மனிதன் சமூகமாக வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட பிரதேசத்தினை வாழ்விடமாகக் கொண்டிருக்க வேண்டும். நிலையில்லாததும். நாடோடியானதுமான வாழ்க்கையினை மனிதன் விரும்புவதில்லை. சக மனிதர்களுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்தி வாழ்வதற்கு மனிதனின் வாழ்விடம் பொதுவான பிரதேசமாக இருப்பது அவசியமாகும். எல்லா மக்களும் சமுதாயமாகி, பரஸ்பரம் நன்மை, தீமைகளை பகிர்ந்து கொள்கின்றார்கள். மனிதன் ஒன்றாகச் சேர்ந்து வாழும் போது பரஸ்பரம் தகராறுகள் ஏற்படுகின்றன. இது மனித இயல்பாகவும் உள்ளது. சமுதாயத்தின் ஏனைய அங்கத்தவர்களின் நலன்களுடன் முரண்படாத வகையில் தனது நலன்களை அனுபவிக்கக் கூடிய ஆத்ம ஞானம் தேவையாகவுள்ளது. சமுதாய வாழ்க்கையில் ஒற்றுமை அவசியமானதாகும். இதற்காக மனிதன் பொதுவிதிகளுக்கும் பரஸ்பரம் சக மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் தானாகவே கட்டுப்பட பழக்கப்பட வேண்டும். பொது விதிகளை மீறுவது, சமூக ஒழுங்குகளைக் குழப்புவதாக அமைவதுடன், இதன் பலனாக சமுதாயத்திற்கு எதிரான சிந்தனைகளும் தோன்றி விடுகின்றன. இந்நிலையில் சமூகத்தினை நெறிப்படுத்தவும், விதிகளை உருவாக்கவும் விதிகளை மீறுபவர்களைத் தண்டிக்கவும் சில முகவர்கள் தேவைப்பட்டார்கள். அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட சமுதாயம் உருவாக்கப்படுவதற்கு இது காரணமாகியதுடன் அரசியல் விஞ்ஞானப் பாடப்பரப்பாகவும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் அலகினை கலைச் சொல்லாகிய அரசு என்ற பதத்தினால் அழைக்கின்றார்கள். அரசு குறிப்பிட்ட மக்களை உள்வாங்கிக் காணப்படும். இம்மக்கள் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பிற்குள் வாழ்கின்றவர்களாகக் காணப்படுவார்கள். தம்மிடையில் ஒழுங்கையும், ஒழுக்கத்தையும் பேணுவதற்காக சுதந்திரமான ஒழுங்கமைப்பு ஒன்றைக் கொண்டிருப்பார்கள். சாதாரண மனிதன் ஒருவனால் ஒழுங்கமைப்பு இல்லாமல் வாழ முடியாது. அரிஸ்ரோட்டில் “மனிதன் அரசில்லாமல் வாழ முடியுமாயின் நிச்சயமாக அவன் கடவுள் அல்லது தேவதையாகவே இருக்க வேண்டும்” என்கிறார்.
நீண்டகால பரிணாம வளர்சியினால் மெதுவாகவும் நிதானமாகவும் வளர்ந்து வரும் நிறுவனம் அரசு ஆகும். ஆனால் இப் பரிணாம வளர்சியில் ஒருமித்த தன்மையினை காணமுடியவில்லை. இயற்கை, சுற்றுச்சூழல், வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் மக்களுடைய வேறுபட்ட குண இயல்புகள், வேறுபட்டகாலம்,இடங்களின் தன்மை என்பன அரசின் தோற்றம், வளர்ச்சி என்பவற்றில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இதனால் வேறுபட்ட வடிவங்களில் அரசு தோன்றி வளர்ச்சியடைந்துள்ளது.
கீழைத்தேச பேரரசுகள்:
ஆரம்ப கால நோமட்டிக் பழங்குடியினர் கங்கை, நைல், யூப்ரட்டீஸ் ரைகிரிஸ் மஞ்சல் ஆறு, யங்சூ பிரதேசங்களை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்துள்ளனர். இப்பள்ளத் தாக்குகளிலேயே மனித நாகரீகம் தோற்றம் பெற்றதுடன், இராச்சியங்களும், சாம்ராச்சியங்களும் தோற்றம் பெற்றன. இவ் இராச்சியங்கள் பரம்பரை மன்னர்களினால் ஆளப்பட்டதுடன், இவர்கள் சமயத்தினையும், அரசியலையும் ஒன்றாக்கியும் கொண்டனர். சமயங்கள் சட்டங்களுக்குரிய தகமையினை அரசனின் ஆதரவுடன் பெற்றுக்கொண்டன. மக்கள் தமக்குரிய உரிமைகள்,சுதந்திரங்கள் தொடர்பாக எதுவும் அறிந்திருக்கவில்லை. கட்டளைகளுக்கு கீழ்படிதல் ஒன்றே அவர்களுக்குத் தெரிந்த முதலும் இறுதியுமான கடமையாக இருந்தது.கெட்டல் கீழைத்தேச இராச்சியம் தொடர்பாகக் கூறும்போது “ஆட்சியாளர்கள் தமது மக்களை அடிமையாக்குபவர்களாகவும், வரி அறவிடுகின்ற பிரதிநிதிகளாக மட்டுமே வைத்திருந்தனர்.” என்கின்றார்.
கிரேக்க நகர அரசு:
கி.மு 1000 நூற்றாண்டில் கிரேக்கத்தில் நகர அரசுகள் அபிவிருத்தியடைந்தன.உண்மையில் அரசியல் விஞ்ஞானக் கற்கையில் அரசின் தோற்றத்தினை கிரேக்க நகர அரசின் தோற்றத்துடன் தொடர்புபடுத்தியே கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர். கிரேக்க நகர அரசுகள் “அரசியல் சிந்தனைகளை” அடிப்படையாகக் கொண்டு உணர்வுபூர்வமாக அபிவிருத்தியடைந்த முதல் சமூகங்களாகக் கருதப்படுகின்றன.
ஐரோப்பாவில் கிரேக்கர்கள் தம்மை அரசியல் ரீதியாக நிலை நிறுத்திய போது புராதன சமூக ஒழுங்கமைப்பினடிப்படையில் பிளவுபட்டுக்காணப்பட்டனர். ஒருசாரார் பொது மரபுக்குடியின் அடிப்படையிலும்,மறுசாரார் பழங்குடியினராகவும் காணப்பட்டனர். இவர்கள் மலைகள்,கடல் என்பவற்றினால் பிளவுபட்டிருந்த கிரேக்கத் தீவுகளில் குடியேறியிருந்தனர்.இவர்களின் நிர்வாகம் படிப்படியாக உள்ளுர் அரசாங்கமாக எவ்வாறு வளர்ந்தது என்பதையும்,உள்ளுர் சமுதாயம் எவ்வாறு நகர அரசாகியது என்பதையும் கிரேக்கத்தின் நகர அரசுகளின் வளர்ச்சியிலிருந்து குறிப்பாக ஏதன்ஸ் நகர அரசின் வளர்ச்சியிலிருந்து கற்றுக் கொள்ளமுடியும்.
ஒவ்வொரு நகர அரசுகளும் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், சுதந்திரமானதாகவும் இருந்தது. மேலும் பிரதேச அளவில் மட்டுப்படுத்தப்பட்டதாகவும், சனத்தொகையில் மிகவும் குறைந்தளவிலும் காணப்பட்டது. கிரேக்க அரசியல் தத்துவத்தின்படி ஒவ்வொரு நகர அரசினதும் அரசியல்,சமூக, புலமைசார் வாழ்க்கை என்பது ஒரு அரசு சிறியதாக இருக்கும் வரையிலேயே சாத்தியமாகும் எனக்கூறுகின்றது.
கிரேக்க நகர அரசுகள் சுதந்திரம், சட்டச்சமத்துவம் என்பவற்றினால் வளர்ச்சியடைந்துள்ளன. மக்கள் எல்லோரும் போர் வீரர்களாகவும்,ஆட்சிமன்றத்தின் உறுப்பினர்களாகவும் இருந்தனர்.கிரேக்க நகர அரசுகளில் நேரடி ஜனநாயக முறை நடைமுறையிலிருந்தது. எல்லாப் பிரசைகளும் சட்ட ஆக்கச் செயற்பாட்டிற்காக நேரடியாக ஒன்று கூடினர். அதாவது மக்களே அதிகாரம் மிக்கவர்களாகக் காணப்பட்டனர்.
உரோம நகர அரசும்,சாம்ராச்சியமும்:
இத்தாலியில் காணப்பட்ட சிறிய நகர அரசுகளில் ஒன்றுதான் உரோம நகர அரசாகும்.கிரேக்க நகர அரசுகளைப் போன்றே இத்தாலிய நகர அரசுகளும் புவியியல் ரீதியாகப் பிரிவுபட்டுக் காணப்பட்டன. உரோம நகர அரசில் கொடுங்கோண்மை ஆட்சி நிலவியது.பின்னர் மக்கள் கோடுங்கோண்மை ஆட்சியாளர்களைத் தோற்கடித்து குடியரசினைத் தோற்றிவித்தார்கள்.உரோமில் நிலவிய குடியாட்சி முறையில் இரட்டை நிர்வாக முறை காணப்பட்டது.பரம்பரை மரபின் வழி வந்த ஆட்சியாளர்களும்,மக்களால் தெரிவு செய்யப்பட்ட செனற்சபையும் ஆட்சி செய்தது. இதனால் உரோமக் குடியரசு உயர்குடி சிறுகுழுவாட்சியாக மாறியது.
ஐரோப்பாவின் பல பிரதேசங்களை ஆக்கிரமித்ததன் மூலம் உரோம அரசு சாம்ராச்சியமாக மாறியது.பிரான்ஸ்,ஸ்பெயின்,பிரித்தானியா,ஜேர்மனி, வடஆபிரிக்கா உரோமின் ஆட்சிப் பிரதேசங்களாகின.உரோம சரம்ராச்சியம் கொடுங்கோண்மை ஆட்சியாக மாறியது. பேரரசன் எல்லா வகை அதிகாரங்களையும் கொண்டிருந்ததுடன்,அவனுடைய வார்த்தைகள் சட்டங்களாகவும் இருந்தன.கிறிஸ்தவம் அரச சமயமாகியது.தெய்வீக உரிமைக் கோட்பாடு விபரிப்பது போன்று அரசன் இறைவனின் பிரதிநிதியாகியதுடன்,அவனுக்கு கீழ்படிவது இறைவனுக்கு கீழ்படிவதற்கு சமனாகியது.
உரோம சாம்ராச்சியத்தின் வளர்ச்சியினை மூன்று கட்டங்களாக வரையறுக்கலாம்.முதலாவது மன்னராட்சி நகர அரசுகள் இருந்த காலமாகும். இவ் அரசு கி.மு 753 தொடக்கம் கி.மு 510 ஆண்டுகளுக்குமிடையில் உருவாக்கப்பட்டதாகும்.அரசின் தலைவர் தந்தைவழி பரம்பரை அரசனாக இருந்தார்.சமுதாயத்தின் தலைமை மதகுரு அரசின் ஆட்சியாளராக இருந்தார். அரசன் இறந்த பின்னர் இறைமையானது சமுதாயத்தின் மூத்தோர் சபையிடம் சென்றுவிடும்.மூத்தோர்சபை தற்காலிகமாக ஒருவரை ஜந்து நாட்களுக்கு அரசனாக தெரிவு செய்வார்கள்.மூத்தோர்களினால் பிரேரிக்கப்பட்ட அரசனின் பெயர் பின்னர் மக்கள் சபையின் அனுமதிக்காக சமர்பிக்கப்படும்.மக்களுடைய வாக்குகள் இறைவனின் அனுமதியுடன் அரசனை உறுதி செய்து அதற்குரிய விழாக்கள் நடைபெறும். அரசனின் அதிகாரம் ‘பேரரசு’ என விபரிக்கப்பட்டது.யுத்தம்,சமாதானம் என்பவற்றைச் செய்வதற்கு அரசனுக்கு எல்லையற்ற அதிகாரம் இருந்தது என்பதே இதன் விளக்கமாகும். ஆனாலும் அரசனுக்கு இரண்டு வகையான சம்பிரதாயக்கட்டுப்பாடுகள் காணப்பட்டன.ஒன்று அரசன் மூத்தோர் சபையின் ஆலோசனையைப் பெற்று செயற்படவேண்டும்.இரண்டு ‘சொத்துத் தண்ட வரி’ தொடர்பான விடயங்கள் மக்களுடைய இறுதித் தீர்மானத்திற்காகச் சமர்பிக்கப்பட வேண்டும்.
உரோம மன்னராட்சி நகர அரசு முறை கி.மு 510 இல் முடிவுக்கு வந்திருந்தது.குடியரசு முறையிலான ஆட்சிமுறை உருவாக்கப்பட்டது. குடியியல்,இராணுவ அதிகாரங்கள் இரண்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.இவர்கள் வருடாந்தம் தெரிவு செய்யப்பட்டார்கள். ஆனால் எல்லாப் பிரசைகளுக்கும் சம அதிகாரம்,சமஉரிமை வழங்கப்படவில்லை. ப்லிபியன்கள் (பிறப்பால் தாழ்ந்தவர்கள்) என்ற சமூகத்தினருக்கு அரசியல்,பொருளாதார,சமூக சுதந்திரங்கள் மறுக்கப்பட்டன. இவர்கள் எவ்வித பொதுச்சேவையிலும், நிர்வாகப் பதவியிலும் இணைவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
இரண்டாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் குடியரசு ஆட்சி சீர்குலைந்தது. அதிகாரப் பிரிவினை இல்லாது போனது. பதிலாக கொடுங்கோண்மை ஆட்சி ஆரம்பமாகியது. இக்காலத்தில் உரோமர்கள் தமது ஆட்சியை தம் நாட்டின் எல்லைக்கும் அப்பால் விஸ்தரிக்கத்தொடங்கினர்.உரோமர்களின் ‘எல்லை கடந்த சாம்ராச்சியம்’ இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், அவுஸ்திரேலியா, மற்றும், மத்திய தரைக்கடல் பிராந்தியத்தின் கரையோரங்கள் வரை தொடர்ந்திருந்தது.
உரோம சாம்ராச்சியம் அரசியல் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது.அரசிற்குள் குடும்ப ஆதிக்கத்தினை நிலைநிறுத்துவதைக் கற்றுத்தந்தது.அதேநேரம் உரோம மக்களின் உரிமைகளை விஸ்தரித்துக்காட்டியது. ‘தேசங்களின் சட்டம்’ என்பதே இதன் அடிப்படையாக இருந்தது.இதுவே உரோமர்களின் சட்டமுறைமையாகவும் இருந்தது.
நிலப்பிரபுத்தவ அரசு:
உரோம சாம்ராச்சியத்தில் பல நிர்வாகச் செயற்பாடுகள் ஏற்பட்டன.சிவில் சேவையில் துணிச்சலற்ற தன்மை, அச்சவுணர்வுääமக்கள் மீது அவநம்பிக்கை என்பன ஏற்பட்டன. இதிலிருந்து பேரரசை மீட்டெடுப்பது கடினமாக இருந்ததுடன்,உரோம இராச்சியம் படிப்படியாக வீழ்சியடையவும் தொடங்கியது.இச்சூழலில் நிலவுடமையாளர்கள் எழுச்சி பெறுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. நிலவுடமையாளர்கள் தமது குடியானவர்கள் மீது செலுத்தி வந்த அதிகாரம் தொடர்ந்தும் பேணப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு பிரபுவின் கீழ் இருந்தது. இவர் குறுநில மன்னர் போல் ஆட்சிசெய்து வந்தார். அரசியல் அதிகாரமானது நிலவுடமையுடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. வலிமை பெற்ற பிரபுக்கள் வலிமை குன்றிய பிரபுக்களை கைப்பற்றி ஆளத்தொடங்கினார்கள். இது மீளவும் சிறிய அரசுகள் தோன்றக் காரணமாகியது. ஒரு அரசு பிற அரசுகளைக் கைப்பற்றுவதன் மூலம் அல்லது திருமண உறவுகளைப் பேணுவதன் மூலம் சிறு அரசுகள் பலம் பொருந்திய பெரிய அரசுகளாக மாறின. நிலப்பிரபுத்துவக் கோட்பாட்டின் படி அரசன் இறைவனின் கீழ்படிவுள்ள ஊழியனாக இருந்து அரசினை வழிநடாத்த வேண்டும்.அரசர்கள் தமது இறைமையினை பிரபுக்குச் செலுத்தும் விசுவாசத்தினூடாகப் பெற்றுக் கொண்டான்.அரசன் இறந்தபின் அவனுடைய அதிகாரங்களும் கடமைகளும் பிரபுவிடம் சென்றது.
திருசபைக் காலத்தில் சமயரீதியாக அரசுகளுக்கிடையில் இணக்கம் ஏற்பட்டிருந்தது. இவ்விணக்கம் சர்வதேசியம் என்பதை குறிக்கோளாகக் கொண்டு உலக அரசுகளை ஒன்றிணைத்து வைத்திருந்தது.
மறுமலர்சிக்காலமும்,புதிய அரசுகளின் தோற்றமும்:
மறுமலர்சியானது மானிடத்தின் மறுபிறப்பாகவே கூறப்படுகின்றது.இக்காலம் தனிமனித சுதந்திரத்தையும்,மனிதனின் சிறப்பினையும்,உலகத்தின் சிறப்பினையும் முதன்மைப்படுத்தியது. மனிதன் தொடர்ந்தும் மகிழ்ச்சியாக வாழ்வதை விரும்பினான்.மேலும் கிறிஸ்தவ சமயச் செல்வாக்கிலிருந்து விடுபட்டு இயற்கை நோக்கியும்,சுயமுயற்சி,சுயசிந்தனை என்பவைகள் நோக்கியும் நகர்வதில் நாட்டம் கொண்டிருந்தான். இக்காலம் மானிடத்துவம் முதன்மைப்படுத்தப்பட்ட காலமாகும். மானிடத்துவம் முதன்மைப்படுத்தப்பட்டமை நவீன ஜரோப்பாவின் பெரும் பலமாக உணரப்பட்டது. கிறிஸ்தவ சமயமும், தேவாலயமும் போதித்த மானிடவாழ்வின் நிலையற்ற தன்மை, துன்பம், அடக்கம், வறுமை, துறவறம் என்பவைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. மனிதன் சிந்திக்கும் சுதந்திரத்தை, விசாரிக்கும் சுதந்திரத்தை, வினா எழுப்பும் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டான். இச் சுதந்திரங்கள் ஜரோப்பாவில் புதிய மனிதனை தோற்றுவித்தது. சமயவிசுவாசம், என்பதற்கப்பால் தனிமனிதனின் சுயநடத்தை,மகிழ்ச்சி,பெருமை என்பன முதன்மைப்படுத்தப்பட்டன. சமயச்சார்பற்ற அரசு என்ற சிந்தனை பிரதான அரசியல் அலகாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேசிய அரசு என்பது ஒரு புலக்காட்சிக்குட்பட்டதுடன் அதன் இறைமையும் முதன்மையடைந்தது.
மறுமலர்சிக்காலத்தில் ஜரோப்பிய மக்களிடையே தேசியவாத உணர்வுகள் வேகமாக வளர்ச்சியடைந்தன.இத் தேசியவாத உணர்வு இலத்தீன்,கிரேக்க கிறிஸ்தவர்களிடையே தேசியப் போட்டியையும்,பாப்பரசருக்கும், முடியாட்சிக்கும் இடையில் அதிகாரப் போட்டியையும் உருவாக்கியது. மக்கள் முடியாட்சியை ஆதரித்துப் பாப்பரசரால் முன்வைக்கப்பட்ட சர்வதேசியத்தை எதிர்த்தார்கள். இது புதிய தேசிய மன்னர்கள் தோற்றம் பெறுவதற்குக் காரணமாகியது. இவர்களின் தோற்றம் ஜரோப்பாவில் புதிய அரசுகள் வளர்ச்சியடையக் காரணமாகியது.
தேசிய அரசுகளின் தோற்றம், வளர்ச்சியில் பல சிந்தனையாளர்களும், நிகழ்வுகளும் பங்கேற்றிருந்தன. மாடின்லூதர், கல்வின் ,நொக்ஸ் போன்ற சீர்திருத்தவாதிகள் திருச்சபையின் ஆதிக்கத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தனர். லூதர் ஜேர்மனியிலும் கல்வின் பிரான்சிலும்,நொக்ஸ் ஸ்கொட்லாந்திலும் சமயச்சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினர்.இவர்களின் சீர்திருத்தம் நாட்டுப்பற்றின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்தது.இது திருச்சபைக்கும்,லௌகீக அதிகாரம் கொண்ட அரசிற்குமிடையில் முரண்பாட்டினைத் தோற்றிவித்து, சர்வாதிகார ஆட்சியை முதன்மைப்படுத்தியது. உயர்ந்த நோக்கமும், சர்வாதிகாரமும் கொண்ட மன்னர்கள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல், ஸ்கன்டினேவிய நாடுகளில் தமது அதிகாரத்தினைப் பலப்படுத்திக் கொண்டார்கள்.
இக்காலத்தில் மாக்கியவல்லியின் எழுத்துக்கள் தேசிய அரசினை உருவாக்குவதில் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தின.இவை தேசப்பற்றினையும், தேசிய அரசுகளின் ஒற்றுமையினையும் வலியுறுத்தியதுடன், வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து அரசினைப் பாதுகாப்பதாகவும் இருந்தன.இந்நோக்கத்தினை அடைவதற்காக தனிமுதன்மை அதிகாரம் கொண்ட மன்னராட்சி முறைமையினை இவர் வலியுறுத்தினார்.இவரது கருத்துக்கள் திருச்சபையின் உயர் அதிகாரத்திற்கெதிராக ஜரோப்பாவில் பலமான,நேர்மையான,சீரான தன்மையுடைய மன்னர்களினால் ஆளப்படுகின்ற சுதந்திர அரசுகள் உருவாக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தின.
மறுமலர்ச்சிக்காலம் மொழி,இலக்கியம்,அரசியல்,பொருளாதாரம்,சமயம் ஆகிய சக்திவாய்ந்த காரணிகள் மீது தாக்கத்தினைச் செலுத்தியது.இதனால் வௌ;வேறுபட்ட தேசிய இனங்கள் தோற்றமடைந்தன. ஆரம்பத்தில் கிரேக்கம்,இலத்தீன் என்பன ஜரோப்பாவின் முதன்மை வாய்ந்த மொழிகளாகக் காணப்பட்டன.இந்நிலைமாறி ஆங்கிலம்,பிரெஞ்சு,இத்தாலி மொழிகள் வெவ்வேறுபட்ட மக்களின் மொழிகளாகின.அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு,பதிப்பு என்பன இம் மொழிகளின் இலக்கியங்கள் வளர்வதற்கு உதவியாக இருந்ததன் விளைவாகப் புவியியல் ரீதியாக நிச்சயிக்கப்பட்டதும்,சுயமொழி, காலாசாரம்,பாரம்பரியங்கள் என்பவற்றை அடிப்படையாகக்கொண்ட, ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் கூட்டத்தை மையமாக்கி புதிய தேசிய அரசுகள் தோற்றம் பெற்றன.
தேசிய அரசுகளின் எழுச்சியுடன் பொருளாதாரமும், வர்த்தகமும், அபிவிருத்தியடைந்தன. புதிதாகத் தோற்றம் பெற்ற அரசுகளும் அதன் ஆட்சியாளர்களும் வர்த்தகச் சுரண்டலை நோக்கமாகக் கொண்டு, கடற்பிரயாணங்களை மேற்கொண்டு புதிய பிரதேசங்களையும், அரசுகளையும் கண்டுபிடித்தனர்.பழைய வர்த்தக நகரங்களாகிய வெனிஸ், ஜெனோவா மட்டுமன்றி வேறு பல தேசிய அரசுகளிலும் வர்த்தக நகரங்கள் தோற்றம் பெற்றன.தேசிய அரசுகளின் ஆட்சியாளர்கள் வாணிபவாதத்தை நடைமுறையில் பின்பற்றினர். வாணிபவாதம் யுத்தங்களுக்குத் தலைமைதாங்க, ஜரோப்பிய வர்த்தகம் தேசியத்தன்மையினைப் பெற்றுக்கொண்டது. யுத்தங்கள் தேசிய மகிமை அல்லது நாட்டுப்பற்று வளர்வதற்கு உதவியது.
நவீன தேசிய அரசுகளின் தோற்றம்:
தேசிய அரசுகளின் நவீன வளர்ச்சியில்,பிரான்சியப் புரட்சி முதன்மையானதாகும்.1789 இல் பிரான்சிய மக்கள் மன்னர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்து,அதன் மூலம் ஜனநாயக அரசியலை முன்வைத்துச் சுதந்திரமும், இறைமையும் கொண்ட மக்கள் அரசாகப் பிரான்சை பிரகடனப்படுத்தினர். இப்புரட்சியானது “எல்லா மனிதர்களும் சமத்துவமாக உருவாக்கப்படுகின்றார்கள்.பிறக்கும் போது பிரிக்க முடியாத சில உரிமைகளுடன் பிறக்கின்றார்கள்” போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தி வலியுறுத்தி நின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கைத்தொழில் புரட்சியினால் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புக்கள், இயந்திரங்களின் கண்டுபிடிப்புக்கள், இயந்திரங்களின் அதிகரிப்பு, பொருட்களின் உற்பத்தி, உற்பத்திகளின் அமைப்பு என்பன தேசிய அரசுகளின் தோற்றத்திற்கு அடிப்படைகளாகின.சர்வதேச வர்த்தகம் துரிதமடைந்ததுடன்,தேசிய வர்த்தகமும்,வங்கித் தொழிலும் அதிகரித்தன. போக்குவரத்திலும், வெகுஜனத்தொடர்பிலும்,சமூகப்பொருளாதார வாழ்விலும் புரட்சிகர மாற்றங்கள் நிகழ்ந்தன.இம்மாற்றங்கள் நவீன தேசிய அரசுகளின் எழுச்சிக்கு உதவின.
இந் நூற்றாண்டுத் தேசியவாதக் கோட்பாட்டிற்கும்,தேசிய அரசுகளின் தோற்றத்திற்கும் ஏற்புடைய காலகட்டமாகும். ஜரோப்பாவின் தேசிய அரச நடைமுறையினை ஜேர்மனிய,இத்தாலிய ஜக்கியம் எடுத்துக்காட்டின. ஏனைய ஜரோப்பிய அரசுகளாகிய கிறிஸ் பெல்ஜியம் என்பன தேசப்பண்மைப் பெற்றன.இவற்றை விட போலந்து ,அயர்லாந்து அஸ்ரோ- கங்கேரியன்களில் தோன்றிய ஆழமான தேசியவாத உணர்வுகள் கிளர்ச்சிகளாக வெளிக்காட்டப்பட்டன.மேலும் ஸ்பானியா, போர்த்துக்கேய காலனித்துவத்திலிருந்து பல புதிய அரசுகள் தமது சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோற்றம்பெற்ற பல புதிய சித்தாந்தங்களுடன் தேசியவாதம் இணைந்து புதிய மனோபாவத்துடன் எழுச்சியடைந்தது. வீயன்னா மகாநாட்டைத்தொடர்ந்து தாராண்மைத்தேசியவாதம் தோற்றம்பெற்றது. இப்புதிய சக்தியின் பிரதிபலிப்பால் அனேக அரசுகள் விழிப்படைந்து தமது தேசிய சுதந்திரத்திற்காகப் போராடத் தொடங்கின. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வல்லரசுகளுக்கிடையில் கைத்தொழில், வர்த்தகம் என்பவற்றில் போட்டி ஏற்பட்டு இராணுவபலம் அதிகரித்தது. இறுதியில் இது உலக யுத்தங்களைத் தோற்றுவித்தது.
முதலாம் உலகப் போரினைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்வதேசச் சங்கத்தாலும்,லொகார்னோ கெலொக் உடன்படிக்கையினாலும், சர்வதேசியம் உருவாக்க முயற்சிக்கப்பட்டது.1919 இல் வேர்சையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு மூன்று வருடங்களின் பின்னர் இத்தாலியில் பாசிசம் எழுச்சியடைந்தது.இதே போல் 1930களில் ஜேர்மனி,யப்பான் ஆகிய நாடுகளில் பாசிசம் எழுச்சியடைந்தது. இது முழுநிறை அதிகாரம் கொண்ட தனிமனித ஆதிக்கமுடைய அரசுகளைத் தோற்றிவித்தது. அக்கால சமூக, அரசியல், பொருளாதார சூழ்நிலையில் ஆபத்தானதாகவும், கொடுமையானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் பாசிச அரசுகள் காணப்பட்டன. விளைவு, உலகம் இரண்டாவது உலகப் போரைச் சந்தித்தது.
இருபதாம் நூற்றாண்டில் தேசங்கள் தேசிய அரசுகள்
இரண்டாம் உலகப்போரின் பின்னர் கம்யூனிசம் சோவித்யூனியனுக்கு உள்ளேயும், வெளியேயும் தேசியவாத இயக்கமாக வளர்ச்சியடைந்தது. சோவியத்யூனியனின் ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய,காலனித்துவ எதிர்பாளர்களுக்கும், ஆசியத் தேசியப் போராட்டத்திற்கும் ஆதரவழித்தனர்.ஆசிய,ஆபிரிக்க பிராந்தியத்தில் பல தேசிய அரசுகள் தோற்றம் பெறுவதற்கு இது பலமான தளமாக இருந்தது.
ஆட்சியாளனின் அரசியல் சாராம்சத்தினைப் பொறுத்து அரசுகள் ஒன்றிலிருந்து ஒன்று பல விடயங்களில் வேறுபட்டனவாகும். அதாவது அரசுகளுக்குள் பல ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் காணப்படுகின்றன. சமயம், கலாசாரம், மொழி, மக்கள் வாழ்வதற்குரிய பிரதேசம்,பொதுமக்கள் என்பவைகள் அரசுகளுக்குரிய சட்டபூர்வமான தன்மையினை வழங்குகின்றன. அனேகமாக உலகத்திலுள்ள எல்லா பழையஅரசுகளும் பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்டு வேறுபடுத்தப்பட்டன. பிரதேசங்கள் அரசுகளுக்கான தெளிவான கலாசாரத்தினையும், சட்டபூர்வத்தன்மையினையும் வழங்குகின்றன.இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஆசிய, ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள அனேக அரசுகள் தெளிவான பிரதேசங்கள் அல்லது இயற்கையான புவியியல் எல்லைகளைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறலாம். மொழி, கலாசாரம், சமயம் என்பன மக்களின் பிறப்பினை அடையாளப்படுத்தின. மக்கள் செயற்கையான பிரதேச எல்லைகளையே கொண்டிருந்தனர். பிரதேச,கலாசாரா அடிப்படையில் தேசிய அரசுகளுக்கிடையில் வேறுபாடுகள் காணப்பட்டாலும், இவற்றினைக்கடந்து எல்லாஅரசுகளும் சட்டப்படி ஒன்றிற்கொன்று சமமானவைகளாகவே கருதப்படுகின்றன.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலக அரசுகள், முதலாம் மண்டல அரசுகள், இரண்டாம் மண்டல அரசுகள், மூன்றாம் மண்டல அரசுகள் எனப் பொதுவாக மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன. இம்மூன்று பதங்களும் ஒரே கருத்தினை கொண்டவைகளல்ல. மேலும், உலகம் இரண்டு முகாம்களாகப் பிளவுபட்டன. ஒன்று நேட்டோ அணிகள் என்றும், மற்றையது வோர்சோ அணிகள் எனவும் அழைக்கப்பட்டன. இவ் அணிகள் மேற்கு நாடுகளின் முகாம், கிழக்கு நாடுகளின் முகாம் எனவும் அழைக்கப்பட்டன. 1952 ஆம் ஆண்டு குடித்தொகை ஆய்வாளர் அல்பிறட் சாவி மூன்றாம் மண்டலம் என்றதொரு புதிய வகைப்பாட்டினை உருவாக்கியிருந்தார்.
மூன்று மண்டலங்களும் கெடுபிடி யுத்த காலப்பகுதியில் உருவாக்கப்பட்டிருந்ததுடன் ஒவ்வொரு மண்டலங்களும் தமக்கான கூட்டுக்களையும்; கொண்டிருந்தன.
சில அரசுகள் இம்மூன்று அணிகளுடன் கூட்டுச் சேராதவைகளாக இருந்தன. சுவிற்சர்லாந்து,சுவீடன், அயர்லாந்துக் குடியரசு போன்ற அரசுகள் நடுநிலையரசுகளாக இருந்தன. பின்லாந்து சோவியத் யூனியனின் செல்வாக்கிற்குட்பட்ட நாடாக இருந்தாலும், கம்யூனிஸ முகாமிலோ அல்லது வோர்சோ அணியிலோ சேர்ந்திருக்கவில்லை. யூகோஸ்லேவேக்கியா நடுநிலைக் கொள்கையினைக் கொண்டிருந்ததுடன், அணிசேரா இயக்கத்தின் ஆரம்ப கால உறுப்பு நாடாகவும் இருந்தது.
இரண்டாம் மண்டல நாடுகள் சோவியத் யூனியனின் செல்வாக்கிற்குட்பட்ட கம்யூனிச நாடுகளைக் குறிக்கின்றது. கெடுபிடி யுத்தம் பூமியை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை முதலாம் மண்டலம் எனவும், இரண்டாம் மண்டலம் எனவும் மூன்றாம் மண்டலம் எனவும் அழைத்துக் கொண்டது. ஆயினும் சீனா, வியட்நாம் தென்னாசிய,கிழக்கு ஆசியக் கம்யுனிச நாடுகள் என்பனவும் மூன்றாம் மண்டல நாடுகள் என்றே அழைக்கப்பட்டன. சோவியத் யூனியனின் சிதைவிற்குப் பின்னர் ரஸ்சியாவும், ஏனைய அதன் கூட்டு நாடுகளாகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் முதலாம் உலக நாடுகளுக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டன.
இதனைவிட குறைவிருத்தி நாடுகள் என்றதொரு வகைப்பாடும் காணப்படுகின்றது. குறைவிருத்தி நாடுகள் என்பது ஐக்கிய நாடுகள் தாபனத்தின் கருத்தின்படி சமூக, பொருளாதார அபிவிருத்தியிலும், மனித அபிவிருத்தி சுட்டியிலும் மிகவும் குறைவான சுட்டிகளைக் கொண்டிருக்கும் நாடுகளாகும். குறைவிருத்தி நாடாக ஒரு நாடு வகைப்படுத்தப்படுவதற்குப் பின்வரும் மூன்று விடயங்கள் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன.
-
750 % குறைவான தலா வருமானத்தினைக் கொண்டிருக்கும் குறைந்த வருமானமுடைய நாடுகளாகும். இந்நாடுகளின் தலாவருமானம் 900 % அடையும் போது இப்பட்டியலிலிருந்து நீக்கப்படும்.
-
போசாக்கு, சுகாதாரம், கல்வி, வயது வந்தோர் கல்வி போன்ற மனித வளக் குறிகாட்டிகள் பலவீனமாக இருத்தல்.
-
பொருளாதாரப் பலவீனம், இது விவசாய உற்பத்தி, பொருட்களின் சேவைகளின் ஏற்றுமதி போன்றவற்றில் பலவீனமாக இருத்தல். மரபுசாராப் பொருளாதாரச் செயற்பாடுகளின் முக்கியத்துவம்,வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி, சிறு பொருளாதாரப் பொருட்களின் குறைபாடுகள், இயற்கை அனர்த்தங்களினால் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயருதல் போன்றவைகள் காணப்படும்.
ஆட்சியாளனின் அரசியல் சாராம்சத்தினைப் பொறுத்து அரசுகள் ஒன்றிலிருந்து ஒன்று பல விடயங்களில் வேறுபட்டனவாகும். அதாவது அரசுகளுக்குள் பல ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் காணப்படுகின்றன. சமயம், கலாசாரம், மொழி, மக்கள் வாழ்வதற்குரிய பிரதேசம்,பொதுமக்கள் என்பவைகள் அரசுகளுக்குரிய சட்டபூர்வமான தன்மையினை வழங்குகின்றன. அனேகமாக உலகத்திலுள்ள எல்லா பழையஅரசுகளும் பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்டு வேறுபடுத்தப்பட்டன. பிரதேசங்கள் அரசுகளுக்கான தெளிவான கலாசாரத்தினையும், சட்டபூர்வத்தன்மையினையும் வழங்குகின்றன. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஆசிய, ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள அனேக அரசுகள் தெளிவான பிரதேசங்கள் அல்லது இயற்கையான புவியியல் எல்லைகளைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறலாம். மொழி,கலாசாரம்,சமயம் மக்களின் பிறப்பினை அடையாளப்படுத்தின. மக்கள் செயற்கையான பிரதேச எல்லைகளையே கொண்டிருந்தனர். பிரதேச,கலாசாரா அடிப்படையில் தேசிய அரசுகளுக்கிடையில் வேறுபாடுகள் காணப்பட்டாலும், இவற்றினைக்கடந்து எல்லாஅரசுகளும் சட்டப்படி ஒன்றிற்கொன்;று சமமானவைகளாகவே கருதப்படுகின்றன.
நான்காம் மண்டலநாடுகள்
ஆர்.ஜி றிட்கெர் 1976 ஆம் ஆண்டு நான்காம் உலகத்தின் மாறும் வளப்பிரச்சினை (Changing Resource Problems of the Fourth World) என்னும் பெயரில் வெளியிட்ட கட்டுரையில் நான்காம் உலகம் என்னும் பதத்தினைப் பயன்படுத்தியிருந்தார். ஆயினும் இப்பதம் பொருளியலாளர்களிடையில் தான் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆயினும், 1972 ஆம் ஆண்டு பென் விற்ரெக்கர் (Ben Whittaker) சிறுபான்மை இனக்குழுக்களை அழைக்க இப்பதத்தினைப் பயன்படுத்தியிருந்தார். ஆயினும் உண்மையான இன,சமூக,வரலாற்றுக் குழுக்களிற்கிடையிலான வேறுபாட்டினை இனம்காண இவர் தவறிவிட்டார் எனக் கூறப்படுகின்றது.
பேர்னாட் கியூ நீட்ச்மன் (Bernard .Q.Niertschmann) என்பவர் “சர்வதேச அரசியலில் புதியதொரு சக்தியாக நான்காவது மண்டலம் என்றதொரு புதிய வகைப்பாடு படிப்படியாக எழுச்சியடைந்து வருகின்றது. பொதுவான பாதுகாப்பு, சர்வதேசச்சட்டம்,அரசஇறைமை,பணிக்குழு மீதான நம்பிக்கை போன்றவற்றை அனேக சுதேசிய மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை.பதிலாகத் தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்து தங்களது பங்குபற்றுதலையும், இறைமையையும் பிரயோகிக்கின்றார்கள்.”எனக் கூறுகின்றார்.
மேலும் இவர் “மூன்றாம் உலகம் நான்காம் உலகத்தின் மீது புவியியல் யுத்தத்தினைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இப்பூகோள முரண்பாட்டிற்கு முதலாம்,இரண்டாம் உலக அரசுகள் உதவுகின்றன.”எனக் கூறுகின்றார்.
றிச்சாட்ஸ் கிறிக்ஸ் (Richard Griggs) “சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படத் தகுதியில்லாத தேசங்களே நான்காம் உலகமாகும். உலக சனத்தொகையில் 5000 தொடக்கம் 6000 வரையில் பிரதிநிதித்துவம் வகிக்கும் மக்களும் தாங்கள் வாழும் அரசிற்குள் தனியான அரசியல் கலாசாரத்தினைப் பேணிக்கொள்வதுடன், தாம் வாழும் பிரதேசம் தமக்குச் சொந்தமானது என உரிமை கொண்டாடுவதுடன், இறைமைக்காகப் போராடுவது அல்லது கணிசமானளவு சுயாட்சியைத் தமது பிரதேசத்தில் பெற்றுக்கொள்வதற்கும் போராடுகின்றார்கள்” எனக் கூறுகின்றார்.
அனேக சந்தர்பங்களில் சுதேசிய மக்கள் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தினை நடாத்தி தமது அரசியல் குரலையும் ஐக்கியத்தினையும் பிரகடனப்படுத்துவதுடன், தங்களுடைய பொருளாதார,கலாசார,சமூக அபிவிருத்தியையும் தக்கவைத்துக்கொள்கின்றார்கள்.
சமாதானத்தை நேசித்தவர்கள் எதிர்காலத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தேசங்களுக்கிடையில்; முரண்பாடுகள் ஏற்படாமலிருப்பதற்காக ஒவ்வொரு தேசத்திற்கும் தனியான தேசிய அரசுகளை உருவாக்க முயற்சித்தார்கள். ஆனால் இவ்வாறு செய்வது இலகுவானதல்ல.தேசிய அரசொன்றிற்குள் பல தேசங்கள் வாழ்கின்றன.மொழி, தேசியம், சமயம் என்ற சிக்கலான முறையில் இவர்கள் கலந்து காணப்படுகிறார்கள்.அவர்களைத் தெளிவான தேசங்களாப் பிரித்தெடுப்பது சிக்கலானதாகும்.உதாரணமாக கிறீஸ்சில் பல்கேரியர்களும்,பல்கேரியாவில் கிரேக்கர்களும், யூகோஸ்லாவியாவில் ருமேனியர்களும், ருமேனியாவில் யூகோஸ்லேவியர்களும், செக்கோஸ்லேவியாவில் ஜேர்மனியர்களும் வாழ்கின்றார்கள்.
ஒவ்வொரு தேசிய அரசிற்குள்ளும் வாழும் தேசிய சிறுபான்மை இனத்தவர்கள் மத்தியில் எப்போதும் பெரும்பான்மை இனத்தவர் மீது அச்சவுணர்வு இருந்து வந்தது.வெளிநாட்டுச் சக்திகளின் உதவியுடன் ஒவ்வொரு தேசமும் சுய நிர்ணய உரிமையைக் கோரின. இச் சிக்கல்கள் எதிர்காலத்தில் உலக சமாதானத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், சர்வதேசச் சட்டம் மூலமாக ஒவ்வொரு தேசத்தினதும் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அடிப்படை உரிமைகள் பேணப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. இச்சட்டத்தினடிப்படையில் போலந்து, ரூமேனியா ,யூகோஸ்லேவியா செக்கோஸ்லேவியா, கிறீஸ் போன்ற தேசிய அரசுகள் மொழி, இன, சமய சிறுபான்மைக் குழுக்களுக்கு சம உரிமைகளை வழங்கின.நீண்ட காலத்தில் இச் செயற்பாடுகள் உண்மையான சமாதானத்தினை வழங்கவில்லை. சிறுபான்மையோர் தொடர்பாக கொடுக்கப்பட்ட உறுதி மொழிகள் தமது இறைமையினை எதிர்காலத்தில் பாதிக்கலாம் என ஒவ்வொரு அரசும் அச்சம் கொண்டன. இதனால் முரண்பாடுகள் தவிர்க்க முடியாத நிகழ்வாகின. அதனைத் தடுக்க சர்வதேசச் சங்கம் முயற்சித்ததாயினும், தவறு இழைப்பவர்களைத் தண்டிக்கக் கூடிய அதிகாரத்தினைப் பெற்றிருக்கவில்லை. இன முரண்பாடுகள் உச்சக்கட்டத்தையடைவது தவிர்க்க முடியாததாகியது. கங்கேரி ,ரூமேனியாவில் யூதர்களும்,போலந்தில் உக்ரேனியர்களும் பாதுகாப்பற்ற நிலையிலிருந்ததுடன்,மிகவும் பாதிக்கவும்பட்டனர். தேசிய விரோத உணர்வும்,இனக்கிளர்ச்சியும் எழுச்சியடைந்தன.”சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற கோட்பாடு” சிதைக்கப்பட்டது. ஜேர்மனியில் இன உணர்வலைகள் எழுச்சியடைந்தது. நாசிசம் வளர்ச்சி பெறலாயிற்று. யூதர்கள் துன்புறுத்தப்படலாயினர். இது ஜேர்மனியின் தேசியவாத இயல்பாக வெளிக்காட்டப்பட்டது. சிவில் சேவை தனியார் துறை,இராணுவம் ஆகிய துறைகளிலிருந்து யூதர்கள் அன்னியப்படுத்தப்பட வேண்டும் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சமூகப் பொருளாதாரத்தடை என்பது யூதர்களுடைய வாழ்வில் பெரும் கஸ்டத்தினை ஏற்படுத்தியது. இதனால் ஜேர்மனியை விட்டு யூதர்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற வேண்டியேற்பட்டது. இதுவே யூதத் தேசியவாதம் வளர்வதற்கும், பாலஸ்தீனத்தில் இஸ்ரவேல் என்ற பதிய அரசு யூதர்களுக்காக உருவாக்கப்படவும் காரணமாக அமைந்தது.உலகளாவிய ரீதியில் அரசின்றி வாழும் தேசிய சிறுபான்மையின மக்களையே நான்காம் மண்டலம் என அழைக்கின்றார்கள்.
சோவியத் யூனியனில் ஏற்படுத்தப்பட்ட மறுசீரமைப்பும்,வளைகுடாப்போரும் புதிய தேசிய அரசுகளின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்தது. வோர்சோ ஒப்பந்த அணி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கைரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள் மீண்டும் மக்கள் இறைமையினை வேண்டி நின்றன. மக்கள் தமக்கு ஏற்ற ஆட்சிமுறையினை உருவாக்கிக் கொண்டார்கள்.
யூகோஸ்லேவியாவில் சிலோவேனிய மக்களும்,குரோசிய மக்களும் தனியரசு கோரிப் போராட்டம் நடாத்தினர். போஸ்னியாவில் சேபியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமிடையில் யுத்தம் நிகழ்ந்தது.சோவியத்யூனியனில் இணைந்திருந்த 15 குடியரசுகளில் 10 குடியரசுகள் தனியரசாகிச் சென்றதுடன் அதனை உலக நாடுகள் அங்கீகரித்தும் கொண்டன.
ஏகாதிபத்திய நலன்களுக்கான போர்களும், சுயநிர்ணய உரிமைகளுக்காக சிறுபான்மையினர் நடாத்தும் கிளர்ச்சிகளும் தேசிய அரச முறைமைகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. சர்வதேச ஒழுங்கில் மாற்றம் ஏற்பட்டால்தான் தேசிய அரசுகளுக்கு பாதுகாப்பை வழங்க முடியம் என வாதிடுகின்றார்கள். தேசியவாதிகள் தங்கள் கொள்கைகளைக் கைவிடுவதிலும் பார்க்கத் தங்களுக்கும், தங்கள் ஆதரவாளர்களுக்கும் ஏற்படும் கஸ்டங்களையும், அழிவுகளையும் ஏற்கத்தயாராக இருக்கின்றார்கள். உலகம் எங்கும் இன அடிப்படையில் பிரிவினைக்கான கோரிக்கைகள் வளர்ச்சியடைந்து வருவதுடன்,பலமான அழுத்தத்தினையும் கொடுத்து வருகின்றது.நன்கு ஸ்திரமான நிலையிலுள்ள அரசாங்கங்களை அரசியல் ரீதியாக சிதைத்து விடுமளவிற்கு இன முரண்பாடுகள் வளர்ச்சியடைந்து வருகின்றன.இங்கிலாந்தில் ஜரீஸ் மக்களின் போராட்டமும், இந்தியாவில் காஸ்மீர் மக்களின் போராட்டமும், இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டம் சிறந்த உதாரணங்களாகும்.
அரசியல் இணக்கத்தன்மையினையும், அதிகாரப் பரவலாக்கத்தினையும் ஏற்படுத்தி தேசிய அரச முறைமையினைப் பாதுகாக்க ஜரோப்பிய சமூகம் முயற்சிக்கின்றது. ப்பிலேமிங்ஸ், வெலூன்ஸ் இன மக்களிற்குக் கலாசார சுயாட்சியை வழங்குவதற்கு பெல்ஜியம் தனது யாப்பினைத் திருத்தியுள்ளது.கனடா பிரெஞ்சு,ஆங்கிலம் பேசும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது அரசியலமைப்பைத் திருத்தியுள்ளது. இத்தாலி ஜேர்மன் பொழி பேசும் மக்களிற்காகத் தன்னாதிக்கமுள்ள மாகாண அரசொன்றை நிறுவியுள்ளது.
மறுபக்கத்தில் கைத்தொழிலடிப்படையில் அரசுகளுக்கிடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. சில அரசுகள் கைத்தொழிலிலும், தொழில்நுட்பத்திலும் மிகவும் முன்னேறியுள்ளன. உலகத்திலுள்ள ஏனைய எல்லா அரசுகளையும் விட ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரம் மிகவும் பலமானதாகும்.ஆகவே கைத்தொழில் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உலகிலுள்ள அரசுகளை கைத்தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள்,வளர்ச்சியடைந்து வரும் நாடுகள்,குறைவிருத்தி நாடுகள் எனப்பிரிக்கப்படுகின்றது. கைத்தொழில் ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்வித்தரம் மிகவும் உயர்ந்ததாகும்.ஆடம்பரப்பொருட்களுக்கான நுகர்வு மிகவும் அதிகமாகும். பிறப்பு, இறப்பு வீதங்கள் சமனிலையில் காணப்படும். மக்கள் மத்தியில் திருப்திகரமான அரசியல் விழிப்புணர்வு காணப்படுவதுடன் உள்நாட்டு,வெளிநாட்டு கொள்கைகளில் இவை செல்வாக்குச் செலுத்துவதாகவும் இருக்கும். இதற்கு உதாரணமாக ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளைக் கூறிக்கொள்ளலாம். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என்பது ஏற்கனவே அபிவிருத்தியடைந்த நாடுகளின் நிலையினை எட்டிப்பிடிப்பதற்கு பெரும் முயற்சிசெய்யும் நாடுகளாகும். இந்நாடுகள் கல்வியறிவின்மை,தொற்றுநோய்கள், அரசியல்உறுதிப்பாடின்மை, சர்வாதிகாரஆட்சி பற்றிய பயம், தொழில்நுட்ப அறிவுக்குறைபாடு, பொருளாதாரச்சுரண்டல் போன்ற பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. இந்தியா, பாக்கிஸ்தான், எகிப்து போன்ற நாடுகளை இவ்வாறான நாடுகளுக்கு உதாரணமாகக் கூறலாம்.
தோல்வியடைந்த அரசுகள்
இவற்றைவிடத் தோல்வியடைந்த அரசுகள் என்றதொரு புதிய வகைப்பாடும் உருவாக்கப்பட்டுள்ளது. இறைமையுடைய அரசாங்கங்கள் சில அடிப்படையான விடயங்களையும், பொறுப்புக்களையும் பேணுவதில் தோல்வியடைகின்ற போது இவ்வாறான அரசுகளை அரசியல் விமர்சகர்களும், பத்திரிகையாளர்களும் தோல்வியடைந்த அரசுகள் என அழைக்கின்றார்கள். இவ்வாறான அரசுகள் பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.
-
பிரதேசத்தின் பௌதீகக் கட்டுப்பாட்டினை அல்லது பிரதேசத்தின் சட்டபூர்வத் தன்மையினை இழந்திருக்கும்.
-
சட்டபூர்மான கூட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியாமல் இருக்கும்.
-
நியாயமான பொதுச் சேவையினை வழங்க முடியாதிருக்கும்.
-
சர்வதேசச் சமூகத்திலுள்ள ஏனைய அரசுகளுடன் முழுமையான உறவுகளைப் பேண முடியாதவைகளாக இருக்கும்.
பொதுவாக தோல்வியடைந்த அரசுகளின் பண்புகளாக மத்திய அரசாங்கம் பலவீனமானதாக இருப்பதுடன், தனது பிரதேசத்தில் கட்டுப்பாட்டினை சிறப்பாகப் பேண முடியாதவைகளாகவும் காணப்படும். மேலும்,பொதுச் சேவையினைச் சிறப்பாக வழங்க முடியாததுடன், ஊழல், குற்றச் செயல்கள், அகதிகள், பொருளாதார வீழ்ச்சி என்பவைகளை இந்நாடுகள் கொண்டிருக்கும்.
சமகால ஏழுவகை அரசுகள்
சமகால அரசமுறைமையில் காணப்படும் அரசுகள் சமூக, பொருளாதார, அரசியல் அடிப்படையில் ஏழு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
1. தாராண்மை ஜனநாயக அரசுகள்:-
தாராண்மை ஜனநாயகம் சட்டரீதியானதும், வரையறுக்கக்கூடியதும், எதிர்ப்புக் கூறக்கூடியதுமான அரசியல் முறைமைகளையும், நிறுவனங்களையும் கொண்டிருக்கும். வழமையாக இவ் அரசுகள் உலகிலுள்ள ஏனைய அரசுகளைப விட சொத்துடைய அரசுகளாகக் காணப்படும். சிவில் உரிமைகள் மக்களுடைய பொருளாதாரங்கள் போன்றவற்றிற்கு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது உயர் அந்தஸ்த்தும், அங்கீகாரமும் வழங்கப்பட்டிருக்கும். அனேக தாராண்மை ஜனநாயக அரசுகள் முதலாம் மண்டல நாடுகளாகவும் காணப்படுகின்றன. உதாரணமாக அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, யப்பான் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்.
2. கம்யூனிஸ,கம்யூனிசத்திற்கு பிந்திய அரசுகள்:-
இவ்வகைப்பாட்டிற்குள் வரும் அரசுகள் “நிலைமாறும் அரசுகள்” என அழைக்கப்படுகின்றன. ஆனால் இவ் அரசுகள் எப்போதும் மாக்சிச-லெனினிச பொருளாதார, அரசாங்க முறையுடன் தொடர்புடைய அரசுகளாகும். இவ் அரசுகளில் பல கெடுபிடி யுத்தத்தின் பின்னர் கம்யூனிசத்திலிருந்து விடுபட்டுள்ளன. அனேகமான கம்யூனிச அரசுகள் ஏனைய அரச முறைமைக்குள், அதாவது தாராண்மை ஜனநாயகம், புதிய கைத்தொழில் வளர்ச்சியடைந்த அரசுகள், இஸ்லாமிய அரசுகள் போன்றவற்றுடன் இணைந்து கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ரஸ்சியா, போலந்து, வட கொரியா, கியூபா,வியட்நாம் போன்ற முன்னைய இரண்டாம் மண்டல நாடுகள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
3. புதிதாக கைத்தொழில் மயமாகும் அரசுகள்:-
பதினெட்டாம்,பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்பட்ட அனுபவங்களைப் போன்ற சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களைப் பெற்று கைத்தொழில் மயமாகி வரும் அரசுகளே இவைகளாகும். இந்நாடுகளின் அரசியல் முறை உறுதியடைந்து வருவதுடன், படிப்படியான கைத்தொழில் பொருளாதாரத்தினை நோக்கி வளர்ந்து வரும் அரசுகளாகும். உதாரணமாக மெக்சிக்கோ, இந்தியா, பிரேசில், துருக்கி, ஆர்ஜன்ரீனா போன்ற நாடுகளை உதாரணமாக கூறலாம்.
4. குறைவிருத்தியுள்ள அரசுகள்:-
அமெரிக்க கண்டத்தின் மத்திய, தென்பகுதிகளிலும்,ஆபிரிக்காவின் சகாரப் பிரதேசத்திலுள்ள அரசுகள் குறைவிருத்தி அரசுகள் என அழைக்கப்படுகின்றன. இவ் அரசுகளில் சில சமூக, பொருளாதார,அரசியல் உறுதிப்பாட்டினை கொண்டிருப்பினும், நீண்ட காலமாக தீர்க்க முடியாத பல பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன. சில அரசுகள் உறுதியான அரசியல் முறைமையினைக் கொண்டிருப்பதுடன்,பொருளாதார வறுமையினையும்; கொண்டிருக்கின்றன. சில அரசுகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்தாலும், மனித உரிமை மீறல்கள், ஊழல் போன்ற விடயங்களால் உறுதியற்ற அரசாங்கத்தினைக் கொண்டுள்ளன. இதற்கு உதாரணமாக ஈகுவாடோர், தன்சானியா,நைஜீரியா, நிக்கரகுவா போன்ற அரசுகளைக் கூறலாம்.
5. இஸ்லாமிய அரசுகள்:-
இவ் அரசுகளில் இஸ்லாமிய சமயத்தின் ஆதிக்கத்தினை அவதானிக்கலாம். அரசியல் நிறுவனங்கள்,சமூகப் பொருளாதார விழுமியங்கள் எல்லாவற்றிலும் இஸ்லாமிய சமய நம்பிக்கைகள் இவ் அரசுகளில் காணப்படும். இதற்கு உதாரணமாக ஈரான், சவூதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற அரசுகளைக் கூறலாம்.
6. ஓரங்கட்டப்பட்ட அரசுகள்:-
எல்லா அரசுகளும் இவ்வகைப்பாட்டிற்குள் வரக்கூடியவைகளாகும். சர்வதேச அரச முறையினுள் அரசுகள் இந்நிலையினை அடைகின்ற போது “தோல்வியடைந்த அரசுகள்” என இவைகள் அழைக்கப்படுகின்றன. ஒரு அரசு தோல்வியடைந்த அரசாக மாறுவதற்கு யுத்தம், இயற்கை அனர்த்தம், அரசியல் அல்லது பொருளாதார ரீதியான தனிமைப்படுத்தலால் அரசியல், பொருளாதார சமூக மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. இதற்கு உதாரணமாக அங்கோலா, லைபீரியா, ஆப்கானிஸ்தான்,எதியோப்பியா,சோமாலியா, மியன்மார் போன்ற அரசுகளைக் கூறலாம்.
7. சிறிய அரசுகள்:-
உலகில் உள்ள ஏனைய அரசுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வரசுகளின் “புவியியல் அளவு” மிகவும் சிறியதாக உள்ளது. இவ் அரசுகளின் மக்களின் தொகை 50,000 இருந்து 250,000 வரையிலேயே காணப்படுகின்றது. இயற்கை வளங்கள், பாதுகாப்பு, வர்த்தகம் போன்றவற்றிற்கு அயல்நாடுகளில் தங்கியிருக்கின்ற நாடுகளாகும். உதாரணமாக லக்சம் பேர்க், வகமாஸ், வாவடோஸ், மொனாகோ, வத்திகான் போன்ற அரசுகளைக் கூறலாம்.