இந்தியாவை சுற்றிவளைக்க சீனாவிற்கு உதவும் இலங்கை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.22, 2012.09.23 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image0011952ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையும் சீனாவும் இலங்கை – சீனா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுக் கொண்டதுடன், இரு தரப்பினருக்கம் இடையில் வர்த்தக உறவுகளை மேன்மைப்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. ஆயினும் 1957ஆம் ஆண்டு மாசி மாதம் தொடக்கம் உத்தியோகபூர்வமாக இராஜத்திர உறவுகளை ஆரம்பித்திருந்தது. அன்று தொடக்கம் இலங்கை தொடர்பில் சீனா கவனம் அல்லது அக்கறை செலுத்தி வந்துள்ளது. இவ் அக்கறையானது அரசியல் நலன் சார்ந்தது என்பதை விட தந்திரோபாய நோக்கிலானது என்பதே பொருத்தமானதாகும். இலங்கையின் இனமோதலை இலங்கையின் உள் விவகாரமாகச் சீனா கருதி வந்தாலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் முக்கியமான வல்லரசு என்ற வகையில் இராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்து வந்துள்ளது. இவ்வகையில் இலங்கைக்கான பிரதான ஆயுத விநியோகத்தராக சீனா இருந்துள்ளது எனலாம். 1984ஆம் ஆண்டு புதியரக இராணுவத் தளபாடங்களை விநியோகம் செய்ய உடன்பட்டுக் கொண்டது. இதனடிப்படையில் 1984ஆம் ஆண்டிலிருந்து தாக்குதல், தற்பாதுகாப்பு இராணுவத் தளபாடங்களை இலங்கைக்கு வழங்கி வந்துள்ளது. ஒரு வகையில் இலங்கைக்கு உதவி செய்தல் என்ற போர்வையில், தனது இராணுவத் தளபாட வர்த்தகத்தில் சீனா அதிகம் கவனம் செலுத்தியிருந்தது என்றும் கூறலாம். இதன் தொடர்சியாகவே இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான சமகால உறவினை நோக்குதல் வேண்டும்.

யுத்ததிற்குப்பின்னரான உதவிகள்

2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையும், மனித உரிமைகள் ஆணைக்குழுவும் (UNHRC) இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களைச் சுமத்திய போது, உள்நாட்டு யுத்தமானது இலங்கையின் உள்விவகாரம், அது சர்வதேச பாதுகாப்பிற்கு எவ்விதத்திலும் ஆபத்தானதல்ல எனக்கூறி இலங்கைக்கு எதிரான பிரேரணையினை தடுத்திருந்தது. அதேநேரம் இலங்கை தனது உள்நாட்டுப் போர் வெற்றியை அறிவித்ததுடன் அதனை உடனடியாக சீனா வரவேற்றும் கொண்டது. வரையறையற்றுக் கிடைத்த சீனாவின் இராணுவ உதவியானது யுத்தத்தினை வெல்லமுடியும் என்ற பெரும் நம்பிக்கையினை இலங்கைக்கு வழங்கியிருந்தது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இலங்கை அரசாங்கம் வெகுஜனத்தொடர்பு சாதனங்களைப் பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுவதற்கு ஏற்ற வகையில் சட்டங்களை இயற்றிக் கொண்டது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையின் யுத்ததிற்குப்பின்னரான மீள்கட்டுமானப்பணிகளுக்கு சீனா தனது பங்களிப்பினை முதன்மைப்படுத்தி இருதரப்பு உறவுகளை ஆழமாக்கிக் கொள்ளவதற்கு முக்கிய இடம் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாகவே நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த சீனத் தூதுக்குழுவின் நோக்கம் அமைந்திருந்தது. இத்தூதுக்குழுவிற்கு சீனாவின் தேசியக்காங்கிரஸ்சின் தலைவர் வூ பங்குவோ (Wu Bangguo) தலைமை தாங்கியிருந்தார். சீனத்தூதுக்குழுவின் தலைவருக்கும் இலங்கை ஜனதிபதிக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் 17.09.2012 இல் கைசாத்திடப்பட்டன. முக்கியமாக பதினாறு ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கைச்சாத்திட்டுக்கொண்டன. இவற்றில் பெரும்பாலான திட்டங்கள் அடிப்படைக் கட்டமைப்பத் திட்டங்களாகும். போக்குவரத்திற்கான உள்கட்டுமான அபிவிருத்தி, உல்லாசப்பிரயாணத்துறை, தொலைத் தொடர்பு,துறைமுக அபிவிருத்தி, கொழும்பு தாமரை கோபுர திட்டம் (Lotus Tower) கைத்தொலைபேசிகளுக்கான 4G அலைக்கற்றை வலைப்பின்னல் விஸ்தரிப்பு, அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியின் இரண்டாம் கட்டத்திற்கான நிதியுதவி, சக்திவள அபிவிருத்தி, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சர்வதேச கற்கைநெறி நிலையத்திற்கான தொழில்நுட்ப உதவிகள், என்பன உட்பட பல்வேறு திட்டங்கள் உள்ளடங்கியிருந்தன. இதனைவிட கடல் மற்றும் கடற்கரை கூட்டுறவு, நிதிக் கூட்டுறவு ஆகிய இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுக்கொண்டன.

இவ்ஒப்பந்தங்கள் மகிந்தா ராஜபக்சாவின் கனவாகிய இலங்கையினை ஆசியாவின் அதிசயமாக்குவது என்பதை நனவாக்க உதவும் என சீனா கூறியுள்ளதுடன் இலங்கை மீது சீனா வைத்துள்ள நம்பிக்கையினை மேலும் வலுவூட்டுவதாக இவ் ஒப்பந்தங்கள் அமைந்துள்ளன. மேலும் சீனாவினை ஆசியாவில் வல்லரசாக மாற்றும் வகையில் இவ்ஒப்பந்தங்கள் அமைந்துள்ளதாகவும் சீனா கருதுகின்றது.

இலங்கை நோக்கிய சீனாவின் நகர்வினை தடுப்பதற்கு இந்தியா இலங்கையுடன் தனக்கு இருக்கக் கூடிய பிரிக்கமுடியாத பல்வேறு உறவுகளையும் பலப்படுத்த வேண்டும் என இந்தியாவிற்கு அரசியல், ராஜதந்திர, இராணுவ பகுப்பாய்வாளர்கள் ஆலோசனை வழங்கிவருகின்றனர். ஆனால் இலங்கை ராஜதந்திரிகளோ இந்தியாவினை விட சீனாவுடனேயே அதிக நட்புறவுகளைப் பேண விரும்புகின்றார்கள். சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மேற்படி ஒப்பந்தங்களின் மூலம் இலங்கையின் எதிர்காலப் பாதுகாப்பினை சீனா பொறுப்பேற்று உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவிற்கு இருக்கும் எதிர்கால நலனை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்ற உதவியாகும். இதனால் பாதிக்கப்படப்போவது இந்தியாவேயாகும்.

யுத்தகாலஉறவு

இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு, சமாதானம், உறுதிப்பாடு என்பவற்றை சீனா ஆதரித்து வந்தது. இதனடிப்படையில் 2002ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை வரவேற்றிருந்தது. 2006ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகிய போது அதனை மீண்டும் வரவேற்றிருந்த சீனா, இலங்கையின் உட்கட்டுமானத் துறையின் திருத்தப்பணிகளுக்கும் உதவி செய்வதற்குத் தான் தயாராக இருப்பதாக அறிவித்திருந்ததுடன், இலங்கையின் தேசிய உறுதி நிலைக்கும், மோதல் நீக்கம், பொருளாதார அபிவிருத்தி என்பவைகளுக்கும் தான் ஆதரவாக இருப்பதாகவும் அறிவித்தது.

2005ஆம் ஆண்டு இலங்கையும் சீனாவும் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு கடந்த தசாப்தத்தில் வலுவடைந்து விரிவாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது எதிர்காலத்தில் இரு தரப்பு உறவிலும் ஏற்படக்கூடிய விரிவாக்கத்தினை வெளிப்படுத்தக்கூடிய அளவுகோலாக கொள்ளப்படத்தக்கதாகும். இலங்கையின் ஜனாதிபதி சீனாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போதெல்லாம் இரு நாடுகளுக்குமிடையிலான ஆழம், பலம், பிராந்திய, சர்வதேச விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்கள். நீண்டகாலமாக இலங்கையுடன் சீனா கொண்டிருந்த நட்புறவினைத் தொடர்ந்தும் பேணுவதற்கு தனது அரசாங்கம் விரும்புவதாகவும், எல்லா விடயங்களிலும் கூட்டிணைந்து செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோட்டாபாய இராஜபக்ச பின்வருமாறு கூறியிருந்தார். “இலங்கை ஜனாதிபதி மூன்று தடவை விஜயம் செய்துள்ளார். நான் ஐந்து தடவைகள் சென்றுள்ளேன். சில வேளைகளில் ஜனாதிபதி தொலைபேசியில் சீனப் பிரதமருடன் பேசியுள்ளார். நாம் நல்லதொரு நட்புறவினை உருவாக்கியுள்ளோம். எங்களுக்கு யார் முக்கியம் என்பதைப் புரிந்து வைத்துள்ளோம்.”

2007ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கைக்கான இராணுவ உதவிகளை இடை நிறுத்தி வைத்திருந்த பொழுது, சீனா குறிப்பிடத்தக்களவு இராணுவ தளபாட விற்பனையினை இலங்கைக்கு செய்துள்ளது. 2008ஆம் ஆண்டு, 37.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவத் தளபாட விநியோகத்திற்கான ஒப்பந்தத்தினை சீனா இலங்கையுடன் செய்திருந்தது. இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இலங்கை வெல்லுவதற்கு உதவியாக இருந்துள்ளது. 2007ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு இராணுவத் தளபாடங்களை விற்பனை செய்யுமாறும், சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட யுத்த விமானங்களை செலுத்துவதற்கான பயிற்சிகளை இலங்கையின் விமானிகளுக்கு வழங்குமாறும் பாக்கிஸ்தானையும் ஆர்வப்படுத்தி வந்துள்ளது.

2007ஆம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு மேற் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் இலங்கையின் இன வன்முறையினை மேற்கோளாகக் கொண்டு இரு தரப்பும் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ”பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று தீங்கு விளைவிக்கக்கூடிய படைகளை எதிர்த்து போராடுவதற்கு கூட்டாகச் செயற்படுவதுடன், பயங்கரவாதச் செயற்பாட்டிற்கு எதிராக சர்வதேச பிராந்திய மட்டங்களில் இணைப்பினையும், ஆலோசனைகளையும் உருவாக்குதல் வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு இணங்க 2007ஆம் ஆண்டு சித்திரை மாதத்திலிருந்து சீனா இலங்கைக்கு இராணுவ ஆலோசனைகளையும், ஆயுத உதவிகளையும் வழங்கத் தொடங்கியது. பாக்கிஸ்தானுக்கு இந்தியாவுடன் இருக்கும் கடும்பகையினைச் சாதகமாக்கிக்கொண்டு சீனா பாக்கிஸ்தானுடன் நட்புறவினைப் பேணிவருகின்றதுடன், இலங்கைக்குத் தேவையான இராணுவ உதவிகளை வருடாந்தம் வழங்கி இலங்கையுடனும் நட்புறவினைப் பேணிவருகின்றது. மறுபக்கத்தில் பாகிஸ்தானுடன் இலங்கையின் உறவினை சீனா ஊக்குவித்து வந்தது. இதனடிப்படையில் பாகிஸ்தான் இலங்கை விமானப்படை விமானிகளுக்கு பயிற்சியை வழங்கியதுடன், உள்நாட்டுப் போருக்கான தந்திரோபாயங்களை வகுப்பதற்கும் உதவியது. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசாங்கம் நடாத்திய இறுதியுத்தத்தில் சீனாவினால் வழங்கப்பட்ட Jian-7 யுத்த விமானங்கள், விமான எதிர்ப்பத் துப்பாக்கிகள், JY-11 3D விமானக்கண்காணிப்பு ராடர்கள் போன்ற கருவிகள் பிரதான வகிபாகத்தினை வகித்தன எனக்கூறலாம். சீனா வழங்கிய ஏவுகணைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமான கட்டிடங்கள், பாதுகாப்பு அரண்களைத் தகர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

2007ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் இலங்கைக்கு சீனா வழங்கிய JY-11 3D விமானக்கண்காணிப்பு ராடர்கள் இந்திய வான்பரப்பில் சீனா செல்வாக்குச் செலுத்த உதவும் எனக்கூறி இதனைக் கண்டித்திருந்தார். இது தொடர்பாக இவர் கூறும் போது “இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் இந்தியா வல்லரசாகவுள்ளது என்பதை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும். ஆயுதங்களைப் பெறுவதற்காக இலங்கை சீனாவிடமோ அல்லது பாக்கிஸ்தானிடமோ செல்வதைத் தவிர்க்க வேண்டும். எங்களுடைய வெளியுறவுக்கொள்கை வட்டத்திற்குள் எல்லோரையும் இணைத்துக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.” இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நீண்டகாலமாக இருந்து வந்த கூட்டும், தென்னாசிப்பிராந்தியத்தில் காலம்காலமாக செலுத்தி வந்த அதிகாரமும் சீனாவின் செயற்பாட்டினால் இந்தியாவிற்கு எரிச்சலையூட்டியிருந்தது. இதனை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் “குழம்பிய குட்டையில் சீனா மீன் பிடிக்கின்றது” என விபரித்திருந்தார்.

இலங்கையின் துணிச்சல்

இந்தியாவின் எச்சரிக்கையினையும் மீறி இலங்கை அரச படைகளுக்குச் சாதகமான இராணுவச் சமனிலை என்னும் பெயரில் சீனா வழங்கிய இராணுவ உதவிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்டபூர்வமற்ற அரசினை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதற்குப் பயன்பட்டதுடன், அவர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஏறக்குறைய 5594 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்பினை இழப்பதற்கும், இறுதியில் ஏறக்குறைய 85 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்புள்ள காட்டிற்குள் அவர்கள் முடக்கப்பட்டு அழிக்கப்படுவதற்கும் உதவியது. இவைகளை உறுதிப்படுத்தும் வகையில் 2010ஆம் ஆண்டு ஆனிமாதம் இலங்கையின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசாரா சமரசிங்கா வழங்கிய பேட்டியில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவு தொடர்பாக பின்வருமாறு விபரித்திருந்தார். “மோதல் காலத்தில் குறிப்பாக பாதுகாப்பினை உறுதியாகப் பேணுவதற்கு சீனா வழங்கிய உதவிகளுக்கு இலங்கை தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. சீனாவின் யுத்தக்கப்பல்கள் எங்கள் நாட்டிற்கு வருகை தந்தன. நாங்கள் எங்கள் அதிகாரிகளை பயிற்சிக்காக சீனாவிற்கு அனுப்பியிருந்தோம். எங்களுக்கு பயிற்சி வழங்குவதை சீனா அதிகரித்து வந்தது. கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களில் ஏறக்குறைய பதினைந்து தொடக்கம் இருபது வரையிலான கடற்படை உத்தியோகத்தர்களுக்கு சீனாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி பயிற்சி வழங்கியுள்ளது.” இவைகளுக்கும் மேலாக, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த யுத்தத்தினை தடுப்பதற்கும் அதன் பின்னரான ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களையும் சீனா தனது வீட்டோ (Veto) அதிகாரத்தினைப் பயன்படுத்தி தடுத்திருந்தது. இது இந்தியாவின் பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

14,006 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>