(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.09.07, 2013.09.08 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
2009ஆம் 2012 ஆம் மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் பேரவையில் யுத்தக் குற்றங்களுக்காக இலங்கைக்கு எதிராகப் பிரேணை கொண்டுவரப்பட்டதன் தொடர்ச்சியாக, இப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒருவாரகால உத்தியோகபூர்வ விஜயத்தினை 2013 ஆம் ஆண்டு ஆவணிமாதம் 25ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையில் இலங்கையில் பூர்த்தி செய்து கொண்டு தனது அலுவலகம் திரும்பிள்ளார். இவருடைய விஜயம் 2011 ஆம் ஆண்டு சித்திரை மாதம் தொடக்கம் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆயினும் இலங்கையின் உத்தியோகபூர்வ அழைப்பு இவருக்கு உடனடியாகக் கிடைக்காததால் இதுவரை காலமும் இவரது பயணம் பின்போடப்பட்டிருந்தது. ஐக்கியநாடுகள் சபை முறைமையில் அங்கத்துவ நாடு ஒன்றின் சம்மதத்துடன் தான் இவ்வாறானதொரு விஜயத்தினை ஐக்கியநாடுகள் சபையின் உத்தியோகத்தர் ஒருவர் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ள முடியும். இந்நிலையில் சர்வதேச கவனயீர்ப்பிற்குள்ளாகியிருந்த இவரது இவ்விஜயத்தின் பெறுபேறுகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டியதொன்றாகும்.
உத்தியோகபூர்வ சந்திப்பு
தனது ஏழுநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள், இலங்கை ஜனாதிபதி, எதிர்கட்சித் தலைவர், தமிழ்தேசியக் கூட்டமைப்பு, பாதுகாப்புச் செயலாளர், பிரமநீதியரசர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சிவில் அமைப்புக்கள்,வடக்கு, கிழக்கு மாகாண அரச அதிகாரிகள், செய்தியாளர்கள் எனப் பலதரப்பினரையும் நவநீதம்பிள்ளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யுத்தக் குற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்பான மனிதஉரிமை மீறல்கள்,காணாமல் போனோர் விவகாரம்,வெலிவேரியா சம்பவம்,அரசியல் கைதிகள் விவகாரம்,ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் அச்சுறுத்தல்கள்,சுயாதீனமாகச் செயற்படக்கூடிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு போன்றவைகள் மீது பதினெட்டாவது அரசியல் யாப்புத் திருத்தம் விதிக்கும் கட்டுப்பாடுகள், முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருக்கு எதிரான குற்றவியல் விசாரணை,சமய வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான தாக்குதல்கள் போன்ற பல விடயங்கள் தொடர்பாகத் துரித விசாரணைகளை நவநீதம்பிள்ளை மேற்கொண்டிருந்தார்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அவர் அவானித்த விடயங்கள்,கலந்துரையாடல் நடாத்தியவர்களிடமிருந்து கேட்டறிந்து கொண்ட விடயங்கள் என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு 2013 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் நடைபெறவுள்ள மனிதவுரிமைகள் பேரவையில் வாய்மொழி மூல அறிக்கையினையும்,2014 ஆம் ஆண்டு பங்குனி மாதம் நடைபெறவுள்ள பேரவை மகாநாட்டில் எழுத்துவடிவிலான முழுவடிவிலான அறிக்கையினையும் நவநீதம்பிள்ளை சமர்பிக்கவுள்ளார்.
காரசாரமான கருத்துக்கள்
இலங்கையில் சுற்றுப்பயணத்தினை பூர்த்தி செய்த பின்னர் இலங்கை அரசாங்கம் தொடர்பாக மிகவும் காரசாரமான இரண்டு கருத்துக்களைச் செய்தியாளர்கள் மகாநாட்டில் நவநீதம்பிள்ளை கூறிச் சென்றுள்ளார்.
-
“யுத்தக் குற்றம்” தொடர்பான சர்வதேசக் குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை அத்துடன் வெளிப்படைத்தன்மையும், நம்பகத்தன்மையும் காணப்படவில்லை. சுயாதீனமானதும், வெளிப்படையானதுமான விசாரணைகள் நடைபெறாத பட்சத்தில் உண்மைகளைக் கண்டறிவதற்கு சர்வதேச விசாரணைகளை நடாத்துவதைத்தவிர வேறு பொறிமுறைகள் இல்லை. இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை இராணுவமே விசாரணை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எமக்குச் சாட்சியமளித்த மக்களை அச்சுறுத்துவது நிலைமையினை மேலும் மோசமடையச் செய்து விடும்.
-
உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜனநாயகச் சூழல் ஏற்படக்; கூடிய சந்தர்ப்பங்கள் காணப்பட்டாலும், அதிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகிச் செல்கின்றது. சர்வாதிகாரத்தினை நோக்கிச் செல்லக் கூடிய அறிகுறிகளே தெரிகின்றன. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் முடிவடைந்து விட்டன. ஆனால் இறுதி யுத்த காலத்தில் உளரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் அத் துன்பத்திலிருந்து இன்னமும் மீளவில்லை. “யுத்தம் முடிவடைந்து விட்டாலும், துன்பம் விலகவில்லை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்”.
உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள்கட்டுமானம்,அபிவிருத்தி என்பன முக்கியமான சாதனையாகும். ஆயினும் பௌதீக மீள்கட்டுமானம் மாத்திரம் நல்லிணக்கம்,கௌரவம்,இறுதி சமாதானம் என்பவற்றைக் கொண்டுவர மாட்டாது.யுத்த காலத்தில் துன்பப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியையும்,நிவாரணத்தையும் வழங்க வேண்டுமாயின் பௌதீக, சமூக,உள உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்துதல் போன்ற எல்லா நன்மைகளையும் தருகின்ற அணுகுமுறைமை (Holistic Approach) தேவையாகும் என்பது நவநீதம்பிள்ளையின் கருத்தாகும்.
இலங்கையின் அலட்சியம்
அலரிமாளிகையில் நவநீதம்பிள்ளையினைச் சந்தித்த இலங்கை ஜனாதிபதி “ஐக்கியநாடுகள் சபை பக்கச்சார்பாக செயற்படுகிறது.மனித உரிமைகள் பேரவையில் நீங்கள் சமர்பிக்கவுள்ள அறிக்கை முன்கூட்டியே (prejudged) தீர்மானிக்கப்பட்டதாகும்” என மக்கள் கருதுவதாகக் கூறித் தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.இவ்வாறு கருத்து வெளியிடுவது சிறந்த சாணக்கியமாகிவிடமுடியாது என பலரும் கருதுகின்றனர். உண்மையில் நாட்டிற்குப் பாதகமான எந்தவொரு சூழலையும் சாதகமாக மாற்றக் கூடிய சாணக்கியம் இருக்கவேண்டும். எதனையும் சாதகமாக சிந்திக்கும்,செயற்படுத்தும் ஆற்றலை வளர்க்க வேண்டும். சர்வதேச இராஜதந்திரச் சவால்களைச் சந்திக்க முடியாத ஆட்சியாளர்கள் எல்லா உண்மைகளையும் மறைத்து இலங்கையின் சாட்சியாளராக நவநீதம்பிள்ளை மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பது போல் நடந்துகொள்வது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
நவநீதம்பிள்ளையின் காரசாரமான கருத்துக்களுக்கு மத்தியிலும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை அரசாங்கம் சவால்விடுவதுடன், மோதலுக்கும் தயாராகின்றது. ஐக்கியநாடுகள் சபையுடன் முடிந்தளவிற்கு நல்லுறவினையும், தேவையான இடத்தில் சமரசத்தினையும், விட்டுக்கொடுப்பினையும் செய்து கொள்ளவேண்டிய தேவையுள்ள இத்தருணத்தில் இவ்வாறு நேருக்க நேர் மோதுவது புத்திசாலித்தனமான இராஜதந்திரமாக இருக்க முடியாது.
அச்சுறுத்தல்கள்
தன்னைச் சந்தித்து சாட்சியமளித்த மக்களையும், ஏனையோர்களையும் இலங்கை இராணுவம் அச்சுறுத்துவதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், என்போன்றவர்களை அழைத்துவிட்டு இவ்வாறு செய்வது முறையல்ல எனவும், இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் தான் முறையிடவுள்ளதாகவும் செய்தியாளர்களைச் சந்தித்த போது நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் காப்பகம் (Human Rights Watch) தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணை நடாத்த வேண்டும் எனவும் கோரியுள்ளது.இது தொடர்பாக மனித உரிமைகள் காப்பகத்தின் ஆசியப்பிராந்திய நெறியாளர் பிரட் அடம்ஸ் (Brad Adams) கருத்துத் தெரிவிக்கையில் “அரசாங்கத்தினால் அழைக்கப்பட்ட இராஜதந்திரியைச் சந்தித்த மக்களை அரசாங்க அதிகாரிகளே சித்திரவதை செய்வது வெட்கமானதாகும். எனவே இவ் அதிகாரிகளை அரசாங்கம் தண்டிக்க வேண்டும்.” எனக் கேட்டுள்ளார்.
நவநீதம்பிள்ளையினை சந்தித்து சாட்சியமளித்த மக்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் இலங்கை இராணுவத்தினரால் உண்மையில் அச்சுறுத்தப்பட்டிருந்தால் இது இலங்கைக்கு எதிராகவுள்ள சர்வதேச நிலைமையினை மேலும் சிக்கலாக்கவே செய்யும். உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்திற்கு எதிராகப் பல்வேறு யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சர்வதேசளவில் கூறப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து இலங்கை இராணுவத்தை ஆபத்தில் சிக்கவைக்கும் விதத்தில் அரசாங்கம் செயற்படுகிறது.
சர்வதேச விசாரணை
சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் என்பன மீறப்பட்டதற்கான விசாரணைகள் நடாத்தப்பட்டு குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை வலியுத்துகின்றது. இதனடிப்படையில் உள்நாட்டு யுத்தத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களுக்குத் தேசியரீதியில் விசாரணை நடாத்தப்பட வேண்டும். அவ்வாறு நடாத்தப்படும் விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை உதவி செய்யத்தயாராக இருப்பதாக நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இதன்மூலம் யுத்தக் குற்றங்களுக்காகத் தேசியரீதியல் விசாரணை நடாத்தப்படாவிட்டால் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கான வாய்ப்புக்கள் அதிகரித்து இருப்பதை இவரது கருத்துக்கள் கோடிட்டுக்காட்டியுள்ளன.
காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக அண்மையில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட குழு சிறந்த முன்னுதாரணமாகும் என நவநீதம்பிள்ளை பாராட்டியிருந்தார். ஆனால் கடந்தகாலங்களில் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் செயற்பாட்டில் காணப்பட்ட வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையில் சந்தேகம் வெளியிட்டிருந்த நவநீதம்பிள்ளை ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் விவகாரங்களை கையாளும் பிரிவினை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கவுள்ளார். இதன்மூலம் சர்வதேச காணாமல் போனோர் சாசனப் பொறிமுறைகளை இலங்கை பின்பற்ற வேண்டிய தேவையினை,நிர்பந்தத்தினை உருவாக்க நவநீதம்பிள்ளை முயற்சிப்பதுடன், சர்வதேசளவில் ஏற்றுக்கொள்ளக் கூடிய விசாரணைகளை இலங்கையில் நடாத்தத் திட்டமிட்டுள்ளார் போல் தெரிகின்றது.
அவ்வாறாயின் 2014 ஆம் ஆண்டு பங்குனி மாதத்திற்கிடையில் யுத்தக் குற்றங்களுக்கான தேசிய ரீதியிலான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நடாத்த வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை எதிர்பார்ப்பது போன்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் சுதந்திரமான நீதிமன்றச் செயற்பாடுகளுக்கான சூழலை முதலில் உருவாக்க வேண்டும். அரசியல் தலையீடற்ற நீதிமன்றச் செயற்பாடே வெளிப்படைத்தன்மையினையும், நம்பகத்தன்மையினையும் உறுதிப்படுத்தும். இதன் மூலமே 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வர இருக்கும் ஆபத்தினை இலங்கையினால் தடுக்க முடியும்.
முன்னோக்கிய பார்வை
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான பொறிமுறையினை உருவாக்கிச் செயற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசாங்கம் நீண்ட சர்வதேச அழுத்தத்தின் பின்னர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை நியமித்தது. ஆனால் இவ் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வெளிப்படையான விசாரணைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இவ்விடயங்கள் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்குள்ளாகியுள்ளது. குறிப்பாக திருகோணமலை மாணவர்கள் படுகொலை, ஐக்கியநாடுகள் தொண்டு ஊழியர்களின் படுகொலை தொடர்பாக விசாரணைக்குட்படுத்த வேண்டும் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்த போதும்ää வெளிப்படையாக இவைகள் தொடர்பான விசாரணைகள் செய்யப்பட்டு அறிக்கைகள் சமர்பிக்கப்படவில்லை.
இலங்கைக்கு எதிராக ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களிலும் பொருளாதார அபிவிருத்தி, வறுமைத் தணிப்புää நல்லாட்சி என்பவைகளுக்கு ஊடாக எதிர்கால இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தினை உத்தரவாதப்படுத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டிருந்தது. மனித உரிமைகள், நல்லாட்சி பற்றிய விடயங்கள் சர்வதேச அரங்குகளில் விவாதிக்கப்படுவதை தடுத்து, நவீன ஜனநாயக நாடுகளில் ஒன்றாக இலங்கையினை கட்டியெழுப்புவற்கும், ஐக்கிய இலங்கையினை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பதற்கும் பொருத்தமானதொரு நகல் அமைப்பாகக் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லெண்ண ஆணைக்குழுவின் சிபார்சுகளைக் கருதலாம் என புத்திஜீவிகள் பலர் நம்புகின்றார்கள்.
இவ்வாறான நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைவது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லெண்ண ஆணைக்குழு அங்கத்தவர்களின் அனுபவமேயாகும். இக்குழு அங்கத்தவர்கள் நீண்ட காலமாக இலங்கை அரசாங்க முறைமையின் பங்குதாரர்களாக இருந்தவர்களாகும்.எனவே இக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபார்சுகள் அனுபவபூர்வமானவை என்பதுடன், நாட்டு நலனில் மிகவும் அக்ககையுடன் செய்யப்பட்ட சிபார்சுகளாகவும் இருக்கும் என்பது புத்தி ஜீவிகளின் கருத்தாகும். தேசிய மொழிக் கொள்கையினை அமுலாக்க தேசியளவில் குழுக்கள் நியமிக்கப்பட்டாலும், மிகவும் குறுகிய நோக்கில் அரசாங்க உத்தியோகத்தர்கள் மட்டத்தில் மாத்திரமே இக்குழுக்களின் செல்வாக்கு அதிகமாகக் காணப்படுகின்றது. அரசாங்கத்தினால் அண்மையில் உருவாக்கப்பட்டு ஜனாதிபதியின் பொறுப்பில் விடப்பட்டுள்ள சட்டமும்,ஒழுங்கும் என்னும் அமைச்சு நவநீதம்பிள்ளையின் கடும் விமர்சனத்திற்குள்ளாகியது. உண்மையில் நீதி அமைச்சின் பொறுப்பில் அல்லது பொதுநிர்வாக அமைச்சின் பொறுப்பில் இருக்க வேண்டிய சட்டம் மற்றும் ஒழுங்கு என்ற அமைச்சினை முப்படைகளின் தளபதியாக அரசியல் யாப்பு விபரிக்கும் ஜனாதிபதி தன் வசம் வைத்திருப்பது இதிலுள்ள நம்பகத் தன்மையில் பல சந்தேகங்களை தோற்றிவித்துள்ளது.
ஆழுமையற்ற அரசியல்
நவநீதம்பிள்ளை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தவராகும். அவரை இலங்கைக்கு வரவழைத்து நிலைமைகளைக் கண்டறிவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் கொடுத்துத் தனது வெளிப்படைத்தன்மையினை வெளிப்படுத்திய இலங்கை அரசாங்கம் அவர் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் முன்வைத்த கருத்துக்களுக்கும்,கேள்விகளுக்கும் பதில்வழங்க வேண்டும். அவருடைய கருத்துக்கள் அனைத்தையும் இலங்கை அரசாங்கத்தினால் நிராகரிக்கமுடியாது. ஏனெனில் அவ்வாறு நிராகரிக்கக் கூடியளவிற்கு வலுவான ஆதாரங்கள் எதுவும் இலங்கையிடம் இல்லை என்பதுடன்,இலங்கையின் ஆளுமை சர்வதேசளவில் இன்று மிகவும் பலவீனமானதாக உள்ளது என்ற கசப்பான உண்மையினையும் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உண்மையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தெளிவானதொரு கொள்கையினைப் பின்பற்றாது தமது சிந்தனைக்குட்டவழி செயற்படவே விரும்புகின்றது. இன்னோர் வகையில் கூறின் இலங்கை தான் செய்த தவறுகளிலிருந்து விலகியிருக்க அல்லது யாருக்கும் பொறுப்புக் கூறாமலிருக்கவே விரும்புகின்றது. பங்குபற்றல்ஜனநாயகம் உள்ளதொரு நாட்டில் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். நாட்டின் நலன்களுக்கு எது முக்கியமானது என்பதை தீர்மானிக்கும் மீயுயர் அதிகாரம் (Sovereignty) நாட்டில் வாழுகின்ற எல்லா மக்களிடமே உள்ளது என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது. பிரான்ஸ் மன்னாக இருந்த பதினான்காம் லூயி (Louis XIV) கூறியது போன்று “நானே அரசு“ என சிந்திப்பதும், சிறு குழுவாதம், இனவாதம்,சமயவாதம் பேசுகின்ற அரசியல் சக்திகளை திருப்திப்படுத்தும் நோக்கில் செயற்படுவதும் மாறிவரும் பூகோள அரசியல் சூழலுக்குப் பொருத்தமான ராஜதந்திரமல்ல என்பதை எல்லோரும் புரிந்து கொள்வது நாட்டின் எதிர்கால நலன்களுக்கு நன்மையானதாகும்.