இந்திய சிவில் சேவை

பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிகள் இந்தியாவை நிர்வகிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தியாவில் சிவில் சேவை என்பது ஆரம்பமாயிற்று. ஆரம்பத்தில் கிழக்கிந்தியக் கம்பனி 1600 முதனிலை வர்த்தக அமைப்புக்களைத் தோற்றுவித்தது. இவ்வமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்புக்களைக் கொண்டமைந்ததுடன், அதற்கான அதிகாரங்களையும் கொண்டிருந்தன. இவ்வமைப்புகளின் உயர்நிலைப் பதவிகளும், பொறுப்புக்களும் ஆங்கிலேயரிடமே விடப்பட்டிருந்தன. இந்தியர்கள் மத்தியதரப் பதவிகளையே பெற்றிருந்தார்கள்.

இவ் அத்தியாயம் இந்திய சிவில் சேவையினை இரண்டாகப் பிரித்து பரிசீலனை செய்கின்றது. முதற்பிரிவிற்குள் பிரித்தானிய இந்திய சிவில் சேவை பரிசீலனை செய்யப்படுகின்றது. அடுத்து சுதந்திர இந்தியாவின் சிவில் சேவை ஆணைக்குழுவின் முக்கியத்துவம், சமகால சிவில் சேவைக் கட்டமைப்பு, அகில இந்திய சிவில் சேவையின் சிறப்பு போன்றவை பரிசீலனை செய்யப்படுவதுடன், சிவில் சேவை தொடர்பான சமகால சிந்தனைகளையும் பரிசீலனை செய்கின்றது.

க்லைவ் பிரபு (Lord Clive) வின் சீர்திருத்தம்.

பிரித்தானிய இந்திய சிவில் சேவையானது ஆரம்பத்தில் பல குறைபாடுகளைக் கொண்டதாக காணப்பட்டது.

· கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் சிவில் சேவையாளர்கள் பதவிக்கமர்த்தப்படுவதற்கு முன்னர் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்பது முதன்மையானதாகக் கருதப்படவில்லை.

· மிகவும் குறைந்த ஊதியத்திற்கே இவர்கள் தமது சிவில் சேவைக் கடமையைச் செய்து வந்தார்கள். இதனால் இலஞ்சம் பெறுகின்ற பழக்கம் காணப்பட்டது.

கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் சிவில் சேவையில் காணப்பட்ட இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு க்லைவ் பிரபு (Lord Clive) என்பவர் முயற்சி செய்து புதிய நடைமுறைகள் சிலவற்றை அறிமுகப்படுத்தினார். தரமான ஊதியம், சலுகைகள், ஏனைய சமூக வசதிகள் சிவில் சேவையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க ஏற்பாடு செய்ததுடன், கம்பனியின் நெறியாளராகவும் பதவிக்கமர்த்தப்பட்டார். ஆனாலும், இவரால் கூட பிற்காலத்தில் இக்குறைபாடுகளை நிவர்த்திக்க, கட்டுப்படுத்த முடியவில்லை. இலஞ்சம் வாங்குதல், அன்பளிப்புப் பொருட்களை வாங்குதல் என்ற பழக்கங்களை சிவில் சேவையாளர்கள் தொடர்ந்து பின்பற்றிவந்தனர்.

ஹொன்வோல்ஸ் பிரபு (Lord Cornwalls)

இக்காலத்தில் ஹொன்வோல்ஸ் பிரபு என்பவர் கிழக்கிந்திய கம்பனியின் சிவில் சேவையில் தீவிர மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தார். இவர் ஏற்படுத்திய தீவிர மாற்றத்தில் இந்திய சிவில் சேவையாளர்களுக்கு ஆதரவான எவ்விதமான சிபார்சுகளையும் முன்வைத்திருக்கவில்லை. பதிலாக ஐரோப்பியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் முக்கிய பதவிகள் வழங்குவது தொடர்பாகவே இவர் அக்கறை செலுத்தியிருந்தார். இந்திய சிவில் சேவையாளர்கள் தொடர்ந்தும் கீழ்நிலையாளர்களாகத் தொழில் புரிவதையே விரும்பியிருந்தார்கள். ஆனால் இவர் கம்பனியின் பணியாளர்கள் ஊதியத்திற்கு புறம்பாகப் பணம் பெறும் செயல்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

வெல்ஸி பிரபு (Lord Wellsey);

ஹொன்வோல்ஸ் பிரபுக்குப் பின்னர் வெல்ஸி பிரபு கம்பனியின் சிவில் சேவையாளருக்குச் சிறிய காலம் பயிற்சி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்காகக் கல்கத்தாவில் ஒரு கல்லூரியை ஆரம்பிக்கலாம் எனவும் ஆலோசனை கூறியிருந்தார். மேலும் கம்பனியின் இளம் சிவில் சேவையாளர்கள் தமது கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் இந்திய மொழிகள், சட்டம், வரலாறு போன்ற பாடங்களில் பயிற்சி பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இவரின் இத்திட்டம் கம்பனியின் நெறியாளர்களால் நெறிப்படுத்தப்பட்டதுடன், 1806ஆம் ஆண்டு ஹெய் லெபுறி (Hai leybury) என்னும் இடத்தில் இதற்கான கல்லூரி ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரிக்கான பயிற்சியாளர்கள், நெறியாளர்கள் சபையால் தெரிவு செய்யப்பட்டார்கள்.

வில்லியம் பென்ரிங் பிரபு (Lord William Bentink)

வில்லியம் பென்ரிங் பிரபு இந்தியர்களுக்குக் கம்பனியில் உயர் நிர்வாக பதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். இது தொடர்பான சட்டம் 1833ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. கம்பனியின் சிவில் சேவையில் பிரதேசரீதியாக, பிறப்புரீதியாக, சமயரீதியாக, குலரீதியாக, நிறரீதியாகக் யாருக்கும் பாகுபாடு காட்டப்படக்கூடாது என இச்சட்டம் எடுத்துரைத்தது. ஆயினும் 1857ஆம் ஆண்டு வரை நாட்டின் சிவில் சேவையில் எவ்வித பதவிகளையும் இந்தியர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.

முயூரினி ஆணைக்குழு (Mutiny Commission)

1858ஆம் ஆண்டு முயூரினி ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை இந்தியர்களுக்குச் சிவில் சேவையில் உயர் பதவிகளை வழங்குவதற்கான உத்தரவாதத்தை வழங்கியிருந்தது. இவரது சிவில் சேவை தொடர்பான அறிக்கையில் இனரீதியாகவோ அல்லது ஏனைய எவ்வித குணாம்சங்கள் ரீதியாகவோ சிவில் சேவையில் யாருக்கும் பாகுபாடு காட்டப்படமாட்டாது எனக் கூறியிருந்தார். பதிலாகக், கல்வித்தரத்தையும், திறமையையும் அடிப்படையாகக் கொண்டே சிவில் சேவையில் ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனக் கூறியிருந்தார். இதை நடைமுறைப்படுத்துவதற்கு ஒருகுழு உருவாக்கப்பட்டது. இக்குழு சிவில் சேவையாளர்களுக்கான பரீட்சைகளை நடாத்தியது. இச்செய்முறை கூட இந்திய மக்களுக்குத் திருப்தி தருவதாக அமையவில்லை என்பதுடன், அரசாங்கத்தால் இத்திட்டம் பூரணமாக நடைமுறைப்படுத்தப்படவுமில்லை.

இந்திய சிவில் சேவைச் சட்டம் (Indian Civil Service Act)

1861ஆம் ஆண்டு இந்திய சிவில் சேவைச் சட்டம் என்ற ஒரு புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. இது சிவில் சேவையாளர்களின் நியமனங்கள் தொடர்பாக எடுத்துக் கூறியது. இச்சட்டத்தின் படி இந்திய சிவில் சேவைக்கு நியமிக்கப்படும் அங்கத்தவர்கள், மாநில அரசுச் செயலாளர்களினால் நியமிக்கப்பட்டு பன்னிரண்டு மாதங்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்த அடிப்படையிலான சேவையாளர்கள் சிவில் சேவைக்கு அங்கத்தவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஒப்பந்த அடிப்படையிலான சிவில் சேவையாளர்களின் ஆட்சேர்ப்புத் திறந்த போட்டிப்பரீட்சை மூலம் நடைபெறும். இப்பரீட்சை ஒவ்வொரு வருடமும் இலண்டனில் நடைபெறும். மேலும் 1878ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் போட்டிப்பரீட்சைக்குத் தோற்றும் போட்டியாளர்களின் வயது 22இல் இருந்து 19 வயதாகக் குறைக்கப்பட்டது. உண்மையில் இது நடைமுறையில் இந்தியர்கள் சிவில் சேவையில் இருந்து வெளியேறுவதற்கே பெரிதும் வாய்ப்பாக இருந்தது என கூறப்படுகின்றது.

இந்திய தேசிய காங்கிரஸின் கோரிக்கை

1885ஆம் ஆண்டளவில் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம் பெற்றதுடன், ஒப்பந்த அடிப்படையில் சிவில் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்காக இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடத்தப்பட்டு வந்த போட்டிப்பரீட்சைகளை ஏக காலத்தில் நடத்தும்படி கோரிக்கை விடுத்தது. இதற்கு பிரித்தானிய அரசு ஓர் ஆணைக்குழுவை நியமித்தது. ஆணைக்குழு ஏககாலத்தில் சிவில் சேவைப்பரீட்சைகள் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடைபெறுவதை நிராகரித்ததுடன் இப்பரீட்சையில் இலாபமடைவது சமூகத்தில் காணப்படும் ஒரு சிறிய குழு மாத்திரமே என்பதையும் சுட்டிக் காட்டியது. அவை ஒப்பந்த அடிப்படையிலான சிவில் சேவையாளர்களுக்கும், நிரந்தரமான சிவில் சேவையாளர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று ஆணைக்குழு ஆலோசனை கூறியது. மேலும் சிவில் சேவையில் உள்ள எல்லாப்பகுதியையும் மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் எனவும் ஆலோசனை கூறியது. அவையாவன:

  • ஏகாதிபத்திய சிவில் சேவை
  • மாகாண சிவில் சேவை
  • கீழ்நிலையாள் சிவில் சேவை என்பவைகளாகும்.

இம்மூன்றிலும் முதல் இரண்டுக்கும் முதன்மையான இடங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு சிபாரிசு செய்தது.

1893ஆம் ஆண்டு பொதுமக்கள் சபை இந்திய சிவில் சேவை தொடர்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானத்தின் படி இவ்வளவு காலமும் இந்திய சிவில் சேவைக்காக இங்கிலாந்திலும், இந்தியாவிலும் தனித்தனியாக நடைபெற்ற எல்லாப் போட்டிப் பரீட்சைகளையும் ஏககாலத்தில் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பரீட்சையின் இறுதியில் திறமையின் அடிப்படையில் சிவில் சேவைக்கான ஆட்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இத்தீர்மானம் ஆங்கிலேயர்களுக்குச் சமமாகச் சிவில் சேவையில் இந்தியர்கள் இடம் பிடிப்பதற்கு வாய்ப்பாக அமைந்திருந்தது. இதனால், இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது மிகவும் ஆபத்தானது எனக்கருதி அரசாங்கம் அமுல்படுத்தாது விட்டது.

றோயல் ஆணைக்குழு (Royal Commission)

சிவில் சேவை இந்திய மயவாக்கத்திற்குள்ளாக வேண்டும் என்று இந்தியர்கள் தொடர்ந்து கோரி வந்தார்கள். மேலும் இவர்கள் சிவில் சேவையில் அரசுச் செயலாளரின் கட்டுப்பாடு இருப்பதை எதிர்த்து வந்தனர். இது தொடர்பாக ஆராய்வதற்காக 1923ஆம் ஆண்டு றோயல் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. இவ்வாணைக்குழு சிவில் சேவையில் இந்தியர்களின் விகிதாசாரத்தை அதிகரிக்க வேண்டும் எனச் சிபார்சு செய்தது. எதிர்காலத்தில் சிவில் சேவைக்கு ஆட்சேர்க்கும் போது ஐரோப்பியர், இந்தியர் ஆகிய இரு சாராருக்கும் சம அளவிலான பதவிகள் வழங்கப்படுமெனவும் உறுதியளித்தது. இந்திய பொலிஸ் சேவையில் இந்தியர்களுக்கு 3 % வழங்கப்படவேண்டும் எனச் சிபார்சு செய்தது. இதனை விடச் சிவில் சேவையாளர்களுடைய ஊதியத்தை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிபார்சு செய்தது. உடனடியாகப் பொதுச்சேவை ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே இதன் சிறப்பான சிபார்சாக இருந்தது.

சுதந்திர இந்திய பொதுச்சேவை ஆணைக்குழு

இந்தியாவின் அரசியல் திட்டத்தை உருவாக்கியவர்கள் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பொதுச் சேவைகள் தொடர்பான சரத்துக்களையும் உருவாக்கியிருந்தார்கள். (பகுதி XIV, சரத்துக்கள் 315-323) இச்சரத்துக்கள் இந்தியாவின் பொதுச் சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு நிபந்தனைகள் தொடர்பாக எடுத்துக்கூறியது. இவற்றை நெறிப்படுத்துவதற்காகப் புதிய அரசியல் திட்டம் பொதுச்சேவைகள் ஆணைக்குழு ஒன்றையும் தோற்றுவித்தது.

அரசியல் திட்டத்தின் படி பொதுச்சேவைகள் ஆணைக்குழு மத்திய அரசுக்குத் தனியாகவும் ஏனைய மாநில அரசுகள் ஒவ்வொன்றுக்கும் தனியாகவும் உருவாக்கப்பட்டது. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மாநில அரசுகள் ஒன்றிணைந்து தமக்கென்று பொதுவான பொதுச்சேவைகள் ஆணைக்குழுவை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.

மத்திய அரசின் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார். மாநில அரசுகளின் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆளுநரால் நியமிக்கப்படுவார்.

மத்திய அரசின் பொதுச்சேவை ஆணைக்குழுவாயினும், மாநில அரசின் பொதுச்சேவை ஆணைக்குழுவாயினும் இதன் ஏனைய அங்கத்தவர்களில் அரைப்பங்கினர் 10 வருட சிவில் சேவையை மத்தியில் அல்லது மாநிலத்தில் பூர்த்தி செய்தவர்களில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. இவர்கள் கடமையில் இருப்பவர்களாக அல்லது ஓய்வு பெற்றவர்களாக இருக்கலாம். பொதுச் சேவை ஆணைக்குழு அங்கத்தவர்களின் பதவிக் காலம் ஆறு வருடங்களாகும் அல்லது 65 வயது வரும் வரை கடமையாற்றலாம். இதில் எது முதலில் வருகின்றதோ அதை நடைமுறைப்படுத்தலாம். மத்திய, மாநில பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாகவும் அரசியல் திட்டம் எடுத்துக்கூறுகின்றது.

முதல் செயற்பாடு மத்திய, மாநில அரசுகளின் சிவில் சேவையாளர்களைப் பணிக்கமர்த்துவதற்கான பரீட்சைகளை நடாத்துவதாகும்.மேலும் ஆட்சேர்ப்பு முறைகள், பணிக்கமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய கொள்கைகள், பதவி உயர்வுகள், ஒழுக்கங்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

பொதுச்சேவை ஆணைக்குழு தனது வருடாந்த அறிக்கையை ஜனாதிபதிக்குச் சமர்பிக்க வேண்டும். இது பின்னர் பாராளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் விவாதத்துக்;காக அனுப்பி வைக்கப்படும்.

சமகால சிவில் சேவைக் கட்டமைப்பு

இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் திறமையாக முகாமைத்துவம் செய்யும் நோக்கில் பரந்தளவிலான வேறுபட்ட நிர்வாக வடிவங்கள் தேவைப்பட்டன. மதிநுட்பமான சிவில் சேவையின் கடமையாக இது கூறப்பட்டது.

இதற்காக இந்திய அரசியல் திட்டம் மூன்று வகையான நிர்வாக சேவை அமைப்புக்கiளைத் தோற்றுவித்துள்ளது.

  1. அகில இந்திய சேவை
  2. மத்திய அரசின் சேவை
  3. மாநில அரசின் சேவை

மத்திய அரசின் சேவை

மத்திய அரசின் சேவையானது, அரசியல் திட்டம் மத்திய அரசுக்கு என்று குறித்து ஒதுக்கிய அதிகாரப் பட்டியலில் உள்ள வெளி விவகாரம், பாதுகாப்பு, வருமான வரி, தபால் தந்தி போன்ற விடயங்களை நிர்வகிக்கும் கடமையைச் செய்யும்.

மத்திய அரசின் சேவையில் இந்திய வெளிவிவகாரச் சேவை முதன்மையானதாகும். 1783ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஐரோப்பிய வல்லரசுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்குடன் ஐரோப்பியர்களால் வெளிவிவகாரத் திணைக்களம் உருவாக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1946ஆம் ஆண்டு. செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கான இராஜதந்திரத் துணைத் தூதுவராலயங்களை வெளிநாடுகளில் உருவாக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

1947ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துடன் பிரித்தானிய வெளிவிவகாரத் திணைக்களம் புதிய வெளிவிவகார அமைச்சு என மாற்றப்பட்டது. 1948ஆம் ஆண்டு இந்திய பொதுச் சேவை ஆணைக்குழுவின் பரீட்சையின் ஊடாக முதலாவது தொகுதி இந்திய வெளிவிவகாரச் சேவையாளர்கள் சேர்க்கப்பட்டனர். இன்று மிகவும் பலமான ஓர் அமைப்பாக இது வளர்ந்துள்ளது.

மாநில அரசின் சேவை

மாநில அரசின் சேவையானது அரசியல் திட்டம் மாநில அரசுக்கென்று குறித்தொதுக்கிய அதிகாரப் பட்டியலில் உள்ள விவசாயம், சுகாதாரம், வனம், காணி வருமானம் போன்ற விடயங்களை நிர்வகிக்கும் கடமையைச் செய்யும்.

அகில இந்திய சேவை

அகில இந்திய சேவை என்ற நிர்வாக அமைப்பை இந்திய அரசியல் திட்டம் உருவாக்கியுள்ளது. இது உலகில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் சேவையாக இது கருதப்படுகின்றது. அகில இந்திய சேவையாளர்கள் மத்திய, மாநில அரசுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள்.

அரசியல் திட்டம் அகில இந்திய சேவையை உருவாக்கிய போது மூன்று வகையான அகில இந்திய சேவையை உருவாக்கியது. அவையாவன:

  1. இந்திய நிர்வாக சேவை (IAS)
  2. இந்திய பொலீஸ் சேவை. (IPS)
  3. இந்திய வன சேவை (IFS)

இந்திய நிர்வாக சேவை

மூன்று அகில இந்திய சேவையுள் இந்திய நிர்வாக சேவையும் ஒன்றாகும். இந்திய அரசாங்கத்தின் கொள்கைகள் தீர்மானங்கள் பயனுள்ள முறையில் நிறைவேற்றப்படுவதற்குப் பலமான நிர்வாக வலைப்பின்னல் தேவைப்பட்டது. இதன் விளைவே இந்திய நிர்வாக சேவையின் தோற்றமாகும்.

பிரித்தானிய சிவில் சேவையில் இந்திய சிவில் சேவை (India Civil Service – ICS) என அழைக்கப்பட்ட இவர்கள், வரி சேகரிப்பாளர்களாகவே இருந்தனர். காலனித்துவ ஆட்சியில் வரி செலுத்தாதவர்கள் ICS அதிகாரிகளால் தண்டிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு நீதிபதிக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்தியா சுதந்திரம் பெற்றுக் குடியரசாக மாறியபோது, இந்தியர்கள் ICS அமைப்பை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதன் பெயரை இந்திய நிர்வாக சேவை (India Administrative Service- IAS ) ஆக மாற்றிக் கொண்டார்கள். IAS சிவில் நிர்வாகத்தைக் கவனிப்பதுடன், கொள்கை உருவாக்கம், உள், வெளி முரண்பாடுகளை முகாமை செய்யும் பணிகளையும் செய்கின்றது. இலக்கியத்திலிருந்து மருத்துவம் வரையிலான கல்வியாளர்களிலிருந்து மதிநுட்பம், பொறுப்பு, திறன் வாய்ந்தவர்கள் மிகப்பரந்ததும் கடுமையானதுமான பரீட்சை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள்.

இந்திய நிர்வாக சேவை அதிகாரிகள் நிர்வாகக் கடமைகளைச் செய்யும் வகையில் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும். தமக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்படலாம் என்ற பயமின்றியும், நிதிப் பாதுகாப்புப் பயமின்றியும் சுதந்திரமாக பேச முடியும். இதற்கான உத்தரவாதத்தை அரசியல் யாப்பு வழங்கியுள்ளது. இவர்கள் இந்திய பொதுச் சேவை ஆணைக்குழுவின் (India Public Service Commission – IPSC) சிபார்சின் பேரில் மத்திய அரசால் பல மாநில அரசுகளிலும் நியமனம் செய்யப்படுகின்றார்கள். ஒவ்வொரு மாநில அரசும் இவர்கள் மீது கட்டுப்பாட்டை விதிக்கலாம். ஆனால், மத்திய அரசினதும், இந்திய பொதுச் சேவை ஆணைக் குழுவினதும் ஆலோசனையின்றி இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளையோ அல்லது குற்றம் சுமத்தித் தண்டனைகளையோ விதிக்க முடியாது. இது பொருத்தமற்ற வகையில் மாநில அரசுகள் மேற்கொள்ளும் அச்சுறுத்தலிலிருந்து IAS அதிகாரிகளுக்குப் பாதுகாப்பை வழங்கியிருந்தது.

இந்திய பொலீஸ் சேவை

1857ஆம் ஆண்டு சுதந்திரத்துக்கான இந்தியர்கள் நடத்திய கலவரத்துடன் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சியும் முடிவுக்கு வந்தது. இந்தியா, முடியின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் வந்ததுடன், சட்டம், ஒழுங்கைப் பேணும் நோக்கில் சட்டப்படியான பொலிஸ் நிர்வாக முறை அமுலுக்கு வந்தது. 1861ஆம் ஆண்டு இந்திய பொலிஸ் சட்டம் அமுலுக்கு வந்ததுடன் காலனித்துவ ஆட்சியும் பலத்தினூடாக நிலைநிறுத்தப்பட்டது.

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், காலனித்துவ பொலிஸ் சேவை இந்திய பொலிஸ் சேவையாக (IPS) மாறியது. சுதந்திர இந்தியாவின் முதல் உள்விவகார அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் (Sardar Ballabh Bhai Patel) இந்திய பொலிஸ் சேவையை மேன்மைப்படுத்தும் தூர நோக்கை உருவாக்கினார். புதிய இந்தியாவின் ஐக்கியம், ஒருமைப்பாடு என்பவற்றைப் பாதுகாப்பதற்கும், சட்ட ஆட்சியை நிலை நிறுத்துவதற்கும் சுதந்திர இந்திய பொலிஸ் சேவை அவசியம் என்பதை உணர்த்தியிருந்தார்.

இதனால் அகில இந்திய சேவையில் இந்திய பொலிஸ் சேவை முதன்மையான இடத்தைப் பெற்றுக் கொண்டது. மத்திய, மாநில அரசாங்கத்தின் பொலிஸ் செயற்பாட்டை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு IPS அங்கத்தவர்களுக்கேயுரியதாகும். இவர்கள் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புடன் தொடர்புடைய எல்லா விடயங்களையும் கவனிக்க வேண்டும். மாநில அரசுகளின் பாதுகாப்புத் தொடர்பாக மாநிலஅரசுகளின் பொலிஸ் அமைப்புடன் கலந்தாலோசித்துச் செயற்பட வேண்டும்.

இந்திய வன சேவை

சூழல் பாதுகாப்பு, காடுகளை விஞ்ஞான ரீதியில் பாதுகாத்தல் என்ற நோக்கில் இந்திய வன சேவை 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இச் சேவைக்கான ஆட்கள் இந்திய பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு ஊடாகப் போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். இவர்கள் அரசியல் கட்டுப்பாடு இல்லாமல் பாதுகாப்பு உணர்வுடன் தமது பணியைச் செய்யமுடியும்.

ஆனால் இந்திய அரசியல் திட்டம் இந்தியாவின் நலனைப் பேணுவதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட அகில இந்திய நிர்வாக சேவையைத் தோற்றுவிப்பதற்கு அதிகாரம் வழங்கியுள்ளது. ஆனால் இவ்வாறு தோற்றுவிக்கப்படும் அகில இந்திய நிர்வாக சேவைகள் இராஜ்ய சபை அல்லது மாநிலங்கள் சபையில் 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்படல் வேண்டும்.

அரசியல் திட்டத்தின் இவ் ஏற்பாடுகளைப் பயன்படுத்தி இந்தியப் பாராளுமன்றம் 1961 இல்

  • இந்தியப் பொறியியலாளர் சேவை
  • இந்திய மருத்துவ சுகாதார சேவை

1965 இல்

  • கல்விச் சேவை
  • விவசாயச் சேவை என்ற அகில இந்திய நிர்வாக சேவைகளை தோற்றுவித்தது.

கிருஷ்ணாமாச்சாரி அறிக்கை (1962)

1962 ஆம் ஆண்டு கிருஷ்ணமாச்சாரி அவர்களால் சிவில் சேவை தொடர்பாக ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இவ் அறிக்கையின் படி:-

  1. வருடாந்தம் 100 பேர் சிவில் சேவையாளர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். போட்டிப் பரீட்சை ஒன்றின் மூலமே சிவில் சேவையாளர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
  2. சிவில் சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான பரீட்சையில் போட்டியிடுபவர்கள் 21 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.
  3. ஒதுக்கப்பட்ட வகுப்பினர் (Scheduled Castes) 29 வயது வரை இப்போட்டியில் பங்குபற்றலாம். பரீட்சையானது கல்விசார் துறைப் பாடங்களில் நடைபெறமாட்டாது. ஆனால், மொழியும், கட்டுரையும் பரீட்சையில் ஒரு பாடமாக நடைமுறையில் இருக்கும். இவற்றுடன் பொது அறிவு ஒரு பாடமாக நடைமுறையில் இருக்கும்.
  4. ஆங்கில மொழிக்குப் பதிலாக ஹிந்தி மொழியில் பரீட்சை எழுத மாணவர்கள் ஆர்வம் காட்டினால் இது வரவேற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். இதற்குத் தென்னிந்தியாவில் இருந்து ஏற்பட்ட எதிர்ப்பினால், பிராந்திய மொழிகள் எதனையும் மாணவர்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அகில இந்திய சேவையின் சிறப்பு

அகில இந்திய சேவையில் பல சிறப்பு இயல்புகள் பிரதிபலிப்பதை இனங்காண முடிகின்றது. மேலும் இந்திய அரசியல் முறையில் இவர்களது பங்கு மிகவும் முக்கியமானதாகவும் சுதந்திரமானதாகவும் காணப்பட்டது.

  1. அகில இந்திய சேவையாளர்கள் நாட்டின் பொதுவான நிர்வாக சேவையாளர்கள் போன்று கருதப்படலாயினர். இவர்கள் வேறு பதவிகள் கடமைகள் செயற்பாடுகளைப் பிரதிபலிக்கின்ற பணியாளர்களாகக் காணப்பட்டனர். அகில இந்திய சேவையில் உள்ள அங்கத்தவர்கள் சட்டத்தையும், ஒழுங்கையும் பேணுதல், வருமானத்தைச் சேகரித்தல், சமூக நலத் திட்டங்களை அமுலாக்குதல், அபிவிருத்தியை மேற்கொள்ளுதல் போன்ற கடமைகளைப் புரிபவர்களாகவும் காணப்பட்டனர்.
  2. அகில இந்திய சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுபவர்கள் நாட்டில் காணப்படும் திறமையாளர்களாக இருப்பார்கள். இவர்கள் அகில இந்திய மட்டத்தில் போட்டிப்பரீட்சை மூலம் தெரிவுசெய்யப்படுவார்கள். இப்பரீட்சை இவர்களது நுண்மதியையும், ஆளுமையையும் வெளிப்படுத்தும் பரீட்சையாகக் காணப்படும். இது மிகவும் திறமையானவர்களைத் தெரிந்தெடுத்து அகில இந்திய சேவையைப் பலப்படுத்தும் செயன்முறையாகக் காணப்பட்டது.
  3. அகில இந்திய சேவையின் முழுப்பிரதிநிதித்துவம், அங்கத்துவம் என்பன கனிஷ்ட சிவில் சேவைத் தரத்தில் இருந்தே ஆரம்பமாகின்றது. தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடியினர் ஆகியோர்களுக்குத் தகுந்த பிரதிநிதித்துவம் அகில இந்திய சேவையில் வழங்கப்பட்டது. இது ஒதுக்கப்பட்ட ஆசனம் என அழைக்கப்பட்டது.
  4. அகில இந்திய சேவையாளர்கள் சமூகத்தில் அதிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்களாகவும் காணப்பட்டார்கள். இதனால் நாட்டுக்குத் தகுந்த சிறப்பான நிர்வாகிகளைப் பெறக்கூடியதாக இருக்கின்றது. உயர்ந்த ஊதியம் வழங்கப்படுவதால் சட்டத்துக்கு முரணான வழியில் இவர்கள் பணம் சம்பாதிக்க முயல்வதில்லை எனவும் கூறப்படுகின்றது. மேலும் அகில இந்திய சேவை மத்திய, மாநில அரசுகளுக்கிடையில் சிறப்பான சட்டங்களையும், இணைப்பையும் ஏற்படுத்துகின்றது எனவும் கூறப்படுகின்றது.

அகில இந்திய சேவையின் உருவாக்கத்துடன், இந்திய சிவில் சேவையின் முக்கியத்துவம் பலமடையத் தொடங்கியது. மிக அதிக எண்ணிக்கையில் சிவில் சேவையில் மக்கள் இணையத் தொடங்கினார்கள். 1969 இல் மொத்த சிவில் சேவையாளர்களின் பலம் ஏறக்குறைய 3000 பேராகக் காணப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் பொறுப்புக்கள் அதிகரிக்க, சிவில் சேவையாளர்களுக்கான வெற்றிடமும் அதிகரித்தது. சாதாரணமாக ஒவ்வொரு வருடமும் 100க்கு குறையாத சிவில் சேவையாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். இதில் 25 % மானவர்கள் பதவியுயர்வினாலும், ஏனையோர் போட்டிப்பரீட்சையின் மூலமும் தெரிவு செய்யப்பட்டனர்.

போட்டிப்பரீட்சையில் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி இவர்கள் தங்களுடைய உண்மையான தகுதியை மேலும் உணர்ந்துகொள்ள வாய்ப்பாக அமையும். தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு மாணவர் தொகுதியும் டில்லியில் உள்ள முசூறி (Mussoorie) யில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கல்விக்கழகம் (Lal Bahadur Shastri National Academy of Administration) என்னும் நிறுவனத்தில் தகுதிகாண் மாணவர்களாக ஒரு வருட காலப் பயிற்சியைப் பெறுவார்கள். ஓரு வருடகாலப் பயிற்சியின் இறுதியில் பரீட்சை ஒன்று இவர்களுக்கு நடாத்தப்படும்.

இப்பரீட்சை இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். பகுதி ஒன்றில் பிராந்தியமொழி,ஹிந்தி மொழி என்பன பரீட்சிக்கப்படும். பிராந்திய மொழியாக ஹிந்தியை எடுப்பவர்கள் தாம் விரும்பிய வேறொரு மொழியைப் பரீட்சைக்கு எடுக்கலாம். இங்கு ஹிந்தி மொழியின் செல்வாக்கு நிர்வாக சேவையில் ஆதிக்கம் செலுத்துவதை உணர முடிகின்றது.

பகுதி இரண்டில் பொதுநிர்வாகம், குற்றவியல் சட்டம், அரசியல் திட்டம், ஐந்து ஆண்டுத்திட்டம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். பொது நிர்வாகம் என்ற விடயத்துக்குள் இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியல், வரலாறு, பொதுச்சேவை பற்றிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

ஓரு வருட காலப் பயிற்சிக்காலத்தில் மூன்று மாதங்கள் வேறுபட்ட அரசாங்க நிறுவனங்களில் மாணவர்கள் இணைக்கப்பட்டு செயல்முறைப்பயிற்சி வழங்கப்படும். சமூக அபிவிருத்திப் பயிற்சி நிலையங்கள், மஜிஸ்ரேட் நீதிமன்றங்கள், ஆற்றுப்பள்ளத்தாக்குத் திட்டங்கள் போன்ற இந்தியா அனைத்திலுமுள்ள நிறுவனங்கள் இச்செய்முறைப் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும். வருட இறுதியில் நடாத்தப்படும் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட மாணவர் தொகுதியில் கூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்களிலிருந்து சிரேஷ்டதர சிவில் சேவையாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

விமர்சனம்

இந்திய சேவையில் விரும்பத்தக்க பல சிறப்பியல்புகள் காணப்பட்டன. இந்திய அரசியலில் ஏற்படும் மாறுபாடுகள், மாற்றங்களுக்கேற்ப அது ஆற்றும் பணி மிகவும் காத்திரமானது. அகில இந்திய சேவை அங்கத்தவர்கள் ஆற்றும் பணி நாட்டின் பொதுவான இந்திய நிர்வாக சேவையாளர்கள் ஆற்றும் பணி போன்று காணப்பட்டது. இதன் மூலம் தேசியத்தன்மையை இவர்கள் பேணுகின்றார்கள். அகில இந்தியாவுக்குமான சட்டம், ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான முற்போக்கான எண்ணங்களையும், செயற்பாடுகளையும் இவர்கள் கொண்டிருக்கின்றார்கள். வருமான சேகரிப்பு, சமூகநலத்திட்ட அமுலாக்கம், அபிவிருத்தி வேலைகள் என்பவைகளையும் தேசிய அளவில் முன்னெடுப்பதற்கு இவர்கள் துணைபுரிந்தனர். அநேக மத்திய, மாநிலச் செயலாளர்கள் திணைக்களங்களின் தலைவர்கள், அதாவது மாவட்ட நிர்வாகத் தலைவர்கள் இந்திய சிவில் சேவையாளர்களாலேயே நிரப்பப்பட்டது.

இந்திய நிர்வாக சேவையில் சமூக மட்டச் செல்வாக்கு என்பது ஆக்கிரமிப்பைச் செலுத்தி வருகின்றது. அரசாங்க உயர் அதிகாரிகளின் பிள்ளைகள், வெளிநாட்டில் கற்றவர்கள் போன்றோர் சிவில் சேவையில் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். இதை விடக் குறிப்பிட்ட சில பல்கலைக்கழக மாணவர்கள், தலைசிறந்த பாடசாலை மாணவர்கள் சிவில் சேவையில் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். ஆனால் 15%மான மாணவர்களே கிராமப்புறங்களிலிருந்து சிவில் சேவைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுகின்றார்கள்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

14,929 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>