இலங்கை இனப்பிரச்சினையில் நோர்வேயின் தார்மீகப் பொறுப்பு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.10.20, 2012.10.21 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002இலங்கையின் இனமோதலுக்கு மத்தியஸ்த்தம் வகிக்கும் வகிபாகத்திலிருந்து இந்தியா உத்தியோக பூர்வமாக வெளியேறிய பின்னர், இருதரப்பிற்குமிடையில் நீடித்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அரசியல் தீர்வினையடைவதற்கு மத்தியஸ்தராக நோர்வேயினைப் பயன்படுத்த இருதரப்பும் உடன்பட்டன. இதனடிப்படையில் 2002ஆம் ஆண்டு மாசி மாதம் 22ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட நோர்வே உதவியது. மேலும் நோர்வே இவ்யுத்த நிறுத்த உடன்படிக்கையினைக் கண்காணிப்பதற்கு யுத்த நிறுத்த உடன்பாட்டு ஏற்பாடுகளுக்கு ஏற்ப இலங்கை சர்வதேச யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஒன்றை உருவாக்கியது. இது இலங்கை கண்காணிப்புக் குழு (SLMM) என அழைக்கப்பட்டது. ஸ்கன்டினேவிய நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இக்கண்காணிப்புக் குழு யுத்த நிறுத்த உடன்பாட்டிலுள்ள விதிகள், நிபந்தனைகள் மீறப்படுகின்ற போது விசாரணை செய்யும் அதிகாரத்தினைப் பெற்றிருந்தது. இவைகளைத் தவிர இராஜதந்திர முகவர், யுத்த நிறுத்த உடன்படிக்கையினை மேற்பார்வையிடுபவர், மனிதாபிமானம் மற்றும் அபிவிருத்தியின் ஸ்தாபகர், இருதரப்பிற்கும் தேவையான நிதியுதவிகளைக் பெற்றுக் கொடுப்பவர் என பல்பரிமாணத் தோற்றத்தினை நோர்வே இலங்கையில் வெளிப்படுத்தியது.

பேச்சுவார்த்தை முயற்சிகள்

2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற தேவையான ஒழுங்குகளை நோர்வே அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. நோர்வேயின் மத்தியஸ்த்தத்தின் ஊடாக தாய்லாந்து, நோர்வே, ஜேர்மனி, யப்பான் ஆகிய நாடுகளில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இப்பேச்சுவார்த்தையில் மனிதாபிமான உதவிகளும் மீள் கட்டுமானமும், கண்ணி வெடிகளை அகற்றுதல், உள் இடப்பெயர்விற்குள்ளான மக்களுக்கு புனர்வாழ்வளித்தலும், அவர்களைத் துரிதமாகக் குடியேற்றுதலும், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற விடயங்கள் முதன்மையான இடத்தினைப் பெற்றிருந்தன.

இலங்கையின் கூட்டுக்கட்சி அரசாங்கம் உருவாக்கப்படுவது பொதுவானதொரு அரசியல் கலாசாரமாகவுள்ளது. இது இலங்கையின் இனமோதலுக்கான தீர்வினைக் காண்பதற்குச் சாதகமானது என்பது எவ்வளவிற்கு உண்மையானதோ அந்தளவிற்குப் பாதகமானது என்ற உண்மையினையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கூட்டு அரசாங்கத்தில் பங்கெடுக்கின்ற அரசியல் கட்சிகளுக்கு இடையில் இனமோதல் தொடர்பான பொது இணக்கப்பாட்டினை காண்பது நோர்வேக்குப் பெரும் பிரச்சினையாக இருந்தது. இதனால் இலங்கையின் இன மோதலின் முக்கிய பங்குதாரர்களை ஓரிடத்திற்குக் கொண்டு வருவதற்கு நோர்வே பெரிதும் சிரமப்பட வேண்டியிருந்தது.

இந்தியா, யப்பான் போன்ற நாடுகள் உட்பட பல சர்வதேசநாடுகள் வெளிப்படையாகச் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தமது முழுமையான ஆதரவினைத் தெரிவித்து வந்தன. சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தேவையான முழு விடயங்களையும் இந்தியா வழங்கி நெறிப்படுத்தி வந்தது. இதனால் சமாதானப் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் ஆதரவு முழுமையானதாக இருக்கின்றது என்பதில் நோர்வே நம்பிக்கை கொண்டிருந்தது. இன்னோர் வகையில், பிராந்திய அதிகாரப் போராட்டத்தின் யதார்த்தத்தினை நோர்வே ஏற்றுக்கொண்டிருந்தது எனலாம்.

நோர்வேயின் தடுமாற்றம்

இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினை நெறிப்படுத்திய நோர்வேயினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாகிய கிளிநொச்சி, முல்லைதீவு போன்ற பிரதேசங்களில் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளைச் செயற்படுத்தக்கூடிய சூழ்நிலையினை உருவாக்க முடியாமல் இருந்தது. அதேநேரம் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தந்திரமாகத் தமது அரசியல் வேலைகளைச் செய்வதற்கு நோர்வே வாய்ப்புக்களைத் தேடிக் கொடுத்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள் ஈர்ப்பதற்கும், அதற்குப் பயிற்சியளிப்பதற்குமான தந்திரோபாயமாக இவ்வாய்ப்புக்களைத் நோர்வே தேடிக் கொடுத்ததாகக் கருத முடியும்.

மறுபக்கத்தில் யாழ் குடா நாட்டிற்கான பிரதான போக்குவரத்துப்பாதை மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்டப்படியற்ற ஆனால் நடைமுறையிலிருந்த அரச பிரதேசத்திற்கு ஊடாக (Defacto State) பிரயாணம் மேற்கொள்ளும் மக்கள், வாகனங்கள், பொருட்கள் மீது இவர்கள் வரி விதிக்கத் தொடங்கினார்கள். இவைகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இல்லாத விடயங்களாகும். இவற்றைக் கட்டுப்படுத்த அல்லது தடுக்க முடியாத நிலையில் நோர்வே இருந்தது. இது நோர்வே தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஒரு நாடாக விமர்சனம் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தது.

மேலும், இராணுவ ரீதியாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் பலமடைவதைத் தடுக்கக் கூடிய வல்லமையற்ற நிலையில் நோர்வே இருந்ததையும் அவதானிக்க முடிந்தது. இரு தரப்பும் தமது அரசியல் விரோதிகளைப் பரஸ்பரம் படுகொலை செய்கின்ற கலாசாரமும் அதிகரிக்கத் தொடங்கியது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவராவிட்டாலும் 2005ஆம் ஆண்டு ஆவணி மாதம் வரையில் ஏறக்குறைய 3113 பேர்கள் (2002 இலிருந்து 2005 வரை) படுகொலை செய்யப்பட்டதாகவும் இதில் 141 பேர்கள் அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்றும், குறிப்பாக 2003ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் வரையில் 38 அரசியற் படுகொலைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகின்றது. நோர்வே தனது மத்தியஸ்தப் பணியை சிறப்பாகச் செய்ய முடியாமல் தடுமாறியதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பான நாடுகளாக நோர்வேயும், டென்மார்க்கும் விமர்சிக்கப்பட்டு வந்ததுடன், தேவையான நிதியுதவிகளையும் இவர்கள் வழங்கி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தன. நோராட் (Norad) ரெட்பானா (Red Barna) போன்ற அமைப்புகளுடாக நோர்வே நிதி வழங்கியதாகக் கூறப்படுகின்றது. 2005ஆம் ஆண்டு எரிக்சொல்ஹெய்ம் 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை (TRO) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. மேலும் ஒஸ்லோவில் சர்வதேசத் தொடர்பாடல் தலைமையகத்தினை அமைப்பதற்கும் நோர்வே அனுமதியளித்திருந்ததாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் சிறந்த வானொலி தொடர்பாடல் வலைப்பின்னலை உருவாக்கிக் கொள்ள நோர்வே உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

யுத்த நிறுத்த காலத்தில் வெளிவந்த இச்செய்திகளை நோர்வே மறுத்திருந்ததாயினும் மத்தியஸ்த்தப் பணியை மேற்கொள்ளும் நாடு பக்கச்சார்பாக நடந்து கொண்டது தவறானது என்ற விமர்சனம் நோர்வேக்கு உள்ளது. மொத்தத்தில் இலங்கையின் இன மோதலை சமாதானமாகத் தீர்ப்பதில் நோர்வே தோல்வி கண்டதுடன், சிறப்பாக அப்பணியைச் செய்ய முடியாது தடுமாறியது என்று கூறலாம்.

அரசியல் நெருக்கடி

யுத்தநிறுத்த காலப்பகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் (ஐக்கிய தேசியக் கட்சி) அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கா பண்டாரநாயக்காவிற்கும் (பொதுஜன ஐக்கிய முன்னணி) இடையில் ஏற்பட்ட திடீர் அரசியல் மோதலைச் சீர்ப்படுத்த நோர்வே முயற்சித்ததாயினும் அது தோல்வியில் முடிவடைந்தது. இதனால் ஏற்பட்ட பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்து, ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்றத்தினைக் கைப்பற்றி புதிய அரசாங்கத்தினை உருவாக்கிக் கொண்டது. இது நோர்வேயின் மத்தியஸ்த்த முயற்சியில் பாரிய அரசியல் பின்னடைவினை ஏற்படுத்தியிருந்தது.

ரணில் விக்கிரமசிங்காவினால் ஏற்படுத்தப்பட்டிருந்த சர்வதேச வலையமைப்புத் தொடர்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அச்சம் நிலவியிருந்தது. இதனால் மேற்கு நாடுகளுடன் நெருக்கமான உறவினைக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்காவை ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்து அரசியலிலிருந்து அப்புறப்படுத்தும் பொறிமுறையொன்றைத் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கியிருந்தனர். இதன்மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் வாக்களிக்கும் உரிமையினைத் தடுத்திருந்தனர். இதனால் சிறிய வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷாவின் வெற்றியானது சமாதான முன்னெடுப்பு, அதனைச் சர்வதேசமயப்படுத்தல் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கு நாடுகளுடன் தொடர்பு வைப்பதில் ஆர்வமற்றவராகக் காணப்பட்டார். இந்நிலையில் மகிந்த ராஜபக்ஷவை வெற்றி பெற வைத்தால்தான் ரணில் விக்கிரமசிங்காவினால் உருவாக்கப்படும் மேற்கு நாடுகள் சார்பான சர்வதேச வலைப்பின்னல் பொறிமுறையினைத் தடுக்க முடியும். மகிந்த ராஜபக்ஷ அதிகாரத்திற்கு வந்தால் சமாதான முயற்சிகளுக்கு எதிரான தேசியவாதம் உருவாகும் என்பதும் இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாட்டை தீவிரப்படுத்தும் என்பதுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது எனலாம். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்பார்த்தது போன்றே அமைந்திருந்தது. எரிக் சொல்ஹெய்ம் கூறியது போன்று “தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையில் வலிந்து தலையிடாமலிருந்திருந்தால் மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியடைந்திருப்பார்” என்ற கருத்து பொதுமக்களிடமும் பொதுவாகக் காணப்பட்டிருந்தது.

யுத்தம் நோக்கிய பயணம்

2002ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மகாநாடு ஒஸ்லோவில் கூட்டப்பட்டபோது ஆசிய – பசுபிக் பிராந்திய நாடுகளும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் நோர்வே தலைமையிலான சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தமது முழுமையான ஆதரவினைத் தெரிவித்தன. அத்தோடு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மனிதாபிமான உதவிக்கு நிதி உதவி வழங்கவும் இணங்கிக் கொண்டன. இவ் இருதரப்புப் பேச்சுவார்த்தையின் மூன்றாவது அமர்வின் பின்னர் ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடனான சமஸ்டிமுறையில் அரசியல் தீர்வினைக் காண்பதற்கு இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப்புலிகளும் உடன்பட்டுக் கொண்டனர்.

ஆயினும் பேச்சுவார்த்தையிலிருந்து முழுமையாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேறியமை சர்வதேச சமூகத்தினை நிராகரிப்பதற்குச் சமமாகியது. சர்வதேசச் சூழலைச் சரியாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் புரிந்து கொண்டிருப்பார்களாயின் ஒஸ்லோ தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் மிகவும் அவதானத்துடன் ஈடுபட்டிருக்கக் கூடும். எவ்வாறு 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததோ அவ்வாறானதொரு திருப்புமுனையினை ஒஸ்லோ பிரகடனம் மூலம் ஏற்படுத்தியிருக்கலாம். இலங்கை இந்திய ஒப்பந்தம் குறைந்த பட்சம் மாகாணசபைகளை உருவாக்கியிருந்தது. இதுவே இன்று தமிழ் மக்களுக்கு எஞ்சியுள்ள அரசியல் தீர்வாகவுமுள்ளது. பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இதனை நிராகரித்து யுத்தம் புரிந்தது போன்று, ஒஸ்லோ தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த சகிப்புத்தன்மையுடன் சர்வதேச சமூகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிப் பின்னர் போராட்டத்திற்கான புதிய பரிமாணத்தினை தேடியிருக்க முடியும். ஆயினும் இது நிகழவில்லை. பதிலாக இருதரப்பும் இராணுவத் தீர்வினை நோக்கியே நகர்ந்தனர்.

இங்கு அவதானிக்கப்பட்ட விடயம் யாதெனில் தமிழீழ விடுதலைப் புலிகள் இக்காலத்தினை தமது இறுதி யுத்தத் தயார் நிலைக்கு பயன்படுத்தி இருந்தார்களேயன்றி, மாறிவரும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளைக் கருத்திலெடுத்து இராஜதந்திரப் போருக்குத் தம்மைத் தயார்ப்படுத்தியிருக்கவில்லை என்பதாகும். இன்னோர் வகையில் யுத்த நிறுத்த காலத்தில் தனது இராணுவக் கட்டமைப்பினை வலிமைப்படுத்தி, பொருத்தமான சூழலில் யுத்த நிறுத்தத்திலிருந்து வெளியேறி யுத்தத்தினை ஆரம்பிப்பதும், அதற்கான முழுப் பொறுப்பினை கொழும்பின் மீது சுமத்துவதுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் நோக்கமாக இருந்தது எனக் கூறலாம்.

இலங்கையின் இனமோதலுக்கு இராணுவத் தீர்வு முடிவாக அமையாது என்பதை நோர்வே அழுத்திக் கூறியிருந்ததாயினும் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்குச் சென்றிருந்தபோது “…அடுத்து வருகின்ற சில காலங்களில் இலங்கை இராணுவத்தை பலப்படுத்தித் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தத்தினை ஆரம்பிக்கப் போகின்றேன்” எனக் கூறியதற்கிணங்க தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தினை துரிதப்படுத்தியிருந்தார். 2008ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையினை முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் யுத்தம் உக்கிரமடைந்ததுடன், 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18ஆம் திகதி யுத்தம் நிறைவடைந்ததாக அரசாங்கம் மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கு அறிவித்துக் கொண்டது. யுத்தம் நிறைவடைந்ததுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகளும் முறிவடைந்து நோர்வேயின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டன. சமாதானப் பணிகளில் நோர்வே பாரிய தோல்வியினை தழுவியது. நோர்வேயின் (சமாதான) முயற்சியினால் யுத்தம் முடிவடைந்தது ஆனால் இன்னமும் சமாதானம் அடையப்படவில்லை.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

11,888 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>