இலங்கையின் இறைமை பாதுகாக்கப்படவேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.05.25, 2013.05.26 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002இறைமையுடைய எந்தவொரு நாட்டினதும் வெளியுறவுக்கொள்கை உருவாக்கமானது சட்டப்படியான மக்கள் விவகாரமாகும். வெளியுறவுக் கொள்கை உருவாக்கம் மற்றும் அமுலாக்கம் யாவும் பொதுமக்கள் நலனை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கையினை கூர்மைப்படுத்திச் செயற்திறனுடையதாக்குவதற்கு கொள்கை உருவாக்கத்தில் பொதுமக்கள் அதிகளவில் பங்குபற்ற அழைக்கப்படல் வேண்டும். இறைமையுடைய ஒரு நாடு மக்களுடையதாயின் தீர்மானம் எடுத்தலில் அந்நாட்டு மக்களின் பங்குபற்றுதல் அவசிமானதாகும். முன்னைநாள் பிரித்தானிய பிரதம மந்திரி வைகவுன்ற் கென்றி பாமேர்ஸ்ரன் (Viscount Henry Palmerston) என்பவர் வெளியுறவுக்கொள்கை தொடர்பாகக் கூறும்போது ‘எங்களிடம்; நிரந்தரமான நண்பர்கள் கிடையாது. அதேபோன்று நிரந்தரமான எதிரிகளும் கிடையாது.எங்களுடைய நலன்களே நிரந்தரமானது. எங்களுக்கான நலன்களைப் பின்பற்ற வேண்டியதே எங்கள் கடமையாகும்’ எனக் கூறுகின்றார். எனவே தேசியநலன் என்னும் மூலக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே வெளியுறவுக் கொள்கை உருவாக்கப்படுகிறது என்பதே யதார்த்தமாகும்.

அனுபவங்களிலிருந்து கற்ற பாடங்கள்

இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையினை இம் மூலக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே உருவாக்கியதாகக் கூறிக்கொண்டாலும், தேசியநலன் தவிர்ந்த ஏனைய விடயங்களாகிய காலத்திற்குக் காலம்; உள்நாட்டில் நிலவும் சூழல், மாறிவரும் சர்வதேசச் சூழல் மற்றும் பதவிக்கு வரும் அரசியல் கட்சிகளின் மூலக் கொள்கைகள் என்பவற்றின் அடிப்படையிலேயே இலங்கையின் வெளியுறவுக் கொள்கை உருவாக்கப்படுகிறது என்பதே உண்மையானதாகும்.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை உருவாக்கப் பொறிமுறையில் ஜனாதிபதி, அமைச்சரவை, வெளிவிவகார அமைச்சு, வெளிவிவகார அமைச்சுக்கு ஆலோசனை கூறுகின்ற பாராளுமன்ற குழு, தொழிசார்நிபுணத்துவம் மிக்க இராஜதந்திரிகள், வெகுஜனத் தொடர்பு சாதனங்கள், வர்த்தகர் சபை போன்ற ஆதரவு வழங்கும் குழுக்கள்,பொதுசன அபிப்பிராயம் என்பன பங்கெடுக்கின்றன. இவைகள் எல்லாம் ஒன்றிணைந்து இலங்கைக்கு மிகவும் பொருத்தமானதும், சாதகமானதுமான வெளியுறவுக் கொள்கையினை உருவாக்க முயற்சிக்கின்றன.

இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிகள் பின்பற்றிய வேறுபட்ட வெளியுறவுக் கொள்கைகளினால் ஏற்பட்ட ஊசலாட்டத்திற்கும் மத்தியில்; 1950 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கொழும்புத்திட்டச் செயற்பாடுகளில் இலங்கை செயற்பாடு மிக்கதொரு அங்கத்தவராகப் பங்குபற்றியது. அத்துடன் 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற கொழும்பு அணி நாடுகள் மகாநாடு ( Colombo Powers Confer­ence) 1955 ஆம் ஆண்டு நடைபெற்ற பான்டுங் மகாநாடு (Bandung Conference) என்பவற்றில் இலங்கை பங்குபற்றியது. இம்மகாநாடுகள் 1961 ஆம் ஆண்டு அணிசேரா நாடுகள் உருவாக்கப்பட துணைநின்றதுடன் அணிசேராமை என்ற வெளியுறவுக் கொள்கையினை இலங்கை பின்பற்றவும் உதவியது. எனவே அணிசேராமை,உலக நாடுகளுடனான நட்புறவு என்பவற்றின் மூலம் இலங்கையின் சுதந்திரம்,இறைமை அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அதேநேரம் காலனித்துவத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளுடனான பரஸ்பர சார்புநிலை கொள்கையினையும் இலங்கை பின்பற்றியது.

அதேநேரம் சீட்டோ (SEATO) அமைப்பில் இணைவதில்லை என 1954 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தீர்மானம் ,ஆசியான் (ASEAN) அமைப்பில் இணைவது என 1967 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தீர்மானம் யாவும் ஐக்கிய தேசியக் கட்சி பதவியில் இருக்கும் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களாகும். அதாவது பூகோள அதிகாரப் போராட்ட அணிகளுடன் கூட்டுச் சேரக் கூடாது என்ற வெறுப்பினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களாகும். எனவே நல்லாட்சி, சிறப்பான வெளியுறவுக் கொள்கை போன்றவற்றிற்கான சில பாடங்களை கடந்தகால அனுபவங்களிலிருந்து இலங்கை கற்றுள்ளது.

பாதுகாப்பினை ஏற்படுத்திய சூழல்

2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டதோடு இலங்கையில் நிலவிவந்த முப்பது வருடகால கடும் யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆயினும் இதுவரைகாலமும் இலங்கை பேணிவந்த வெளியுறவுக் கொள்கைமீது யுத்தத்தின் முடிவு பாரியளவில் பாதிப்பினைச் செலுத்தியிருந்தது என்பதை மறுக்;கமுடியாது. உள்நாட்டு யுத்தம் முடிவடையும் காலப் பகுதியில்; இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை பொறுப்புக்கூறத் தவறிவிட்டதுடன், வெளியுறவுக்கொள்கையுடன் தொடர்புடைய வேறு பலவிடயங்களை இலங்கை கவனிக்கத் தவறிவிட்டதாகவும், நாட்டினுடைய ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதில் மட்டுமே இலங்கை ஆட்சியாளர்களின் அக்கறை இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் (Sri Lankan Tamil Diaspora) மற்றும் சில சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் நிகழ்ந்த யுத்தக் குற்றங்களுக்கு இலங்கை பொறுப்பேற்க வேண்டும் என தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. இது சர்வதேசமட்டத்தில் இலங்கையினைத் தடுமாற வைத்துள்ளதுடன், உள்நாட்டு யுத்த முடிவடையும் காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து இலங்கை தன்னை மீட்டுக்கொள்ளாமல் விட்டமை இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 2013 ஆம் ஆண்டு வைகாசி மாதத்துடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. ஆயினும் சமாதானம், நல்லிணக்கம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மீள்கட்டுமானம், அபிவிருத்தி என்பன இதுவரை பூரணப்படுத்தப்படாது தொடர் நிகழ்வாகியுள்ளது. இவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கை ஆட்சியாளர்கள் மேலும் நீண்டகாலத்தினை எடுப்பார்களாயின் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் இது பாரிய பின்னடைவினை ஏற்படுத்தலாம்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையினை ஜனாதிபதியிடம் சமர்பித்திருந்ததாயினும் அதன் சிபார்சுகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தெளிவானதொரு கொள்கையினைப் பின்பற்றாது தமது சிந்தனைக்குட்டவழி செயற்படவே விரும்புகின்றது. சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் என்பன மீறப்பட்டதற்கான விசாரணைகள் நடாத்தப்பட்டு குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை வலியுத்துகின்றது.ஆனால் இலங்கை தான் செய்த தவறுகளிலிருந்து விலகியிருக்க அல்லது யாருக்கும் பொறுப்புக் கூறாமலிருக்கவே விரும்புகின்றது. மனித உரிமைகளைப் பேணுதல்; மற்றும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையினை வளர்த்தல் என்பவைகளுக்கான பொறிமுறை இலங்கையில் இதுவரை உருவாக்கப்படவில்லை.

எனவே உறுதியானதும் நிதானமானதுமான நல்லாட்சி நோக்கி இலங்கை நகர வேண்டும். இதன்மூலம் நம்பகத்தன்மையானதும், சுதந்திரமானதுமான செயற்பாட்டை மேற்கொள்ள முடியும். ஆட்சிமுறைமைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போது அதனை ஜனநாயக வழியில் தீர்க்கக் கூடிய கட்டமைப்புக்கள், விதிமுறைகள்; உருவாக்கப்பட்டு அதனூடாக இவ்விவகாரங்கள் கையாளப்பட வேண்டும். இவ்வகையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் தேசிய மனித உரிமைகள் செயல் திட்டம் (National Human Rights Action Plan) ஆகியன இலங்கையில் இனங்களுக்கிடையில் நம்பகத்தன்மையினையும் நல்லிணக்கத்தினையும் உருவாக்குவதற்கான பொறிமுறையினை உருவாக்கிக் கொடுத்;ததுள்ளன. தேசிய கொள்கைக்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் இடையில் நெருக்கமான உறவுள்ளது.எனவே தேசியக் கொள்கையில்; மாற்றத்தினை ஏற்படுத்தி இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் முன்னேற்றத்தினை அடையமுடியும்.

மீள்சிந்தனை

பூகோளமயவாக்க சகாப்தத்தில் நாங்கள் வாழ்கின்றோம் என்பதை இலங்கையர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இருபத்தியோராம் நூற்றாண்டின் சர்வதேச உறவு மற்றும் நல்லாட்சி என்பவற்றில் பூகோளமயவாக்கத்தின் இயல்புகளும்,செல்வாக்கும் என்றுமில்லாதளவிற்கு மிகவும் ஆழமாக ஊடுருவியுள்ளது. இதனால் உலக நாடுகள் ஒன்றிலொன்று தங்கிவாழ்வதுடன், அதனூடாகவே தமது இறைமையினையும் பாதுகாக்கின்றன.

எனவே சீனா தவிர்ந்த ஏனைய உலக நாடுகளை குறிப்பாக மேற்கு உலக நாடுகளை விரோதிப்பதன் ஊடாக இறைமையினைப் பாதுகாக்க முடியாது. பதிலாக மேற்கு உலக நாடுகளுடன் அறிவுபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமே இறைமையினைப் பாதுகாக்க முடியும். ஒப்பீட்டு ரீதியில் இறைமை என்பது ஓர் எண்ணக்கரு மாத்திரமேயாகும். இவ் அடிப்படையில் பூகோளமயவாக்க சகாப்தகாலத்தில் ஆக்கிரமிப்பு எண்ணங்களின்றி ஒருநாட்டில் மற்றொருநாடு தங்கிவாழ்வதை அனுமதிக்கின்ற தொரு எண்ணக்கருவாக இறைமை மாற்றப்பட்டுள்ளது என்பதை இலங்கையும் ஏற்றுக் கொள்ள தயாராக வேண்டும்.

எனவே சர்வதேசமுறைமையில் இயல்பாகப் பங்குபற்றுதல், சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றுதல், இவைகளை நிறைவேற்றுகின்ற பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுதல் என்பதற்கும்; நாட்டின் இறைமை,பிரதேச ஒருமைப்பாடு என்பன மீறப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கும் இடையில் தெளிவான வேறுபாட்டினை அடையாளம் காணவேண்டிய தேவை உருவாகியுள்ளது.இலங்கையின் உண்மையான இறைமையானது தேசிய,சர்வதேசிய சமுதாயத்துடன் மேற்கொள்ளப்படும் சிறப்பான தொடர்பாடல் மற்றும் தேசிய நலன்களைப் பின்பற்றுதல் என்பவற்றினால் தீர்மானிக்கப்படுவதாகும். ஆகவே இலங்கையின் வெளியுறவுக் கொள்கையினை மிகவும் தெளிவாக நியாயப்படுத்தக்கூடிய பொறிமுறையினையும், சந்தர்ப்பத்தினையும் உருவாக்கி அதன்மூலம் நாட்டின் இறைமை அத்துமீறப்படாமல் பாதுகாக்க முடியும்.

இதற்காக நம்பகத் தன்மையினை உருவாக்குவதும்,அதனைப் பேணுவதும் தேசிய மனப்பாங்காக மாற்றப்பட்டு அதன்வழி வெளியுறவுக் கொள்கையினை உருவாக்குகின்ற அரசியல் கலாசாரத்தினை இலங்கை உருவாக்க வேண்டும். சர்வதேச சமுதாயத்;திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர் கலந்துரையாடல் உறுதிப்படுத்தப்படாமல் திட்டமிடப்பட்ட வகையில் தவிர்க்கப்பட்டு வருவது போன்ற காட்சிநிலை தோன்றியுள்ளது. தேசியளவில் தோன்றும் கருத்தொற்றுமை பரஸ்பரம் சந்தேகங்களைப் போக்க உதவுவதுடன்,மோதல்களைத் தடுக்கவும் உதவும்;. மேலும் தேசியளவில் நம்பகத்தன்மையினை உருவாக்குவதன்மூலம் வெளிவிவகாரங்களைக் கையாளுகின்ற போது மீறப்பட்டு விட்டதாக நாம் கருதும் இலங்கையின் இறைமையின் வீச்சு எத்தகையது என்பதைப் பரீட்சித்துப் பார்க்க முடியும்.

அதேநேரம் இலங்கை பல்லினங்களைக் கொண்டதொரு நாடு என்பதையும் கடந்த கால இனஅழிப்பு கலவரங்களால் பாதிக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு வெளியுறவுக் கொள்கையினை உருவாக்க இலங்கை அரசாங்கம் தவறிவருகின்றது.

இலங்கையில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களின்; மறுக்கப்பட்ட உரிமைகளை வழங்குவதற்கு ஒழுங்குமுறையானதும், நேர்மையானதுமான பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்;பட வேண்டும் என்ற மனவிருப்பம் ஆட்சியாளர்களிடம் இதுவரை தோன்றவில்லை. இதனால் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து அங்கு இலங்கைக்கு எதிராக அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழ் மக்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்பிவந்து வாழ்வதற்குரிய சூழல் உருவாகவில்லை. இலங்கையின் தேசிய கொள்கையும் வெளியுறவுக் கொள்கையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகளாகும் என்பதே வரலாறு. இவ் உண்மையினை இலங்கையின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மீள்வரைபு

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையினை உருவாக்குவதில் பயிற்றப்பட்ட தொழிசார் புலமைமிக்க இராஜதந்திரிகள் மீண்டும் பங்கெடுத்தார்களா? என்றதொரு அச்சம் கலந்த கேள்வி தோன்றியுள்ளது. கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தினை 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் முடிவுக்கு கொண்டு வந்தவிதத்தினால் சர்வதேச சமூகம் அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால் ஐக்கிய நாடுகள் சபை, அணிசேரா நாடுகள் இயக்கம்,சார்க்,பொதுநலவாய அமைப்பு போன்ற அமைப்புக்களிலும்,ஏனைய பிராந்திய அமைப்புக்களிலும் இலங்கை வகித்த முதன்மையான வகிபாகம் இப்போது மறைந்துவிட்டது.

மேலும் ஆயுதப்பரிகரணம், சர்வதேச மனிதாபிமானச்சட்டம், சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேசச்சட்டம், பெண்கள் தொடர்பான விடயங்கள், தொழிலாளர்விடயங்கள், சுகாதாரம், வர்த்தகம் போன்ற விடங்கள் தொடர்பான விவாதிக்கப்படும் சர்வதேச பேரவைகளில் இலங்கை பின்பற்றி வந்த மரபுரீதியாக இராஜதந்திரங்கள்; தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

தற்போது சர்வதேசளவில் இலங்கை அவமானத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் யுத்தக் குற்றங்கள் இலங்கையின் குரல்வளையினை நெரிக்கின்ற நிலைமையும் தோன்றிவிட்டது. எனவே இலங்கையின் சுதந்திரம், ஐக்கியம், ஜனநாயக அபிவிருத்தி, பாகாப்பு,நல்லிணக்கம்,நல்லாட்சி என்பவற்றினூடாக நீண்ட காலத்தில் இலங்கையின் தேசிய நலனைப் பாதுகாக்கக் கூடிய வல்லமையுள்ள பயிற்றப்பட்ட தொழிவான்மையுள்ள இராஜதந்திரிகளால் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மீள் வரையப்பட வேண்டும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

10,369 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>