இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியாவிடும் கண்ணீர்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.04.27, 2013.04.28 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )

clip_image001அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளும் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரு பிராதான கட்சிகளாகும். தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் தமிழ் தேசியவாதத்திற்கு வழங்கும் உயர்ந்த பட்ச மதிப்பு என்பவற்றினால் இவ் இரு கட்சிகளும் இந்தியப் பொதுத் தேர்தலிலும் தமிழக சட்டசபைக்கான தேர்தலிலும்,அதிக வாக்குகளைத் தென்னிந்திய தமிழ் மக்களிடமிருந்து பெற்று வருகின்றன. அதேபோன்று இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டம் இந்தியாவில் தேர்தல் காலப் பிரச்சாரங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவது பொதுவானதொரு நிகழ்வாகவுள்ளது. குறிப்பாகத் தேர்தல்காலங்களில் தமிழக அரசியல் கட்சிகள் தமது வலுவான கிளர்ச்சிகளை இலங்கைத் தமிழர்கள் விவகாரங்கள் தொடர்பில் மேற்கொள்கின்றன. தமிழக அதிகாரப் போராட்டத்தில் மிகவும் ஆழமாகவும், அனுதாபமாகவும் இலங்கைத் தமிழர் விடயம் பார்க்கப்படுவதால் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆயினும் இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரம் தொடர்பாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளும் தெளிவானதொரு கொள்கையினை இதுவரை வகுத்திருக்கவில்லை என்றே கூறவேண்டும். சூழலுக்கும்,தேவைக்கும் ஏற்ப இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரத்தை கையாளுகின்ற கட்சிகளாகவே வரலாற்றில் இவ்விரு கட்சிகளும் தம்மைப் பதிவு செய்து வைத்துள்ளன. இவ்வகையில் சமகாலத்தில் தமிழகத்தில் நிகழும் செயற்பாடுகள் தொடர்பில் மீள் சிந்தனை அவசியமாகவுள்ளது.

செல்வி ஜெயலலிதாவின் கனவு

1985 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர் கலைக்கப்பட்ட ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு அமைப்பிற்கு (Tamil Eelam Supporter’s Organization-TESO) மீண்டும் புத்துயிரளித்து 2012 ஆம் ஆண்டு,ஆவணி மாதம் 12 ஆம் திகதி சென்னையில் மகாநாடு ஒன்றினை கலைஞர் கருணாநிதி நடாத்தினார். இம் மகாநாட்டினைத் தடுத்து நிறுத்துவதற்கு செல்வி ஜெயலலிதா முயற்சித்ததுடன்,இதற்குத் தேவையான சட்டநடவடிக்கைகள் அனைத்தையும் செய்து பார்த்தாராயினும்; அவரால் இதனை தடுத்து நிறுத்த முடியவில்லை.

ரெசோ மகாநாட்டுத் தீர்மானத்தால்; திராவிடமுன்னேற்றக் கழகம் தமிழக மக்கள் மத்தியில் அதிக ஆதரவினை பெற்றுவிடக் கூடும். இதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் பின்னடைவினை எதிர்காலத்தில் சந்திக்கலாம் என்றதொரு அச்சம் செல்வி ஜெயலலிதாவிற்கு ஏற்பட்டது. எனவே இதற்குச் சமாந்திரமான அரசியல் செயற்பாடுகளைச் செய்வதற்கு திட்டமிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அண்மையில் தமிழக சட்ட சபையில் பின்வரும் தீர்மானங்களை முன்மொழிந்து அவற்றை நிறைவேற்றும்படி மத்தியரசினைக் கோரியது.

  1. இறுதி யுத்த காலப்பகுதியில் நிகழ்ந்த இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடாத்தப்படும் வரை இலங்கையினை நட்பு நாடாகப் பேணுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.
  2. இலங்கைத் தமிழர்கள்; மீதான இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகரமான சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும்.
  3. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் நிறுத்தப்படும் வரை பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.
  4. கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மகாநாட்டை இந்தியா பகீஸ்கரிக்க வேண்டும்.
  5. இலங்கைத் தமிழ் மக்களுக்கான தனியரசு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நாடத்தப்பட வேண்டும்.

மேலும் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் கிறிக்கட் போட்டிகளில் குறிப்பாக சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடுவதை ஜெயலலிதா தடை செய்திருந்தார். அத்துடன் இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் தொடர்பான சர்வஜனவாக்கெடுப்பு இலங்கையில் வாழும் தமிழர்கள் மத்தியில் மாத்திரமன்றி புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் நடாத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவிக்கு இப்போதுள்ள கனவு எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமமந்திரியாக வரவேண்டும் என்பதேயாகும். இதற்கு ஏகோபித்த தமிழக மக்களின் அரசியல் ஆதரவு செல்வி ஜெயலலிதாவிற்குத் தேவையாகவுள்ளது. இவ் அரசியல் ஆதரவினைப் பெற்றுக் கொள்ள இலங்கைத் தமிழ் மக்கள்; மீதான தமிழக மக்களின் அனுதாப அலை தேவைப்படுகின்றது. எனவே இதற்கு ஏற்றவகையில் தனது அரசியல் தந்திரோபாய கொள்கையினை வகுத்து தமிழக மக்களின் வாக்குகளை வேட்டையாட செல்வி ஜெயலலிதா முனைகின்றார். தமிழகத்தில் முழுமையான தேர்தல் வெற்றியை செல்வி ஜெயலலிதா பெறுவராக இருந்தால் மத்திய அரசு ஆட்சியமைக்க ஆதரவு வழங்குவதற்கு அவர் விதிக்கப்போகும் முன் நிபந்தனை பிரதமமந்திரிப் பதவியாக இருக்கக் கூடும்.

கலைஞரின் வியூகம்

தமிழ்நாட்டில் இழந்திருக்கும் தனது அரசியல் அதிகாரத்தினையும் செல்வாக்கினையும் மீளவும் கைப்பற்றிக் கொள்ள கலைஞர் கருணாநிதிக்கு மீண்டும் இலங்கைத் தமிழர்கள் தேவைப்படுகின்றார்கள்.இதற்காக ‘சிங்களவர்களை ஒருபோதும் நம்பமுடியாது. நம்பவைத்து கழுத்தறுப்பவர்கள் அவர்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பித்தான் நான் கூட சென்னையில் உண்ணாவிரதமிருந்ததை வாபஸ் பெற்றேன். ஆனால் அவர்கள் பொய்யான உறுதிமொழியை வழங்கிவிட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தனர். இனியும் தமிழ்மக்களால் சிங்களவர்களுடன் இணைந்து வாழமுடியாது. தமிழர்களுக்கென தனிநாடு,தமிழ் ஈழநாடு அங்கே அமைந்தால் மட்டுமே தமிழ் இனம் அங்கு பிழைக்கும். எனவே இதை ஐக்கிய நாடுகள் சபையில் பொது வாக்கெடுப்பு மூலம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.’ எனக் கூறத் தொடங்கிவிட்டார்.

இதற்கு ஏற்றவகையில் இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பாக அதிக கவனம் செலுத்தும் அரசியல் வாதியாக தன்னை மாற்றிக்கொண்டுள்ள கலைஞர் கருணாநிதி இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கினால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக குரல் எழுப்பி மத்தியரசை உலுப்ப முயற்சிக்கின்றார். இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக கலைஞர் கருணாநிதி விமர்சிக்கும்போது ‘சீனாவுடன் மிகவும் நெருக்கமான தந்திரோபாய நட்பினை பேணிவருகின்ற இலங்கை தனது நட்பு நாடாக இ;ந்தியாவினைக் கருதும் என எதிர்பார்க்க முடியாது. மேலும் சீனாவின் உதவியுடன் இலங்கை இராணுவம் பலாலி,காரைநகர்,மன்னார்,தள்ளாடி,ஆனையிறவு ஆகிய இடங்களில் இராணுவத்தளங்களை உருவாக்கி வருகின்றது. சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லியங் குவாங்லீ (Liang Guanglie) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இவ்விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிச் சென்றுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான தனது அக்கறையினை கலைஞர் வெளிப்படுத்தியுள்ளார்.

மறுபக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் தேசியவாதம் தொடர்பாகத் தெளிவானதொரு நிலையில் தாம் இருப்பதாக காட்டிக் கொள்வதன் மூலம் தென்னிந்திய வாக்கு வங்கியினைப் பயன்படுத்தி மத்தியரசில் தனக்கிருக்கும் வலுவானதொரு நிலையினை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள விரும்புகின்றது. இவ்வடிப்படையிலேயே இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரத்தினை திராவிட முன்னேற்றக் கழகம் கையாளுகின்றது. இன்னோர்வகையில் கூறின் தமிழகத்தில் முழுமையான தேர்தல் வெற்றியே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கமாகும். எனவே இலங்கைத் தமிழ் மக்கள் திராவிட முன்னெற்றக்கழகத்தின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

பாரதீய ஜனதாக் கட்சியின் அவசரம்

2014 ஆம் ஆண்டு வைகாசி மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தியப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டுப் பங்காளியாக இந்திரா காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டமைப்பு (UPA) மாத்திரம் தான் இருக்க முடியும் என்ற சூழ்நிலை எதுவும் இல்லை. அண்மையில் பாரதிய ஜனதாக் கட்சி சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராகிய யஸ்வன் சின்கா (Yashwant Sinha)சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஆற்றிய உரையில் இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரத்தினையும் தொடர்புபடுத்தியிருந்தார்.

2014 ஆம் ஆண்டு நிகழப்போகும் பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் தலைமையிலான கூட்டமைப்பிற்குப் பெரும் சவாலாக பாரதீய ஜனதாக் கட்சி செயற்படும் எனப் பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கட்சி இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரங்கள் தொடர்பாக சென்னையில் விடுத்த செய்தியானது எதிர்வரும் பொதுத் தேர்தலில் குறிப்பாகத் தமிழக அரசியலில் செலுத்தப் போகும் செல்வாக்கினை எதிர்வு கூறுவதற்குப் போதுமானதாகும்.

இந்தியப் பாராளுமன்ற மேற்சபையில் ‘பாரதீய ஜனதாக் கட்சி பதவிக்கு வந்தால் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக எமது கொள்கையினை நடைமுறைப்படுத்துவோம்’ என பாரதீய ஜனதாக் கட்சி கூறியுள்ளதாக இந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகமும்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் தெரிவித்து வரும் கருத்துக்களை பாரதீய ஜனதாக் கட்சி உள்வாங்கித் தானும் கருத்துக் கூறுகின்றது. இதன்மூலம் தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துக்களுடன் பாரதீய ஜனதாக் கட்சியும் உடன்பட்டுள்ளது என்றதொரு போலி காட்சியினை மக்கள் மத்தியல் உருவாக்குகின்றது.

இந்திரா காங்கிரஸின் தடுமாற்றம்

இந்திரா காங்கிரஸ்சைப் பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை முழுமையாகப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரம் தொடர்பாக தேர்தல் காலங்களில் தமிழகத்தில் பேசவேண்டும் என்பது நன்கு தெரியும். ஆனால் வெளிப்படையாகத் தேர்தல்காலங்களில் தான் இவ்வாறு பேசுவது மத்திய அரசு உருவாக்கும் வெளிவிவகாரக் கொள்கைக்கு விரோதமானதாகும். எனவே தனது பங்காளிக் கட்சிகளை முகவர்களாகப் பயன்படுத்தி இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரத்தினை பேசுவதற்கு காங்கிரஸ் விரும்புகின்றது. இதன்மூலம் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துகின்ற அதேநேரம் மத்திய அரசாங்கத்தின் வெளிவிவகாரக்கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கின்றது. எனவே இந்தியப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை நோக்கமாகக் கொண்டு இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசியலாக்க இந்திய அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன.

தமிழகத்தின் கண்ணீர்

தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசில் செல்வாக்குச் செலுத்த அல்லது மத்தியரசில் அரசாங்கத்தினைத் தீர்மானிப்பவர்களாக இருப்பதற்கும், சர்வதேசிய விவகாரங்களில் ஈடுபடுவதன் மூலம் இந்தியாவின் பிராந்திய தந்திரோபாய நலன்களுடன் தொடர்புபடுவதற்கும் விரும்புகின்றன. எனவே 2014 ஆம் ஆண்டு நிகழப் போகும் பொதுத் தேர்தலில் தமிழகத்தில் முழுமையான வெற்றியைப் பெறுவதே தமிழகத்திலுள்ள இரு பிரதான அரசியல் கட்சிகளினதும் இலக்காக இருக்கின்றதேயன்றி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவது என்பது இக் கட்சிகளின் கொள்கையுமல்ல, நோக்கமுமல்ல. இக்கட்சிகளின் கொள்கைப் பிரகடனத்தில் இவ்வாறான வாசகங்கள் எதனையும் எங்கும் காணமுடியாது.

வெளிப்படையாகக் கூறினால் இலங்கைத் தமிழர்களின் துன்பங்களை தமிழ்நாட்டிலிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் கடந்தகாலங்களில் தமது தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.இவைகளுள் திராவிட முன்னேற்றக்கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் முன்னிலையிலுள்ளன. இங்குள்ள துன்பம் யாதெனில் தேர்தலின் பின்னர் திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பான தனது கட்சிக் கொள்கையினை முழுமையாக மாற்றிக் கொள்வதேயாகும். எனவே எதிர்கால தேர்தல் வெற்றிக்காகவும், சந்தர்ப்பவாத தமிழக அரசியலுக்காகவும் மீண்டும் மீண்டும் இலங்கைத் தமிழர்கள் பணயம் வைக்கப்படுகின்றார்கள் என்பதே யதார்த்தமாகும். எனவே இந்திய அரசியல்வாதிகள் விரும்பியோ விரும்பாமலோ இலங்கைத் தமிழ்மக்களின் போராட்டத்தினை உரத்துக் கூறி அரசியல் இலாபம் சம்பாதிக்க வேண்டிய சூழலிலேயே இன்றும் உள்ளனர் என்ற யதார்த்தத்தை இலங்கைத் தமிழ்மக்கள் புரிந்துகொண்டு அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்படுவது எதிர்கால தமிழ் சமுதாயத்திற்கு செய்யும் பாரிய உதவியாக அமையும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

13,699 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>