(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.12.15, 2012.12.16 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
இறுதியுத்தகாலத்தில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பான இலங்கையின் புரிந்துணர்வு பரந்துபட்டதாகக் காணப்பட்டதுடன், வெளியுறவுக் கொள்கையின் இராஜதந்திர திறன்களை விருத்தி செய்வதாகவும் இருந்தது. ஆயினும் யுத்தத்தின் பின்னர் சர்வதேச மனிதாபிமானச் சட்டம், சர்வதேச மனிதஉரிமைகள் சட்டம் ஆகியவற்றை யுத்தகாலத்தில் இலங்கை மீறியள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டதுடன், இதற்கான பொறுப்பினை ஏற்குமாறும் இலங்கை நிர்பந்திக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட மேற்படி குற்றச்சாட்டுகளைத் தனது இராஜதந்திரத் திறன்மூலம் தோற்கடிப்பதில் இலங்கை பெரும் தோல்வியைச் சந்தித்து வருகின்றது. இன்னிலையில் யுத்தத்திற்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் சர்வதேசச் சவால்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவைகளாகும்.
பிரதானகாரணிகள்
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தினை தீர்க்கமானதொரு முடிவுக்குக் கொண்டு வந்ததில் பிரதானமாக மூன்று அகப், புறக்காரணிகள் செல்வாக்குச் செலுத்தியதாக ஐக்கியநாடுகள் சபை நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் கூறுகின்றது.
முதலாவதாக, இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைக்கான அனுசரணையாளராக நோர்வே செயற்படுவதை அனுமதித்திருந்தனர். மீளிணக்கப்பாடு மற்றும் அபிவிருத்தி பற்றிய டோக்கியோ மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில் சர்வதேச சமூகம் இதற்கு ஆதரவு வழங்கியது. இணைத் தலைமை நாடுகளாகிய ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், நோர்வே, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகள் இப்பேச்சுவார்த்தைகளின் அரசியல் முன்னேற்றத்தைக் கண்காணித்து வந்தன.
ஆயினும் 2008ஆம் ஆண்டு சர்வதேச அமைப்பான இலங்கைக் கண்காணிப்புக் குழுவினை இலங்கை அரசாங்கம் இலங்கையிலிருந்து வெளியேற்றியது. கடும் தீவிரவாதப் போக்குடைய சிங்களத் தேசியவாதிகள் ஆரம்பத்திலிருந்தே யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதை எதிர்த்து வந்துள்ளனர்.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் 2008ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிட எடுத்த முடிவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடைக்கால சுயாட்சி அதிகார சபையொன்றினை அமைப்பதற்கு அவர்கள் முன்வைத்த பிரேரணையும் சிங்களத் தேசியவாதிகளின் எதிர்ப்பினை மேலும் தூண்டச் செய்தது. இச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சுத்திரக் கூட்டமைப்பு சர்வகட்சிக் கூட்டமைப்பு ஒன்றைத் தோற்றுவித்துக் கொண்டது. அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புச் சார்பில் போட்டியிட்ட மகிந்த இராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதோடு, இறுதி யுத்தத்தினை நடத்துவதற்கான மக்கள் ஆணையாகவும் இது எடுத்துக் கொள்ளப்பட்டது.
இரண்டாவதாக 2004ஆம் ஆண்டு பங்குனி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து செயற்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் எனவும் அழைக்கப்பட்டவர்) ஏறக்குறைய ஐயாயிரம் போராளிகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து சென்றார். பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.விபி) என்ற பெயரில் அரசியல் கட்சியொன்றினை உருவாக்கினார். பின்னர் ஆட்சியிலிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் உறுப்பினராகச் சேர்ந்து கொண்டதுடன், தன்னுடன் இருந்த போராளிகளை துணை இராணுவப் படையினராக இலங்கை இராணுவத்துடன் சேர்த்துக் கொண்டார்.
இப்பிளவு தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கத்தவராக இருந்தவர் என்ற அடிப்படையில் இரகசியமான இவ் அமைப்புப் பற்றிய ஆழமான அறிவு இவருக்கு இருந்தது. இறுதி யுத்தத்தின் போது இவரின் அறிவினை இலங்கை அரசாங்கம் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொண்டது. இவைகளை விட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் துணை இராணுவப் படைகளுடன், தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்ட முன்னால் தமிழ் போராளிக் குழுக்களில் எஞ்சியிருந்த பலர் தமிழ் மக்களுக்கிடையில் உளவுபார்க்கும் நடவடிக்கையிலும், இறுதி நேர இராணுவ நடவடிக்கையிலும் பயன்படுத்தப்பட்டனர்.
மூன்றாவதாக பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்காவும், ஏனைய மேற்குத் தேச அரசாங்கங்களும் ஒன்றுபட்டுச் செயல்படத் தொடங்கின. இது பயங்கரவாத அமைப்புக்களுக்கும், அவர்களின் சர்வதேச வலைப்பின்னல்களுக்கும் எதிராகப் போர் தொடுத்திருக்கும் நாடுகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. மறு பக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்திக் கொடுத்தது. ஏற்கனவே பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பு எனப் பட்டியலிடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உள் நாட்டு மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் மேலும் தனிமைப்பட வாய்ப்பாகியது. 2005ஆம் ஆண்டு இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக இருந்த கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டமை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலைப்பின்னலுக்குப் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியது.
இச் சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்ட இலங்கையின் இராஜதந்திரிகள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பூரணமாக அழித்தொழிக்கும் தாக்குதலுக்கு சர்வதேச நாடுகளுடன் பங்காளர் உறவினை உருவாக்கிக் கொண்டனர். 2008ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் தொடக்கம் 2009ஆம் ஆண்டு வைகாசிமாதம் மாதம் 18ஆம் திகதி வரையும் இலங்கை இராணுவம் வன்னிப் பெருநிலப்பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பெரும் படையெடுப்பினை மேற்கொண்டு இறுதியுத்தத்தில் வெற்றி கண்டது.
சர்வதேச மனிதாபிமானச்சட்டங்கள்
இறுதியுத்தத்தில் இருதரப்பும் சர்வதேச மனிதாபிமானச்சட்டங்களை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய நாற்பதாயிரம் மக்கள் (பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட) இறுதியுத்தத்தில் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. ஏறக்குறைய 100,000 மக்கள் உணவு, வைத்தியவசதி போன்றவைகளின்றி அவஸ்த்தைப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கை இராணுவத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று யுத்தத் தவிர்ப்பு (No Fire Zone) பிரதேசம் கடுமையான ஷெல் தாக்குதலுக்குள்ளாகியதாகவும், மேலும் ஐக்கியநாடுகள் தாபனத்தின் உணவு விநியோகப் பாதை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் காயமடைந்தவர்களை தனது கப்பல்களில் ஏற்றுவதற்குப் பயன்படுத்திய பாதை போன்றன கடும் ஷெல் தாக்குதலுக்குள்ளாகியதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் வைத்தியசாலைகளுக்கு முன்புறமாகவும் ஷெல் தாக்குதல்கள் நடாத்தப்பட்டதுடன் வன்னிப் பிரதேசத்திலிருந்த வைத்தியசாலைகள் தாக்குதலுக்குள்ளாகியதாகவும் கூறப்படுகின்றது. இவைகள் தொடர்பான போதிய ஆதாரங்களை சர்வதேச Crisis Group 2009ஆம் ஆண்டு ஆவணி மாதத்திலிருந்து சேகரித்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கின்றது. நூற்றுக்கணக்கான புகைப்படங்கள், ஒளிநாடாக்கள், விண்வெளி ஓடங்களின் படங்கள் (Satellite) இலத்திரணியல் தொடர்பாடல் ஆவணங்கள், கண்களால் கண்டவர்கள் வழங்கிய வாக்குமூலங்கள் போன்றவற்றைத் தான் வைத்துள்ளதாக தெரிவிக்கின்றது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் சாதாரண சூழ்நிலையில் வழங்கப்படும் அளவைவிட குறைந்தளவிலான மருந்துகள், மற்றும் மருத்துவ சேவைகளுமே வழங்கப்பட்டன. இது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாக இருக்கவில்லை. வைத்தியசலைகள் உள்ள பகுதிகளில் யுத்தம் நடைபெற்றுள்ளது. யுத்தம் முடிவடைந்த இறுதிக்காலப்பகுதியில் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு மருந்து விநியோகம் வழங்கப்பட்டது தொடர்பாக மேலும் விசாரணை நடாத்தப்படல் வேண்டும் எனக் கூறுகின்றது. இத்தகைய விசாரணைகளின் போது காயமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களின் விபரம், காயமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையளித்தமை, தற்காலிக வைத்தியசாலைகளில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை வழங்கும் வசதியிருந்ததா? போன்றவற்றை ஆதாரபூர்வமாகத் தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் இவ்வறிக்கை யுத்தசூனியப் பிரதேசத்தில் வாழ்ந்த பொது மக்கள் மீது இருதரப்பும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதனால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் எனக்கூறுகின்றது. மேலும் யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் ஏற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புக்கள் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய உத்தியோக பூர்வப் பதிவுகளைப் பொதுநிர்வாக அதிகாரிகளோ அல்லது அப்பிரதேசத்திலுள்ள பாதுகாப்புப்படை உத்தியோகத்தர்களோ சேகரித்து வைத்திருக்கவில்லை எனக் கூறுகின்றது. பாதுகாப்புப் படையினர் தமது உயிரிழப்புக்கள், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்களை சேகரித்து வைத்திருக்கின்றார்கள்.
ஆனாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பில் ஏற்பட்ட சேதம் தொடர்பாக எவ்வித விபரங்களும் சேகரிக்கப்பட்டிருக்கவில்லை. சுகாதார அமைச்சு மாத்திரம் ஒரளவு இவைகள்பற்றிய புள்ளி விபரங்களை சேகரித்து வைத்துள்ளது. ஆயினும் ஊடகங்கள், ஏனைய அதிகாரிகள் வெவ்வேறுபட்ட புள்ளிவிபரங்களைச் சேகரித்து வைத்திருக்கின்றார்கள்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் இருந்தார்கள் என்பது உண்மையாகும். இதற்கு நாடெங்கிலுமுள்ள பாதிக்கப்பட்ட எல்லாக் குடும்பங்களிலுமுள்ள வீட்டிலுள்ளவர்கள் பற்றிய ஆய்வொன்று செய்யப்படவேண்டியது அவசியமாகும். இராணுவத்திடம் வந்து சிலர் சரணடைந்ததை தாம் நேரில் பார்த்ததாக ஆணைக்குழுமுன் தோன்றி சாட்சியமளிக்கையில் பலர் தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை
இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். இவ்விசாரணையின் போது யாராவது சட்டவிரோதமாகச் செயற்பட்டிருந்தால் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்செய்து தண்டனை வழங்கவேண்டும். உத்தியோகபூர்வமாகச் சரணடைந்தவர்கள் காணமல் போய்விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால், இது குற்றவியல் சட்டத்திற்கமையச் செய்யப்பட்ட குற்றமாகக் கருதப்படல் வேண்டும். எனவே இத்தகைய நிகழ்வுகள் குறித்து பூரண விசாரணை நடாத்தி அவசியமாயின் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து தண்டிக்க வேண்டும். பொதுவாக எந்தவொரு யுத்தத்திலும் அதிகமாகக் கொல்லப்படுபவர்களும், உடல் உளரீதியில் பாதிக்கப்படுபவர்களும் குழந்தைகளும், பெண்களும், வயோதிபர்களும்தான். இதற்கு இலங்கையின் யுத்தக்களம் எந்தவிதத்திலும் விதிவிலக்கானதாக இருக்கவில்லை.