற்சியை ஏன் ஐக்கிய அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் மனித உரிமைகள் பேரவை ஊடாகச் செய்து வருகின்றன? ஐக்கிய அமெரிக்கா வகுத்துள்ள ஆசியப் பிராந்தியத்தின் அதிகார மையம் (pivot to Asia) என்னும் தந்திரேபாயத்தின் மூலம் சீனாவினைச் சுற்றிவளைத்து இராணுவ வலைப்பின்னலை உருவாக்குவதற்கு இலங்கையின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் இப்போது ஐக்கிய அமெரிக்காவிற்குத் தேவையாகவுள்ளது என்பதே இங்குள்ள சூட்சுமமாகும். உண்மையில் இங்கு விடை காண வேண்டிய கேள்வி ஏன் சீனாவினைச் சுற்றிவளைத்து இராணுவ வலைப்பின்னலை உருவாக்குவதற்கு ஐக்கிய அமெரிக்கா முயற்சிக்கின்றது என்பதேயாகும்.
கரீபியன் தீவிற்குள் சீனா
சீன ஜனாதிபதி எக்ஸ் ஐ ஜின்பிங் (Xi Jinping) அமெரிக்க பிராந்தியத்திலுள்ள கரீபியன் தீவாகிய ரினிடட் (Trinidad) கோஸ்ராறிக்கா மற்றம் மெக்ஸ்சிக்கோ ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து நூறு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குவது தொடர்பாக அறிவித்துள்ளார். இது பணத்தின் மூலம் உலகநாடுகளை குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் அயல்நாடுகளை விலை கொடுத்து வாங்குவதற்கு சீனா எடுக்கும்; முயற்சியின் ஒரு பகுதியாகும்.
வெனின்சுலா, ஈகுவோடார், போல்வியா, மெக்சிக்கோ ஆகிய நாடுகள் அண்மைக்காலமாக சீனாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளன. அமெரிக்கப் பிராந்தியத்திலுள்ள இந்நாடுகள் ஐக்கிய அமெரிக்காவுடன் பகைமை கொண்டுள்ள நாடுகளாகும். இந் நாடுகளுக்கு ஆயுதக் கொள்வனவிற்கான கடனை வழங்கி அக்கடனூடாக சீனாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய வைத்து ஐக்கிய அமெரிக்காவினை அச்சுறுத்துவதே சீனாவின் உள்நோக்கமாகும் என்பதே ஐக்கிய அமெரிக்க இராஜதந்திரிகளின் கருத்தாகும்.
அமெரிக்கப்பிராந்தியத்தில் எண்ணெய்வளம் மிக்கதொரு நாடுகளில் வெனின்சுலாவும் ஒன்றாகும். இந்நாட்டின் எண்ணெய்வளத்தினை அபிவிருத்தி செய்வதற்கு நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க சீனா தயாராக இருப்பதாக அண்மையில் அறிவித்துள்ளது. அதேபோன்று மெக்ஸ்சிக்கோவின் எண்ணெய்வள அபிவிருத்திக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரினையும், வர்த்தக அபிவிருத்திக்காக மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரினையும் கடனாக வழங்க இருப்பதாக சீன ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மெக்ஸ்சிக்கோவும், சீனாவும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் “தாய்வான் மற்றும் திபேத் தொடர்பாக சீனாவின் விவகாரங்களில் மெக்ஸ்சிக்கோ தலையீடு செய்யமாட்டாது” என புதிய ஜனாதிபதி என்றிகியு பெனா நைரொ (Enrique Pena Nieto) தெரிவித்துள்ளார். மெக்ஸ்சிக்கோவின் முன்னைநாள் ஜனாதிபதி பிலிப் கால்;ரோன் (Felipe Calderon) திபேத்தில் வாழமுடியாமல் வெளிநாட்டில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் திபேத்தின் தலைவர் தலைலாமாவினை (Dalia Lama) 2011 ஆம் ஆண்டு மெக்ஸ்சிக்கோவிற்கு அழைத்திருந்திருந்தார். இது சீனாவிற்கு மெக்ஸ்சிக்கோ மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறானதொரு சம்பவம் எதிர்காலத்தில் நடக்காமலிருப்பதை உறுதிப்படுத்த சீனா விரும்பியிருந்தது. சீனாவிற்குச் சாதகமான அரசாங்கம் ஒன்று என்றிகியு பெனா நைரொ தலைமையில் மெக்ஸ்சிக்கோவில் தற்போது உருவாகியுள்ளது. என்றிகியு பெனா நைரொ 2013 ஆம் ஆண்டு சித்திரை மாதம் சீனாவிற்கு விஜயம் செய்ததுடன்,யப்பானுக்கு சொந்தமான சென்காகூ தீவுகளை (Senkaku Islands) தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்ற அரசியல் இலக்கினை அடைவதற்கு சீனா எடுக்கும் முயற்சிகளுக்கு மெக்ஸ்சிக்கோவிடமிருந்து ஆதரவினைக் கோரியது. பாரியளவிலான இயற்கை வாயு, எண்ணெய் வளத்தினைக் கொண்டுள்ள சென்காகூ தீவுகள் தொடர்பாக சீனாவிற்கும் யப்பானுக்கும் இடையில் அண்மையில் தோன்றியுள்ள தகராறு திடீரென இராணுவ மோதலாக உருவாகிவிடக்கூடிய சூழல் உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய அமெரிக்காவிற்கு வடக்கேயுள்ள கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் ஜி மக்கே (Peter G. Mackay)அண்மையில் சீனா சென்று இருநாட்டு இராணுவப் பரிமாற்றம், இருநாட்டு இராணுவங்களுக்கிடையிலான இராணுவக் கூட்டுறவு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் சீனாவுடன் கைச்சாத்திட்டுள்ளார்.
கனடாவின் உள்கட்டுமான அபிவிருத்தியில் சீனா அதிக கவனம் எடுத்து வருகிறது. கனடாவின் இயற்கை வாயு மற்றும் எண்ணெய்வள உற்பத்திக்காக முப்பது பில்லியன் அமெரிக்க டொலரினை சீனாவின் அரச கம்பனிகள் செலவு செய்து வருவதாக கனடாவிற்கான சீனாவின் தூதுவர் ஷங் யுன்ஷய் (Zhang Junsai) தெரிவித்துள்ளார்.
சிங்கப்புரில் அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு மகாநாட்டில் ஐக்கிய அமெரிக்காவின் பசுபிக்பிராந்திய கடற்படைத்தளபதி சாமுவல் லொக்லீர் (Samuel Locklear) ஐக்கிய அமெரிக்காவின் கடற்பிராந்தியத்தினைச் சுற்றியுள்ள ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார ஒதுக்கீட்டு வலயத்தின் (Economic Exclusion Zones) 200 கடல் மைல்களுக்குள் சீனாவின் கடற்படை உள்நுழைந்து விட்டதாக கூறியுள்ளார். இதே மகாநாட்டில் சீனாவின் பொருளாதார ஒதுக்கீட்டு வலயத்தின் 200 கடல் மைகளுக்கு ஊடாக ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை தனது ஊடுருவலை நடாத்தி வருவதாகச் சீனாவும் உத்தியோக பூர்வமாகக் குற்றம் சாட்டியது.
இராணுவ நோக்கத்திற்காக சர்வதேசக்கடற்பரப்பையே ஐக்கிய அமெரிக்க கடற்படை பயன்படுத்துகிறது என ஐக்கிய அமெரிக்கா வாதிட்டாலும், சீனாவின் பொருளாதார ஒதுக்கீட்டு வலயத்தின் ஊடாகப் ஐக்கிய அமெரிக்க கடற்படை பிரயாணம் செய்வது சர்வதேச சட்டத்தினை மீறும் செயலாகும் என சீனா வாதாடியது. அவ்வாறாயின் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார ஒதுக்கீட்டு வலயத்திற்குள் சீனாவின் கடற்படை நடமாடுவதும் சட்டவிரோதமானதாகும் என ஐக்கிய அமெரிக்கா எதிர் வாதம் செய்துள்ளது.
“கரீபியன் தீவுகளில் குறிப்பாக ஹவாய் தீவுகள் மற்றும் குவாம் தீவுகளின் பொருளாதார ஒதுக்கீட்டு வலயத்தற்குள் சீனா தனது உளவுக்கப்பல்களை அனுப்பியுள்ளது. எனவே கடல் சட்டங்கள்,கடலில் கடற்படையின் செயற்பாடுகள் தொடர்பாக எதிர்காலத்தில் மீள விவாதித்து புதிய பொருளாதார ஒதுக்கீட்டு வலயங்களை உருவாக்க வேண்டும்” என ஐக்கிய அமெரிக்காவின் முன்னைநாள் இராணுவப்புலனாய்வாளர் லாறி வோட்ஷல் (Larry Wortzel) கூறுகின்றார்.
சீனா இராணுவத்தினை மேற்கோள்காட்டி பைனான்சியல் ரைம்ஸ் வெளியிட்ட செய்தியில் “கரீபியன் தீவிலுள்ள பொருளாதார ஒதுக்கீட்டு வலயத்திற்குள் நாம் ஒத்திகையொன்றினை செய்து பார்த்து அங்கிருந்து வெளியேறிவிட்டோம். ஐக்கிய அமெரிக்கா போன்று எல்லாக்காலங்களிலும் செயற்படுகின்ற திறமை எம்மிடம் இல்லை” எனத் தெரிவித்துள்ளது. சீனாவின் இவ் அறிவிப்பு தந்திரோபாய நோக்கம் கொண்டது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆயினும் சீனாவின் இராணுவ விவகாரங்களை பகுப்பாய்வு செய்யும் றிக் பிஸ்ஸர் (Rick Fisher) “ சீனா மிகவும் தந்திரோபாயமாக இலத்தீன் அமெரிக்காவிற்குள் நுழைந்து மிகவும் ஒழுங்குமுறைக்குட்பட்டு பணியாற்றுகின்றது. அதன் ஒரு பகுதியாக நீண்டகால நலனிற்காக அரசியல், பொருளாதார அபிவிருத்தியில் கவனம் செலுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலம்
ஐக்கிய அமெரிக்காவின் எதிர்கால நலன்களுக்கு சவால்விடக்கூடிய நிலையில சீனா வளர்ந்து வருவதை தடுப்பதே ஐக்கிய அமெரிக்காவின் நோக்கமாகும். பொருளாதார மற்றும் இராணுவ பலத்துடன் யூரேசியா (Eurasia) கைத்தொழில் மையத்தில் சிந்தாந்தப் பகைமை கொண்ட வல்லரசாக சீனா எழுச்சியடைந்து வருகின்றது. இது ஐக்கிய அமெரிக்காவிற்கு ஆசியாவில் இருக்கும் முதன்மையான நலன்களுக்கும் , தனது பூகோள வல்லரசு நிலைக்கும் எதிர்காலத்தில் ஆபத்தானதாகும். இதனைத் தடுப்பதற்கு ஐக்கிய அமெரிக்கா புதிய இராஜதந்திர வியூகங்களை வகுத்து வருகின்றது. இதற்காக கடந்த நான்கு வருடங்களாக மிகவும் கடுமையான இராஜதந்திர, இராணுவ தாக்குதல் திறன்களை ஐக்கிய அமெரிக்கா கட்டமைத்து வருகின்றது.
ஐக்கிய அமெரிக்காவின் ஆசியாவிற்கான இராஜாங்கத்திணைக்கள உத்தியோகத்தர் ஜோன் ரக்கிக் “பசுபிக் அதிகாரமையம் என்னும் எங்களுடைய தந்திரோபாய உறவினை சீனா தனது மிகவும் நேர்த்தியான எதிரிடையான செயற்பாடுகள் மூலம் மிகவும் திறமையாக தடுத்து நிறுத்திவிட்டது” எனத் கூறி தமது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஆயினும் இதற்குச் சமாந்திரமாக் ஆசியப் பிராந்தியத்தில் அதிகரித்துச் செல்லும் சீனாவின் அத்துமீறிய செயல்களுக்கு எதிராக ஆசியநாடுகளுடன் மிகவும் நெருக்கமான பொருளாதார, இராஜதந்திர,இராணுவ கூட்டுக்களை உருவாக்க ஐக்கிய அமெரிக்கா புதிய இராஜதந்திர வியூகங்களை வகுத்துள்ளது. அதாவது “ஆசியாவின் அதிகாரமையம் (pivot to Asia) என்ற புதிய தந்திரோபாய உறவினூடாக ஐக்கிய அமெரிக்கா சீனாவினைச் சுற்றிவளைப்பதற்கு முயற்சிக்கிறது.இதற்கு இலங்கையின் முழுமையான ஆதரவும்ää ஒத்துழைப்பும் ஐக்கிய அமெரிக்காவிற்குத் தேவைப்படுகிறது. இவ்ஆதரவையும், ஒத்துழைப்பையும் ஐக்கிய அமெரிக்காவிற்கும், அதன் நேச நாடுகளுக்கும்; இலங்கை வழங்கும் வரை இலங்கையினை அது தண்டித்துக் கொண்டேயிருக்கும். அதுவரை தமிழ்மக்கள் படுகொலையும் சர்வதேச அரங்குகளில் உரத்துப் பேசப்படும்.
ஆனால் இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் சீனா உருவாக்கியுள்ள முத்துமாலைத்தொடர் என்னும் கடல்வழித் தொடர்பாடலின் ஒரு முத்தாக இலங்கையினை சீனா உருவாக்க வாய்ப்புக் கொடுத்துள்ளனர். இதன்மூலம் ஆசியாவினைச் சுற்றி கடல்வழித் தொடர்பாடல் வலைப்பின்னலை சீனா உருவாக்குவதற்கு ஆதரவாகவும் செயற்படுகின்றனர். இதற்காக அரசியல்,பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை இலங்கை ஆட்சியாளர்களுடன் சீனா பலப்படுத்தி வருகிறது. இலங்கை தனது பெருமளவிலான உட்கட்டுமானப் பணிகளை சீனாவின் நிதியுதவியுடனேயே மேற்கொண்டு வருவதுடன் பல அபிவிருத்தித் திட்டங்கள் நீண்டகாலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. பல அபிவிருத்தித் திட்டங்கள் நீண்டகால கடனடிப்படையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களாகும். சீனா வழங்கியுள்ள உள்கட்டுமானப் பணிகளுக்கான கடனுதவி , துறைமுக அபிவிருத்திக்கான கடனுதவி, பாதுகாப்புக் கட்டமைப்பிற்கான கடனுதவி என்ற பல்வேறு கடனுதவித்திட்ட வலைக்குள் இலங்கை தற்போது விழுந்துள்ளது. இந்நிலையில் கடனுதவி வலையிலிருந்து அறுபட்டு வெளியே வர இலங்கை விரும்பினாலும் இது இப்போது சாத்தியமானதல்ல. ஏனெனில் இலங்கை தன்னைச் சுற்றி சீனா என்ற பெயரில் வலையைப் பின்னி அவ் வலைக்குள் தானே விழுந்துள்ளது.