இலங்கையிலும் பாடம் கற்ற ஐ.நா

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.10.19, 2013.10.20 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002

ஐக்கியநாடுகள் சபை நிபுணர்கள் குழு 2011 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 12 ஆம் திகதி பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் (Ban Ki Moon) நியூயோர்க்கில் வைத்துக் கையளித்த அறிக்கையில் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பாகத் தனியானதொரு விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனச் சிபார்சு செய்திருந்தது. இதற்கிணங்க சார்ள்ஸ் பெட்றி (Charles Petrie) தலைமையில் புதியதோர் நிபுணர்கள் குழுவினை பான் கீ மூன் நியமனம் செய்திருந்தார். இவ் நிபுணர்குழு 2012 ஆம் ஆண்டு சித்திரை மாதம் தமது பணியைத் தொடங்கி 2012 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் தமது அறிக்கையினை பொதுச் செயலாளரிடம் கையளித்திருந்தது.இக்குழுவின் நோக்கம் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் வகிபங்கு தொடர்பாக ஆராய்வதுடன், எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை இவ்வாறானதொரு சந்தர்பத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை கூறுவதுமாகும். இவ் அறிக்கை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயற்பாடுகள் தொடர்பான உள்ளக அறிக்கை என அழைக்கப்படுகிறது.

மைக்கல் கீற்றிங்

சார்ள்ஸ் பெட்றி கையளித்த உள்ளக அறிக்கையின் “தொடர் செயற்பாட்டிற்கான” விடயங்களை ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரினால் மைக்கல் கீற்றிங் (Michael Keating) நியமிக்கப்பட்டார். இவர்; ஆப்கானிஸ்தானுக்கான பொதுச் செயலாளரின் இணை விசேட பிரதிநிதியாகச் செயற்பட்டவராகும். இவர் Rights Up Front, நெருக்கடிகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் வகிபங்கினை வலிமைய10ட்டுவதற்குமான செயற்பாட்டறிக்கை (A Plan of Action to strengthen the UN’s role in protecting people in crises),இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடு தொடர்பாக பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் உள்ளக ஆய்வு அறிக்கையின் தொடர் செயற்பாட்டிற்கான அறிக்கை (Follow-up to the report of the Secretary-General’s Internal Review Panel on UN Action in Sri Lanka) என்னும் பெயரில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளக அறிக்கையின் தொடர் செயற்பாட்டிற்கான அறிக்கையினை தயாரித்துள்ளார். இவ் அறிக்கையினை 2013 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 11 ஆம் திகதி இன்னர் சிற்றி பிரஸ் (Inner City Press) “2009 ஆம் ஆண்டு இலங்கையில் முறைமை தோல்வி” என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது.

மைக்கல் கீற்றீங் இவ் அறிக்கையின் அறிமுகத்தில் “மனித உரிமைகளைப் பாதுகாப்பது ஐக்கிய நாடுகள் சபையினதும், அதனுடன் இணைந்த சபைகளதும் கடமையாகும். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு சோதனையாகும். அதில் நாங்கள் தோற்றுவிட்டோம். இதுவே ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பின் தோல்வி தொடர்பாக உள்ளக அறிக்கை ஒன்றைத் தயாரிக்கத் தூண்டியது. இலங்கை எமக்கு புதிய நாடல்ல. நீண்ட காலமாக இலங்கை எம்முடன் இணைந்திருப்பதால் இது எமக்கு சவாலான விடயமாகியது. நெருக்கடியான சூழ்நிலையில் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் பற்றிய தொடர்பாடல் முறையாக இடம்பெறவில்லை. இந்நிலையில் இராஜதந்திரத் திறன், சட்டத் திறன், ஏனைய செயற்பாடுகளை அமுலாக்கும் திறன் ஆகிய விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்துள்ளது. அதிகாரிகளை வேறுபட்ட சூழ்நிலைகளில் ஒழுங்குபடுத்தவும், ஈடுபடுத்தவும், அபாயகரமான செயற்பாடுகளின் போது அவர்களுக்கு ஆதரவளிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது. தலைமையகத்தில் தெளிவான தலைமைத்துவம் இல்லாமை இவ்விடயத்தில் வேறுபட்ட செய்திகளை அனுப்ப காரணமாகியதுடன்,நல்ல சந்தர்பங்களும் இழக்கப்பட்டன” என கூறியுள்ளார். இதனடிப்படையில் மைக்கல் கீற்றிங் ஐக்கிய நாடுகள் சபை பின்பற்ற வேண்டிய ஆறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

  1. ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து அதிகாரிகளின் சாதாரண வாழ்க்கை முறைமையில் மனித உரிமைகளும் உள்ளடக்கப்படவேண்டும்.
  2. 99 ஆம் சரத்து உருவாக்கப்பட்டு அதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெறும் நாடுகளின் பொறுப்புக்களை முறையாக மேற்கொள்ள வலியுறுத்துதல்
  3. மக்கள் நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் போது அரசியல்,மனித உரிமைகள்,மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி திறமைகளை ஐக்கிய நாடுகள் சபை உறுதியான வகையில் அதிகரித்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை வைத்திருத்தல்
  4. ஐக்கிய நாடுகள் சபை தலைமைத்துவத்திற்கும்,அங்கத்துவ நாடுகளுக்கும், அங்கத்துவ நாடுகளில் செயற்படும் ஐக்கிய நாடுகள் சபை குழுக்களுக்கும் இடையில் அடிமட்டத்திலிருந்து சிறந்த அணுகுமுறையினை ஏற்படுத்திக் கொள்வதற்கான திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் அனர்த்த நிலமைகளை முன்கூட்டியே சமாளிக்க முடியும்.
  5. அதிகளவில் மனித உரிமைகள் மீறப்படுகின்ற இடங்களில் அதனைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் துரித முன்னேற்றத்தை காண்பதற்கான வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு அதிக செயற்பாட்டு திறன் அவசியமாவதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
  6. உண்மையான தகவல்களை மிகவிரைவாகப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும்.இதன்மூலம் முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்குவதுடன், ஐக்கிய நாடுகள் சபையினால் முன்கூட்டிய செயற்பாட்டினையும் முன்னெடுக்க முடியும்.

ஜான் எலியாசன்

மைக்கல் கீற்றிங் தயாரித்துள்ள “தொடர் செயற்பாட்டிற்கான அறிக்கை” மூன்று பிரதான விடயங்களை அடையாளப்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் (Jan Eliasson) தெரிவிக்கின்றார். அவைகளாவன தடுத்தல் (prevention) >மனித சமுதாயத்தைப் பாதுகாத்தல் (protection of civilians) விரைந்த செயற்பாட்டிற்கான தேவை (need for fast action) என்பவைகளாகும்.இவைகள் மூன்றும் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையினை தலைநிமிர்ந்து நிற்க வைக்க முயற்சி செய்வதற்கு உதவலாம். மைக்கல் கீற்றிங் தயாரித்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத் தொடரில் உரைநிகழ்த்தும் போது இவ் அறிக்கையில் உள்ள விடயங்கள் தொடர்பாக மறைமுகமாகத் தெரிவித்ததுடன்,இலங்கை ஜனாதிபதியை சந்தித்த போதும் இதனைத் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போதுதான் ஜான் எலியாசன் இவ் அறிக்கை தொடர்பாக பேசுகின்றார். இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தொடர்பாக முதலில் நிபுணர்கள் குழு ஒரு அறிக்கையினையும், அதன் பின்னர் சார்ல்ஸ் பெற்றி உள்ளக அறிக்கை என்ற பெயரில் ஒரு அறிக்கையினை வெளியிட்டிருந்தார். இப்போது மைக்கல் கீற்றிங் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அடுத்து யார்? என்ன வகையான அறிக்கையினை வெளியிடுவார்கள்?

பொதுச் செயலாளர் பான்- கீ- முனின் இணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக் (Farhan Haq) “இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் யுத்தத்தினை நிறுத்தவும், பாதுகாப்பு வலயங்களை உருவாக்கவும் ஐக்கிய நாடுகள் சபை இருதரப்பிடமும் திட்டங்களை முன்வைத்தது. ஆனால் இத்திட்டங்கள் பயனளிக்கவில்லை அல்லது நடைமுறைப்படுத்தப்படவில்லை” என நியாயம் கூறுகின்றார்.

நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் படி பாதுகாப்பு வலயங்களிலேயே நாற்பதாயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனை ஜோன் ஹாமஸ் (John Holmes) “கடற்கரையில் நிகழ்ந்த இரத்தக் குழியல்” என அழைக்கின்றார். பாதுகாப்பு வலயம், தடுமாற்றமான அந்த நாட்கள் என்ற பல விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையினால் இன்றுவரை முறையாகக் கருத்தில் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபை யுத்த நிறுத்தம் செய்வதற்கு இருதரப்பிற்கும் அழைப்பு விடுக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயங்களில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை எதுவும் கூறுவுமில்லை. உண்மையில் வன்னி யுத்த முனையில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களின்; பாதுகாப்பு,பொதுமக்களின் உரிமைகள்,சமாதானம் என்பவற்றில் கவனம் செலுத்த வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை அதில் கவனம் செலுத்தாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் ப10ரணமாக அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தியை கேட்பதற்கே ஆவலாக இருந்தது.

பாதுகாப்புச் சபை

பாதுகாப்புச் சபையிலுள்ள மூன்று நிரந்தர அங்கத்துவ நாடுகளாகிய ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ்,பிரித்தானியா ஆகிய நாடுகள் இனப்படுகொலையினை மேற்கொண்ட இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை எதனையாவது செய்வதற்கு அழுத்தத்தினை கொடுக்கவில்லை. தற்போது பொதுநலவாய நாடுகள் அரசாங்கத் தலைவர்கள் மகாநாட்டில் கலந்து கொள்வதற்கு பிரித்தானியா தயாராகியுள்ளது. ஆனால் இதே நாடுகள் சிரியா விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை இறுக்கமான தீர்மானங்களை நிறைவேற்றிச் செயற்படுத்த அழுத்தங்களைக் கொடுத்திருந்தன. இவ்வாறு உள்ளக அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பாதுகாப்பு சபையில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்;பட்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கு எதிர்மாறாக அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் செயற்பாட்டு ஆலோசனை குழுவிற்கும், சட்டக் குழுவிற்கும் இலங்கையிலிருந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இப்போது எழும் கேள்வி 1999 ஆம் ஆண்டு ருவென்டா மற்றும் சேர்பேனிக்கா தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திர விசாரணை மற்றும் மீளாய்வு மூலம் ஐக்கிய நாடுகள் சபை எதனைக் கற்றுக் கொண்டது? என்பதேயாகும்.

மனித உரிமைகளின் பாதுகாப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான இலக்குகளில் ஒன்று சர்வதேசளவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.இதனூடாக ஐக்கிய நாடுகள் சபை தனக்குரித்தான அடையாளத்தினை வரையறை செய்துவருகின்றது. உலக மக்களைச் சாட்சியாகக் கொண்டு அங்கத்துவ நாடுகள் அதிகாரத்திற்குட்பட்ட வகையில் பொதுச் செயலாளரை வைத்திருக்கின்றார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம், பொதுச்சபை தீர்மானங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் முறைமை செயற்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனம் கூறும் விடயங்களுக்குத் தேவையான செயற்பாடுகள், இராஜதந்திர பொறிமுறைகள் என்பவற்றை உருவாக்கி உலக மக்களிடம் அவை சென்றடைவதற்கான பொறுப்பினை ஏற்பதுடன், அதற்கான நெறிமுறை சார்ந்த அதிகாரத்தினையும் பிரயோகிக்கின்றது.

மனித உரிமைகளைப் பாதுகாப்பது மோதலைத் தவிர்க்க உதவுகின்றது. மனித உரிமை மீறல்கள் உடனடியான தகராறுகளுக்கான அடையாளங்களாகும். மனித உரிமைகளை வெற்றிகரமாக பாதுகாப்பதும், உயர்தரத்தில் பேணுவதும், வன்முறையற்ற , பொறுப்புக் கூறுகின்ற சமுதாயத்தினை உருவாக்க உதவும்.

தமது சொந்த நாட்டு மக்களைப் பாதுகாப்பது, மனித உரிமைகளின் முக்கியத்துவத்தினை விளங்கிக் கொள்வது,மதிப்பது அங்கத்துவ நாடுகளின் முதனிலைக் கடமையாகும். இக்கடமைகளை அங்கத்துவ நாடுகள் தமது மக்களுக்கு செய்யாமல் சர்வதேச முறைமையில் நீடித்து நிலைக்க முடியாது. ஆனாலும் கடந்தகாலங்களில் மனித குலம் மனித உரிமைகளுக்காக சர்வதேசளவில் அதிக விலையினை கொடுத்து விட்டது.

1994 ஆம் ஆண்டு ருவென்டாவில் நிகழ்ந்த இனப் படுகொலை மூலம் பல இலட்சம் மக்கள் தமது வாழ்க்கையினை இழந்துள்ளார்கள். பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் மிகவும் பாரியளவில் மீறப்படுகின்றதை ருவென்டாவில் தடுக்க முடியாது ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்த போது அது முழு உலகிற்குமான தோல்வியாகியது.

சிரிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் இதற்கு மேலும் சாட்சியாகவுள்ளது. மோதலுக்குள் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை செயற்பாட்டுத்திட்டம் ஒன்றை உருவாக்கியது. இவ் செயற்பாட்டுத்திட்ட அறிக்கையில் “மோதல் என்பது ஒரு சோதனை. இது அங்கத்துவ நாடுகளுக்குரிய சோதனையல்ல. பதிலாக ஐக்கிய நாடுகள் சபை தனது பொறுப்பினை நிறைவு செய்வதற்கும், தனது முழுமையான வலுவினைப் பயன்படுத்தி திறமையினை நிலைநிறுத்துவதற்கும், மக்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்குமான சோதனையாகும்” எனத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளை தரமுயர்த்துவதற்கான அனேக சிபார்சுகள் பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. அண்மைக்காலத்தில் ருவென்டா இனப்படுகொலையினைத் தடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை அடைந்த தோல்வியினைத் தொடர்ந்து ருவென்டாவில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பாகவும்,செர்பெனிக்கா தொடர்பாகவும் உள்ளக விசாரணை நடாத்தப்பட்டது. ஆனால் துன்பம் யாதெனில் பாடங்கள் பலவற்றைக் கற்றும் முறைப்படுத்தப்பட்ட நிறுவனமாக ஐக்கிய நாடுகள் சபை தன்னை இதுவரை மீளமைத்துக் கொள்ளவில்லை என்பதேயாகும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

14,925 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>