இந்தியா சீனா உறவினை தீர்மானிக்கப்போகும் லடாக் பிரதேச ஆக்கிரமிப்பு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.05.04, 2013.05.05 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002லடாக் (Ladakh) இந்திய காஷ்மீர் பிரதேசத்திலுள்ள மிகவும் உயர்ந்த மலைத்தொடரிலுள்ள பிரதேசமாகும். இன்னோர் வகையில் கூறின் இலகுவில் சென்றடைய முடியாத, மிகவும் தொலைவிலுள்ள மலைத்தொடரில் அமைந்துள்ள மிகவும் புகழ்பூத்த பிரதேசமாகும். லடாக் இமாலயம் மற்றும் கரகொரம் (Karakoram) மலைத்தொடரையும், இந்து நதிப் பள்ளத்தாக்கினையும் பெரும் பாதுகாப்பு அரணாகக் கொண்டதோர்பிரதேசமாகும். கடல்மட்டத்திலிருந்து  3000 மீற்றர் உயரத்தில் லடாக் பிரதேசம் அமைந்துள்ளது. 45,110 சதுர கிலோமீற்றர் பரப்பளவினைக் கொண்ட இப்பிரதேசம் இந்தியாவின் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். லடாக் பிராந்தியம் கார்கில் மற்றும் லே (Leh) என்னும் இரண்டு மாவட்டங்களைக் கொண்டுள்ளது. லடாக் பிரதேசத்தின் எல்லையாக மேற்கே பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பிரதேசமும்,வடக்கே சீனாவும், கிழக்கு எல்லையாக இமாலயமும் உள்ளன. லடாக் பிரதேசத்தின் வடக்குத் திசையில் 4000 கிலோ மீற்றர் தூரத்திற்கு சீனாவிற்கும் இந்தியாவிற்குமிடையிலான மிகவும் நீண்ட எல்லையுள்ளது. இந்த எல்லையினை சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் அண்மையில் ஆக்கிரமித்து இந்திய ஆட்சிப் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளதாக இந்திய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் அத்துமீறல்
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் வளர்ந்து வரும் பொருளாதார வர்த்தக நல்லுறவினை மேலும் வளர்க்கும் நோக்குடன் 2013 ஆம் ஆண்டு தை மாதம் கூட்டுப் பாதுகாப்பு பேச்சுவார்த்தையினை இருநாடுகளும் நடாத்தின. இக் கூட்டுப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தையின் பின்னர் இருநாடுகளும் விடுத்த அறிக்கையில் “கூட்டு இராணுவப் பயிற்சிகளில் இருநாடுகளும் ஈடுபடுவது’ என அறிவித்தன. இப்பிராந்தியத்திலிருந்த பதற்றத்தினைக் குறைக்கவும், எதிர்காலச் சந்ததியினர் சாந்தி,சமாதானம் மிக்க வளமானதொரு வாழ்க்கையினைப் பெறுவதற்கும் இரு நாடுகளும் எடுக்கும் இராஜதந்திர முயற்சியாக இது நோக்கப்பட்டது.

அதேநேரம், எல்லைத் தகராறுகளைத் தீர்ப்பதற்காக 2005 ஆம் ஆண்டு தொடக்கம் பதினைந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகளை சீனாவும் இந்தியாவும் நடத்தியுள்ளன. ஆயினும் மிகவும் ஆழமாக இரு நாடுகளினதும் மனங்களில் புதையுண்டு போயிருக்கும் எல்லைத் தகராறுகளைத் தீர்ப்பதற்கான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதில் இருநாடுகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளன.

இந்நிலையில், சீனாவிற்குச் சொந்தமான இரண்டு இராணுவ உலங்கு வானூர்திகள் சித்திரை மாதம் 14 ஆம் திகதி இந்தியாவின் வான் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து உணவுக் குவளைகள், சிகரெட்டுகள், சீன மொழியில் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் போன்றவற்றை வீசிச் சென்றதாகவும், இதனைத் தொடர்ந்து சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் இந்தியாவின் லடாக் பிரதேசத்திற்குள் ஊடுருவ ஆரம்பித்து விட்டதாகவும் இந்தியா குற்றம் சாட்டுகின்றது.

ஆயினும் இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிழக்குத் திசையிலுள்ள எல்லையூடாக லடாக் பிரதேசத்தின் டெப்சாங் பள்ளத்தாக்கிற்குள்;; (Depsang valley) பத்து கிலோ மீற்றர் தூரத்திற்கு சித்திரை மாதம் 15 ஆம் திகதி ஊடுருவிய சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம், தற்போது மேலும் ஒன்பது கிலோ மீற்றர் தூரம் ஊடுருவி பத்தொன்பது கிலோ மீற்றர் தூரத்தினைக் கைப்பற்றி அங்கு தற்காலிக முகாம்களை உருவாக்கி நிலை கொண்டுள்ளதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா மீதான சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடைபெற்ற பின்னர், இந்திய இராணுவத் தளபதிகள் சீனாவின் இராணுவத் தளபதிகளுடன் இரண்டு தடைவை இந்த ஆக்கிரமிப்புத் தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். ஆயினும் இப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததுடன், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் தொடர்ந்தும் தான் கைப்பற்றிய இந்தியாவின் ஆட்சிப் பிரதேச எல்லைக்குள் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் ஆட்சிப்பிரதேசத்திலிருந்து சீனா தனது படைகளை விலக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்த போதும், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் தாங்கள் நிலை கொண்டுள்ள இடங்களிலிருந்து இதுவரை விலகவில்லை என லடாக் பிரதேச சிவில் நிர்வாகி செறிங் அங்சூக் (Tsering Angchuk) கூறியுள்ளார்.

அத்துமீறலுக்கான காரணங்கள்
சீனா தனது இமாலயப் பிரதேச எல்லைக்குள் மிகவும் பலமான இராணுவ, சிவில் உட்கட்டுமானப்பணிகளை மேற்கொண்டுள்ளது. அதேநேரம் மிகவும் காலம் தாழ்த்தி தனது இமாலயப் பிரதேச எல்லைக்குள் மிகவும் இறுக்கமான உட்கட்டுமானப்பணிகளை இந்தியா மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஆயினும் சீனா கட்டமைத்துக் கொண்டளவிற்கு இந்தியாவினால் உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாகச் செய்யமுடியாது திணறுகின்றது.

சீனா அண்மையில் 3,310 கிலோ மீற்றர் தூரமுள்ள சுரங்கப்பாதைகளை தனது கட்டுப்பாட்டிலுள்ள இமாலயப் பிரதேசத்தில் அமைத்துள்ளது. இப்பாதைகள் திபெத்தினை சீனாவுடன் இணைப்பதுடன்,   இந்தியாவின் இமாலயப் பிரதேச எல்லைக்கு மிகவும் அண்மித்தும் செல்கின்றன. 3,750 மீற்றர் உயரமுள்ள பனிமலைத்தொடருக்கூடாக கட்டமைக்கப்பட்டுள்ள இப்பாதைகளை அமைப்பதற்கு சீனா இரண்டு வருடங்களைச் செலவழித்துள்ளது. அதேநேரம், இந்தியா இமாலயப் பிரதேசத்திற்கு ஊடாகச் செல்லக்கூடிய சுரங்கப்பாதைகளை அமைத்துள்ளதுடன்,எல்லா காலநிலைகளுக்கும் பொருந்தக்கூடிய சுரங்கப் பாதைகளை லடாக் பிரதேசத்தில் எதிர்காலத்தில் அமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனைவிட, அருணாசலப்பிரதேசம்,சிக்கிம்,உத்தர்கான்ட், இமாலயப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கான இந்திய சீன எல்லையில் இருபத்தியேழு பெரும் தெருக்களைக் கட்டம் கட்டமாக அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும்,இப்பெருந்தெருக்களின் மொத்த நீளம் 804 கிலோ மீற்றர் எனவும் கூறப்படுகின்றது.

கட்டம் கட்டமாகப் பூர்த்தியடையும் இப்பெருந்தெருக்கள் உடனடியாக சிவில், இராணுவத் தேவைகளுக்காகவும், சீன இந்திய எல்லையில் பணியாற்றும் இந்திய திபெத்திய எல்லைக் காவல்துறையின் பயன்பாட்டிற்காகவும் இந்தியாவினால் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. மிகவும் உயரமான இடத்தில் அமைக்கப்படவுள்ள இப் பெருந்தெருக்கள் யாவும் சீன இந்திய எல்லையிலுள்ள  “தந்திரோபாய எல்லைத் தெருக்கள்’ என அழைக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், இந்திய இராணுவம் ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் சீனாவின் எல்லையில் தேவைக்கு அதிகமாகப் படைகளைக் குவித்துள்ளதுடன், தனது எல்லையில் போக்குவரத்துப் பாதைகளை இந்தியா கட்டமைக்கின்றது. குறிப்பாக தெருக்கள்,பாலங்கள் போன்றவற்றை லடாக் பிரதேசத்தில் இந்தியா கட்டமைத்து வருகின்றது என சீனா குற்றம் சாட்டுகின்றது. இதுவே இருநாடுகளுக்குமிடையில் தற்போது எல்லைத்தகராறு ஏற்பட உடனடிக் காரணமாகியுள்ளது.

பொறுப்புக்கூறுதல்
இந்தியாவின் இறைமைக்குட்பட்ட ஆட்சிப்பிரதேச எல்லைக்குள் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் அத்துமீறி நுழைந்ததை சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா சையிங் (Hua Chunying) நிராகரித்ததுடன், இரு நாட்டு எல்லையிலும் அமைதி நிலவுவதாகத் தெரிவித்துள்ளார். சீனாவும் இந்தியாவும் நட்புறவுள்ள அயல்நாடுகளாகும். இரு நாடுகளும் எல்லைத் தகராறுகள் தொடர்பாக மிகவும் ஆரோக்கியமான தொடர்பினையும்,கூட்டுறவினையும் தொடர்ந்து பேணிவருவதாகவும், இந்நிலையில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் சர்வதேச எல்லையினை மீறி இந்தியாவிற்குள் செல்லமாட்டாது எனவும் சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளுக்குரிய எல்லைகள் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இன்னமும் சரியாகப் பிரிக்கப்படவில்லை.இதனால் எல்லைத் தகராறு தவிர்க்க முடியாத வகையில் இரு நாடுகளுக்குமிடையில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இரு நாட்டு எல்லைப்பிரதேசத்தில் பிரச்சினைகள் ஏற்படுமாயின் அவற்றிற்கு நடைமுறையிலுள்ள பொறிமுறைகள் மற்றும் நட்புரீதியான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். ஏனெனில் சீனாவிற்கும் இந்தியாவிற்குமிடையிலான எல்லைத் தகராறுகளால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு பாதிப்படைந்து சமாதானம், உறுதிப்பாடு சீர்கெட வாய்ப்பு உருவாகியுள்ளது.

மறுபக்கத்தில், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் கடந்த காலங்களில் பல தடவை இரு நாடுகளினதும் எல்லையினை அத்துமீறி ஆக்கிரமித்துள்ளது. ஆயினும் தற்போதைய ஆக்கிரமிப்பு ஊடுருவலானது முன்னர் சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட ஊடுருவல்கள் அனைத்தையும்விட மிகவும் ஆழமானதாகும் என இந்தியா உத்தியோகபூர்வமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மத்தாய் (Ranjan Mathai) சீனாவின் ஆக்கிரமிப்பு ஊடுருவல் தொடர்பாக இந்தியாவின் எதிர்ப்பினைச் சீனத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்ரனி (A.K.Antony) இந்தியாவின் நலனைப்பாதுகாக்கத் தேவையான ஒவ்வொரு நடவடிக்கையினையும் இந்தியா எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரிவித்து இரண்டு நாட்களின் பின்னர் பெங்களுரில் வைத்து அன்ரனி இதனை மீண்டும் வலியுறுத்தி பின்வருமாறு தெரிவித்துள்ளார். “இந்தியாவின் இறைமையினையும், பிரதேச ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசாங்கம் எடுக்கும். மேலும் என்ன நடவடிக்கையினை எப்போது எடுக்க வேண்டுமோ அதனை அப்போது எடுத்து சீனா ஆக்கிரமித்துள்ள இந்தியாவின் இறைமைக்குட்பட்ட ஆட்சிப் பிரதேசத்தினை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

விழிப்பாக இருக்கும் இந்தியா
உலகில் அணு ஆயுத வல்லமை பொருந்தியதும், அதிக சனத்தொகையினைக் கொண்டதுமாகிய இரு பெரும் இந்துசமுத்திரப் பிராந்திய வல்லரசுகளாகிய சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் இருக்கும் எல்லைத் தகராறு தீர்க்கமுடியாது நீண்டகாலமாகத் தொடருகின்றது. இருநாடுகளும் எல்லைத் தகராறு காரணமாக 1962 ஆம் ஆண்டு யுத்தத்தில் ஈடுபட்டிருந்தன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாகிய அருணாச்சலப் பிரதேசத்தில் ஏறக்குறைய 90,000 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு சீனாவிற்குச் சொந்தமானது என உரிமை கோரி இந்த யுத்தத்தினைச் சீனா தொடங்கியது. இந்த யுத்தத்தின் பின்னர் 38,000 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பளவினை ஜம்மு காஷ்மீர் பிரதேசத்திற்கு மேற்காக அக்சாய் சின் பீட புமியில் (Aksai Chin plateau) சீனா கைப்பற்றியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியதுடன், இன்றுவரை இப்பிரச்சினைக்கு இருநாடுகளும் தீர்வுகாணவில்லை.

லடாக் பிரதேசத்தில் மிகவும் கடினமான யுத்தத்திற்குப் பொருத்தமான புவியியல் சூழல் காணப்படுகின்றது. இது தந்திரோபாய ரீதியிலான செயற்பாடுகளை சீனா செய்வதற்கு மிகவும் வாய்ப்பான புவிசார்பிரதேசமாகும். இந்தியா மிகவும் அதிகமான மனிதவலுவினை இப்பிரதேசத்தில் கொண்டிருந்தாலும், தந்திரோபாய ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதளவிற்கு இப்பிரதேசத்தில் இந்தியாவின் உட்கட்டுமான வசதிகள் மிகவும் பலவீனமானதாக இருந்தாலும், இப்பிரதேசத்தில் சீனாவினை விட இந்தியாவின் படைபலம் அதிகமாகவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா தனக்குப் போட்டியாக இந்தியாவினையே எதிர்கொள்கின்றது. எனவே வளர்ச்சியடையும் இந்தியாவின் பலத்தைத் தடுப்பதற்கான வழிவகைகளை எதிர்காலத்தில் சீனா சிந்திக்கக்கூடும். ஆகவே சீனா எங்கெல்லாம் கால்பதிக்கின்றது என்பது தொடர்பாக இந்தியா விழிப்பாக இருக்கின்றது. அதேநேரம் இந்தியா தனது இராணுவ வலுவினையும் அதிகரிக்கின்றது. அதேநேரம், இந்திய இராணுவம் பனிமலைத் தொடர்களில் யுத்தம் செய்யக் கூடிய வல்லமை பொருந்தியதாக பயிற்சியளிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் எல்லைப்பிரதேசங்களின் உட்கட்டுமான வசதிகளையும் இந்தியா துரிதமாக உருவாக்கி வருகின்றது. ஆயினும் இந்தியாவுடன் ஒப்பிடும் போது சீனா இதில் துரித வளர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இருதரப்பு நல்லுறவுக்கான தேவைகள்
1980 ஆம் ஆண்டு தொடக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள இரு பெரும் அரசுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவானது குறிப்பிட்டுக் கூறக்கூடியளவிற்கு சமாந்தரமான அபிவிருத்தியை நோக்கி வளர்ந்து வருகின்றது. ஆசியாவில் சீனாவும் இந்தியாவும் பரஸ்பரம் பாரிய வர்த்தகப் பங்காளிகளாக வளர்ந்து வருகின்றன.இருபதாம் நூற்றாண்டின் முடிவில் இருநாடுகளுக்குமிடையில் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.இது தற்போது எண்பது பில்லியன் அமெரிக்க டொலராக வளர்ச்சியடைந்துள்ளதுடன், 2015 ஆம் ஆண்டில் இவ்வர்த்தகத்தினை நூறு பில்லியன் அமெரிக்க டொலராக்குவதே இருநாடுகளதும் இலக்கு எனவும் கூறப்படுகின்றது.

இந்திய அரசாங்கம் சீனாவுடன் வளர்த்துவருகின்ற சிறப்பான வர்த்தக, பொருளாதார உறவினால் இந்திய முதலாளித்துவ மற்றும் வர்த்தக சமூகம் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளது. மிகவும் மலிவான விலைக்கு சீனாவினுடைய பொருட்களை இந்தியாவின் சந்தைகளில் கொள்வனவு செய்யமுடிகின்றமை சாதாரண இந்திய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருவதாகவுள்ளது. பரஸ்பர நம்பிக்கையினைக் கட்டியெழுப்பும் பொருளாதார, வர்த்தக உறவு என்பதையே அரசியல் வழிகாட்டும் தத்துவமாக இருதரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளன. உலக நாடுகளுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவும், சேவை வழங்கும் நாடுகளாகவும் சீனாவும், இந்தியாவும் மாறிவிட்டன.இதன்மூலம் இந்நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தினை இருநாடுகளும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கக் கூடும் என மேற்குலக வல்லரசுகள் அஞ்சுகின்றன.

சீனாவினுடைய மொத்தத் தேசிய உற்பத்தி 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் மொத்தத் தேசிய உற்பத்தியை விட வளர்ந்துவிடும் என சர்வதேச நாணயநிதியம் கூறுகின்றது. மேலும் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவும் சீனாவும் உலகத்தின் பெரிய பொருளாதார,வர்த்தக நாடுகளாக வளர்ச்சியடைந்து விடும் எனவும் கூறுகின்றது. அத்துடன் 2015 ஆம் ஆண்டில் உலக மொத்த தேசிய உற்பத்திக்கு இருநாடுகளும் இணைந்து முப்பது சதவீதத்தினை வழங்கும் எனவும் சர்வதேச நாணயநிதியம் எதிர்வு கூறுகின்றது. அதேநேரம், இக்காலப்பகுதியில் இருநாடுகளினதும் மொத்த தேசிய உற்பத்தி பத்து நூறாயிரம் கோடி அமெரிக்க டொலர்களைத் (US$10 trillion) தாண்டிவிடலாம் எனவும் சர்வதேச நாணயநிதியம் எதிர்வு கூறியுள்ளது.

இராஜதந்திர முயற்சிகள்
சீன கம்யூனிசக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் க்சை ஜின்ப்பிங் (Xi Jinping) இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் பின்வரும் விடயத்தினை அழுத்திக் கூறியுள்ளார். இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான இருதரப்பு உறவினை பிரகாசமாக உருவாக்கி வளர்க்கத் தான் விரும்புவதாகவும், இருநாடுகளும் தமது பொது அபிவிருத்தியை அடைவதற்குத் தேவையான இடம் உலகில் போதியளவிற்குள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சிட் வைகாசிமாதம் ஒன்பதாம் திகதி சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவ்விஜயத்தின் போது இருநாடுகளின் எல்லைப்பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள பதற்றங்களைத் தணிப்பதற்கு தேவையான பேச்சுவார்த்தைகளில் சீனத் தலைவர்களுடன் இவர் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று 2013 ஆம் ஆண்டு வைகாசி மாதம் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள லி கியோங் (Li Keqiang) லடாக் பிரதேசத்தில் நிகழ்ந்த சீன ஆக்கிரமிப்புத் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இராஜதந்திர ரீதியில் தீர்வுகாண முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே அரச மட்டத்தில் இருநாட்டுத் தலைவர்களும் நடாத்தப் போகும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் இருநாடுகளும் அடையப் போகும் பொது இலக்கினைக் கோடிட்டுக்காட்டுவதாக அமையும் என விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

13,699 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>