இந்தியாவிலும் கொண்டாடப்பட வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.05.17, 2014.05.18 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image001

2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இறுதிக்கட்டத்தையடைந்த போது இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றக் கொண்டிருந்தது. இன்று யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மீண்டும் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியாவின் தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கும் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்கும் இடையில் இருந்துவந்த நேரடித் தொடர்பு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை நினைவு கூரப்படும் வகையில் இறுதி யுத்தத்தில் இந்தியாவின் வகிபங்கு அல்லது தேசியநலன் அமைந்திருந்தது. இதனை என்.டி.ரி.வி (NDTV) யில் பாதுகாப்பு மற்றும் தந்திரோபாய விவகாரங்களுக்கான ஆசிரியராகப் பணியாற்றும் நிரினி அனன்ற் கோகலே (Nitin Anant Gokhale) எழுதிய இலங்கை : யுத்தத்திலிருந்து சமாதானத்திற்கு (Sri Lanka: From War to Peace) என்ற நூலில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா இராணுவ,அரசியல் ரீதியாக வழங்கிய உதவிகளை வெளிப்படுத்தியுள்ளார்.

விமானப்படைக்கான உதவி

இந்தியாவின் சுயபாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இரு நாடுகளினதும் பாதுகாப்பு உறவு மிகவும் பலம் வாய்ந்ததாகவே இருந்தது. இலங்கை இராணுவத்திற்கான பாரிய பயிற்சிகள் யாவும் இந்திய இராணுவத்தினாலேயே இக்காலத்தில் வழங்கப்பட்டு வந்தன.

இலங்கையின் உள்நாட்டுப்போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு வழிகளில் இந்தியா தொடர்புபட்டிருந்தது. இந்திய அரசாங்கம் இலங்கை இராணுவத்திற்கு பெருமளவு ஆயுத தளபாடங்கள், பயிற்சிகள், தொழிநுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் நேரடியாகத் தொடர்புபட்டிருந்தது.

குறிப்பாக இந்தியா இலங்கையின் விமானப் படைகளுக்கு பயிற்சிகளையும் வழங்கியது. முன்னர் இவ்வாறு இரண்டு தொகுதி இலங்கை விமானப்படை ஆளனியினருக்கு இந்தியா பயிற்சியை வழங்கியிருந்தது. இது முக்கியமானதொரு பயிற்சியாக கருதப்பட வேண்டியதாகும்.

மிக் யுத்த விமானங்கள் இரஸ்சியத் தயாரிப்புக்களாகும். மிக் பற்றிய தொழிநுட்ப அறிவு பாகிஸ்தான் படையிடம் இருக்கவில்லை ஆனால், இந்தியாவிடம் இரஸ்யத் தயாரிப்பிலான யுத்த விமானங்களே அதிகம் என்பதுடன், அதனை இயக்கும் வல்லமை மிக்கவர்களாகவும் இந்திய விமானிகள் இருந்தனர். இந்தியா இலங்கை மீதிருந்த தனது அக்கறையினை இதனூடாக வெளிப்படுத்தியிருந்தது.

2006 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் எம்.ஐ (Mi) ரக உலங்குவானூர்திகள் (Helicopters) ஐந்தினை இலங்கை விமானப்படைக்கு வழங்கியிருந்தது. இவ்உலங்குவானூர்திகள் அனைத்தும் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான நிறத்திற்கு மாற்றப்பட்ட பின்னரே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற முன் நிபந்தனை இந்தியாவினால் விதிக்கப்பட்டது. இலங்கை விமானப்படைக்கு வெளிப்படையாக உதவி செய்தால் தனது அரசாங்கத்தில் பங்கெடுத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்புக்குள்ளாக வேண்டிவரும் என்ற பயத்தினால் இவ்வாறு முன் நிபந்தனை விதித்ததாக கோகலே தனது நூலில் எழுதியுள்ளார்.

உள்நாட்டு யுத்தத்தில் இவ் உலங்குவானூர்திகள் தம்மைப்பாதுகாக்க கைகொடுக்கும் என்றநம்பிக்கை எமது இராணுவவீரர்களிடம் இருந்ததால் எதிரியின் எல்லைக்குள் நுழைந்து யுத்தம் செய்யும் துணிச்சல் அதிகரித்தது. இது இறுதி யுத்தத்தில் நாம் வெற்றியடைய பிரதான பங்காற்றியதாக இலங்கை இராணுவ அதிகாரியொருவர் தன்னிடம் கூறியதாகயும் கோகலே எழுதியுள்ளார்.

கடற்படை உதவி

இதனைவிட கரையோர ரோந்து கப்பல் ஒன்றினையும் இந்தியா இலங்கை கடற்படைக்கு வழங்கியிருந்தது. கோகலேயின் கருத்துப்படி தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்திற்குள் ஆழஊடுருவி தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் எதிர் தாக்குதலிலிருந்து இராணுவத்தினரைப் பாதுகாப்பாக மீட்பதற்கு இக்கப்பல் பெரும் உதவியாக இருந்துள்ளது. இறுதி யுத்தத்தில் காயப்பட்ட இராணுவ வீரர்களுக்கு உதவி செய்வதற்கும் இக்கப்பல் பயன்படுத்தப்பட்டது.

இலங்கையின் கடற்பரப்பில் நிகழும் சந்தேகத்திற்கிடமான செயல்களையும், கப்பல்களின் நடமாட்டத்தினையும் இலங்கைக்குத் தெரிவித்ததுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகத்தினைத் தடைசெய்ய இந்தியா நடவடிக்கை எடுத்து வந்தது. மேலும் 2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையும் வரையில் கடற்புலிகள் சர்வதேச கடற்பரப்பிற்குள் ஊடுருவிச் செயற்படுவதைத் தடுப்பதிலும் இந்தியக் கடற்படை முனைப்புடன் செயற்பட்டது. இலங்கை மற்றும் இந்திய கடற்படையின் சிறப்பான கூட்டு செயற்பாடுகள் மூலமே 2006 ஆம் ஆண்டிற்கும் 2009 ஆம் ஆண்டிற்கும் இடையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்புலிகளின் அழிவு சாத்தியமானதாகியது.

மன்னார் குடாவிலும் பாக்கு நீரிணையிலும் இந்தியக் கடற்படையின் கரையோரப் பாதுகாப்புக் கப்பல்கள் அடிக்கடி மேற்கொண்டிருந்த ரோந்தின் மூலம் கடற்புலிகளின் செயற்பாடு முழுமையாக முடக்கப்பட்டது. இதேபோன்று இந்திய கடற்படைக் கப்பல்கள் இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்கு ஆழ் கடற்பரப்பில் அடிக்கடி ரோந்தினை மேற்கொண்டு வந்ததுடன், இரண்டு நாடுகளினதும் கடற்படைகள் தமக்கிடையில் தகவல் பரிமாற்றங்களையும் மேற்கொண்ட வந்தன.

இலங்கை கடற்படை கரையோரப் பாதுகாப்பிற்காக ஏவகணைகள் பொருத்தப்பட்ட இரண்டு யுத்தக் கப்பல்கள் உட்பட பல தீர்க்கமான உதவிகளை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் கப்பல் இலங்கையின் கிழக்கு கடற்பரப்பிலிருந்து 120 கடல்மைல் தொலைவில் வைத்து 2006 ஆம் ஆண்டு புரட்டாதி மாதமும், மேலும் மூன்று கப்பல்கள் 2007 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இலங்கையிலிருந்து தென்கிழக்காக 1,600 கடல்மைல் தொலைவில் அவுஸ்ரேலியா மற்றும் இந்தோனேசியா கடற்பரப்பிற்கு அண்மையில் வைத்து இலங்கை கடற்படையினால் அழித்தொழிப்பதற்கு ராடர் பொருத்தப்பட்ட இந்தியாவின் உளவுக்கப்பல்கள் உதவியுள்ளன.

பலமான ஆயுதங்கள், மற்றும் அதற்குரிய ரவைகள் மற்றும் எறிகணைத்தாக்குதலுக்குரிய ஆயுதங்களை விநியோகிப்பதற்காக சர்வதேசக்கடற்பரப்பில் நடமாடிக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பத்து கப்பல்களை அழித்தொழிப்பதற்கு இந்தியாவின் கடற்படையே தமக்கு உதவியதாக இலங்கை கடற்படைத்தளபதி கூறியதாக கோகலே ஆதாரப்படுத்துகின்றார்.

இது தொடர்பாக இலங்கை கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட (Wasantha Karannagoda) இந்தியாவின் இவ் வகிபாகம் தொடர்பாகப் பின்வருமாறு புகழ்ந்து பாராட்டியிருந்தார். “இந்தியாவின் ஒத்துழைப்புடன்; தமிழீழ விடுதலைப்புலிகள் மீது வெற்றிகரமான எதிர்த் தாக்குதல்களை நடாத்த முடிந்தது. ஒவ்வொரு வருடமும் இந்திய கடற்படையும் குறிப்பாக கரையோரப்பாதுகாப்பு பிரிவும், இலங்கை கடற்படையும் நான்கு தடவைகள் இருதரப்புப் பேச்சு வார்த்தைகளை நடாத்தி வந்தன. 2008 ஆம் ஆண்டு ஆரம்பகாலப்பகுதியிலிருந்து இரு நாடுகளினதும் கடற்படை கடலில் கூட்டு ரோந்துகளை மேற்கொண்டு வந்தன. இலங்கை இராணுவத்தின் மீது தாக்குதல் நடாத்துவதற்கு உதவிய தமிழீழ விடுதலைப்புலிகளின் அனேகமாக அனைத்துக் கப்பல்களும் அழிக்கப்பட்டன. ஒருவருடத்திற்குள் நாங்கள் அவர்களின் எட்டுக்கப்பல்களை அழித்தோம். இவைகள் 10,000 தொன் எடையுள்ள இராணுவ உபகரணங்களை காவிவரக்கூடியவைகளாகும். இவைகள் மூலமே தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொண்டுவந்து சேர்த்தனர்.” எனக்கூறுகின்றார்.

தமிழ்நாட்டு கடற்படைத் தளத்தில் இருந்து இயங்கிய இந்திய கடற்படையின் ஆள்இல்லாத விமானங்களில் பொருத்தப்பட்டிருந்த ராடர்கள் மூலம் இலங்கையினைச் சுற்றியுள்ள கடற்கரையோரங்கள் அனைத்தும் கண்காணிப்பிற்குள்ளாகியது. சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடும் கப்பல்கள் இந்தியாவின் இவ்விமானங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு இந்திய கடற்படைமூலம் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதவிநியோக கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தினால் அழிக்கப்பட்டது.

இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதத்தட்டுப்பாடு அல்லது இல்லாமை இதன்மூலம் உருவாக்கப்பட்டதாக இந்நூலாசிரியர் கோகலே தெரிவிக்கின்றார். பலரது கருத்தைப்போன்று இந்தியாவின் பிரதமமந்திரியாக இருந்த ராஜிவ்காந்தி தற்கொலை குண்டுத்தாக்குதல் மூலம் படுகொலைசெய்யப்பட்டதற்கு இந்தியா மேற்கொண்ட பழிவாங்கும் நடவடிக்கையே இதுவாகும் என்பதே இந்நூலாசிரியரினதும் கருத்தாகும்.

மேற்குலகினை கட்டுப்படுத்திய இந்தியா

இலங்கைக்கான பிரித்தானிய விசேட தூதுவர் வைகாசிமாதம் 6ஆம்,7ஆம் திகதிகளில் புதுடெல்லிக்கு விஜயம் செய்து இலங்கை அரசியல் தொடர்பிலும்,மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பிலும் இணைந்து செயற்படுவது தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போது பிரபாகரனுடன் பேசுவது யார் என்றதொரு கேள்வியை சிவசங்கர் மேனன் எழுப்பியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் கணிப்பின் படி இடப்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் சிலர் பிரபாகரனுடனும் அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனியுடனும் தொடர்பில் இருக்கின்றார்கள்.ஆனால் இங்குள்ள பிரச்சினை யாதெனில் இவர்கள் பிரபாகரனுடன் நேரடியாகப் பேசக்கூடிய வல்லமையுள்ளவர்களா? என்பதேயாகும். பாதுகாப்பு வலயத்திலிருந்து பாதுகாப்புத்தேடித் தப்பியோடும் தமிழ் மக்களைத் தனித்திருந்து பாதுகாக்கும் வல்லமை குறைந்தவராக பிரபாகரன் உள்ளார். ஆகவே தமிழீழ விடுதலைப்புலிகள் பிரபாகரனின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தமது உயிரைப் பணயம் வைத்துத் தமது இறுதி அழிவினைச் சந்திப்பார்கள் என்று இந்தியா எதிர்பார்த்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளை இடைநிறுத்தாது இறுதி வெற்றி கிடைக்கும் வரை யுத்தத்தினைத் தொடர விரும்பிய இந்திய அரசாங்கம் யுத்தவலயத்திற்குள் பொதுமக்கள் சிக்கக் கூடிய ஆபாயம் இருப்பதாக பல தடவைகள் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன், அதனைத் தடுப்பதற்குச் செய்யக் கூடிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு வலியுறுத்தி வந்தது.

தமிழ் மக்களுக்கு ஏற்படக் கூடிய உயர்மட்டத்திலான பாதிப்பினால் தமிழ்நாடு மாத்திரமன்றி இந்தியா முழுவதும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. எனவே வைகாசி மாதம் 13 ஆம் திகதி தமிழகத்தில் நிகழப்போகும் சட்டசபைத் தேர்தலினால் இந்தியா அரசியல் அழுத்தத்திற்குள்ளாகி இருப்பதால் யுத்தமுனையில் இருக்கும் இலங்கை இராணுவத்தின் வேகத்தினை யாரும் விரும்பினால் தணிக்க முடியும் என இந்தியா தெரித்தது. ஆனால் வைகாசி மாதம் 18 ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துக் கொண்டது.

வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு இந்தியா நியாயம் கூறிக் கொண்டிருந்தது. அத்துடன் இலங்கை இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்புக்கள் தொடர்பாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் நியாயம் கூறிக் கொண்டிருந்தது. அதேநேரம் யுத்தத்தினை நிறுத்துவதற்கு மேற்குலக நாடுகள் மேற்கொண்ட எல்லாச்செயற்பாடுகளையும் ஆதரிக்காமல் தந்திரமாக அவற்றைத் தடுத்து நிறுத்தியுமிருந்தது. இதற்காக இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடையும் இறுதிக்காலப்பகுதியில் புதுடெல்லி உலகின் நாலாபக்கமும் செயற்பட்டு யுத்தத்திற்கு ஆதரவு திரட்டியுள்ளது.

நன்றி கூறியுள்ள அரசாங்கம்

பாதுகாப்புச் செயலாளர் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியாவின் வகிபங்கு தொடர்பாக கூறும் போது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இந்தியா எமக்கு உதவி செய்துள்ளது. யுத்தத்தின் போது ஏனைய நாடுகளினால் எமக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களை இந்தியாவின் ஆதரவுடன் வெற்றி கொள்ள முடிந்ததுடன், மனிதாபிமான செயற்பாடுகளையும் எம்மால் முன்னெடுக்க முடிந்தது. சர்வதேசமட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கும் இந்தியாவுடன் எமக்கு இருந்த நட்புறவு உதவியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று முன்னைநாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதில் இந்தியா தீர்க்கமான வகிபாகத்தினைக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இலங்கை இராணுவம் தோல்வியடையாமல் இருப்பதற்குத் தேவையான நம்பிக்கையினையும், மனவூறுதியையும், அரசியல் உதவியையும் இந்திய அரசாங்கம் வழங்கி யுத்தத்தில் நாம் வெற்றியடைய எமக்கு உதவியுள்ளது.” எனத் தெரிவிக்கின்றார்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

14,006 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>