இலங்கையின் சிவில் நிர்வாகம்

1796ஆம் ஆண்டு பிரித்தானியக் காலனித்துவத்திற்குள் இலங்கை கொண்டு வரப்பட்டு, 1802ஆம் ஆண்டு முடிக்குரிய காலனியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவரையில் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை நிர்வகிக்கப்பட்டது. 1815ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் பிரித்தானியர்களால் கைப்பற்றப்படுவதோடு இலங்கை முழுவதும் காலனித்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. 1802ஆம் ஆண்டு கரையோர மாகாணங்களின் அறிமுகத்தோடு, பிரித்தானிய சிவில் நிர்வாக முறைமை ஆரம்பமாகின்றது. கரையோர மாகாணங்களை நிர்வாகப் பிரதேசமாகக் கொண்ட அரசாங்கம் ஏறக்குறைய 30 வருடங்கள் செயற்பட்டது. இக்கால கட்டத்தில் இலங்கையானது “எடுத்துக்காட்டான முடிக்குரிய காலனியாக ( Typical Crown Colony) இருந்தது. சட்ட, நிர்வாக, நீதித்துறை சார்ந்த சகல அதிகாரங்களும் ஆளுநரிடமே இருந்தன. இவர் காலனித்துவ அரச செயலாளரூடாகப் பிரித்தானியப் பாராளுமன்றத்திற்குப் பதிலளிக்க வேண்டியவராக இருந்தார். ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவதற்குச் சபை (Council) ஒன்று இருந்தது. ஆனால் சபையின் ஆலோசனையை ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கவில்லை. இவர் இக்காலத்தில் தன் விருப்பத்திற்கு ஏற்ப இலங்கையை நிர்வகிக்க முடிந்தது. கண்டி மாகாணத்தைப் பொறுத்த வரையில் அதன் நிர்வாகம் தனியாக நிர்வகிக்கப்பட்டதுடன், இதற்கான தனி ஆணைக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.

இவ் அத்தியாயத்தின் முதற்பகுதி இலங்கையின் சிவில் சேவை வளர்ச்சிக்கு கோல்புறூக், டொனமூர், சோல்பரி சீர்திருத்தங்கள் ஆற்றிய பங்களிப்புக்களை பரிசீலனை செய்கின்றது. அடுத்த பகுதி, சுதந்திர இலங்கையின் சிவில் சேவையில் பொதுச்சேவை ஆணைக்குழுவின் முக்கியத்துவத்தினையும், 1956ஆம் ஆண்டின் பின்னர் சிவில் சேவையில் ஏற்பட்ட முரண்பாடுகள், மாற்றங்களையும் பரிசீலனை செய்கிறது. இறுதியாக, சமகால சிவில் சேவைக் கட்டமைப்பில் அரசியல் கட்சிகள் செலுத்தும் செல்வாக்குகளும் சிவில் சேவை தொடர்பான சமகால சிந்தனைகளும் பரிசீலிக்கப்படுகிறது.

சிவில் சேவைத் திணைக்களங்களும்,சிவில் நிர்வாக மாகாணங்களும்

பிரித்தானிய காலனித்துவத்தின் கொள்கை, இலங்கை மக்களிடம் வரியை அறவிட்டு அதன் மூலம் இலங்கையை நிர்வகிப்பதாகவே இருந்தது. இது இலங்கை மக்கள் மீது தேவையற்ற வரிச் சுமைகளைச் சுமத்தி, அவர்களின் வாழும் உரிமைகளை மீறும் செயலாகவே இருந்தது. வரியை அறவிடும் நோக்கத்திற்காக இலங்கையில் இரண்டு சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.

 • சிவில் சேவைத் திணைக்களங்கள்
 • மாகாண சிவில் நிர்வாகக்கட்டமைப்பு

சிவில் சேவைத் திணைக்களங்கள்

1798ஆம் ஆண்டின் பின்னர் பல்வேறு சிவில் சேவைத் திணைக்களங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் கணக்காய்வாளர் நாயகத் திணைக்களம், நில அளவையாளர் திணைக்களம், மருத்துவத் திணைக்களம், காணிப்பதிவுத் திணைக்களம் போன்றவற்றைக் கூறிக் கொள்ளலாம்.

சேர் தோமஸ் மெயிற்லாண்ட் (Sir Thomas Maitland) ஆளுநராக இருந்த 1805ஆம் ஆண்டுக்கும் 1811ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிவில் சேவைத் திணைக்களங்கள் மீள் ஒழுங்கமைக்கப்பட்டதுடன், புதிய சிவில் சேவைத் திணைக்களங்கள் சில உருவாக்கப்பட்டன. காணிப்பதிவுத் திணைக்களம் செயலிழந்தது. அதேநேரம், சுங்கத் திணைக்களம், உப்புத் திணைக்களம் என்பன புதிதாக உருவாக்கப்பட்டன.

மாகாண சிவில் நிர்வாகக்கட்டமைப்பு

சிவில் சேவை நிர்வாகக் கட்டமைப்பின் முதுகெலும்பாக மாகாண நிர்வாகமே காணப்பட்டது. அதிகார மையப்படுத்தப்பட்ட அரசாங்க முறைமை நாடு முழுவதும் செயற்படப் படிநிலை அமைப்பு ஊடான மாகாண சிவில் நிர்வாக முறைமை வாய்ப்பாக இருந்தது. மாகாண சிவில் நிர்வாக முறைமைக்கான சிந்தனை 1796-1798ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஆரம்பமாகியிருந்தது. இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் மூன்று சிவில் நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, புதிய மூன்று மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. அவையாவன:

 • யாழ்ப்பாணம், மன்னார்
 • கொழும்பு, காலி
 • திருகோணமலை, மட்டக்களப்பு

மூன்று மாகாணங்களையும் நிர்வகிப்பதற்கு வதிவிட இறைவரி அத்தியட்சகர் (Resident and Superintendent of Revenue) ஒருவர் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் மூன்று மாகணங்களுக்கும் வரி சேகரிப்பாளர்கள் நியமிக்கப் பட்டார்கள். இதுவே பிரித்தானியர் அறிமுகப்படுத்திய மாகாண சிவில் நிர்வாக முறைமையாகும். 1815ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கண்டி இராச்சியம், 1833ஆம் ஆண்டு வரை தனி சிவில் நிர்வாக மாகாணமாக நிர்வகிக்கப்பட்டது.

கோல்புறூக் சீர்திருத்தமும், சிவில் நிர்வாகக் கட்டமைப்பும்.

இலங்கையின் சிவில் நிர்வாகக் கட்டமைப்பு கோல்புறூக் சீர்திருத்தத்துடன் புனரமைக்கப்பட்டது. கோல்புறூக் சீர்திருத்தம் இலங்கை முழுவதையும் முடிக்குரிய நாடாக மாற்றியதுடன், பிரித்தானிய ஆளுநரின் கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்தது. பொது நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, மையப்படுத்தப்பட்டது. அரசாங்க அதிகாரத்தின் மையமாகக் கொழும்பு நகரம் உருவாக்கப்பட்டது.

கோல்புறூக் சீர்திருத்தத்தின் கீழ் இலங்கையின் சிவில் நிர்வாகக் கட்டமைப்பின் உச்சியில் காலனித்துவச் செயலாளர் காணப்பட்டார். இவர் இலங்கையின் சிவில் நிர்வாக விடயங்கள் தொடர்பாக ஆளுநருக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டியவராகக் காணப்பட்டார். இதனால் பொது நிர்வாகமானது காலனித்துவச் செயலாளரால் அடக்கியாளப்படுவதாக இருந்தது. எல்லாச் சிவில் நிர்வாகச் செயற்பாடுகளும் காலனித்துவ செயலாளரினாலேயே நெறிப்படுத்தப்பட்டது. அத்துடன், இலங்கை சிவில் சேவையின் (Ceylon Civil Service – CCS) சிரேஷ்ட அங்கத்தவர்கள் அனைவரும் இவருக்குக் கட்டுப்பட்டுச் செயற்பட்டனர். காலனித்துவச் செயலாளர் பொது நிர்வாகத்தின் மையமாகச் செயற்பட்டார்.

மாகாண சிவில் நிர்வாகம்

கோல்புறூக் சீர்திருத்தத்தின் கீழ் இலங்கை ஐந்து சிவில் நிர்வாக மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன. அவையாவன:

 • வடமாகாணம்
 • கிழக்கு மாகாணம்
 • மேற்கு மாகாணம்
 • தெற்கு மாகாணம்
 • மத்திய மாகாணம் என்பவைகளாகும்.

ஓவ்வொரு மாகாண சிவில் நிர்வாகமும் ஒவ்வொரு அரசாங்க அதிபரின் கீழ் (Government Agent – G.A) விடப்பட்டது. மாகாண சிவில் நிர்வாகத்தின் செயற்பாட்டிற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் கச்சேரி உருவாக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தின் சிவில் சேவைத் திணைக்களங்களும்,முகவரகங்களும் கச்சேரிகளில் உருவாக்கப்பட்டு, அரசாங்க அதிபரால் இணைக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்டன. எல்லாக் கச்சேரி சிவில் நிர்வாகங்களையும் காலனித்துவச் செயலாளர் கொழும்பிலிருந்து இணைத்துக் கட்டுப்படுத்தியிருந்தார்.

ஓவ்வொரு சிவில் நிர்வாக மாகாணங்களும் பல உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இந்தப் பிரிவுகள் ஒவ்வொன்றும் சிவில் நிர்வாக மாவட்டங்கள் என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபரின் கீழே செயற்பட்டது. ஆயினும், அரசாங்க அதிபரே மாவட்ட சிவில் நிர்வாகத்திற்கும் முழுமையாக மாகாண சிவில் நிர்வாகத்திற்கும் பொறுப்பானவராவார்.

முகாமைத்துவ நுட்ப ரீதியாக அரசாங்க அதிபர் இறைவரி அறவிடும் அலுவலர் ஆவார். இதனடிப்படையில் இவர் ஆரம்பத்தில் இறைவரித் திணைக்களத்துக்கே பொறுப்பாக இருந்தார். எவ்வாறாயினும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிகரிக்க, அரசாங்க அதிபர்கள் அரசாங்க முகவர்களாக மாற்றம் அடைந்தனர்.

அதிகார ஒழுங்கைப் பார்க்கின்ற போது மையத்திலிருக்கும் காலனித்துவச் செயலாளரிடமிருந்து அதிகாரம் கீழ் நோக்கிச் செல்கின்றது. மாகாணமட்டத்தில் அரசாங்க அதிபர் காணப்படுகின்றார். கீழ்மட்டத்தில் சுதேசிய மட்ட உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றார்கள். இது கிராமிய மட்டம் வரை தொடர்கின்றது. போர்த்துக்கேயர், டச்சுக்காரர் போன்று பிரித்தானியர்களும் சுதேசிய நிர்வாகிகளாகிய முதலியார்கள், விதான – ஆராய்ச்சி (Vidane- Arachchis) போன்ற கிராமியத் தலைவர்களைச் சிவில் சேவையாளர்களாகப் பயன்படுத்தினார்கள்.

சிவில் சேவை மறுசீரமைப்பு 1856-1928

1856ஆம் ஆண்டில் காலனித்துவ சிவில் சேவை அமைப்பு மீள் ஒழுங்கமைக்கப்பட்டது. சிவில் சேவை ஆட்சேர்ப்பு முறைமை, போட்டிப் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டது. பல்கலைக்கழகப் பட்டதாரிகள் சிவில் சேவைக்கான ஆட்சேர்ப்பில் மிகவும் காத்திரமானவர்களாகக் கருதப்பட்டார்கள். 1870ஆம் ஆண்டு சிவில் சேவை ஆட்சேர்ப்புக்கான பரீட்சை கொழும்பில் நடாத்தப்பட்டது. பிரித்தானிய பல்கலைக்கழகக் கல்வியை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றுக்கொண்ட இலங்கையர்களால் சிவில் சேவையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இணையக்கூடியதாக இருந்தது. இதனால் இலங்கையின் சிவில் சேவையானது பிரித்தானியர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதொன்றாக இருந்தது. ஆகவே பிரித்தானிய அரசாங்கம் 1880ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மட்டும் பரீட்சையை நடாத்துவது எனத் தீர்மானித்தது. இதனால், இலங்கையர்கள் சிவில் சேவை ஆட்சேர்ப்பு பரீட்சையினை இங்கிலாந்து சென்று எழுத வேண்டியேற்பட்டது.

இலங்கையர்கள் சிவில் சேவையில் நுழைவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினர். இக் கோரிக்கைகளால் 1891ஆம் ஆண்டு சிவில் நிர்வாக சேவையில் உள்ளூர்ப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. இது சிவில் நிர்வாக சேவையின் கீழ்மட்ட அலகாகச் செயற்பட்டது. இவர்களுக்கான அறிவுறுத்தல்களும், வழிகாட்டல்களும் ஐரோப்பிய சிவில் சேவை மேலதிகாரிகளால் வழங்கப்பட்டன.

1928ஆம் ஆண்டில் மாகாண சிவில் நிர்வாகமானது மீள் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டதுடன் மாகாணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மாகாணங்களின் எண்ணிக்கை ஒன்பதாகவும், மாவட்டங்களின் எண்ணிக்கை பத்தொன்பதாகவும் அதிகரித்தது. இதனை விட நூற்றுப் பத்து பிரதான தலைவர் (Chief head men’s ) பிரிவுகளும் அறுநூற்றுப் பதின்மூன்று மேல் நிலை தலைவர் (Superior head men’s) பிரிவுகளும் நான்காயிரம் கிராமியத் தலைவர் (Village head men’s ) பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டன.

அரசாங்க அதிபர் தொடர்ந்தும் வரி சேகரிப்பவராக இருந்தாலும், அவருடைய பணிகள் பல நிலைகளிலும் விரிவடைந்து சென்றிருந்தன. சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்க அதிபரிடம் விடப்பட்டிருந்தது. சட்ட, நிர்வாக, நீதித்துறை சார்ந்த கடமைகளைப் படிப்படியாக மாகாணமட்டத்தில் மேற்கொள்ள வேண்டியிருந்ததுடன், பொதுவான சிவில் நிர்வாகப் பொறுப்புக்களையும் இவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

டொனமூர் சீர்திருத்தமும், சிவில் நிர்வாகமும்

1931ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் சீர்திருத்தம் ஏனைய துறைகளில் ஏற்படுத்திய தீவிர மாற்றம் போன்று சிவில் நிர்வாக அமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் நூறு வருடங்களாக மாற்றமின்றியிருந்த சிவில் நிர்வாக ஒழுங்கமைப்பு மாற்றத்துக்குள்ளாகியது. அதாவது சிவில் சேவையின் செயற்பாடு, வடிவம், அமைப்பு என்பவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. சிவில் நிர்வாகக் கட்டமைப்பின் உச்சியில் இவ்வளவு காலமும் இருந்த காலனித்துவ செயலாளருக்குப் பதிலாகப் பத்து அமைச்சர்கள் உருவாக்கப்பட்டனர். காலனித்துவச் செயலாளரின் அதிகாரங்கள் இல்லாதொழிக்கப்பட்டு அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஒவ்வொரு அமைச்சும் சுதந்திரமாகச் செயற்பட்டதுடன், அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் விடப்பட்டது. அமைச்சர்களுக்குக் கீழான சிவில் சேவைத் திணைக்களங்கள் உருவாக்கப்பட்டமை பெரும் சிவில் நிர்வாக வலைப்பின்னலை உருவாக்கியது. சிவில் நிர்வாகத்தில் ஏற்பட்ட இம் மாற்றம் நிர்வாக உச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், சுதந்திரம் பெறும் வரை இது தொடர்ந்திருந்தது.

காலனித்துவ செயலாளருக்குப் பதிலாக அமைச்சர்கள் உருவாக்கப்பட்டமை சிவில் நிர்வாக அமைப்பில் பல வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசாங்கம் ஆளுநரையும் சர்வஜன வாக்குரிமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 50 அரசாங்க சபை உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. இவர்களை விட 08 நியமன உறுப்பினர்களையும், பிரதம செயலாளர், நிதிச் செயலாளர், சட்டச் செயலாளர் ஆகிய 03 உத்தியோகத்தர்களையும் கொண்டிருந்தது. அரசாங்க சபை சட்டத்துறையின் கடமைகளையும், நிறைவேற்றுத்துறையின் கடமைகளையும் மேற்கொண்டு வந்தது.

அரசாங்க சபையில் இயங்கிய ஏழு நிர்வாகக் குழுக்களின் தலைவர்களும், ஏழு அமைச்சர்களாக இயங்கினர். இவர்கள் கூட்டாக வரவு செலவுத் திட்டத்துக்;குப் பொறுப்பானவர் களாவார். அத்துடன், ஒவ்வொரு அமைச்சர்களும் தனித்தனியாக ஒதுக்கப்பட்ட சிவில் நிர்வாகத் திணைக்களத்திற்கு பொறுப்பானவர்களாவார்.

காலனித்துவ செயலாளருக்குப் பதிலாக அமைச்சர்களை அறிமுகப்படுத்தியமையானது இலங்கையின் சிவில் நிர்வாக அமைப்பில் பல வழிகளிலும் புரட்சியை ஏற்படுத்தியது.

அதிகாரங்கள் புதிய அமைச்சர்களிடம் வழங்கப்பட்டன. இதனால் சிவில் நிர்வாகத்தின் வடிவமும், அமைப்பும் மாற்றமடைந்ததுடன் அதிக எண்ணிக்கையிலான அரசாங்க சிவில் நிர்வாகத் திணைக்களங்கள் தோற்றமடைந்தன. சிவில் நிர்வாகத் திணைக்களங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை இயல்பாகவே அரசின் செயற்பாட்டை விஸ்;தரித்திருந்தது. மறுபக்கத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட சிவில் நிர்வாகத் திணைக்களங்களையும், அமைச்சர்கள் மேற்பார்வையிடுவது கடினமானதாக இருந்தது.

அமைச்சர்கள் உருவாக்கம் என்பது ஒவ்வொரு அமைச்சின் சிவில் சேவைத் திணைக் களத்துக்குள்ளும் அதிகாரம் மையப்படுத்தலை ஏற்படுத்தியது. முக்கியமான தீர்மானங்கள் யாவும் சிவில் நிர்வாகத் திணைக்களத் தலைமை யகத்தினால் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டன.

சிவில் நிர்வாக அமைப்பில், திணைக்களங்கள் உருவாக்கப்பட்டமையானது பகுதிகள், பிரிவுகள் உருவாவதற்குக் காரணமாயிருந்தது. அத்துடன் நிலைக்குத்து வடிவிலான சிவில் நிர்வாகக் கட்டமைப்பு அரைகுறைத் தன்னாட்சியுடன் (Semi- Autonomous) இயங்கும் நிலை உருவாகியது. படிநிலை அமைப்பின் உச்சியில் அமைச்சர்களும், அவர்களுக்குக் கீழ்ப் பல பகுதிகள், பிரிவுகள் உருவாக்கப்பட்டு, இறுதியில் சிவில் நிர்வாகம் கிராமங்கள் வரை பரந்து விரிந்து சென்றது.

சர்வஜன வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்டு எழுச்சியடைந்த அரசியல் நிறுவனங்கள் ஓரளவு சுய அரசாங்க இயல்பைப் பிரதிபலிக்கின்றவைகளாகக் காணப்பட்டன. இதற்கு ஏற்ப சிவில் சேவையின் இயல்புகளும்,பங்களிப்புக்களும் பூரணமாக மாற்றிக் கொள்ளப்பட்டன. சிவில் சேவையாளர்கள் மக்களிடம் இருந்து தோற்றம் பெறும் அரசியல் அதிகாரத்துகுப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக இருந்தனர். இவ்விடத்தில் நாம் தர ரீதியான மாற்றத்தை (Qualitative Change) சிவில் சேவையில் அவதானிக்க முடிந்தது. அதாவது, சிவில் சேவையானது, காலனித்துவப் பண்பு கொண்ட நிலையில் இருந்து, மக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய சிவில் சேவை அமைப்பாகப் புனரமைக்கப்பட்டது. இம்மாற்றம் அரசாங்கச் செயற்பாட்டில் ஒரு திருப்திகரமான நிலையை ஏற்படுத்தியிருந்தது. தேர்தல் தொகுதி மூலம் தெரிவு செய்யப்பட்ட சட்ட சபையானது, சட்டம், ஒழுங்கு,வருமானவரி சேகரிப்பு என்பவற்றில் அதிக கவனம் செலுத்துவதில் இருந்து, விடுபட்டு, மக்களுடைய சமூக, பொருளாதார வளர்ச்சியில் இயல்பாகவே கவனம் செலுத்துகின்ற அமைப்பாக அபிவிருத்தியடைந்தது.

சிவில் சேவையில் திட்ட அமுலாக்கல் செயற்பாடு மிகவும் தெளிவான ஒன்றாகக் காணப்பட்டது. சிவில் சேவையானது, அரசாங்க சமூக, பொருளாதார நலன்புரித் திட்டங்களை அமுலாக்குகின்ற நிறுவனமாக மட்டும் நின்று கொள்ளாமல், அரசாங்கத்தின் சமூக, பொருளாதார, நலன்புரிக் கொள்கைகளுக்கு ஆலோசனை கூறுகின்ற நிறுவனமாகவும் மாற்றிக் கொள்ளப்பட்டது. இது காலனித்துவ அரசாங்கத்தின் வரி சேகரிப்பு, சட்டம், ஒழுங்கு என்பவைகளைப் பேணுகின்ற நிறுவனம் என்ற பண்பிலிருந்து அபிவிருத்திப் பண்பு கொண்ட அமைப்பாகச் சிவில் சேவை மாறுவதற்கு உதவியிருந்தது. இம்மாற்றமானது சிவில் சேவை விஸ்தரிப்பின் அவசியத்தை உணர்த்தியதுடன், இக்காலப்பகுதி சிவில் சேவை விஸ்தரிப்புக் காலப்பகுதி எனவும் அழைக்கப்பட்டது.

இவற்றை இலகுபடுத்தும் வகையில் டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ்,1933ஆம் ஆண்டு சிவில் சேவை தொடர்பாக ஒரு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இச்சீர்திருத்தம், திறைசேரியை மீள் ஒழுங்கமைப்பது தொடர்பான விடயங்களை உள்ளடக்கியிருந்தது. பிற்காலத்தில் சிவில் சேவையானது அபிவிருத்தி அடைவதற்கு இச்சீர்திருத்தம் பெரும் பங்காற்றியிருந்தது. திறைசேரியில் நிதியும், விநியோகமும் என்று ஒரு பிரிவும், நிறுவனம் (Establishments), என்று ஒரு பிரிவும் உருவாக்கப்பட்டது. நிதியும், விநியோகமும் என்ற பிரிவு, களஞ்சியங்களுடன் தொடர்புடைய விடயங்கள், ஒப்பந்தக்காரர்கள், கேள்விப்பத்திரம் (Tenders) போன்ற விடயங்களுக்குப் பொறுப்பாக்கப்பட்டது. நிறுவனக்கிளை ஊதியம், ஓய்வூதியம்,விடுமுறை ஒழுங்குகள் போன்ற விடயங்களை நெறிப்படுத்தும் அலகாகத் தொழிற்பட்டது. சிவில் சேவையில் திறைசேரியின் கட்டுப்பாடு, அல்லது செல்வாக்கு என்பது தவிர்க்க முடியாத ஓர் இயல்பாகக் காணப்பட்டிருந்தது. திறைசேரியின் கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் சிவில் சேவையாக இது இருக்கவில்லை.

டொனமூர் சீர்திருத்தம் சிவில் சேவையில் இலங்கையர் மயவாக்கம் ஏற்படுவதைத் துரிதப்படுத்தியிருந்தது. இலங்கையின் பொருளாதாரம் அபிவிருத்தியடைய வேண்டுமாயின், காலனித்துவ அரசாங்கத்தின் சிவில் சேவையானது இலங்கையர்களை முழுஅளவில் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலுப் பெறலாயிற்று. இலங்கையர் மயவாக்கம் என்ற சிந்தனையை உள்வாங்கி சிவில் சேவையை நோக்குகின்றபோது, இலங்கையர்கள் கொள்கை உருவாக்கம் மீது ஏற்கனவே பாரிய கட்டுப்பாட்டினைக் கொண்டிருந்தமை புலனாகும். உண்மையில் இலங்கையர் மயவாக்கக் கொள்கையானது இலங்கையர்கள் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்ற ஒரு செய்முறையாகக் காணப்பட்டது. தேசிய சிவில் சேவையின் எழுச்சிக்கு இது மிகவும் அவசியம் என்பது உணரப்பட்டது. இவ்வுணர்வானது ஏற்கனவே ஆங்கிலம் கற்ற சிறியளவிலான உயர்குழாமிலிருந்து எழுச்சியடைவதாகவும் இருந்தது. இதன் விளைவாக 1939ஆம் ஆண்டு சிவில் சேவையில் இலங்கையர்களுடைய எண்ணிக்கை 78 % மாகக் காணப்பட்டது எனப் பேராசிரியர் விஸ்வவர்ணபால குறிப்பிடுகின்றார்.

டொனமூர் அரசியல் திட்டம் பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கியது. இவ்வமைப்பானது சிவில் சேவை உத்தியோகத்தர்களின் நியமனம், பதவியுயர்வு, மாற்றம், நீக்கம், ஒழுக்கக்கட்டுப்பாடு என்பவற்றிற்குப் பொறுப்பாக இருந்தது. மேலும் ஆளுநருக்கு இவ்விடயங்கள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கும் நிரந்தர அமைப்பாகவும் இது செயற்படும் என அரசியல் திட்டம் கூறியது. உண்மையில் டொனமூர் உருவாக்கிய நிர்வாகக் குழுமுறையுடன் தனது செயற்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்ற ஓர் அமைப்பாகவே பொதுச் சேவை ஆணைக்குழு காணப்பட்டிருந்தது.

மாகாண நிர்வாகம்

டொனமூர் சீர்திருத்தம் அரசாங்க அதிபரிடம் விடப்பட்டிருந்த மாகாண நிர்வாகத்தை மீளப் பெற்றிருந்தது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் திணைக்களங்களுக்குத் தலைவர்களாக்கப்பட்டு, அவற்றின் செயற்பாடுகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனால் ஒவ்வொரு அமைச்சர்களும் தமக்குரிய சிவில் நிர்வாகத் திணைக்களத்தின் செயற்பாடுகளைத் தாமே நெறிப்படுத்தினர். இதற்காக அரசாங்க அதிபர் பயன்படுத்தப்பட்டிருந்தார். அரசாங்க அதிபர் உள்விவகார அமைச்சினால் (Home Affairs) நெறிப்படுத்தப்பட்டுக், கட்டுப்படுத்தப்பட்டிருந்தார். 1931ஆம் ஆண்டுக்கும் 1946ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டகாலத்துக்குள் அரசாங்க அதிபர் சிவில் நிர்வாகத் திணைக்களங்களை இணைக்கின்ற இணைப்பாளராக மாற்றப்பட்டார். இவருடைய இணைப்புக்கடமையானது மாகாண மட்டத்திலிருந்து, மாவட்ட மட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னர் அரசாங்க அதிபரால் மேற்கொள்ளப்பட்ட கடமைகள் யாவும் தற்போது சிவில் நிர்வாகத் திணைக்களத் தலைவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் அரசாங்க அதிபரின் கடமைகளும் பொறுப்புக்களும் குறைக்கப்பட்டதுடன் இவர் தனித்து இணைப்பாளராகச் செயற்படக்கூடியவராகவுள்ளார்.

அமைச்சரவை முறை அறிமுகப்படுத்தப்பட்டுத் திணைக்களங்கள் உருவாக்கப்பட்டமை அதிகளவு துணை நிர்வாகப்பிரிவுகள் உருவாக்கப்படுவதற்குக் காரணமாயிருந்தது. டொனமூர் சீர்திருத்தம் நிலைக்குத்து வடிவிலான நிர்வாக அமைப்பினைத் தோற்றுவித்தது. திணைக்களங்களும், துணை நிர்வாகப் பிரிவுகளும் தமது தலைமையகங்களைக் கச்சேரிகளில் நிறுவிச் செயற்படத் தொடங்கின.

ஓவ்வொரு பாரிய திணைக்களங்களும் தமக்குத் தேவையான மேலதிகக் கிளைகளை அல்லது பகுதிகளை நிறுவிச் செயற்பட்டன. இக்காலத்தில் ஒவ்வொரு திணைக்களங்களும் தமக்கான கிளைகளை ஒவ்வொரு பிராந்தியங்களிலும் கொண்டிருந்தன. இவ்வகையில், 1939 ஆம் ஆண்டு அளவைத் திணைக்களம் ஏழு பிராந்திய அலுவலகங்களையும், பொது வேலைத் திணைக்களம் ஒன்பது பிராந்திய அலுவலகங்களையும், வனத்திணைக்களம் நான்கு பிராந்திய அலுவலகங்களையும், நீர்ப்பாசனத் திணைக்களம் ஆறு பிராந்திய அலுவலகங்களையும், கல்வித் திணைக்களம் நான்கு பிராந்திய அலுவலகங்களையும், சுகாதாரத்திணைக்களம் ஒன்பது பிராந்திய அலுவலகங்களையும் கொண்டிருந்தன.

இவைகள் தேவைப்படும் போது மாவட்டத்தில் மேலும் பல உப பிரிவுகளைக் கொண்டிருந்தன. உதாரணமாக பொது வேலைத் திணைக்களம் முப்பத்து நான்கு உப பிரிவுகளைக் கொண்டிருந்தது. உள்ளுராட்சித் திணைக்களம் 1946ஆம் ஆண்டு தனக்கான பிராந்திய திணைக்களங்களை உருவாக்கிக் கொண்டது. இதன் அதிகாரங்களை இவ்வளவு காலமும் அனுபவித்து வந்த அரசாங்க அதிபர், இவ் வாண்டில் அதனை உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் ஒப்படைத்தார்.

உண்மையில் மாகாண மட்ட நிர்வாகத்தில் ஏற்பட்ட இம்மாற்றமானது அபிவிருத்திச் செயற்பாட்டுக்;கான ஒழுங்கமைப்பில் சிறப்பான ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்தது. இதுவரைகாலமும் “நிர்வாக இணைப்பு” என்பதில் காணப்பட்டு வந்த சிக்கல் என்பது இதன் மூலம் தீர்த்து வைக்கப்பட்டது. மேலும் நிர்வாக ஒழுங்கமைப்பு முறைமையானது புதியதொரு வடிவத்தைப் பெறக்கூடியதாகவும் இருந்தது. மையவாக்க நிர்வாக அமைப்புக்குள் பிரமிட் வடிவிலான அல்லது படிநிலை அமைப்பிலான நிர்வாகப் பரவலாக்க வடிவத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.

தேசிய சிவில் சேவையின் உறுதியான வளர்ச்சியையும், விஸ்தரிப்பினையும் சோல்பரி அரசியல் திட்டத்தின் பின்னரே அவதானிக்க முடிந்தது. அதாவது, 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதுடன் தேசிய சிவில் சேவையின் சகாப்தம் என்பதும் எழுச்சியடையலாயிற்று. சுதந்திர அரசாங்கத்தைப் பொறுத்த வரை அரசியல் அதிகாரத்தைப் பொறுப்பேற்பதுடன், பொருளாதார முகாமைத்துவப் பொறுப்பையும், சமூக நல உயர்வுக்கான பொறுப்பையும் ஏற்க வேண்டியிருந்தது. மக்கள் ஆதரவுடன் தெரிவுசெய்யப்படும் ஓர் அரசாங்கத்துக்கான இப்பொறுப்புகள் யாவும் சிவில் சேவையினாலேயே நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது. இது சிவில் சேவையின் கடமையைத் தார்மீகத் தன்மை பொருந்திய ஒன்றாக ஆக்கியதுடன், இலங்கையின் சிவில் சேவை அபிவிருத்தியின் புதிய பாதைக்கான அரசியல் சூழ்நிலை ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. புதிய அரசாங்கம் சமூக,பொருளாதார விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. குறிப்பாகக் காலனித்துவப் பண்பில் வளர்ச்சியடைந்த பொருளாதார அமைப்பினைத் தேசிய பொருளாதாரப் பண்பில் வளர்த்தெடுக்க வேண்டியிருந்தது. இது எவ்வித சந்தேகமுமின்றி சமூக, பொருளாதார அபிவிருத்தியையும், நலன்புரித் திட்டங்களையும் செயற்படுத்தும் பாரிய பொறுப்பினைச் சிவில் சேவைக்கு வழங்கியது. தேசத்தினைக் கட்டியெழுப்புவதில் சிவில் சேவையின் பங்கு உயர்ந்ததாக மதிப்பிடப்பட்டது.

சோல்பரி சீர்திருத்தமும், சிவில் நிர்வாக அமைப்பும்.

சுதந்திர அரசின் புதிய அரசாங்கம் பாராளுமன்ற அரசாங்க முறையினை அறிமுகப்படுத்தியது. பாராளுமன்றம், அமைச்சரவை ஆகிய அரசியல் நிறுவனங்கள் இரண்டும் கொள்கை உருவாக்கம், அமுலாக்கம் ஆகியவற்றிற்குப் பொறுப்புடையதாக்கப்பட்டது. பாராளுமன்ற அரசியல் முறை இயல்பாகவே முக்கியமான இணைப்புக் கடமைகளை ஆற்றுகின்ற நிறுவனமாகக் காணப்பட்டது. இவ்விணைப்பானது ஒரு முனையில் அரசியலுக்கும், நிர்வாகத்துக்கும் இடையிலான உறவினைத் தீர்மானித்தது. நிர்வாகப் பொறுப்பைச் சம்பிரதாயமாகக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் ஒவ்வொரு அமைச்சுக்கும் பொறுப்பானவர்களாகக் காணப்பட்டார்கள். ஒவ்வொரு அமைச்சும் பல திணைக்களங்களை உருவாக்கியது. இச் செய்முறையானது சுதந்திரத்துக்கு முன்பிருந்த நிலையை விட முற்றிலும் வேறுபட்ட நிலையாகவே காணப்பட்டது. அமைச்சர்கள் அரசியல்வாதியாக மட்டுமன்றித், தனது அமைச்சின் நிர்வாகத் தலைவர்களாகவும் இருந்தனர்;. ஒவ்வொரு அமைச்சுகளும் நிரந்தர செயலாளர்களைக் கொண்டிருந்தன. இச்செயலாளர்,நிர்வாகத்தின் உயர்நிலையில் இருந்து சிவில் நிர்வாகக் கடமைகளை மேற்பார்வை செய்பவராக இருந்தார். இவரே அமைச்சுத் திணைக்கள நிர்வாகப் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றினார். ஆயினும்,பொதுவான வழிகாட்டல்களும், கட்டுப்பாடுகளும் செயலாளர்களுக்கு அமைச்சர்களால் வழங்கப்பட்டன.

நிர்வாகச் செயற்பாடுகள் சிவில் நிர்வாகத் திணைக்களங்களை அடிப்படை அலகாகக் கொண்டு நடைபெற்றன. இத்திணைக்களங்கள் எண்ணிக்கையில் பலவாக காணப்பட்டாலும், அமைப்பு ரீதியாக இவைகளைப் பின்வருமாறு பட்டியல் படுத்த முடியும். அவையாவன: அபிவிருத்தித் திணைக்களம், சமூக சேவைத் திணைக்களம், விஞ்ஞானத் திணைக்களம், நிர்வாகத் திணைக்களம் என்பவைகளாகும். இத் திணைக்களங்கள் நிர்வாகச் செயற்பாட்டுக்கான சுதந்திர நிர்வாக அலகுகளாகும். இவற்றை மையமாகக் கொண்டு பல எண்ணிக்கையிலான திணைக்களங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இவ்வாறு பல எண்ணிக்கையில் திணைக்களங்கள் தோற்றுவிக்கப்பட்டமை சிவில் சேவையில் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்திருந்தது. அதாவது,திணைக்களங்களுக்கிடையில் இணைப்பு என்பது சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை புதிய, பழைய திணைக்களங்களுக்கு இடையில் நிலவிய போட்டி, பூசல்கள் அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதில் காலதாமதத்தை ஏற்படுத்தின.

சுதந்திர அரசின் சிவில் நிர்வாக சேவையில் திறைசேரியின் முக்கியத்துவம் தொடர்ந்தும் பேணப்பட்டே வந்தது. அதாவது திறைசேரியை மையமாகக் கொண்ட சிவில் நிர்வாக அமைப்பே தோற்றுவிக்கப்பட்டது. இது நிர்வாக அதிகாரத்தில் திறைசேரி முதன்மையான சக்தியாக எழுச்சியடைவதை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. திறைசேரியின் நெறிப்படுத்தும் பொறுப்பு நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்தது. திறைசேரி, திணைக்களங்களின் செலவீனங்களை மேற்பார்வையிடும் பொறுப்பைக் கொண்டிருந்தது. இதனால் செலவீனங்களுக்கான பிரேரணைகள், பொருளாதார மேம்பாட்டுக்கான செலவீனங்கள் அனைத்திற்கும் முறையான கணக்குகளைப் பேணமுடிந்தது. அத்துடன் எல்லாத் திணைக்களங்களதும் நிதி நிலையை உயர் நிலையில் பேணவும் முடிந்தது.

மறுபக்கத்தில், சிவில் வேலைத்திணைக்களங்கள் அதிகரிக்க சிவில் சேவையாளர்களும் சிவில் சேவை நிபுணர்களும் அதிகரித்தனர். இலங்கையில் சிவில் சேவை “உயர் வர்க்கப் பணிக்குழுவாக” மாற்றமடைந்தது. மேலும் ஒதுக்கப்பட்ட பல உயர் பதவிகளையும் உருவாக்கிக் கொண்டது. அதாவது கணக்காளர் சேவை, இலிகிதர்சேவை போன்ற நிபுணத்துவ சேவைகள் உருவாக்கப்பட்டன. இப்பண்பு சிவில் சேவையை “நிபுணத்துவ சிவில் சேவையாக மாற்றியதுடன் சிவில் சேவை நிபுணர்கள் உருவாக்கப்படுவதற்கும் துணை புரிந்தது.

சுதந்திர அரசியல் திட்டத்தின் கீழ் பொதுச்சேவை ஆணைக்குழு மறு பரிசீலனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. சிவில் சேவையாளர்களின் நியமனம், மாற்றம், பதவிநீக்கம், ஒழுக்கக்கட்டுப்பாடு ஆகிய விடயங்களை உருவாக்கும் மைய அதிகார சபையாக இது மாற்றப்பட்டது. பொதுச் சேவை ஆணைக் குழுவின் சுதந்திரமான செயற்பாடு, சுதந்திர இலங்கையில் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் சட்ட சபையானது சிவில் சேவையில் தலையீடு செய்யலாம் என்பது முன்னுணரப்பட்டதனால், இதன் வழி சிவில் சேவைக்கு ஏற்படக் கூடிய பாதிப்பைத் தடுக்கும் நோக்குடன் சுதந்திர பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடு எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அரசியல் சார்பற்ற ஒரு பொதுச் சேவையை மக்களுக்கு வழங்க முடியும் எனவும், சிவில் சேவைமீது பொதுச் சேவைகள் ஆணைக்குழு மாத்திரமே செல்வாக்கும், கட்டுப்பாடும் செலுத்தும்; எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

தொகுத்து நோக்குகின்ற போது சுதந்திர இலங்கையில் சிவில் சேவையில் இரண்டு பரிமாணங்கள் வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஒன்று திறைசேரி நிர்வாகப் படிநிலை அமைப்பின் உச்சஅலகாகக் காணப்பட்டது. இது முழுநிர்வாகத்தின் மையமாகக் காணப்பட்டதுடன், எல்லாத் திணைக்களங்களுக்குமான பொது நிர்வாகப் பொறுப்பு, இணைப்புத் திறமையை உத்தரவாதப்படுத்துதல், முன்னேற்றம் என்பவற்றுக்குப் பொறுப்பாக இருந்தது. மற்றையது பொதுச் சேவைகள் ஆணைக்குழு சிவில் சேவையாளர்களின் நியமனம், மாற்றம், நீக்கம், ஒழுக்கக்கட்டுப்பாடு என்பவற்றைப் பேணுகின்ற அமைப்பாகக் காணப்பட்டது. சுதந்திரமான பொதுச் சேவைகள் ஆணைக்குழுவானது அரசியல் தலையீடு இல்லாத பாதுகாப்பான நடுவுநிலையான சிவில் சேவையின் தோற்றத்தை உத்தரவாதப்படுத்துவதாக இருந்தது.

மாவட்ட மட்டநிர்வாகச் செயற்பாட்டைப் பொறுத்த வரையில் மாவட்டங்களின் சிவில் நிர்வாகத்திற்கான உப அலகுகள் உருவாக்கப்பட்டன. அரசாங்க அதிபர் முறைமை டொனமூர் காலத்துக்குப் பின்னர் நாடளாவிய ரீதியில் பலவீனம் அடைந்த ஒரு சிவில் நிர்வாக அலகாக மாற்றமடைந்தது. இது அரசாங்க அதிபரின் வரம்பெல்லைக்கு வெளியே பல திணைக்களங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அரசாங்க அதிபர் மாவட்ட மட்டத்திலிருந்து தனது செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் மாகாணமட்டத்தில் செயற்பட்ட அரசாங்க அதிபர் மாவட்ட மட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டமையேயாகும். மாகாண மட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த இணைப்புச் செயற்பாடு என்பது தற்போது மாவட்ட மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்க அதிபர் தலைமையில், மாவட்ட சிவில் நிர்வாக அபிவிருத்திக்கான பங்களிப்பு வழங்க பட வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. இதன் போது அரசாங்க அதிபரது தலைமையின் கீழ் விவசாயக் குழு, மாவட்ட இணைப்புக் குழு என்பன கொண்டுவரப்பட்டிருந்தன. சுதந்திரத்துக்குப் பின்னரான மாவட்ட நிர்வாகமானது அரசாங்க அதிபரின் அபிவிருத்திச் செயற்பாட்டையும், மத்திய அரசாங்கத்துடனான மைய இணைப்புச் செயற்பாட்டையுமே வெளிப்படுத்தியிருந்தது.

சிவில் சேவை முரண்பாடுகளும், மாற்றங்களும்

1956ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததுடன் சிவில் சேவையின் இலக்கும், சிந்தனையும் மாற்றத்துக்குள்ளாகியது. இன்னொரு வகையில் கூறின் 1956ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றம் சமூக, அரசியல் தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்தாக்கமானது சிவில் சேவையின் அமைப்பு, தேவை, செயற்பாடு என்பவற்றின் ஊடாகவே பிரதிபலித்திருந்தது. இக்கால கட்டத்தில் அரசியல் நவீனத்துவமும், சிவில் சேவையும் சமூக, கலாசார தேவைகளை மையமாகக் கொண்ட கொள்கைகளையே உருவாக்கியது. அனுபவம், திறமை என்பன மழுங்கடிக்கப்பட்டன. அதேநேரத்தில் சமூக,பொருளாதார, அபிவிருத்தித் திட்டங்களை அமுலாக்குவதற்கான காலத்தேவையாக இது எடுத்துரைக்கப்பட்டது.

பிரதமமந்திரி பொருளாதார அபிவிருத்திக்கான முக்கிய பொறுப்புக்களை நேரடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1965 இல் பிரதமமந்திரியின் கீழ் திட்டமிடல், பொருளாதார விவகாரங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் பிரதமமந்திரி திட்டமிடல், இணைப்பு ஆகிய விடயங்களுக்குப் பொறுப்பு வாய்ந்தவராக்கப்பட்டார். நாடளாவிய ரீதியில் சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது மாவட்ட மட்டத்தில் நிர்வாகப் பரவலாக்கல் செயல் முறையை வேண்டி நின்றது. மாவட்ட மட்டத்தில் திணைக்களங்கள் அதிகரிக்கப்படலாயிற்று. இதனால் திணைக்களங்களின் ஆட்சேர்ப்புக்கான தேவை அதிகரித்தது. இது சிவில் சேவையின் அபிவிருத்தியை மேலும் வளர்ப்பதாக அமைந்திருந்தது.

ஒரு திணைக்களத்தின் ஊழியர்கள் இரு வகையில் தரப்படுத்தப்பட்டனர். ஒரு சாரார் உத்தியோகத்தர்கள் தரத்திலான ஊழியர்களாகவும், மறுசாரார் உத்தியோகம் சாராத ஊழியர்களாகவும் வகைப்படுத்தப்பட்டனர். உத்தியோகத்தர் தரத்தில் உள்ளவர்கள் மாவட்டத் திணைக்களங்களுக்கான தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். உத்தியோகம் சாராத தரத்தில் உள்ளவர்கள் பிரதேச, கிராமிய மட்டங்களில் கடமையாற்றுபவர்களாகக் காணப்பட்டார்கள்.

சிவில் சேவையில் ஏற்படுத்தப்பட்ட இம்மாற்றங்களை இலகு படுத்தவும் வேலைவாய்ப்பின்மையைப் போக்கவும் 1956 ஆம் ஆண்டு அரசாங்க உத்தியோக மொழிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சிவில் சேவையின் பரிமாணம், வளர்ச்சி, எதிர்காலம் என்பவற்றில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. நடைமுறையில் உத்தியோக மொழியாக இருந்த ஆங்கிலம் கைவிடப்பட்டு அதற்குப் பதிலாகச் சிங்களம் உத்தியோக மொழியாக்கப்பட்டது. ஒருவர் அரசாங்க உத்தியோகத்தராகக் கடமையாற்ற வேண்டுமெனின் ஆகக் குறைந்தது கல்வி பொது தராதரப்பத்திர சாதாரண தரத்தில் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனக்கூறப்பட்டது. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்கள மொழிச் சட்டம் ஆங்கிலத்தில் கற்ற பெரும்பான்மையான தமிழ் உத்தியோகத்தர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியது.

1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்கள மொழிச் சட்டமானது நிர்வாக முறைமையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஆயினும், 1960 ஆம் ஆண்டு; பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தமானது,சிவில் சேவையில் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அழுத்தத்தைக் கொடுத்திருந்தது. நிர்வாக ஒழுங்கமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. இது சிவில் சேவையின் ஒழுங்கிலும், வழிமுறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் அடிப்படை நிர்வாக அமைப்பு முறைமையில் மாற்றம் ஏற்பட்டது.

1963ஆம் ஆண்டு இலங்கையின் சிவில் சேவை அமைப்பு ஒழிக்கப்பட்டு, இதற்குப் பதிலாக இலங்கையின் நிர்வாக சேவை (Ceylon Administrative Service – CAS) என்பது தோற்றுவிக்கப்பட்டது. இது சிவில் சேவையில் ஏற்படுத்தப்பட்ட முதல் மாற்றமும், புதிய ஏற்பாடும் எனக் கூறப்படுகின்றது. பொது நிர்வாக முறைமையின் CAS உருவாக்கமானது அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டில் மிகவும் திறமையான பங்களிப்பினைச் செய்யக் கூடியதாக இருந்தது. இதற்காகச் சிவில் சேவை விஸ்தரிக்கப்பட்டு, அதிகளவு சிவில் சேவையாளர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பொதுச்சேவை அமைப்பானது படிநிலை அமைப்பின் பலபகுதிகள், தரங்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டதுடன், ஒன்றுபட்டுச் செயற்படக் கூடிய தன்மையையும் பெற்றுக் கொண்டிருந்தது. இவ்வமைப்பு முறையை பின்பற்றியதன் மூலம், சிறப்பான தீர்மானம் எடுக்கும் செய்முறையைப் பேணவும், குறிப்பாக அபிவிருத்தி வேலைகளைத் துரிதப்படுத்தவும், முக்கியமான நிர்வாக விடயங்களைத் திறமையுடன் செயற்படுத்தவும் துணைபுரிந்ததாகக் கூறப்படுகின்றது.

1960ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பொதுநிர்வாகமானது துரித வேலைத்திட்டங்களுக்கு ஏற்ற ஓர் அமைப்பாக வளர்ச்சி கண்டது. மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பங்கு, அபிவிருத்திக் கொள்கைகள், திட்டங்களை அங்கீகரித்து அமுல்படுத்துவதாக இருந்தது. இவ்வாறு மாவட்ட நிர்வாகமானது மீள் ஒழுங்கமைக்கப்பட்டதன் மூலம் சில இலக்குகளை அடைய முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

 • மத்திய நிர்வாகத்திற்கும், அரசாங்க அதிபருக்கும் இடையில் நேரடியானதும் செயலூக்கம் மிக்கதுமான தொடர்பைப் பேணமுடியும்.
 • கச்சேரி முறைமையில் மீள் ஒழுங்கமைப்பு ஏற்பட்டமை.
 • அபிவிருத்தி ஒழுங்கமைப்பு முறைமை மாவட்ட அலுவலகச் செயற்பாட்டில் ஒருங்கிணைக்கப்பட்டது.
 • அபிவிருத்திச் செயற்பாட்டில் வெகுஜனப் பங்குபற்றலுக்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

நிர்வாக மீள் ஒழுங்கமைப்பில் காணப்பட்ட இறுதியான சிறப்பம்சம் யாதெனில், அரசாங்க முகாமைத்துவமானது வளப்படுத்தப்பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. முகாமைத்துவப்பயிற்சி, அலுவலக முகாமைத்துவ முறையின் வளர்ச்சி என்பன முதன்மையாக வளப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. இதன்மூலம் ஏற்பட்ட முக்கிய பரிமாணம் யாதெனில் 1966களில் நிர்வாகக் கற்கைகளுக்கான நிலையம் (Academy of Administrative Studies) நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தில் முகாமைத்துவப் பயிற்சி, நுட்பங்கள் போதிக்கப்பட்டன.

கூட்டு முன்னணி அரசாங்கம்

1970ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் கூட்டு அரசாங்கம் ஒன்று வெற்றி பெற்றது. இவ் அரசாங்கம் கணிசமான அளவில் இடதுசாரி மனோபாவம் கொண்ட மாக்சிசவாதிகளைக் கொண்டிருந்தது. இவர்கள் அரசியல் முறைமையினை மாற்ற விரும்பி அரசியல் திட்டத்தினைப் புதிதாக வரைந்து கொண்டனர். 1948ஆம் ஆண்டு சுதந்திர அரசாங்கத்தின் அரசியல் திட்டமானது பொதுச் சேவை ஆணைக் குழுவைத் தோற்றுவித்திருந்தது. ஆயினும்,1956ஆம் ஆண்டின் பின்னர் சுதந்திரமான பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாடானது அமைச்சரவையின் கட்டுப்பாட்டுக்குள்ளாகியது. இச்செய்முறையானது பொதுச் சேவைகளின் நலனுக்கும் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாட்டுக்கும் இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. 1972ஆம் ஆண்டு அரசியல் திட்டமானது சிவில் சேவையாளர்களின் நியமனம், மாற்றம், நீக்கம், ஒழுக்கம் தொடர்பான பொறுப்புகளை அமைச்சர்களுக்கு வழங்கியிருந்தது. அமைச்சர்களுக்கு உதவியாகச் செயற்படுவதற்கென்று அரச சேவைகள் ஆலோசனைச் சபை ஒன்றைத் தோற்றுவிக்க அரசியல் திட்டம் ஏற்பாடு செய்திருந்தது. இதை விட அரச சேவை ஒழுக்காற்றுச் சபை ஒன்றையும் அரசியல் திட்டம் தோற்றுவித்திருந்தது. இச்சபையானது பொதுச்சேவைகள் ஆணைக்குழுவுக்குப் பிரதியீடாக உருவாக்கப்பட்ட ஆலோசனைச் சபையாகும். இச்செய்முறை மூலம் சுதந்திரமான பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு இல்லாதொழிக்கப்பட்டு, அமைச்சரவையின் நேரடியான கட்டுப்பாட்டுக்குட்பட்ட சிவில் சேவையை அரசியல் திட்டம் தோற்றுவித்ததுடன், அரசியல் மயப்படுத்தப்பட்ட சிவில் சேவையை இவர்கள் உருவாக்கியும் கொண்டார்கள்.

ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம்

1978ஆம் ஆண்டு அரசியல் திட்டமானது அடிப்படையில் எவ்விதமான பாரிய மாற்றங்களையும் சிவில் சேவையில் ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆயினும், 1972ஆம் ஆண்டு அரசியல் திட்டம் உருவாக்கிய இரண்டு ஆலோசனைச் சபைகளுக்கும் பதிலாக மீண்டும் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவைத் தோற்றுவித்துள்ளது. இவற்றை விட 1978ஆம் ஆண்டு பதவியேற்ற புதிய அரசாங்கம் “அபிவிருத்தியில் மக்கள் பங்கு பற்றல்” என்ற எண்ணக்கருவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முனைப்புடன் செயற்பட்டது. இது மாவட்ட நிர்வாக முறைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய தேவையை ஏற்படுத்தியது. இச் செய்முறை, திட்ட அமுலாக்கத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் எனவும் கூறப்பட்டது. மாவட்ட அபிவிருத்தி சபைகள் ஒவ்வொரு மாவட்டத்தினதும் உயர் நிர்வாக அலுவலகங்களாக மாற்றப்பட்டன. அரசாங்க அதிபர் ஒவ்வொரு மாவட்டத்தினதும் திட்ட அமுலாக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும் பொறுப்பான வராக்;கப்பட்டார். இவர் மாவட்ட அமைச்சரின் செயலாளராக இருந்து பணிபுரிந்தமை இதற்கு வாய்ப்பாக அமைந்தது. இவ் ஏற்பாடுகள் அரசாங்க அதிபர் ஒவ்வொரு அமைச்சர்களுடனும் தொடர்புடைய விடயங்களைத் தேசிய திட்டமிடலுக்கு ஏற்ப மாவட்ட மட்டத்தில் வழிநடத்திச் செல்ல வாய்ப்பாக இருந்தது.

மாவட்ட மட்டத்துக்கு அடுத்த நிலையில் பிரதேச அபிவிருத்திச் சபைகள் தோற்றுவிக்கப்பட்டன. இவை ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர்; பிரிவுகளிலும் அபிவிருத்தித் திட்டமிடல் அமுலாக்கங்களில் ஈடுபடும் எனவும் கூறப்பட்டது. உதவி அரசாங்க அதிபர் இச்சபைகளின் செயலாளராக இருந்து பணிபுரிவார். இச்சபைகளின் செயற்பாடுகளாகப் பிரதேச அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குவது, அபிவிருத்திச் செயற்பாடுகளை இணைப்பது, திட்ட அமுலாக்கங்களை மீளாய்வு செய்வது போன்ற விடயங்கள் கூறப்பட்டன.

இலங்கையின் இன்றைய சிவில் சேவையின் செயற்பாடானது இந்த நூற்றாண்டுக்குரிய அபிவிருத்திப்பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றி விடுவதேயாகும். காலனித்துவ அரசாங்கத்தின் கருவியாக மட்டும் செயற்பட்டு வந்த சிவில் சேவையானது இன்று தேசிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துகின்றதும், முன்னெடுத்துச் செல்கின்றதுமான முகவரகங்களாக மாறியுள்ளன. சிவில் சேவையானது இதுவரைபெற்ற வளர்ச்சியும், மாற்றமும் சமூக பொருளாதாரச் சூழ்நிலைகளின் தாக்கத்தின் வழி முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

11,347 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>