ஆசியப் புலிகளை வெற்றி கொண்ட ஆசிய றக்கன்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.06.29, 2013.06.30ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )

clip_image001

1980 களில் இருந்து மரபுரீதியிலான மாக்சிச-லெனினிச சித்தாந்தத்திலிருந்த கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச நாடுகளும்,சோவியத் யூனியனும் பெரும் பொருளாதார அவலத்திற்கு உள்ளாகத் தொடங்கின.இந்நிலைமை சீனாவினை அச்சம் கொள்ள வைத்தது. ஆயினும் 1990 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் வீழ்ச்சி கம்யூனிச சித்தாந்தத்தினை வலுவிழக்க வைத்ததுடன், சீனாவின் கம்யூனிசப் பொருளாதார முறைமையினையும் மறுசீரமைக்க வைத்;தது. சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட அவலம் சீனாவிற்கும் ஏற்படாமல் இருப்பதற்கு சீனத் தலைவர்கள் ‘சோசலிச சந்தைப் பொருளாதாரம்’ என்ற புதிய பொருளாதாரக் கொள்கையினை அறிமுகப்படுத்தினார்கள். இது பின்னர் ‘சீனா மாதிரியிலான முதலாளித்துவம்’ எனவும் அழைக்கப்பட்டது.

சோசலிச சந்தைப் பொருளாதாரம்

1978 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த டெங் செயாப்பிங் (Deng Xiaoping) சீனாவில் பொருளாதாரச் சீர்திருத்தத்தினை முன்வைத்தார். 1978 ஆம் ஆண்டு சீனாவில் பொருளாதாரச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து சீனாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவிற்கு வளர்ச்சியடையத் தொடங்கியது. 1953 ஆம் ஆண்டிலிருந்து 1978 ஆம் ஆண்டுவரையில் சீனாவின் உண்மையான வருடாந்த மொத்தத் தேசிய உற்பத்தி 6.7 % மாக இருந்;ததாக சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவித்துள்ளன. பொருளாதாரச் சீர்திருத்தம் 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து 2011 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் சீனாவின் வருடாந்த சாராசரி மொத்தத் தேசிய உற்பத்தி 9.6 % மாக வளர்ச்சியடைந்ததாகவும் சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் 1992 ஆம் ஆண்டு ஆனிமாதமே முதல்தடவையாக சோசலிச சந்தைப் பொருளாதாரம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சீனாவின் பொருளாதாரம் மறுசீரமைக்கப்படுகிறது என டெங் செயாபிங் தென் சீனாவில் நிகழ்த்திய உரையொன்றில் தெரிவித்திருந்தார்.

பொருளாதார வளர்ச்சி

சோசலிச சந்தைப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சீனாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளரத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியினை விட சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து சீனாவினை உலகின் பெரும் பொருளாதாரச் சக்தியாகச் மாற்றிவிடலாம் என்று பல ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றார்கள்.

பொதுவாக சர்வதேச வர்தகத்திற்குப்; பயன்படும் அமெரிக்க டொலரின் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி முதல்தடவையாக 8.2 நூறாயிரம் கோடி (trillion) அமெரிக்க டொலரைத் தாண்டியிருந்தது. இது ஐக்கிய அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தியில் 55 சதவீதமாகும்.2013 ஆம் ஆண்டு சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தி 8.5 நூறாயிரம் கோடி (Trillion) அமெரிக்க டொலரைத் தாண்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான பொருளியல் நிபுணர்கள் 2017 ஆம் ஆண்டிற்கும் 2030 ஆம் ஆண்டிற்கும் இடையில் ஐக்கிய அமெரிக்காவினை விட பெரும் முதன்நிலைப் பொருளாதார பலமுடைய நாடாக சீனா வளர்ச்சிடையும் எனவும், 2050 ஆண்டில் சீனா, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் உலகில்; வளர்ச்சியடைந்த முதல்நிலைப் பொருளாதார நாடுகளாக எழுச்சியடையும் எனவும் எதிர்வு கூறுகின்றார்கள்.

ஆயினும் 2008ஆம் ஆண்டு பூகோளப் பொருளாதாரம் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. இது சீனாவின் ஏற்றுமதி பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தியது. இதனால் 2007 ஆம் ஆண்டு 14.2 % மாக இருந்த சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தி 2008 ஆம் ஆண்டு 9.6 % மாகவும், 2009 ஆம் ஆண்டு 9.2 % மாகவும் வீழ்;ச்சியடைந்தது. இப் பொருளாதார வீழ்ச்சிக்குப் பொறுப்பெடுத்துக் கொண்ட சீன அரசாங்கம் சீனாவின் பொருளாதாரத்தினை மீளக் கட்டமைப்பதற்கான உந்து சக்தியை வழங்கத் தொடங்கியது.

இதன்விளைவாக 2010 ஆம் ஆண்டு சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி 10.4 % மாக வளர்ந்தது. இது 2011 ஆண்டு 9.2 % வளர்ச்சியை காட்டியது. 2012 ஆம் ஆண்டு சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தி 7.8 % மாக மாறியது. சர்வதேச நாணயநிதியம்; 2013 ஆம் ஆண்டிற்கும் 2017 ஆம் ஆண்டிற்குமிடையில் சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தி 8.5 % வளர்ச்சியினை எட்டிப் பிடிக்கும் என எதிர்வு கூறியுள்ளது. அதேநேரம் முன்னணி கைத்தொழில் நாடுகளின் மொத்தத் தேசிய உற்பத்தியினை சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகின்ற போது சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதி மிகையானதாகவுள்ளது எனவும் கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பு

உலகில் பாரிய கைத்தொழில் உற்பத்தி நாடாக சீனா எழுச்சியடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2004 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதியில் சீனா, ஐக்கியஅமெரிக்கா, யப்பான் ஆகிய நாடுகள் உற்பத்தி செய்திருந்த கைத்தொழில் உற்பத்திப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை இக்கணிப்பீட்டினை மேற்கொண்டிருந்தது. 2006 ஆம் ஆண்டிற்கும் 2010 ஆம் ஆண்டிற்கும் இடையில் கைத்தொழில் உற்பத்தியில் இரண்டாம் இடத்திலிருந்த யப்பானை மூன்றாம் இடத்திற்குத் தள்ளிவிட்டு சீனா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியிருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 2011 ஆம் ஆண்டு கைத்தொழில் உற்பத்தியில் சீனா ஐக்கிய அமெரிக்காவினைவிட முன்னேறியிருந்தது.

உலக கைத்தொழில் உற்பத்தியில் ஐக்கிய அமெரிக்கா,யப்பான் ஆகிய நாடுகள் வகிக்கும் வகிபாகத்தினை விட சீனா வகிக்கும் வகிபாகமானது முதன்மையானதாகும். 2011 ஆம் ஆண்டு சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் பெறுமதி சேர்க்கப்பட்ட கைத்தொழில் உற்பத்தியின் பெறுமதி 32.3 % சமமாக இருந்தது. இது ஐக்கிய அமெரிக்காவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 12.1% மாகவும், யப்பானின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 18.9 % மாகவும் இருந்தது. 2013 ஆம் ஆண்டிற்கான பூகோள உற்பத்தி போட்டிக்குரிய சுட்டெண் (Global Manufacturing Competitiveness Index) தயாரித்த தரவரிசைப்படி கைத்தொழில் உற்பத்தியில் 2013 ஆம் ஆண்டு சீனா முதலாம் இடத்திலுள்ளதாக கணிப்பிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்கா மூன்றாம் இடத்திலுள்ளதாகவும், 2018 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா கைத்தொழில் உற்பத்தியில் ஐந்தாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.

வர்த்த மற்றும் முதலீட்டு சீர்திருத்தங்கள்

1990 ஆம் ஆண்டு சீனாவில் கொண்டுவரப்பட்ட வர்த்த மற்றும் முதலீட்டு சீர்திருத்தங்கள் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான பெருக்கத்தினை ஊக்கப்படுத்தியது. நேரடி முதலீட்டிற்கான பெருக்கம் சீனாவின் மிகையான பொருளாதார வளர்ச்சிக்கும் மற்றும் வர்த்தகத்திற்கும் பெரும் வளமாக இருந்தது.

சீனாவின் வெளிநாட்டு வர்;த்தகத்தின் வளர்ச்சியானது உலகப் பொருளாதாரத்தில் 20.6 பில்லியன் டொலராக அதிகரித்தது. வருடாந்த உள்நாட்டு உற்பத்தி 9.6% மாக வளரச்சியடைந்தது. 2005 ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்;த்தகம் 851 பில்லியன் டொலராக அதிகரித்தது. இதன் மூலம் சீனாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தியானது உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக் கொண்டது. 2010 ஆம் ஆண்டில் 27,406 புதிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும்,2011 ஆம் ஆண்டில் 25,086 புதிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும், 2012 ஆம் ஆண்டில் 24,925 புதிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் சீனாவில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதன்மூலம் சீனாவின் கைத்தொழில் துறைக்கு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பினை வழங்கிவருகின்றன. சீனாவின் கைத்தொழில் துறைக்கு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 1990 ஆம் ஆண்டில் 2.3% பங்களிப்பினையும், 2003 ஆம் ஆண்டில் 35.9% பங்களிப்பினையும், 2010 ஆம் ஆண்டு 27.1% பங்களிப்பினையும் வழங்கியிருந்தன.

சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் குறிப்பிடத்தக்களவிற்குப் பொறுப்பாகவுள்ளன. 2011 ஆம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதியில் 52.4 % த்திற்கும், இறக்குமதியில் 49.6 % த்திற்கும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களே பொறுப்பாக இருந்தன. ஆயினும் 2006 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பங்களிப்பில் இது கணிசமானளவு வீழ்ச்சியை காட்டுகின்றது. 2006 ஆம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதியில் 58.2% த்திற்கும் இறக்குமதியில் 59.7% த்திற்கும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பொறுப்பாக இருந்தன.

மேலும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சீனாவின் உயர்தொழிநுட்ப ஏற்றுமதியில் கூடியளவு ஆதிக்கம் செலுத்தியுள்ளன.2002 ஆம் ஆண்டிற்கும் 2010 ஆம் ஆண்டிற்கும் இடையில் சீனாவின் உயர் தொழில் நுட்ப பொருட்களின் ஏற்றுமதிகள் 79% த்திலிருந்து 82% மாக உயர்வடைந்திருந்தன. சீனாவின் உத்தியோகபூர்வ தகவல்களின் படி வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களால்; 1985 ஆம் ஆண்டு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் உட்பாச்சலாகக் கிடைத்திருந்தன. 2008 ஆம் ஆண்டு இந்நிறுவனங்கள் 108 பில்லியன் அமெரிக்க டொலர்களை உட்பாச்சலாகப் பெற்றுக் கொடுத்திருந்தன.

ஆனால் பூகோளப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் இவ் உட்பாச்சலானது 2009 ஆம் ஆண்டு 90 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்ததாயினும்; பின்னர் இவ் உட்பாச்சலானது 2010 ஆம் ஆண்டு 106 பில்லியன் அமெரிக்க டொலராகவும், 2011 ஆம் ஆண்டு 116 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது. இவ் உட்பாச்சல் அதிகரிப்பு 2012 ஆம் ஆண்டு 112 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்தது.

ஐக்கியநாடுகள் சபையின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அறிக்கையின் படி 2011 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்யப்படும் நாடுகளில் சீனா இரண்டாவது இடத்தினைப் பெற்றுக் கொண்டது. வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான இடங்களில் சீனா முதன்மையான இடத்தினைப் பெற்றுக் கொண்டது.

சோசலிச சந்தைப் பொருளாதாரத்தின் வெற்றி

கடந்த இருபது வருடங்களில் சோசலிச சந்தைப் பொருளாதார முறைமையின் மூலம் புதியமுறைமைகளைப் புகுத்தி குறிப்பிடத்தக்களவு வெற்றியினை சீனா அடைந்ததுள்ளது. 1990 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகின்ற போது 36.6 % வளர்ச்சியைக் கொண்டிருந்த சீனா 2000 ஆம் ஆண்டில் 53.8 % வளர்ச்சியை பெற்றுக்கொண்டது. 2010 ஆம் ஆண்டில் இவ்வளர்ச்சியானது 112.9 % மாகா அதிகரித்திருந்தது. அங்குஸ் மெடிசன் (Angus Maddison) அறிமுகப்படுத்திய கொள்வனவு சக்திச் சமனிலை (Purchasing Power Parity – PPP) முறைமையின் அடிப்படையில்; 1990 ஆம் ஆண்டில் 6.2 % மாக இருந்த கொள்வனவு சக்திச் சமனிலை 2000 ஆம் ஆண்டு 12.1 மூ மாகவும் 2010 ஆம் ஆண்டு 39.6 % மாகவும் அதிகரித்தது. ஐக்கிய நாடுகள் சபை அபிவிருத்தித் திட்டத்தின் அறிக்கையின்படி 1990 ஆம் ஆண்டு 54 % மாக இருந்த சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2010 ஆம் ஆண்டு 74 % மாகா அதிகரித்திருந்தது.

சீனாவின் பலமும், பலவீனமும் பொருளாதாரமேயாகும். பொருளாதாரமே சீனாவின் மையக் கொள்கையும், தந்திரோபாயங்களின் மையப் பொருளுமாகும். சீனாவின் உறுதியான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான மூலப் பொருட்கள், வளங்கள் என்பவற்றை உலக நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் சீனா நம்பிக்கையுடன் உள்ளது.

சீனாவின் கம்யூனிசக் கட்சியின் மகாநாட்டில் டெங் செயாபிங் ஆற்றிய உரையில் ‘சோசலிச சந்தைப் பொருளாதார முறைமையின் அடிப்படையில் சீனாவின் பொருளாதாரம் மறுசீரமைக்கப்படும். சோசலிசத்துடன் சந்தைப் பொருளாதாரத்தினை இணைத்தல் என்ற எண்ணக்கரு புதுமையானதும்,மிகவும் அறிவாற்றல் மிக்கதுமான ஆரம்பமும் சோசலிசக் கோட்பாட்டிற்குச் செய்யப்பட்ட புரட்சிகர அபிவிருத்தியாகும். இருபது வருடங்களுக்குப் பின்னர் சீனாவின் சோசலிச சந்தைப் பொருளாதாரத்தினால் ஏற்பட்ட உண்மையான விளைவுகளை மிகவும் ஆழமாக நாங்கள் மதிப்பீடு செய்வது அவசியமாகும்.’ என உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

டெங் செயாப்பிங் ‘சுதந்திரமான உற்பத்தி அதிகரிப்பு, சுரண்டலையும் வர்க்க வேறுபாடுகளையும் இல்லாதொழித்தல் என்பவற்றின் மூலம் பொதுவான செல்வச்செழிப்பினை அடைதலே சோசலிசத்தின் பிரதான இறுதி இலக்காகும். சோசலிச சந்தைப் பொருளாதார மறுசீரமைப்பின் இறுதி இலக்கு பொதுவான செல்வச்செழிப்பினை அடைதலேயாகும்’ எனக் கூறுகின்றார்.ஆகவே இவ் இலக்கினை அடைவதற்காகக் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களைச் சீனா தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியேற்படும். இதற்காக சீனாவின் பொருளாதார மறுசீரமைப்பில் இரண்டு பிரதான விடயங்கள் சிறப்பாகக் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அவைகளாவன

1. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சந்தைப் பொறிமுறையினைப் பயன்படுத்தி சந்தையின் செயற்திறனை மேலும் அதிகரித்தல்

2. சீர்திருத்தத்தின் மூலம் சிறந்த பொதுச் சேவையினை வழங்குதல் அதாவது திட்டமிடப்பட்ட பொருளாதாரம், பொருளாதாரம் மீதான நுண்ணிய கட்டுப்பாட்டினை விருத்தி செய்தல், பொதுச் சேவையின் செயற்திறனை விருத்தி செய்வதற்கு ஏற்ற வகையில் அரசாங்கத்தின் தொழிற்பாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தி சமுதாயத்தின் பொதுவான செல்வச்செழிப்பினை கட்டியெழுப்புதல் என்பனவாகும்.

தென்கொரியா, தாய்வான், தாய்லாந்து, கொங்கொங், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பொருளாதார வளர்ச்சியின் மூலம் ஆசியப் புலிகள் எனச் சிறப்பித்துக் கூறப்பட்ட நாடுகளாகும். இந்நாடுகள் 1960 களிலிருந்து கைத்தொழில்மயவாக்கம், உறுதியான பொருளாதார அபிவிருத்தி என்பவற்றில் முன்னேற்றமடைந்து வந்தன. இருபத்தியோராம் நூற்றாண்டின் கைத்தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் உறுதியடைந்த சீனா ஆசியப் புலிகளின் பாரிய பொருளாதார வளர்ச்சியை வெற்றி கொண்டு ஆசிய றக்கன் எனப் பெயர் பெற்றுத் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

13,700 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>