இலங்கையின் தோல்வி

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.06.01, 2013.06.02ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )

clip_image002ஒருநாட்டின் வெளியுறவுக் கொள்கையானது சட்டபூர்வமான மக்கள் விவகாரமாகும். வெளிவிவகாரச் செயற்பாடுகளில் அரசாங்கத்தின் நடத்தையினை கோடிட்டுக்காட்டும் விதிகளை உள்ளடக்கியிருப்பதே வெளியுறவுக் கொள்கையாகும். உலக நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒரு அரசு பேணிவரும் உறவுகளில் தனது நலன்கள் எத்தகையது என்பதை வெளியுறவுக் கொள்கை மூலம் மிகவும் தெளிவாக அடையாளப்படுத்திக் கூறுகின்றது. மேலும் ஒருநாட்டின் புவியியல் மையம் அந்நாடு பின்பற்றும் அரசியல் கொள்கை, பூகோளப் பொருளாதாரம், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் காட்சிநிலை என்பவற்றில் வெளியுறவுக் கொள்கை உருவாக்கம் தங்கியுள்ளது. வெளியுறவுக் கொள்கையானது உள்நாட்டில் காணப்படும் எல்லா வகையான அரசியல்,பொருளாதார கொள்கைகளுடனும் இணைந்து செல்வதாக இருக்க வேண்டும். எனவே ஒருநாடு எவ்வகையான ஆட்சிமுறைமையை பின்பற்றினாலும், வெளியுறவுக் கொள்கைக்கு விசேட முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசும், அதிகாரத்திலிருக்கின்ற அரசாங்கமும் சர்வதேசளவில் தனது நாட்டின் நற்பெயரைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். சில நேரங்களில் வலுவுள்ள அரசுகள் தமது சர்வதேச அரசியல் வறுமைக்காகவும், குறுகிய நோக்கத்திற்காகவும் வலுவற்ற அரசுகளை கருவியாகப் பயன்படுத்தக்கூடும். இவ்வாறான சந்தர்பங்களில் தமது கௌரவத்தை காப்பாற்ற சிறிய அரசுகள் தயங்கக்கூடாது. சுருக்கமாகக் கூறின் ஒருநாட்டின் வெளியுறவுக் கொள்கை குறுகிய நோக்கம் கொண்டதாகவும், செயலற்றதாகவும் இருக்கக் கூடாது.

மகிந்த சிந்தனை

எதிர்கால இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு கட்டமைக்கப்படும் என்பதை அரசின் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மகிந்த சிந்தனை எடுத்துரைக்கின்றது. அணிசேராமை என்ற கொள்கையினையே தனது வெளியுறவுக் கொள்கையாக இலங்கை தொடர்ந்து பின்பற்றும். இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் மற்றும் ஆசிய நாடுகளுடன் கடந்த காலங்களில் நட்புறவினைப் பேணிவந்தது போல் எதிர்காலத்திலும் இலங்கை தொடர்ந்து பேணிவரும். அரசியல்,பொருளாதார, பாதுகாப்பு, வர்த்தக மற்றும் கலாசார விடயங்களில் இந்நாடுகளுடன் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் நட்புறவினைப் பேணவே இலங்கை விரும்புகின்றது.

மாற்றமடைந்து வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப சர்வதேச ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் மதித்து நடப்பதுடன், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் உறவினை இலங்கை பலப்படுத்திக் கொள்ளும். இலங்கையின் கௌரவத்தினை வெளியுறவுக் கொள்கையினூடாக பாதுகாப்பதுடன், உலக நாடுகளுடன் உறவினை வலுப்படுத்துவதற்கு புதிய திட்டங்களும் உருவாக்கப்படும் என மகிந்த சிந்தனை கூறுகின்றது. எனவே இருக்கின்ற நண்பர்களுடனான உறவினைப் பலப்படுத்துவதும்,புதிய நண்பர்களைத் தேடுவதும் இலங்கையின் கொள்கையாகும் எனக் கூறப்பட்டது. ‘எல்லோரும் நண்பர்கள்’ என்பதே இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் வழிகாட்டும்; தத்துவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

நண்பர்களும் எதிரிகளும்

2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை பின்பற்றிய சீனச்சார்பு கொள்கையினால் இலங்கை சர்வதேசளவில் பெரும் சவால்களையும், அழுத்தங்களையும் எதிர்கொள்ளத் தொடங்கியது. ‘எல்லோரும் நண்பர்கள் என்ற வழிகாட்டும் தத்துவத்திலிருந்து இலங்கை விலகிக் கொள்ளத் தொடங்கியது. இதனால் இலங்கை தனது நண்பர்களுக்குள்ளேயே எதிரியை உருவாக்கிக் கொண்டது. ஆரம்ப காலங்களில் எந்தவொரு நாடும் இலங்கையினைத் தனது எதிர் நாடாகக் கருதி செயற்படும் வகையில் இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையினை வகுத்திருக்கவில்லை. எல்லா நாடுகளுடனும் இலங்கை நட்புறவினையே பேணியது.

2009 ஆம் ஆண்டின் பின்னர் இந்தியாவினாலும் குறிப்பாக தமிழ்நாட்டினாலும், ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினாலும் (Diaspora) இலங்கைக்கு எதிரான நாடுகள் உருவாக்கப்பட்டன. இதனை இலங்கை தடுக்கவேண்டுமாயின் இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும்; நண்பர்களாகும் வகையில் இலங்கை தனது உள்நாட்டுக் கொள்கையினை மாற்றவேண்டும். அதாவது இலங்கை தனது எதிரியை குறைத்து மதிப்பீடு செய்யாமல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை அறிவு பூர்வமாக வகுத்து அதன்மூலம் இலங்கையினை எதிர்க்கும் நாடுகளை வெற்றி கொள்ள வேண்டும்.

இன்னோர் வகையில் கூறின் நண்பர்களுக்குள் இருந்து உருவாக்கப்பட்ட எதிரியை இலங்கை மீண்டும் நண்பர்களாக்குதல் வேண்டும். இதற்கு ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவு செய்ய இலங்கை முன்மொழிவுகளை முன்வைப்பதுடன் அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். இதனைச் செய்ய இலங்கை பின்நிற்குமாயின் மேலும் பல எதிர் நாடுகளை சர்வதேசளவில் சந்திக்க வேண்டியேற்படலாம்.

மனிதவுரிமைகள் பேரவை

2009ஆம் 2012 ஆம் மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் பேரவையில் யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்காக இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பு விடப்பட்டது. 2009 ஆம் ஆண்டு யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்காக இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது இந்தியாவின் ஆதரவுடன் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. இக்காலத்தில் யுத்தக்குற்றச்சாட்டிலிருந்து இலங்கையினை மீட்பதற்கு இந்தியா சர்வதேசளவில் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததுடன் இலங்கையினைப் பாதுகாத்தும் இருந்தது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் குறிப்பாக இந்தியா,பிறேசில் உட்பட பல நாடுகள் 2012ஆம் மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. 2009 ஆம் ஆண்டு வாக்களிப்பில் கலந்துகொள்ளாத ஆர்ஜன்ரீனா 2013 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. 2009 ஆம், 2012 ஆம் ஆண்டுகளில் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத தென் கொரியா 2013 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளது.

பிறேசில், ஆர்ஜன்ரீனா, பேரு, உருகுவே போன்ற நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் கூட்டணி நாடுகளாகக் கருதப்படுவதில்லை என்பதுடன், ஐரோப்பிய யூனியனில் இந்நாடுகள் அங்கத்துவம் கேட்கவுமில்லை. இவ்வாறு யாராவது வாதிடுவார்களாயின் அதில் எவ்வித உண்மையும் இருக்கப் போவதில்லை. இந்நிலையில் இந்நாடுகள் ஏன் இலங்கைக்கு எதிராக வாக்களித்தன என்பதை இலங்கை அரசாங்கம் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் பிறேசில் ஆர்ஜன்ரீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் எவ்வித ஆதரவுப் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்பதை அவதானத்தில் கொள்ளுதல் வேண்டும். இந்நிலையில் இந்நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்தமைக்காக வேறுபல நியாயங்களை கூற இலங்கை முயற்சிக்குமாயின் அது சிறந்த இராஜதந்திரமாக அமையாது. மேலும் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் மக்களை தமிழீழ விடுதலைப்புலிகளின் எச்சங்களாகவே இலங்கை அரசாங்கம் கருதுகின்றது. இவ்வாறு கருதுவதும் சிறந்த இராஜதந்திரமாகாது.

பின்னடைவுகள்

இலங்கை சர்வதேசளவில் தனது நண்பர்களை இழந்து வருகின்றது என்பதும், சர்வதேசளவில் தனது கௌரவத்தை பாதுகாக்க முடியாது திணறுகின்றது என்பது கசப்பான செய்தியாகும். இதன் தாக்கத்தினை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கையடைந்த தோல்விக்குப் பின்னர், இவ்வருட இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள (2013) பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் மகாநாட்டினை தடுப்பதற்கான பிரச்சாரங்கள் சர்வதேசளவில் ஆரம்பமாகியுள்ளமை மூலம் உணரமுடியும். அதேபோன்று பொருளாதார விடயங்களிலும் இலங்கை பின்னடைவினைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது.இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய சர்வதேச அபிப்பிராயம் உருவாக்கப்பட்டமையினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் உல்லாசப்பிரயாணிகளின் வருகை இலங்கையில் பெருமளவில் வீழ்ச்சியடைந்ததுள்ளதாக கூறப்படுகின்றது.

ஒருநாட்டின் புகழ்,கீர்த்தி என்பவற்றினைத் தீர்மானிப்பதில் சர்வதேச அபிப்பிராயம் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னைநாள் செயலாளர் பூட்ரஸ் பூட்ரஸ் – காலி (Boutros Boutros-Ghali) சர்வதேச அபிப்பிராயம் தொடர்பாக விபரிக்கும் போது ‘ஒரேயொரு வல்லரசுதான் உலகிலுள்ளது என்பதில் எவ்வித உண்மையுமில்லை.உண்மையில் இரண்டு வல்லரசுகள் உலகத்திலுள்ளன. ஓன்று ஐக்கி அமெரிக்கா மற்றையது உலகப் பொது அபிப்பிராயம்.’ பூட்ரஸ் பூட்ரஸ் – காலி கூறிய இவ்விரண்டு வல்லரசுகளும் இன்று இலங்கைக்கு எதிராகத் திரும்பியுள்ளன.இவைகள் இலங்கையின் சர்வதேசச் சந்தையிலும்,உல்லாசப்பிரயாணத் துறையிலும் கணிசமானளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன. இப்பாதிப்பு புரிந்து கொள்ள முடியாத வகையில் பெரும் பாரதூரமான விளைவுகளை எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்வது ஆரோக்கிமானதாகும்.

இலங்கை எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள சவால்களையும், விளைவுகளையும் ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத்திணைக்கள பேச்சாளர் விக்ரோறியா நுலண்ட் (Victoria Nuland) மிகவும் தெளிவாக கூறியுள்ளார். அவர் ‘இலங்கை தேசியளவில் தனது நல்லிணக்கத்தினை செயற்படுத்தும் கடமையிலிருந்தும்,பொறுப்பிலிருந்து விலகுமாக இருந்தால் மேலும் பல சர்வதேச விளைவுகளை இலங்கை சந்திக்க வேண்டிவரும்.’ எனக் கூறியுள்ளார். விக்ரோறியா நுலண்ட் கூறிய கருத்தினை இலங்கை மிகவும் இலகுவாக புறந்தள்ளுமாயின் எதிர்காலத்தில்; இலங்கையின் கௌரவம் சர்வதேசளவில் மேலும் மோசமாகலாம்.

அதேநேரம் ஐக்கியநாடுகள் சபை மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு நடைபெற்ற பின்னர் ஜெனிவாவிற்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் டொனகொ(Donahoe) பத்திரிகையாளர் மகாநாட்டினை நடாத்தியிருந்தார். மேலும் இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெறியினால் (John Kerry) விசேட அறிக்கையும் வெளியிடப்பட்டது. சர்வதேச நாடுகளுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா தீர்மானங்களை நிறைவேற்றுவது வழமையானது.ஆயினும், இவ்வாறான சந்தர்பங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட தீர்மானத்தினை அடிப்படையாகக் கொண்டு இராஜாங்கச் செயலாளர் விசேட அறிக்கை வெளியிடுவது வழமைக்குமாறானதாகும்.

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் மைக்கல் சிசென் (Michele Sison) மிகவும் கவனமாக ஒழுங்குபடுத்தி ஐக்கிய அமெரிக்காவின் கருத்தினை பின்வருமாறு வெளியிட்டிருந்தார். ‘இலங்கை தொடர்பாக சர்வதேசக் கருத்தொற்றுமையினை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கி வருகின்றது. யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தனது பொறுப்பினை நிறைவேற்றுவதிலிருந்து இலங்கை விலகுமாயின்; இதனை நிறைவேற்றுவதற்கான பல தெரிவுகள் மனிதவுரிமை பேரவைக்குள்ளும், வெளியிலும் உருவாகும்’. இத் தெரிவுகள் எவை? அதற்கான சர்வதேசப் பொறிமுறைகள் என்ன? என்பவைகளைத் தெரிந்து கொள்வதற்கு மேலும் ஒருவருடம் இலங்கை காத்திருக்க வேண்டியிருக்கும்.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. ஆனால் இலங்கை தனது பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்து காலஅவகாசத்தினை கோருகின்றது. இதனால் 2009 ஆம் ஆண்டிற்குப் பிந்திய இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மிகவும் பின்னடைவினை சந்தித்துள்ளது. 2009 ஆம் ஆண்டுவரையில் இலங்கைக்கு மிகவும் ஆதரவாக செயற்பட்ட இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் ஐக்கியநாடுகள் சபை மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கான பிரதான ஆதரவாளர்களாக மாறியிருந்தனர். 2009ஆம் ஆண்டு வரை இலங்கையுடன் கைகோர்த்திருந்த கனடா இப்போது இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் மாகாநாட்டிற்கு ஆதரவு வழங்க கனடா மறுத்து வருகின்றது. பிரித்தானியா வழங்கவுள்ள ஆதரவும் சந்தேகத்துடனேயே பார்க்கப்படுகின்றது.

என்ன செய்யலாம்?

ஜெனிவாவிற்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் டொனகொ கூறிய கருத்தினை மிகவும் ஆழமாகவும், அவதானமாகவும் இலங்கை பரிசீலனை செய்ய வேண்டும். ‘சர்வதேச விசாரணைக்கும் ஐக்கிய அமெரிக்காவின் விசாரணைக்கும் உட்பட்டிருக்கும் நாடாக இலங்கை உள்ளது’ என மிகவும் தெளிவாக டொன்கோ கூறியுள்ளார். இதன்மூலம் இலங்கை தேசியமட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தனது கடமையினை நிறைவேற்றத் தவறுமாயின் இலங்கை தொடர்பான செயற்பாடுகள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படும் என்ற செய்தி ஐக்கிய அமெரிக்காவினால் பகிரப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை தனது பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தினையும், நேரத்தினையும் சரியாக பயன்படுத்தியதாக எவராலும் இன்றுவரை உணரமுடியவில்லை.

இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் ஐக்கிய அமெரிக்கா,சீனா,இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் சமநிலையினைப் பேண முயற்சிக்க வேண்டும். இந்நாடுகளுடன் சிறியளவிலான சார்புத்தன்மை காணப்பட்டாலும் அது பாரியளவில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் பாதிப்பினை ஏற்படுத்தாது.ஆனால் 2009ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை வெளிப்படையாகவே சீனச்சார்பு கொள்கையினைப் பின்பற்றுகின்றது. இதனால் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கலாசார மற்றும் வரலாற்று ரீதியான தொடர்புடன் மிகவும் அருகிலுள்ள இந்தியாவினை புறந்தள்ளிவிட்டு மிகவும் தூரத்திலுள்ள சீனாவின் கரங்களை இலங்கை இறுகப்பற்றியுள்ளது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் மையமாக இந்தியாவினை ஏற்றுக்கொள்ளும் புலமைசார் அறிவு ஏற்படும் போதே சமனிலையானதொரு வெளியுறவுக் கொள்கையினை இலங்கையினால் வரையமுடியும்.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் தொழில்வான்மை மிக்க இராஜதந்திர கலைஞர்களுக்கு முக்கிய இடமளிக்கப்படுவதாகத் தெரியவில்லை. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையினை உருவாக்குபவர்கள் சமயோசித புத்தியுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் இத்துறைக்குப் பொருத்தமான திறைமையுள்ள கலைஞர்களுக்கு இலங்கையில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. உண்மையில் இலங்கைக்குப் பொருத்தமான வெளியுறவுக் கொள்கையினை வரையக்கூடிய கலைஞர்களே இன்றைய தேவையாகும்.

இக் கலைஞர்கள்; இரண்டு முனைகளில் பணியாற்ற வேண்டியுள்ளது. ஒருமுனையில் இவர்கள் இந்தியாவுடனான உறவினை கட்டமைப்பவர்களாகவும், மறுமுனையில் உலகின் ஏனைய நாடுகளுடன் உறவினைப் கட்டமைப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

இலங்கை தனது வெளிவிவகாரக் கொள்கையில் அணிசேராக் கொள்கையினை உண்மையில் கடைப்பிடித்திருந்தால் 2009 ஆம் ஆண்டு மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த மலேசியா 2012ஆம் 2013 ஆம் ஆண்டுகளில் வாக்களிப்பிலிருந்து விலகியிருக்க மாட்டாது. அணிசேரா நாடுகளின் இயக்கத்திலுள்ள உருகுவே, ஆர்ஜன்ரீனா, பேரு, பிறேசில், அங்கோலா, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருக்கவும் மாட்டாது.ஜெனிவாவில் இலங்கை கற்ற பாடத்திலிருந்து தனது பலத்தையும் பலவீனத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

14,925 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>